July

Tuesday, August 3, 2021

July

இலங்கையில் சிங்களவருடன் இணந்து ஒரு ‘தமிழர் அரசு’ : சட்டசபையில் இன்று முதல்வர் உரை

karunanithi.jpg இலங் கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு ‘தமிழர் அரசை’ அமைக்கும் நிலை உருவாகலாம்” என்று முதல்வர் கருணாநிதி கூறினார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்தும் விவாதிக்க சட்டசபையில் இன்று சிறப்பு கவனயீர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்மீது, அதிமுக சார்பில் பன்னீர் செல்வம், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், பாமக சார்பில் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமசாமி ஆகியோர் பேசினர். இலங்கையில் தமிழர்களின் நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், திறந்தவெளியில் ஆடு, மாடுகளை போல் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்கள் அந்த மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரினர்.மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றும் முயற்சிகளைத் தடுத்து வடக்கு, கிழக்கு பகுதிகளை மீட்டு தமிழர்கள் முழு உரிமையுடன் சிங்களவர்களுக்கு இணையாக வாழ்வதற்கு மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதற்குப் பதிலளித்து முதல்வர் கூறுகையில்,”இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையை அரசியலாக்காமல் அனைத்து கட்சியினரும் ஒரே விதமான கருத்தை தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் நடைபெறும் பிரச்சினை என்பது சிங்களவர்களுக்கும், தமிழ் இனத்திற்குமான போராட்டமாகும். 50 ஆண்டு காலமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தமிழ் மொழி சீரழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையிலேயே தமிழீழம் அமைய வேண்டும் என்ற குரலும் எதிரொலித்தது.இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இதில் பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழீழம் என்கிற பிரிவினைக்கு ஆதரவு இல்லை.

மாநில சுயாட்சி என்றஅளவில்தான் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தமிழீழம்தான் தீர்வு என்று தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.பாமக கூட தமிழீழம்தான் தீர்வு என்று பேசி வந்தது. ஆனால் இன்று மாநில சுயாட்சி போதும் என்ற அளவுக்குப் பேசி வருகிறது. அதுதான் இப்போது முடியும். தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ்மொழிக்கு சம தகுதி, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு. இவற்றுக்காக போராடும் நிலைதான் தற்போது உள்ளது.

இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு ‘தமிழர் அரசை’ அமைக்கும் நிலை உருவாகலாம். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அதிபராகலாம் என்று அமெரிக்காவில் இருந்த நிலை மாறி இப்போது கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதே போன்று இலங்கையிலும் தமிழர்களின் அரசு அமைவதற்கு வெகு தூரம் இல்லை என்கிற நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், என்னைவிட மகிழ்ச்சி அடைபவர் இந்த உலகில் வேறு எவருமே இருக்க முடியாது.தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமிக்கதாக மாற்ற வேண்டும் என்பது முக்கியமா? அல்லது அந்நாட்டு ஜனாதிபதியைக் குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக நாம் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். இலங்கை பிரச்சினையைப் பொறுத்தவரை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக தெரிந்தவன் நான். இதை ‘பண்டார வன்னியன்’ என்ற நாவல் மூலம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவர்களைச் சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செஞ்சிலுவைச் சங்கம் மூலம் தமிழக அரசோ, மத்திய அரசோ நிவாரண உதவிகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.

தற்போது வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடைவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் தமிழர்களிடம் அந்த பொருட்கள் போய்ச் சேரும்.

இலங்கைத் தமிழர்களுக்குத் தற்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமைச்சர் தொண்டமான் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள்.

ஒரு குழுவை அனுப்பி இலங்கை நிலைமையைப் பார்வையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசின் அனுமதி பெற்று உரிய அதிகார அழைப்பின் பேரில்தான் அங்கு செல்ல முடியும் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.

இது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும், இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு நாம் தீர்வு காண்போம்”. இவ்வாறு கருணாநிதி கூறினார்.

இதையடுத்து பேசிய ஜி.கே.மணி இலங்கை குறித்த தனது கட்சியின் நிலையை விளக்கிக் கூறினார்.

இலங்கை மாணவர்கள்மீது அசிட் வீச்சு : ஆஸி.பொலிஸார் விசாரணை

010709police.jpgசிட்னியில் இரு இலங்கை மணவர்கள் அசிட் வீச்சுக்கு உட்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 17 ஆம் திகதி, நள்ளிரவு வேளை, வெஸ்ட்மீட், அலெக்ஸ்சான்ரா அவனியூவிலுள்ள தமது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த சமயம் ஜெயஸ்ரீ வடவல(வயது22), சதுக்க வீரசிங்க (வயது 27) ஆகியோர் மீது அசிட் வீசப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்

இடம்பெயர்ந்தோர் தொடர்பிலான எமது வேலைத்திட்டம் குறித்த தகவலை இந்திய அரசுக்கு வழங்கி வருகிறோம்: மஹிந்த சமரசிங்க

mahinda-samarasinha.jpgஇலங் கையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த விபரங்களை இந்திய மத்திய அரசுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். அந்த விபரங்கள் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பத்தையும் சென்றடையும் என்று நாங்கள் நம்புகின்றோம் என இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் இலங்கையின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:

“தற்போதைய நிலைமையில் ஒரு விடயத்தை மட்டுமே எங்களால் கூற முடியும். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றது. அந்த வேலைத்திட்டம் தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமை மற்றும் அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இந்திய தலைவர்களிடம் தெளிவுபடுத்தியிருந்தனர். இந்நிலையில் நாங்கள் இந்திய மத்திய அரசுக்கு வழங்கியுள்ள விபரங்கள் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கின்றோம். எமது வேலைத்திட்டம் தொடர்பான விபரங்களை தொடர்ந்தும் இந்திய மத்திய அரசுக்கு வழங்குவதற்கும் அது குறித்து தெளிவுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்களை மீட்க முயற்சி!

fishermen.jpgஇந்தியா தடுத்து வைத்துள்ள 107 இலங்கை மீனவர்களையும், அவர்களின் 21 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் கங்கிரஸ் கட்சித் தலைவரும்  இளைஞர் நலத்துறை அமைச்சருமான தொண்டமான்,  முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் உடன் இருந்தார்.

மேலும் இலங்கை நிலவரம் குறித்தும்,  தமிழர் பிரச்சினை குறித்தும் தொண்டமான் முதல்வருடன் பேசினார். இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சினைகள்,  இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் குறித்தும் இதளன்போது விவாதிக்கப்பட்டது.

வன்னிப் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி தொண்டமானிடம் கேட்டறிந்தார். சில நாட்களுக்கு முன் சென்னை சென்ற தொண்டமான் கனிமொழியைச் சந்தித்து இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து விவாதித்திருந்தார். இந்த நிலையில் முதல்வரை அவர் நேற்று சந்தித்தார

மைக்கேல் ஜாக்சன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

maical-jak.jpgமறைந்த பாப் பாடகர் மை‌க்கேல் ஜாக்சனின் உடலை அவரது பண்ணையில்  தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஜாக்சனின் தந்தை முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில்  பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்காக ஜாக்சனின் உடல் லாஸ்ஏ‌ஞ்சல்ஸில் இருந்து கலிபோர்னியாவில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு ‌கொண்டு வரப் பட உள்ளது.

‘கழுத்துக்கு கத்தியை’ வைத்து ஜனாதிபதிக்கு சூழ்ச்சி செய்யவில்லை: ஹெல உறுமய

010709rnawakka.jpg“பிரபா கரனின் பிரிவினைவாத பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஆட்டிலறி தாக்குதல்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. இவ்வாறான சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எவ்விதமான அச்சமும் இன்றி தேர்தல்களில் போட்டியிடுகிறது. கழுத்துக்குக் கத்தியை வைத்து ஜனாதிபதி மஹிந்தவுக்கு நாம் சூழ்ச்சி செய்யவில்லை” என்று ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

‘நாட்டை வெற்றி கொண்டு கிராமத்தைப் பாதுகாப்போம்’எனும் தொனிப்பொருளில் மகாவலி மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கை தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அக்கட்சியின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது:br>
“தமிழ்க் கட்சிகளால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைவாதம் பயங்கரவாதமாக உருவெடுத்தது. இதனால் ஜனநாயகம் உருவாவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில் கிழக்கில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வடக்கிலும் ஜனநாயகம் ஏற்படுத்தப்படல் வேண்டும்.

கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர் அது இராணுவமயப்படுத்தப்படும் என்றனர். எனினும் அவ்வானதொரு நிலைமை அங்கு ஏற்படவில்லை. வடக்கிலும் ஏற்படாது. பிரபாகரனின் ஆட்டிலறிகளால் நிறுத்தப்பட்ட ஜனநாயகம் இன்று வடக்கில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பமாகும்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். கழுத்துக்குக் கத்தியை வைத்து ஜனாதிபதிக்கு நாம் சூழ்ச்சி செய்யவில்லை என்பதனால் இதுதொடர்பில் வெளிப்படையாக விவாதங்களை நடத்தி ஏற்பதா? இல்லையா? என்ற முடிவுக்கு வரலாம்.

சூழ்ச்சிகள் மூலம் தீர்வு காணமுடியாது அவ்வாறான நிலைமை ஹெலஉறுமயவுக்கு தேவையில்லை என்பதுடன் கட்சி அதன் கொள்கையில் உறுதியுடன் இருக்கின்றது. சர்வக்கட்சி ஆலோசனை குழுவில் வடக்கை சேர்ந்த உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு பகிரங்க விவாதங்களை நடத்தவேண்டும்.

அகதிகள் போர்வையில் விடுதலைப் புலிகள் ஆஸிக்குள் நுழையலாம் என சந்தேகம்

boat.jpgஇலங் கையின் முன்னாள் போராளிகள் அகதிகள் என்ற போர்வையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற 194 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  மேற்படி 194 சட்டவிரோத குடியேற்றவாசிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள் எனவும் 15 படகுகளில் இவ்வாறு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறு சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பது பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்து சேர்ந்த 194 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் இதுவரை 300 இலங்கையர் இவ்வாறு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அத்துடன் இவர்கள் எவரும் அகதிகள் அந்தஸ்தை பெறக்கூடிய தகுதியில் இல்லையெனவும் அதேவேளை இவர்கள் முன்னாள் போராளிகள் என்று கூறுவதற்கான எந்தவொரு சான்றும் இல்லாது இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்கள் இலங்கையிலிருந்து மலேஷியாவின் தென்பகுதியூடாக கிறிஸ்மஸ் தீவை வந்து சேர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.

விமான இடிபாடுகளிலிருந்து 14 வயதுச் சிறுமி உயிருடன் மீட்பு!

image-air-team.jpgஇந்தியப் பெருங்கடலில் நேற்று அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளான யெமன் நாட்டு விமானத்தில் பயணம் செய்த 14 வயது சிறுமி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து 142 பயணிகள் மற்றும் 11 விமானச் சிப்பந்திகளுடன் நேற்று காலை புறப்பட்ட யெமனியா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் யெமனில் தரையிறங்கி,  மீண்டும் மரோனிக்கு புறப்பட்டு இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது.

விமானம் விபத்துக்குள்ளாகி நடுக்கடலில் விழுந்ததால் அதில் பயணம் செய்த எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டது. இந்நிலையில் விமானம் விழுந்ததாகக் கருதப்படும் கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிரான்ஸ் மற்றும் யெமன் நாட்டு மீட்புப் பணியாளர்கள் இவ்விமானத்தில் பயணம் செய்த சிறுமி ஒருவரை விமான இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்டெடுத்துள்ளனர்.

இந்தச் சிறுமி,  கடலில் சடலங்களுக்கும் விமானத்தின் சிதைவுகளுக்கும் மத்தியில் நீந்திக்கொண்டிருந்தபோது தான் கண்டதாக பிரான்ஸ் நாட்டு மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடும் குளிரினால் சிரமப்பட்ட இந்தச் சிறுமி கோமோரோஸ் தீவுகளிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 3 பயணிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரின் சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யெமன் குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

பாபர் மசூதி இடிப்பு விசாரணை அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பின்னா கையளிப்பு!

இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்திலுள்ள பாபர் மசூதி  தீவிரவாத இந்துக்களால் இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபர்ஹான் விசாரணைக் குழு 17 ஆண்டுகளுக்கு பிறகு தனது அறிக்கையை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று கையளித்துள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி  இடிக்கப்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் ஏற்பட்டன. பாபர் மசூதி இருக்கும் இடம் இந்துக் கடவுள் ராமர் பிறந்த இடம் என்பது இந்து செயற்பாட்டாளர்களின் வாதமாக இருக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் இந்திய சரித்திரத்தில் மிக சர்ச்சைக்குரிய பல சம்பவங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் இடம்பெற்று பத்து நாட்களுக்கு பிறகு நீதிபதி லிபர்ஹான் தலைமையிலான இந்தக் குழு அமைக்கப்பட்டது. தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அளிக்குமாறு அந்தக் குழு வேண்டப்பட்டது. ஆனால் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று செவ்வாய்கிழமையன்று அந்த விசாரணைக் குழு தனது அறிக்கையை இந்தியப் பிரதமரிடம் அளித்துள்ளது. இந்த விசாரணைக் குழு அந்த பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு என்ன நிகழ்வுகள் காரணமாக இருந்தன என்றும் இதற்கு யார் பொறுப்பு என்றும் ஆராயுமாறு கோரப்பட்டிருந்த்து.

இந்த விசாரணை அறிக்கை தாமதவாவதற்கு பல்தரப்பிலிருந்து ஒத்துழைப்பு இல்லாமையே காரணம் என்று அதன் தலைவர் நீதிபதி லிபர்ஹான் தெரிவித்துள்ளார்.

லிபர்ஹான் விசாரணைக் குழுவின் அறிக்கை இன்னமும் வெளியாகவில்லை என்றாலும் அது முக்கியமான அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.

நாட்டையும் மக்களையும் மீண்டும் காட்டிக்கொடுக்க இடமளியோம் – ஜனாதிபதி

slprasident.jpgபாதுகாப்பு படையினருடன் இணைந்து வெற்றிகொள்ளப்பட்டுள்ள நாட்டையும், நாட்டு மக்களையும் மீண்டும் காட்டிக்கொடுப்பதற்கு எவருக்கும் இடமளியோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், மஹிந்த சிந்தனை ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

ஸ்ரீ.ல.சு.கட்சி எப்போதும் நாட்டையும், நாட்டு மக்களையும் முன்னிறுத்தியே முடிவுகளையும், தீர்மானங்களையும் எடுத்து வந்திருக்கிறது. அதேவேளை அரசியல் அதிகாரத்தில் தொடர்ந்திருக்கும் நோக்கில் ஒரு போதும் எமது கட்சி தீர்மானங்களை எடுத்தது கிடையாது. நாடு தொடர்பாக எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் உரிய நேரகாலத்தில் எடுக்கப்படும். இவ்விடயத்தில் நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம்.

கடந்த காலத்தில் ஒரு குழுவாக செயற்பட்டு பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டைவிடுவித்தது போல் எதிர்காலத்தில் அபிவிருத்தி தொடர்பான சவால்களை வெற்றி கொள்வதற்காக சகலரும் ஒன்றுபட்டு பொது நோக்கில் செயற்பட முன்வர வேண்டும் என்றார்.

இவ்வைபவத்தின் போது ஸ்ரீ.ல.சு.கட்சியின் 12 புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கும், 12 புதிய மாவட்ட அமைப்பாளர்களுக்கும் ஜனாதிபதியினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இவ்வைபவத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம ஜயந்த் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.