August

August

கொட்டாவை – கடுவளை புறச் சுற்றுவட்டப்பாதை

pr-mahi.jpgநகர்ப்புற போக்குவரத்து அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொழும்பு நகருக்கான இலகு பிரவேச தென்பகுதி சுற்றுவட்டப்பாதை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி கொட்டாவையில் இருந்து கடுவளை வரையிலான சுற்றுவட்டப்பாதை அமைப்புக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தார்.

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி இதற்கு நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்துக்கு 2498 கோடியே 26 இலட்சத்து 1824 ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கெழும்புக்கு 10 முதல் 15 கிலோ மீட்டர் வெளிப்புறமாகச்; செல்லும் இச்சுற்றுவட்டப்பாதையின் முழு நீளம் 29.10 கிலோ மீட்டர் ஆகும். கடுவளைக்கும் கொட்டாவைக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள இதன் முதல் கட்டத்தின் நீளம் 11 கிலோ மீட்டராகும். இதன் நிர்மானப்பணிகள் சீன ஹாபர் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்பட்டுள்ளது.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது வீடமைப்புத் திட்டம்

home.jpgஅம்பாரை கரையோர மாவட்டத்தில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசப் பிரிவுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான விசேட வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசத்தைக் கட்டி எழுப்பும் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இரண்டாம் கட்டத்துக்கு நிதியுதவி வழங்க கொரியாவின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்கா இதற்கு 6.653 மில்லியன் டொலரை வழங்குகிறது.

இரண்டாம் கட்ட செயற்பாட்டுக்கு 63,45,604 டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பீ. பி. ஜயசுந்தரவின் மனுவை விசாரிக்க ஏழு பேர் கொண்ட நீதியரசர் குழுமம் – செப். 24 இல் விசாரணை

00000court.jpgதிறை சேரியின் முன்னாள் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை இல்லாமல் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்காக ஏழு நீதியரசர்கள் கொண்ட குழுமம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான நீதியரசர்கள் குழுவினர் நேற்று பீ. பி. ஜயசுந்தரவின் மனு தொடர்பாக ஆராய்ந்தனர். இந்த மனு தொடர்பாக ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமம் நியமிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இந்த வழக்கின் பிரதிவாதியான வாசுதேவ நாணயக்கார சார்பில் ஆஜரான எம். ஏ. சுமந்திரன், ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தின் நியமனத்தை எதிர்த்து வாதிட்டதுடன் 05 பேர் கொண்ட குழுமத்தை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பீ. பி. ஜயசுந்தரவின் மனு தொடர்பாக ஆராய்வதற்காக ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்தினை நியமித்திருந்தார்.

அவர் ஓய்வுபெற்றதையடுத்து வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட புதிய பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான குழுவினர், ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழுமத்திற்கு மேலதிகமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சிராணி திலக்கவர்தன மற்றும் பி. ஏ. இரத்நாயக்க ஆகியோரையும் இக்குழுமத்தில் நியமித்துள்ளனர்.

‘இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை’- ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

1111srilanka_army.jpgஇலங்கை படையினர் என்று கூறப்படுபவர்களால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியாகியிருக்கின்ற வீடியோ காட்சிகள், இலங்கையில் இடம்பெற்றிருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம் என்பதை கோடி காட்டுவதாக, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியிருக்கிறது.

கடந்த பல வருடங்களாக தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ ஒளிக்கீற்று போலியானது என்று மீண்டும் மறுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட ”சானல் 4” நிறுவனத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்ப்போவதாக கூறியுள்ளது.

இது குறித்து இராஜதந்திர ரீதியிலான முறையான கண்டனத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவிருப்பதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அநுர பிரிய தர்சன யாப்பா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

யாழ். தென்மராட்சியில் ஏர்பூட்டு விழா – விவசாயிகளுடன் பசில் ராஜபக்ஷ பங்கேற்பு

யாழ். தென்மராட்சியில் தனங்கிளப்பு, மறவன்புலவு கிராமசேவகர் பிரிவுகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் செய்கை பண்ணப்படாமல் தரிசு நிலங்களாக இருந்த 1124 ஏக்கர் வயற்காணிகளில் செய்கை பண்ணப்படும் ஏர்பூட்டு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் ஒழுங்கமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ எம். பி. விவசாயிகளுடன் இணைந்து ஏர்பூட்டு விழாவில் கலந்து கொண்டார்.

மறவன் புலவு கிராம சேவகர் பிரிவிலிருந்து 560 விவசாயிகளும், தனங்கிளப்பு கிராமசேவகர் பிரிவிலிருந்து 540 விவசாயிகளும் கலந்துகொண்டனர். நேற்றைய ஏர்பூட்டு விழாவுக்காக 60 உழவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

1124 ஏக்கர் நிலத்தையும் உழுவதற்காக இவை ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு விவசாயிகளுக்கும் உழுவதற்காக தலா 4000 ரூபா வீதம் வழங்கப்பட்டதுடன் தேவையான விதை நெல் மற்றும் உரம் இலவசமாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பசுமை புரட்சி (வகா சங்கிராமய) வேலைத்திட்டத்திற்கமைவாக வடக்கில் தரிசு நிலங்களாகக் கிடக்கும் விவசாய நிலங்கள் யாவற்ற¨யும் கண்டறிந்து விளை நிலங்களாக மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு அங்கமாகவே தென்மராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி விவசாயிகள் மழையை நம்பி அடுத்த பெரும் போகத்திற்கான ஆரம்ப வேலைகளை நேற்று ஆரம்பித்தனர். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறியின் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவைத் தொடர்ந்து யாழ். கச்சேரியில் நடைபெற்ற வடக்கின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்திலும் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

மன்னார் வளைகுடாவில் அரிதாகும் பல்லி மீன்கள்

fish-2222.jpgமீனவர் வலைகளிலிருந்து தப்பிச் செல்லும் உடல் அமைப்பு கொண்ட பல்லி மீன்கள் மன்னார் வளைகுடா பகுதியில் அரிதாகக் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினங்களில் பல்லி மீனும் ஒன்று.

பல்லியைப் போன்று உடல் அமைப்பு கொண்ட இவை, மற்ற மீன்களைப் போல் உடலமைப்பை ஒத்திருந்தாலும், செயலில் வித்தியாசமானவை. இந்த மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை. நெருங்கிவரும் ஆபத்தை உணரும் தன்மை இதற்கு உண்டு. எனவே வலைகளில் அகப்படாது இது தப்பித்துக் கொள்ளும். கடலின் ஆழ் பகுதியில் காணப்படும் பல்லி மீன்களை, மன்னார் வளைகுடா பகுதியில் காண்பது தற்போது அரிதாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

எனினும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் வேளை, அவ்வப்போது இவை பிடிபடுகின்றன. வெளிநாடுகளில் அதிகமாகக் காணப்படும் இவ்வகை மீன்கள், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்பவை. இந்த மீனைத் தேடிக் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்குப் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சும்.

மீன்களை உண்டு வாழும் சில கடல் வாழ் உயிரினங்களே, இவற்றின் அழிவுக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வகை மீன்களைக் காக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதனால பெரிய அளவில் பயன் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.

காலி, கராபிட்டிய வைத்தியசாலை: ரூ. 400 இலட்சம் செலவில் நரம்பியல் சிகிச்சை பிரிவு

40 மில்லியன் ரூபா (400 இலட்சம் ரூபா) செலவில் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவொன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகாதார போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் நரம்பு தொடர்பான நோய்களுக்கு கொழும்புக்கு வர வேண்டிய தேவை ஏற்படாது எனவும் தென்பகுதி மக்களுக்கு கராபிட்டிய ஆஸ்பத்திரியில் இதற்கான சிகிச்சைகளை பெற முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

2வது டெஸ்ட்: இலங்கை 416 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது -நியூஸீலாந்து 159/5

2nd-test.jpgநியூஸீ லாந்து அணிக்கு எதிராக கொழும்பில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு  ஆட்டமிழந்தது.

நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் பூவா-தலையா வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. முதல்நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 262 ஓட்டங்கள் எடுத்த இலங்கை அணி, இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்தது.

ஜெயவர்த்தனே 92 ஓட்டங்கள்  கபுகேதரா 35 ஓட்டங்கள்  பிரசன்ன ஜெயவர்த்தனே 17 ஓட்டங்கள்  தம்மிகா பிரசாத் 6 ஓட்டங்கள்  முரளிதரன் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்கள் எடுத்தனர். சமரவீரா அதிகபட்சமாக 143 ஓட்டங்கள் குவித்தார்.

நியூஸீலாந்து தரப்பில் ஜீத்தன் படேல் 4 விக்கெட்டுகளும், டேனியல் வெட்டோரி 3 விக்கெட்டுகளும், ஓபிரையன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Sri Lanka 1st Innings 416 / 10 in 130.3 Overs

New Zealand 1 st Innings 159 / 5 in 47 Overs

New Zealand trail by 257 runs with 5 wickets remaining

Fall of Wickets 1-14 (TG McIntosh, 2.1 ov), 2-49 (DR Flynn, 9.2 ov), 3-63 (MJ Guptill, 15.4 ov), 4-148 (JD Ryder, 40.4 ov), 5-149 (JS Patel, 41.4 ov) 
 
Still To Come JDP Oram, DL Vettori, IE O’Brien, CS Martin 

இந்தியாவின் பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 83

10092009.jpgஇந்தியா வின் பன்றிக் காய்ச்சல் எண்ணிகை 83 ஆக உயர்ந்துள்ளது.  மகாராஷ்டிராவில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் மட்டும் இதுவரை 19 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 17,777 பேரின் மாதிரிகள் பன்றிக் காய்ச்சல் சந்தேகம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. அதில் 3273 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்

கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை சுமார் 4.57 மணிக்கு கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள கொரன்டாலோ மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம்  ஏற்பட்டது. இதன் மையம் அந்த மாகாணத்தில் இருந்து 87 கிமீ தென்கிழக்கே சுமார் 95 கிமீ ஆழத்தில் இருந்தது.

சேதங்கள் குறித்தும் எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை என அந்நாட்டின் பூகோள ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.