August

August

மீள் பிரேத பரிசோதனையில் மஸ்கெலிய சிறுமிகளின் சடலங்கள்

maskeliya.jpgகொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுப் பின்னர் மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளான சுமதி ,ஜீவராணி ஆகியோரின் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. மீள் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் இன்று 27 ஆம் திகதி கண்டி பொலிஸ் சவச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இந்தச்சிறுமிகள் இருவரும் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் கடந்த 15 ஆம் திகதி சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தச் சடலங்களின் பிரதேச பரிசோதனைக்குப்பின் கடந்த 18 ஆம் திகதி முள்ளுகாமம் தோட்ட மயானத்தில் இந்தச் சிறுமிகளின் சடலங்கள் புதைக்கப்பட்டன.

இந்நிலையில் இவர்களின் மரணம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மனுவொன்றினை சமர்ப்பித்திருந்தனர். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதவான் சிறுமிகளின் சடலங்களை ஹட்டன் நீதிமன்றத்தின் ஊடாக தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கேற்ப இன்ற 27 ஆம் திகதி நண்பகல் வேளையில் சிறுமிகளின் சடலங்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன. தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள் சிறுமிகளின் பெற்றோர்களாலும் கொழும்பு மலர்ச்சாலை ஒன்றின் ஊழியர்களாலும் அடையாளங் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டன.

இதன் பின்பு முள்ளுகாமத் தோட்ட லொறியில் ஏற்றப்பட்ட சடலங்கள் கண்டி பொலிஸ் பிரேதசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சிறுமிகளின் பெற்றோரும் சடலங்களுடன் கண்டிக்குச் சென்றுள்ளனர். சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட வேளையில் கடும் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது. மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான தோட்ட மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.

அத்துடன் கண்டி சட்ட வைத்திய அதிகாரி, ஹட்டன் பொலிஸ் பிரிவு அதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் வந்திருந்தனர்.  கண்டிக்குக் கொண்டு செல்லப்பட்ட சடலங்கள் சட்டவைத்திய அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான பிரேத பரிசோதனை நாளை 28 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது

விடுவிக்கப்பட்ட இந்து குருமார் இன்று யாழ் பயணம்

hindu_priest111.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 58 இந்து குருமார் குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் இராணுவத்தின் வழித்துணையுடன் இன்று யாழ்ப்பாணம் பயணமாகியுள்ளனர்.

அதேவேளை,  திருகோணமலை,  மட்டக்களப்பு,  அம்பாறை ஆகிய கிழக்கு மாகாண மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேருக்கான பிரயாண ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துள்ளனர்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள இந்துமத குருக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்கள், முகாம்களில் இருந்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு,  நேற்றைய தினம்,  அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் திரட்டிய புள்ளிவிபரத் தகவல்களின்படி 177 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

107 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இந்து மத குருமார்கள் நேற்று இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் வவுனியா,  மன்னார்,  யாழ்ப்பாணம், திருகோணமலை,  மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பிரயாண ஒழுங்குகளை வவுனியா செயலக அதிகாரிகள் செய்துள்ளனர்.

இதேவேளை,  உறவினர்களோ அல்லது செல்வதற்கு சொந்த இடங்களோ இல்லாத முல்லைத்தீவு,  கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரை அகில இந்து மாமன்றம் பொறுப்பேற்று திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

செனல்-4 வீடியோ காட்சி குறித்து வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும்

anurapriyadarsanayapa.jpgஇலங் கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செனல்- 4 ஒளிபரப்பிய வீடியோ காடசி குறித்து இலங்கை  வெளிவிவகார அமைச்சு முழுமையான நடவடிக்கை எடுக்கும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது செனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட செய்தி ஒன்றைக் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவ வீரர்கள் நல்லொழுக்கத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்குகின்றவர்கள். பாரிய அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்கும் மத்தியில் நாட்டுக்கு அவர்கள் பெற்றுத்தந்த வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கும் நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அந்த வீடியோ காட்சி போலியாகத் தயாரித்துக் காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு காண்பிக்கப்பட்ட காட்சியை அரசாங்கம் முற்றாக மறுப்பதுடன் வன்மையாகக் கண்டிக்கிறது. எவ்வாறு முறையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி எமது இராணுவ வீரர்கள் நன்கு அறிவார்கள். அவர்களின் சீரான நடத்தையையும் திறமையையும் கண்கூடாகக்கண்ட பல நாடுகள் அவர்கள் மூலம் தமது வீரர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து : தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ecblogo.jpgஇலங்கை மின்சார சபை தனது ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்திருப்பதாக இன்று அறிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஊழியர்கள் சம்பள உயர்வு கோரியும் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்தும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறவிருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்ப்பாட்டங்கள் ஏதுமற்ற வேலை நிறுத்தமாக இது அமையுமென தொழிற்சங்க வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

வடமாகாண சபை தலைமையகம் மாங்குளத்தில்

janakabandarathennakoon.jpgவட மாகாண சபைக்கான தலைமையகக் கட்டடம் ஒன்றை மாங்குளத்தில் அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அத்துடன் யுத்தத்தால் அழிவுற்ற மற்றும் சேதமடைந்த உள்ளுராட்சி மன்றக் கட்டடங்களை புதிதாக நிர்மாணிக்க அல்லது புனரமைக்கவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

மாகாண சபையின் தலைமையகக் கட்டட நிர்மாணத்துக்கு 2010 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 900 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. ஏனைய கட்டட நிர்மாணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு 625 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

‘அரசாங்கமே கூடுதல் பங்களிப்பு’

lakshman_yapa_abeywardena.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கமே கூடுதல் பங்களிப்பு செய்து வருகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் பணிகளுக்கு உதவி வருகின்றனவே தவிர முழுப் பொறுப்பையும் அவை மேற்கொள்வது கிடையாது என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (26) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை அரச சார்பற்ற நிறுவனங்களே கூடுதலாக நிறைவேற்றுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச் சாட்டில் எதுவித உண்மையும் கிடையாது.

இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற திறைசேரியினூடாக பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது. மருத்துவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு தேவையான மருந்துகளும் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டு வருகிறது.

முகாமில் உள்ள ஒருவருக்காக தினமும் தண்ணீர் வழங்குவதற்காக மாத்திரம் 150 ரூபா செலவிடப்படுகிறது என்றார்.

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல்; 36 பேர் பலி: 60 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் தென் மாகாணத்தின் தலைநகர் கந்தஹாரில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற மிக மோசமான குண்டு வெடிப்பில் முப்பது பேர் பலியானதுடன் அறுபது பேர் வரை காயமடைந்தனர். பலியான அனைவரும் பொது மக்கள் என கந்தஹார் பொலிஸ் தலைமையதிகாரி கூறினார்.

புலனாய்வுத் தலைமையகம், ஜனாதிபதி ஹமீத் அல் கார்ஸாயியின் சகோதரர் அஹமட் வலி கார்ஸாயியின் வீடு என்பன குண்டு வெடித்த இடத்துக்கருகாமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கந்தஹாரின் பிரமாண்டமான கட்டடக் கம்பனியும் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகமும் இதனால் சேதமடைந்தன. அருகில் இருந்த கட்டடங்கள், வீடுகளும் இக்குண்டு வெடிப்பில் சேதமடைந்ததாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இடிபாடுகளுக்குள் சடலங்கள் புதைந்துள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பலியானோரின் உடல்கள் உருக்குலைந்து சிதைந்துள்ளமை பிரேதங்களை அடையாளங் காண்பதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக் கப்படுகின்றனர்.

வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமான கந்தஹார் தலிபான்களின் செல்வாக்குள்ள பிரதேசம். நேட்டோப் படைகள் இங்கே கடும் சவால்களை எதிர்கொள்கின்றன. செவ்வாய்க்கிழமை நடந்த குண்டுத் தாக்குதல் 2008 ஜுலை 07ல் காபூல் நகரில் இந்தியத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் விட பயங்கரமானதெனக் கருதப்படுகின்றது.

குண்டு வெடித்தபோது பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக உணர்ந்தேன். பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு கேட்ட போது, குண்டு வெடித்ததாகக் கூறினர் என்று பிரதேச வாசியொருவர் சொன்னார்.  ஐந்து கார்களில் குண்டு பொருத்தப்பட்டு அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்க வைக்கப்பட்டது. எதை இலக்காக வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை உறுதியாகக் கூறமுடியாதெனக் கூறும் பொலிஸார் இது கார் குண்டுத் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர்.

ஆப்கானிஸ்தானில் வீதியோரக் குண்டு வெடிப்புகள், தற்கொலைத் தாக்குதல்கள் சர்வசாதாரணமாகி விட்டன. இங்கு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வன்முறைகள் இடம் பெறுகின்றமை பாதுகாப்புக் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

16 வயதுக்கு குறைந்த மலையகத்தவர்களை பணிக்கமர்த்துவதை தடுக்க கடும் நடவடிக்கை

00000court.jpgமலைய கத்தில் உள்ள 16 வயதுக்குக் குறைந்தவர்களைப் பணியாட்களாக அமர்த்துவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நீதி, சட்ட மறு சீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

இது தொடர்பாக, நடைமுறையில் உள்ள சட்டங்களை இறுக்கமாக அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

அதேநேரம், மலையகத்திலிருந்து வந்து கொழும்பில் பணிப்பெண்களாகப் பணியாற்றுவோரின் பாதுகாப்பையும், மனித உரிமையையும் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்வதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் 16 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களைத் தொழிலில் அமர்த்தக் கூடாதென சட்டம் உள்ளது. ஆனால், மலையகத்துச் சிறார்களைச் சிலர் கொழும்பில் வீட்டு வேலைக்குக் கூட்டிச் செல்வது தொடர்ந்து வருகிறது. இவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி கூறினார்.

இதேவேளை, முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கொட்டகலையில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சங்கத்தின் உதவிச் செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பிரதி அமைச்சர், ஐக்கியப்பட்டு குரல் கொடுக்க வேண்டிய வியடங்களை தனிப்பட்ட அரசியல் லாபம் கருதி குரல் கொடுக்க முயற்சித்தால் எமது உரிமைக்குரல் நசுக்கப்படும். மலையக மக் களின் நலனுக்காக சேவை செய்கின்றோம் என்கின்றவர்கள் ஐக்கியப்பட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

கூட்டு ஒப்பந்தத்தில் மக்களின் உணர்வுகள் உள்ளடக்கப்படல் வேண்டும். திருத்தங்கள் செய்யப்பட்டவைகளாக எல்லோரினாலும் அங்கீகரிக்கப்பட்டதாக அது இருக்க வேண்டும்.

இரகசியங்கள் இருக்கக் கூடாது. மக்களின் நலனுக்கு காலத்திற்கு ஏற்ற விதமாக ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டதுடன்,

வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் எமது மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மனித உரிமைக்குமான சட்டதிட்டங்களை நாம் உருவாக்க முயற்சி செய்வோம். அடிப்படை சட்ட சம்பந்தமான செயலமர்வுகளை விரைவில் மலையகமெங்கும் எமது அமைச்சின் ஊடாக செய்ய தீர்மானித்துள்ளேன் என்றார். இக்கூட்டத்தில் அமைப்பாளர் டி. மாதவன் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் வீ. பாலேந்திரன் மற்றும் பலரும் உரையாற்றினர்.

அரசாங்க ஊழியர்களுக்கென மேலும் 10 ஆயிரம் வீடுகள்

sarath-amunugama.jpgஅரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 1500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 10,000 வீடுகளை நிர்மணித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத்அமுனுகம தெரிவித்தார்.

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள 1500 வீடுகளைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஹபராதுவ மற்றும் வெகுனகொட பகுதிகளில் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த கட்ட வீடுகள் களனி, ஹோமாகம, ராகமை, கண்டி குண்டசாலையிலும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இவ்வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்கள் முதலில் மொத்த விலையில் ஐந்து வீதத்தைச் செலுத்தி வீட்டைப் பெற்றுக்கொள்வதுடன் மிகுதி அவர்களது சம்பளத்திலிருந்து மாதாந்தத் தவணை மூலம் பெறப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமை ச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இதனைக் குறிப்பிட்ட அமைச்சர் அமுனுகம இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,  அரச ஊழியர்களுக்கு வீடுகளை அமைத்து வழங்கும் திட்டம் மீள புதிதாக ஆரம்பிக்க ப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மலேசியன் கம்பனியொன்றின் நிதியுதவியுடன் ஹபராதுவை மற்றும் வெருனகொட பகுதி களில் மாடி வீடுகளாக சகல வசதிகளை யும் கொண்ட 1500 எழில் மிகு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விபரங்கள் தேசிய பத்திரிகைகளில் விளம் பரமாக வெளியிடப்பட்டுள்ளன. நடைமுறையிலுள்ள வீட்டு விலைகளைப் போலன்றி குறைந்த விலையில் அரசாங்க ஊழியர்களுக்காகவே இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளுக்காக விசேட குழுவொன்று நிய மிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளுக்கான விண் ணப்பங்களை அக்குழு பரிசீலித்து பெயர்களை சிபார்சு செய்யும். அந்த சிபாரிசிற்கிணங்க வீடுகள் பகிர்ந்தளிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் இளைஞர்களைப் போன்று சிங்களவர்களும் கொல்லப்படுகின்றனர் – ரணில் விக்கிரமசிங்க

அன்று தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கொல்லப்பட்ட போது அவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் என கூறிய அரசாங்கம், இன்று பொலிஸாரின் உதவியுடன் சிங்கள இளைஞர்களையும் கொலை செய்து வருகின்றது.  இது பற்றி ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பினரும் என்ன சொல்லப் போகின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

அநுராதபுரம் இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற “சுதந்திரத்துக்கான அரங்கு’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு வினா எழுப்பினார்.

சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,  இன்று மக்களுக்கு சுதந்திரமாகக் கருத்துகளைக் கூட கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊடக அடக்குமுறை முன்னர் ஒரு பொழுதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

அன்று ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் ஊடக அடக்குமுறை நடைபெறுவதாக குரலெழுப்பி வந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று அவர் ஜனாதிபதியானதும் இவ்வாறு நடந்து கொள்வது வேடிக்கையாகவுள்ளது.