August

August

பாகிஸ்தான் அணி தோற்றதற்கு சூதாட்டமே காரணம் – காதிர்

cricket1.jpgஇலங்கை அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் பாகிஸ்தான் அணி தோற்றதற்கு கிரிக்கெட் சூதாட்டமே காரணமென்று முன்னாள் வீரர் அப்துல் காதிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ருவென்ரி20′ உலகக் கிண்ணத்தை வென்ற அணி இவ்வளவு மோசமாக விளையாடுவதை நம்ப முடியவில்லை. இதன் பின்னணியில் கிரிக்கெட் சூதாட்டம் இருக்குமோ என சந்தேகிக்கிறேன்.  இத்தொடரின் போது, பாகிஸ்தான் வீரர்களை சூதாட்ட முகவர்கள் தொடர்பு கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பாகிஸ்தான் அணிக்கு இலங்கைத் தொடர் மிக மோசமாக அமைந்துவிட்டது. சில வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் முடிந்த பின்பு உயர்மட்ட அளவில் குழு அமைத்து முழு அளவில் விசாரிக்க வேண்டுமென்றார்.

டெல்லி வந்தார் தஸ்லீமா- ரகசிய இடத்தில் தங்க வைப்பு

06-taslima.jpgஐரோப் பாவில் ஒரு நாட்டில் ரகசியமாக தங்கியிருந்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்திறங்கினார். அவரை மத்திய உளவுப் பிரிவான ஐ.பி அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர். ‘லஜ்ஜா’ என்ற புத்தகத்தை எழுதி சர்ச்சையில் சிக்கியவர் தஸ்லீமா. அவருக்கு அங்கு இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்ததையடுத்து 1994ம் ஆண்டு அவர் வங்காளதேசத்திலிருந்து வெளியேறினார்.

இந்தியா, பிரான்ஸ், ஸ்வீடன் உள்பட பல நாடுகளில் பாதுகாப்பாகத் தங்கியிருந்த அவர் கடைசியாக அவர் கொல்கத்தாவில் குடியேறினார். இந் நிலையில் 2007ம் ஆண்டு அங்கும் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதையடுத்து மேற்கு வங்க அரசு அவரை ராஜஸ்தானுக்கு அனுப்பியது. ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மத்திய அரசி்ன் உதவியோடு டெல்லியில் குடியேறினார். அரசு அவரை டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைத்தது.

இந் நிலையில் இந்தியாவிலும் அவருக்கு எதிர்ப்பு வலுக்கவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி சுவீடன் நாட்டுக்குச் சென்றார். அங்கிருந்து ஐரோப்பாவில் வேறு ஏதோ ஒரு நாட்டில் ரகசியமாக குடியேறி அந் நாட்டு பாதுகாப்போடு தங்கியிருந்தார். இந் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது விசாவை புதுப்பித்துக் கொள்ள இந்தியா வந்தார். அப்போது ஆகஸ்ட் 17ம் தேதி வரை அவரது விசாவை நீட்டித்த மத்திய அரசு உடனே அவரை திருப்பி ஐரோப்பாவுக்கே அனுப்பிவிட்டது.

அவரது இந்திய விசா காலம் வரும் 17ம் தேதியோடு முடிவடைகிறது. இந் நிலையில் தஸ்லீமா இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வேதச விமான நிலையம் வந்தார். அவர் எந்த நாட்டிலிருந்து வந்தார் என்று தெரியவில்லை. அவரது வருகையை அறிந்து காத்திருந்த ஐ.பி. பிரிவினர் அவரை உடனடியாக எங்கேயோ ஒரு ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விட்டனர்.

தஸ்லீமா தனக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை கேட்டு வருகிறார். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரகாலச்சட்டம் 64 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

26parliament.jpgஅவசர காலச் சட்டத்தை நாட்டில் மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிக்கும் பிரேரணை 64 மேலதிக வாக்குகளினால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 71 வாக்குகளும் எதிராக 07 வாக்குகளும் கிடைத்தன.

மக்கள் விடுதலை முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்தது. வாக்கெடுப்பு நடந்த சமயம் ஐக்கிய தேசியக் கட்சியினர் சபையில் இருக்கவில்லை.

பன்றிக் காய்ச்சலால் சவூதியில் இலங்கையர் ஒருவர் மரணம்

ah1n1.jpgபன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ளார். 32 வயதான இலங்கையர் ஒருவரும், 15 வயதான சவூதி சிறுவன் ஒருவனும் பன்றிக் காய்ச்சல் நோயினால் அண்மையில் உயிரிழந்துள்ளனர்.

சவூதி அரேபியாவில் பன்றிக் காய்ச்சல் நோயினால் இதுவரையில் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உம்றா யாத்திரைக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

80 ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் வீரகேசரி

virakesari1.jpgதமிழ்ப் பேசும் மக்களின் மிகுந்த அபிமானத்துக்குரிய தேசிய நாளிதழான வீரகேசரி தனது 79 ஆண்டு கால ஊடக சேவையைப் பூர்த்திசெய்து இன்று 80 ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது.  இது உலகெங்கும் பரந்து வாழும் ‘கேசரி’ அபிமானிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி-இதே நாளில் ஆரம்பிக்கப்பட்டது தான் வீரகேசரி நாளிதழ். ஊடகத்துறையில் மிகவும் ஆர்வம் பெற்று விளங்கிய தென்னிந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியச் செட்டியார் இதனை ஆரம்பித்து வைத்தார்.

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நிலவிய பல்வேறு கஷ்டங்கள், நெருக்கடிகள் என்பவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் நோக்கத்திலும் சமுதாயத்தில் நிலவும் சீர்கேடுகளைக் களைந்து சீரியதோர் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்ற தீர்க்கத்தரிசனத்துடனும் ஆரம்பிக்கப்பட்டதே வீரகேசரி நாளிதழாகும்.

மக்களுக்கு உண்மையான தகவல்களை நடுநிலை தவறாது கொடுக்க வேண்டும். சமுதாயத்தின் நீதி, நியாயங்களுக்காகப் போராட வேண்டும், குறிப்பாகத் தமிழ்ப் பேசும் சமூகங்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட தன்னாலான பங்களிப்பை ஆற்ற வேண்டும், அதேவேளை பத்திரிகை தர்மத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிநாதமாகக் கொண்டு உருவான வீரகேசரி இன்றும் அதன் பணியை சிரமேற்கொண்டு முன்னெடுத்து வருகிறது. 

புனித மடுத் தேவாலய வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்

madu_church.jpgபுனித மடு தேவாலயத்தின்  வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இம்முறைத் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிந்த பின்னர் நடத்தப்படும் முதலாவது மடுத்திருவிழா இதுவாகும்.

இன்று ஆரம்பமாகும் மடுத்திருவிழா தொடர்ந்து 16ஆந் திகதி வரை நடைபெறும். இன்றைய முதலாவது வழிபாடு முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்றது. மற்றுமொரு வழிபாடு மாலை 4.30 மணிக்கு நடைபெறும். வழமைபோன்று சகல வழிபாடுகளுடன் திருவிழா நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக ஆலய பரிபாலகர் அருட்திரு. ப்ரெட்டி டெஸ்மன் க்ளார்க் தெரிவித்துள்ளார்.

மடுத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய  பாதுகாப்பு வழங்க பொலிஸார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் யாத்திரிகர்கள் எவரும் ஆலயத்தில் எதிர்வரும் 11ஆந்திகதி வரை தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் 12ஆந் திகதி முதல் திருவிழா நிறைவுறும் வரை யாத்திரிகர்கள் ஆலயத்தில் தங்கயிருக்க அனுமதிக்கப்படுவர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்புக்கு இந்தியா ரூ. 117 மில். உதவி

runway.jpgபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு திட்டத்திற்கென இந்திய அரசு 117 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இரண்டாவது தவணைப் பணமாக 117 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை இந்திய அரசு, இலங்கைக்கு வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் இதற்கான காசோலையை வழங்கிவைத்தார். இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரதீப் சிங்கும் கலந்துகொண்டார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த நிதியுதவி அமைந்துள்ளது.

நாங்களும் வெள்ளரசங் கிளையும்! : விஜி

botreeநீண்ட தரைப்பாதையின்
சிதைவுற்ற கரைகள் எங்கும்
பாதி எரிந்த மரங்கள்
முகங்களை திருப்பிக் கொள்ளும்.

முட்கம்பி வேலிகளுக்கப்பால்
சோர்வுற்ற மலர்கள்
வெற்றுப் பார்வையை வீசும்.

படிந்து போயுள்ள புழுதி போல்
பட்ட அவமானங்கள்
சொல்லவும் கேட்கவும்
ஆளற்று மௌனிக்கும்;.

மழையிற் கரைந்ததாயினும்
அவர் கண்ணீர்
தனியே உறைந்து கிடக்கிறது

சிந்திய குருதியோ
அடையாளம் காட்ட விரும்பாது
இன்னும் ஆழமாய்
தன்னை புதைத்து கொண்டுளது.

தூக்கிய கைகள்
காற்றில் சோர்ந்து விழ
தீ கக்கும் துப்பாக்கிகளே
அவர்களுடன் பேசின.

சுவடின்றி அள்ளப்பட்ட
சாம்பலின்
தப்பியொட்டிய துகள்கள்
என்னை விட்டு
போகாதே என்கின்றன.

எத்தனை தடவைதான்
குழந்தை
செத்த தாயிடம் பால் அருந்தும்?

வெள்ளரசங் கிளையை
எம்மால்
நிமிர்ந்து பார்க்க முடியவில்லை!

இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மீண்டும் தமிழகத்தின் நிவாரணப் பொருட்கள்

srilanka-refugees.jpgஇலங் கையில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கென தமிழக அரசு திரட்டியுள்ள நிவாரணப்பொருட்கள் நான்காவது தவணையாக இலங்கைக்கு அனுப்பப்படவிருக்கிறது. சுமார் 15 கோடி மதிப்புள்ள அப்பொருட்கள் ஏற்றப்பட்ட எம்.சி.பி.ஆம்ஸ்டர்டாம் என்ற கப்பல் வியாழக்கிழமை சென்னைத்துறைமுகத்திலிருந்து புறப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் வீர ஷண்முகமணி  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இப்பொருட்களை கொழும்பில் இறக்குவதற்குத் தேவையான அனுமதி இலங்கை அரசிடமிருந்து வராத சூழலில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய 100 சரக்குப் பெட்டகங்கள் சென்னை துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக சென்னைத் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக சில பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

நிவாரணப்பொருட்களை விநியோகிப்பது யார் என்ற சிக்கலின் காரணமாகவே தாமதமேற்பட்டதாகவும், இப்பொறுப்பு இப்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வைக்கு மாற்றப்பட்டுவிட்டதால் அச்சிக்கலும் தீர்க்கப்பட்டுவிட்டது. எனவே கப்பலில் சரக்குக்கள் ஏற்றப்பட்டு கொழும்பிற்கு அனுப்பப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறினர்.

இலங்கையில் போர் உக்கிரமடைந்த நேரத்தில் இடம் பெயர்ந்தோருக்காக நிவாரணப்பொருட்கள் திரட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 13 தொடங்கி இதுவரை மூன்று தவணைகளாக 23.52 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன்.

இப்போது அனுப்பிவைக்கப்படும் பொருட்கள் ஆகஸ்ட் 8 ஆம் நாள் கொழும்பு சென்றடையும் என்றும், பிறகு அவற்றை அங்குள்ள இந்தியத் தூதரகம் பெற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்க்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பும் கூறுகிறது.

68 கிராமங்கில் மீள்குடியேற்றம். எந்தத் தடைவரினும் துரிதமாக முன்னெடுக்கப்படும் – பசில்

basil.jpgவட பகுதி மக்கள் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் மீளப்பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்புடன் செயற்படுகிறாரென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறினார்.

180 நாள் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் வெகுவிரைவில் 68 கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வவுனியாவில் 35 கிராமங்களிலும் கிளிநொச்சியில் 9 கிராமங்களிலும் யாழ்ப்பாணத்தில் 24 கிராமங்களிலும் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தையும் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்த 1094 பேரை மீளக்குடியேற்றும் நிகழ்வு நேற்று வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எந்தத் தடைவந்தாலும் கூடிய விரைவில் மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மீளமைப்பதற்கான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளாரென்றும் பசில் ராஜபக்ஷ கூறினார்.இடம்பெயர்ந்த மக்கள் மனங்களில் மீண்டும் விஷம் விதைத்து பயங்கர வாதத்தைத் தோற்றுவிக்க வேண்டாமென தமிழ்த் தலைவர்களைக் கேட்டுக் கொள்வதாகக் கூறிய அவர், வட பகுதி மக்களிடம் மீண்டும் விளையாட வேண்டாமென எதிர்க் கட்சித் தலைவரை கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

‘உலகில் எங்கு பார்த்தாலும் மீள்குடியேற்றம் நீண்ட நாட்கள் எடுக்கின்றன. பலஸ்தீனத்தில் இடம்பெயர்ந்தோர் 70 வருடங்களாக முகாம்களில் உள்ளனர். சிலர் முகாம்களில் பிறந்து அங்கேயே இறந்தும் போயுள்ளனர்.

பங்களாதேஷ், பாகிஸ்தான், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் 10 வருடங்களுக்கு மேலாக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம்கள் 19 வருடங்களாக இடம்பெயர்ந்துள்ளனர். மலையகத்திலிருந்து முல்லைத்தீவு சென்று வவுனியாவுக்கு வந்திருந்தோர் 22 வருடங்களாக உள்ளனர். 180 நாட்கள் வேலைத்திட்டத்தில் இதுவரை 35 நாட்களே பூர்த்தியடைந்துள்ளன.

கெப்பித்திகொல்லாவ, சேருநுவர, உள்ளிட்ட இடங்களில் சிங்களமக்கள் முதன் முதலாக இடம்பெயர்ந்தனர். மூதூரில் 40,000 முஸ்லிம்கள் இடம் பெயர்ந்தனர். உலக வரலாற்றில் இலங்கையில் மட்டுமே 44 நாட்களில் 40,000 மக்களை ஜனாதிபதி மீளக்குடியமர்த் தினாரென்பதை நாம் பயமின்றிக் கூற முடியும்.

வாகரை மக்கள் மூன்று மாதங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அங்கிருந்திராத பாதை மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினோம். கிழக்கில் இடம்பெயர்ந்தோரில் 98 வீதமானோரை 9 மாதங்களில் மீள்குடியேற்றினோம். அடுத்த கட்டமாக வட பகுதி மக்களை மீளக்குடியமர்த்துவோம். ஜனாதிபதி மீது நம்பிக்கை வையுங்கள்’ என்றார் பசில் ராஜபக்ஷ.