August

August

கிழக்கு மாகாணத்தில் தனிநபர்கள் ஆயுதம் வைத்திருக்கத் தடை:எடிசன் குணத்திலக்க

dig-edison.jpg“மட்டக் களப்பு மாவட்டத்தில் முதலாம் திகதி முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” என கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க தெரிவித்தார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி.,புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ரி.எம்.வி.பி. ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“வர்த்தகர்கள் தொடர்ந்து கப்பம் கொடுப்பதையும், மதுபான முகவர்களும், வியாபாரிகளும் தமது கமிஷன்களை கொடுப்பதற்காக அதிக விலைக்கு மதுபான வகைகளை விற்பனை செய்வதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும்”என்றும் குறிப்பிட்டார்.

“மட்டக்களப்பு நகர பிரதேசத்திலும் அண்மித்த பிரதேசங்களிலும் அண்மைக் காலங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய குழுவை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் ஒரு வார காலத்திற்குள் கைது செய்து மக்கள் முன் நிறுத்தவார்கள்.

இக் கொள்ளையர்கள் கொழும்பிலிருந்து வரவில்லை. இந்தப் பிரதேசத்தில் தான் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவையேற்படும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கான அதிகாரமும் பொலிஸாருக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனையாளர்களும், முகவர்களும் தாங்கள் விரும்பிய விலைக்கு இனிமேல் விற்க முடியாது மதுபான போத்தல்களில் குறிப்பிட்டுள்ள விலைக்கே விற்க வேண்டும். இதனை மீறி நடந்தால் மதுபான லைசன்ஸ் ரத்து செய்யப்படும்” என்று மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், இராணுவ மற்றும் விசேட அதிரடிப் படை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மீண்டும் பயங்கரவாதம் உருவாகி விடக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது:அமைச்சர் மகிந்த சமரசிங்க

“மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவெடுத்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. இதன் காரணமாக, போராளிகளை சமூக வாழ்வில் ஒருங்கிணைப்பதற்கான தேசியத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது” என்று மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். பல்லின மக்களைக் கொண்ட இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தையும் தேசிய அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். இதற்கு நிதியுதவி பெரிதும் அவசியமானது என்றும் அவர் கூறினார்.

முன்னாள் போராளிகளை சமூக வாழ்வில் ஒருங்கிணைத்தல் என்ற தேசிய செயற்றிட்டம் தொடர்பிலான கருத்தரங்கை, கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் மனித உரிமைகள் அமைச்சு மற்றும் சர்வதேச தொழில் ஸ்தாபனம் ஆகியன இணைந்து வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தன.இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் தனது தலைமையுரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டைன் ஸ்டெயர் மோஸ், சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன, நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த உள்ளூர் வெளியூர்ப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்,

“30 வருட காலமாக நாட்டில் புரையோடிப் போயிருந்த பயங்கரவாதம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளின் பயனாக இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டனர். தற்போது வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் போராளிகள் என இனம்காணப்பட்டுள்ளனர்.

இனங்காணப்படாத இன்னும் பலரும் அங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இதுவரை காலம் போராளிகளாக இருந்தவர்களுக்கு சமூக அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பதற்காகவே எமது அமைச்சு, போராளிகளுக்கு புனர்வாழ்வு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எமது இத்திட்டத்திற்கு பல தரப்பு யோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விரிவான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே போராளிகளை சமூக வாழ்வில் ஒருங்கிணைப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

மோதல் காரணங்களால் நாம் பல்வேறு அசௌகரியங்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்துள்ளோம். பொருளாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மை, சுற்றுலாத்துறையில் மந்தநிலை என சகல துறைகளும் வீழ்ச்சி கண்டன. எனினும், தற்போது அவ்வாறான நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு. இதில் நாம் கூடிய கவனம் செலுத்தி வருகிறோம்.

கடந்த காலக் கசப்புணர்வுகள் மறக்கப்பட வேண்டும் என்பதுடன், மன்னிப்பு அளிப்பதும் அவசியமானது. அப்போது தான் நல்லதொரு சமுதாயத்தையும் சமாதானத்தையும் இங்கு காணமுடியும். இதன் மூலமே நம்பிக்கையையும் கட்டியெழுப்பக் கூடியதாக அமையும். முன்னாள் போராளிகளை சமூகத்தில் அந்தஸ்துள்ளவர்களாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கு அவர்களின் கல்வி அறிவு மேம்படுத்தப்படுதல் வேண்டும். அத்துடன், அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களையும் உறுதிசெய்வது இன்றியமையாதது.

இவ்வாறு பல திட்டங்களை அரசு கொண்டிருப்பதன் காரணம், மீண்டும் ஒரு முறை துப்பாக்கி ஏந்திய ஆயுதக் கலாசாரமும் பயங்கரவாதமும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதற்காகவே ஆகும். இதன் பிரகாரமே, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார். 

கொழும்பில் தமிழ்க் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

_jail_.jpgகொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தடுப்புக் காவல் உத்தரவில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தம்மை விடுதலை செய்ய வேண்டும், அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும், வழக்கு தொடரப்பட்டால் தத்தமது பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றப்படவேண்டும் அல்லது தமக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரபடுத்த வேண்டும் என  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

ஊவாமாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 115 முறைப்பாடுகள் பதிவு

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 115 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான வலையமைப்பு தெரிவித்துள்ளதுடன், இதில் தாக்குதல் சம்பவம் 9 எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு மேலும் தெரிவித்திருப்பதாவது;

நேற்று வியாழக்கிழமை வரை ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 115 முறைப்பாடுகளை நாம் பதிவு செய்துள்ளோம். இதில் அதிகளவாக சட்டவிரோத தேர்தல் பிரசாரம் தொடர்பில் 42 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம்.

இதற்கு அடுத்ததாக 22 முறைப்பாடுகளில் அரச அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அரச சொத்து துஷ்பிரயோகம் குறித்து 16 சம்பவங்களை பதிவு செய்துள்ளோம்.

நாம் தாக்குதல் தொடர்பில் 9 சம்பவங்களும் சொத்துகள் மீதான தாக்குதல் குறித்து ஒரு சம்பவத்தையும் பதிவு செய்துள்ளோம். 14 சம்பவங்கள் தேர்தல் பிரசார காரியாலயங்கள் தாக்கப்பட்டமையாகவுள்ளது. அச்சுறுத்தல் குறித்து 5 முறைப்பாடுகளையும் தேர்தல் பிரசாரத்தை தடுக்கும் 6 சம்பவங்களையும் பதிவு செய்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

கண்டி தலதா மாளிகை ரந்தோலி பெரஹர இன்று ஆரம்பம்

kandy-parahara.jpgகண்டி வரலாற்று புகழ் மிக்க எசல பெரஹரவில் இன்று முதலாம் திகதி முதல் ரந்தோலி பெரஹர ஆரம்பமாகிறது. இன்று முதலாம் திகதி முதல் 5ம் திகதி வரை நடை பெறவுள்ள இந்த ரந்தோலி பெரஹரவையடு த்து 6ம் திகதி பகல் பெரஹர இடம்பெறவுள்ளது.

6ம் திகதி பகல் பெரஹர முடிந்தபின் தலதா மாளிகை தியவதன நிலமே நிலங்க பிரதீப் தெல பண்டார தலைமையில் பஸ்நாயக்க நிலமேக்கள் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டு பெரஹரா இனிதே முடிவுற்ற செய்தியினை அறிவிப்பார்கள். ஜனாதிபதி பெரஹராவில் பங்குபற்றிய சிறந்த கலைஞர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்குவார்.

ரந்தோலி பெரஹரவின் போது இங்கு மகியங்கனை ஆதிவாசிகள், வேடர்கள் தலதா மாளிகைக்கு வருகை தந்து வழிபடுவதோடு அவர்கள் சேர்த்து வைத்துள்ள ‘தேன்’ பாணியினை குடுவைகளில் எடுத்துவந்து காணிக்கையாக வழங்குவார்கள். அதுபோல இந்துக்கள் கண்டி கட்டுக்கலை பிள்ளையார் கோவிலிலிருந்து மல்லிகைப்பூத் தட்டுகளுடன் சென்று புனித பேழைக்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள்.

இறுதி ரந்தோலி பெரஹர முடிந்தபின் கெட்டம்பே மகாவலிகங்கையில் நீர்வெட்டு வைபவம் இடம்பெற்று, கட்டுக்கலை கோயிலிலிருந்தே பகல் ஊர்வலம் புறப்படும். கெட்டம்பே மாநகர சபை மைதானத்திலும், போகம்பரை மைதானத்திலும், ஜோர்ஜ் ஈ. டி. சில்வா பூங்காவில் அமைந்துள்ள வாகன தரிப்பிடங்களின் மேல் மாடிகளிலும் காணிவேல் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

மொனராகலை மாவட்டத்தில் 20,000 ஏக்கரில் இறப்பர் செய்கை

மொனரா கலை மாவட்டத்தில் 20,000 ஏக்கரில் இறப்பர் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சர் தி. மு. ஜயரத்ன சமர்ப்பித்துள்ளதுடன் அதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று இது குறித்து தெரிவித்த அமைச்சர்; மேற்படி இறப்பர் பயிர்ச்செய்கைக்கான காணிகள் இனங் காணப்பட்டுள்ளதுடன், இந்நடவடிக்கைகள் பற்றிய செயற் திட்டம் பற்றி ஆராய வன இலாகா அதிகாரி மாவட்டச் செயலாளர் உட்பட்ட குழுவொன்றையும் நியமித்துள்ள தாகத் தெரிவித்தார்.

காணாமல் போன மாணவி 7 மாதங்களின் பின் கண்டுபிடிப்பு

images000.jpgதிக்கு வலை பல்லிய கொறட்டுவ பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன் காணாமல் போன 15 வயதுடைய மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி காணாமல் போன இம் மாணவி தொடர்பாக மாணவியின் பெற்றோர் திக்குவலை பொலிஸ் நிலையத்தில் அப்போது புகார் செய்திருந்தனர்.

இதனையடுத்து, அண்மையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அம் மாணவி மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டினைச் சுற்றி வளைத்த பொலிஸார் மாணவியை மீட்டுள்ளனர்.

அம்மாணவி தன்னைக் கடத்திச் சென்று வைத்திருந்ததாகக் கூறியவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடத்திச் செல்லப்பட்ட மாணவி மாத்தறை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முகாம்களிலுள்ளோரை 6 மாதங்களுக்குள் மீளக்குடியமர்த்த இலங்கை அரசு இணக்கம்- பாராளுமன்றில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

முகாம்களில் இருக்கும் தமிழர்கள் 6 மாதங்களுக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு குறித்து இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: “இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு 500 கோடி ரூபா வழங்குவதாக இந்தியா ஏற்கனவே கூறியுள்ளது. இன்னும் என்னென்ன உதவி தேவைப்பட்டாலும் அளிப்பதாக சமீபத்தில் எகிப்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்

இலங்கை பாகிஸ்தான் இன்று 2 வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம்.

cricket1.jpgஇலங்கை பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 36 ரன் வித்தியாசத்தில் வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது.

இலங்கைப் பத்திரிகைகளுக்கு தற்போது புதிய சவால்

இலங்கை யுத்தம் முடிவிற்கு வந்து 2 மாதங்கள் கழிந்துவிட்ட நிலையில் யுத்த சம்பந்தமான செய்திகளை அதிகளவில் பிரசுரித்து வந்த இலங்கைப் பத்திரிகைகள் எதனைத் தற்போது செய்தியாக வெளியிடுவதென்ற புதிய சவாலை எதிர்நோக்கியுள்ளன.

யுத்தச் செய்திகள் மறைந்துள்ள நிலையில் வாசகர்களை எவ்வாறு கவர்வது என்பது தொடர்பாகவும் புதிய செய்திகளை எவ்வாறு பிரசுரிப்பது என்பது குறித்தும் பத்திரிகைகள் தற்போது போராடிக் கொண்டிருக்கின்றன. 25 வருடங்களாக மோதல் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வந்த இப்பத்திரிகைகள் இப்போது புதிய செய்திகளைக் கொடுப்பது தொடர்பாக திண்டாடுவதாக யூ.ஏ.ஈ.செய்திச்சேவையின் வெளிநாட்டு நிருபர் பைசல் சமத் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆங்கிலமொழி பத்திரிகைகளிலும் பார்க்க சிங்கள தமிழ் பத்திரிகைகளே இந்த விடயத்தில் அதிகளவிற்கு திண்டாடுகின்றன. பத்திரிகையாளர்கள் பாரிய சவாலை இது தொடர்பாக எதிர்நோக்குவதாக சிங்களப் பத்திரிகையான ராவயவின் ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்திருக்கிறார். விவாதம் மற்றும் கலந்துரையாடல் என்பன இப்போது யுத்தத்தில் இருந்து இதர விடயங்களுக்கு மாறியிருப்பதாகவும் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு, கல்வி, அகதிகள், இன அரசியல், போக்குவரத்து, பாராளுமன்றம், தேர்தல் முறைமைகள், நீதித்துறை போன்ற விடயங்களுக்கு செய்திகள் இப்போது கவனம் செலுத்துவதில் மாற்றம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.