September

September

களஞ்சியப்படுத்தப்பட்ட நெல் விற்பனை

maithripalasirisena.jpgநெல் சந்தைப்படுத்தல் சபையால் களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள 44 ஆயிரம் மெட்றிக்தொன் நெல்லை பொதுச் சந்தையில் விற்பனைக்கு விட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரனையை விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திறிபால சிறிசேன முன்வைத்திருந்தார்.

2008ஆம் 2009ஆம் ஆண்டு பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைகளின்போது களஞ்சியசாலைகளில் சேமிக்கப்பட்ட 15000 மெட்றிக்தொன் நாட்டரிசி ஒரு கிலோ 33 ரூபா வீதம் பொதுச் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

‘இலங்கையில் இடம்பெயர்ந்தோர் பற்றி இந்தியா கரிசனை கொண்டுள்ளது’-மன்மோகன் சிங்

101009displacedidps.gifஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலை குறித்து இந்திய மத்திய அரசு மிகவும் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர்களின் மீள்குடியேற்றம் குறித்து தொடர்ந்து இலங்கை அரசை வற்புறுத்தி வருவதாகவும் கூறி இருக்கிறார்.

தமிழக முதல்வர் கருணாநிதி இப்பிரச்சினை குறித்து தனக்கு எழுதியிருக்கும் கடிதத்திற்கு பதிலளித்துள்ள மன்மோகன் சிங், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அந்நாட்டுத் தமிழர்கள், அவர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்படவேண்டும் என்று உறுதிபட இந்தியா இலங்கைக்கு கூறியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் தீவிர கவனம் செலுத்திவரும் மத்திய அரசு ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கென தனியொரு மருத்துவமனை நடத்தி வந்தது, அதில் இதுவரை ஏறத்தாழ 38,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது, கண்ணிவெடிகளை அகற்றும் பணியிலும் இந்தியக்குழுக்கள் ஈடுபட்டிருக்கின்றன என்று மன்மோகன் சிங் மேலும் கூறியிருக்கிறார்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் பல்வேறு மறுவாழ்வுப்பணிகளை இந்தியா மேற்கொண்டிருப்பதாகக் கூறும் இந்தியப் பிரதமர், புலம்பெயர்ந்தோரால் திரட்டப்பட்டு தமிழ்நாட்டிலிருந்து கப்பல் மூலமாக அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்கள் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், அது அங்கு பாதிக்கப்பட்டுள்ள் தமிழர்களை சென்றடைய இலங்கை அரசு ஆவன செய்யும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் தனது நம்பிக்கையைத் தெரிவித்திருக்கிறார்.

ஒத்துழையாமை போராட்டத்தினால் 1.5 பில்லியன் ரூபா நஷ்டம் – தோட். தொழிலாளர் சம்பள உயர்வு குறித்து தொழிலமைச்சர் திருப்தி

080909teawomen.jpgபெருந் தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்ட ஒத்துழையாமைப் போராட்டத்தினால் நாட்டுக்கு 1.5 பில்லியன் ரூபா நஷ்டமேற்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள் இதன் மூலம் அரசாங்கத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்தும் சூழ்ச்சியை மேற்கொண்ட போதும் அம் முயற்சிகள் தோல்வியுற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் 405 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த அமைச்சர் இது தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளான குடியிருப்பு, மின்சாரம், குடிநீர், மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் முதலாளிமார் சம்மேளனத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளன த்துக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் வர்த்தமானியில் பதிவு செய்வதற்காக அமைச்சர் அதாவுத செனவிரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு தொழிலமைச்சில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை ஊழியர் சேவை சங்கத்தின் பெருந்தோட்டத் துறைப் பிரிவு க்கான தலைவர் லலித் ஒபேசேகர இதனை அமைச்சரிடம் கையளித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர், தோட்டத் தொழிலாளர்களுக்கு திருப்திப் படக்கூடிய சம்பளவுயர்வு கிட்டியுள்ள தெனவும் இது சகல தொழிலாளர்களும் மகிழ்ச்சியுறும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சம்பளவுயர்வுக்கு மேலதிகமாக தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்களுக்கென தொழிலாளியொருவருக்கு நாளொன்றுக்கு 42.75 ரூபா வழங்க வேண்டியுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

தேயிலை உற்பத்தித் தரத்தை உறுதிப்படுத்தல்

150909dimujayarathna2.jpgஇலங்கை தேயிலை சபையினால் தேயிலை உற்பத்தித் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக தரநிர்ணய நிறுவனத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரனை விவசாய கைத்தொழில் அமைச்சர் தி.மு. ஜயரத்ன மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸவிதாரண ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.

இதன்படி இந்த இரு நிறுவனங்களும் அரச நிதியைப் பெற்றுக்கொள்ளாது சேவை பெறுவோரிடமிருந்து கட்டணம் அறவிடக்கூடிய திட்டமொன்றை வகுத்துச் செயற்படும். இவ்வாறு அறவிடப்படும் கட்டணம் இரு நிறுவனங்களுக்குமிடையில் உரிய முறை பகிர்ந்துகொள்ளப்படும்.

தனியார் பஸ் கட்டணம் 22ஆம் திகதி முதல் அதிகரிப்பு

bus-2222.jpgபஸ் கட்டணங்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 5.3 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கைத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்குத் தெரிவித்துள்ளது. எனினும் 6 ரூபாவுக்கான கட்டணம் இதனால் பாதிப்படைய மாட்டாதெனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தனியார் – அரசு போக்குவரத்துடன் இணைந்ததான நேர அட்டவணை ஒன்றைத் தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் இது மக்களுக்கு பெரிதும் உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

சட்டத்தரணிகளுக்கு 7 மாடி கட்டிடத்தொகுதி

dinesh.jpgசட்டத்தர ணிகளுக்கு அலுவலக வசதிகளுடன் கூடிய 7 மாடிகளைக்கொண்ட கட்டிடத்தொகுதியொன்றை அமைப்பதற்கான காணியை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை நகர அபிவிருத்தி மற்றும் புனிதபூமிகள் அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்திருந்தார். இதன்படி சென். செபஸ்தியன் ஹில் பிரதேசத்தில் உள்ள 2 றூட் 26.94 பேச்சர்ஸ் பரப்பளவு கொண்ட காணி நீண்டகால குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்படும்.

அநகாரிக தர்மபாலவின் சிலைக்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி மலரஞ்சலி

ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலவின் 145 வது ஜனன தினத்தையொட்டி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையில் விசேட வைபவமொன்று நடைபெற்றது. இவ் வைபவத்தின் போது விசேட ரத பவனியாக எடுத்துவரப்பட்ட அநகாரிக தர்மபாலவின் உருவச் சிலைக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தி கெளரவமளித்தார்.

ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலவின் ஜனன தினத்தையொட்டி நேற்று நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. “தம்பல் ஹண்ட” எனும் அமைப்பு இதனை ஒழுங்கு செய்திருந்ததுடன் அதன் சம காலத்தில் அலரிமாளிகை நிகழ்வு இடம் பெற்றது. மேற்படி அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அமரர் அநகாரிக தர்மபாலவின் வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை நேற்று ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இதேவேளை, கொழும்பு விக்டோரியா பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அநகாரிக தர்மபாலவின் உருவச் சிலைக்கருகிலிருந்து கொழும்பு ஆனந்தாக் கல்லூரி வரை பாடசாலை மாணவர்களின் பாத யாத்திரையொன்றும் இடம் பெற்றது. அலரி மாளிகையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, மாதுலுவாவே சோபித தேரர் உட்பட பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய பொறியியலாளர் பிரிவை ஈடுபடுத்த அனுமதி!

viswa-999.jpgசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கட்டட நிர்மானப் பணிகளில் மத்திய பொறியியலாளர் பிரிவை ஈடுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால முன்வைத்திருந்தார். இதன்படி 240 மாணவர்களுக்கு 175.68 மில்லியன் ரூபா செலவில் விடுதி அமைக்கப்படும். மேலும் 296 மில்லியன் ரூபா செலவில் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான கட்டடம் அமைக்கப்படும். 121 மில்லியன் ரூபா செலவில் விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்படும்.

பஸ் கட்டண உயர்வு திருப்தியற்றதென தெரிவிப்பு

bus-2222.jpgதேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ள புதிய பஸ் கட்டண உயர்வை ஏற்க முடியாது எனவும் அது தொடர்பில் தாம் திருப்தி அடையவில்லை எனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆரம்ப கட்டணத்தையும் 9 ரூபா கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். ஆரம்ப கட்டணங்களை அதிகரிக்குமாறு போக்குவரத்து அமைச்சை கோரிய போதும் தமது கோரிக்கையை அமைச்சு நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இருந்த போதும் 22 ஆம் திகதி முதல் தேசிய போக்குவரத்து ஆணைக் குழு அறிவித்துள்ள படி கட்டண உயர்வை அமுல்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

மிஸ்டர் பீனின் கடன் அட்டை மோசடி : கொழும்பில் இலங்கையர் கைது

been.jpgபிரித்தானிய நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற இலங்கையர் ஒருவரைப் பொலிஸார் கொழும்பில் கைது செய்துள்ளனர்.  இவர் இணையத் தளத்தைப் பயன்படுத்தித் திருடிய கடன் அட்டை இலக்கங்களில், மிஸ்டர் பீன் என்ற பிரபல பிரிட்டிஷ் நடிகர் ரொவன் அட்கின்ஸனின் கடன் அட்டையும் உள்ளடக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸ் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச பணக் கொடுப்பனவு பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே பொலிஸார் இந்த நபரைக் கைது செய்தனர்.  அத்துடன் பிரித்தானியாவில் உள்ள தனது நண்பர்கள் மூலமாகவே இவர் மிஸ்டர் பீனின் கடன்அட்டைக்குரிய இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள ஒரு ஹோட்டலில் வைத்து மேற்படி இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். எத்தனையோ கிரடிட் கார்ட் இலக்கங்களைத் திருடியுள்ள இவர், வெளிநாட்டு இயக்குநர்களின் உதவியுடன் கோடிக்கணக்கான பணத்தைப் பரிமாற்றம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது