October

October

தென் மாகாண முதலமைச்சர்; ஓரிரு தினத்தில் அறிவிக்கப்படும் – அமைச்சர் சுசில்

srilanka-voting.jpgதென் மாகாண புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்னும் ஓரிரு தினத்தில் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு. முன்னணி கூடி இது குறித்து முடிவு செய்யும் எனவும் ஐ.ம.சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்தார்.

அடுத்த முதலமைச்சராக யார் நியமிக்கப்பட உள்ளார் என்பது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தேர்தலில் வெற்றிபெற்றோரின் விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ள போதும் உத்தியோகபூர்வமாக அந்த விபரங்கள் தனக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர் அடுத்த முதலமைச்சராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த தென் மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம.சு. முன்னணி அமோக வெற்றியீட்டியது. ஐ. ம. சு முன்னணி சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா 90, 294 வாக்குகளையும் மாத்தறை மாவட்ட முதன்மை வேட்பாளரான முன்னாள் மாகாண அமைச்சர் ஹேமால் குணசேகர 63, 323 வாக்குகளையும் அம்பாந்தோட்டை மாவட்ட முதன்மை வேட்பாளரான முன்னாள் மாகாண அமைச்சர் வி. கே. இந்திக 56, 855 வாக்கு களையும் பெற்று முதலிடங்களை பெற்றனர். இவர்களுள் ஒருவர் மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன

ஒரேநேரத்தில் 18 நாடுகளில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை!

இந்து சமுத்திரத்திலுள்ள 18 நாடுகளில் நாளை ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

உலக பேரழிவு குறைப்பு தினத்தை முன்னிட்டு அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்;  நாளை காலை 6.30 மணிக்கு சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.
 
உலக அழிவுகளை குறைக்கும் தினத்தை முன்னிட்டு இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையில் இலங்கைää இந்தியா,  இந்தோனேஷியா, மலேசியா,  அவுஸ்திரேலியா உட்பட 18 நாடுகள் பங்கேற்க உள்ளன.

இந்தோனேஷியாவில் இருந்து 18 நாடுகளுக்கும் ஒரேநேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது. அறிவித்தல் கிடைத்து எவ்வளவு நேரத்தில் சுனாமி எச்சரிக்கை குறித்த நாட்டை வந்தடையும், எவ்வளவு நேரத்தில் மக்களுக்கு அறிவிப்பது எவ்வளவு நேரத்தினுள் மக்களை வெளியேற்றுவது என்பன குறித்தும் ஒத்திகைகள் இடம்பெற உள்ளதாக இடர்முகாமைத்துவ நிலைய தேசிய இணைப்பாளர் கீர்த்தி ஏக்கநாயக்க கூறினார

100 வயதில் தங்கப் பதக்கம் வென்றார் அவுஸ்திரேலிய மூதாட்டி

gold-madel.jpgஉலக மூத்தோர் விளையாட்டு போட்டி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சனிக்கிழமை தொடங்கியது. வருகிற 18 ஆம் திகதி வரை நடக்கும் இந்த போட்டியில் 24 முதல் 101 வயதிலான பிரிவினருக்கு போட்டிகள் நடக்கின்றன. 95 நாடுகளைச் சேர்ந்த 28,292 வீரர், வீராங்கனைகள் சிட்னியில் குவிந்துள்ளனர்.

இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டிகளில் எல்லோரையும் கவர்ந்தவர் அவுஸ்திரேலிய வீராங்கனை ரூத் பிரித். காரணம் அவரது வயது 100. இந்த வயதிலும் மனம் தளராமல் போட்டிக்களத்தில் குதித்து உள்ளார். குண்டு எறிதல் போட்டியில் 100 முதல் 104 வயதினருக்கான பிரிவில் அவர் பங்கேற்றார். ஆனால் இப்பிரிவில் பங்கேற்ற ஒரே வீராங்கனை அவர் தான். இதனால் போட்டியின்றி அவர் தங்கப்பதக்கம் வென்றார். இருப்பினும் அவர் 4.07 மீட்டர் தூரம் குண்டு எறிந்தார்.

பதக்கம் வென்றதும் மது வகைகளுடன் வெற்றியை கொண்டாடலாம் என்று போட்டி அமைப்பாளர்கள் ரூத் பிரித்தை அழைத்த போது, அவர் மது, சிகரெட் குடிக்கும் பழக்கம் தனக்கு கிடையாது என்று மறுத்து விட்டார்.

மதுவகைகளுடன் வெற்றியை கொண்டாடும் இந்த நவநாகரீக பாணி தனக்குரியதல்ல என்றும் அவர் கூறினார். இந்த வயதிலும் ஆரோக்கியமுடன் இருக்கும் ரூத் பிரித்தின் உணவு முறையில் ஒரு ஆச்சரியமான விஷயமும் உண்டு. அதாவது சிறு வயது முதலே அவர் ஒரு போதும் காய்கறி வகைகளை சாப்பிட்டதில்லையாம். ‘போட்டிகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று வருகிறேன். ஓய்வு பற்றி இன்னும் சிந்திக்கவில்லை’ என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், இந்த செஞ்சூரி மூதாட்டி.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 இலங்கையர் தென் கொரியாவில் கைது

131009images.jpgசூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 19 இலங்கையர்கள் தென் கொரியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

தென் கொரியாவின் வோன் கரில் உள்ள காஜா ட்ரொன் பகுதியில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு பேரை காவல்துறையினர் தேடி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் உரிய விஸா இன்றி தென் கொரியாவில் தங்கியிருந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

குறித்த நபர்களை நாடு கடத்த அந்நாட்டு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறன சம்பவங்களின் மூலம் தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வியட்நாம் மற்றும் தாய்வான் பிரஜைகளும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

நாடளாவிய ரீதியில் மின் தடை : விசாரணைகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் கடந்த வாரம் ஏற்பட்ட மின் விநியோகத் தடை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையும், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவும் தனித் தனியாக இந்த மின் விநியோகத் தடை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பெர்டினாண்டோவின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஞ்சித் பெரேரா தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்ததும் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி

13jaffna.jpgவடக்கில் மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டதும் ஏனைய மாகாணங்களைப் போன்று அங்கும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைக்கு ஐ.ம.சு.மு. சார்பில் தெரிவான உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

இடம்பெயர்ந்திருக்கின்ற மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். அவர்களும் சொந்த இடம் செல்ல மிகுந்த விருப்பதுடன் இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டினார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னர், அப்பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும். அதற்குத் தேவையான பெருமளவிலான இயந்திரங்களை நாம் வரவழைத்துள்ளோம். இவையனைத்தையும் நாம் பணம் கொடுத்தே பெற்றுக் கொண்டுள்ளோம்.

கண்டபடி குரலெழுப்பும் சர்வதேச சமூகத்திற்கு ஏன் இவற்றைப் பெற்றுக் கொடுக்க முடியாது? எனது மக்களுக்கு அநியாயம் இடம்பெறக் கூடாது. அவர்களை பாதுகாப்பது எனது பொறுப்பு மட்டுமல்லாமல் கடமையும் கூட. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக பல்வேறுபட்ட நடவடிக்கைகளை நாம் துரிதகதியில் முன்னெடுத்து வருகின்றோம்.

இதேவேளை, அவர்களது வாழ்வாதார தொழில்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில், உங்களுடைய யாழ்ப்பாணம் மாநகர சபையானது இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. யாழ். மக்கள் பல ஆண்டுகளாக இம்மாநகர சபையினூடாக பல்வேறுபட்ட சேவைகளைப் பெற்றுள்ளனர்.

யாழ். மாநகர சபையின் வாசிகசாலையானது தெற்காசியவிலேயே சிறந்த வாசிகசாலையாக பெயர் பெற்றது. மிகவும் அரிதான பல நூல்கள் அதில் இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியினர் அதனை எரியூட்டினர். இது எதிர்கால பரம்பரையினருக்கே இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநியாயமாகும்.

கடந்த 30 வருடகாலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக யாழ். மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். எல். ரி. ரி. ஈ.யினரால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளை எல்லோரும் அறிவர். யாழ்ப்பாண மேயராகவிருந்த அல்பிரட் துரையப்பா புலிகளால் கொலை செய்யப்பட்டார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், இன்று எமது மக்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை.

இன்று எமது நாட்டு மக்கள் எந்தவொரு பயமோ சந்தேகமோயின்றி சுதந்திரமாக வாழமுடியும். யுத்தம் முடிவடைந்ததும் நாம் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நகர சபைக்கான தேர்தலை நடத்தினோம்.

வடக்கைச் சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப் பட்டதும் யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாகாணங்களில் போன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்.

ஜனநாயகம் மீளவும் நிலை நாட்டப்பட வேண்டும். இடம்பெயர்ந்திருக்கும் மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். அவர்களும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல மிகுந்த விருப்பத்துடன் இருக்கிறார்கள்.

அன்று தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். யாழ். தேவி ரயில் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்தது.

நாமும் அந்தக் காலத்தில் யாழ். தேவியில் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளோம். எமது தமிழ் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருந்துள்ளோம். யாழ். தேவி மீண்டும் தொடர்ச்சி யான சேவையில் ஈடுபடுவதைப் பார்ப்பதற்காக வடக்கு மற்றும் தெற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வடக்கின் பனை மரமும் தெற்கின் தென்னை மரமும் எப்படியாவது மீண்டும் ஒன்றிணையும். யாழ். மாநகர சபையின் உறுப்பினர்களாகிய நீங்கள் உங்களது பிரதேசங்களில் அபிவிருத்திகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தலைதூக்காத வகையில் பொதுமக்க ளுக்கு சேவை வழங்கப்பட வேண்டும்.  வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரையில் பெரும் எண்ணிக்கையிலான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி, விவசாயம், மீன்பிடி அபிவிருத்தி, சுகாதாரம், குடிநீர் வழங்கல், போக்குவரத்து உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் நாளுக்கு நாள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகி ன்றன.

இளைஞர்களுக்கு நாளை வேலைத் திட்டத்தின் கீழ் மாண வர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கின் வசந்தம் வேலைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்.

வடக்கே யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையைச் சேர்ந்த லோகேந் திரன் ஸ்ரீகாசன் எனும் மாணவன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை யில் கூடிய புள்ளிகளைப் பெற்று இரண்டாவதாக வந்துள்ளார். அம் மாணவனுக்கு எனது வாழ்த்துக்கள். ஜாதி, இன, மத, குல பேதமின்றி நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல ஒற்றுமையாக வாழ வேண்டும்.

தென் மாகாண சபைத் தேர்தலில் நாம் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுள்ளோம்.

நாம் மக்களுக்கு சேவையாற்று வதற்காகவே இந்த பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளோம் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.

யாழ்ப்பாண மக்களுக்காக சேவை யாற்றுவதற்கு உங்களனைவருக்கும் திறமையும் சக்தியையும் கிடைக்கப்பெற வேண்டுமென நான் இறைவனை வேண்டுகிறேன் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

யாழ். மேயர் உரையாற்றுகையில்…

பல தசாப்தங்களாக சோகத்தில் வாழ்ந்து வந்த எமது மக்களுக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு மக்களுக்காக சேவை யாற்ற நாம் தயாரென்றும் ஜனாதிபதி முன்னிலையில் யாழ். மாநகர சபையின் 23வது மேயராக நேற்று பதவியேற்றுக் கொண்ட பற்குணராஜா யோகேஸ்வரி தெரிவித்தார்.
 
 

வேர்னன் யு. பெர்னாண்டோ உதைபந்தாட்ட மைதான தொகுதியை ஜனாதிபதி திறந்து வைப்பு

13.jpgகளுத் துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வேர்னன் யு. பெர்னாண்டோ உதைபந்தாட்ட மைதான தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.

ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக கால்பந்தொன்றை உதைப்பதையும் அமைச்சர் காமினி லொகுகே, ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் மொஹமட் பின் ஹமாம் அல் அப்துல்லாஹ், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல ஆகியோரையும் காணலாம்.

பாகிஸ்தான் குண்டுத்தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் பலி

தலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையை அடுத்து, பெரும்பாலும் கிளர்ச்சிக்காரர்கள் எவரும் இல்லாத பிராந்தியம் என்று பாகிஸ்தான் இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட ஸ்வாட் பள்ளத்தாக்கில் தற்கொலைக் கார் குண்டுத் தற்கொலைத் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

துருப்பினரின் வாகானத் தொடரணி ஒன்று சனநெருக்கடி மிக்க சந்தைப் பகுதி ஒன்றை கடந்து சென்றபோது வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு கார் அவற்றின் மீது மோதச் செய்யப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.

அண்மைய நாட்களில் பாகிஸ்தானில் தொடர்ச்சியாக இத்தகைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தான் தேர்தல் முறைகேடுகளை ஒப்பு கொண்டுள்ளார் ஐ.நா தூதர்

vote.jpgஆப்கானிஸ் தானில் செயற்படும் ஐ.நாவின் தலைவரான கேய் எய்டி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தூதர்கள் புடை சூழ செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தோன்றியுள்ளார். அவருக்கு இருக்கும் சர்வதேச நாடுகளின் ஆதரவை காண்பிப்பதற்காகவே இவ்வாறு தோன்றியதாக பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகளை கேய் எய்டி குறைத்து காண்பித்ததாக, முன்னாள் துணை தலைவராக இருந்த பீட்டர் கால்பிரைத் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தவுடன் பீட்டர் கால்பிரைத் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கேய் எய்டி, தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றது என்பதை ஒப்பு கொண்டுள்ளார், ஆனால் முறைகேடுகள் தொடர்பான சில தகவல்களை ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் ஐ.நா கொடுத்து விட்டதாகவும் கேய் எய்டி கூட்டத்தில் கூறினார்.

கந்தளமவில் நேற்று ஏர்பூட்டு விழா; வயல் பிரதேசம் கோலாகலம்

தேசிய ஏர்பூட்டு விழா – 2009 நேற்று கந்தளம மேற்கு வயல் பிரதேசத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய பூரண அரச அனுசரணையுடன் நடைபெற்ற இவ் ஏர்பூட்டு விழாவில் கமநல சேவை மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஏர் பூட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நேற்றுக் காலை 10.31 சுபவேளையில் பெளத்த மத வழிபாட்டுடன் ஏர்பூட்டு வைபவம் ஆரம்பமானது. இவ்வைபவத்தையொட்டி கந்தளம குளம் மற்றும் மேற்கு வயல் பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன.