October

October

இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திலிருந்த 82 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்

vau-camp-srilanka.jpgமன்னார் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வன்னி மக்கள் நேற்று திங்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 82 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் மீள குடியமர்த்தப்பட்டிருப்பப்தாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்..

இவர்களில் மடு பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களை சேர்ந்த 91 பேரும், முசலி பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 07 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரும், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 38 குடும்பங்களை சேர்ந்த 106 பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 93 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய உளவளத்துணை தின ஆரம்ப நிகழ்வு கொழும்பில்

தேசிய உளவளத்துணை தின ஆரம்ப நிகழ்வு இம்முறை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 15ம் திகதி கொழும்பு – 7, விஜேராம மாவத்தை இலக்கம் 144, ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும். காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெறும் நிகழ்வில் அனைத்து அமைச்சுக்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் முகாமைத்துவ மட்டத்தில் இருநூறு உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறது – பிரிட்டன் அமெரிக்கா

210909flag.jpgதலிபான் களின் அச்சுறுத்தல் இருந்தாலும், பாகிஸ்தானின் அணுஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், ராவல்பிண்டியில் இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்பதை காண்பிக்கிறது என கூறினார்.

ஆனால் ஆயுததாரிகள் பாகிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் வெளியுறவுச்செயலர் டேவிட் மிலிபேண்ட் கூறும்போது, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சென்று சேர்ந்து விடும் என்ற பிரச்சினையே இல்லை என தெரிவித்தார்.

சிறுவர் இருதய சிகிச்சைப் பிரிவு – திறப்பு விழா

கராப்பிட்டிய பெரியாஸ்பத்திரியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிறுவர் இருதய சிகிச்சைப் பிரிவு பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்கவினால் இன்று (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுகாதார உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கிழக்கில் 250 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சைனைக்கு தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக 250 பட்டதாரிகளுக்கு  ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் பிரதிக் கல்வி அமைச்சரை அண்மையில் சந்தித்த போது இடம் பெற்ற பேச்சு வார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் விரும்பும் பட்சத்தில் மேல் மாகாண பாடசாலைகளில் அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பிரதிக் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு முன்னர்- அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தகவல்

laxman_yapa_abeywardena.jpgஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நடத்தப்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார்.

தமது அமைச்சு அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில், அடுத்த மாதம் 15 ஆம் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இத்தேர்தல்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படும்.

தென் மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி வழங்கிய பொது மக்களுக்கு அரசாங்கம் நன்றி தெரிவிக்கின்றது. எதிர்கட்சிகள் படுதோல்வியடைந்தன. மக்கள் விடுதலை முன்னணி அதன் கோட்டையான திஸ்ஸமகாராமையில்கூட தோல்வியடைந்தது. ஆனால் பொது மக்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றது என்றார்

டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்

Little_Aid_Med_Deliveryபிரித்தானியாவில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட்1140 கிகி (1.12 தொன்) எடையுள்ள மருந்தப் பொருட்களை வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இவ்வளவு தொகையான மருந்துகளும் டென்மார்க்கில் உள்ள மருத்துவ பொது அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இம்மருந்துகளின் காலாவதிக் காலம் யூலை 2011. வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மருந்துப் பொருட்கள் பரவலாக உள்ள நோய்களுக்கான 7 வகையான மருந்துகளை உள்ளடக்கி இருந்தது. வலி நிவாரணம், மன அழுத்தம் மன உளைச்சல், இதய எரிவு, வயிற்று அல்சர், உயர் கொலஸ்திரோல் ஆகியவற்றிற்கான மருந்துகள் இந்த மருந்துத்தொகுதியில் உள்ளடங்கி இருந்தது. இம்மருந்துப் பொருட்களின் மதிப்பீடு 16,000 பவுண்கள் (30 லட்சம் ரூபாய்.) டென்மார்க்கில் உள்ள இனிசியேறிவ் 2009 என்ற அமைப்பு எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மருந்துப்பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது. லிற்றில் எய்ட், இனிசியேற்றிவ் 2009, எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுவாக ஒரு நோக்குடன் செயற்பட்டு மருந்துப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு சென்று கொடுத்தனர்.

Little_Aid_Med_Deliveryசெப்ரம்பர் 16ல் விமானமூலம் இந்தப் பொருட்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒக்ரோபர் 6ல் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது. லிற்றில் எய்ட் சார்பில் டொக்டர் நிமால் காரயவாசம், திரு மார்க் பெர்னான்டோ ஆகியோர் இம்மருந்துத் தொகுதியை வவுனியாவுக்கு எடுத்துச் சென்றனர். வவுனியா மருத்துவமனையின் உயர் அதிகாரியான டொக்டர் பவானி பசுபதிராஜா வவுனியா உதவி அரசாங்க அதிபர் சம்பந்தர் முன்னைலையில் டொக்டர் நிமால் காரியவாசம், திரு மார்க் பெர்னான்டோ ஆகியோரிடம் இருந்து உத்தியோகபூர்வமாக மருந்துப் பொருட்களைக் கையேற்றார்.

இந்த மருத்துவத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இனிசியேற்றிவ் 2009, மற்றுமொரு 7000 கி கி எடையுள்ள மருந்துப் பொருட்களை நோர்வேஜிய நிறுவனம் ஒன்றினூடாக பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளது. இம்மருந்துப் பொருட்களை வவுனியா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க லிற்றில் எய்ட் விரும்புகின்றது.

லிற்றில் எய்ட் பதிவு செய்யப்பட்ட பொது அமைப்பு. மே 18 2009ல் பிரித்தானிய பொது அமைப்புகள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. கடந்த 5 மாதங்களில் மரக்கறிகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகள் ஆகியவற்றை தம்புல்லவில் இருந்து செட்டிகுளம் முகாம்களுக்கு அனுப்பி வைத்தது. மேலும் அம்பேபுச முகாமில் உள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வில் அவர்களுக்கு இசைப் பயிற்சி வகுப்புகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருக்கின்றது. இத்திட்டம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டம் சட்ட மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் லிற்றில் எய்ட் இனால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் பொது அமைப்புகளின் செயற்பாடுகளை வெளிப்படையாகவும் கணக்குகளைத் திறந்த புத்தகமாகவும் வைத்திருக்கும் பழக்கத்தையும் லிற்றில் எய்ட் ஏற்படுத்தி உள்ளது. அதன் இணையத்தளத்தில் சகல விபரங்களையும் காணலாம்.

மேலதிக விபரங்களுக்கு : www.littleaid.org.uk

ரி கொன்ஸ்ரன்ரைன்
தலைவர்
லிற்றில் எய்ட்.

உலக‌த்தை ஏமா‌ற்றவே த‌மிழக எ‌ம்.பி.க்க‌ள் இல‌‌ங்கை பயண‌ம்: வைகோ

16-vaiko.jpgமுள்வேலி முகாம்களில் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் மனித உரிமை அவலங்களை மூடி மறைக்கவும், உலகத்தை ஏமாற்றவும் தமிழக நாடாளும‌‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் குழு இலங்கை சென்றிருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ குற்றம் சா‌ற்‌றியுள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தமிழக அரசு என் மீது ஒரே குற்றச்சா‌ற்றுக்காக 2 முறை வழக்கு தொடர்ந்திருப்பது விசித்திரமானது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ம.தி.மு.க அற வழியில் எதிர்கொள்ளும். அவற்றை கண்டு கவலைப்பட மாட்டோம்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின. சென்னையிலும் வழக்கறிஞர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தி தமிழக அரசு அந்த அறப்போராட்டத்தை ஒடுக்கியது.

இலங்கையில் நடைப்பெற்ற போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. தமிழக சட்டமன்றத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய அரசு ஒப்புக்காகக்கூட போரை நிறுத்த வேண்டும் என்று கூறவில்லை.

ஏனென்றால், அந்தப் போரை நடத்தியதும், போருக்கு திட்டமிட்டதும், போரை வழிநடத்தியதும் இந்தியாதான். ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரின் சாவுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் பொறுப்பாகும். யுத்தத்தை நிறுத்த குரல் கொடுக்காத மத்திய அரசு, தற்போது ஈழத்தமிழர்களின் ரத்தம் தொய்ந்த கரத்தையுடைய ராஜப‌க்சேவின் அழைப்பை ஏற்று தமிழக எ‌ம்.‌பி.‌க்க‌ளி‌ன் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

போருக்கு பிறகு ஐ.நா பார்வையாளர்களும், சர்வதேச பொது மன்னிப்பு சபையும் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். முள்வேலி முகாம்களில் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் மனித உரிமை அவலங்களை மூடி மறைக்கவும், உலகத்தை ஏமாற்றவும் இப்போது தமிழக எ‌ம்.பி.க்க‌ள் குழு இலங்கை சென்றிருக்கின்றனர்.

இவர்களை அங்குள்ள அனைத்து முகாம்களுக்கும் செல்ல சிங்கள அரசு அனுமதிக்கப் போவதில்லை. இந்த குழுவின் பயணத்தால் ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை இக்குழுவின் பயணம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்று வைகோ கூ‌றினா‌ர்.

அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

Alfred_Nobelபொருளா தாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலினர் ஆஸ்ட்ராம் மற்றும் ஆலிவர் வில்லியம்சன் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான ஆஸ்ட்ராம், பொருளாதார நிர்வாகம் குறித்த – குறிப்பாக சாமான்ய மக்களுக்கான- ஆராய்ச்சிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

அதேபோன்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம்சனுக்கும் பொருளாதார நிர்வாகம் குறித்த – நிறுவனங்களின் எல்லைகள் பற்றிய – ஆராய்ச்சிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

பரிசு தொகையான 1.4 மில்லியன் டாலரை இருவர்ம் பகிர்ந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர் முகாம்கள் குறித்து தமிழகக் குழு பாராட்டு

இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் செய்யப்பட்டுள்ள வசதிகளைத் தமிழகத்திலிருந்து வந்துள்ள திமுக -காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழு பாராட்டியுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தியில் தெரிவித்ததாக இந்திய இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த இஒகூ செய்தியில், “தமிழகத்திலிருந்து வந்துள்ள பத்து பேர் கொண்ட குழுவினர் வவுனியாவில் உள்ல நலன்புரி மையங்களுக்கு விஜயம் செய்தனர். அதிபர் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர். இந்தக் குழுவின் பிரதிநிதிகள், நலன்புரி மையங்களில் உள்ளோருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பாராட்டினர்.

மேலும் இந்த மையங்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

தங்களது ஐந்து நாள் பயணத்தின்போது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களையும் இந்தக் குழுவினர் பார்வையிடவுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.