November

November

வவுனியாவிலிருந்து 2139 பேர் யாழ்ப்பாணம் வருகை

வவுனியா நலன்புரி கிராமங்களிலிருந்து 661 குடும்பங்களைச் சேர்ந்த 2139 பேர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்களில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தீவகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இம் மக்கள் நேற்று முன்தினமிரவு யாழ். கச்சேரியை வந்தடைந்து பின்னர் தீவகப் பகுதிகளுக்குச் சென்றனர்.

அதேநேரம் 529 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேர் கரவெட்டி விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்திற்கும் பருத்தித்துறை பிரதேச செயலர் அலுவல கத்திற்கும் வந்து சேர்ந்தனர். இம் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இம் மக்கள் தங்களது சொந்த இருப்பிடங்களில் குடியேறிய பின்னர், அவர்களது எதிர்கால தேவைகள் குறித்துதான் நேரில் வந்து ஆராய்ந்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார். இம் மக்களுக்கான நிதி உதவிகளையும் வழங்கினார்.

சினிமா இறக்குமதி வரி; 550 மில். ரூபா வருமானம்

வெளிநாடுகளிலிருந்து திரைப் படங்களை இறக்குமதி செய்வதற்கான வரிப்பணமாக அரசாங்கத்துக்கு இதுவரை 550 மில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கனேகல தெரிவித்தார். உள்ளூர் சின்னத்திரை, திரைப்படத் துறையை ஊக்குவிக்க இந்த பணம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூர் கலைஞர்களும், தயாரிப்பாளர்களும் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

அதே போன்று, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் திரைப்படங்களுக்கு வரி விதிப்பதாகவும் வரவு – செலவு திட்டத்தை ஜனாதிபதி அறிவித்தார். இதன் மூலம் 550 மில்லியன் ரூபா வருமானம் அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், இது இந்தத் துறைக்கே பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தாமல் உள்ளூர் திரைப்படத் துறையை மேம்படுத்த இது போன்ற வரிகள் மேலும் உந்து சக்தியாக அமையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அறவிடப்பட்ட 550 மில்லியனில் சுமார் 200 மில்லியன் ரூபாய் டெலி சினிமா கிராம நிர்மாணப் பணிக்கு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். திரைப்பட வரி மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் ஊடக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் பலத்த காற்றினால் பெரும் சேதங்கள்

021009monsoon-rains.jpgகொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென கடும்காற்று வீசியது. இக் கடும் காற்று காரணமாக களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இஹல வெல்கம கிராம சேகவர் பிரிவில் நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்ததுடன் 90 வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் களுத்துறை மாவட்ட இணைப்பாளர் மேஜர் சஞ்சீவ சமரநாயக்கா கூறினார்.

இதேவேளை பாலிந்த நுவர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பதுரலிய கெலின்கந்த வீதியில் மக்கிலிஎல்ல என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு மண்சரிவு ஏற்பட்டதாகவும் அப் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக பல இடங்களில் உயர்ந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சில பிரதேசங்களுக்கான மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கொழும்பு மாவட்ட இணைப்பாளர் எச். பி. பத்திரன கூறினார்.

கொழும்பு – 7, மலலசேகர மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றின் மீது மரக் கிளை முறிந்து விழுந்ததால் கார் சேதமடைந்துள்ளது. வீதிகளுக்கு குறுக்காக விழுந்திருந்த மரங்களும், மரக்கிளைகளும் தீயணைக்கும் படையினரதும், மாநகர சபை ஊழியர்களினதும் உதவியுடன் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இதேநேரம், இரத்தினபுரி மாவட்டத்தின் ஒபநாயக்கா பிரதேச செயலகத்திலுள்ள மீகஹவெல கிராம சேவவகர் பிரிவிலிருக்கும் ஹேன்யாய கிராமத்தில் வீட்டுத் திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவரொருவர் மின்னல் தாக்கி நேற்று முன்தினம் உயிரிழந்தாரென இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினண்ட் கேர்னல் எஸ். எம். பி. பி. அபேரத்ன கூறினார்.

தற்போதைய இடைப் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும். அது இடி, மின்னலுடன் கூடிய மழை வீழ்ச்சியாகவே இருக்கும். அதனால் இடி, மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என வானிலை அவதான நிலைய வானிகையாளர் பிரீத்திகா ஜயகொடி கூறினார்.

இந்தோனேசியாவில் உள்ள இலங்கையர்கள் அகதிகளா என்ற கேள்வி

Tamil_Boat_Refugeesஇந்தோனேசிய கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள ஓசியானிக் விக்கிங் கப்பலில் இலங்கையர்கள், உண்மையில் அகதிகளா என அவுஸ்திரேலியாவின் முதலாம் செனட் உறுப்பினர் ஸ்டீவ் பீல்டிங் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இந்தோனேசியாவில் வசித்ததாகவும், ஜகார்த்தாவின் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

1977 வன்செயல் : யாழ்ப்பாணத்தில் எந்தவொரு சிங்களவரும் தாக்கப்படவில்லை – பேராசிரியர் சுசரித்த கம்லத்

1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலின் போது யாழ்ப்பாணத்தில் எந்தவொரு சிங்களவரும் தமிழ் மக்களால் தாக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படவில்லை. சூறையாடப் படவில்லை. என்பதை நான் எனது கண்களால் கண்டு தெரிந்து கொண்டவன்.

பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பல அதிகாரிகள் என்னை வற்புறுத்தியும் நான் யாழ். மண்ணையும் அம்மக்களையும் விட்டு தென்பகுதிக்கு வெளியேறவில்லை. இவ்வாறு வரலாற்று ஆய்வாளரும், பேராசிரியருமான சுசரித்த கம்லத் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் திரிகோணி கலை அமைப்பிற்காக மொழிபெயர்ப்பு செய்த ஏ. ஜே. கனகரத்னா யாழ்ப்பாணத்தின் மனச்சாட்சி என்ற சிங்கள நூலின் வெளியீட்டு விழா பொரளை கலாநிதி என். எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போதே பேராசிரியர் சுசரித்த கம்லத் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்விற்கு தர்மசிறி பண்டார தலைமை வகித்தார்.

“புராதன சிங்கள தமிழ் உறவுகள்” என்ற தலைப்பில் தொடர்ந்து பேராசிரியர் சுசரித்த கம்லத் உரையாற்றுகையில், அன்றைய கலவர சூழ்நிலையிலும் நான் பாதிக்கப்படவில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அன்று பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த இருநூறு சிங்கள மாணவர்கள் பாதுகாப்பு பிரிவினரால் தென் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அன்று கொழும்பிலும்,  இந்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டன. தீவைக்கப்பட்டன. உயிர்கள் பலி எடுக்கப்பட்டன. இந்தச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் வேகமாக பரவிய நிலையிலும் எந்தவொரு சிங்களவரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வரும் வழியில் சிங்கள மாணவர்கள் வீதியில் செல்வோரை கேலி செய்வதில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் நீண்ட உறவு முறை உண்டு. கலை, கலாசாரம், பண்பாடு, மொழி என பல வகைகளிலும் தொடர்பு உண்டு. தமிழ் மொழி மிகப் பெரியதோர் பழைமைவாய்ந்த மொழி. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பேசப்படும் மொழியாகும். தமிழ் மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர். சிங்களவர்களும் இந்திய நாட்டிலிருந்து வந்தவர்களே. பல சிங்கள மன்னர்களின் ஆட்சியில் மந்திரிகளாகவும், படை வீரர்களாகவும், கடமையாற்றியவர்கள் இந்நாட்டு தமிழர்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

பல மன்னர்கள் தமிழ் பெண்களை மணம் முடித்துள்ளனர். வரலாற்றை துல்லியமாக ஆய்வு செய்யும் போது பல உண்மைகள் வெளிவரும். தமிழ் சிங்கள மக்களின் உறவு நீண்ட வரலாற்றையும் அந்நியோன்னியத்தையும் தெரிவிக்கிறது.  பல சிங்கள மன்னர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ், மலையாள குருக்கள்மாரின் ஆலோசனைகளை பெற்று ஆட்சி புரிந்தவர்கள்.

கோத்தபாயவுக்கு எதிராக சாட்சியங்களை தருமாறு அமெரிக்கா சரத் பொன்சேகாவிடம் கோரியுள்ளது

கோத்தபாயவுக்கு எதிராக சாட்சியங்களை தருமாறு அமெரிக்கா சரத் பொன்சேகாவிடம் கோரியுள்ளது

இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு தாம் அமெரிக்க அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளதாக கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  இந்த விடயத்தை குறிப்பிட்டு அவர், வாசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அதில்,கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களுக்கான சாட்சியங்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு அமெரிக்க அதிகாரிகள், தமது மருமகனின் தொலைபேசியின் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சரத் பொன்சேகா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘கலைஞர் தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது.’ வீ ஆனந்தசங்கரி தலைவர் த.வி.கூ

Anandasangaree V30-10-2009

மாண்புமிகு டாக்டர் கலைஞர்.மு கருணாநிதி
முதலமைச்சர்
தமிழ்நாடு
சென்னை

பெருமதிப்புக்குரிய ஐயா,

தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது.

பேரறிஞர் அண்ணாவென வாஞ்சையோடு அழைக்கப்பட்டும், தங்களையும் தன் அமைச்சரவையில் இணைத்து கொண்டு, தங்களுக்கு முன் முதலமைச்சர் பதவி வகித்த பெரு மதிப்புக்குரிய சீ.என். அண்ணாதுரை அவர்களின் காலம்தொட்டு எமது பிரச்சினையில் தாங்கள் கொண்டிருக்கும் பெரும் அக்கறை பற்றி நான் நன்கறிவேன்.  எமது பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிட்டுமென முழு உலகும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறது. ஐயா! துரதிஷ்டவசமாக எமது பிரச்சினை தீர்வுக்காக எற்பட்ட பல வாய்ப்புக்களை நாம் இழந்து நிற்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன் தங்களின் நன்மதிப்பை பிரயோகித்து இலங்கை அரசுக்கு பிரச்சினையை தீர்க்க உதவுமாறு வேண்டியிருந்தேன். அத்தகைய கடிதங்களின் பிரதியொன்றையும் இத்துடன் இணைத்துள்ளேன். இனப்பிரச்சினைத் தீர்வு இந்திய அரசியல் சாசனத்தின் முன் மாதிரியாகக் கொண்டு தீர்வு காணப்பட வேண்டுமென்று நான் ஆலோசனை வழங்கியிருந்தேன். சிறிதும் எதிர்பாராத இடங்களில் இருந்தும்கூட அந்த ஆலோசனைக்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தையொத்த அதிகாரப்பகிர்வு இலங்கையின் மாகாணசபைகளுக்கு வழங்கினால் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதோடு இலங்கைவாழ் மக்களின் பெரும்பாலானோருக்கும் ஏற்புடையதாக இருக்கும். மேலும் தமிழ் நாட்டில் வாழும் தமிழ் மக்களை அமைதிப்படுத்துவதோடு அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பிரச்சினைக்கு  தீர்வு காண உதவிய பெருமையும் தமிழகத்திற்கு சேரும். அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பிரதமர் கௌரவ மன்மோகன் சிங் அவர்களை சந்தித்தபோது விரைவில் இலங்கையிலிருந்து ஒரு உயர்மட்டக்குழு புதுடில்லிக்கு வர இருப்பதாகவும் அவர்களுடன் முக்கிய இரு பிரச்சினைகளான அரசியல் தீர்வு, இடம் பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம்  போன்றவை பற்றி பேசும் சந்தர்ப்பம் உண்டென குறிப்பிட்டதாக அறிகின்றேன். இந்த விடயமே இக் கடிதத்தை எழுத என்னைத் தூண்டியது.

50 ஆண்டுகளுக்கு மேல் நான் அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன் என்பது பற்றியும் இனப்பிரச்சினை ஆரம்பிப்பதற்கு முதற் காரணமாக இருந்த பிரஜா உரிமை சட்டம் 1949ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதும், 1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்கள சட்டம் ஆகியன மேலும் நிலைமை மோசமடைய காரணமாக இருந்த இக்காலகட்டத்தில் நான் வாழ்ந்தவன் என்பதால் இவை பற்றி நன்கறிந்தவன் என்பதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். நிரந்தர தீர்வு காண்பதற்கு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் கடும் போக்காளர்களின் செயற்பாட்டால் குழப்பத்திற்குள்ளாகி நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து இந்த ஆண்டின் முற்பகுதியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. 2009 மே 18ம் திகதி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்;டதோடு மறுநாள் அதன் தலைவர் இறந்ததுடன் அத்தனையும் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தது. மொத்த விளைவு இலங்கையின் 25 மாவட்டங்களில் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 08 மாவட்டங்கள் அழிந்தன. கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் பல்வேறு சமூகத்தினரும் எதுவித வேறுபாடின்றி பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். கோடிக்கணக்கான பெறுமதியான பொது சொத்துக்களும் அரச சொத்துக்களும் அழிக்கப்பட்டன. ஏனைய சமூகத்தினரோடு ஒப்பிடுகையில் முஸ்லீம், தமிழ் மக்களின் உயிரிழப்புக்களும் சொத்தழிவுகளும் மிகக் கூடுதலானவை எனக் கூறலாம். கிழக்கு மாகாணத்தில் 45,000 பேரும் வட மாகாணத்தில் அதே போன்ற தொகையினர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அரச தரப்பு போர் வீரர்களின் மனைவியரும் பெருமளவில் விதவையாக்கப்பட்டுள்ளனர்.

அநாதையாக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் குறைந்ததல்ல. இன்றும் கூட 1100 க்கு மேற்பட்ட, முகாம்களில் உள்ள அநாதைகளை பொறுப்பேற்க ஒரு சிறு உறவினர்களைத் தவிர வேறு யாரும் முன்வரவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் இறந்துள்ளனர். அனேகர் தம் கால்கள், கைகளையும், கண் பார்வையையும், கேட்கும் சக்தியையும், தம் நெருங்கிய அன்பு உள்ளங்களையும் இழந்துள்ளனர். நம்பிக்கையானதொரு தகவலின்படி முகாம்களில் பத்துக்கு ஒருவர் அங்கவீனர்களாக உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மீன் பிடி, விவசாயம்,  பல்வேறு தொழில்கள்  பெருமளவில் குறைக்கப்பட்டு அல்லது முற்றாக நிறுத்தப்பட்டும் உள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளின் மத்தியிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு  மாவட்ட மக்கள்  முற்று முழுதாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருந்த போதும் யாரும் பட்டினி கிடக்கவில்லை. எந்;தவித பாகுபாடின்றி அரசு அப் பிரதேசத்திற்கு உணவு அனுப்பியது. மக்களும் தம் சொந்த முயற்சியால் கஷ்டமின்றி வாழ்ந்தனர். அநேகர் லொறி, ட்ராக்டர், கார், பல்லாயிரக் கணக்கானோர் மோட்டார் சைக்கிள்களையும் சொந்தமாக வைத்திருந்தனர். கணிசமான தொகையினர் பாற்பண்ணை, கோழிப்பண்ணை  நடத்தியதோடு பெருமளவில் விவசாயமும் மேற்கொண்டனர். இன்று இவைகள் அனைத்தும் அற்றுப் போயின.

இடம் பெயர்ந்த மக்கள் இடத்துக்கு இடம் மாறி இறுதியில் உடைமைகள், அத்தனையையும் இழந்தனர். சிலர் தமது மனைவியர், அன்பு பெற்றோர், மக்கள் ஆகியேரை இழந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்ததும், அரசால் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டவேளை அவர்கள் எதுவுமற்றவர்களாகவும், உடுத்த உடையுடனும் வந்து சேர்ந்துள்ளனர். இரு மாதத்திற்குள், அவர்கள் மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்ததன் பின், அத்தனை பேரும் பரம ஏழைகளாக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் கடந்த சில மாதங்களாக பட்ட துன்பங்களை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் பலாத்காரமாக எதுவித தேவையுமின்றி தடுத்து வைக்கப்பட்டு;ள்ளனர். விடுதலைப் புலிகளின் தீவிர உறுப்பினர்கள் ஏறக்குறைய அனைவரும் முகாம்களில் இருந்து தப்பி சென்று விட்டனர். 1,50,000 இற்கு மேற்பட்டவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் அப்பாவி பிள்ளைகள் 10,000 இற்கு மேற்பட்டோர் புலிகளின் சிறுவர் போராளிகளாக முத்திரை குத்தப்பட்டு பெற்றோர்களிடமிருந்து பலாத்காரமாக பிரிக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகளுக்காக புனர் வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இன்று பாடசாலைகளில் கல்வி போதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் கல்வியில் மிகவும் திறமைசாலிகளாக முன்னேற கூடியவர்கள். அப்பாவிகள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்ற வேளையில் உண்மையான குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர்.  வயதில் முதிர்ந்தோர், கர்ப்பிணி தாய்மார்கள், பிள்ளைகள், காயமுற்றோர் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எந்த சந்தர்ப்பத்திலும் நியாயப்படுத்த முடியாததொன்று.  அரசாங்கம் தற்போது முகாம்களில் உள்ளவர்களை பகுதி பகுதியாக மீளக்குடியமர்த்துவதற்காக விடுவித்து வருகின்றது. அவர்களுக்கு ஆறுமாத காலத்திற்கு போதுமான உலர் உணவு, விவசாய கருவிகள் சிலவையும், சொற்ப உதவி பணத்தொகையும் மட்டும் வழங்குவது போதுமானதல்ல. சகல இடம் பெயர்ந்தோருக்கும் அவர்களுடைய இழப்புக்களுக்கு ஏற்ப நட்டஈடு வழங்ப்பட வேண்டும். தங்களின் பங்களிப்புடனேயே இவர்கள் நட்டஈடு பெறுவது சாத்தியமாகும்.

நாடும் நாட்டு மக்களும் அதிகளவில் கஷ்டங்களுக்கு உள்ளாகி பலவற்றை இழந்துள்ளமையால் இந்த நாட்டிலோ அல்லது வேறு எங்கே யார் இருந்தாலும் இவ்வாறு மீண்டும் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது, ஏற்படவிடவும் கூடாது. ஒற்றையாட்சியின் கீழ் எத்தகைய தீர்வு வழங்கப்பட்டாலும் கடும் போக்காளர்கள் எதிர்காலத்தில் அநாவசியமாக இதில் தலையிடும் வாய்ப்பைக் கொடுக்கும். ஆகவேதான் இந்திய முறையிலான ஒரு தீர்வை முன் வைக்குமாறு நான் வற்புறுத்தி வருகின்றேன். இந்தியர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறந்ததொரு கோட்பாட்டுக்கு அமைய தமது அரசிலமைப்பை உருவாக்கியுள்ளமையால் அம் மாதிரியான அமைப்புமுறை “ஒற்றையாட்சி” “சமஷ்டி” ஆகிய வார்த்தைகளை விரும்பாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

ஆகவே ஐயா, சகல அரசியல் வேறுபாடுகளையும், வேற்றுமைகளையும் மறந்து தமிழ் நாட்டவர் அனைவரையும் ஒன்றிணைத்து அரசியல் தீர்வு காண்பதில் தங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். எங்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த நாம் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எனது வேண்டுகோளை தாங்கள் ஏற்று இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய அரசை இலங்கை சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதாகவுள்ள எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டுமென மிக விநயமாக கேட்டுக் கொள்கிறேன். தங்களை சந்தித்து இது சம்பந்தமாக மேலும் சில கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பை விரைவில் ஏற்படுத்தித் தருவீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

புலமைப் பரிசில் பரீட்சை – வவுனியா நிவாரண கிராமங்களில் 507 மாணவர்கள் சித்தி : புன்னியாமீன்

000181009.jpgதரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா நிவாரணக் கிராம மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் 31.10.2009 இல் வெளியிடப்பட்டன. இம்முடிவுகளின்படி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 5413 மாணவர்களுள் 507  மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். முல்லைத்தீவு,  கிளிநொச்சி மாவட்டங்களில் மாணவர்கள் கூடிய புள்ளிகளாக 175 புள்ளிகளைப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

வட மாகாணத்தின் ஏற்பட்ட யுத்த நிலை காரணமாக 2009 ஜுன் மாத புள்ளி விபரப்படி தரம் 05இல் கல்வி பயிலும் 4872 மாணவர்கள் வவுனியா நிவாரணக்கிராமங்களில் அகதிகளாக்கப்பட்டனர். இம்மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்திற் கொண்டு சிந்தனைவட்டமும் தேசம்நெற் உம் கல்வி நிவாரண செயற்றிட்டமாக ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும் 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது. இத்திட்டம் ஒரு நிவாரணக் கிராமத்தை மாத்திரம் கருத்திற் கொள்ளாமல் வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து நிவாரணக் கிராமங்களையும் கருத்திற் கொண்டே செயற்படுத்தப்பட்டது.

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்திருந்த மாணவர்கள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலம் பாடசாலை மண்ணையே மிதிக்காமலிருந்தனர். இந்த மாணவர்களை துரிதமாகப் பயிற்றுவிக்கும் வகையிலேயே சிந்தனைவட்டம் தேசம்நெற் கல்வி நிவாரண செயற்றிட்டம் அமைந்திருந்தது. எமது வழிகாட்டிப் புத்தகங்களையும், மாதிரி வினாத்தாள்களையும் நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவித்தமையினால் 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இத்திட்டத்தை ஆரம்பிக்கும்போது 300 மாணவர்கள் சித்தியடைந்தால் போதுமென்ற இலக்கில் தான் நாம் ஆரம்பித்தோம். நாம் எதிர்பார்த்ததை விட மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை எமக்கு மன மகிழ்வைத் தருகின்றது.

2009 ஆகஸ்ட்டில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 2 லட்சத்து 98,000 மாணவர்கள் தோற்றினர். இவர்களுள் 31,000 மாணவர்களே சித்தியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார். 2009 ஒக்டோபர் 02ஆம் திகதி அகில இலங்கை ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன. அச்சந்தர்ப்பத்தில் தமிழ்மொழி மூலம் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி பின்வருமாறு அமைந்திருந்தது. கொழும்பு / கம்பஹா / களுத்துறை / கண்டி / மாத்தளை/ காலி/ மாத்தறை/ குருணாகல்/ கேகாலை மாவட்டம் 141 புள்ளிகள். நுவரெலியா 137 வவுனியா – 136,  அம்பாறை 139, திருகோணமலை – 138,  புத்தளம் 137, அநுராதபுரம்138, பொலன்னறுவை 140,  பதுளை 138, மொனராகலை 135, மன்னார் 139 இரத்தினபுரி 134, மட்டக்களப்பு 139

வன்னி நிவாரணக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல வழிகளிலும் பாதிக்கப் பட்டிருந்தமையினாலும் 6 மாதங்களுக்கு மேல் கல்வியை தொடராமல் இருந்தமையினாலும்,  பரீட்சை நடைபெறவிருந்த காலகட்டத்தில்கூட நிவாரணக் கிராமங்களினுள் வெள்ளப் பாதிப்புக்குட் பட்டிருந்தமையினாலும் நிவாரணக் கிராமங்களின் வெட்டுப்புள்ளி குறைக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இவற்றைக் கருத்திற் கொண்டே பரீட்சைத் திணைக்களம் நிவாரணக் கிராமங்களில் வசித்த மாணவர்களின் வெட்டுப்புள்ளியை 111ஆகக் குறைத்தது.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 196 மாணவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 267 மாணவர்களும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவர்களும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்களும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். இங்கு மன்னார்,  வவுனியா,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு வேறு வெட்டுப்புள்ளிகள் காணப்பட்ட போதிலும் கூட,  இம்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிவாரணக் கிராமங்களில் வசித்த நிலையில் இவர்கள் நிவாரணக்கிராம மாணவர்களாகவே கருத்திற் கொள்ளப்பட்டு நிவாரணக் கிராமங்களுக்குரிய வெட்டுப்புள்ளியே இவர்களுக்கு சேர்க்கப்பட்டன.

இதன்படி 507 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் வவுனியா மாவட்டத்தில் ஆகக் கூடிய புள்ளியாக 135 புள்ளியையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 175 புள்ளியையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 175 புள்ளியையும் மன்னார் மாவட்டத்தில் 134 புள்ளியையும் யாழ். மாவட்டத்தில் 135 புள்ளியையும் பெற்று தலா ஒவ்வொரு மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

5413 மாணவர்களது பெறுபேறுகள் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள போதும் பெருந் தொகையானோர் யாழ்ப்பாணம்,  மன்னார், திருமலை,  மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கென அனுப்பப்பட்டுள்ளனர். எனவே இவர்களுடன் சென்றுள்ள பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை அவர்களது சொந்த மாவட்ட வலய கல்வி பணிப்பாளர்களூடாக கிடைக்க வழிவகை செய்யப்படும் என வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழ்மொழி மூலமாக யாழ். வட்டுக்கோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஸ்ரீகர்ஷன் 192 புள்ளிகளைப் பெற்று இலங்கையில் முதலாவது இடத்தை பிடித்தார். இந்த மாணவனும் சிந்தனைவட்டத்தால் வெளியிடப்பட்ட தரம் 5 மாதிரிவினாத்தாள்களையும் வழிகாட்டிப் புத்தகங்களையும் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழிமூலம் 196 புள்ளிகளைப் பெற்று அம்பாந்தோட்டை ருகுணு விஜயபா மகா வித்தியாலய மாணவன் கே. ஏ. பிரமோத் டில்ஷான் முதலாவது இடத்தையும் பிடித்திருந்தார்.

சாதாரண நிலையில் போட்டிப் பரீட்சையான புலமைப்பரிசிலுக்கு தோற்றும் மாணவர்களின் நிலையைவிட வன்னி நிவாரணக் கிராமங்களிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் நிலை மிகமிக பரிதாபகரமானது. பல்வேறுபட்ட மானசீகப் பிரச்சினைகள் மத்தியிலும் போதிய கல்வி போதனைகள் இன்றிய நிலையிலும் இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 507 மாணவர்கள் சித்தியடைந்திருப்பது பெருமைப்படக்கூடிய விடயமே.

இம்மாணவர்கள் அனைவருக்கும் தேசம்நெற்,  சிந்தனைவட்டம் இவற்றின் நிர்வாகத்தினரும் தேசம்நெற் வாசகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றனர். அதேநேரம்,  பல்வேறுபட்ட சிரமங்கள் மத்தியில் இம்மாணவர்களை வழிநடாத்திய நிவாரணக்கிராம ஆசிரியப் பெருந்தகைகள் என்றும் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே.

தமிழர் பிரச்சினையில் கருணாநிதிக்கு உறுதியான நிலைப்பாடு இல்லை – சிவத்தம்பி

24prof-karthgesu.jpgஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை. அவர் மீது புலம் பெயர்ந்த தமிழர்கள்  அதிருப்தியுடன் உள்ளனர் என்று ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் போக்குக் குறித்து தமிழ் மக்கள்  அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையே பலத்த எதிர்ப்பை இது தோற்றுவித்துள்ளது.

நான் இம் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து தீர்மானிக்க கால அவகாசம் உள்ளது. மாநாட்டில் நான் கலந்து கொண்டால் இலங்கைத் தமிழர்  பிரச்சினை பற்றியும் தமிழக முதல்வருடன் விவாதிப்பேன். மாநாட்டில் நான் கலந்து கொள்வேன் என்று தமிழக முதல்வர்  அறிவித்துள்ளார். ஆனால் அவர் என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக எதுவும் பேசவில்லை. கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு அழைப்பு கிடைத்துள்ளது என்றார் சிவத்தம்பி.

யாழ். முஸ்லிம்கள் மீள் குடியேற எவ்விதத் தடையுமில்லை – அமைச்சர் டக்ளஸ்

011109dag.jpgபலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த இடங்களில் குடியேற எவ்வித தடையு மில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

“யாழ். முஸ்லிம்கள் எந்த நேரத்திலும் இங்கு வந்து குடியேறலாம். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எப்படி கெளரவமான முறையில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தார்களோ, அதேமுறையில் வாழ அம்மக்கள் மீளக்குடியமர வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

பலவந்த வெளியேற்றமும் கெளரவமான மீள் குடியேற்றமும் “எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலொன்று யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் இடம்பெற்றது.

மக்கள் பணிமனை நேற்று முன்தினம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கெளரவமான மீள் குடியேற்றம் என்ற சொற்பதம் இங்கு உபயோகப்படுத் தப்பட்டிருப்பினும் இதனை தன்னால் ஏற்றுக் கொள்ள இயலாதென்றும் ஏனெனில், இந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் எப்போதும் வந்து இங்கு குடியேறலாம் என்றார்.

இதற்கு யாரும் தடையாக இருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த அவர், வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களது இருப்பிடங்கள் அம்மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றும் இதனை யாரும் தட்டிப் பறிக்க இயலாது என்றும் முஸ்லிம் மக்களது வீடுகளை எவராவது எடுத்திருப்பின் அவற்றை அம்மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

நடந்தவற்றை மறந்து ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாக அமையும் என்பதை வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இங்குள்ள தமிழ் மக்கள் தங்களது சகோதர முஸ்லிம் மக்களை கெளரவமாக வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.