March

Sunday, September 19, 2021

March

ஆசியாவின் சிறந்த நடிகை மாலினி பொன்சேகா

malani_fonseka.jpgஇலங் கையின் மூத்த நடிகை யான மாலினி பொன்சேகாவை ஆசியாவின் சிற ந்த நடிகைகளில் ஒருவராக சி. என். என். தெரிவு செய்துள்ளது. ஆசியாவின் 25 சிறந்த நடிக, நடிகையர் பட்டியலில் மாலினி பொன்சேகா இடம்பெற்றுள்ளார்.

சீனா, ஹொங்கொங், ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேஷியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுக ளில் இருந்து 25 சிறந்த நடிக, நடி கையர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில் அமிதாப் பச்சன், நர் கிஸ், குரு தத், பிரான், மீனாகுமாரி ஆகியோர் இந்தியாவின் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதலாவது இலங்கை நடிகை மாலினி பொன்சேகா ஆவார்.

ஜனாதிபதியின் 2வது பதவியேற்பு நவம்பர் 18

gl_pereis.jpgநாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்துவதற்காக சகல சட்டங்களையும் நவம்பர் நடுப் பகுதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சட்ட மூலங்கள் புதிய பாராளுமன்றம் கூடும் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்கும் ஜனாதிபதி இரண்டாவது தடவையாக சத்தியப்பிரமாணம் செய்யும் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடந்த 20 வருடங்களாக கிடைக்காதிருந்த அரிய சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. இதன் உச்ச பயனை பெற்றுக் கொள்ளும் வகையில் பலதுறைகள் அடையாளங் காணப்பட்டு ள்ளன. இந்தத்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான சகல சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு 5 வருட காலத்துக்குள் இந்த திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (4) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:- பாராளுமன்றம் கூடியவுடன் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்கள் குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு துரித திட்டங்களை முன்னெடுக்கவும் அதற்குத் தேவையான அனைத்து சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்யும்போது அபிவிருத்திக்கு தேவையான சகல சட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

முன்னேற்றத்துக்கான துறைகளாக மின்சக்தி, எரிசக்தி, விவசாயம் முதலீடுகள், கல்வி உட்பட பல துறைகள் அடையாளங் காணப்பட்டுள் ளன. எதிர்வரும் காலங்களில் 2000 மெகா வாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. நுரைச்சோலை அனல் மின் திட்டத்தினூடாக 3 கட்டங்களில் 900 மெகா வாட், கொத்மலை திட்டத்தின் மூலம் 150 மெகாவாட் கெரவலப்பிட்டிய மின் திட்டத்தின் மூலம் 300 மெகாவாட், சாம்பூர் மூலம் 500 மெகாவாட், மொர கஹகந்த மூலம் 80 மெகா வாட், உமாஓய மூலம் 140 மெகாவாட் மின்சாரம் கிடை க்கவுள்ளது. கிராமிய மட்டத்தில் ஆரம் பிக்கப்படவுள்ள கைத்தொழிற்துறைகளுக்கு மின்சக்தி பயன்பட உள்ளதோடு இதனூடாக பெருமளவு தொழில் வாய்ப்புகளும் கிடைக்கவுள்ளன. விவசாயத்துறை மேம்படுத்தப்படும். விவசாய கிராமங்கள் அமைக்கவும் உள்நாட்டு மூலப் பொருட்களுக்கு உரிய இடம் பெற்றுக் கொடுக்கவும் மின் வளத்தை முழுமையாக பயன்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அபிவிருத்தியின் பலனை நாட்டின் சகல பகுதிகளுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும். கல்வித்துறையை நவீனமயப்படுத்துதல், பாடத் திட்டங்களை தற்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கிராமங்களில் கணினி அறிவை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையை சுற்றியுள்ள எரிபொருள் வளங்களை ஆய்வு செய்து அவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அரசியலும் சமயமும்: நிஸ்தார் எஸ் ஆர் எம்

Religion & Politicsஅரசியலுடன் சமயத்தை கலத்தலாகாது. இது நான் போடும் கட்டளையல்ல, மாறாக பெரும்பான்மை பொதுமக்கள் தொடக்கம் சமயவாதிகள் ஈறாக அரசியல்வாதிகள் வரை அடித்து சொல்லும் விடயம். இதன் தர்க்க நியாயங்களை சீர்தூக்கிப் பார்க்காமல் ஆம் அரசியலுடன் சமயம் கலக்கவே கூடாது என்று தேசம்நெற் பின்னூட்டகாரர் சிலர் காட்டமாக சொல்வதால் இவை இரண்டுடனும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ள நம்மில் அனேகர், பின்னூட்டகாரர்களும் உள்ளடங்களாக, இதில் எதை தீண்டதகாத விடயமாக கருதுகின்றனர்? அல்லது இவை இரண்டும் சேர்வதால் நாம் இழக்கப்போகும் நன்மைகள் எவை என்பதை அவர்களிடமிருந்து அறிய நாம் ஆர்வமாய் இருக்கிறோம். அதற்கு களமமைப்பதே இக்கட்டுரையின் உள்நோக்கு. அதற்கு முன் இந்த சமய விடயத்துடன் ஆத்மீகத்தை (spirituality) கலந்து குழப்பிவிட வேண்டாம் என்பதோடு இதை ஒரு சமய பிரச்சாரமாகவும் அர்த்தப்படுத்த வேண்டாம் என்றும் பணிவாய் வேண்டுகிறேன்.

அல்லாஹ¤ அக்பர் (இறைவனே அதி உயர்ந்தவன்) என்ற அடிப்படையில் அரசியல் செய்யும் பின்லாடனுக்கும் (Bin Ladan), அரசியல் வேறு சமயம் வேறு என்று கூறும் பிளயர் (Blair) கூட்டணி, அதே கருத்து கொண்ட புஸ் (Bush) கூட்டணி என்போர் செய்த அல்லது அதே பாணியில் நிகழும் ஐரோப்பிய, அமெரிக்க அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்று பார்த்தால் ஒன்றுமில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.

இன்று நம்மிடையே காணப்படும் எந்த சமயமும் இயற்கை நீதிக்கும், ஒழுக்க விதிகளுக்கும், மனித குலத்தின் ஒட்டுமொத்த நன்மைக்கும் எதிரான கருத்தெதையும் போதிக்கவில்லை. மாறாக அன்பையும், நீதியையும், சக வாழ்வையும், ஒழுக்கத்தையும், உலக சமாதானத்தையுமே போதிக்கின்றன. இந்த அடிப்படை தன்மைகளே ஒரு அரசாங்கத்தின் நிகழ்சி நிரலிலும் காணப்பட வேண்டும் என ஆளப்படுவோர் விரும்பின் இந்த அரசியலும், சமயமும் சேர்ந்து செயல்படும் பட்சத்தில் அந்த அடிப்படை தன்மைகள் அடையப்பட முடியாது என்று கூறுவதின் தர்க்கம் புரிந்து கொள்வதற்கு கடினமாக உள்ளது.

கொலை, கொள்ளை, சூது, குடி என்று சராசரி அறிவுள்ள மனிதனும் வெறுக்கும் செயல்களுடன் மண், பெண், பொன்னாசை என்பவையும் எந்த சமயத்தாலும் ஊக்குவிக்கப்படவில்லை என்பதோடு அபரிமித இலாபம், வட்டி சுரண்டல் என்ற முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படைகளையும் இந்த சமயங்கள் நிராகரிக்கின்றன. அதேநேரம் சமயம் கலக்காத அரசியல் எந்தெந்த நாடுகளில் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் மேற்சொன்னவை சர்வசாதாரணமாக காணப்படுவதை நாம் மறந்துவிட முடியாது. உதாரணமாக சமயமும் அரசியலும் கலக்காத தூய்மையான அரசியல் நடப்பதாக கூறும் பிரித்தானியாவில், பரந்துபட்ட ஐரோப்பாவில், அமெரிக்காவில் சுபர் கசினோ, சூதாட்ட கிராமங்கள்( Las Vegas style villages), சட்ட ரீதியான, சட்ட ரீதியற்ற காம வியாபார(Sex industry ) நிலையங்கள், 12-13 வயது குழந்தைகள் வயிற்றில் குழந்தைகளை சுமக்கும் காட்சிகள், ஒரு நிமிடத்துக்கு பல கொலைகள், கற்பழிப்புகள், போதை பொருள் பாவிப்பால் உடல், உள விருத்தி குறுகி சமூகத்துக்கு பாரமாக காணப்படும் இளைஞர் கூட்டம் என்று மனித நாகரீகத்துக்கு ஒவ்வாத காட்சிகள் இந் நாடுகளில் காணப்படுவதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஒப்பீட்டு ரீதியில் இத்தகைய காட்சிகள் சமயம் கலந்த அரசியல் நடைபெறும் நாடுகளில் காணமுடியாது என்பதையும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாதுள்ளது.

ஆக, கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முற்பட்ட மனிதனுக்கும் நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக சொல்லும் இன்றைய மனிதனிக்கும் அவன் செயல் தொடர்பாக அதிகம் வித்தியாசம் காணப்படவில்லை. ஆகவே இந்த நிலைமை சமயமும் அரசியலும் கலந்ததாலா அல்லது அரசியலுடன் சமயம் கலக்காததாலா என்பது புரிவதற்கு கஸ்டமான விடயமுமில்லை.

ஜீவ காருண்யம் போதிக்கும் பௌத்தம் சரியாக பின்பற்றப் பட்டிருந்திருந்தால் இலங்கை ஒரு கொலை களமாக மாறியிருக்குமா?, அன்பே சிவன் என்று பிரபாகரன் சொல்லியிருந்திருந்தால் முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்டோர் எல்லாம் எம்முடன் இன்றும் இருக்கமாட்டாரா?, தற்காப்பு போரிலும் பயங்கரவாதம் தடை செய்யப்பட்டுள்ளதே தன் சமயத்தில் என்று பின்லாடன் யோசித்திருந்தால் இரட்டை கோபுரத்தில் 3000 அப்பாவிகள் உயிரிழந்திருக்க மாட்டார்களே. சமயத்துக்கும் சுரங்கப்பாதை ரயில்களுக்கும் சம்பந்தமே இல்லையே என்று சமயத்தை பிழையாக விளங்கிய இளைஞர் சற்று யோசித்திருக்க 07/07 நடந்து இருக்காதல்லவா? கிறிஸ்தவ விழுமியங்களை பிரித்தானிய அரசு என்றும் கைவிடாது என்று அடிக்கடி கூறும் பிளயார் பெரிய வெள்ளி உடன்படிக்கை ( Good Friday Agreement ) க்கு பதிலாக பிரித்தானிய படைகளை வட அயர்லாந்தில் இருந்து வாபஸ்பெற உடன்பட்டிருக்கலாமே. ஏன் பிளயாரின் நில ஆக்கிரமிப்புக்கு கிறிஸ்தவம் வழி வகுத்ததா? அரசியலுடன் சமயம் கலக்க அனுமதிக்க முடியுமாயின் அதன் அளவு என்ன? அல்லது அப்படி ஒரு அளவுகோல் உண்டா? எனவே பிரச்சினை சமயங்களில் இல்லாதது போலவும், தான் சமயவாதி என்பவனில் அல்லது தான் சமயவாதியல்ல என்பவனில் தான் ஏதோ பிரச்சினை இருப்பது போலவும் அல்லவா தெரிகின்றது.

சரி சமயம் இல்லாத அரசியலே சரியானது என்போரெல்லாம் என்ன நாஸ்திகவாதிகளா? இந்த ஐக்கிய ராச்சியத்தில் அரசியல்வாதிகள் பொதுவாக சொல்வது கடவுள் அரசியை காப்பாராக (God bless the Queen) என்பதுதானே. அமெரிக்கர் எதற்கெடுத்தாலும் கடவுள் அமெரிக்காவை காப்பாராக (God bless America)என்று தானே கூறுகின்றனர். இங்கெல்லாம் ஏன் கடவுளின் துணை தேவைப்படுகிறது?, இவர்களின் பதவி பிரமாணங்கள் எல்லாம் ஒரு கையில் பைபிளுடன் தானே செய்யப்படுகின்றது. இதையும் விட கடவுளின் ஆணையின் பேரிலேயே ஈராக்கின் மீது படை எடுத்ததாக புஸ் கூறினார். மேல் சொன்ன நாடுகளில் அரசியலுடன் சமயம் கலந்துள்ளதா, இல்லையா? சதாம் ஹ¤செய்ன் அரசியலுக்காக தூக்கிலே தொங்கி உயிர் பிரியும் கடைசி கணத்தில் மிக சத்தமாக கூறியது என்ன, இறைவன் அதியுயர்ந்தவன் (அல்லாஹ¤ அக்பர்) என்பதுதானே. இது அமெரிக்காவுக்கு அடிபணியமாட்டேன், மண்டியிடமாட்டேன் என்ற அரசியலா அல்லது உயிருடன் இருக்கும் போது சமயம் வெறுக்கும் அத்தனையையும் செய்துவிட்டு, உயிர் போகும் நேரத்தில் யாரும் உதவிக்கு இல்லையே என்ற சமய சாயம் பூசப்பட்ட அவலக்குரலா?

குற்றம் செய்தால் தண்டனையும், நன்னடத்தைக்கு சன்மானமும் என்பதுதான் இயற்கை நீதியின் (Natural Law) அடிப்படை. இந்த அடிப்படையில் அரபு நாடுகளில் பாரிய குற்றம் செய்தோருக்கு பகிரங்க மரண தண்டனை நிறைவேற்றப் படுகின்றன. தண்டனை என்பது குற்றம் புரிந்தவரை தண்டனைக்குட்படுத்துவது மாத்திரமல்ல, அது மற்றவரை குற்றம் செய்யாமல் தடுக்கவும் (Deterrent) வேண்டும் என்பது தண்டனை சட்டங்களின் (Penal Code)அடிப்படை. ஆனால் இந்த பகிரங்க மரணதண்டனை மனித நாகரீகத்துக்கு ஒவ்வாது என மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூப்பாடு போட அமெரிக்காவின் அனேக மாநிலங்களில் இந்த மரணதண்டனை சிறைச்சாலைகளில் தினம் தினம் நிறைவேற்றப்படுவதை இந்த நாடுகள் அனேகமாக கண்டுகொள்வதில்லை. பகிரங்க தண்டனை என்னைப் பொறுத்தவரை மற்றோரை குற்றம் செய்வதிலிருந்து தடுக்கும் ஒரு சாதகமான முறை. சரி அப்படி இல்லாவிட்டாலும் கூட இந்த இரண்டு முறைக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன? குற்றத்துக்கு தண்டனை என்பதுதானே.

” சமயம்/மதம் ஒரு அபின்” என்று கார்ல் மார்க்ஸ் சொல்லிவிட்டார் என்பதற்காக மனித வாழ்வின் ஒரு அம்சமான அரசியல், பொருளாதார முன்னேற்றத்துக்கு சமயத்தை வெறுத்தே ஆகவேண்டும் என்று வாதிடுவது, புலிகளின் பயங்கரவாத்தை கணக்கில் எடுத்து ஒடுக்கப்பட்டோர் புரட்சி வழியை திரும்பி பார்க்கவே கூடாது என்பது போல் இல்லையா? கார்ல் மார்க்ஸ் ஏன் சமயத்தை ஓரங்கட்டினார் என்பதை எப்போதாவது கேள்விற்குற்படுத்தினோமா?
அவரின் குடும்பம் கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்டது. அவரின் குடும்பத்தில் பாதிரியார்களும் இருந்தனர்(?) என்று கூறப்படுகின்றது. அவர் வாழ்ந்த காலத்தில் ஜேர்மனியிலே கிறிஸ்தவம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியது என்பதை நாம் ஏன் ஆய்வுக்குட்படுத்தவில்லை? கிறிஸ்தவத்திற்கப்பால் கார்ல் மார்க்ஸ் என்னென்ன சமயங்களில் பரிச்சயம் உள்ளவர் என்பதை யாராவது கூற முடியுமா? அவரின் சமயம் சம்பந்தமான பார்வை கிறிஸ்தவத்துடனான அவரின் அனுபவத்துடன் மாத்திரம் எல்லை இடப்படவில்லை என்று யாராலும் நிருபிக்க முடியுமா? அல்லது மனித சமுதாயத்தின் முழு அபிவிருத்தியும், முன்னேற்றமும் வெறுமனே இந்த அரசியல், பொருளாதார முன்னேற்றத்துடன் குறுகிக்கொள்ள வேண்டுமா? மனிதனுடன் மனம், ஆத்மா என்ற அம்சங்கள் உள்ளதையும் அரசியல், பொருளாதார அபிவிருத்தியை அடையும் போது அது மனத்தினதும், ஆத்மாவினதும் முழு அபிவிருத்தியும் அடைந்ததுக்கு சமம் என்றாகிவிடுமா? இல்லை என்றால் மனம், ஆத்மா என்பவற்றின் அபிவிருத்தி பற்றி நாம் கவலைபட வேண்டிய அவசியமே இல்லையா? இல்லை அது அவசியம் என்றால் அதை சமயத்தால் நிறைவேற்ற முடியாதா? முடியாது என்றால் அது எதனால் சாத்தியப்படும் என்று சொல்ல முடியுமா?

இந்த இரண்டு விடயங்களிலும் அங்கமாக இருக்கும் மனிதனுக்கு இந்த இரண்டுக்குமான பிரிகோடு இதுதான் என்று திட்டவட்டமாக சொல்லமுடியாத அளவுக்கு ஆற்றல் இல்லாத போது தன் நலன் சார்ந்த நிலையிலேயே அரசியலையும் சமயத்தையும் பிரித்துவைத்து குழப்பம் விளைவிக்க முனைகின்றான் மனிதன் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது. இந்த தன்மை விரிவடைந்து ஒரு தேசியத்தின் நலன் மற்றைய தேசியத்தை விட மேம்பட்டதாக கருதப்படுகிறது. ஒரு வர்க்கத்தின் நலன் மற்றைய வர்க்கத்தின் நலனை விட விசேடமாக பேசப்படுகின்றது. ஒரு நாட்டின் நலன் இன்னொரு நாட்டின் நலனிலும் மேலாக சொல்லப்படுகின்றது. ஆக சமயத்தை ஒரு ஆக்க சக்தியாக பார்க்க, அப்படி அதை செயற்படவைக்கத் தெரியாத மனிதன் அல்லது விரும்பாத மனிதன் பிரிந்திருக்கச் சொல்கிறான், பிரித்து வைக்கின்றான் என்பதற்காக நாம் அப்படியாகிவிட முடியாது என்பது என் நிலைப்பாடு.

இடம்பெயர் பறவைகள்: சைபீரியன் வாத்துக்களை வேட்டையாடிய 4 பேர் கைது

புத்தளம் நவதங்குளம் பகுதியில் சைபீரியன் வாத்துக்களை வேட்டையாடிய 4 நபர்களை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் கடும் குளிர்காலத்தையிட்டு பறவைகள் அபயம் தேடி இலங்கை போன்ற நாடுகளுக்குள் இடம்பெயர்ந்து வருவதுண்டு.

இவ்வாறு சைபீரியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள ஒருவகை வாத்துகள் (சைபீரியன் டக்) நான்கை சுட்டுக் கொன்றதாலேயே இவர்கள் நான்கு பேரும் கைதாகினர். வாத்துக்களை சுடுவதற்காக பயன்படுத்தியதாகக் கூறப்படும் 2 டபிள் பெரல் துப்பாக்கிகள், 12 போர் ரக 12 தோட்டாக்கள், டபிள் கெப் ரக வாகனமொன்று என்பவற்றை யும் முந்தல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அபயம் தேடி வரும் வெளிநாட்டு பறவைகளை சுடுவதோ, வதைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்பதாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்க முடியும் – அட்வகேட் ஜெனரல் சமரகோன்

sucide.jpgஇராணுவ சட்டத்தின் 133வது பிரிவின் கீழ் இராணுவ நீதிமன்றம் ஒன்றினால் வாய்மூல எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் ஒரு சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்க முடியுமென்று பாதுகாப்பு படைகளுக்கான முன்னாள் நீதிபதி அட்வகேட் ஜெனரல் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எம். ஜே. சமரகோன் தெரிவித்தார். இராணுவ நீதிமன்றம் குறித்து விளக்கமளிக்கும் விசேட சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. இதன் போது அவர் விபரிக்கையில்,

சேவையிலுள்ள ஒரு அதிகாரி அல்லது ஓய்வுபெற்ற அதிகாரி இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்படுகிறது. சிவில் நீதிமன்றத்தைப் போன்றே இராணுவ நீதிமன்றிலும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்.

இராணுவ சட்டம், இராணுவ ஒழுக்க விதிகள் மற்றும் இராணுவ நீதிமன்றம் என்பவற்றிற்கு அமைய இராணுவ பொலிஸாரால் கைது செய்ய முடியும். அதேபோன்று, ஒருவருக்கு எதிராக இராணுவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில் அல்லது சேவையில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற ஒருவர் இராணுவ சட்டத்திற்கு முரணாக நடந்துள்ளார் என்பதை இராணுவ பொலிஸாரால் இனங் காணப்பட்டால் அவர்களை கைது செய்யும் அதிகாரம் இராணுவ பொலிஸாருக்கு உண்டு என்றார்.

ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரை ஆறு மாத காலத்திற்குள் இவ்வாறு கைது செய்யலாம். ஆனால், தேசத் துரோகம், இராணுவத்தை ஏமாற்றுதல் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் செல்லுதல் போன்ற குற்றங்களை செய்த ஒருவரை எந்த நேரத்திலும் கைது செய்யலாம்.

இராணுவ நீதிமன்றம் மூன்று முதல் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாகும். முப்படைகளின் தளபதியே இதனை நியமிப்பார். குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தரத்திற்கு சமமானவராகவும் தற்போது சேவையில் இருப்பவர் ஒருவரே இந்த நீதிமன்றத்திற்கு நியமிக்க முடியும். சமமான தரத்தைக் கொண்ட அதிகாரி ஒருவர் இல்லாத பட்சத்தில் அந்தத் தரத் தைவிட குறைந்த தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்க முடியும் என்றார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டதும் அவருக்கு எதிரான சாட்சியங்க ளின் தொகுப்பு தயாரிக்கப்படும். இதற்குப் பல மாதங்களும் செல்லலாம். இதனை அடிப்படையாகக் கொண்டே இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்திய வெளியுறவுச் செயலர் நாளை இலங்கை வருகை

nirupama.gifஇலங் கையின் முன்னாள் இந்திய தூதுவரும், தற்போதைய இந்தியாவின் வெளியுறவுச் செயலாளருமான நிருபமாராவ் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை சனிக்கிழமை கொழும்பு வருகின்றார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பதவியை ஏற்றபின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.

பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இந்தச் சமயத்தில் அவர் இங்கு விஜயம் செய்வதால் அவரது இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை, அதிகாரப் பரவலாக்கல் யோசனைத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு கொழும்புக்கு புதுடில்லி அழுத்தம் கொடுத்து வருகையில், இந்தியத் தூதுவரின் கொழும்பு வருகை இடம்பெறுகின்றமை முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இந்திய வெளிவிவகாரச் செயலரின் வருகை வழமையான இரு தரப்பு பரஸ்பர நலன் நோக்கிய உறவாடல் தொடர்பானதே என அதிகாரிகள் மட்டத்தில் கூறப்பட்டது.

அவுஸ்திரேலியா செல்ல முயற்சி: சிலாபம், உடப்பு இளைஞர்கள் 21 பேர் மட்டக்களப்பில் கைது

சட்ட விரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கு எத்தணித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலாபம், உடப்பு பகுதியைச் சேர்ந்த 21 இளைஞர்கள் மட்டக்களப்பில் நேற்று கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, நாவலடி பகுதியில் கடற்கரையோரமாக அவர்களை ஏற்றிச் செல்வதற்கு வள்ளம் வரும் வரை காந்தி ருந்த சமயமே இவர்கள் 21 பேரும் கைதாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். சந்தேக நபர்கள் பயணம் செய்ததாக கருதப்படும் வேன் ஒன்று, கடல் வழிப்பாதையை கண்டறியக் கூடிய வரை படங்கள், உணவு வகைகள், பணம், உடைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு 234 ஆவது படையணியினரும் மட்டக்களப்பு பொலிஸாரும் இணைந்தே இவர்களை கைது செய்துள்ளனர். காத்திருந்தும் வள்ளம் வராத காரணத்தினால் நாளை புறப்படலாம் என்ற எண்ணத்தில் நாவலடி வீடொன்றினுள் இருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் வாக்கு முலங்களும் பெறப்பட்டன. உடப்பு கிராமத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக சிலாபம் பொலிஸ் நிலையத்துக்கும் அறிவித்தல்கள் விடுக் கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பழி நாணுவார் : ஷோபாசக்தி

Shoba_Sakthiஇந்தக் கட்டுரை இரு பகுதிகளாலானது. கட்டுரையின் இரண்டாவது பகுதி, உருவாகிவரும் ‘செங்கடல்’ திரைப்படம் குறித்தும் நான் படப்பிடிப்பில் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன் என்றும் கடந்த இரண்டு மாதங்களாகப் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளியான செய்திகளின் / விமர்சனங்களின் யோக்கியதையை ஆராய்வது. முதற்பகுதி, எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் இப்போது இணையத்தளங்களில் என்மீதும் எனது தோழர்கள் மீதும் படுதீவிரமாகச் செய்துவரும் சேறடிப்புகளிற்கான எதிர்வினை.

கட்டுரையின் முதற் பகுதியான யமுனா ராஜேந்திரன் மீதான எதிர்வினையைப் படிக்கும்போது “என்ன இவன் எப்போது பார்த்தாலும் யமுனாவோடு மல்லுக்கு நிற்கிறானே” என்று நீங்கள் சலிப்படையக் கூடும். எனக்கும் கூட யமுனாவின சேறடிப்புகளிற்கும் அவதூறுகளிற்கும் பதிலளித்து பதிலளித்துச் சலித்துத்தான் போய்விட்டது. “நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன்: காலனிய எதிர்ப்பு இந்துத்துவமும், மேற்கத்திய மற்றும் மார்க்சிய எதிர்ப்பு அரசியல் இஸ்லாமும், நரேந்திர மோடியும் பின்லாடனும் பின்நவீனத்துவ உற்பத்திகள்தான் “ என்றெல்லாம் திட்டவட்டமாகக் கிறுக்குத்தனமாக எழுதிக் கொண்டிருப்பவரிடம் நான் எதைத்தான் அரசியல்ரீதியாக விவாதிக்க முடியும்? ‘குமிஞ்சான்’, ‘குடிகாரன்’ என்றெல்லாம் கட்டுரைகளில் ‘பட்டம் தெளிச்சு’ சிறுபிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருப்பவரிடம் நான் எதைத்தான் ஆரோக்கியமாக விவாதிப்பது?

இந்த அவதூறுகள் வெறும் தனிமனிதத் தூஷணைகள் என்றளவில் நின்றிருந்தால் அவை என்னைச் சிறிதளவேனும் வருத்தும் வல்லமையற்றவை. அதாவது இப்போது இணையத்தளங்களின் பின்னூட்டப் பகுதிகளில் பல்லி, பூரான் என்று சில சல்லிப் பயல்கள் வந்து எழுதுவதுபோல அவை தனிமனித தூஷணைகள் என்றளவில் நின்றுவிட்டால் எனக்கு அவற்றால் எந்தச் சலனமோ வருத்தமோ பிரச்சினையோ கிடையாது. “பொதுக் காரியங்களில் இருப்பவன் மானம் பார்க்கக் கூடாது” என்ற தந்தை பெரியாரின் வார்த்தை எனக்கு வழிகாட்டி. நாய் கடித்தால் பதிலிற்குத் திருப்பி நாயைக் கடிப்பதும் நமது மரபல்ல.

ஆனால் யமுனா ராஜேந்திரனின் சேறடிப்புகளும் அவதூறுகளும் வெறும் தனிநபர் தூஷணை என்ற வகைக்குள் அடங்கிவிடுவன அல்ல. நாங்கள் வரித்திருக்கும் பாஸிச எதிர்ப்பு அரசியலையும் சாதியொழிப்பு அரசியலையும் நாங்கள் முன்னிறுத்திய விளம்புநிலை அரசியற் சிந்தனைகளையும் தனது கருத்துப் பலத்தால் அல்லாமல் வெறும் அவதூறுகளின் மூலம் சுரண்டிப் பார்க்க யமுனா இடையறாது முயற்சிக்கும்போது, சலிப்பையும் அலுப்பையும் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு நானும் யமுனா ராஜேந்திரனுக்கு எதிர்வினை செய்தே ஆகவேண்டியிருக்கிறது.

1.

தோழர் அ.மார்க்ஸ் இதுவரை எத்தனையோ உண்மை அறியும் குழுக்களிற்குத் தலைமை தங்கிச் சென்று ஆய்வு செய்து பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் சந்திக்காத அவதூறுகளை அவர் அண்மையில் வெளிப்படுத்திய ஓர் உண்மையால் அவர் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அவர் தனது அண்மைய நூலொன்றின் முன்னுரையில் யமுனா ராஜேந்திரன் ‘மூடத்தனமானவர்’ என்ற உண்மையை வெளியிட்டுள்ளதாலேயே புதிய அவதூறுகளை அவர் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இவ்வளவிற்கும் இந்த உண்மையை அ. மார்க்ஸ்தான் முதன் முதலில் கண்டுபிடித்துள்ளார் என்று நாம் கருதினால் அது வரலாற்று வழு. ஏற்கனவே பேராசிரியர்கள் சிவசேகரம், நுஃமான், தோழர் எஸ்.வி.ராஜதுரை போன்ற பல அறிஞர்கள் கண்டெடுத்துத் தங்கள் எழுத்துகளில் நிறுவிக்காட்டிய உண்மையொன்றையே அ. மார்க்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார் என்று மட்டுமே நாம் சொல்லிக் கொள்ளலாம். இந்த உண்மையை அ.மார்க்ஸ் எழுதியதால் ‘கீற்று’ இணையத்தளத்தில் யமுனா ராஜேந்திரன், அ.மார்க்ஸை இலக்கு வைத்து ‘அரசன் அம்மணமாக வருகிறான்’ என்று ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

யமுனா ராஜேந்திரனுடன் வாதிடுவது, கருத்துப் போர் புரிவதெல்லாம் மிகவும் துன்பமானது. அந்தத் துன்பத்தை தந்தை பெரியாரின் சொற்களில் ” நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது” என்று விளக்கலாம். ஒவ்வொரு தடவையும் பதினைந்து வருடங்களிற்கு முன்பே பதில் சொல்லித் தீர்க்கப்பட்ட கேள்விகளோடு மறுபடியும் மறுபடியும் யமுனா வருவார். பத்து வருடங்களுக்கு முன்னமே அவரின் பதில்களின் குளறுபடிகளை நாம் மறுபடியும் மறுபடியும் சுட்டிக்காட்டியிருந்தபோதும் அதே பதில்களுடனும் வருவார். கேள்வியும் ரீமிக்ஸ், பதிலும் ரீமிக்ஸ். ஆனால் உயிர்மை, கீற்று, தேசம், இனியொரு என்று புதுப் புதுத் தியேட்டர்கள்.

இப்படியாகத்தான் சரியாக இரண்டு வருடங்களிற்கு முன் ‘ தேசம் நெற்’றில் ஷோபாசக்தியை அம்பலப்படுத்துகிறேன், அலங்கோலப்படுத்துகிறேன் என்றொரு பிரகடனத்துடன் யமுனா பத்துப் பக்கங்களிற்கு ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். வழமைபோலவே என்னோடு சேர்த்து சுகனுக்கும், அ. மார்க்ஸுக்கும் யமுனா பழிப்புக் காட்டியிருந்தார். நானும் சுகனும் உடனேயே மிகுந்த பொறுப்புணர்வுடன் பதிலுக்கு ஆளுக்குப் பத்துப் பத்துப் பக்கங்களில் தனித் தனியாக மறுத்தான் கட்டுரைகளை எழுதி ‘சத்தியக் கடதாசி’யில் வெளியிட்டோம். எங்களது கட்டுரைகளுக்குப் பத்து நாட்களில் பதில் தருவதாகத் தேசம் நெற்றில் அறிவித்தார் யமுனா. பத்து, இருபது, முப்பது நாட்கள் பொறுத்தோம். நாற்பதாவது நாளாகியும் பதில் வராததால் ‘யமுனா ராஜேந்திரனைக் காணவில்லை’ என்று விளம்பரம் வேறு வெளியிட்டுப் பார்த்தோம். அந்தக் கட்டுரைகளில் நாங்கள் எழுப்பிய கேள்விகளிற்கு இன்றுவரைக்கும் பதில்கள் வந்தபாடில்லை. யமுனாவின் கட்டுரையில் இருந்ததெல்லாம் பொய்களும் அவதூறுகளுமே என்று நாங்கள் சான்றாதாரங்களோடு நிறுவியும் அவை குறித்து இதுவரை எந்த விளக்கமோ வருத்தமோ யமுனாவிடமிருந்து வெளியாகவில்லை. நாங்களும் பதிலோ, விளக்கமோ வருமெனக் காத்திருந்தோம். குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம். அந்த விவாதத்தை அப்படியே போட்டுவிட்டு அந்த விவாதத்தில் தான் எழுதிய பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் வெவ்வேறு வடிங்களில் வெவ்வேறு இணையத்தளங்களிற்குத் தாவித் தாவி யமுனா திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டேயிருக்கிறார்.

யமுனாவின் இந்த மாயப் போரின் கடைசி ‘அட்டாக்’ தான் அந்தக் கீற்றுக் கட்டுரை. அ.மார்க்ஸை இலக்கு வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் வழமைபோலவே என்னையும், சுகன், ஆதவன் தீட்சண்யா, பௌசர், சுகுணா திவாகர் போன்ற தோழர்களையும் இணைத்தே அவர் பழித்திருக்கிறார். இம்முறை தோழர். எஸ்.வி. ராஜதுரையையும் தனது அவதூறு வளையத்திற்குள் கொண்டுவர யமுனா முயற்சித்துள்ளார். “எஸ்.வி.ஆருடையதும் அ.மார்க்ஸினதும் தற்போதைய ஈழம் குறித்த அரசியல் பார்வைகள் தமிழ்த் துவேஷ சிங்கள இனவாத மார்க்ஸியர்களின் பார்வையை ஒத்தது” என்கிறார் யமுனா. “இவர்களது மனித உரிமைப் பிரகடனங்கள் ஈழத்தைப் பொறுத்தவரை பசப்பலானவை” என்றும் சொல்கிறார் யமுனா.

கடந்த வருடம் திருவனந்தபுரத்தில் ‘புலம்பெயர்ந்த இலங்கையர்களிற்கான சர்வதேச ஒன்றியம்’ (அய்.என்.எஸ்.டி) நடத்திய கருத்தரங்கில் எஸ்.வி.ஆர். கலந்து கொண்டதே யமுனாவின் குற்றச்சாட்டின் அடிப்படை. நான் அறிந்தளவிற்கு அய்.என். எஸ்.டி. குறித்து முதலில் சொல்லிவிடுகிறேன்: புலம் பெயர்ந்த இலங்கையர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து செயற்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் சுனந்த தேசப்பிரிய, சனத் பாலசூரிய, மஞ்சுள வெடிவர்த்தன எழுபதுகளில் ஜே.வி.பியின் மத்தியகுழு உறுப்பினராயிருந்த ரஞ்சித், ந.சுசீந்திரன், ‘உயிர்நிழல்’ லஷ்மி, ‘சரிநிகர்’ சரவணன், சிவராசன், கிருஷ்ணா போன்றவர்கள் இந்த அமைப்பை வழிநடத்திச் செல்பவர்களில் முதன்மையானவர்கள். கறாரான அரசியல் வேலைத்திட்டங்கள் இவர்களிடம் இல்லாத போதும் இலங்கையில் அனைத்து மக்களிற்குமான சனநாயக உரிமைகளும் ஊடகச் சுதந்திரமும் உறுதி செய்யப்படவேண்டும் என்ற முன்னோக்கில் இவர்கள் சர்வதேச நாடுகளில் கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். அரசின் மனித உரிமை மீறல்களை பகிரங்கப்படுத்தி அறிக்கைகளையும் பிரசுரங்களையும் வெளியிடுகிறார்கள். குறிப்பாக இவர்கள் மகிந்த ராஜபக்ஷவின் அரசைக் கடுமையாக எதிர்த்துக்கொண்டிருப்பவர்கள். ‘சனல் 4′ல் வெளியாகிய இலங்கை அரசபடைகளின் படுகொலைகள் குறித்த ஒளிநாடாவை வெளியிட்டவர்கள் அய்.என்.எஸ்.டி என்றே இலங்கை அரசு குற்றஞ்சாட்டியது. குறிப்பாக தோழர் ரஞ்சித்தை அரசு குற்றஞ்சாட்டியது. இதனால் இவர்கள் முன்பு புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் இப்போது அய்க்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் என்றும் விமர்சனங்களைச் சந்தித்துக்கொண்டிருப்பவர்கள். தங்களது அமைப்பிற்கு அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்பவர்கள்.

இந்த அமைப்பினர்தான் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் – சிங்கள – முஸ்லிம் அரசியற் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து திருவனந்தபுரத்தில் இலங்கை அரசியல் பிரச்சினைப்பாடுகள் குறித்த கருத்தரங்கொன்றை நடத்தினார்கள். இவர்கள் நடத்திய இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியதால் எஸ்.வி.ஆர். தமிழ் துவேஷியாகவும் சிங்கள இனவாதத்தன்மையுடையவராகவும் மாறிவிடுவாரா? இப்படிச் சொல்வதற்கு எஸ்.வி.ஆரின் எழுத்துகளிலிருந்தோ பேச்சுகளிலிருந்தோ ஏதாவது ஆதாரம் காட்ட யமுனா தயாரா? மூடனுக்கும் புரியக் கூடியவகையில் நான் திரும்பவும் நிதானமாகக் கேட்கிறேன்: சிங்கள இனவாதத்திற்கு ஆதரவான பேச்சையோ தமிழ் மக்களிற்கு எதிரான துவேஷப் பேச்சையோ எஸ்.வி.ஆர் எங்காவது பேசியுள்ளாரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்தத் தீராத பழியை யமுனா எஸ்.வி.ஆர். மீது சுமத்துகிறார். எஸ்.வி.ஆரின் மனித உரிமை கோரிய பேச்சுகள் பசப்பலென்று யமுனா எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறார்? கட்டுரையில் ஒரேயொரு மேற்கோளைத் தன்னும் ஒரேயொரு ஆதாரத்தைக் கூட யமுனா எழுதவில்லையே. ஏனிந்த அவதூறுப் பிழைப்பு?

“‘உயிர் எழுத்து’ இதழில் ரஞ்சித்தைக் குறித்து மனித உரிமைக் காவலர் என்று பச்சைப் பொய்யை எழுதியுள்ளார் எஸ்.வி.ஆர்.” என்று அடுத்த விசக் கத்தியைச் சொருகுகிறார் யமுனா. யமுனாவுக்கு ரஞ்சித்தைக் குறித்து எதுவும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. ரஞ்சித் ஜே.வி.பியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவர். 1971 கிளர்ச்சியை நடத்திய தலைவர்களில் ஒருவர். ரோகண விஜேவீர சிறைப்பட்டு யாழ் டச்சுக்கோட்டையில் அடைக்கப்பட்டிருந்தபோது ரோகணவை மீட்க ஜே.வி.பியினர் கோட்டையின் மீது நடத்திய தாக்குதலைத் தலைமைதாங்கி வந்தவர்களில் ஒருவர். தோல்வியில் முடிந்த அந்தச் சிறையுடைப்பு நடவடிக்கையில் கைதாகி ஊறாத்துறைக் கடற்கோட்டையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டவர். 1977ல் விடுதலையாகி ஜெர்மனிக்கு வந்து அரசியல் தஞ்சம் பெற்றவர். தனது போராட்ட அனுபவங்களை ‘ஏப்ரல் கண்ணீர்’ என்ற நூலாக எழுதி வெளியிட்டவர். ஜே.வி.பி.மீது விமர்சனங்களை வைத்து அந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர்.அந்த முன்னாள் ஜே.வி.பி தோழர் இன்று இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல்களை சர்வதேசமெங்கும் பரப்புரை செய்வதில் ஓய்வொழிச்சலற்ற மனிதவுரிமைப் போராளி.

தோழர் ரஞ்சித் இலங்கை அரசிற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டார் என்பது மாவீரன் யமுனாவின் குற்ச்சாட்டு. இலங்கையிலிருந்த ரஞ்சித்தின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கை அரசால் குறிவைக்கப்பட்டிருந்த நிலையில் தனக்கும் அந்த ஒளிநாடாவுக்கும் தொடர்பில்லை என ரஞ்சித் இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதினார். வீரியம் பெரிதல்ல காரியமே பெரிது என்பதைக் களப்போராளிகள் புரிந்துகொள்வார்கள். சிங்களத்திலேயே எனக்குப் பிடிக்காத வார்த்தை ‘சமாவெயன்’ என்று ரஞ்சித் சொல்ல இதுவொன்றும் ‘ரமணா’ திரைப்படமல்ல, ரத்தமும் சதையுமான உயிர்களும் வாழ்க்கையும். ரஞ்சித்தை மனிதவுரிமைப் போராளி இல்லையென்று நிறுவவதன் மூலம் யமுனா என்ன சாதிக்க நினைக்கிறார். ரஞ்சித்தின் குடும்பம் இலங்கை அரசிடம் சிக்கிச் சீரழிய வேண்டுமென்றா யமுனா கருதுகிறார். விளக்கம் தேவை.

இனி அ.மார்க்ஸிடம் வருவோம். தமிழகத்தில் அறிவுஜீவிகள் விடுதலைப் புலிகளின் அரசியலையும் மனிதவுரிமை மீறல்களையும் விமர்சிக்கத் தயங்கிய காலத்திலேயே புலிகளை விமர்சித்து எழுந்த மிகச் சில குரல்களில் அ.மார்க்ஸுடைய குரல் முதன்மையானதும் வலுவானதும். இதனாலேயே அவர்மீது இலங்கை அரசின் ஆதரவாளர் என்று தமிழ்த் தேசியவாதிகள் சிலரால் குற்றம் சாட்டப்படுகிறதே அல்லாமல் அ.மார்க்ஸின் எழுத்துகளிலிருந்து ஒரு சொல்லைத் தன்னும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ இந்திய அரசுக்கு ஆதராவாகவோ இவர்களால் காட்ட முடிவதில்லை. புலிகளை எவ்வளவுக்கு விமர்சித்தாரோ அதைவிடப் பன்மடங்கு இந்திய – இலங்கை அரசுகளை ஈழப் பிரச்சினையில் மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சினைகளிலும் எதிர்த்து நிற்பவர் அவர். எழுத்தோடு நின்றுவிடாமல் இடையறாத அரசியற் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தியிருப்பவர். அவரையெல்லாம் தமிழ் துவேஷியென்றும் சிங்கள இனவாதத்தைப் பேசுகிறவரென்றும் பசப்பலாக மனித உரிமைகள் குறித்துப் பேசுபவரென்றும் யமுனா எழுதுவதற்கு எதாவது பொருளிருக்கிறதா? யோக்கியமிருக்கிறதா?

அ.மார்க்ஸ் ஒன்றும் விமர்சிக்கப்படக் கூடாதவரல்ல. அவரும் தன்மீதான விமர்சனங்களிற்கு கரிசனையுடன் ஓய்வொழிச்சலில்லாமல் பதில் சொல்லிக்கொண்டிருப்பவர்தான். ஆனால் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் வெறுமனே காழ்ப்புணர்வுடன் யமுனா பழிப்பும் நெளிப்பும் மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால் அவரால் மட்டுமல்ல வேறுயாரால்தான் என்ன செய்ய முடியும். இந்த பழிப்புக்கெல்லாம் எப்படிப் பதில் சொல்வது? இந்தப் புளிப்புக்கெல்லாம் ‘மூடத்தனம்’ என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறென்ன பதிலிருக்கிறது?

யமுனா சில மாதங்களிற்கு முன்பு ‘உயிரோசை’யில் எழுதிய ‘விடுதலைப் புலிகளின் சாதி: அ.மார்க்ஸ், ரவிக்குமார், ஷோபாசக்தி’ என்ற கட்டுரையிலும் இதே கரைச்சல்தான். பலதடவைகள் நானே பல்வேறு இடங்களில் பதில் சொல்லித் தீர்த்த, விளக்கம் சொல்லி வெறுத்துப்போன கேள்விகளையும் பிரச்சினைகளையும் அப்படி ஒரு விவாதமே எக்காலத்திலும் எங்கேயும் நடவாதது போன்ற பாவனையுடன் அந்த ‘உயிரோசை’க் கட்டுரையில் யமுனா எழுதியிருப்பார். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்திலிருந்து இசுலாமியர்களைப் புலிகள் கட்டிய துணியுடன் விரட்டியடித்ததற்குக் காரணத்தைச் சில இஸ்லாமியர்கள் இராணுவத்திற்கு உளவு சொன்ன கதையில் ஆரம்பித்திருக்கிறார் யமுனா. நடந்தது இனச் சுத்திகரிப்பே தவிர வேறல்ல என்பது எங்களது கருத்து. அந்த வெளியேற்றம் புலிகள் இந்துமத நோக்கிலிருந்து நடத்தியதல்ல எனகிறார் யமுனா. தமிழ்த் தேசியத்திற்கும் இந்துமதத்திற்கும் உள்ள உறவுகள் குறித்து மறுபடியும் நாமொருமுறை விளக்க வேண்டிவரும். புலிகள் இயக்கத்திற்குள் சாதி பார்ப்பதில்லை என்பார் யமுனா. அது எங்களிற்கும் தெரியும் எங்களின் விமர்சனமெல்லாம் புலிகள் சாதியொழிப்பை வீரியமாக முன்னெடுக்கவில்லை என்பதும் சாதியொழிப்புப் போராட்ட அமைப்புகளைத் தடைசெய்தார்கள் என்பதுமே என்போம் நாம். அதிபர் இராசதுரையின் கொலையை சாதியப் படுகொலையாகப் பார்க்கக் கூடாது என்பார் யமுனா. அதிபரின் கொலை வெறுமனே சனநாயக மறுப்பு மட்டுமல்ல அங்கே கொல்லப்பட்டது ஒரு தலித் அறிவுஜீவியும் போராளியும் என்போம் நாம். மறுபடியும் இரண்டுமாதம் கழித்து இதே பிரச்சினைகளை வேறு இணையத்தளத்தில் வேறு தலைப்பில் எழுதுவார் யமுனா. தலைப்பிலும் பெரிய மாறுதல்கள் இருக்காது. இந்தக்கட்டுரையில் ‘அ.மார்க்ஸ், ஷோபாசக்தி’ என்றிருந்தால் அடுத்த கட்டுரையில் ‘ ஷோபாசக்தி, அ.மார்க்ஸ்’ என்றிருக்கும்.

இந்த எல்லாத் துன்பங்களையும் சகித்துக்கொண்டாலும் ‘கீற்று’ இணையத் தளத்தில் யமுனா தன்னை “நானொன்றும் விடுதலைப் புலிகளின் விமர்சனமற்ற ஆதரவாளன் இல்லை” என்று சொல்வதைத்தான் நம்மால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. புலிகளின் வீழ்ச்சி உறுதியாகத் தெரியும்வரைக்கும் யமுனா எங்கே எப்போது புலிகளை விமர்சித்தார்? புலிகளின் வீழ்ச்சி உறுதியானவுடன் தவித்த முயல் அடிக்கும் தந்திரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பட்டும்படாமலும் அவர் இப்போது புலிகளை விமர்சிக்கிறாரே தவிர விடுதலைப் புலிகளின் எழுச்சிக்காலத்தில் அவர்கள் ஈழத்திலும் புகலிடத்திலும் வகைதொகையற்ற மனித உரிமை மீறல்களையும் கொலைகளையும் நடத்தியபோது அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? அவர் அப்போது புலிகளின் பத்திரிகையான ‘ஈழமுரசு’விலும் புலிகளின் வானொலியான IBCயிலும் கூலிக்கு மாரடித்துக் கொண்டிருந்தார்.

சபாலிங்கம் படுகொலை, அதிபர் இராசதுரை படுகொலை, வெருகல் படுகொலைகள் போன்ற எண்ணற்ற கொலைகள் நடந்த போதெல்லாம் யமுனாவின் விமர்சனக் குரல் எங்கே போயிருந்தது? பள்ளிவாசல் படுகொலைகள் குறித்து யமுனா எங்கே தன் விமர்சனத்தையோ கண்டனத்தையோ வைத்திருக்கிறார்? புலம் பெயர் தேசங்களிலே மாற்றுக் கருத்தாளர்கள் புலிகளால் வதைக்கப்பட்டபோது யமுனாவின் விமர்சனக் குரல் எங்கே ஒளிந்திருந்தது? அப்போது அது வாரம் 500 பிராங்குகளிற்கு புலிகளின் ‘ஈழமுரசு’ பத்திரிகையில் அடகு வைக்கப்பட்டிருந்ததுதானே உண்மை. புலிகள் கம்யூனிஸ்டுகளை, தலித் தலைவர்களை, தொழிற்சங்கவாதிகளை, எழுத்தாளர்களைக் கொல்வதிலும் கட்டாயப் பிள்ளை பிடிப்பிலும் மும்மூரமாக இருந்தபோது யமுனா ராஜேந்திரனின் விமர்சனக் குரல் எங்கே போயிருந்தது. அந்தக் குரல் அப்போது புலிகளிள் IBC வானொலியில பொறுக்கித் தின்றுகொண்டிருந்தது. இதுதானே உண்மை! இதுதானே யமுனா ராஜேந்திரன் புலிகளை விமர்சனத்துடன் ஆதரித்த இலட்சணம். பொறுக்கும் வரை புலிகளிடம் பொறுக்கிவிட்டு எல்லாம் முடிந்தவுடன் வெளியே வந்து ‘புலிகள் மீதும் எனக்கு விமர்சனமிருக்கிறது’ என்று சொல்வதைத்தான் பசப்பலான மனிதவுரிமைப் பேச்சு என்பது.

நான் விடுதலைபுலிகளின் விமர்சனமற்ற ஆதரவாளன் இல்லை என்று யமுனா சொல்வதின் மறுவளமான அர்த்தம் அவர் விமர்சனபூர்வமான புலிகளின் ஆதரவாளர் என்பதுதானே! அவரே சொல்லிக்கொள்ளும் அவருடைய மார்க்ஸியப் பகுப்பாய்வு முறைமையில் எதற்காக அவர் புலிகளை ஆதரிக்கிறார் என்பதை அவர் விளக்க வேண்டும். அவர்களின் ஒட்டுமொத்த சனநாயக மறுப்பிற்காகவா, அவர்கள் இஸ்லாமிய இனச் சுத்திகரிப்புச் செய்ததாலா, சிங்கள் அப்பாவி மக்களைக் கொன்றதாலா, அவர்கள் புகலிடங்களில் இந்துக் கோயில்களைக் கட்டியதாலா, அவர்கள் சிறுவர்களை கட்டாயமாகப் படையில் சேர்த்ததாலா, அவர்கள் ராஜினி- கோவிந்தன் – செல்வி போன்றவர்களைக் கொன்றதாலா, கம்யூனிஸ்ட் அமைப்புகளை ஈழத்தில் தடை செய்ததாலா, இல்லை இறுதியில் மூன்று இலட்சம் மக்களை மனிதத் தடுப்பரண்களாகக் கட்டாயமாக நிறுத்தி வைத்ததாலா அல்லது இவை எல்லாவற்றுக்காகவுமா எதற்காக எந்தப் புள்ளியில் யமுனா புலிகளை விமர்சனத்துடன் ஆதரிக்கிறார் என்பதை அவர் விளக்கி வைக்க வேண்டும் என்பது எனது ஆர்வம். ஆனால் இந்தக் கேள்விகளைக் கேள்விகளாகவே விட்டுவிட்டு அவர் கொப்புத் தாவி விடுவார் என்பது எனது அனுபவம்.

யமுனா ராஜேந்திரன் பொதுவாகவே இவ்வாறான தனது அவதூறுக் கட்டுரைகளின் முடிவில் ஒரு வழக்கமான முடிவுரையை வழங்குவதுண்டு. ‘ஷோபாசக்தி பேசும் எதிர்ப்பு அரசியலும் விளிம்புநிலை அரசியலும் போலியானவை, ஷோபாசக்தியின் அடையாளத்தைத் தக்க வைப்பதற்கே அவர் தனது போலி அரசியலை உபயோகப்படுத்துகிறார்’ என்பதாக அந்த முடிவுரை அமையும். கட்டுரைக்குத் தக்கவாறு அவ்வப்போது என்னுடன் இணைத்து சுகனோ, தலித் மேம்பாட்டு முன்னணியினரோ யமுனாவால் வசைபாடப்படுவார்கள். அதை அண்மைய ‘கீற்று’ மற்றும் ‘உயிரோசைக்’ கட்டுரைகளிலும் அவர் செய்திருக்கிறார்.

எங்களுடைய ஈழப் போராட்டம் குறித்த பார்வையும் எழுத்தும் செயற்பாடுகளும் போதாமைகளைக் கொண்டிருக்கலாம். நாங்கள் ஈழப் போராட்டத்தில் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பாத்தியதை கோரும் தைரியமும் எங்களிற்குக் கிடையாது. நாங்கள் தொட்டது எதுவுமே துலங்காதது மட்டுமல்ல அவை காலப்போக்கில் பாஸிச அதிகார மையங்களாகவும் மாறியிருந்த நிலையில் நாங்கள் ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்டத்திலிருந்து விலகிச் சென்றோம். ஈழப்போராட்டத்திற்காக அந்த இந்தத் தியாகங்களைச் செய்தோம் என்றும் நாங்கள் எந்த உரிமையையோ அனுதாபத்தையோ கோருவதுமில்லை. ஆனால் ஈழப் போராட்டத்தையோ ஈழப் போரில் விழுந்த கொலைகளையோ யுத்தத்தத்தால் அகதிகளாகச் சிதறிச் சென்ற மக்களையோ நானோ எனது தோழர்களோ எங்களது சுய இலாபத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது.

ஆனால் நீங்கள் எப்படி யமுனா? ஈழத்தில் யுத்தத்தால் கொல்லப்பட்ட மக்களின் பெயராலும் அகதிகளாக உலகெங்கும் அலையும் ஈழத்து ஏதிலிகளின் பெயராலும் உங்கள் இருப்பைக் காப்பாற்றியவரல்லாவா நீங்கள். ஈழத்தையே இன்றுவரை நீங்கள் கண்ணால் கண்டிராதபோதும் ஈழத்திலிருந்து துன்பமும் துயரமும் அடைந்தேன் என்று பொய்யுரைத்து அந்த யுத்தத்தையும் இரத்தத்தையும் கண்ணீரையும் சாட்சிகளாக்கி நோகாமல் ‘ஈழத்து அகதி’ என்று கள்ள ‘சேர்ட்டிபிகட்’ முடித்து இலண்டனில் அரசியல் தஞ்சம் பெற்றவரல்லவா நீங்கள்! நீங்களா எங்களைப் பார்த்து போலிகள் என்றும் இருப்புக்காக அலைபவர்களென்றும் தூற்றுவது? நீங்களா எங்களைப் பார்த்து புலி எதிர்ப்பு அரசியலால் பிழைப்பவர்கள் என்று எழுதுவது? உங்களிற்கு கடுகளவேனும் மனச்சாட்சியிருந்தால் இதற்குப் பதில் சொல்லுங்கள். எப்போதும் போலவே தொடர்ந்து விவாதிப்பேன். அந்தத் துன்பியல் அனுபவத்திற்கு நான் தயாராகவேயிருக்கிறேன்

2.

அந்தக் ‘கீற்று’க் கட்டுரையில் யமுனா அடிக்கடி ‘ராமேஸ்வரம் வன்முறை’ என்றொரு சிலேடை காட்டியிருப்பார். ஏற்கனவே இந்த இராமேஸ்வரம் பிரச்சனை குறித்து இனியொரு, தேசம், வினவு, தமிழக அரசியல், நம் தேசம் போன்ற இணையத்தளங்களும் வேறு சில சப்புச் சவர் இணையத்தளங்களும் ஏராளமாகவே எழுதியிருந்தன. மறுபிரசுரங்களும் நிகழ்ந்தன. தொடர்ந்தும் இராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்ததால் அதுகுறித்து என் தரப்பிலிருந்து எதுவும் எழுத வேண்டாம், பேச வேண்டாம் என்று எனக்குப் படப்பிடிப்புக் குழுவினர் அறிவுறுத்தியிருந்தனர். நேற்றோடு படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

சரி, இராமேஸ்வரத்தில் ‘செங்கடல்’ படப்பிடிப்பில் அப்படி என்னதான் நடந்தது? நானும் இயக்குனர் லீனா மணிமேகலையும் தொழிலாளர்களைத் தாக்கினோம், சம்பளம் கொடுக்க மறுத்தோம், நான் உதவி இயக்குனர் தீபக்கைத் தாக்கிக் கொலை செய்ய முயற்சித்தேன் என்றெல்லாம் இவர்கள் செய்திகளை வெளியிட்டார்கள். அந்தச் செய்திகளின் அடிப்படையில் கீற்றில் பா. செயப்பிரகாசமும் என்னை ‘தொழிலாளர் விரோதி’ என்று தீர்ப்பிட்டு எழுதினார். யமுனாவின் சிலேடைக்கும் அவையே ஆதாரம். இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரம் ‘தினத்தந்தி’யில் வெளியான செய்தி. ‘சதக் சதக் கத்திக்குத்து செத்த பிணம் பத்து’ என்று செய்தி வெளியிடும் பாரம்பரியம் கொண்ட தினத்தந்தியின் செய்திக் குறிப்பையெல்லாம் நம்பி நமது எழுத்தாளர்கள் மேட்டரை டெவலப் செய்திருக்கிறார்கள். அவ்வளவுக்குப் பரபரப்புக்கும் பழிதீர்க்கவும் ஆர்வம்.

சரி தினத்தந்திக்கு இந்தச் செய்தி எப்படிக் கிடைத்தது? நடந்த சம்பவத்தைப் புலனாய்வு நடத்தியா அவர்கள் எழுதிக் கிழித்தார்கள்? இராமேஸ்வரம் கீழவாசல் பொலிஸ் நியைத்தில் என் கண்முன்னாலேயே சப் இன்ஸ்பெக்டர் சிலைமணி தினத்தந்தி நிருபர் சேதுவிற்கு ‘நியூஸ்’ கொடுத்தார். அதைச் சேது ‘தினத்தந்தி’ தர்மப்படி பரபரப்பாக உப்புப் புளி சேர்த்துப் பிரசுரித்தார். அதனடிப்படையில் மற்றைய பத்திரிகைகளும் சன் டிவியும் செய்திகளைக் கொடுத்தன. தினமணியும் நக்கீரனும் சன் டிவியும் செய்தியோடு நிறுத்திக்கொண்டன. ஆனால் இனியொருவும், வினவு இணையத்தளமும் தினத்தந்தி செய்தியையே திரிக்கவும் அதனை டெவலப் செய்யவும் தயங்கவில்லை. தினத்தந்தியிலேயே இல்லாத செய்தியாக அவர்கள் என்னோடு சேர்ந்து லீனாவும் தொழிலாளர்களைத் தாக்கினார் என்றெல்லாம் எழுதினார்கள்.

தினத்தந்தி போன்ற பரபரப்புக்காக நடத்தப்படும் ஒரு வணிகப் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் விவாதிப்பதை விட்டுவிட்டு என்மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த தீபக் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள். சம்பவம் நடந்த சில நாட்களிற்குப் பின்பாக அவர் இரண்டு ஊடகங்களிற்கு விரிவான நேர்காணல்களைக் கொடுத்தார். நடந்தது குறித்து நம் தேசம் இணையத்தில் தீபக் சொல்லியிருப்பது இது:

லீனா என்னை அவர் தங்கியிருந்த இடத்திற்கு வரச் சொன்னார். அப்போது இரவு மணி 11 இருக்கும். லீனாவின் ஆட்கள் என்னை அழைத்துச் சென்றனர். அங்கே லீனாவோடு, சோபாசக்தியும் இருந்தார். எல்லாருமே குடி போதையில் இருந்தார்கள். நான் பேசுவதற்குமுன்பே, சோபாசக்தி என்னை அடிக்கத் தொடங்கிவிட்டார். லீனாவின் மேலாளர்கள் இருவரும் என் கைகளை விரித்துப் பிடித்துக் கொண்டனர். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஓரிரு நாட்கள் இடைவெளியில் தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் தீபக் சொல்லியிருப்பது இது:

“ஷோபா சக்தி. மீட்டிங் என்று ப்ரொடக்ஷன் டீம் தங்கியிருக்கும் வேர்க்கோடு மஹாலுக்குக் கூட்டிப் போனார். அங்கே லீனா மணிமேகலையின் மேனேஜர்கள் தனுஷ், வெங்கட் இருவரும் இருந்தனர். ‘பேட்டா கொடுக்கலேன்னு நீதான் அவங்கக்கிட்ட ஃபுட்டேஜைக் கொடுத்து அனுப்பிட்டியாமே?’ என்றபடியே ஷோபா சக்தியும் அவர்களும் என்னை ரூமுக்குள் போட்டு கடுமையாகத் தாக்கினர். என் தலையில் அடித்த ஷோபா சக்தி, அதோடு மர ஸ்டூலைத் தூக்கி என்னைத் தாக்க முயற்சித்தார். கூச்சல் போட்டு வெளியே ஓடிவந்த நான் அந்த நள்ளிரவிலும், லீனா தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் போய் அவரிடம் முறையிட்டேன்.

இவை தினத்தந்திச் செய்தியோ, பொலிஸ் ‘நியூஸோ’ கிடையாது. இவை தீபக்கின் நேரடியான வாக்குமூலங்கள். தீபக்கின் இரண்டு வாக்குமூலங்களிற்கும் இடையேயான முரண்களைக் கவனித்திருப்பீர்கள். தீபக் பேசுவது உண்மை கிடையாது அவர் இடத்திற்கு ஒருமாதிரிப் பேசுகிறார் என்பதில் உங்களிற்கு இனியும் சந்தேகம் இருக்காது. நடந்ததை நான் சொல்கிறேன்:

தயாராகிக்கொண்டிருக்கும் ‘செங்கடல்’ திரைப்படத்திற்கு நான் எழுத்தாளர். லீனா மணிமேகலை இயக்குனர். படத்தை முதலில் இயக்குநர் சமுத்திரக்கனி தயாரித்தார். படப்பிடிப்புத் தொடங்கிய எட்டு நாட்களிலேயே அவர் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து விலகிவிட இப்போது வேறொருவர் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுள்ளார். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பதாலும் எனக்குப் படத்தின் மீதுள்ள ஈடுபாட்டாலும் நான் இதுவரை ஊதியமே பெறாமல்தான் அந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன். தீபக் இந்தப் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். தவிரவும் அவர் ஏற்கனவே லீனா மணிமேகலையோடு ஆவணப் படங்களில் பணியாற்றியவர்.

முதற்கட்டப் படப்பிடிப்பு ஜனவரி 2ம் தேதி முடிவடைந்தது. அன்றிரவு படப்பிடிப்புக் குழுவிலுள்ளவர்களில் ஒருபகுதியினர் இராமேஸ்வரத்திலிருந்து கிளம்பத் தொடங்கிவிட்டார்கள். நான் அடுத்தநாள் சென்னை திரும்புவதாக ஏற்பாடு. 2ம் தேதி இரவு பத்தரை மணியளவில் கமெரா உதவியாளர்கள் மூவரும் இரண்டு நாட்கள் ஒளிப்பதிவு செய்த ஃபுட்டேஜ்களுடன் கமெராவை எடுத்துக்கொண்டு இராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிப் போய்விட்டதாக எனக்குச் செய்தி வந்தது. அவர்கள் இரண்டு நாட்கள் படம் பிடித்ததை எடுத்துக்கொண்டு போவது தீபக்கிற்குத் தெரியும். ஏனெனில் அன்றாடம் படம் பிடிக்கப்படும் ஃபுட்டேஜ்களைத் இரவே தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது உதவி இயக்குனர் தீபக்கின் வேலை. கடைசி இரண்டு நாட்களும் ஈழத்து அகதிகளையும் தனுஷ்கோடி மீனவர்களையும் இணைந்து நடிக்க வைத்துப் படம் பிடித்து வைத்திருந்தோம். நூற்றுக்கு மேற்பட்ட நடிகர்களும் நாற்பது பேர்கள் கொண்ட படப்பிடிப்புக் குழுவுமாகக் கடுமையாக உழைத்து எடுத்திருந்த காட்சிகள் கைவிட்டுப் போய்விட்டன என்றறிந்தவுடன் நான் அதிர்ந்துபோனேன். எப்படி இந்தத் தவறு நடந்தது, எதற்காக நடந்தது என்று எதுவுமே புரியவில்லை. படப்பிடிப்புக் குழுவினர் எல்லோரும் கலங்கிப்போனோம். ஃபுட்டேஜை எடுத்துச் செல்பவர்கள் அவற்றை அழித்தவிட்டாலோ அல்லது காட்சிகளை வெளியே கசிய விட்டாலோ என்ன செய்வது என்ற பதற்றம்வேறு தொற்றிக்கொண்டது. கமெராவை படப்பிடிப்பிற்கு வாடகைக்குத் தந்திருந்த முதலாளியின் தொலைபேசிக்குப் படப் பிடிப்புக் குழுவின் மனேஜர் போன் செய்திருக்கிறார். மறுமுனை அணைக்கப்பட்டிருந்தது.

இயக்குனர், ஒளிப்பதிவாளர், சவுண்ட் என்ஜினியர் தவிர படப்பிடிப்புக் குழுவிலுள்ள மற்றவர்கள் அனைவரும் எங்களது இராமேஸ்வர அலுவலகலத்தில் நள்ளிரவில் கூடிவிட்டோம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை தீபக் உதவி இயக்குனராக இருந்தாலும் அவர் ஒரு பயிற்சி ஒளிப்பதிவாளரும்கூட. கமெரா யூனிட்டுக்கும் இயக்குனர் யூனிட்டுக்கும் தொடர்பாளாராக அவர்தான் செயற்பட்டுக்கொண்டிருந்தார். நான் தீபக்கிடம் “இரண்டு நாட்களாகப் படம் பிடித்ததை எதற்குத் தரவிறக்கம் செய்து வைக்கவில்லை?” என்று கேட்டேன். அவர் அது தனது வேலையல்ல என்றார். “சரி போகட்டும் கமெராவோடு கிளம்பிப் போனவர்களோடு பேசி ஃபுட்டேஜ்களை உடனே திரும்பப் பெறுவதற்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களைத் தாருங்கள்” என்றேன். அந்த இலக்கங்கள் தன்னிடமில்லை என்றார் தீபக். படப் பிடிப்புக் குழுவிலுள்ள மற்றவர்களும் கேட்டுப் பார்த்தார்கள். அவர் தன்னிடம் அந்தத் தொடர்பிலக்கங்கள் இல்லையெனச் சாதித்தார். அவர் சொல்வது பொய்யென எனக்குத் தெரியும். கமெரா யூனிட் குறித்த அனைத்துத் தொடர்பு இலக்கங்களும் அவரிடமிருக்கும். அவரின் கையில் கைத்தொலைபேசி இருந்தது. எப்படியாவது ஃ புட்டேஜைக் காப்பாற்ற வேண்டுமென்ற பதற்றத்திலிருந்த நான் சடுதியாகத் தீபக்கின் முகத்தில் தாக்கிவிட்டு அவரின் கைத்தொலைபேசியைப் பிடுங்கிவிட்டேன். அதற்குப் பின்பு ஓடிப்போனவர்களோடு பேசி காலையில் ஃபுட்டேஜ் சென்னையில் திரும்பப் பெறப்பட்டது.

இரவு கமெராவைச் சென்னைக்கு எடுத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்கத் தாமதித்தால் கமெராவை படப்பிடிப்பிற்கு வாடகைக்குக் கொடுத்திருந்த முதலாளியின் உத்தரவின் பேரில்தான் அந்தக் கமெரா உதவியாளர்கள் ஃபுட்டேஜுடன் கமெராவை எடுத்துச் சென்றார்கள் என்பது எங்களுக்குப் பின்பு தெரியவந்தது. எங்கள் நூற்று நாற்பது பேர்களின் உழைப்போடு ஒரு கமெரா முதலாளி விளையாடிப் பார்த்த வேலையது. இதைத் தவிர வினவு கட்டுரையாளர் எழுதியது போலவோ இனியொரு இட்டுக்கட்டியது போலவோ இது ஊதியம் கொடுக்க மறுத்ததால் நிகழ்ந்த பிரச்சினையல்ல. பா. செயப்பிரகாசம் கற்பனை செய்வது போல இது நான் கூலி கேட்ட தொழிலாளர்களை அறையில் போட்டு அடித்ததுமல்ல. பா. செயப்பிரகாசத்தின் மொழியில் சொன்னால் நான் தாக்கியது ஒரு தொழிலாளியையல்ல. நான் தாக்கியது ஒரு கருங்காலியை. இதில் சிறப்பாக இனியொரு. கொம் “கடைசியாகக் கிடைத்த தகவலின்படி இதுவரையும் தொழிலாளர்களிற்குச் சம்பளம் வழங்கப்படவே இல்லையாம்” என்று பக்கத்திலிருந்து பார்த்தது போல எழுதியிருந்தது. நடத்துங்க ராசா!

நள்ளிரவில் நடந்த சம்பவத்திற்கு ஆற அமர ஆலோசனை செய்து இல்லாத பேட்டா, சம்பளப் பிரச்சினைகளை உருவகித்து அடுத்தநாள் மாலை 4 மணியளவில் காவல் நிலையத்தில் தீபக் என்மீது முறைப்பாடு கொடுக்க பொலிசார் என்னை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்தனர். வந்த பொலிஸாரோடு ” அரஸ்ட் வாரண்ட் இருக்கிறதா? அப்படி அழைத்துச் செல்லச் சட்டமிருக்கிறதா?” என்று இயக்குனர் வாதிட பொலிசாரோடு நடுத்தெருவில் தகராறு ஆகிப்போனாது. இராமேஸ்வரம் கீழவாசல் காவல் நிலையத்தில் தீபக்கைத் தாக்கியதாக என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி மாதம் 28ம் தேதி வழக்கு இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நான் தீபக்கைத் தாக்கியதை ஒப்புக்கொண்டேன். எனக்குத் தண்டப் பணமாக ரூபா 1700 விதிக்கப்பட்டது. இனியொரு இணையத்தளம் எழுதியது போல மேலிடத்து சிபாரிசுகளின் அடிப்படையில் நான் காப்பாற்றப்படவில்லை. எல்லாம் ‘சட்டப்படி’ தான் நடந்து முடிந்தன.

இந்த இராமேஸ்வரப் பிரச்சினையைக் கடும் ஓவராக எழுதியவர் ‘வினவு’ கட்டுரையாளர்தான். அவர் கடுமையான ஆய்வெல்லாம் நடத்தி ‘செங்கடல்’ புலிகளிற்கு எதிரான படம் என்று ஒரு ஊகத்தை வெளியிட்டார். அதே வாரத்தில் இதே பொருள்பட செங்கடல் புலி எதிர்ப்புப் படமென்று ஜுனியர் விகடனும் ஒரு செய்தியை வெளியிட்டது. வெளியே வராத ஒரு படத்தைப் பற்றி இவர்கள் எதன் அடிப்படையில் ஊகங்களைக் கொட்டுகிறார்கள்?

அதுவும் வினவு கட்டுரையாளர் ஒருபடி மேலே போய் தமிழக மீனவர்களிற்கு புலிகளால்தான் பிரச்சினை என்று நாங்கள் படமெடுக்கிறோம் என்றும் சமுத்திரக்கனி ஒரு கோடி ரூபா கொடுத்தார் என்றும் வதந்திகளை அள்ளி வீசினார். உடனே பின்னூட்டப் பகுதியில் ஒரு அறிவாளி பலபடி கீழிறங்கி ‘ஒரு ஆவணப் படத்திற்கு ஒரு கோடி ரூபா என்பது மோசடி’ என்று உளறினார். நாங்கள் எடுத்துக்கொண்டிருப்பது ஆவணப் படமா அல்லது கதைப்படமா என்று கூடத் தெரியாத நிலையில் கதையைப் பற்றியும் பட்ஜெட்டைப் பற்றியும் பேசுபவர்களை என்னவென்று அழைப்பது! அவர்களைக் கேட்டால் புரட்சியாளர்கள் என அழைக்கச் சொல்வார்கள்.

வினவு கட்டுரையாளர் ‘செங்கடல்’ குறித்து எழுதியது அவர் லீனா மணிமேகலையின் கவிதைகள் குறித்து எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதியா அல்லது ‘செங்கடல்’ குறித்த அவரது விமர்சனத்தில் லீனா மணிமேகலையின் கவிதைகள் குறித்த விமர்சனம் ஒரு பகுதியா என்பதில் ஒரு குழப்பம் இருந்தபோதிலும் அந்தக் கட்டுரை முழுவதும் வக்கிரமான ஆணாதிக்க மொழியில் எழுதப்பட்ட கட்டுரை என்பதில் ஒரு குழப்பமும் கிடையாது. அந்தக் கட்டுரை முழுவதும் வெளிப்பட்டது ஒரு கலாச்சார அடிப்படைவாதியின் குரல். லீனா மணிமேகலை மற்றும் பெண் கவிஞர்களின் உடலரசியல் குறித்த கவிதைகள் ‘சரோஜாதேவி’ வகைப்பட்ட எழுத்துகளென்றும் வெறும் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் எழுத்துகள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதைச் சொல்வதற்கு மார்க்ஸியமும் லெனினியமும் கற்ற இவரெதற்கு? இத்தகையை மதிப்பீட்டைத்தானே சில வருடங்களிற்கு முன்பு சினிமாக் கவிஞர்கள் பழனி பாரதியும் சிநேகிதனும் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமானும் வைத்தார்கள். இத்தகைய கவிதை எழுதும் பெண்களை நடுத்தெருவில் நிறுத்தி அடிக்க வேண்டும் என்றார்கள். அவர்களின் வசவுக்கும் வினவு கட்டுரையாளரின் வசவுக்கும் என்ன வித்தியாசம்? வசவுகளிலெல்லாம் புரட்சிகர வசவு எனத் தனியாக ஒரு வகை கிடையாது.

லீனாவின் ‘காதலற்ற முத்தமும் லெனினும்’ என்ற கவிதை வினவு கட்டுரையாளர் இன்னொருவரை கடுமையாகவே சினமுற வைத்திருக்கிறது. அவர் அதற்கு வினவு இணையத்தில் ஒரு வக்கிரமான எசப்பாட்டையும் பாடியிருந்தார். கவித்துவமும் வக்கிரமும் எங்கே வித்தியாசப்படுகிறது எனபதற்கு லீனாவின் கவிதையும் வினவு கட்டுரையாளரின் எசப்பாட்டுட்டும் சிறந்த எடுத்துக்காட்டுகள். லீனாவின் மொழி பாலியல் விடுதலை கோரிய மொழியென்றால் வினவு கட்டுரையாளரின் மொழி பாலியல் உறுப்புகளையும் பாலியல் செயற்பாடுகளையும் உபயோகித்து எதிராளியை வசைபாடும் மொழி.

‘காதலற்ற முத்தமும் லெனினும்’ என்ற கவிதையை அதன் சரியான வீச்சில் விளங்கிக்கொள்ள ‘ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாடு’ குறித்து முதலில் வினவு கட்டுரையாளர்களிற்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு கவிதையை வாசிப்பதற்கான தகுதி / தராதரம் என்றெல்லாம் எழுதி மிரட்டுகிறேன் என்று தயவு செய்து எண்ணிவிடக் கூடாது. கலாவின் ‘கோணேஸ்வரிகள்’ கவிதையை அதன் முழுவீச்சில் உணர்ந்துகொள்வதற்கு கோணேஸ்வரிக்கு நடந்தது என்னவென்பதைத் தெரிந்திருப்பதும் ஈழத்து அரசியல் குறித்த அடிப்படை அறிவும் அவசியமல்லவா. அதே போன்றதுதான் இதுவும்.

ருஷ்ய மார்க்ஸியரும் பெண்ணியவாதியுமான அலக்ஸ்சாந்ரா கொலொன்ராய் (1857- 1933) ‘கம்யூனிச சமூக அமைப்பில் பாலியல் என்பது ஒரு கோப்பை நீர் அருந்துவதுபோல இலகுவாயிருக்க வேண்டும்’ என்றார். இது மார்க்ஸிய விரோதக் கருத்து எனக் கடுமையாகச் சாடிய லெனின் ஒரு கோப்பை நீரில் பல இதழ்கள் வாய் வைத்துக் குடிக்கலாகாது ( The Emancipation Of Woman) என் றெழுதினார். இதுகுறித்து லெனினைக் கடுமையாக விமர்சித்து இன்னொரு மார்க்ஸியப் பெண்ணியவாதியான கிளாரா செட்கின் (Lenin on the woman’s question) குரலெழுப்பினார். இந்த நிகழ்வுகளின் பகைப்புலத்தில் எழுதப்பட்டிருக்கிறது லீனாவின் கவிதை. கவிதையின் முதல்வரியே ‘ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாட்டை லெனின் சொன்னார் ‘ என்பதாக இருக்கும். இந்தக் கவிதையைப் பொறுத்தவரை வினவு கட்டுரையாளர் இயல்பாக லெனின் மீதுதான் கோபமுற வேண்டும். ஆனால் கோபம் லெனினின் மீது கேள்வியெழுப்பியவரை நோக்கித் திரும்பியிருக்கிறது.

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பாலியல் ஒழுக்கம், சமூக கலாச்சார ஒழுங்குகள் எல்லாவற்றையும் இந்த வரட்டுச் சித்தாந்தவாதிகள் கட்டிக்கொண்டு அழப்போகிறார்கள காதல் விருப்புகளையும் இயல்பான பாலியல் வேட்கைகளையும் கட்டிப்போட்டு வைக்க இந்த உலகில் எந்தத் தத்துவம் வல்லமை பெற்றது? அலெக்ஸாந்திராவையும் கிளாரா செட்கினையும் அறியாவிட்டால் கூட “கற்பு விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததாகும். ஜீவ சுபாவங்களுக்கு இவ்விரண்டு வாரத்தைகளும் பொருத்தமற்றதேயாகும்” என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகளைக் கூட இவர்கள் அறியமாட்டார்களா?

வினவு இணையத்தளத்தில் நானும் லீனாவும் லண்டனில் கார்ல் மார்க்ஸின் கல்லறை முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருப்பார்கள். அந்தப் புகைப்படத்தைச் சற்றுப் பெரிதாக்கிப் பார்த்தால் அந்தக் கல்லறையில் கார்ல் மார்க்ஸ், ஜென்னி மட்டுமல்லாமல் ஹெலன் டெமூத்தும் புதைக்கப்பட்டிருப்பது தெரியும். ஹெலன் டெமூத்தோடு தனக்கிருந்த காதலையோ தன்மூலம் ஹெலன் டெமூத்துக்குப் பிறந்த குழந்தையையோ கார்ல் மார்க்ஸ் அவர் மரணிக்கும்வரை வரை ஒப்புக்கொள்ளவேயில்லை. நீண்ட காலத்திற்கு அது ஏங்கெல்ஸ் உட்பட வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிருந்தது. ஹெலன் டெமூத் மரணித்த பின்புதான் அவருக்கு கார்ல் மார்க்ஸின் காதலியென்ற ‘அங்கீகாரம்’ கிடைக்கப்பெற்று அவர் மார்க்ஸின் கல்லறையிலேயே புதைக்கப்பட்டடார். வினவு கட்டுரையாளரே நீங்கள் கார்ல் மார்க்ஸை எவ்வாறு மதிப்பிடுவீர்கள்? பாலியல் ஒழுக்கத்தை மீறிய சீரழிவுவாதி என்பீர்களா? அல்லது கார்ல் மார்க்ஸ் மீது வசவு சொல்லி ஒரு எசப்பாட்டுப் பாடுவீர்களா? இல்லைப் போரூர் ஏரியில் தள்ளிக் கொல்வீர்களா? என்னைப் பொறுத்தவரை கேடுகெட்ட சமூக ஒழுங்குகளிற்கும் மரபுகளிற்கும் – ஒருவேளை கட்சியின் விதிகளிற்கும் – கட்டுப்பட்டுத் தன் காதலை மறைத்து வைத்து மருகிக்கொண்டிருந்த பரிதாபத்திற்குரியவராகத்தான் இந்த விடயத்தில் கார்ல் மார்க்ஸை மதிப்பிட முடியும். மார்க்ஸை விட ஆயிரம்மடங்கு பரிதாபத்திற்குரியவர் சமூக ஒழுக்கங்களின் பெயரால் மார்க்ஸால் வஞ்சிக்கப்பட்ட ஹெலன் டெமூத்.

பெண்கள் மீது திணிக்கப்பட்ட மதம் சார்ந்த ஒழுக்கங்களையும் ஆணாதிக்கக் கலாச்சார அடிப்படை வாதத்தையும் பாலியல் சுதந்திரமின்மையும் தன் எழுத்துகள் மூலம் பெண் கேள்விக்குள்ளாக்கினால் உங்களால் பொறுக்க முடிவதில்லை. மலினமான பாலியல் எழுத்து, விபச்சாரம் அது இதுவென்று எழுதுகிறீர்கள். அதைத் தொட்டு அவர்களின் அந்தரங்கமான குடும்ப வெளிகளிற்குள்ளும் நுழைந்து பழிப்புக் காட்டுகிறீர்கள். பெண் கவிஞர்களின் படுக்கையறைகளிற்குள் கமெரா பொருத்தும் அதிகாரம் உங்கள் வசம் வந்தால் நீங்கள் அதையும் செய்வீர்கள் என்பற்கான தடயம் மட்டுமே உங்களது அந்த விமர்சனப் பிரதியில் எஞ்சிக் கிடக்கிறது. தோழர்களே! ‘காடு விளஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும் தானே மிச்சம்’ என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளைக் கவிதை கடந்து செல்லாதென்றா கருதுகின்றீர்கள்? ‘மயிர்கள் சிரைக்கப்படாத என் நிர்வாணம் /அழிக்கப்படாத காடுகளைப் போல் / கம்பீரம் வீசுகிறது’ என்பது சுகிர்தராணியின் வரிகள்.

வினவு கட்டுரையாளரே! ‘செங்கடல்’ குறித்து நீங்கள் எழுதியுள்ளவற்றில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்ளேன். சம்பவம் நடந்த இடத்திலேயே இல்லாத லீனாவை அவரும் சேர்ந்து தொழிலாளர்களைத் தாக்கினார் என்று எழுதினீர்கள். படத்திற்காக அவர் சமுத்திரக்கனியிடம் கோடி ரூபா பெற்று ஆட்டையைப் போட்டார் என்று கிசுகிசு எழுதினீர்கள். பேட்டா, ஊதியப் பிரச்சினை என்று இல்லாதவற்றை எழுதி அவதூறு செய்தீர்கள். தமிழக மீனவர்களிற்குப் புலிகளால்தான் பிரச்சினை என்ற அடிப்படையில் ‘செங்கடல்’ எடுக்கப்பட்டு வருகிறது எனக் கலப்பில்லாத முழு வதந்தியைப் பரப்பினீர்கள். யமுனா ராஜந்திரன் போன்றவர்களுக்குத்தான் அவதூறு அரசியல் பிழைப்பென்றால் உங்களுக்கும் அதுவா பிழைப்பு? நீங்கள் பரப்பிய இத்தகைய அவதூறுகள் குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்? திணைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் என்பது வள்ளுவனின் வாக்கு. இந்தக் குறள் உறைக்க வேண்டும் உங்களிற்கு.

செலாவணி கட்டுப்பாட்டை ரவி கருணாநாயக்க மீறினார் – பிரதி செலாவணி கட்டுப்பாட்டாளர் நீதிமன்றில் தெரிவிப்பு

ravi.jpgஅமெரிக்க நெக்ஸியா நிறுவனத்திடமிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட கணக்குக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்ததாக பிரதி அந்நிய செலாவணி கட்டுப்பாட்டாளர் சிசிரகுமார பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் தீபானி விஜேசுந்தர முன்னிலையில் சாட்சியம் அளித்தபோதே பிரதி அந்நிய செலாவணி கட்டுப்பாட்டாளர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான ஏழு கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு தான் ரவி கருணாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

கருணாநாயக்கவும் மற்றும் இருவரும் தங்களிடம் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்திருந்தனர்.  இது அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு விதிகளை மீறும் செயலாகும்.  இந்த அளவு அந்நிய செலாவணியை ஒருவர் வைத்திருக்க வேண்டுமாயின் அதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பிட்ட இந்த வெளிநாட்டு பணம் யூனியன் வங்கியில் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தப்படவிருந்ததாக பிரதி அந்திய செலாவணி கட்டுப்பாட்டாளர் நீதிமன்றத்தில் மேலும் கூறினார்.

சிரேஷ்ட அரச சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்தபோது, இரண்டாவது குற்றவாளியாக இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள லின்டன் பியசேனவின் வாக்கு மூலத்தின்படி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்க இந்த கொடுக்கல் வாங்கல் பற்றி நன்கு தெரிந்திருந்தார் என்று பிரதி கட்டுப்பாட்டாளர் கூறினார்.

அத்துடன் வேரகல என்ற மற்றொருவரின் வாக்குமூலத்தின்படி அமெரிக்க நிறுவனமொன்றுக்கு ஊடாக யூனியன் வங்கியின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ரவி கருணாநாயக்க அமெரிக்காவில் இருந்த இலங்கை வர்த்தகரான ராஜ் ராஜரட்னத்துடன் ஏற்பாடுகளை செய்திருந்ததாகவும் பிரதி கட்டுப்பாட்டாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் முடிவடையும் வரையில் காத்திராது அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்: ரணில்

ranil.jpgஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடையும் வரையில் காத்திருக்காமல் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.  தேர்தலின் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 ஆக குறைக்க முடியுமாயின், தேர்தல் வரையில் காத்திராது அமைச்சர்களின் எண்ணிக்கையை தற்போதே குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.