March

March

அவசரகால சட்ட நீடிப்பு விவாதம் 9ம் திகதி – பாராளுமன்றம் வரும் எம்.பிக்கள் கோரினால் போதிய பாதுகாப்பு

parliament.jpgஅவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடும் போது சபைக்கு வரும் எம்.பி க்கள் கோரினால் உரிய பாதுகாப்பினை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ் வாறு தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் :-

கடந்த மாதம் 5ம் திகதி அவசர காலசட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 8ம் திகதிவரை இதனை நீடிக்க வேண்டியுள்ளதால் பாராளுமன்ற நியதிகளின் படி பாராளுமன்றம் கூட்டப்பட்டு உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கென பாராளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

இதற்கிணங்கவே எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன் போது பாராளுமன்றத்திற்கு வருகை தரும் முன்னாள் எம்.பிக்கள் தமக்கான பாதுகாப்பைக் கோரினால் அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கல்வியியற் கல்லூரி வினாத்தாள் திருட்டு விவகாரம்; பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டதால் ஒரு கோடியே 25 இலட்சம் நஷ்டம்

teacher.jpg“ஆசிரியர் பயிலுனர்களுக்கான இறுதிப் பரீட்சையை மீண்டும் நடத்தும் போது, அரசுக்கு ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் செலவு ஏற்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரிய பயிலுனர் மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை ரத்துச் செய்யப்பட்டது தொடர்பாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், ரத்துச் செய்யப்பட்ட பரீட்சைக்கு அரசு ஒரு கோடியே பதினெட்டு இலட்சம் ரூபாவினை செலவி செய்திருக்கின்றது.  பரீட்சை வினாத்தாள் களவென்பது அரச சொத்து களவாடப்பட்டதற்கு சமமாகும். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கூடிய பட்ச தண்டனை வழங்கப்பட்டேயாக வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே, நான் இருந்து வருகின்றேன்.

இப்பரீட்சை இனி எப்போது நடைபெறுமென்று உறுதியாகக் கூறமுடியாது” என்றார். பொல்கலை, பிந்துனுவெவ கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரிய பயிலுனர் மாணவர்களது இறுதிப் பரீட்சையின் போதே வினாத்தாள் களவு ஏற்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக, பண்டாரவளைப் பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரையடுத்தே, 33 ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதும், அவர்களை நீதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். பண்டாரவளையின் பிந்துனுவெவ ஆசிரியர் பயிற்சி கல்வியியல் கல்லூரி பீடாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் புகுந்த ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடனான மூன்று வினாத்தாள்களைத் திருடியது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே 33 பயிலுனர் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன் இறுதிப் பரீட்சையும் காலவரையறை இன்றி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

தனுன தலைமறைவு : ஹஷான் வீட்டில் தேடுதல்

hashan.gifபாதுகாப்புத் தரப்பினரால் தேடப்பட்டுவரும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலக்கரத்னவைத் தேடி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலக்கரத்னவின் வீட்டுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்றுள்ளனர்.

தனுனவின் தலைமறைவு குறித்து ஹஷானிடம் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 

சிலி பூகம்பத்தின் விபரீதம்: நாளின் நேரம் குறைகிறது

chilee_earthquake.jpgசிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்ஸ்டர் அளவு பூமி அதிர்ச்சி காரணமாக பூமியில் நாளின் நேரம் 1.26 மைக்ரோ செகண்ட் அளவுக்கு குறையலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.

சிலி நாட்டு பூகம்பம் காரண மாக ஏற்பட்ட அதிர்ச்சியால் பூமி யின் அச்சு 8 சென்டிமீட்டர் அல்லது 3 அங்குலத்துக்கு விலகி இருக்கலாம் என்றும், இதன் காரணமாக பூமியில் ஒரு நாளின் நேரம் 1. 26 மைக்ரோ செகண்ட் வரை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் பி. முத்தையா காலமானார்

muhtaiya.jpgடெயிலி நியூஸ் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவரும் நாற்பது ஆண்டுகாலம் ஊடகத்துறை அனுபவத்தைக் கொண்டவருமான பி. முத்தையா நேற்று (03) காலமானார். நேற்று முன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்ற அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 62.

மலையகத்தின் வட்டவளையில் 1948ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி பிறந்த முத்தையா, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் 42 ஆண்டுகளாகப் பணிபுரிந்த அவர், 1967ஆம் ஆண்டு “செய்தி” பத்திரிகை வாயிலாக ஊடகத்துறை வாழ்வை ஆரம்பித்தார். 1975ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சோவியத் யூனியன் தூதரகத்தின் தகவல் பிரிவில் மொழி பெயர்ப்பாளராகச் சேர்ந்து பதினான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர் ரூபவாஹினியின் (ஏசியா விஷன்) பிரிவில் ஆங்கிலப் பிரதி எழுதுநராகப் பணியாற்றியதுடன் செய்திப் பிரிவிலும் கடமையாற்றினார். 1989ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பின்னர் செய்தி ஆசிரியரானார். செய்தித்துறையின் உதவிப் பணிப்பாளராகவும் வானொலி மஞ்சரி ஆசிரியராகவும் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் பிரத்தியேகச் செயலாளராகவும் ஒரே சமயத்தில் பணியாற்றினார்.

தினகரன், வீரகேசரி பத்திரிகைகளில் 1967ஆம் ஆண்டு முதல் எழுதிவந்த முத்தையா, வெளிநாட்டுச் செய்தி விமர்சனக் கட்டுரைகளையும் மரணிக்கும் வரை எழுதிவந்தார். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஓய்வு பெற்றபின்னர் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சண்டே ஒப்சேவர் ஆங்கில வார இதழின் பிரதி செய்தி ஆசிரியராகப் பணியாற்றியதுடன் இறக்கும்வரை டெயிலி நியூஸ் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டிகளில் ஆங்கில மொழியில் எழுதி முதற்பரிசைப் பெற்றிருக்கிறார். இவரின் வானொலி பங்களிப்புக்காக அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்தாபீடம் கலைமணி விருது வழங்கி கெளரவித்தது. தவிரவும், மத்திய, ஊவா சாகித்திய விழாக்களில் பாராட்டப்பட்ட முத்தையா, கடந்த வருடம் நடந்த மேல் மாகாண தமிழ் சாகித்திய விழாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

அமரர் முத்தையாவின் பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30 இற்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

13 இலங்கையர்களுடன் சவூதி கப்பல் கடத்தல் – ஏடன் வளைகுடாவில் சம்பவம்

பதின்மூன்று இலங்கையர்களுடன் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான கப்பல் சோமாலிய கடற் கொள்ளை யர்களினால் நேற்று கடத்தப்பட்டுள் ளது.

‘எம்.டி. அல் நிஸார் அல் சவுதி’ என்ற கப்பல் 5, 136 மெற்றிக் தொன் பொருட்களை எடுத்துச் செல்லும் போதே கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருப்பதாக ஏ.எப்.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் ஜப்பானிலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவை நோக் கிச் செல்லும் வழியில் ஏடன் வளை குடாவில் வைத்தே சோமாலியர் களால் கடத்தப்பட்டுள்ளது. கப்பல் கடத்தப்படும்வேளை அதில் பதின் னான்கு பேர் இருந்துள்ளனர். கிரேக்க கப்டனைத் தவிர்ந்த ஏனைய 13 பேரும் இலங்கையர்களென கிழக்கு ஆபிரிக்காவில் கடல் விவகாரங்களுக்கான உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவர் என்ட்ரூவ் முவன்குர ஏ. எப். பிக்கு தெரிவித்துள்ளார்.

இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் கப்பல் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைப் பிரிவின் பேச்சாளர் ஜோன் ஹார்பர் என்பவரும் உறுதிப் படுத்தியுள்ளார்.

நளினி வழக்குத் தொடர்பில் தமிழக அரசுக்கு இனியும் அவகாசம் இல்லை: மேன்நீதிமன்றம்

nalini_.jpgதன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்குத் தொடர்பில் வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசுக்கு மேற்கொண்டு அவகாசம் வழங்கப்பட மாட்டாது என சென்னை மேன்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பதால், முன்கூட்டி விடுதலை செய்ய அரசிடம் நளினி கோரினார்.

அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மேன்நீதிமன்றில் நளினி மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த மேன்நீதிமன்றம், முன்கூட்டி விடுதலை செய்ய கோருபவரின் மனுவை பரிசீலிக்க சட்டப்படி ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தர விட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, மேன் நீதிமன்றில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.  இதற்கிடையில், முறைப்படி ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், நளினி மற்றும் சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுக்கள் மேன்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. ஆலோசனைக் குழுவின் அறிக்கை அரசுக்கு இன்னும் வரவில்லை என, நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணை அவ்வப்போது தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆலோசனைக் குழுவின் அறிக்கை இதுவரையில் வரவில்லை, என்பதால் இன்னும் அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையை 10ஆம் திகதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மேற்கொண்டு விசாரணையை தள்ளிவைக்க முடியாது என தெரிவித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் விஞ்ஞாபனம்

பாராளுமன்றத் தேர்தல் – 08.04. 2010

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் அரை நூற்றாண்டுக்கு மேலாக அனுபவித்து வரும் துன்பங்களுக்கு இதுவரை நிரந்தரத் தீர்வோ அல்லது, தற்காலிக நிவாரணமோ கிட்டவில்லை. இதற்காக காலத்திற்குக் காலம் நற்சிந்தனையுள்ள தலைவர்கள் நியாயபூர்வமாக மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து சில கடும் போக்காளர்களினால் முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தன. இவற்றைக் கவனத்திற் கொண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி அதன் அடிப்படைக் கொள்கையில் பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக விவேகமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்மையில் யுத்தம் உட்பட நடந்தேறிய பல சம்பவங்கள் சிறுபான்மையினரின் மனிதாபிமான பிரச்சினைகள் மேலும் அதிகரித்துள்ளமையால் அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு ஒரே விதமான சிந்தனை கொண்ட கட்சிகளினதும், மக்களினதும் பொறுப்பு என தமிழர் விடுதலைக்கூட்டணி உணர்கின்றது.

பல்வேறு திசைகளில் இருந்து கடந்த காலங்களில் நாட்டை குட்டிச்சுவராக்க கங்கணம் கட்டி நிற்கின்ற சில கடும் போக்காளர்கள் உட்பட, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் திடீரென தம்மை வெளிக்காட்டிக் கொண்டு, நாட்டின் நிலமையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை வெளியிடுவதிலும், அறிக்கைகளை விடுவதிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. இதற்கு சில உள்நோக்கங்கள் இருக்கின்றமையை தெளிவாக உணர முடிகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெளிப்படையான கருத்து, சகலருக்கும் மனத்திருப்தியை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கி, சிறியவன், பெரியவன் என்ற பேதமின்றி அனைவரும் சமஉரிமையுடன் வாழ வேண்டும் என்பதே!

நம் நாட்டில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்தும் எம் அனைவரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்துள்ளன. பல்லாயிரக்கணக்கான உயிர்கள், பல கோடி ரூபா பெறுமதியான தனியார், அரச உடமைகள் என்பன அண்மையில் நடந்து முடிந்த யுத்தத்தில் இழக்கப்பட்டுள்ளன. கற்பனைக் கெட்டாத பெருந்தொகையான பணம் யுத்தத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. பல கோடி ரூபா செலவிலான இராணுவ முகாம்கள், தளபாடங்கள் மற்றும், படையினருக்கு ஏற்படுகின்ற செலவுகள் அத்தனையும் நம் அனைவருக்கும் நல்லதொரு பாடத்தை போதித்துள்ளது. இத்தகையதொரு நிலமை மீண்டுமொரு தடவை ஏற்படக்கூடாது. ஏற்பட விடவும் கூடாது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, சோல்பரி அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இனத்திற்கு ஒரேயொரு பாதுகாப்பாக இருந்த 29வது சரத்திற்கு ஏற்பட்ட கதியை நன்கு அறிந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஒற்றை ஆட்சி அமைப்பின் கீழ் ஏற்பட்டு, அத்தீர்வு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் மீள் பரிசீலிக்க நேர்ந்தால் இதுவரை காலமும் பல உயிரிழப்புகளுக்கும் சொத்தழிவுகளுக்கும் மத்தியில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அத்தனையும் பாழாகிவிடும். கடந்த ஐந்து ஆண்டு காலமாக சமஷ்டி அமைப்பின் கீழ் ஒரு தீர்வை அடைய பெருமுயற்சி எடுத்திருந்தும், அதற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வொன்றை ஏற்க தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருந்தது. ஓற்றையாட்சி அமைப்பின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வொன்றை ஒரு போதும் அடைய முடியாதென தமிழர் விடுதலைக்கூட்டணி முழுமையாக நம்புவதால் முற்று முழுதாக ஒற்றையாட்சி முறைமையை கூட்டணி நிராகரிக்கின்றது. வடக்கு கிழக்கு இணைப்பால் இந்நாட்டிற்கும் அன்றி, அப்பகுதியில் வாழும் எந்த இனத்திற்கும் எதுவித பாதிப்பும் ஏற்படாது. மாறாக, பல்லின மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் சமாதானத்தையும் வளர்க்க அது உதவுவதாக அமையும் என்பதையும், அம்முயற்சிக்கு அப்பகுதியில் வாழும் பல்லின மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதையும் கூட்டணி பூரணமாக நம்புகின்றது. அத்தோடு அரசின் திட்டமிட்ட குடியேற்றம் இன ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதிலாக வேற்றுமையையே வளர்க்கும் என்பதால், இம்மூன்று விடயங்களிலும் மாற்ற முடியாத ஒரே நிலைப்பாட்டை தமிழர் விடுதலைக் கூட்டணி கொண்டுள்ளது.

பின்வரும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இக்கட்டான நிலையில் தள்ளப்பட்டுள்ள இந்த நாட்டை மீட்டெடுத்து இனங்களுக்கிடையே வலுவான ஒரு உறவுப்பிணைப்பை ஏற்படுத்தி சுபீட்சமான வாழ்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி உண்மையாகவும் மிக உறுதியாகவும் நம்புகிறது. அவ்விடயங்கள் தொடர்பாக கூட்டணி அரசாங்கத்தோடு விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்.

1. இடம்பெயர்ந்த மக்களை- வடக்கு கிழக்குத் தமிழர், இந்திய வம்சாவளித்தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி எந்த இனத்தவராகிலும் அவர்கள் முன்னர் வாழ்ந்த அவர்களின் சொந்த இடங்களிலேயே குடியமர்த்த தமிழர் விடுதலைக்கூட்டணி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்.

2. இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட உயிழப்பு, உறுப்பிழப்பு, சொத்து சேதம் என்பவற்றிற்கும் இன, மத, சமூக பேதமின்றி முழு அளவிலான இழப்பீடு வழங்கப்பட அரசிற்கு வலுவான அழுத்தத்தை கூட்டணி கொடுக்கும். அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமரும் பகுதிகளில் அவர்களுக்கான போக்குவரத்து மற்றும், மருத்துவ சுகாதார வசதிகள் விரிவு படுத்தப்பட அரசை வலியுறுத்தும்.

3. யுத்தம் ஆரம்பித்த பின்னர் வன்னிப்பகுதியில் உயிழந்தும், காணாமல் போயுமுள்ள குடிமக்களின் பெயர், முகவரி போன்ற விபரங்களைத் திரட்ட நடவடிக்கை எடுக்க அரசிற்கு அழுத்தம் கொடுத்து அதற்கான ஒத்துழைப்பையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வழங்கும்.

4. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிச் சிறுவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தி புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அச்சிறுவர்கள் அவரவர் பெற்றோர்களிடம் உடன் கையளிக்கப்பட வேண்டும். அவர்களில் சிலர் தாமாக விரும்பி புலிகள் இயக்கத்தில் இணைந்திருக்கலாம். ஆனால், ஏனைய அனைவரும் பலாத்காரமாக இணைக்கப்பட்டவர்களாவர். இப்போது இச்சிறுவர்களுக்கு அவசியமாகத் தேவைப்படுவது பெற்றோரின் அன்பும் அரவணைப்புமாகும். இந்த அப்பாவிப் பிள்ளைகளை பெற்றோரிடம் கையளிப்பின் அவர்களுக்கு எத்தகைய கல்வியை ஊட்ட வேண்டும் என்பதை பெற்றோர்களே தீர்மானிப்பர் என்பதை, அரசிற்கு எடுத்துக்கூறி அதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும்.

5. வடக்கில் ஆட்கடத்தல், கொலைகள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கு மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வடக்கிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, காணாமல் போனோரைக் கண்டுபிடிக்க தமிழர் விடுதலைக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

6. தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு, அங்குள்ள வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட அரசை வற்புறுத்துவோம். உரியவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் தனியார் விடுகள் மற்றும், கட்டடங்கள் உடனடியாக உரியவர்களிடமோ, அல்லது அவர்களின் வாரிசுகளிடமோ ஒப்படைக்கப்பட தமிழர் விடுதலைக்கூட்டணி அரசை வற்புறுத்தும்.

7. சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு கிழக்கு பகுதிகளில் அப்பாவி மக்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவு தங்கம் பின்னர் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற உறுதியோடு பெறப்பட்டது. ஒரு சிலருக்கு தங்கம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. பலருக்கு கொடுக்கப்பட வில்லை. இது தவிர மக்கள் தங்கள் தங்க நகைகளை புலிகளின் வங்கிகளில் ஈடு வைத்திருந்தனர். அத்துடன் தங்கள் பணத்தையும் அவ்வங்கிகளில் வைப்புச் செய்திருந்தனர். வன்னியில் மீட்கப்பட்ட தங்கமும் பணமும் உரிய மக்களுக்கே சொந்தமானவை. ஆகவே அங்கு மீட்கப்பட்ட நகைகளும் பணமும் உரிமை கோருபவர்களுக்கு வழங்கப்பட தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வற்புறுத்தும்.

8. உயர் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்று யுத்தம் காரணமாகவும், பலவந்தமாக பிடிக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளவுமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, கல்வியைத் தொடர முடியாமல் பலர் இருப்பதால் அவர்கள் கல்வியைப் பெறவும், வன்னிப்பகுதிக்கென பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அங்கு விவசாயம், கலைப்பிரிவு போன்ற துறைகளை இயங்க வைக்கவும் தமிழர் விடுதலைக்கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

9. வன்னி வர்த்தகர்களில் பலர் அனைத்து சொத்துக்களையும் இழந்துள்ளனர் என்பதால் இடம்பெயர்வதற்கு முன் அவர்கள் பெற்றிருந்த உரிமைகளான- ஏகவிநியோக உரிமை, உத்தரவு பெற்ற வர்த்தக உரிமை, எரிபொருள் நிலையம் நடத்தும் உரிமை போன்றவற்றை வழங்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வலியுறுத்தும்.

10. இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்தும் போது, இரு விசேட பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். முதலாவதாக 1992ஆம் ஆண்டு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நலன்கள் பேணப்பட வேண்டும்.
இரண்டாவது- 1958 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்தும், நாட்டின் பல வேறு பகுதிகளிலிருந்தும் வவுனியா, கிளிநொச்சி , முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் குடியேறிய மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கூட்டணி இவ்விரண்டு விடயங்கள் குறித்தும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.

11. கணவன் தடுப்பு முகாம்களிலும், மனைவி மக்கள் வீடுகளிலும் என ஆதரவற்ற நிலையில் வாழும் குடும்பங்களை ஒன்று சேர்த்து வைக்க தமிழர் விடுதலைக்கூட்டணி நடவடிக்கை எடுக்கும். அத்துடன் ஊனமுற்றோர், உடலில் துப்பாக்கி ரவைகள், குண்டுச்சிதறல்கள் தைக்கப்பட்டு உடல் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட அரசாங்கத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தும். உடல் ஊனமுற்று இயங்க முடியாமலுள்ளவர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருப்பது வேதனைக்குரியதாகும், இது நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயம் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசிற்கு உணர்த்துகிறது.

12. வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகளை புனரமைத்து மீள இயங்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழர் விடுதலைக்கூட்டணி மேற்கொள்ளுவதோடு, அரசுத்துறைகளிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலும் இதுவரை இழந்தவற்றை சீர்செய்து, கணிசமான பங்கினை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வழங்க அரசை வற்புறுத்தும்.

13. வடக்கில் மூன்றில் இரண்டு பகுதி கடலால் சூழப்பட்ட பகுதியாகும் கடற்றொழில் எமது மக்களின் பாரிய தொழில் வளமாகவுள்ளது. தற்போது கடற்றொழிலாளர்கள் தங்கள் தொழிலில் எதிர்நோக்கும் சிக்கல்களை அரசாங்கத்திடம் விளக்கி கடற்றொழிலாளர்களுக்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும். விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி, விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் சிக்கல்களையும், சவால்களையும் நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை கூட்டணி மேற்கொள்ளும்.

14. வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் தன்னிச்சையாக ஒரு சிலரின் விருப்பத்திற்கு இணங்கச் செயற்படுத்தாமல் சம்பந்தப்பட்ட பிரதேச மக்கள், அரச அதிகாரிகள், நன்கொடை வழங்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆகியோரின் ஆலோசனைகளையும் பங்களிப்புகளையும் பெற்று செயற்படுத்த வேண்டும். அவ்வாறில்லாவிடில், உண்மையான அபிவிருத்திப் பணிகளை அரசினால் தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகின்றது.

15. போர்ச் சூழலாலும், பொருளாதார நிலைமைகளாலும் வழிதவறிப்போன இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்தும் செயற்திட்டங்களையும் கூட்டணி மேற்கொள்ளும்.

16. மனிதஉரிமை விதிமுறைகளை மீறுவோருக்கு கடும் தண்டனை வழங்க வலுவுள்ள ஓர் அடிப்படை சாசனம் சட்டமாக்கப்பட தமிழர் விடுதலைக்கூட்டணி முயற்சி எடுக்கும்.

17. யுத்தம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட கல்வித்தரத்தனை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், அதே போல் விளையாட்டுத்துறைகளை உயர்த்த சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் கூட்டணி முயற்சியெடுக்கும்.

18. புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு உள்ளுரில் உறவுகள் சொத்துக்கள் போன்ற பல்வேறு தொடர்புகள் இருப்பதால் அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு வந்து செல்லவும், மீளக்குடியேறவும் வழிவகை செய்ய கூட்டணி பாடுபடும்.

தமிழ் பேசும் மக்களின் எதிர்கால நலன்களில் இதயபூர்வமான, உள்ளார்ந்த அக்கறை கொண்டுள்ள முதிர்ந்த அரசியல் கட்சி என்பதாலும், சொந்த நலன்களை ஈட்டுவதற்காக அரசியல் நடத்துபவர்கள் அல்லர் என்பதாலும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக மிளிர்வதாலும் தமிழ் மக்களுக்கு கௌரவத்துடன் கூடிய சமாதானத் தீர்வும், ஏனைய மக்கள் சகலருக்கும் நீதி,நியாயமும் விரைவில் கிடைக்கின்ற சூழ்நிலை உதயமாவதற்கும் தமிழர் விடுதலைக்கூட்டணி தம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன்போல தொடர்ந்து மேற்கொள்ளும். எனவே, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் – 01 : ஏப்ரல் 8ல் நடைபெறப் போவது விகிதாசார முறையின் இறுதித் தேர்தலா? – புன்னியாமீன்

srilanka_parliament_02.jpgஇலங்கையில் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சி வெற்றி பெறுமிடத்து, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையினை முதலில் மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், விகிதாசார முறையின் கீழ் இலங்கையில் நடைபெறும் இறுதித் தேர்தலாக இது அமையுமா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

விகிதாசார தேர்தல் முறை அமுலில் உள்ள இக்காலகட்டத்தில் இம்முறையின் கீழ் சிறுபான்மை சமூகத்தினரின் பாராளுமன்ற உறுப்புரிமை அதிகரித்திருப்பதைப் போல பழையபடி பெரும்பான்மை முறையை அல்லது பெரும்பான்மை முறையையும்,  விகிதாசாரமுறையையும் இணைத்த ஒரு புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படுமிடத்து சிறுபான்மையினரினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவம்,  பெருமளவிற்கு பாதிப்படையலாம், என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவு இல்லாமலே,  ஜனாதிபதி வெற்றி பெற்றதினால் பெரும்பான்மை சமூகத்தினரைக் கொண்டே ஆட்சி,  அதிகாரங்களைக் கைப்பற்றலாம் என்ற புதிய நிலையொன்று தோன்றியுள்ள இந்நிலையில், விகிதாசாரத் தேர்தல் முறை பற்றி முன்வைக்கப்படும் வாதப்பிரதி வாதங்கள் அழுத்தமாக சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும்.

2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன்,  தொடர்புபடுத்தி இப்பாராளுமன்றத் தேர்தலை அணுகுமிடத்து,  சுமார் 140 ஆசனங்களுக்கு மேல் ஆளுங்கட்சியால் வெற்றி பெறக்கூடிய நிகழ்தகவு உண்டு. எனவே ஆளுங்கட்சியினரின் மூன்றில் இரண்டு என்ற இலக்கு சாத்தியப்பாடுமிக்கதல்ல என்று உதாசினப்படுத்த முடியாது. அவ்வாறு மூன்றில் இரண்டு பாராளுமன்றப்பலம் கிடைக்குமிடத்து விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அவ்வாறானதொரு நிலை ஏற்படுமிடத்து, ஆளும் கட்சியைச் சார்ந்த,  சிறுபான்மை சமூக பிரதிநிதிகளும் நிச்சயமாக ஆதரவு வழங்குவார்கள் என்பது மறுப்பதற்கு இயலாது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இலங்கையில் தேர்தல் முறைகள் பற்றி சற்று விரிவாக ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் என்றால் என்ன?
நவீன உலகில்,  ஜனநாயக ஆட்சி நிலவும் நாடுகளில்,  மக்கள் தம்பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்காக பெற்றுக் கொள்ளும் உரிமையே ஜனநாயக உரிமையாகக் கொள்ளப்படுகின்றது. இன்றைய உலகில் பெரும்பான்மையான நாடுகளில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக யாப்புகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

1. பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறை.
2. விகிதாசார பிரதிநிதித்துவமுறை என்பவையே அவை.

1910ம் ஆண்டில் குருமெக்கலம் அரசியலமைப்பின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 1977ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாரளுமன்றப் பொதுத்தேர்தல் வரை இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும்,  பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ முறைக்கமையவே நடைபெற்றன. (தேர்தல்) தொகுதிவாரியாக,  மக்கள் தம் பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிந்து கொள்வர். ஒரு தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இம்முறையே பெரும்பான்மைத் தேர்தல் முறை எனப்படும்.

உதாரணமாக : X எனும் தேர்தல்; தொகுதியில்  போட்டியிட்ட A,B,C,D என்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு அமைந்தன எனக் கொள்வோம்.

A = 15,833
B = 12,217
C  = 2,893
D  = 518
இம்முடிவின்படி ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற A என்பவர் X தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இவர் பெற்ற மேலதிக வாக்குகள் 3616 ஆகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன?
1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு (இலங்கையின் 8வது அரசியலமைப்பு) அமுல்படுத்தப்பட்டதையடுத்து இலங்கையில் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகமானது. 1850களில் டியுனிஸ் அரசியல்வாதியான ஸி.ஸி.ஜி. அந்திரேயும், பிரித்தானியாவைச் சேர்ந்த பாரிஸ்டர் தோமஸ் குரேயும் விகிதாசாரத் தேர்தல் முறையினை அறிமுகப்படுத்திய போதிலும் கூட, உலகளாவிய ரீதியில் இத்தேர்தல் முறை பிரபல்யம் அடையக் காரணமாக இருந்தவர் “ஜோன் ஸ்டுவார்ட் மில்” என்பவராவார்.

விகிதாசாரத் தேர்தல் முறை எனும் போது ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்தவ) தேர்தல் தொகுதியில் (அல்லது ஒரு தேர்தல் மாவட்டத்தில்) வேட்பாளருக்கு அல்லது பல வேட்பாளர்களை உள்ளடக்கிய (பட்டியல்) ஒரு குழுவிற்கோ அல்லது கட்சிக்கோ அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களை ஒதுக்கும் உபாயங்களைக் கொண்ட வாக்களிக்கும் முறையே விகிதாசார முறை எனப்படும்.

இந்த விகிதாசார முறையானது இரண்டு பிரதான மாதிரிகளைக் கொண்டதாகும். அவை:

1. தனிமாற்று வாக்குரிமை
2. பட்டியல் முறை
தனிமாற்று வாக்குரிமையின் கீழ் இலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் நடைபெறும். இத்தகையத் தேர்தல் 1982,1988,  1994,  1999, 2005,  2010ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டியல் முறையின் கீழ் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மாகாண சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், உள்ளுராட்சி சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் (மாநகர, நகரசபை, பிரதேச சபை) என்பன நடைபெறும். இம்முறைக்கமைய 1989,  1994,  2000,  2002, 2004ம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே இத்தேர்தல் நடைமுறைகளை அவதானிக்கும் போது சிறுபான்மை இனத்திற்கு எத்தேர்தல் முறை நன்மை பயக்கும் என்பதை இனங் காட்டக்கூடியதாக இருக்கும்.

எனவே பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, 1972ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரும்பான்மைத் தேர்தல் முறைமையும், 1978ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் விகிதாசாரத் தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராய பின்வரும் தலைப்புக்களின் கீழ் நோக்குதல் பொருத்தமானதாக அமையும்.

1. தேர்தல் தொகுதிகள் பிரிக்கும் முறை.
2. நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் முறை.
3. வாக்களிக்கும் முறை.
4. ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் முறை.
5. வெற்றிடமேற்படும் போது மீள்நிரப்பப்படும் முறை

தேர்தல் தொகுதி பிரிக்கப்படும் முறையினால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

பெரும்பான்மைத் தேர்தல்முறை இடம்பெற்ற முதலாம் குடியரசு யாப்பில் ( 1972ம் ஆண்டு யாப்பு) தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் தொடர்பான ஏற்பாடுகள் யாப்பின் 77 முதல் 81 வரையுள்ள உறுப்புரைகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இதன்படி 78(2) உறுப்புரையின் பிரகாரம் இலங்கையில் 75, 000 மக்களுக்கு (மக்கள் தொகை) ஒரு பிரதிநிதியென்றும், 1000 சதுரமைல்களுக்கு ஒரு பிரதிநிதியென்றும், வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஓவ்வொரு தடவையும் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து மூவரைக் கொண்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்றை,  ஜனாதிபதி அமைத்தல் வேண்டும் என்றும் யாப்பின் 77(1) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 1974ம் ஆண்டில் திரு. நோயல் தித்தவெல (முதலாம் குடியரசு யாப்பு நிர்ணய ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றியவர்) என்பவரின் தலைமையில் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் சிபார்சுக்கமைய தேசிய அரசுப் பேரவையினால் (பாராளுமன்றத்தால்) 1975ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில், 1ம் குடியரசு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது திருத்தமாக 78(2) உறுப்புரையில் 90, 000 மக்களுக்கு ஒரு தொகுதி என்ற நிலை பேணப்பட்டது.

திரு. நோயல் தித்தவெல ஆணைக்குழுவின் அறிக்கை 1976ம் ஆண்டில் ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவை மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி 1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது உறுப்பினர் எண்ணிக்கையும், தொகுதிகளும் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது.

1 சனத்தொகை அடிப்படையில் மொத்த சனத்தொகை 90, 000 ஆல் வகுக்கப்பட்டு 143 அங்கத்தவர்களும்.

2 பரப்பளவின் அடிப்படையில் இலங்கையின் மொத்தப் பரப்பளவான 25, 332 சதுரமைல்கள் 1000ஆல் வகுக்கப்பட்டு 25 அங்கத்தவர்களுமாக மொத்தம் 168 பிரதிநிதிகள் தேசிய அரசுப் பேரவையில் இடம்பெற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த 168 பிரதிநிதிகளும் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகவே அமைவர். (நியமன அங்கத்துவம் இங்கு நீக்கப்பட்டது) இந்த 168 பிரதிநிதிகளும் இலங்கையில் ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த 160 தொகுதிகளினூடாக தெரிவு செய்யப்படல் வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது.

1947ம் ஆண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பில் இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை இனத்தவர்களின் அரசியல் காப்பீடு ஏற்பாடாக பல அங்கத்துவத் தேர்தல் தொகுதி முறை அல்லது இரட்டை அங்கத்தவர் தேர்தல் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு தேர்தல் தொகுதியில் பெரும்பான்மை,  சிறுபான்மை இனங்கள் அண்ணளவாக சமமாக வாழ்ந்தால் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும்,  அல்லது ஒரு தேர்தல் தொகுதியில் இரண்டு சிறுபான்மை இனத்தவர்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும்,  இத்தகைய பல அங்கத்துவ தேர்தல் தொகுதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்படி கொழும்பு மத்தி, நுவரெலிய,  மஸ்கெலியா (மூன்று அங்கத்துவத் தொகுதிகளாகவும்) பேருவளை,  ஹாரிஸ்பத்துவ,  பொத்துவில்,  மட்டக்களப்பு என்பன இரட்டை அங்கத்துவத் தொகுதிகளாகவும் வகுக்கப்பட்டன.

இதன்படி பல அங்கத்துவர் தொகுதி 6இல் இருந்தும் 14 பிரதிநிதிகளும், தனி அங்கத்துவர் தொகுதிகள் 154இல் இருந்தும், 154 பிரதிநிதிகளுமாக 160 தேர்தல் தொகுதிகளிலும் இருந்து 168 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ், தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படல்.

விகிதாசார தேர்தல் தொகுதியின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படுவதில்லை. மாறாக தேர்தல் மாவட்டங்களே வரையறை செய்யப்படுகின்றன. 2ம் குடியரசு யாப்பின் 96ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ‘ஜனாதிபதியால் அமைக்கப்படும் தேர்தல் வரையறை ஆணைக்குழு இலங்கையை  இருபதுக்குக் குறையாததும், இருபத்து நான்கிற்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங்களாகப் பிரித்து அவற்றிற்குப் பெயர்களைக் குறித்தொதுக்குதல் வேண்டும்.’

அரசியலமைப்பின் 95ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவுக்கமைய 1978– 11– 29ம் திகதி திரு ஜீ.பீ.ஏ சில்வா என்பவரின் தலைமையிலான தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழுவினை இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அமைத்தார். இவ்வாணைக் குழுவின் அறிக்கை 1981 தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு அறிக்கை எனப்படுகின்றது. இவ்வறிக்கையின் படி (26ம் பக்கம்) இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டது. இலங்கையில் விகிதாசார முறையின் கீழ் இதுவரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்பட்டிருந்தமை அவதானிக்கத்தக்கதாகும்.

சுதந்திர இலங்கையின் செயற்பட்ட சோல்பரி அரசியலமைப்பிலோ, 1ம் குடியரசு அரசியலமைப்பிலோ பாராளுமன்ற அங்கத்துவர் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை. (நெகிழும் அங்கத்துவத்தைக் கொண்டதாகவே அங்கத்துவ எண்ணிக்கை அமைந்திருந்தது) ஆனால் 2ம் குடியரசு யாப்பில் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்துவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ‘அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கிணங்க அமைக்கப்பட்ட பல்வேறு தேர்தல் மாவட்டங்களில் தேருநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 196 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்க வேண்டும்.’ அதே நேரம் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்துக்கிணங்க (1988ல்) இந்த எண்ணிக்கை 225 ஆக உயர்த்தப்பட்டது. இந்த 225 அங்கத்தவர்களும் பின்வரும் ஒழுங்கில் இடம்பெறுவர்.

1 இலங்கையின் முழு வாக்காளர் தொகையையும்,  கருத்திற் கொண்டு 160  உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாகத் தெரிவுசெய்யப்படுதல்.

2.  ஒரு மாகாணத்திற்கு 4 என்ற வீதம் 9 மாகாணங்களுக்கும்,  36 உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.(ஆக மேற்படி 196 உறுப்பினர்களும், 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நேரடியாக மக்கள் மூலம் தெரிவு செய்யப்படுவர்)

தேசிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும், குழுக்களும் பெறும் வாக்கு விகிதாசாரத்துக்கு அமைய மீதமான 29 பிரதிநிதிகளும் தேசியப் பட்டியல் மூலம் இடம்பெறுவர்.

தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படக்கூடிய முறையினை நோக்குமிடத்து பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரத் தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்குத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ள அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஏனென்றால் வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தினர் சிதறியே வாழ்ந்து வருகின்றனர். எனவே தொகுதி ரீதியாக அமையும் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது மிகக் கடினமானதொன்றாகும். ஆனால் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தேர்தல் மாவட்டமாக வரையறை செய்யப்படுவதினால் மாவட்டத்தில் சிதறிவாழும் சிறுபான்மையினருக்கு ஓரிரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கலாம். எனவே பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரப் பிரதிநிதித்துவம் சிறுபான்மை சமூகத்தினருக்கு அதிக வாய்ப்புண்டு என்பது மறுக்க முடியாததாகும்.

ஏனைய நடைமுறைகளை அவதானிக்கும் போதும் இந்த நிலையை மேலும் உறுதிப்படுத்தலாம்.

(தொடரும்…….)

இலங்கை சமூக சேவகி ஜன்சிலாவுக்கு அமெரிக்க அரசின் துணிச்சல் விருது

majeed.jpgஅமெரிக்க அரசின் இராஜாங்க துறையால் தெரிவு செய்யப்பட்ட அனைத் துலக அளவில் 2010 ஆம் ஆண்டின் துணிச்சல் மிகுந்த பெண்களுக்கான விருதைப் பெறப்போகும் பத்து பேரில் இலங்கையைச் சேர்ந்த பெண் சமூக சேவகி ஜன்சிலா மஜீத்தும் ஒருவர்.

20 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் இவர் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கான சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அரசின் இராஜாங்க துறை செயலாளர் ஹிலரி கிளிண்டன் திங்கட்கிழமை அறிவித்த விருது பெறுபவர்களுக்கான பட்டியலில் ஜன்சிலா மஜித்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

எதிர்வரும் 10 திகதியன்று அமெரிக்க அரசின் இராஜாங்க துறை சார்பில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்பட்ட பத்து பேருக்கும் ஹிலரி கிளிண்டன் விருது அளித்து கெளரவிப்பார். அரசு துறையால் வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் மஜீத் புத்தளம் பகுதியில் உள்ள சமுதாய சேவைகள் மையத்தின் நிர்வாக காப்பாளர் என்றும் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியைச் சார்ந்தவர்களுக்கு தன் சொந்த செலவில் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றார்.  மஜீத்தின் முக்கிய நோக்கம் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் சமுதாயத்தினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதாகும்.