June

June

வெளிநாட்டு நாணயங்கள் மீதான சகல வரிகளும் ரத்து

dollar.jpgஇலங்கைக்கு எடுத்துவரப்படும் வெளிநாட்டு நாணயங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சகல வரிகளையும் ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதன் படி, வெளிநாட்டு நாணயங்கள் மீதான துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, தேசத்தை கட்டயெழுப்பும் வரி, வற்வரி, அடங்கலான 22% வீத வரிகள் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் ரத்துச் செல்லப்ப ட்டுள்ளன. அதிக வரி காரணமாக வர்த்தக வங்கிகள் வெளிநாட்டு நாணயங் களை கொண்டு வருவதை மட்டுப்படுத்தியு ள்ளன. இதனால் சட்டவிரோதமாக நாயணங்களை தருவிப்பது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதனாலே குறித்த வரிகளை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சட்டங்கள் திருத்தப்படவுள்ளன. நிதி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி இந்த அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தாரென அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகத்துடன் ஒருங்கிணைக்க இஃபா கிரிக்கெட் போட்டி உதவும் யுனிசெப் வதிவிட பிரதிநிதி

கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட அகடமி விருது  வழங்கும் விழாவுடன் இணைந்து நடத்தப்படும் கிரிக்கெட் காட்சிப் போட்டி மூலம் கிடைக்கும் பணம் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை, குறிப்பாக முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகங்களுடன் மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கைக்கே பயன்படுத்தப்படுமென யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிலிப் டியூவல் தெரிவித்தார்.

இந்தியத் திரையுலக நட்சத்திரங்களும் இலங்கைக் கிரிக்கெட் அணியினரும் கலந்துகொள்ளும் கிரிக்கெட் காட்சிப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை எஸ்.எஸ்.சி.மைதானத்தில் நடைபெறவுள்ளது.இப்போட்டி குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இலங்கைக் கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில்  புதன்கிழமை நடைபெற்றபோதே யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பிலிப் டியூவல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; இந்திய திரையுலகினரும் இலங்கைக் கிரிக்கெட் அணியினரும் இணைந்து கிரிக்கெட் காட்சிப்போட்டி இலங்கைக் கிரிக்கெட் சபை, ஐ.சி.சி.மற்றும் யுனிசெப்பின் அனுசரணையில் நடைபெறுகின்றது.குறிப்பாகப் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் முன்னாள் சிறுவர் போராளிகளை சமூகத்துடன் மீள ஒருங்கிணைக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த காட்சிப்போட்டி நடைபெறுகின்றது.

இப்போட்டி மூலம் கிடைக்கும் வருமானமானது இச்சிறுவர்களின் நலத்திட்டத்திற்காகவே பயன்படுகின்றதென்பதைத் தெரியப்படுத்துகின்றோம். போரினால் உடல் மற்றும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை நெறிப்படுத்தவேண்டிய தேவை எம் அனைவருக்கும் உள்ளது.அந்த ரீதியில் இச்சிறுவர் போராளிகளும் ஏனைய பாதிக்கப்பட்ட சிறுவர்களும் புதியதொரு பயணத்தை அல்லது யுகத்தை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதற்காக இச்சிறுவர்களை சமூகங்களுடன் மீள ஒருங்கிணைக்கப்படவேண்டிய அவசியம் உள்ளதெனத் தெரிவித்தார்.

இந்தியாவுடன் மூன்று இருதரப்பு ஒப்பந்தங்கள். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கைச்சாத்து; ‘சீபா’ பற்றிய முடிவு பின்னர்

kahiliya.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்தவாரம் இந்தியாவுக்கு மேற்கொள்ள வுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது மூன்று இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன. ஊடகத் துறை, சுற்றுலாத் துறை, கலாசாரத் துறை தொடர்பான ஒப்பந்தங்கள் இதில் அடங்குவதாகவும் ‘சீபா’ வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும்அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (3) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :- இரு நாடுகளுக்குமிடையில் ஊடகத்துறை தொடர்பான பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும். இரு நாட்டுக்கு மிடையில் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பரிமாறுதல், அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குதல் உட்பட பல விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.

தனியார் துறையினர் தாம் விரும்பியபடி இந்தியாவில் இருந்து படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தருவித்து ஒலி, ஒளிபரப்பு செய்கின்றன. இதற்காக வரி விதிக்கப்பட்டாலும் கூட அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. புதிய ஒப்பந்தம் மூலம் இதனை முறையாக முன்னெடுக்க முடியும்.

‘சீபா’ வர்த்தக ஒப்பந்தம் குறித்து சகல தரப்பினருடனும் அரசாங்கம் பேச்சு நடத்தியே இறுதி முடிவு எடுக்கும். சிலர் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். ஆனால் ‘சீபா’ ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. இந்த வருட இறுதியில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இது குறித்து முக்கியமாக ஆராயப்படும். இது தவிர பாதுகாப்பு விடயங்கள் தொடர்பிலும் இரு தரப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்.

இதேவேளை, சார்க் நாடுகளுக்கிடையில் சேவைத்துறை பரிமாற்றம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 29ஆம் திகதி பூட்டானில் நடைபெற்ற 16ஆவது சார்க் மாநாட்டில் இது குறித்து ஆராயப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிவிவகார அமைச்சர் கைச்சாத்திட்டார். இதன்மூலம் சார்க் நாடுகளிடையே சுற்றுலா, கல்வி, கலாசாரம் தொடர்பான சேவை பரிமாற்றங்கள் இடம்பெறும் என்றார்.

இலங்கையின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு சீனக்குடியரசின் ஒத்துழைப்பு பெற்றுத்தரப்படும் – தூதுவர் யாங் க்ஷியூபிங்

பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டு இலங்கை அரசு அதன் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளுக்கு மக்கள் சீனக்குடியரசின் பூரண ஒத்துழைப்பு பெற்றுத்தரப்படுமென்று இலங்கைக்கான சீனத்தூதுவர் யாங் க்ஷியூபிங் தெரிவித்துள்ளார். இலங்கையின் தீர்க்கதரிசனமிக்க செயற்பாடுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள சீனத் தூதுவர், அதற்காக தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவைச் சந்தித்த போதே சீனத் தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள அமைச்சிலேயே இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. “கடந்த காலங் களில் அழிவுகரமான சம்பவங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டது.

எனினும் அரசாங்கம் தெளிவான செயற்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றமை பாராட்டத்தக்கது. இது தொடர்பில் சீன அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது” என்று தெரிவித்த சீனத் தூதுவர், இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரிய அபிவிருத்திப் பணிகளுக்கு இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றுத்தர சீனா தயாராக உள்ள தாகவும் கூறினார். சீன அரசின் முக்கியஸ்தர்கள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். அதன்போது இந் நாட்டு முக்கியஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அபிவிருத்திப் பணிகளுக்கு உதவுவது பற்றி ஆராயப்படும் என்றும் அவர் குறிப் பிட்டார்.

தற்போதைய அமைச்சரவை தொடர்பாகக் கேட்டறிந்துகொண்ட சீனத் தூதுவர், அரச முகாமைத்துவ அமைச்சின் பொறுப்புகள் பற்றியும் கேட்டறிந்துகொண்டார். இதுபற்றி விளக்கமளித்த அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, இலங்கையை ஆசியாவின் அற்புத நாடாக மாற்றும் ஜனாதிபதியின் செயற்திட்டத்திற்குப் பூரணமான பங்களிப்பைச் செய்வதாகத் தெரிவித்தார்.

IIFA: சர்வதேச இந்திய திரைப்பட விழா ஆரம்பம்:

iifa-colombo.jpgசர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழா கொண்டாட்டங்கள் கொழும்பில் நேற்று கோலாகலமாக ஆரம்பித்தன. சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற சர்வதேச பத்திரிகையாளர் விழாவுடன் இது ஆரம்பமானது.

இந்தியத் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முன்னணி நடிக, நடிகையர்கள் இயக்குனர்கள் உட்பட திரைத் துறையைச்சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் இலங்கை வந்து சேர்ந்துள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடிகர் சல்மான் கான் விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். விபாஷாபாஷ¤, சஞ்சய் தத், தியா மிர்ஸா, லாரா தத்தா, அனில்கபூர், ரித்ரிஷ் தேஷ்முக் மற்றும் இன்னும் பல இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் இலங்கை வந்துசேர்ந்துள்ளனர்.

சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் ஆரம்ப விழா நேற்று சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டுடன் கோலாகலமாக ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து ‘லமா’ மற்றும் ‘ஹெல்ப்’ திரைப்படங்கள் தொடர்பான பத்திரிகையாளர் மாநாடுகள் சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்றன.

உலகைப் பசுமைப்படுத்துவதற்கு சர்வதேச இந்தியத் திரைப்பட அகதமி அதிமுக்கியத்துவம் வழங்கி வருவதால் அதனடிப்படையில் செங்கம்பளத்துக்குப் பதிலாக அது பச்சைக் கம்பளங்களைப் பயன்படுத்துகின்றது.

நேற்று மாலை, ஐபா ரொக்ஸ் எனும் தொனிப் பொருளிலான நவநாகரிக ஆடை அலங்காரக் காட்சி (பஷன் ஷோ) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையின் டைமகஸ் காமன்ஸின் ‘அவராத்ரி’ படைப்புகள் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

இந்தியத் திரை நட்சத்திரங்களான தியா மிரிஸா மற்றும் விவேக் ஒபரோய் ஆகியோர் இந்த பஷன் ஷோவைத் தொகுத்து வழங்கினர். முன்னதாக சினமன்ட் கிராண்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் சர்வதேச திரைப்பட விழாவென்பது ஒரு உலகு ஒரே மக்கள் என்பதை தொடர்ந்தும் நிரூபித்து வருவதாக தியா மிர்ஸா குறிப்பிட்டிருந்தார்.

இன்று காலை சர்வதேச திரைப்பட அகதமியின் சர்வதேச வர்த்தக சங்க மாநாடு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை ஆரம்பித்து வைக்கின்றார். மதியம் 1 மணிக்கு, இந்தியத் திரை நட்சத்திரங்களுக்கும், இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு மிடையிலான குழந்தைகளுகான கிரிக்கெட் என்ற தொனிப்பொருளிலான கிரிக்கெட் போட்டி எஸ். எஸ். ஸி மைதானத்தில் இடம்பெறவிருக்கிறது.

இன்று மாலை சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் மற்றுமொரு பாஷன் ஷோ இடம்பெறவுள்ளது. நாளை மாலை 6.30க்கு சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் விழா ஆரம்பமாகின்றது.

ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பம் – ஜீ.எல். தலைமையிலான குழு பங்கேற்பு

gl.jpgஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு இன்று 4ஆம் திகதி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாடுக்கு செல்லும் இலங்கை தூதுக்குழுவுக்கு வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமைதாங்குகிறார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படை தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரும் இலங்கை தூதுக்குழுவில் இடம் பெறுகின்றனர்.

லண்டனில் உள்ள சர்வதேச தந்திரோபாய கற்கை நிறுவனம் வருடாந்தம் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் சிங்கப்பூரில் இன்று ஆரம்பமாவது 9 ஆவது உச்சி மாநாடாகும். 2002 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் இந்த உச்சி மாநாடு இடம்பெறுகிறது.

ஆசிய பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இந்த உச்சி மாநாட்டில் ஒன்றுகூடி நம்பிக்கையை கட்டியெழுப்பும் மற்றும் தமக்கிடையிலான பாதுகாப்பு கூட்டுறவு செயற்பாடுகளை வளர்த்துக்கொ ள்ள ஒரு அமைப்பாக இது உரு வாக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழுவுக்கு தலைமைதாங்கும் வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அங்கு ‘கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆளுமையை வலுப்படுத்தல்- புலி பயங்கரவாதிகள் முன்னர் தம்வசம் வைத்திருந்த பிரதேசங்களின் கட்டுப்பாட்டை மீள் உறுதிப்படுத்தும் சவால் மற்றும் ஆளுமைபற்றிய இலங்கை அனுபவம்’ என்ற பொருளில் உரையாற்றுவார்.

உச்ச மாநாட்டின் பின்னர் அமைச்சர் பீரிஸ் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்களை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை பற்றி விளக்குவார் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சிங்கப்பூரின் கல்வி அமைச்சர், பாதுகாப்புக்கான இரண்டாவது அமைச்சர் மற்றும் சிங்கப்பூரின பதில் சட்டமா அதிபர் ஆகியோரையும் அமைச்சர் பீரிஸ் சந்தித்து பேசவுள்ளார்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான், லாகோஸ், மலேஷியா, மொஸ்கோலியா, மியன்மார், நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, ரஷ்யா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, திமோர் லெஸ்ட், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் வியட்னாம் ஆசிய நாடுகளில் இருந்து பாதுகாப்பு துறைக்கு பொறுப்பானவர்கள் ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

தோட்ட தொழிலாளர் மேலதிக வேலை செய்ய தேவையில்லை பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம்

விடுமுறை தினங்களில் ஒன்றரைநாள் சம்பளம் வழங்குவதால் அதற்காக தோட்டத் தொழிலாளர்கள் மேலதிக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு தோட்ட நிர்வாகம் நிர்பந்திக்குமானால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென இ.தொ.கா. தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தி தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்ட வழிவகை செய்யுமெனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

போயா ஞாயிறு தினங்கள் உட்பட விடுமுறை தினங்களில் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்வார்களேயானால் அவர்களுக்கு ஒன்றரைச் சம்பளம் வழங்க வேண்டுமென்ற நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது. அத்துடன் தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் முதலாளிமார் சம்மேளத்துடனான கூட்டு ஒப்பந்தத்திலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகங்கள் இதனை கவனத்திற்கொண்டு செயற்படுவது முக்கியம்.

எவ்வாறாயினும் விடுமுறை நாட்களில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை, தாம் கூடிய சம்பளம் வழங்குவதால் மேலதிக வேலை செய்ய வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் நிர்பந்தித்து வருகின்றன. இதன் மூலம் சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை ஏமாற்றியும் வருகின்றன.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்ட போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான கே. வேலாயுதம் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அது தொடர்பில் முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும். அதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலும் பேச் சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.

Little_Aid_Gambaha_May262010அண்மை யில் இலங்கையில் குறிப்பாக தென்பகுதியில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லிற்றில் எய்ட் சிறு உதவி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது. மே 26ல் லிற்றில் எய்ட் உதவியாளர்கள் கம்பகா மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு சித்தாவத்த என்ற பகுதியில் தங்கியிருந்த 175 குடும்பங்களுக்கு சிறு உதவி நடவடிக்கையை மேற்கொண்டனர். 55 000ரூபாய் (335 பவுண்) செலவில் மேற்கொண்டது. சென் ஜோசப் தேவாலயத்தின் வணக்கத்திற்குரிய அருட் தந்தை ஆயந்த வித்தான இக்குடும்பங்களுக்கான உணவுப் பொதிகளை விநியோகித்தார். http://littleaid.org.uk/little-aid-sends-food-aid-to-flood-victims-in-the-gampaha-district-sri-lanka

ரகம நிகம்பு ஆகிய பகுதிகளுக்கான பிரிதான மருத்துவமனையான பாமுகம வைத்தியசாலைக்கான மருந்துப் பொருட்களை விநியோகிப்பதற்கும் லிற்றில் எய்ட் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இம்மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட்டின் நீர்கொழும்பு களஞ்சியசாலையில் இருந்து சென் ஜோசப் தேவாலயத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பாமுகம வைத்தியசாலையின் தேவைக்கு ஏற்ப விநியோகிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. அம்மருந்துப் பொருட்கள் டென்மார்க்கின் எல்லையற்ற வைத்தியர் அமைப்பினால் லிற்றில் எய்ட் க்கு வழங்கப்பட்டு இருந்தது தெரிந்ததே. http://www.youtube.com/watch?v=t1kzvHn_GqM

லிற்றில் எயட் அண்மையில் (மே 18ல்) தனது ஓராண்டைக் கடந்து பயணத்தை தொடர்கிறது. வன்னி யுத்தத்தில் இருந்து மீண்ட மக்களுக்கு மரக்கறி வகைகளை வழங்குவதில் ஆரம்பிக்கப்பட்ட அதன் உதவி நடவடிக்கைகள் ஓராண்டில் 1.54 மல்லியன் டொலர் மதிப்புள்ள மருந்துவகைகளை டென்மார்க் எல்லையற்ற  மருத்துவர் அமைப்பினூடாகப் பெற்று இலங்கையில் பெரும்பாலும் வடமாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்தது. இவற்றினைவிடவும் பல்வேறு உதவித் திட்டங்களை மேற்கொண்டு வருவதுடன் புலம்பெயர் நாடுகளில் உள்ள தாயக மக்களுக்கு உதவக் கூடிய அமைப்புகளை அங்கு உதவி வேண்டியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி விடுவதிலும் அதற்கான ஆணுசரணைகளை மேற்கொள்வதிலும் லிற்றில் எய்ட் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

மேலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான கணணி நிலையம் ஒன்றையும் பனாங்கொட புனர்வாழ்வு மையத்தில் லிற்றில் எய்ட் அமைத்துக் கொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் வைபவரீதியான நிகழ்வு யூன் 6ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வன்னி யுத்தத்தின் முடிவில் ஆரம்பிக்கப்பட்டு உள்ள லிற்றில் எய்ட் அமைப்பு சாதி, மத, இன பேதங்களைக் கடந்து இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் புனர்வாழ்வு நடவடிக்கையிலும் தன்னால் முடிந்த அளவு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. லிற்றில் எய்ட் அமைப்பின் கணக்கியல் கோவை மற்றும் அதன் உதவி நடவடிக்கைகளின் வெள்ப்படைத் தன்மை அதன் நம்பகத்தன்மையை வலுப்படுத்தி வருகின்றது. http://littleaid.org.uk/

சர்வதேச இந்திய திரைப்படவிழா இன்று கோலாகல ஆரம்பம் – கொழும்பில் விஷேட பாதுகாப்பு:

iifa-colombo.jpgசர்வதேச இந்தியத் திரைப்பட விழா இன்று ஆரம்பமாகின்றது. இந்தியத் திரைப்படக் கலைஞர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் கெளரவிக்கும் முகமாக வருடா வருடம் நடத்தப்படும் இவ்விழாவை நடத்துவதற்கென இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது. 11 சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவதற்கு தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அவுஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு இலங்கை இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.

இன்று இலங்கையில் ஆரம்பமாகும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நாளை மறுதினம் 5ஆம் திகதி விருது வழங்கும் விழாவுடன் நிறைவடைகின்றது. இன்று மாலை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சி நடைபெறுகின்றது. இலங்கையின் டைமக்ஸ் கார்மென்ஸின் ‘அவராத்தி’ படைப்புகள் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன.

iifa-colombo.jpgஏனைய நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சிக்களில் போலல்லாமல் இந்தியாவின் பிரபல இசை இரட்டையர்களான சலீம் சுலைமான் ஆகியோர் இதற்கு நேரடியாக இசை வழங்குகின்றனர். பிரபல நட்சத்திரங்களான விவேக் ஒபரோய், தியா மிர்ஸா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் சர்வதேச வர்த்தக சங்க மாநாடு நாளை காலை, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டை ஆரம்பித்து வைப்பார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், இந்தியத் தூதுவர் அஷோக் கே.காந்த் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் உட்படப் பலர் இதில் உரையாற்றவுள்ளனர்.

சினிமாத் துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்காக சினிமா தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று நாளை காலை கொழும்பு சிலோன் கொண்டினன்டல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் பிரபல இயக்குனரான ஆர். பல்கி, நடிகர் அனுபம்கீர், நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் இதில் பங்குபற்றுவர்.

இந்தியத் திரை நட்சத்திரங்களுக்கும், இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு மிடையிலான சிறுவர்களுக்கான கிரிக்கெட் எனும் தொனிப் பொருளிலான கிரிக்கெட் போட்டி நாளை மதியம் எஸ். எஸ். ஸி. மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தியத் திரை நட்சத்திரங்கள் இரு அணிகளாக, ஹிர்திக் ரோஷன் மற்றும் சுனில் ஷெட்டி தலைமையில் மோதவுள்ளன. இதில் சில இந்தியக் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.

இலங்கை அணிக்கு குமார் சங்கக்கார தலைமை தாங்குவார். இதன் மூலம் கிடைக்கும் நிதி சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தப்படும்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் விருது வழங்கும் விழா நாளை மறுதினம் சனிக்கிழமை, சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. ஹிர்திக் ரோஷன், சயிப் அலிகான், கரீனா கபூர், பிபாஷா பாஸ¤, ரிதீஷ் தேஹ்முக், விவேக் ஒபரோய், இலங்கையின் ஜக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் அன்றைய தினம் விழாவை அலங்கரிக்கவுள்ளன.

சிறந்த திரைப்படத்துக்கான ‘த்ரீ இடியட்ஸ் வோன்டட்’, ‘டெவ்டி’, ‘காமினி’, ‘பா’ ஆகிய திரைப்படங்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. ‘த்ரீ இடியட்ஸ்’ திரைப்படம் இத் திரைப்பட விழாவில் முக்கிய 13 விருதுகளில் 12 விருதுகளுக்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக வழங்கப்படும் 8 விருதுகள் ஏற்கனவே இத்திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்விருது வழங்கும் விழா ஸ்டார் தொலைக்காட்சி சேவையில் எதிர்வரும் ஜுலை மாதம் 11 ஆம் திகதி ஒளிபரப்பப்படவிருக்கின்றது. சுமார், 110 நாடுகளில் 600 மில்லியன் ரசிகர்கள் இத்திரைப்பட விழாவை ஸ்டார் தொலைக்காட்சியினூடாகக் கண்டு களிப்பர். இந்தியாவில் இருந்து மட்டும் 2000 விருந்தினர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்களும், இந்தியத் திரையுலகைச் சேர்ந்த 600 பேரும் இவ் விழாவில் கலந்து கொள்ள வருகின்றார்கள். இலங்கையில் உள்ள ஹோட்டல்களில் 2650 அறைகள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.

சுகததாஸ உள்ளக அரங்கு 400 மில்லியன் ரூபாவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் அந்நாட்டுக்கு 56 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்தது. அதிலும் பார்க்கக் கூடுதல் வருமானம் இம்முறை இலங்கையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முள்ளியவளையில் நாளை 710 பேர் மீள் குடியமர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 360 குடும்பங்களைச் சேர்ந்த 930 பேர் நேற்று (2) கனிக்கேணி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக திட்டப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார்.

இவர்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பா ணம் ஆகிய பகுதிகளிலுள்ள தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த தாகவும் விசேட பஸ்கள் மூலம் இவர்கள் நேற்று சொந்த இடங் களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள், தற்காலிக வீடுகள் அமைப்பதற் கான கூரைத் தகடுகள், உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற போது சமுகமளிக்காத ஒரு தொகுதியினரும் நேற்று தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, முள்ளியவளை, வடக்கு பகுதியில் 245 குடும்பங்களைச் சேர்ந்த 710 பேர் நாளை (4) மீள் குடியேற்றப்பட உள்ளதாகவும் திட்டப் பணிப்பாளர் கூறினார். இவர்கள் வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் இருந்து விசேட பஸ் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள இரு கிராமசேவகர் பிரிவுகளில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு இங்கும் விரைவில் மீள்குடியேற்றம் இடம்பெற உள்ளது.