June

Sunday, September 19, 2021

June

திரைப்படத் தயாரிப்பாளர் சந்திரன் ரட்ணம் விடுதலை

chandran.jpgதிரைப் படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான சந்திரன் ரட்ணம் நேற்று நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.

நுகேகொடையிலுள்ள அவரது வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்டெடுக்கப்பட்டதை அடுத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். மீட்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் அனுமதியுடன் கொண்டு வரப்பட்டவை என உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து அவரை கங்கொடவில மஜிஸ்திரேட் நீதவான் அநுரகுமார ஹேரத் விடுதலை செய்தார்.

4 கிலோ 955 கிராம் எடையுள்ள வெடிபொருட்களும் 7 டெடனேட்டர்களும் இவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டன. திரைப்படத் தயாரிப்பாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி களான காலிங்க இந்த திஸ்ஸ, ஹேமந்த கமகே ஆகியோர் நேற்று நீதிமன்றில் ஆஜரானார்கள். சந்திரன் ரட்ணம் வெடி பொருட்கள் சட்டத்தின் கீழ் எந்த ஒரு குற்றத்தையும் செய்யவில்லை என்றும் அவர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

பூநகரி – யாழ். குருநகர்; படகு சேவை நாளை ஆரம்பம்

பூநகரிக்கும், யாழ். குருநகருக்கும் இடையிலான படகுச் சேவை நாளை 2ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு படகுச் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த படகுச் சேவை நடத்தப்படவுள்ளதுடன் முதற் கட்டமாக நான்கு படகுகள் ஈடுபடுத்தப்படவுள்ளன என்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

தரைவழியாக 2 1/2 மணி நேரம் மேற்கொள்ளும் பயணத்தை படகுச் சேவையின் மூலம் சுமார் 45 நிமிடங் களுக்குள் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் இந்தப் பிரதேசங்களிலுள்ள மக்கள் பெரும் நன்மையடையவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பஸ் கட்டணத்தை விட குறைந்ததாக பயணமொன்றுக்கு 40 ரூபா மாத்திரமே அறவிடப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி – சங்குப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகுவிரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டதாக வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச இந்திய திரைப்பட விழா 3ம் திகதி ஆரம்பம்: 97 வீத இந்திய கலைஞர்களின் வருகை உறுதி

iifa-awards-logo.jpgஎத்தகைய எச்சரிக்கைகள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும், அந்திய திரையுலகைச் சேர்ந்த 97 சதவீதத்தினர் தமது வருகையை உறுதி செய்துள்ளனர் என்று பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் இம் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழா தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு, நேற்று கொழும்பில் உள்ள உல்லாசப் பயணத்துறை சபையில் இடம் பெற்றது.  இதன் போதே அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன அவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வுக்காக, சுகததாஸ உள்ளக அரங்கை 400 மில்லியன் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்கின்றோம்.

அதே போல இத்திரைப் பட விழாவுக்காக இலங்கையைத் தயார்ப்படுத்த 4650 மில்லியன் ரூபாவை நாங்கள் செலவிடுகின்றோம். ஆனால் இத்திரைப்படவிழாவை ஸ்டார் தொலைக் காட்சியில் ஜுலை மாதம் 11 ஆம் திகதி 110 நாடுகளைச் சேர்ந்த 600 மில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் பார்த்து ரசிக்கவுள்ளனர்.

இதன் போது எமது நாட்டுக்கு உலகம் பூராவும் கிடைக்கவுள்ள அங்கீகாரமும் பிரபலமும் பல நூறு மடங்கு நன்மையை எமது நாட்டுக்கு தரவுள்ளது என்றார். இந் நிகழ்வில் உரையாற்றிய விஸ்கிராப்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபாஷ் ஜோசப், கடந்த முறை நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் மூலம் கிடைத்த 56 மில்லியன் அமெரிக்க டொலரிலும் பார்க்கக் கூடுதலான வருமானம். இம்முறை இலங்கையில் நடைபெறும் விழாவின் மூலம் கிடைக்கும் எனத் தான் நம்புவதாகக் கூறினார். 11 ஆவது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை நடாத்தும் 9 ஆவது நாடு என்ற பெருமையை இலங்கை, கொரியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டுப் பெற்றிருக்கின்றது என்று கூறினார்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் முதல் நாளான 3 ஆம் திகதியன்று இது தொடர்பான சர்வதேச பத்திரிகையாளர் மாநாடு இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இரவு இந்திய திரையுலக நட்சத்திரங்களான தியா மிர்ஸா, விவேக் ஒபரோய் ஆகியோர் தொகுத்து வழங்கும் ஃபாஷன்ஷோ இடம்பெறவிருக்கின்றது.

இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் இதில் பங்கு கொள்கின்றனர். இரண்டாம் நாளான ஜுன் 4 ஆம் திகதி, சர்வதேச வர்த்தக சங்க மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மதியம் இந்திய நட்சத்திரங்களும், இலங்கை கிரிக்கெட் வீரர்களும் பங்கு கொள்ளும் அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி எஸ். எஸ். சி. மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.

சுனில் செட்டி மற்றும் ஹிர்திக் ரோஷன் தலைமையிலான இந்திய நட்சத்திர அணிகள் ஒன்றுடன் போட்டியிடவுள்ளன. வெற்றி பெறும் அணி சங்கக்கார தலைமையிலான இலங்கை அணியுடன் மோதும் திரைப்படக் காட்சிகளும் இத் திரைப்பட விழாக் காலத்தில் இடம்பெறவுள்ளன.

இறுதி நாளான ஜுன் 5 ஆம் திகதி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது. விருது வழங்கும் நிகழ்வு இடம் பெறும் சுகததாஸ உள்ளக அரங்கு, மற்றும் ஏனைய நிகழ்வுகள் இடம் பெறும் இடங்களில் ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால், விருது வழங்கும் விழா கிரிக்கெட் போட்டி, திரைப்படக் காட்சிகள் எல்லாவற்றுக்கும் உல்லாசப் பயண சபை, இலங்கை கிரிக்கெட் சபை என்பனவற்றில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

பல்கலைக்கழகத்துக்கு 22,800 பேர் தெரிவு; வெட்டுப்புள்ளி வார இறுதியில்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,800 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதோடு பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளி இந்த வார இறுதியில் வெளியிடப் படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்.

கடந்த வருடத்தை விட இம்முறை ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தெரிவு செய்யப்பட உள்ளதாகக் கூறிய அவர் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் வேறு பல்கலைக் கழகங்களுக்கு மாற்றப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பல வருடங்களின் பின் முதற் தடவையாக யாழ். பல்கலைக்கழகத்திற்கு தென் பகுதியில் இருந்து மாணவர்கள் சென்று கல்வி பயில உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புக் காரணங்களினாலும் வடக்குக்கான போக்குவரத்து தடைப் பட்டிருந்ததாலும் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு தெரிவான வேறு பகுதி மாணவர்களுக்கு அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவ பீடத்துக்கு நூறு மாணவர்களும் சட்ட பீடத்துக்கு 50 மாணவர்களும் தெரிவு செய்யப்படுகின் றனர். எதிர்வரும் காலங்களில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படும்.

சகல பல்கலைக்கழகங்களும் தேசிய பல்கலைக்கழகங்களாகும். இன ரீதியான பல்கலைக்கழகங்களாக எந்த பல்கலைக்கழகமும் இருக்க முடியாது. கடந்த வருடம் 21 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகினர். இம் முறை 22 ஆயிரத்து 800 பேர் தெரிவு செய்யப்பட உள்ளன.