July

Friday, October 22, 2021

July

மௌலவி நியாஸ் இன்று காலை காலமானார்.

niyaz.jpgஜனாதிபதி யின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் (கபூரி) 57ஆவது வயதில்  இன்று காலை காலமானார். 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி தலவாக்கலையில் பிறந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார். இலங்கையின் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலவி நியாஸ் முஹம்மத், கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டார்.

பௌத்த,இந்து மதத்தலைவர்களின் மதிப்பை பெற்றிருந்த மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத், தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்துக்காக பாடுபட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.தேசகீர்த்தி, தேசமான்ய, கீர்த்திஸ்ரீ, சாம மான்ய, தேசபந்து போன்ற பல விருதுகள் ஏனைய சமூகங்களினால் வழங்கப்பட்டு பலமுறை இவர் கௌரவிக்கப்பட்டார். இலங்கையின் வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிங்கள மொழியில் தஃவா பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.

பட்ஜெட் 2ம் நிலை வாசிப்பு மீதான விவாதம் நிறைவேற்றம்

parliament.gifபாராளு மன்றத்தில் பட்ஜெட் 2ம் நிலை வாசிப்பு மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் 138 வாக்குகள் ஆதரவாகவும் 75 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்ட நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட் 2ம் நிலை வாசிப்பு மீதான விவாதத்தின் போது 11 சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கால்பந்து நான்காவது காலிறுதி போட்டி: ஸ்பானியா வென்றது – பராகுவே வெளியேறியது.

paraguay.jpg“தென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் நான்காவது காலிறுதி‌ ஆட்டத்தில் ஸ்பானியா – பராகுவே அணிகள் மோதின.  இதில் ஸ்பானியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. பராகுவே அணி உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரில் இருந்து வெளியேறியது.

கூட்டமைப்பினர் இந்திய மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா செல்லவுள்ளனர்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தாவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எஸ்.சுமந்திரன், அ.விநாயகமூர்த்தி, மாவை சேனாதிராஜா ஆகியோர் கடந்த செவ்வாய்க் கிழமை இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. இதன் போது இந்திய அரசுத் தலைவர்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்பேச்சுவார்த்தைகள் எப்போது நடைபெறும் என்கிற விபரங்கள் இன்னும் முடிவாகவில்லை.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டும். தமிழரசுக் கட்சியின் உபதலைவர் சீற்றம்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனிக் கட்சியாக பதிவு செய்யப்பட்டமை துரோகம். இதற்காக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டும்.

தமிழரசுக்கட்சிக்குத் துரோகம் செய்யும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழரசுக்கட்சிக்கு துரோகம் செய்த திருவாளர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகிக்கும் பதிவிகளிலிருந்து விலக வேண்டும் எனவும் தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலர் எஸ்.எக்ஸ். குலநாயகம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலொ ஆகிய கட்சிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பாக செயற்படலாமேயன்றி இவை தனி அரசியல் கட்சியாக செயற்படுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒருபோதும் பங்கு வகிக்க முடியாது எனவும், அதனைத் தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது எனவும் திரு. குலநாயகம் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை எந்தவொரு தமிழசுக் கட்சிக்காரனும் ஏற்கப்போவதில்லை எனவும், இலங்கையில் தமிழ் பேசும் இனத்தை இணைத்த தந்தை செல்வாவினால் கட்டி வளர்க்கப்பட்ட தமிழசுக்கட்சியின் அழிவை தமிழ்பேசும் இனம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் உபதலைவரும், 1956ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் அங்கம் வகித்து வருபவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான யாழ். பலகலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலமும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு கட்சியாக பதிவு செய்வதற்கு முதல்நாள் இவர் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

அநுராதபுரம் விமானத்தளம் மீதான தாக்குதல் குற்றவாளிகளுக்கு பிணை மறுப்பு.

அநுராதபுரம் விமானத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்று சந்தேக நபர்களின் பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான தடயப் பொருட்களையும் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி அதன் வடமாகாண அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் திறக்கின்றது.

இலங்கை மத்திய வங்கியின் மாகாண அலுவலகம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இது மத்திய வங்கியின் நான்காவது மாகாண அலுவலகம் என்பது குறிப்பித்தக்கது. யுத்தம் முடிவடைந்ததையடுத்து பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்கள், குத்தைகை நிறுவனங்கள் என்பன மிக வேகமாக யாழ்ப்பாணத்தில் தங்கள் கிளைகளைத் திறந்து வருகின்றமை குறிப்பிடத்க்கது. இந்நிலையில் இலங்கை மத்தியவங்கி அதன் வடமாகாண கிளை நிறுவனத்தைத் திறந்து வடமாகாண மக்களின் நிதியியல் தேவைகளை நிறைவு செய்யவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எண்ணெய்வள ஆய்விற்கு உக்ரேன் உதவி.

இலங்கையில் காணப்படும் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வில் ஈடுபட உக்ரேன் அரசாங்கம் இணக்கம் தெரிவத்துள்ளது. நான்கு நாள் விஜயமாக கடந்த செவ்வாய்க் கிழமை உக்ரேனுக்குப் பயணமாகியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் அந்நாட்டு ஜனாதிபதி விக்ரர் யனுகோவிஸ்குமிடையில் நேற்று முன்தினம் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது அவ்வேளையிலேயே இது தொடர்பான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் எண்ணெய் வள ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தமொன்றும் இரு நாட்டு ஜனாதிபதிகளினால் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த உக்ரேன் ஜனாதிபதி, இலங்கையில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபடுவது குறித்தும், அது தொடர்பான பங்களிப்புகளை இலங்கைக்கு வழங்குவது குறித்தும் தாம் மகிழ்வடைவதாக தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கால்பந்து ‌காலிறுதி போட்டி: ஜெர்மனி வென்றது – ஆர்ஜன்டீனா வெளியேறியது.

soccer.jpgதென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் காலிறுதி‌ ஆட்டத்தில் ஜெர்மனி – ஆர்ஜன்டீனா  அணிகள் மோதின. இதில் ஜெர்மனிஅணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. ஆர்ஜன்டீனா அணி உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரில் இருந்து வெளியேறியது.

உதிரத்தை உறைய வைத்த கானாவின் தோல்வி

gana.jpgஉலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் வெற்றி பெறும் வாய்ப்பை கானா அணி நூலிழையில் பறிகொடுத்தது.

உலகக் கோப்பை வரலாற்றில் காலிறுதியில் நுழைந்த மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்ற கானா அணி, நேற்றைய முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. பிற்பாதியில் உருகுவே அணியில்ன ஃபோர்லன் கோலடிக்க சமநிலையானது.

90 நிமிடங்களில் வேறு கோல் அடிக்கப்படாததால், கூடுதல் நேரம் தரப்பட்டது. கடைசி நிமிடத்தில் கானா அணி வீரர்கள் உருகுவே கோலை ஆக்கிரமித்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு நிமிடம் பந்து உருகுவேயின் கோலைச் சுற்றிச் சுற்றியே வந்தது. இதனால் கோலுக்கு அருகே உருகுவே வீரர் லூயிஸ் சுவாரேஸ் நின்று கொண்டார். கோலுக்குள் பந்து வந்த போது தனது புறங் கையால் அவர் பந்தைத் தடுத்தார். இதை நடுவர் கவனிக்கத் தவறிவிட்டார். அடுத்த முறை பந்து கோலுக்குள் சென்றபோது பந்தைக் இரு கைகளாலும் தடுத்துவிட்டார். அவர் தடுக்காமல் இருந்திருந்தால் அந்த நிமிடமே கானா வெற்றி பெற்றிருக்கும்.

கையால் பந்தைத் தடுத்தால், சுவாரேஸுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதுடன், கானாவுக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. ஆனால் பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியதால், அதன் பிறகு பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

அந்த வாய்ப்பிலும் கானா வீரர்கள் இருமுறை கோலுக்குள் பந்தை அடிக்கத் தவறினர். இதனால், 4-2 என்கிற முறையில் உருகுவே வெற்றி பெற்றது.