August

August

வட மாகாண டெங்கு நோய் ஒழிப்புத் திட்டம் இன்று ஆரம்பம் – யாழ். நகரசபையில் நிகழ்வு: மன்னாருக்கு விசேட வைத்தியக்குழு

mos.jpgவட மாகாணத்தில் டெங்கு நோய் ஒழிப்பிற்கான தேசிய வேலைத் திட்டம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாணத்துக்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் இதற்கான தேசிய நிகழ்வு இன்று காலை யாழ். மாநகர சபையில் ஆரம்பித்து வைக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இம்மாதம் குறித்த நான்கு நாட்கள் தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப் படவுள்ளன. அந்த வகையில் இன்று 02 ஆம் திகதி முதல் வட மாகாணத்தின் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படவிருப்பதாக வட மாகாண ஆளுநர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி வவுனியா அதிபர் அலுவலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய மாகாணத்தின் சகல பகுதிகளிலும் அந்தந்த மாவட்டத்திற்குரிய அரச அதிபர் தலைமையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளிலேயே இன்று டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தற்போது ஒப்பீட்டளவில் வடமாகாணத்தில் மிக மிக குறைந்த எண்ணிக்கையானோரே டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளனர். மன்னாரில் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து வவுனியாவிலிருந்து விசேட வைத்தியர் குழுவொன்று மன்னார் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வன்னி பிரதேசத்தில் 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் – புனரமைப்புப் பணி இன்று ஆரம்பம்; மாத இறுதியில் பூர்த்தி

வன்னிப் பிரதேசத்தில் இம்மாத முடிவுக்குள் பத்து தொழிற் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத் தொழிற் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கான கட்டடங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் இன்று 2ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் வன்னி பிராந்திய பணிப்பாளர் ரி. விணோதராஜா நேற்று தெரிவித்தார்.

இத் தொழிற் பயிற்சி நிலையங்கள் கனடா நாட்டின் உலக பல்கலைக்கழகங்கள் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்திய அரசாங்கம் சகல வசதிகளையும் கொண்ட தொழிற் பயிற்சி நிலையமொன்றை இரண்டு ஏக்கர் நிலத்தில் வவுனியா ஓமந்தையில் அமைப்பதற்கு முன்வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், வன்னிப் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கும் நோக்கில் இம்மாத முடிவுக்குள் பத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

இந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மாந்தை கிழக்கு, பூநகரி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று, மன்னார் மாவட்டத்தில் இரண்டு என பத்து நிலையங்கள் அமைக்கப்படும். தற்போது வன்னி பிரதேசத்தில் ஒரே ஒரு தொழிற் பயிற்சி நிலையம் கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு இயங்குகின்றது.

இத் தொழிற் பயிற்சி நிலையங்களின் அமைப்பு பணிகள் பூர்த்தியானதும் உடனடியாக ஆறு மாத கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும். மேசன், தச்சுத் தொழில், அலுமினியம் பொருத்துதல், வெல்டிங்க், மோட்டார் சைக்கிள் திருத்துதல், படகுகளில் இணைக்கப்படும் மோட்டார்களைத் திருத்துதல் ஆகிய கற்கைகள் தொடங்கப்படவுள்ளன.

இத் தொழிற் பயிற்சி நிலையங்களில் கற்கையை மேற்கொள்ளுபவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 100.00 முதல் ரூ. 200.00 வரையிலான கொடுப்பனவும், அவர்களது போக்குவரத்துக்காக துவிச்சக்கர வண்டியும் வழங்கப்படும். தொழிற் பயிற்சியைப் பூர்த்தி செய்பவர்களுக்கு உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த பத்து தொழிற் பயிற்சி நிலையங்களும் அமைக்கப்பட்டதும் ஒரே நேரத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி அளிக்கலாமென எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை, இந்திய அரசாங்கம் ஒரு வருட காலப் பகுதியில் சகல வசதிகளையும் கொண்ட தொழிற் பயிற்சி நிலையத்தை ஓமந்தையில் இரண்டு ஏக்கரில் அமைக்கவிருக்கின்றது. இங்கு தொழிற் பயிற்சி கற்கையை மேற்கொள்ளுபவர்களுக்கு இந்தியாவிலும் தொழிற் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான இணக்கப்பாடுகளும் காணப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க ஜப்பான் நாட்டின் ஜய்க்கா நிறுவனமும் சகல வசதிகளையும் கொண்ட தொழிற் பயிற்சி நிலையமொன்றை மன்னாரில் அமைப்பதற்கும் முன்வந்துள்ளது.

சவூதியில் 40 பணிப்பெண்கள் நிர்க்கதி; 6 பேருக்கு சுகயீனம்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் நிர்க்கதியான நிலையிலிருக்கும் 40 இலங் கைப் பணிப்பெண்களுள் சுகயீனமுற்றிரு க்கும் ஐவரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்டிருப்பதாக அதன் பொது முகாமையாளர் ருகுனுகே தெரிவித்தார்.

அந்நாட்டின் குறித்த வைத்தியசாலை யொன்றில் வேலை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி இலங்கையிலிருந்து 41 பணிப்பெண்கள் அண்மையில் ரியாத் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவர்களுக்கு குறித்த வேலை வழங்கப்படவில்லை.

இருப்பினும் குறிப்பிட்ட மாதாந்த சம்பளத்தின் ஒரு பகுதி மாத்திரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு சென்ற ஆறு பெண்கள் சுகயீனமுற்றுள்ளனர். இவர்களுள் ஒருவர் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்

mos.jpgதேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்கள்இன்று 2ம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றன. இந்த மாதத்தின் நான்கு தினங்களை அரசாங்கம் தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு தினங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைமையில் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டம் மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்திலும், கிராம சேவகர் மட்டத்திலும் அரச, தனியார் நிறுவனங்களிலும் முன்னெடுக்கப் படவுள்ளது. இப்பணியில் கிராம சேவகர் மட்டத்தில் அமைக்கப்பட்டி ருக்கும் 16,500 குழுக்கள் ஈடுபடவுள் ளன.

அரசாங்கம் இம்மாதத்தின் 2ம், 9ம், 21ம் , 28ம் ஆகிய நான்கு தினங்களையும் தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாகவும் 16ம் திகதி முதல் 22 வரையான தினங்களை டெங்கு ஒழிப்பு வாரமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.

டெங்குநோய் காரணமாக இவ் வருடத்தின் முதல் ஏழு மாதங்களி லும் 171 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் 23145 பேர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக் களப்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இந்நோய் தீவிர மாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் படையினரால் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சிப் பகுதியில் முன்னர் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாக்க் கருதப்படும் பெருமளவு வெடிபொருட்கள் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து கிளிநொச்சியில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், அதனையடுத்து பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவை திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளைமோர் குண்டுகள் 38, கைக்குண்டுகள் 45, ஆர்பிஜி குண்டுகள் 90, சி-4 ரக வெடிமருந்து 50 கிலோ ஆகியவையே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நாளை வாசுதேவ நாணயக்காரவை சந்திக்கின்றனர்.

Vasudeva Nanayakaraதமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்காரவை நாளை (02-08-2010)  சந்திக்கவுள்ளனர். நீண்டகாலமாக எதுவித விசாணைகளுமின்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் கடந்த மாதம் இவ்விடயம் குறித்து வாசுதேவ நாணக்காரவிடம் தெரிவித்திருந்தனர். இதற்கிணங்கவே இச்சந்திப்பு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திங்கள் கிழமை இச்சந்திப்பு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் பின்னர் வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதியை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”விடுதலைப் புலிகளின் தலைவரின் வாகனச்சாரதி சரணடைந்ததாக வெளியான செய்திகள் தவறானவை” என பொலிஸ் பேச்சாளர்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வாகனச்சாரதி சரணடைந்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட வாகனச் சாரதியாக நீண்டகாலம் பணியாற்றிய சதீஸ்குமரன் என்ற விடுதலைப் புலி உறுப்பினர் இறுதிக்கட்டப் போரின் போது இவர் வன்னியிலிருந்து தப்பிச் சென்றதாகவும் திருகோணமலையில் வைத்து அவர் பொலிஸாரிடம் சரணடைந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அவற்றில் உண்மை இல்லை எனவும், குறிப்பிட்ட நபர் திருகோணமலையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஒரு காலை இழந்தவர் என்றும், தற்போது அவர் பொலிஸ் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

”தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழ் மக்களின் நலன் கருதியே எற்படுத்தப்பட்டுள்ளது. வேறு எந்தப் பின்னணிகளும் இல்லை.” வி ஆனந்தசங்கரி (தவிககூ)

Chelva_Memorial_Anada_Shangareeதற்போது பத்து தமிழ் கட்சிகள் இணைந்து அமைத்திருக்கும் ‘தமிழ் கட்சிகளின் அரங்கம்’ என்கிற அமைப்பு அரசாங்கத்தினதோ அல்லது வேறு எந்த சக்திகளினதோ தூண்டுதலினால் உருவாக்கபட்டதல்ல. இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக கட்சி பேதங்களை மறந்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு இது என்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று (01-08-2010) யாழ்ப்பாணத்திலுள்ள கூட்டணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!

Chelva_Memorial_Anada_Shangaree“இப்பொழுது தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாதிப்படைந்துள்ளனர். வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அம்மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பும் பணியை விடவும், அப்பகுதிகளில் இராணுவக் கிராமங்கைள அமைக்கும் பணிகளுக்கே அரசாங்கம் அதிகம் முன்னுரிமை வழங்குவதாகத் தெரிகின்றது. முறிகண்டிப் பகுதிகளில் அதனை நேரில் அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவும், அவர்களின் துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும் தமிழ் கட்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது வரலாற்றுக் கடமையாகவுள்ளது.

இதன் காரணமாகவே தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல கருத்து முரண்பாடுகளையும், கடந்தகால கசப்புணர்வகளையும் மறந்து இக்கட்சிகள் தற்போது ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக இணைந்துள்ளன. இதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் இணைந்துக் கொள்ள வேண்டிய தேவை  மிக அவசியமானதாகவுள்ளது. இதனை இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து க்கட்சிகளும் விரும்புகின்றன. அதற்காக அக்கட்சியினருக்கு நாம் தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் விரும்புகின்ற நேரத்தில், அவர்கள் விரும்பும் இடத்தில் சந்திப்பதற்கும் தயாராகவுள்ளோம். தமிழ் மக்களின் நன்மைக்காக செயற்படுவதேயன்றி யாரும் யாரினதும் நிழலிலும் குளிர்காய்வது எமது நோக்கம் அல்ல.

Chelva_Memorial_Audienceஅரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்துவற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறுவது சரியானால், அதனை இந்த அமைப்பிற்குள் இணைவதன் மூலம் தடுத்து நிறுத்தலாம் அல்லவா?  தனிப்பட்ட ஒரு கட்சியின் தீர்மானமாக இல்லாமல் அனைத்துக் கட்சிகளின் கூட்டுத் தீர்மானங்களே அந்த அமைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும். இதில் கூட்டமைப்பின் கருத்துக்களையும் முன்வைக்கலாம். தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற அமைப்பில் தாங்கள் இணைந்து கொள்ள முன்வருவோம் என கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தால் கூட அதனை விரும்பாத தமிழர்கள் யார் இருப்பார்கள்? தேசியம் சுயநிர்ணய ஊரிமைகளை யார் மறுக்கப் போகின்றார்கள்? ஆனால், இவற்றை கவர்ச்சிகரமான கோசங்களாக பாவித்து தமிழர்களை மேலும் இன்னல்களுக்குள் தள்ளிவிடக்கூடாது என்பது தான் எமது நோக்கம். தமிழர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அரசியல் வெறுமை நிலையை நீடிக்கவிடக்கூடாது. யதார்த்தமான ஒரு கட்டத்திற்குள் நாம் முதலில் பிரவேசிக்க வேண்டும்” இவ்வாறு திரு. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறப்பினர் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

மேலதிக வாசிப்பிற்கு:

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

குறைந்தபட்ச புரிந்துணர்வின் வரையறையை செழுமைப்படுத்தவும் வலுப்படுத்தவுமான சந்திப்பு – ஓகஸ்ட் 08, 2010ல் : தேசம்

கிளிநொச்சி பொன்னகரில் மக்கள் மீள்குடியமர படையினர் தடைவிதித்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!

Suresh_Piremachandranவவுனியா முகாமிலிருந்து கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்ட மக்களை அவர்களின் இடங்களில் மீள்குடியமர படையினர் மறுத்ததால் மீண்டும் அவர்கள் இடைக்கால முகாமில் தஞ்சமடைந்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தின் 35 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்  அவர்களின் இடங்களில் மீள்குடியேறுவதற்காக அழைத்துச் செல்லபட்டபோது அப்பகுதியிலுள்ள படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் மீள்குடியேற்றத்தை தடுத்துள்ளனர். இதனையடுத்து அம்மக்கள் தங்களின் இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர். இம்மக்களை அழைத்துச்சென்ற மாவட்டச் செயலக அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் இடைக்கால முகாமாக இயங்கும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை தங்க வைத்தனர்.

கிளிநொச்சியில் ஏ-9 பிரதான வீதிக்கு மேற்கே அமைந்துள்ள வறிய மக்கள் வாழும் கிராமம் பொன்னகர் ஆகும். இக்கிராமத்தில் வலுவிழந்தோர் மற்றும், விதவைகளுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர் ஒருவர் அமைத்துக் கொடுத்திருந்தார். அவ்வீட்டுத் திட்டத்தில் குடியிருந்த மக்களே வவுனியா முகாமிலிருந்து மீள்குடியமர்வுக்காக அவர்களின் சொந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்த வீடுகள் விடுதலைப் புலிகளால் அமைக்கபட்டவை என்றும் இவற்றில் குடியமர அனுமதி இல்லை எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளபட்ட சமாதானப் பேச்சுவார்தை காலகட்டத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் செல்வந்தர்கள் கிளிநொச்சிப் பகுதிகளிலுள்ள சில வறிய கிராமங்களில் வீடமைப்புத் திட்டங்களை  அமைத்துக் கொடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

போராட்டம் முதலமைச்சர் தலையீட்டால் முடிவு

upavaasa.jpgகாத்தான்குடி நகரசபை அத்துமீறி செயற்படுவதாக கண்டனம் தெரிவித்து ஆரையம்பதியில் உண்ணாவிரதம் ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் காத்தான்குடி நகரசபையின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்பாக தற்காலிகக் கூடாரம் அமைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது.

ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளர் திருமதி மேரி கிருஷ்ணாசாந்தன் தலைமையில் ஏழு பிரதேச சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.ஆரையம்பதி பிரதேச சபை எல்லைக்குள் கடந்த பல காலமாக காத்தான்குடி நகரசபை பல அத்துமீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது தொடர்பாக இப்பகுதி மக்களும் ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்புகளும் அரசியல் வாதிகளும் அரச உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையெனவும் தொடர்ந்து அத்துமீறல்கள் தொடர்வதால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த அத்துமீறல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கும் கோரிக்கைகள் தொடர்பான கடிதம் பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், பிரதியமைச்சர் வி.முரளிதரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி நகரசபைக்கெதிராக ஆரையம்பதி பிரதேச சபைத்தலைவர்,மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் \உண்ணாவிரதப்போராட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்நிரகாந்தன் தலையிட்டதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.