August

August

பசில் தலைமையில் தூதுக்குழு இந்தியாவுக்கு இன்று பயணம்

இந்திய பிரதமரின் விசேட தூதுவரது விஜயம் தொடர்பாக புதுடில்லி இன்னமும் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை எனத் தெரிவித்த அரசாங்கம், இதேவேளை இலங்கையின் மூவரடங்கிய தூதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்லவிருப்பதாக அறிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பெற்றோலிய,பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரின் விசேட தூதுவர் இவ்வாரத்தில் கொழும்பு வரவிருப்பதாகவும் அதிகாரி மட்டத்தில் ஒருவர் அனுப்பப்படலாமென முன்னர் கூறப்பட்டாலும் இப்போது அரசியல் மட்டத்திலான ஒருவரே அனுப்பப்படலாமெனவும் அதில் சிதம்பரம், பாலு ஆகிய இருவரது பெயர்களும் அடிபடுவதாக வார இறுதிப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருப்பதாக செய்தியாளர் சுட்டிக்காட்டியபோது பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறியதாவது; இந்தியப் பிரதமர் தனது விசேட தூதுவரை அனுப்ப விருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் அறிவித்திருப்பது மட்டுமே எமக்குத் தெரியும். யார் அனுப்பப்படுகின்றார். எப்போது அவர் வருவார் என்பது பற்றிய எந்த விபரமும் புதுடில்லியிடமிருந்து எமக்கு உத்தியோக பூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்திய பிரதமரின் விசேட தூதுவர் எப்போது வந்தாலும் அவரை வரவேற்பதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது.அவருக்கு வடக்கு, கிழக்கு உட்பட எங்கு வேண்டுமானாலும் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படும் சுதந்திரமாக சென்று வர இடமளிக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரமே ஜயந்த தெரிவித்தார்.

ஐ.சி.சி. துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் இடத்தில் சங்ககர

sangakkara.jpgஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை அணி தலைவர் சங்ககராவும் 2வது இடத்தில் சேவாக்வும் உள்ளனர். 3வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் கிளார்க்கும் உள்ளனர்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் ஏ9 வீதியால் செல்வதற்குத்தடை இல்லை

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் தரைவழியாக வடபகுதி செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சால் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறான எந்தத் தடையும் அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லை என அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஏ9 பாதையூடாக யாழ்.குடாநாட்டுக்குச் செல்வதற்கே இந்தத் தடைப் பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் பரவியிருந்தன.

எனினும் அவ்வாறான புதிய விதிமுறைகள் எதுவும் அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லையென தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல மற்றும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

இது பற்றி லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறுகையில் “அவ்வாறான எதுவும் இல்லை. யாழ்ப்பாணம் செல்லத் தரை வழியைப் பயன்படுத்த முடியும். எனினும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அதற்கு முன்னதாகப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். அதை விடுத்து தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அத்துடன் இது பொலிஸாருடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல. இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்றார்.

இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் மெதவல இது பற்றி தெரிவிக்கையில்; “உத்தியோகபூர்வமாக அவ்வாறான எந்தத் தடை உத்தரவும் பாதுகாப்பு அமைச்சிலிருந்து பிறப்பிக்கப்படவில்லை. வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடபகுதிக்குச் செல்வதற்குச் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் கூறும் காரணத்திற்கு ஏற்ப அவர்களை எந்த வழியில் அனுமதிப்பதென அமைச்சு தீர்மானிக்கும். எனவே ஆதாரமற்ற தகவல்களில் குழப்பமடையத் தேவையில்லை என்று கூறினார்.

யாழ்.குடாநாடு செல்லும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டை கொண்டோர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை கொழும்பு காலி முகத்திடல் பகுதியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் நுழைவாயிலுள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் மேர்வின் சில்வா

mervyn.jpgசமீபத்தில் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மேர்வின் சில்வா நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிட்டுள்ளார்.

அன்பளிப்புப் பொருட்களுடன் அவர் அங்கு சென்று பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு நாட்களாக அவர் நாட்டிலுள்ள பல பௌத்த ஆலயங்களுக்கு சென்று அங்கு வர்ணம் தீட்டும் பணிக்கு அனுசரணை வழங்கியதாகவும் இப்பணியின் சில அரச தரப்பு உறுப்பினர்களும் பங்கேற்றதாகவும் அவரின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள மேர்வின் சில்வா ராமாவில் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நிலையத்திற்குச் சென்றதுடன் பாடசாலைப் பிள்ளைகளுக்கு புத்தகங்களை வழங்கியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை களனிய விகாரையில் வர்ணம் தீட்டும் நடவடிக்கைக்கு அனுசரணை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தனது மக்களுக்காக பணியாற்றும் செயற்பாட்டை தொடர்ந்து மேற்கொள்வார் எனவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மிருகங்கள் பலி சத்தியாக் கிரக போராட்டம்

மிருகங்கள் பலி கொடுக்கப்படுவதனை தடுப்பதற்காக சத்தியாக் கிரக போராட்டம் நடத்தப்பட உள்ளதாக பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனனர்.

உருளை கிழங்குகளுக்கு புதிதாக 30 ரூபாய் வரி

potatoes.gifஇறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோகிராம் உருளை கிழங்குகளுக்கும் புதிதாக 30 ரூபாய் வரி விதிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , நிதி அமைச்சு செயலாளரிடம் பணித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திருமலை நகர சபை பதில் தலைவராக செல்வராஜா

திருகோணமலை நகர சபையின் பதில் தலைவராக கே.செல்வராஜா நேற்று திங்கட்கிழமை காலை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். திருகோணமலை நகரசபையின் உபதலைவராகப் பணியாற்றிவரும் இவரைப் பதில் தலைவராக கிழக்குமாகாண முதலமைச்சரும் உள்ளூராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பணித்திருந்தார்.

நகரசபைத் தலைவராகப் பணிபுரிந்த எஸ்.கௌரிமுகுந்தனை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக பதவி நீக்கம் செய்து விட்டு, அவர் மீதான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை பதில் தலைவராகப் பணிபுரியும் படி உபதலைவரான செல்வராஜாவை முதலமைச்சர் நியமித்தார். அதற்கிணங்கவே உபதலைவர் செல்வராஜா, பதில் தலைவராகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பணிப்பெண்களை ஜோர்தான் நாட்டிற்கு அனுப்ப தடை

sri-lankan-maids.jpgஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வேலைவாய்ப்பிற்காக பணிப்பெண்களை ஜோர்தான் நாட்டிற்கு அனுப்புவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சியினர் சந்திப்பு

இன்று மதியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்கட்சி பிரநிதிகளை அலரிமாளிகை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். ஜக்கிய தேசிய கட்சி சார்பில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, திஸ்ச அத்தநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேராவும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்துரையாடியுள்ளனர்.

தூற்றுவார் தூற்றட்டும் எனது பணி தொடரும்…… – எனக்குத் தெரிந்த நியாயம்! – 2 : சஹாப்தீன் நாநா

Chankanai_Marketசிறிலங்காவில் நிலத்திற்குக் கீழ் நிறைய வளங்கள் இருக்கின்றதாமே? உண்மையா? என ஒருவர் கேட்க, ஆம் இருக்கின்றது என இன்னொருவர் சொல்ல. இதை ஆராயப் புறப்பட்டது ஒரு குரூப். ஆம் சிறிலங்கா முழுக்க உள்ள நிறையப் பிரதேசங்களின் மண் பரிசோதிக்கப்பட்டது. இறுதியில் ஊவா மாகாணத்தில் ஒரு காட்டுப் பிரதேசத்தில் (மலைப்பிரதேசம்), அரச காணியில், நிலத்திற்குக் கீழ் இரும்பு தாது இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இரண்டு வருடம் (2006 முதல் 2008 வரை) ஓயாத உழைப்பு, அலைச்சல், அமெரிக்க நில ஆய்வாளர்கள், இங்கிலாந்தின் மண்ணியல் நிபுணர்கள், சிங்கப்பூர் கம்பனி ஒன்றின் வழிகாட்டல் என ஓடோ, ஓடென ஓடி, நாலரை கோடி ரூபா சிறிலங்கா பணத்தை தண்ணியாக இறைத்து, சிறிலங்காவில் இரும்பு இருக்கின்றது என்ற உண்மையை கண்டாயிற்று.

அப்புறம் கிட்டத்தட்ட 5000 (ஐயாயிரம்) கோடி ரூபா முதலிட்டு, முதல் வருடம் 1000 பேருக்கு வேலை வாய்ப்பளித்து, சிறிலங்கா பொருளாதாரத்தை ஜம்மென்று உயர்த்துகின்றோம் பேர்வழி எனக் கூறிக்கொண்டு 2009ம் ஆண்டு நவம்பர் 14 முதல் மும்மூர்த்திகளின் கதவை தட்டிக் கொண்டிருக்கின்றோம், தட்டுகின்றோம், தட்டுகின்றேன். ஆனால் இதுவரையும் எம்மூர்த்தியும் எனது புறஜக்ட்டை தூக்கிக்கூட பார்க்கவில்லை. ஆனால் இந்த புறஜக்ட்டுக்காக எனக்கு கடன் தந்த ஒவ்வொருவரும் என்வீட்டுக்கதவை தட்டி, பிடறி மயிர் தெறிக்க திட்டிவிட்டு போகின்றார்கள். காக்கா தொப்பி புரட்டிட்டாண்டா? இதுதான் இப்போதைய நிலமை. இதை விட்டுவிட்டு பசிலுக்கு சாமரம் வீசி, மகிந்தக்கு வீதியில் குடைபிடித்து, கோட்டாபாயவிற்கு பன்னீர் தெளிக்க இன்னும் நம்முட ஆத்மா சாகல. சாகவும் மாட்டாது. அது ஒரு பீனிக்ஸ்.

இப்படித்தான் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பீனிக்ஸ் உருவாக வேண்டும், உருவாக்கப்பட வேண்டும். போராடு, போராடு, போராடு என்றுதான் நாமும் சொல்கின்றோம். முதலில் உன்னுடன், உனது வாழ்க்கையை வென்றெடுக்க போராடு. கத்தியின்றி, ரத்தமின்றி, வெள்ளேந்திரியாக போராடு. பசிக்குணவு, உனது பசிக்குணவு, பொண்டாட்டி, புள்ளகுட்டியின் பசிக்குணவு, அப்புறம் வீதிக்கு வா. வாழ்க்கையுடன் போராடத் தெரியாதவனுக்கு போராட கற்றுக்கொடு. நோ பொளிடிக்ஸ். இப்படி நாலுபேரை உருவாக்கு. அப்போது உனக்கு புரியும் நீ இங்கே நாயாக உழைக்க, யாரோ உன்னை சுரண்டி தின்பது புரியும், தெரியவரும். நீ உற்பத்திசெய்து, கண்ணீரும், களைப்பு நீரும் கலந்து உருவாக்கிய உருளைக்கிழங்கு சந்தையில் 90 ரூபாவுக்கு விற்கமுடியாமல் திரும்பிவரும். மினிஸ்டர்ர மச்சினன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த உருளைக் கிழங்கு சந்தையில் 55 ரூபா சில்லறை விலை, 43ரூபா ஹோள்சேல் விலை என துதிபாடும். இடிக்கும். மனம் பதறும். அரசையும் ஆட்சியாளர்களையும் திட்ட வேண்டும் போல இருக்கும். ஆனால் உன்னிடம் பலம் இருக்காது.

உனது அடுத்த தோட்டத்தில் தக்காளி செய்தவரின் கதையும் இதுதான். தக்காளி சோஸ் இந்தோனேசியாவில் இருந்து இம்போட் செய்யப்படுவதால் தக்காளி விலை சரியும். சைனாவில் இருந்து பிளாஸ்ரிக் குடம் இறக்குமதி செய்யப்படுவதால், மண்பானை உற்பத்தி படுக்கும். ஆம் அங்கிருந்துதான் நாம், நான் சொல்லும் சொல்லும் புரட்சி வெடிக்கும். அது பொருளாதாரப் புரட்சி, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற புரட்சி.

இல்லை எங்கள் ரத்தம் சிவப்பு, சிங்களவன்ட ரத்தம் கறுப்பு. அதனால நாங்க யுரோப்புல வசதியாக இருந்து கொண்டு மந்திரிப்போம், வன்னியில இன்னும் நேர்த்தி செய்த எங்கட வாரிசுகள் இருக்கு, அவர்கள காவு கொடுத்துப் போட்டுத்தான் சாவோம் என்றால், அல்லாஹ்ச்சாமி, ஹிந்துச்சாமி, புத்தர்ச்சாமி, மாவோச்சாமி, லெனின்சாமி எல்லாமே, எல்லோருமே பொய் என்றுதான் நான் சொல்வேன்.

நாம் எவ்வளவுதான், அய்யன்னா நாவன்னா என்னா, அகிலாண்டேஸ்வரிகள்ற கருவறை வரைதான் நடைபயணம் செய்தாலும், சிறிலங்கா ஒரு முழு நாடு, அதில் சிங்கள, தமிழ், முஸ்லீம் என்ற மூவின மக்கள் வாழ்கின்றார்கள், இனியும் வாழ்வார்கள் என்ற காய் நகர்த்தல்கள்தான் இனி நடக்கும். அரங்கேறும். தடங்கல்களை ஏற்படுத்தலாம். ஆட்சியாளர்களை திக்குமுக்காடப் பண்ணலாம். திக்குமுக்காடப் பண்ணினோம். அதன் பயனைத்தான் மே17, 2009ல் முள்ளிவாய்க்கால் சகதிக்குள் அறுவடை செய்தோம். அதில் இருந்து கற்றதுதான் இந்த எனக்குத் தெரிந்த நியாயம்.

2009 மே இல் உலகமே தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், மே 19ல் முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் கேகாலை பஸ்நிலையத்துக்கு, முன்னிருக்கும் ஹிந்துக் கோயிலில், பட்டப்பகல் 11 மணிக்கு, லவுட்ஸ்பீக்கர் கட்டி தமிழ்மக்கள் பெரும் ஆரவாரத்துடன் பூஜை, புனருத்தாரணம் செய்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சிங்களவனும் கோயிலை கடக்கும் போது, குனிந்து, வலதுகையை நெஞ்சில் அமர்த்திக் கொண்டு மௌனியாகச் செல்கின்றான். கோயிலுக்கு 200 அடி தூரத்தில் படா டோபமாக, பணத்தை தண்ணியாக இறைத்து கட்டப்பட்டிருக்கும் முஸ்லீம் பள்ளிவாசலில் இருந்து பாங்கொலியும் அதற்குப் போட்டியாக கேட்கும். எந்த சிங்களவனும் வந்து இது எங்கள் பூமி, தமிழனும், சோனியும் இங்கிருந்து வெளியேற வேண்டும் என இதுவரை சொல்லவில்லை. இதுதான் சிங்களவன்.

குருவி சேர்ப்பது போல் ஐரோப்பிய நாடுகளில் சேர்ப்பதை உண்டியல்காறர்களுக்கு கொடுக்காமல், அந்த அகதிகளுக்கு, அந்த மனித தெய்வங்களுக்கு, தனித்தனியாக அனுப்புவோம். ஒரு மனிதனை உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கப்படும் ஒவ்வொருவனும்தான், நாளைக்கு அல்லது நாளை மறுதினம் சிந்திக்க தொடங்குவான். தனது உருளைக்கிழங்கு ஏன் மார்கட்டில் விலை போகல என சிந்திப்பான். சிந்திக்கும் வளம் நம்மால் வளங்கப்பட்டிருக்கும். அதுதான் ஆரம்பம். அவ்வாறு அவன் சிந்திப்பதுதான் ஆரம்பம். அவனை தானாக, சுயமாக சிந்திக்க விட வேண்டும். அப்புறம் என்ன செய்யலாம் என அவனே முடிவெடுப்பான். கிட்டத்தட்ட 10 வருடம் எடுக்கும். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாமே. எனவே எம்மவன் முப்பது வருடமெல்லாம் வேஸ்ட் பண்ண மாட்டான். சிங்கள, தமிழ், முஸ்லீம் சகோதரர்களுடன் சேர்ந்து அழகான முடிவெடுப்பான்.

சின்னத்தாயியை இந்திய ஜனாதிபதி தனது மாளிகைக்கு அழைத்துத்தான் பட்டம் வழங்கினார். நாம் பல நுறு சிங்கள, தமிழ், முஸ்லீம் சின்னத் தாயிகளையும், சின்னத் தங்கச்சிகளையும் உருவாக்குவோம். அவர்களாக சுயம்புவாக வெளிவருவார்கள். அப்போது அவர்களைத்தேடி பல கட்சிகள் வரும். வரப்பண்ண வேண்டும். வரப்பண்ணினோம். அதை கண்டி மாவட்டத்தில் பரீட்சார்தமாக செய்தும் பார்த்தோம். எம்மால் உருவாக்கப்பட் ஏழைத்தாய்மாருக்கு கொழும்பு கொமர்சியல் வங்கி வீடு தேடிவந்து கடன் வழங்கியது. பத்தாயிரம் ரூபா முதல் 5லட்ச ரூபா வரை. யாருடைய கரண்டியோ, கால்பிடித்தலோ இல்லாமல் செல்ப் கரண்டி அங்கு வெற்றி பெற்றது. வாட்டசாட்டமான, கறுப்பு அரசியல்வாதி, வீடு தேடிவந்து, வாக்கு வழங்குங்கோ, உங்கள் கணவன்மாரை கொரியாவுக்கு அனுப்பி வைக்கின்றேன் என்றார். கடந்த இறுதித் தேர்தல் முடிந்து பத்துநாளில் 147 பேரை கொரியாவுக்கு அனுப்பியும் வைத்தார். இதுதான் சிங்களவன். இதுதான் பொருளாதாரப் புரட்சி.

பொருளாதாரப் புரட்சி எப்படி எங்கள் உரிமைப் பிரச்சனைக்கு வடிகாலாகும்? என்று இக்கென்னா வெச்சிப்பேசினால் நாம் கொஞ்சம் பின்னே போய் மீண்டும் மாவோவை துணைக்கழைக்க வேண்டியிருக்கின்றது. இவரென்ன சியாங்கே சேக்குடன் மல்லுக்கு நின்று விட்டா சீனத்தை சிவப்பாக்கினார். பாட்டாளி மக்களுடன் ஏர் பிடித்துவிட்டல்லவா பீல்டுக்கு வந்தார்.

இப்போது ஆசிய அபிவிருத்தி வங்கி, உதவி தலைவர் யாழ்ப்பாண விஜயம் என்ற செய்தியும் காதைக்கடிக்கின்றது. சிறிலங்காவில் நிறைய அபிவிருத்தி திட்டங்களை இந்நிறுவனமே மேற்கொண்டுள்ளது. சில சமயம் நமது அரசியல்வாதிகளின் தில்லு முல்லு காரணமாக ஒதுக்கிய பணம் திரும்பி போன கதைகளுமுண்டு. இம்முறை எமது எம்பிக்குளும், மக்களும் கொஞ்சம் உசாராக இருந்தால் நிறைய சாதிக்கலாம். இந்நிறுவனம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அதிகாரிகளை நியமித்துள்ளது. இவர்களை ஐ.ஆர்.டி.பி. (இன்ரர் கிறெட் ரூறல் டெவலப்மென்ட் போரட்) புறஜக்ட் டிரக்டர் என அழைக்கின்றனர். ஒவ்வொரு கச்சேரிகளிலும் ஒவ்வொரு டிரக்டர்களுக்கும், அலுவலகம், ஆள், அம்பு என சகல வசதிகளும் உண்டு. நல்லவர்கள். மனிதாபிமானிகள். நன்கு கற்றவர்கள். சாதி, இனம், மதம் எதுவுமே பார்க்க மாட்டார்கள். யாரும், எப்போதும் போய் இவர்களது கதவை தட்டலாம்.

எம்மிடம் ஏதும் திட்டங்கள் இருந்தால் இவர்களிடம் சொல்லலாம். காது கொடுத்து கேட்பார்கள். அடுத்த வருடம் ஆசிய அபிவிருத்தி வங்கி நமது நாட்டுக்கு பணம் தரும் போது; அந்த திட்டத்துக்கும் அரசிடம் பணம் வழங்கி ஏழைகளின் வாழ்வை நிறைய வைப்பார்கள். ஒவ்வொரு மாவட்ட கிராம அபிவிருத்திக்கும், வங்கிகள் வழங்கும் சிறு கைத்தொழில்கள் கடன்களுக்கும், இவர்களது கைப்பட காசோலைகளில் கையொப்பமிடப்படும்.

ஒரு முறை ஒரு புறஜக்கட் டிரக்டரை சந்திக்க வேண்டிய வாய்பு ஏற்பட, மலையகத்தில் ஏழைத்தாய்மார் படும் அல்லல்களை அள்ளி வைத்தேன். என்ன செய்யலாம் என கேட்டார். சிறிலங்காவில் கிராமங்களில், அப்போது கிராம்பு விலை 130 ரூபா. இதை கிராம மக்களிடம் துட்டுக்கு இரண்டாக வாங்கும் பண முதலைகள்; கிலோ முன்னூறு ரூபாவாக எற்றுமதி செய்து கொள்ளையடிக்கின்றார்கள். ஏன் ஐயா நீங்களே கோடவுணை (சேமிப்பகம்) உருவாக்கி, உங்கள் கிராமத்தில் உள்ள மக்களிடம் வாங்கி, நேரடியாக எற்றுமதி செய்து அவ்விலாபத்தின் ஒரு பகுதியை இவ் ஏழைகளுக்கு வழங்கலாமே என்றேன். அதை எம்மால் செய்ய முடியாது! உன்னால் செய்ய முடியுமா என்றார். பணம் ஒரு 40 லட்ச ரூபா இருந்தால் செய்ய முடியும் என்றேன். டண். 40 லட்ச ரூபாவுக்கு காசோலை கிழித்து, அடுத்த நாளே, ஒரு இருபத்தைந்து தாய்மார்களை அழைத்து; அதாவது கணவன்மார்களை இழந்த தாய்மார்களை அழைத்து, ஒவ்வொருவரிடமும் காசாக இருபதாயிரம் கொடுத்து, அம்மக்களே உங்கள் கிராமத்தில் இருக்கும் கிராம்புகளை வாங்கி வீட்டில் வையுங்கள், நாம் வந்து சேகரிக்கின்றோம் என்றோம். வெற்றி. வெற்றி பூரண வெற்றி. அவர்களது கராம்பு கனடா சந்தையில் 340 ரூபாவுக்கு விலை போது. 90 வீத இலாபம் அவ்வேழைத் தாய்மாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்போது அம்மாவட்டத்தில் 132 காந்தா சமிக்திய (பெண்கள் அமைப்பு) உருவாகி உள்ளது. இவர்களுக்கு அரசியலும் தெரியாது. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. ஆனால் அத்தொகுதி மெம்பர் ஒப் பார்ளிமென்ட்டை தெரிவுசெய்யும் பவரில் இருக்கின்றார்கள். இதைவிட ஆச்சரியம். 40 லட்ச ரூபாவைத் தூக்கித்தந்த அந்த புறஜக்ட் டிரக்டருக்கும் எனக்கும் எந்த மாமன், மச்சான், தோழர், கோம்ரேட் உறவும் கிடையாது. அவர் ஒரு சிங்களவர். சிங்கள மகாத்மா. அவர் வீட்டில் நாலு பேர் போனால் உட்காருவதற்கு கூட இன்றுவரையும் கதிரை கிடையாது.

இப்படி மகாத்மாக்களைத் தேடி கண்டு பிடித்து தார்மீக, ஜனநாயக, சோசலிச சிறிலங்காவை உருவாக்கிவிட்டு, எங்க கோயில் கட்டுற, எங்க பன்சல கட்டுற, எங்க பள்ளிவாசல்கட்டுற என யோசிப்போம். எங்கள உட்டா இஸ்லாத்த பலோ பண்ற ஆட்களே கிடையாது, நாங்க வேற, நீங்க வேற என்று இஸ்லாம் பேசின அரபு நாட்டு காக்காமார்களே இப்போ எறங்கி வந்து, கட்டுங்கோடா கிறிஸ்தவ தேவாலயத்த என்று சொல்லி, கட்டார் மாநகரின் மத்தியில் தேவாலயமும் கட்டி, திறப்பு விழாவும் வச்சின்டான். ஆனால் நீ  அவன்ட மாளிகைக்கு முன்னால தேரோட்டம் போறதை மகின்தவும், பொண்டாட்டியும் தரிசிக்கின்றார்கள், ஆனால் நீ எங்க பகுதியில் வந்து யாவாரமும் செய்யக் கூடாது, கோயில் பூசையும் செய்யக் கூடாது….புரியல ? புரியல…நம்ம இதயத்துக்குள்ள இருக்கிற அந்த சாமான் என்ன என்று புரியல. என்கு நியாயமாயும் படல.
(தூற்றுவார் தூற்றட்டும் எனது பணி தொடரும்……)

எச்சரிக்கை :
யாழ்ப்பாண மாநகரில், ஐரோப்பிய ஸ்டைலில் பெற்றள் கராஜ் திறப்பதற்குரிய கோட்டா, யாரோ ஒரு பெரும் புள்ளியின் கையில் இருப்பதாகவும், கொஞ்சம் காக்காமாரும், சிங்கள சகோதரயோக்களும் அதற்கு முயற்சி பண்ணுவதாகவும் தூது வந்துள்ளது. தயவு செய்து நாட்டுப்பற்றுள்ளவர்கள் முயற்சி பண்ணுங்கள். அப்புறம் சோனி எங்கட எல்லைக்குள்ள பெற்றள் செற் திறந்துட்டான், சிங்களம் புகுந்து அராஜகம் பண்ணுகின்றது என கட்டுக்கதைகள் சொல்லாமால் புத்திமான் பலவான் என்பதை நிரூபியுங்கள் பிளீஸ். இன்வெஸ்ட்மென்ட் ஒரு கோடி ரூபாவாம்.

._._._._._.

எனக்குத் தெரிந்த நியாயம்! – 1

Micro_Credit_Project//இக்கட்டுரையாளர் தேசம்நெற் க்கு நன்கு அறிமுகமானவர். இலங்கையில் ஒடுக்கப்பட்டுள்ள சமூகங்கள் சார்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருபவர். சில பொதுத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார். புலம்பெயர்ந்து வாழ்கின்ற இவர் காலத்திற்குக் காலம் இலங்கை சென்று அம்மக்களுடன் இறுக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளவர். அவர் புனைப்பெயரிலேயே தனது ஆக்கத்தினைத் தந்துள்ளார். இது தேசம்நெற் இல் வருகின்ற அவருடைய முதலாவது ஆக்கம். எதிர்காலத்தில் இவரது ஆக்கங்கள தொடர்ந்து வரும் என நம்புகிறோம். – தேசம்நெற். //

அட எல்லோருமே திரிந்திவிட்டார்கள் போல தெரிகின்றது. ஏரோப்பிளேன் வாங்க, ரொக்கட் லோன்ஜர்கள் வாங்க, எறிகணைகள் வாங்க, வெடிமருந்துகள் வாங்க, அழிவாயுதங்கள் வாங்க என பணத்தை கத்தை கத்தையாக சேர்த்தவர்களும்; அந்த நாலுகால் மிருகத்துக்கும், அதற்கு துணை போகின்றவர்களுக்கும் எப்படி ஆப்பு வைக்கலாம் என மூளைகளை கசக்கியவர்களும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு; இப்போ புதுசாக வடக்கின் அபிவிருத்தி, வடகிழக்கின் புனர்நிர்மாணம் என பேசத்தொடங்கியுள்ளார்கள். வாழ்க மகிந்த பிறதர்ஸ். அந்தப் புண்ணியவான்கள்தானே இதற்கெல்லாம் பிள்ளையார் சுழிபோட்டவர்கள்.

ஆனால் இந்த மகிந்த பிறதர்ஸின் நடவடிக்கைகள்தான் ஒன்றும் புரியாத புதிராக இருக்கின்றது. ஏதோ நல்லது செய்கின்றது மாதிரியும் தெரிகின்றது. சில நேரம் குப்புற கவுத்து விடுவார்களோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது. அவர்கள் நல்லது செய்வார்கள் என நினைப்போம். அப்படித்தானே இப்போ ஏ டபுள் பிளஸ் கைதியாக இருக்கும் கேபி சகோதரயா சொல்லியுள்ளார். நம்பிக்கைதான் வாழ்க்கையாம். அட போங்கப்பா இத சொல்றத்துக்கு இந்த ஆயுத கொள்வனவாளர் பிளஸ் கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களின் ரத்தம் குடிக்க காரணமாக இருந்த தொப்பிச் சாமியாருக்கு  30 வருசம் எடுத்திருக்கின்றது. அவ்வளவு மூளை. இந்த மயிரத்தான் எங்களுக்கு 7ம் வகுப்பில் பைதாகரசின் தேற்றம் சொல்லித்தந்த சோதிலிங்கம் வாத்தியாரும், காத்தான்குடி பள்ளிவாசலில் 75 தலைகள் வெடித்து சிதறிய போதும், அறந்தலாவ புத்த பன்சலவில் 43 குட்டி ஆமுதுறுக்களின் தலைகள் வெட்டிச் சரிந்த போதும் நாங்க சொன்னோம். கேட்கல, கேட்கல, யாருமே காது கொடுத்துக் கேக்கல. அதுதான் சிங்களவன நம்புவோம், சோனிக்காக்காமாரயும் கொஞ்சம் நம்புவோம், அடுத்த இயக்க காறர்களையும் கொஞ்சம் நம்புவோம்டா புள்ளைகளே என தலையால அடிச்சிக்கிட்டு சொன்னோம். ஹ்ம். யார்தான் நமது புலம்பல்களை காது கொடுத்துக் கேட்டார்கள். எனிவே விடயத்துக்கு வருவோம்.

அந்த மனுஷன் இறப்பதற்கு முந்திய மாவீர் தின உரையில் ஒரு விடயத்தை மிக ஆளமாகவும், அகலமாகவும், தெளிவாகவும் சொல்லிவிட்டுப்போனார். இனி போராட்டம் புலம்பெயர்ந்தவர்களின் கையிலேயே தங்கியுள்ளது என. அந்த மனுஷன்ட வாய்க்கு சக்கர போடணும். இல்லா விட்டால் ஜீஎஸ்பி வரிச்சலுகையை ஏன் நீக்க வேண்டும். ஐ.நா.தலைமைச் செயலர் சிறிலங்காவுக்கெதிராக ஒரு ஆணைக்குழுவை ஏன் நியமிக்க வேண்டும். ஏதோ சம்திங் எல்ஸ். யாரோ ஐநூறு பேர்களோ அல்லது நூத்தி அம்பது நபர்களோ புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு அரசுக்கெதிராக டூ விட்டுக் கொண்டிருக்கின்றார்கள் போலத்தான் தெரிகின்றது. இப்படியே புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு டூ விட்டுக் கொண்டிருந்தால் அந்த பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையக, ராணுவத்தில் கணவர்மார்களை இழந்து கைம் பெண்களாக இருக்கும் தாய்மார் எல்லோரையும் பற்றி யார் கவலைப்படுவது. நாம் கொஞ்சம் கவலைப்படுவோம்.

சிறிலங்கா பொருளாதாரம் பார்க்கிறதுக்கு அழகாகத் தெரிந்தாலும் ரசிக்கிறதுக்கு, மூச்சுவிடுவதற்கு, மூணுவேளை றிலாக்ஸாக உண்பதற்கு அவ்வளவு அழகாகத் தெரியல. சன்லைட் 27 ரூபா, சீனி 105 ரூபா, லாம்பெண்ணை போத்தல் 56 ரூபா, தக்காளி கிலோ 120 ரூபா, அரிசி (ஒன்றுக்கும் உதவாத புண்ணாக்கு அரிசி) கிலோ 65 ரூபா, தேங்காய் எண்ணை போத்தல் 180 ரூபா, மீன் கிலோ 700 ரூபா, இறைச்சி கிலோ 350 ரூபா, தங்கம் பவுண் 34,000 ரூபா, பஸ்ஸில் ஒரு ஹோல்ட்டில் இருந்து அடுத்த ஹோல்ட்டில் இறங்க 6 ரூபா, தத்தக்க பித்தக்கா பணிஸ் 12 ரூபா, பாண் 55 ரூபா, அங்கர் 400 கிராம் பக்கட் 450 ரூபா என, இப்படி பொருட்களின் விலை தினமும் ஏற, ஒரு நபரின் நாட்சம்பளம் 600 ரூபா. ஆம் வரவு எட்டணா செலவு பதினெட்டணா. அதிகம் 10 அணா, அதனால் பாமரர்கள் பாடு, படு ஜோர் என்று சொல்வதற்கில்லை.

அரசு திட்டங்களை தீட்டுகின்றது. தினமும் விளம்பரங்கள் வருகின்றது, மக்களும் ஆவலுடன் எதையோ எதிர்பார்க்கின்றார்கள். மகின்த பிறதர்ஸ் எங்கேயாவது ஆப்படித்து நம்மை முன்னேற்றுவார்கள் என அரசியல்வாதிகளும் தினமும் ஏதோ ஒரு இலவு காத்த கிளி கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். சரி நம்புவோம், நம்புவோம், நம்பிக்கைதானே வாழ்க்கை. ஆனால் நாளைக்கு சமைத்துச் சாப்பிட சட்டி பானையும் இல்லாமல், தீப்பெட்டியும் இல்லாமல், அரிசி, தேங்காயும் இல்லாமல் அவதிப்படும் அந்த ஜீவன்களுக்கு ஆறுதல் சொல்ல மகின்த மட்டும் போதுமா? நமது கைகளும் நீள வேண்டாமா? நமது கைகளையும், அதி புத்திசாலித்தனத்தையும் கொஞ்சம் நீட்டலாமே.

நமது எம்பிக்கள் ஒவ்வொருவருக்கும் வருடாவருடம் 60லட்சம் ரூபா, தமது தொகுதி அபிவிருத்திக்கென அரசால் ஒதுக்கப்படுகின்றதாமே? ஓள்ரெடி இந்த வருடத்துக்குரிய நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாமே? இதுவரை, வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வடம் பிடித்து, நம்மையெல்லாம் உசுப்பேத்திய அந்த அதி புத்திசாலிகள்?  அந்தப் பணத்தை எடுத்து, அந்த அப்பாவி உள்ளங்களுக்கு கொடுக்கவில்லையாமே? இது உண்மையா? யாரும் விபரங்கள் தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டுச் சொல்லுங்கோவன். அந்த பணம் திறைசேரிக்கு திரும்பி போக முன்னர், அந்த அப்பாவிகளின் வயிற்றை, அப்பணம் சென்று சேர ஒரு ஐடியா சொல்லுங்கோவன்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள சோமாலி நாட்டை சேர்ந்தவர்கள், வங்கிகளில் கணக்கோ வேறு தொடர்புகளோ வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பள்ளி வாசல்களில் அச்சமூகத்தவர்கள் கூடி, ஒரு குழுவைத்தெரிந்து, அப்பகுதி வாழ் சோமாலி நாட்டவர்களுக்கு ஒரு பணக்கஸ்டமோ, மனக்கஸ்டமோ வரும் போது அந்நபரை அழைத்து சகல உதவிகளும் செய்வார்கள். ஆம் நீண்டகால, குறுங்கால கடன்களை வழங்குவார்கள். வழங்குவது மட்டுமல்ல அவருக்கு பின்னாலேயே நின்று, அந்த நபர் எழும்பி மூச்சுவிடும் வரை கை கொடுப்பார்கள்.

இதே தன்மையை இப்போது சிங்கள கிராமங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. கண்டி தலதா மாளிகை தியவதன நிலமே, கண்டியை அண்டிய சகல கிராமங்களிலும் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்திருக்கின்றார். இக்குழு ஒவ்வொரு கிராமத்திலும், வீதிகளிலும் இயங்குகின்றது. உதவி தேவைப்பட்டவர்கள் இவர்களை அணுகலாம். அந்த தெருவில் உள்ள அல்லது அடுத்த தெருவில் உள்ள ஐந்து பேருடன் குறித்த நபர் அவர்களை அணுகலாம்.

Micro_Credit_Projectகுறிப்பாக பெண்கள். உண்மைகளை அவர்களிடம் கக்க வேண்டும். அதாவது என் புருஷன் குடிகாறன். வீட்டுக்கு உதவுவதே இல்லை. எனக்கு ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்தால் ஒரு தொழிலை செய்வேன், பிள்ளைகளுக்கு கூழோ, கஞ்சியோ ஊற்றுவேன் என்ற தன் ஆதங்கத்தை சொல்ல வேண்டும். டண். பத்தாயிரம் கேஷ் வழங்கப்படும். இவருடன் செல்லும் மற்ற நான்கு பேரும்தான் காரண்டி. நோ பேப்பர் வேக். 6 வீத வட்டி.6 மாத கடன். ஒவ்வொரு வாரமும் ஒரு குட்டித்தொகை கட்ட வேண்டும்.

இவருடன் செல்லும் மற்றவர்களுக்கும் அன்றே கடன் வழங்கப்படும். ஒருவர் பணம் கட்டா விட்டால் மற்ற 4 பேரும் சேர்ந்து அப்பணத்தை கட்ட வேண்டும். இதனால் தில்லு முல்லு குறைவு. தில்லு முல்லே கிடையாது. இரண்டு மாதம் தொடர்ந்து பணம் கட்டினால் அடுத்த தினமே தனியாக, தைரியமாக அவர்களிடம் சென்று ஐந்து லட்ச ரூபா வரை கடன் பெறலாம்.

ஆச்சரியம் என்னவென்றால் இவர்களிடம் இக்கடன்களை பெறும் அனேகம் பேர் கண்டியை அண்டிய பகுதிகளில் உள்ள தமிழர்களும், முஸ்லீம்களும் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. விபரம் தெரிந்தவர்கள் யாராவது எங்கட கோயில், பள்ளிவாசல்களில் குவிந்து கிடக்கும் செல்வங்களை இப்படி திருப்புவதற்கு முயற்சித்திருக்கின்றார்களா? அல்லது முயற்சிக்கலாமா என கேட்டுச் சொல்லுங்கோவன். இல்ல நாங்க அந்தப் பணங்களை சாமிக்கு படைக்க வெச்சிருக்கோம், பள்ளிவாசல்ல கந்தூரி கொடுக்க வெச்சிருக்கோம் என்றால் உங்கள எந்தச் சாமியும் மன்னிக்காது. திரும்பவும் நாசமாப்போவயள்.

இல்ல மகின்த வருவார். எங்க வீட்டுக்குள்ள வந்து எங்களுக்கு கஞ்சி காய்ச்சித் தருவார், தர வேண்டும். இல்லாவிட்டால் அவரை உண்டு இல்லை என பண்ணி விடுவோம் என இறுமாந்திருந்தால் அங்குள்ள நம்மவன் செத்துடுவான். அது பெரிய தல. பெரிய கை. அவர்கள் இந்தியாவுக்கு அசைந்து கொடுத்து, சைனாவுக்கு வளைந்து கொடுத்து, ஜீஎஸ்பி என்ற பெரும் பூதத்துக்கு விட்டுக்கொடுத்து, நம்ம வீட்டுக்கு வந்து விருந்து படைக்க நாளெடுக்கும் அல்லது காலம் கடக்கும். அதுவரை டோர் ரூ டோர் சேவையை நாம்தான் செய்ய வேண்டும்.

புலம் பெயர்நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதுவராலயங்களில் அமைந்துள்ள கொமர்ஷியல் டிவிஷன்கள் நன்கு கால் நீட்டி, குறட்டை விட்டுத் தூங்கிக் கிடக்கின்றன. இந்த வர்த்தகப்பிரிவென்பது அந்த, அந்த நாட்டை பொறுத்த வரை ஒரு சக்தி. ஒரு ஊக்கி. இதை எமது அரசு இயக்குவதும் இல்லை. இயங்க வைப்பதும் இல்லை. ஜீஎஸ்பி வரியை தூக்கி விட்டால் எங்களால் எழும்பி நடக்க முடியாதா? முடியும் என்பதை இந்த வர்த்தகப் பிரிவுகளை வைத்து அரசு வெற்றி கொள்ளலாம். நமது நாட்டின் ஒவ்வொரு உற்பத்திப் பொருட்களையும், இவ்வர்த்தகப் பிரிவில் பார்வைக்கு வைத்து, நம்மவர்களை அழைத்து விருந்து படைத்து நமது பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை பெறலாம். இதப்பத்தி கவலைப் படவும் ஆள் இல்ல, ரெண்டு அதட்டு அதட்டவும் ஆள்கிடையாது. இது பற்றி அந்தந்த நாடுகளில் உள்ள கொமர்ஷியல் டிவிஷன்களை கேட்டால், அதற்கெல்லாம் எங்களிடம் பணம் கிடையாது என்கின்றனர்.

குறிப்பாக இங்குள்ள கொமர்ஷியல் டிவிஷன்களில் போர்ட் ஒப் இன்வெஸ்ட்மென்ட் (முதலீட்டு சபை) பற்றி எந்த தகவல்களும் இல்லை. அப்புறம் எப்படி தமிழன் சிறிலங்கா போவது, அங்கு போய் முதலிடுவது. இது பற்றி யாராவது மெத்தப்படித்தவர்கள் கொஞ்சம் விபரம் சொல்லலாமே? முடிந்தால் பின்னூட்டத்தில் நம்மட பொறின் மினிஸ்டரை ரெண்டு திட்டு, திட்டி நம் பொருளாதாரம் உயர்ந்து, குடி உயர்ந்து, கோன் உயர ஒரு அன்பு பாலம் கட்டலாமே? கட்டுவார்களா?

கொழும்பு, போர்ட் ஒப் இன்வெஸ்ட்மென்ட் (BOI) அலுவலகத்தில் நிறைய முதலிட்டாளர்களுக்கான துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் குவிந்து கிடக்கின்றது. அனைத்துமே ஆங்கிலத்தில்; அப்பிரசுரங்களில் ஒன்றில் சிறிலங்காவை மூன்றாக பிரித்து, அதாவது ஏ, பி, சி வலயமென பிரித்து கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் ஏ எனவும். இங்கு முதலிட கொஞ்சம் ஹெல்த்தி பிளஸ் வெல்த்தியானவர்கள் முன்வரலாம் எனவும், வடக்கு, கிழக்கு பகுதிகளை சீ வலயமாக பிரித்து, இங்கு பத்தாயிரம் டொலருடன் முதலிடலாம், நிறைய சலுகைகள் வழங்கப்படும் எனவும் பறை சாற்றியிருக்கின்றார்கள். ஆனால் இது பற்றி யாருக்குமே தெரியாது. மகின்த பிரதர்ஸ் இது பற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை. ஆனால் தினமும் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு தலைப்புச் செய்தி வந்து கொண்டே இருக்கின்றது முதலிட வாருங்கள் என்ற தோரணையில். இந்த பிரசுரங்களை தமிழிலும், சிங்களத்திலும் பிரசுரித்து உலகம் முழுக்க உள்ள எம்மவர்களின் கைகளை அடைய அரசு முயற்சிக்கலாமே? உல்லாசப் பிரயாணிகளை கவர, பல லட்சம் டாலர் கொடுத்து பிபிசியில் விளம்பரம் செய்யும் அமைச்சுக்கு, பிஓஐ யை தூக்கி விட பணம் இல்லையா? அமைச்சு தூங்குகின்றதா? யாராவது விபரம் தெரிந்தவர்கள் அமைச்சுக்கும், நமது தூதுவராலயங்களுக்கும் ஒரு மொட்டைக்கடிதம் போடலாமே?

நியாயம் தொடரும்…..
(பின்னூட்டங்களில் யாரும் என்னை திட்டாமல் இருந்தால் தொடருவேன். மோதிரக்கைகளால் குட்டு படத் தயாராகவே உள்ளேன்….)

கொசுறு.

ஒரு மாதிரியாக ஒரு வெள்ளையனின் காலில் விழுந்து யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இரண்டு கொலேஜ்களை ஆரம்பித்துள்ளார். இது செப்டம்பர் ஒன்று இயங்கத் தொடங்கும். எமது இளைஞர்களை 21ம் நூற்றாண்டுக்கு கொண்டு போகும் ஒரு சிறு முயற்சி இது. யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தடுமாறுகின்றார்கள். ஆர்வமுள்ளவர்கள், புலம்பெயர் நாடுகளில் இருந்து ஊர் புதினம் பார்க்க செல்பவர்கள் முடிந்தால் ஒரு 10 நாளோ அல்லது 15 நாளோ இங்கு வந்து கற்பிக்கலாம். எமது இளைஞர்களுக்கு உலக நாகரிகம் சொல்லித்தரலாம். சம்பளம் தேவைப்பட்டால் வழங்கப்படும். இருக்க இடம், உணவும் வழங்கப்படும்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில உயர் பாடசாலைகள், தமது மாணவர்களை 20 அல்லது 25 நாட்களுக்கு, மூன்றாம் உலக நாடுகளுக்கு கற்பிப்பதற்காகவும், அவர்களது உளப்பாங்கை விருத்தி செய்வதற்காகவும் வருடா வருடம் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. அப்படி உங்கள் குழந்தைகள் படிக்கும் பாடசாலை அதிபர்களை தொடர்பு கொண்டு, நமது மண்ணுக்கு அவர்களை அனுப்ப முயற்சிக்கலாமே. அப்படி நீங்கள் செய்வதால் நாம் எல்லோரும் செய்த பாவங்களுக்கு ஒரு துளியளவாவது விமோசனம் பெறலாம் அல்லவா. வட் டூ யூ திங்?

17 – 08 – 2010