September

September

6 உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

unp_logo.jpgஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட 6 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து இடைநிறுத்த கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதவிர அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உபேக்சா சுவர்ணமாலி, நிமல் விஜேசிங்க, லக்ஷ்மன் செனவிரட்ன,  அப்துல் காதர், மனுஷ நாணயக்கார ஏர்ல் குணசேகர ஆகிய அறுவரையுமே இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

மக்கள் மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணிலுக்கு கிடையாது – லக்ஷ்மன் செனவிரட்ன

laxman0000.jpgமக்களின் மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாகவும் அவ்வாறென்றால் தாம் நேரடியாக ஆதரவளிப்பதில் என்ன தவறிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

18 ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட லக்ஷ்மன் செனவிரட்ன, ஐக்கிய தேசிய கட்சி அதன் தலைவர் மீது அதீத நம்பிக்கை வைத்து அழிவைத் தேடிக்கொண்டது என்றார். 18 ஆவது திருத்தத்தை எதிர்த்து ஐ. தே. க. வெளிநடப்புச் செய்துள்ள போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன தலைமையிலான ஏழு உறுப்பினர்கள் நேற்று சபையில் அமர்ந்திருந்தனர்.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய செனவிரட்ன எம்.பி., மக்களின் நலனைச் சிந்தித்தே நான் இந்த முடிவை எடுத்தேன். தலைவர் ஒருவர் இல்லாமல் எந்த அமைப்பும் உருப்படாது. அதிபர் இல்லாத பாடசாலை, தலைவர் இல்லாத கட்சி எதுவும் சரிவரப் போவதில்லை. தலைவர்கள் அதிகம் இருந்தாலும் சிக்கல்தான் ஏற்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனை இடதுபக்கம் சமிக்ஞை போட்டு வலதுபக்கம் பயணிக்கும் போக்கினைக் கொண்டவர். ஜனாதிபதியுடன் அவர் எதனைப் பேசி இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாரோ தெரியவில்லை. விவாதத்திலிருந்து விலகியது எமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் மறைமுகமாக அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகிறார். அதனால் நாம் வெளிப்படையாகவே ஆதரிக்கின்றோம்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தால், அவரும் இந்தத் திருத்தத்தை நிச்சயம் மேற்கொண்டிருப்பார். அவரது தனிப்பட்ட பிழையான முடிவுகளால் கட்சி அழிந்துவிட்டது. இந்தத் திருத்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.  போர் நிறுத்த உடன்படிக்கையை ரகசியமாக செய்த எமக்கு இன்று அவ்வாறு கேள்வி எழுப்ப எந்த அருகதையும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்தால் மட்டும்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறை வெல்ல முடியும். இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்க வெல்லமுடியும். இதனை எல்லாம் அவருக்குச் சொல்லிப் புரியப் போவதில்லை’ என்றார்.

மீண்டும் மேர்வின் சில்வா பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம்

mervin0000.jpgகளனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதியமைச்சர் பதவிக்கான நியமனக் கடிதம் நேற்று மாலை பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.

ஏழைத் தமிழரின் கண்ணீரில் உல்லாசப் படகோட்டும் புலம்பெயர் தமிழர்கள். : ரதிவர்மன்

David Milliband Meets London Tamilஇதுவரையும் இலங்கையில் நடந்த அரசியல் சதுராட்டத்தில் பல துன்பங்களை அனுபவித்தவர்கள் இலங்கைத் தமிழர்கள். பஞ்சபாண்டவர்கள் தங்கள் மனைவியைச் சூதாட்டத்தில் இழந்ததுபோல் தமிழ்த் தலைவர்கள். ஏழைத் தமிழர்களின் வாழ்க்கையைச் சிங்கள இனவெறிக்குப் பலியிட்டார்கள்.  பாஞ்சாலி, கணவர்களின் சபதத்தை நிறைவேற்ற, அவள் பயணத்தைக் காடுமேடுகளிற் தொடர்ந்தது போல்த் தமிழ்மக்களும் தலைவர்களின் பகற்கனவை நிறைவேற்ற இடத்துக்கு இடம் அநாதைகளாக மேய்க்கப் பட்டார்கள் கடைசியில் புதுக்குடியிருப்பின் மிகச்சிறிய முள்ளியவளைப் பகுதியில் அடைக்கப்பட்டு, வைரவ கடவுளுக்குப் பலி கொடுக்கப்பட்ட ஆடுகளாகத் தமிழ் மக்கள் எதிரிக்குப் பலி கொடுக்கப்பட்டார்கள்.

கொலைகளுக்குத் தப்பி  வேலி தாண்டி ஓடிய உயிர்கள் இருபக்கக் குண்டுகளாற் துளைக்கப்பட்ட வெற்று மரங்களாகத் தமிழ்மண்ணிற் சாய்ந்து விழுந்தார்கள். ஊனமடைந்த உயிர்கள் இன்று ஏனேதானே என்று வாழ்ந்து முடிக்கவும் புலம்பெயர் தமிழர்கள் விடுவதாயில்லை. இதுவரையும் தமிழர்களின் ‘விடுதலை’ என்ற பெயரில் பணம் படைத்த  புலம்பெயர் தமிழ் முதலைகள் இன்றும் இலங்கைத் தமிழர் பெயரில் எப்படி உழைக்கலாம் என்ற வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபாகரன் கொலைசெய்யப்பட்ட செய்தி உலக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோதும்,  ஐரோப்பிய நாடுகளிலுள்ள தமிழ்க் கடைகளில் கூலிவேலை செய்யும் ஏழைத் தமிழ் இளைஞர்களிடம் ‘தலைவர் கடைசி யுத்தத்திற்குப் பலம் வாய்ந்த ஆயுதம் வாங்கப்போகிறார், பிரபாகரன் தலைவராகவிருந்து சண்டை தொடர்வதால் வெளிநாடு  வந்த நீங்கள் ஒவ்வொருத்தரும் கட்டாயம் பணம் தரவேண்டும்’ என்று சொல்லிப் பணத்தை அள்ளிக்கொண்டு போனதை எத்தனையோ ஏழைத்தமிழ் இளைஞர்கள் மறக்க மாட்டார்கள்.

தமிழர்களின் பெயரில் சேர்த்த கோடிக்கணக்கான பணம் அவர்களின் கையில் இருக்கிறது. அதை மறைத்து, அந்தப் பணத்தைச் சூறையாட தமிழர்களின் பெயர் சொல்லிக்கொண்டு பல கூட்டங்கள் போடுகிறார்கள். வெளிநாட்டுப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் தமிழருக்கு ஈழம் எடுத்துத் தருவதாகக் கற்பனைக் கதைகள் விடுகிறார்கள். மனச் சாட்சியுள்ள தமிழர்கள் இவர்களைக் கேள்வி கேட்காமல் விட்டால் புலம்பெயர்ந்த ஈழம் என்ற பெயரில் பல கோமாளிக் கூத்துக்கள் இன்னும் அரங்கேற்றப்படப் போகின்றன. அதற்கு இந்திய தமிழக அரசியல்க் கோமாளிகள் தாளம் போடுவார்கள். இலங்கைத் தமிழரின் கண்ணீரும் கதறலும் ஒரு சில முதலைகளின் மூலதனமாக மாறிவிட்டது. இதைக்கேட்க யாருமில்லையா?

David Milliband Meets London Tamilsஅண்மையில், 04.09.10ல் ‘பிரிட்டிஷ் தொழிற்கட்சிசார்ந்த தமிழர்கள்’ என்ற பெயரில் வெஸ்ட்மினிஸ்டர் சென்றல் ஹாலில் ஒரு கூட்டம் நடந்தது. தொழிற் கட்சியின் பழைய தலைவர் கோர்டன் பிறவுன் இராஜினாமா செய்ததால் தொழில் கட்சியின் புதிய தலைமைத்துவத்துக்குப் போட்டியிடும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மிலிபாண்ட் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதாம். ஆனால் கூட்டத்தில் பேசிய புலி ஆதரவாளர்கள், ‘பிரித்தானியா, உலக ஐனநாயகக் காவலன்’ என்றும், மிலிபாண்ட் ஒருகாலத்தில் பிரதமராக வந்தால் கட்டாயம் ஈழம் கிடைக்க வாய்ப்புண்டு என்ற தோரணையில் பேச்சுரைகளை அள்ளி வழங்கினார்கள்.

( டேவிட் மிலிபான்ட் பற்றிய முன்னைய பதிவு: ”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன் )

பிரித்தானியரின் பேச்சைக் கேட்டு யுத்தத்தை நிறுத்தாத (பிரபாகரனைக் காப்பாற்றாத) இலங்கை அரசைக் கிண்டலடித்தார்கள். இலங்கையில் ஆளுமை செய்யும் ராஜபக்ஸா சகோதரர்களை யுத்தக் குற்றங்களை விசாரிக்கும் அகில உலக கோர்ட்டுக்கு கொண்டுபோவதற்கு உதவி செய்யும்படியும் கோரிக்கைகளை எழுப்பினார்கள். பொருளாதாரத் தடைபோட்டு இலங்கையைப் பணிய வைக்கும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

பிரித்தானியா ஒருநாளும் தனக்கு இலாபம் கிடைக்காத விடயங்களில் தலையிடாது என்பதும், இலங்கையில் பிரித்தானியரால் ஒன்றும் செய்ய முடியாது என்பதும் தெரியாத தமிழ்ப் பிரமுகர்களின் குழந்தைத்தனமான பேச்சுக்களால் வந்திருந்த பலர் தர்மசங்கடப்பட்டார்கள். புலி ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் தமிழ்ப் பிரமுகர்கள் தங்களை முன்னிலைப்படுத்த முயன்றதும் டேவிட் மிலிபாண்ட்டுடன் ஒன்றாய் நின்று படம் எடுக்க முண்டியடித்ததும் வேடிக்கையாகவிருந்தது.

பிரித்தானிய தொழிற்கட்சி பற்றியோ அந்தக் கட்சியின் பாரம் பரியம் பற்றியோ, இரண்டாம் உலக யுத்தத்தின்பின் தொழிற்கட்சி ஆட்சியிலிருந்த படியாற்தான் பிரித்தானிய சாம்ராச்சியத்தை உடைத்து அடிமைகளாகவிருந்த நாடுகளுக்குச் சுதந்திரம் கொடுத்தார்கள் என்பதும் புலி ஆதரவாளர்களுக்குத் தெரியாது போலும். ஆனாலும் இன்று பிரித்தானிய தொழிற்கட்சியின் தலைவராகவிருந்த ரோனி பிளெயர் ஈராக் நாட்டுக்குப் படையெடுத்து சதாம் ஹசேயினைக் கொலைசெய்து, ஈராக் மக்களைத் துன்பத்தில் ஆள்த்துவது போல், இலங்கைக்கும் பிரித்தானியப் படையிறங்க வேண்டும் என்ற ஆதங்கத்தை கூட்டத்திற்கு வந்திருந்த புலி ஆதரவாளர்களில் ஒன்றிருவர் பகிர்ந்து கொண்டார்கள்.

கூட்டத்துக்கு வந்திருந்த சில இளைஞர்கள் ‘இவர்கள் (புலி ஆதரவாளர்கள்) எப்படியெல்லாம் சொல்லித் தமிழ் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள்’ என்று விரக்தியுடன் பேசியதையும் கேட்கக் கூடியதாகவிருந்தது.

கூட்டத்துக்கு வந்திருந்த  தொழிற்கட்சி உறுப்பினர்களான, பழைய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பழைய அமைச்சர்களில் ஒருத்தரான கீத்வாஸ், ஐரோப்பியப் பாராளுமன்றப் பிரதிநிதியான குளொட் மொறிஸ், பிரித்தானியப பாராளுமன்றப் பிரதிநிதிகளான சிவோன் மக்டோனால், மைக்கல்கேற், ஸ்ரெலா கிறிஸி, என்போர் தமிழர்களின் ‘ஈழப்’ பிரச்சினையில் கைவைக்கவில்லை. இராஐதந்திரத்துடனான வசனங்களால், தமிழர்கள் ஏன் தொழிற் கட்சியில் சேர வேண்டும் என்று பேசினார்கள். பட்டும்படாத மாதிரி தமிழரின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார்கள். நான் இங்க தமிழ்ப் பிரச்சினை பற்றிப் பேசவரவில்லை, லேபர் பார்ட்டி பற்றிப் பேசவந்திருக்கிறேன்’ என்று சிவோன் மக்டோனால்ட் குறிப்பிட்டார்.

தமிழ்ப் பேச்சாளர்கள் ‘இலங்கையில் சிங்களவர்கள் செய்த அதிபயங்கரமான இனப் படுகொலையைப்’ பற்றிப் பேசினார்கள். புலிகள் மற்ற இயக்கங்களுக்குச் செய்த கொடுமைகளையோ, டெலோ உறுப்பினரை ஆரிய குளம் சந்தியில் டயர்களைப் போட்டு உயிரோடு எரித்ததையோ யாரும் அங்கு பேசவில்லை.

டேவிட் மிலிபாண்ட் பேசும்போது இலங்கைத் தமிழர்கள் உலக அரசியலில் தனது பார்வையை விரிவுபடுத்தியிருப்பதாகச் சொன்னார்.

பிரித்தானியாவில் வாழும் ஆசிய மக்களில் மிகவும் சிறந்த முறையில் ஒன்றுசேர்ந்து வேலை செய்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அங்கு வந்திருந்த தமிழர்களுக்கு ஐஸ் வைக்கப்பட்டது. தமிழர்கள் ஒற்றுமையாயில்லாத படியாற்தான் தமிழர்கள் இந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதைத் தமிழர்களால் அரசியல் பார்வை பெற்ற டேவிட் மிலிபாண்டக்குச் சொல்வாரில்லை.

பாராளுமன்றப் பிரதிநிதியான சிபோன் மக்டோனால்ட் ‘இலங்கைப் பொருட்களை பகிஸ்கரிக்க வேண்டும்’ என்று பிரசாரம் செய்வதாகச் சொல்லப்பட்டது. தமிழக்கடைகளில் வல்லாரைக்கீரை கிடைக்காவிட்டால் விரதச்சாப்பாட்டில் ருசிவராது என்ற உண்மையை அந்தப் பெண்ணுக்கு யாரும் சொல்லவிலலை.

இலங்கைக்குப் பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்ற குரலும் தமிழ்ப் பேச்சுக்களில் ஓங்கி ஒலித்ததது. பொருளாதாரத்தடை மூலம் ஈராக் நாட்டைப் பிரிட்டிசார் பழிவாங்கினார்கள். வெள்ளைக்காரன் மருந்து கொடுக்காமல் ஈராக்கியக் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இறந்த கதை தெரிந்தபடியாற்தான் இன்று வெள்ளைக்காரனை நம்பியிருக்காமல் ‘சிங்கள சகோதரங்கள்’ இந்தியாவை நம்புகிறது என்பதையும் புலி ஆதரவாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேற்கு நாட்டின் பொருளாதார வீழ்சியினால் அவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அப்படியிருக்கும்போது, இந்தியாவைப் பகைத்துக்கொண்டு இலங்கையைப் பழிவாங்க பிரிட்டிஷார் தயஙகுவார்கள். இன்று இந்திய, சீன  மூலதனங்கள் இலங்கையை வளம்படுத்துகிறது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்பதுபோல் புலிகள் கனவு காண்கிறார்கள்.

இலங்கைக்குப் போய்வரும் பல தமிழர்கள் யாழ்ப்பாணம் எப்படி விருத்தியடைகிறது என்பதைப் பெருமையாகச் சொல்கிறார்கள். இதைப் புலிகள் நம்பத் தயாரில்லை போலிருக்கிறது. இலங்கையில் எப்படியும் ஒரு பிரச்சினையைக் கிளப்பி அதில் பணம் படைத்துத் தனது குடும்பத்தை முன்னேற்றுவதையே பல முதலைகள் விரும்புகிறார்கள் என்பது பல தமிழர்களுக்குத் தெரியும்.

பிரபாகரனை வை.கோ எமலோகம் அனுப்பி விட்டதாக கேபி அறிக்கை விட்டதையும் செவி மடுக்காமல் இன்னும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்குத் துடிக்கும் இவர்களுக்குத் தமிழர்கள் பாடம் படிப்பிக்க வேண்டும்.

இன்று உலகில் நடைபெறும் மாற்றங்ளை அவதானித்தால், நாளைக்குப் பிரித்தானிய அரசு, இலங்கையுடன் பெரிய வர்த்தக உடன்படிக்கையைச் செய்யாது என்று சொல்வதற்கில்லை. இலங்கையின் மன்னார்ப் பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் எண்ணை பற்றிய முழுத்தகவல்களும் நோர்வே நாட்டில் இருக்கிறது. இலங்கைக்குரிய எண்ணையின்  பலன் இலங்கைக்குக் கிடைப்பதற்கு இலங்கையிடம் விஞ்ஞான, தொழில் வளர்ச்சி கிடையாது. அதனால் இந்தியாவும் பிரித்தானியாவும் இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்யும் நிலை வந்தால் பிரித்தானியாவில் தமிழர்கள் லண்டனில் அரசியல்வாதிகளை வைத்துக் கூட்டம் வைத்துப் படம் எடுப்பதற்கும் வசதி வராது.

இதுவரையும் புலிகள் ஆதரவு கொடுத்த அரசியல்வாதிகள், தோற்றுக்கொண்டே வந்திருக்கிறார்கள். பிரபாகரன் புலிகளின் ஆதரவு அளவுக்கு மிஞ்சிப்போனதால் வைகோ கோஸ்டியால் பரலோகம் அனுப்பப்பட்டார்.

‘கிலாரி கிளிண்டனுக்கான தமிழர்கள் என்று அமெரிக்காவில் புலி ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்தார்கள் அந்தப் பெண்மணி தோற்றுப்போக, முன்பின், மக்களுக்குப் பெரிதாகத்  தெரியாமலிருந்த  ஓபாமா வெற்றி பெற்று இன்று விழிபிதுங்கப் பிதுங்க அமெரிக்கப் பிற்போக்குவாதிகளிடம் பேச்சுவாங்கிக் கொண்டிருக்கறார்.

லண்டனில் மேயராகவிருந்த கென் லிவிங்ஸ்டனைத் தோளிற் சுமக்காத குறையாகக் கொண்டு புலிகள் திரிந்தார்கள் பாவம் அந்த மனிதனுக்கும் படுதோல்வி.

இன்று கனடியக் கவர்ச்சிக் கவிஞரும் அமெரிக்க விரக்தி வழக்கறிஞரும் இதுவரை முப்படையும் வைத்துப் போராடிப் பிரபாகரனால் எடுக்க முடியாத ஈழத்தைத் தமிழருக்கு எடுத்துத்தருவதாகப் பிரசாரம் செய்கிறார்கள். அந்தக் கனவை வைத்துக்கொண்டு சிலர் இன்னும் பணம் பறிக்கிறார்கள் இது கொடுமையிலும் கொடுமை. இலங்கையில் இன்னும் அகதிகளாகத் துயர்படும் ஆயிரக் கணக்கான தமிழர்கள் பற்றி இவர்கள் பேசுவது கிடையாது. இந்தியாவில் கண்ணீர் சிந்தும் இலங்கை அகதித் தமிழர்கள் பற்றி மூச்சும் விடமாட்டார்கள்.

David Milliband Meets London Tamilsஎப்படியும் ஈழம் எடுத்து தமிழருக்குக் கொடுப்பதாகப் பறை சாற்றுகிறார்கள். இதுவரை இருதரம்  தமிழர்கள் கையில் ஈழம் மற்றவர்களால் எடுத்துக் கொடுக்கப்பட்டது. இந்தியா வந்து ஈழம் (கிட்டத்தட்ட) எடுத்து கொடுத்தபோது எதிரியுடன் சேர்ந்து இந்தியாவைத் துரத்தினார்கள். ஈழம் எடுத்துக்கொடுத்த ரஜீவ் காந்தியைப் போட்டுத் தள்ளினார்கள். இந்தியாவுக்கு எதிராகச் சண்டைபிடிக்க ஆயுதம் கொடுத்த அவர்களின்  சினேகிதனாயிருந்த பிரேமதாசாவைக் கொலை செய்தார்கள். நோர்வே நாடு ஈழம் (கிட்டத்தட்ட) என்ற ஒப்பந்தத்திற்கு கொண்டு போனபோது அந்த ஒப்பந்தத்தை உதறிவிட்டுச் சண்டைக்குப் போய் மண்டைகளைப் போட்டார்கள். இப்போது மிலிபாண்ட் மூலம் ஈழம் கேட்கிறார்கள் அதை வைத்துக்கொண்டு யாரைப் பரலோகம் அனுப்பப் போகிறார்கள்?
 
‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நெறிகெட்ட மனிதரை நினைந்து விட்டால்’

(இக்கட்டுரையாளர் தேசம்நெற் ஆசிரியர் குழுவிற்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். நீண்ட கால அரசியல் செயற்பாட்டாளர். எழுத்தாளர். )

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் – ஆதரவாக 161 வாக்குகள், எதிராக 17 வாக்குகள். ஐ.தே.க வாக்களிக்கவில்லை.

parliment.jpg18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குப்பலத்துடன் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் செனவிரட்ன, அப்துல் காதர், மனுஷ நாணயக்கார, ஏர்ல் குணசேகர, உபேக்சா சுவர்ணமாலினி, நிமல் விஜேசிங்க,  பீ திகாம்பரம், பிரபா கணேஷன், ஜே. ஸ்ரீ ரங்கா ஆகியோர் உள்ளடங்குகின்றனர். .

இதேவேளை 18 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் 07 பாராளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம. 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.ஐ.தே.க வாக்களிக்கவில்லை.

ஆறு எதிர்கட்சி உறுப்பினர் அரசுடன் இணைவு

unp_logo.jpgபாராளு மன்றத்தில் அரசியல்யாப்பு திருத்தம் தொடர்பில் விவாதம் நடைபெற்ற வேளையிலே  எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல் காதர், உபேக்சா சுவர்ணமாலி, மனுஷா நாணயக்கார, ஏல் குணசேகர, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் நில்வலா விஜயசிங்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இவர்கள் அரசிற்கு 18 ஆவது அரசயல்யாப்பு திருத்தம் தொடர்பில் மாத்திரம் தமது கட்சிகளில் இருந்து ஆதரவளிப்பதாக கூறியமை குறிப்பிடத்தக்கது. 

நடிகர் முரளி மரணம்

08-murali.jpgதமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளா நாயகனாக நடித்துவந்த முரளி(46) இன்று சென்னையில் நெஞ்சுலியால் மரணமடைந்தார். முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

1984ம் ஆண்டு பூவிலங்கு வெளியானபோது அதில் நாயகனாக அனல் பறக்க வசனம் பேசி நடித்த முரளி, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். 1984ல் தொடங்கிய முரளியின் நடிப்பு பயணம் 2002ம் ஆண்டு வரை நிற்காமல் படு பிசியாக போய்க் கொண்டிருந்தது.

08-2muralai.jpgபூவிலங்கைத் தொடர்ந்து பகல் நிலவு படத்தில் மணிரத்தினத்தின் கையால் குட்டுப்பட்டு பண்பட்ட நடிப்பைக் காட்டினார் முரளி. ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும், பக்குவப்பட்ட நடிப்பையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார் இப்படத்தின் மூலம். தொடர்ந்து பல படங்களில் நடித்த முரளிக்கு பெரும் ஏற்றத்தையும், அவரை ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்த்திய படம் விக்ரமனின் புது வசந்தம். அவரது திரையுலக வாழ்க்கையில் அது ஒரு முக்கிய மைல் கல். அதைத் தொடர்ந்து மிகவும் பிசியான நடிகராக உயர்ந்தார் முரளி.
சேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய இரு படங்களும் முரளியின் நடிப்புத்திறமையை மேலும் பளிச்சிட வைத்த அருமையான படங்கள். சுந்தரா டிராவல்ஸில் இவரும், வடிவேலுவும் செய்த காமெடிக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலங்க வைத்ததை மறக்க முடியாது.

ஆனந்தம் படமும் முரளியின் அருமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் ஒன்று.. தமிழ் சினிமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, அதேசமயம் ஏராளமான வெள்ளி விழா படங்களைக் கொடுத்த மிகச் சிறிய நடிகர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். எந்த நிலையிலும் அவர் தலைக்கணம் பிடித்து நடந்ததில்லை. பந்தா செய்ததில்லை. தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் மதித்து நடந்தவர்.

2001ம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் முரளி. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல்  பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடைசியாக முரளி நடித்த படம் அவரது மகனின் முதல் படமான பாணா காத்தாடிதான். அதற்கு முன்பு அவர் நடித்த படமான கவசம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் முரளி. முரளியின் மனைவி ஷோபா. இந்தத் தம்பதிக்கு மகன் அதர்வா தவிர காவ்யா என்ற மகள் உள்ளார்.

மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் முரளி பேசிய வார்த்தை இது… நான் 30 வருடங்களா நடித்த காலத்தில் எத்தனையோ தவறுகளை செய்துள்ளேன். ஆனால் அதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பொறுத்துக் கொண்டு என்னை வாழ வைத்தனர்.எனவே தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு கொடு, நல்ல பெயரெடு, நல்ல நடிகராக உருவாகு, பணத்தை விட நல்ல படம் முக்கியம் என்பதையே எனது மகனுக்கு அறிவுரையாக கூறியுள்ளேன் என்றார் முரளி.

TNA MP பி. பியசேன அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவு

jj.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக சற்றுமுன்பு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

‘அரசியலமைப்பில் அடுத்த வருடமும் சில திருத்தங்கள்’ – அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

maitereepala.jpgஅடுத்த வருடமும் அரசியலமைப்பில் சில திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 13 வது திருத்தத்திலும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும், அமைச் சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலைய த்தில் நடைபெற்றது.  இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று பெரும்பான்மையான எம்.பிக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட உள்ளது. எதிர்பார்க்காத அளவு எதிர்க்கட்சி எம்.பிக்கள் இதற்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளனர். இன்றும், நாளையும் (7, 8) மேலும் பலர் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்க உள்ளனர். உத்தேச யாப்புத் திருத்தம் அவசரமாக சமர்ப்பிக்கப்படுவதாகவும் அது குறித்து ஆராய அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆனால் 1978 யாப்பு, 13 வது 17 வது திருத்தங்கள் என்பன அவசர அவசரமாகவே நிறைவேற்றப்பட்டன. ஆனால் உத்தேச 18 வது யாப்புத் திருத்தம் குறித்து 3 மாதங்களுக்கு மேலாக பேசப்பட்டது. கட்சிகளின் கருத்துகளும் பெறப்பட்டன. நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் வகையிலே தற்பொழுது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய திருத்தத்தின் படி ஜனாதிபதி கட்டாயம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்துடன் இணையும் ஒவ்வொரு வரும் அபிவிருத்தியின் பங்காளர்களாகின்றனர். இலங்கையை பலமான நாடாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றுவோம். கட்டமைப்பு ரீதியான திருத்தங்கள் இம்முறை செய்யப்படவில்லை. அடுத்த வருடத்திலும் யாப்பில் தேவையான திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்காக அதிகாரங்கள் வழங்கப்படும். பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மக்களுக்கு முறையிட முடியும். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் என்றார்.

வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது நோக்கம் – ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgநாட்டை சுதந்திரமாக்கிய எமக்கு நாட்டு மக்கள் திருப்திப்படும் வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பது முக்கியமாகவுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் வீட்டு உறுதிப் பத்திர மில்லாத 1300 பேருக்கு வீட்டு உறுதிகளை வழங்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வீட்டுரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரத்தைக் கையளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

சிலர் இந்த நாட்டில் ஜனநாயகமில்லை எனவும் சர்வாதிகாரமே ஓங்கியுள்ளதெனவும் கூறி வருகின்றனர். இது பொறாமை மற்றும் வைராக்கியத்தின் வெளிப்பாடாகும். என்னைப் பற்றி மிக மோசமான கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. எனது குடும்பத்தை சீர்குலைக்கும் விதத்திலும் கூற்றுக்களை வெளியிட்டுள்ளனர். நான் கொழும்பு 7ல் பிறந்தவனென்றால் இதன் பிரதிபலிப்பு வேறு விதமாக இருந்திருக்கும். நான் மெதமுலன கிராமத்தில் பிறந்தவன். எனது செயற்பாட்டை சீரழிக்க முயற்சிக்கின்றனர்.

நாம் மக்களுக்காக நாட்டின் எதிர்கால சந்ததிக்காக சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தை முன்னெடுத்துள்ளோம். அதனை நிறைவேற்றுவோம். அதற்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம். வீட்டு உறுதிப்பத்திரிமில்லாதவர்களுக்கு வீட்டுரிமைப்பத்திரம் இன்று வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது நோக்கம். எனினும் அதனை ஒரே தடவையில் நிறைவேற்ற முடியாது. படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சானது மக்களுடன் நெருங்கியதாக இத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சுலப மான காரியமல்ல. எனினும் முடிந்தளவு அதற்குத் தீர்வுகாண செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமக்கான காணிகள் அதிகரிக்காது எனினும் வீட்டுத் தேவையும் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. அதனால் நாம் திட்டமிட்ட செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.

நாம் இன்றைய தினத்தை மட்டும் கருத்திற்கொள்ளாது எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டே செயற்படுகிறோம். தற்போது நாடு ஒன்றிணைக்கப்பட்டு அபிவிருத்திப் பயணம் முன்னெ டுக்கப்படுகிறது. எதிர்கால பொருளாதாரம், சூழல், சமூக வளர்ச்சி பற்றி சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. இன்றேல் மோசமான பின்விளைவுகளையே எதிர்கொள்ள நேரும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.