September

September

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி நீதிமன்ற மாடியிலிருந்து குதித்ததில் படுகாயம்.

தனது மூன்று வயது மகனைக் கொலை செய்த வழக்கில் மரணதண்டனை வழங்கப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்றக் கட்டட மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்தார். நேற்று (01-09-2010) யாழ்.மேல் நீதிமன்றத்தில் வைத்து இச்சம்பவம் நடைபெற்றது.

2003ம் அண்டு பருத்தித்துறை வல்லிபுரக் கோவில் பகுதியில் வசித்து வந்த குறிப்பிட்ட நபர் தனது மூன்று வயது மகனை இரு கால்களிலும் பிடித்தத் தூக்கி நிலத்திலடித்து கொலை செய்தமைக்காகவும், அவரது மனைவியின் கையை வெட்டியமைக்காகவும கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் மகனைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டதோடு  மனையிவின் கையை வெட்டியதற்காக 25ஆயிரம் ரூபா தண்டப்பணமும் அறவிடப்பட்டது. தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் இரு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டம் எனவும் நீதிமன்றம் தீhப்பளித்தது.

இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்பு குறித்த கைதி யாழ். மேல்நீதிமன்றத்தின் இரண்டாம் மாடியிலிருந்து நிலத்தில் குதித்து படுகாயமடைந்தார். வடமராட்சி வல்லிபுரம் கோவிலடியைச் சேர்ந்த இராஜராஜன் இராஜகுமார் (வயது37) என்பவரே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மாடியிலிருந்த குதித்தவராவார்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானங்களின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு!

LTTE_Aircraftவிடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானங்களின் பாகங்கள் முல்லைத்தீவில் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விமானப் பாகங்கள் எரியூட்டப்பட்ட நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

இறுதிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால். அம்பலவன் பொக்கணைப் பகுதிகளில் கொள்கலன்களில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விமானப் பாகங்கள் இலகுரக விமானங்களுக்குரியவை என இலங்கை விமானப்படையினர் தெரிவிக்கின்றனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் இவற்றிற்குத் தீவைத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் இராணுவ முகாம்கள் மீண்டும் பலப்படுத்தப்படுகின்றன!

Check_Pointகிழக்கில் மீண்டும் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் முடிவடைந்து அமைதி நிலை தோன்றியதற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

படைமுகாம்களைச் சுற்றி முள்வேலிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில காலமாக கைவிடப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளும் மீண்டும் திறக்கப்பட்டு முன்னர் போல் வாகனங்கள் சோதனையிடப்படுவதோடு, பொதுமக்களும் சோதனையிடப்படுகின்றனர்.

அண்மையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த  இரு பெண் பொலிஸார் உட்பட மூவர்  மட்டக்களப்பு ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களிடமிருந்த ரி-56 ரக துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளமை மற்றும், அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்ட உரப்பசளைகள், அரிசி மூடைகள் எனபன லொறிகளில் கடத்தப்பட்ட சம்பவம். மரங்கள். கஞ்சா போன்றவை கடத்தப்படுகின்ற சம்பவங்கள் என்பவற்றைத் தொடர்ந்தே இப்பாதுகாப்பு மற்றும் வீதிச் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவினால் 10,000 வீடுகள். நிருபமாராவ், முதலமைச்சர் சந்திப்பில் ஆராய்வு

nerupama.jpgகிழக்கில் இடம் பெயர்ந்த, மீளக்குடி யமர்த்தப்பட்ட, வீடுகளை இழந்தவர்களுக் கும் சுமார் 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நம்பிக்கை வெளியிட்டார்.

திருகோணமலையில் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார்.

இச் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை அமைப்பது தொடர்பாகவும் இடம் பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மீளக்குடியமர்த்தப்பட்ட வட பகுதி மக்களு க்கு இந்தியா சுமார் 51,000 வீடுகளை வழங் குகிறது. அதேபோல, கிழக்கு மாகாணத் திற்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரகாந்தன், நிருபமாராவ்விடம் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் இந்தியா இதற்கு சாதகமான பதிலை அளிக்கும் என உறுதியளித்தார்.

தொழிற்சங்க மகா சம்மேளனம் உத்தேச திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தால் அரசதுறை அரசியல் மயப்படுத்தப்படுமென கவலை தெரிவித்துள்ள தொழிற்சங்க மகா சம்மேளனம் இதனை நிறுத்துமாறும் கோரியுள்ளது. அத்துடன் இதற்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் அரச ஊழியர்கள் தொழிற்சங்கம் அரசியல்வாதிகளுடனான கருத்தரங்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க மகா சம்மேளனம் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் செயலாளர் சமன் ரத்னபிரிய, தலைவர் அன்டன் மார்க்கஸ், பொருளாளர் என்.ஜி.ஆர்.அத்துல்ல, தேசிய அமைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர் நவரட்ண பண்டார ஆகியோர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரு தடவைக்கு மேல் அதிகரிப்பதற்காக  அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். தற்போதைய அரசியலமைப்பிலுள்ள ஜனாதிபதி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இல்லாதொழிப்பதாக கோரியே இந்த அரசாங்கம் 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது இந்நிலையில் இதனைச் செய்யாது இந்த முறைமை அதிகரிக்கப்படுவதையிட்டே எதிர்க்கின்றோம்.

ஆரியவதி சித்திரவதை விவகாரம்: சவூதி வெளிநாட்டமைச்சிடம் இலங்கை முறைப்பாடு கையளிப்பு

maid.jpgசவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஆரியவதிக்கு ஆணிகள், ஊசிகள் ஏற்றப்பட்ட விடயம் தொடர்பாக உண்மை நிலையைக் கண்டறிய சவூதி சென்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் உள்ளிட்ட குழுவினர் சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவர் ஊடாக சவூதி வெளிநாட்டமைச்சுக்கு தமது முறைப்பாடுகளை நேற்று உத்தியோகபூர்வமாக கையளித்தது.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சவூதி வெளிநாட்டமைச்சிடம் முழுமையான அறிக்கைகளைக் கையளித்தார். இலங்கை திரும்பிய ஆரியவதியின் மருத்துவ அறிக்கைகள் உட்பட முறைப்பாடுகள் அடங்கிய அறிக்கைகளில் ஆரியவதியின் உடலில் ஊசி, ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையிலுள்ள எக்ஸ்ரே படங்கள், அறுவைச் சிகிச்சையின் அறிக்கைகள் என்பவற்றையும் சமர்ப்பித்தனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க மற்றும் பணியகத்தின் இரண்டு உயரதிகாரிகள் சவூதி சென்றனர். சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் விசேட சந்திப்பொன்றை நடத்திய பின்னர் குறிப்பிட்ட சவூதி எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் இந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். சவூதி அரசிடம் வேண்டுகோளாகவே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கைப் பெண் ஆரியவதி மீது சவூதி அரேபியாவில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சவூதி அரேபிய அதிகாரிகள் முன்வந்துள்ளதாக சவூதி சென்றுள்ள இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவூதி சென்ற இக்குழுவினர் நேற்று சவூதி அரேபியாவில் வேலைக்கு ஆள் சேர்ப்போரின் தேசிய கமிட்டியின் தலைவர் சரத் அல்பாத் சந்தித்து பேசியதுடன், இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறா வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஆரியவதி எதிர் நோக்கிய பயங்கர அனுபவத்தின் காரணமாக அவர் உள மற்றும் உடல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய வகையில் அவருக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும் என்று இலங்கை குழுவினர் சவூதி அதிகாரிக்குக் கூறியுள்ளனர்.

அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தடுக்க இரு நாடுகளுக்கிடையிலும் புதிதாக ஆட்சேர்ப்பு நிபந்தனைகளை அறிமுகப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடியுள்ளனர். அதனையடுத்து மத்திய கிழக்கில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை பார்ப்பதற்காக மேற்படி குழுவினர் தமாம் மற்றும் ஜெத்தாவுக்கு செல்லவுள்ளனர்.

15 லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கில் பணிப்பெண்களாகவும், சாரதிகளாகவும் பணிபுரிகின்றனர். சவூதி அரேபியாவில் மட்டும் 4 லட்சம் இலங்கையர்கள் இவ்வாறு பணிபுரிகின்றனர்.

சேமமடு, பாலமோட்டையில் நடமாடும் சேவை

வவுனியா மாவட்டத்தில் மீளக் குடியேறிய சேமமடு, பால மோட்டை கிராமங்களில் நடமாடும் சேவைகள் இன்றும் நாளையும் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படவுள்ளது.

வியாழக்கிழமை இன்று 2 ஆம் திகதி சேமமடு மகாவித்தியாலயத் திலும், நாளை 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாலமோட்டை அரசினர் பாடசாலையிலும் நட மாடும் சேவைகள் இடம்பெறுமென மாவட்ட அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.

பொது மக்கள் நடமாடும் சேவையின் போது வருகை தந்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாமெனவும் அவர் தெரிவித்தார்.

லக்ஷ்மன் ஜயக்கொடியின் இறுதிக்கிரியை இன்று

laxman.jpgமறைந்த முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடியின் இறுதிக்கிரியைகள் இன்று (02) பிற்பகல் திவுலபிட்டியவில் இடம்பெறும்.

பூதவுடல் தற்போது திவுலபிட்டிய பலகல்லவில் உள்ள அன்னாரின் இல்ல த்தில் வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக 20 இலட்சம் துண்டுப்பிரசுரங்கள் ஜே.வி.பி. நடவடிக்கை

அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாக நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 20 இலட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளதாக ஜே.வி.பி.தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒருவர் இரு தடவைகளே வகிக்க முடியுமென தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது. எனவே அப்பதவியை வகிக்கக் கூடிய தடவைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காகக் கொண்டு வரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாகவே இந்தத் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி.விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று இந்தத் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதன் பிரதான நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடைபெறுமென்றும் இதில் ஜே.வி.பி.தலைவர்கள் பங்கு கொள்வார்கள் என்றும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

வீரர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அணியிலிருந்து விலக்கும் எண்ணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

cricket.jpgகிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை முடிவு தெரியும் முன் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லோர்ட்சில் நடந்த 4 வது டெஸ்ட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கோடிக் கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு நோ- போல் வீசியது வெட்ட வெளிச்சமானது.

பாகிஸ்தான் அணியின் கப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆமிர், முகமது ஆசிப், விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் உட்பட 7 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வற்புறுத்தி உள்ளனர்.

இதனால் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையே அடுத்து நடைபெற வேண்டிய இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நிலவியது. இந்த போட்டி தொடர் ரத்து ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு சுமார் ரூ. 90 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகளிடம் ஆலோசனை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி திட்டமிட்டபடி தொடரும் என்று அறிவித்துள்ளது.  ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் மற்றும் ஐ.சி.சி. இலஞ்ச தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் வீரர்கள் மீது கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சூதாட்ட புகாரில் சிக்கிய 7 வீரர்களில் 4 பேரை அணியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐ.சி.சி. மற்றும் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  பாகிஸ்தான் அணியில் விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் மட்டும்தான் உள்ளார். அவரை நீக்கினால் அணிக்கு மாற்று விக்கெட் காப்பாளர் இல்லாத நிலை உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் அளித்த பேட்டியில், ‘வீரர்கள் மீதான புகார் குறித்து ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவை அனைத்தும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. எந்தவொரு குற்றச்சாட்டும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனவே இந்த சூழ்நிலையில் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் அளித்த பேட்டியில், ‘இந்த சம்பவம் நடந்து இருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவோ அல்லது பாகிஸ்தான் நாட்டின் புகழை கெடுக்கவோ சதித் திட்டம் எதுவும் தீட்டப்பட்டு இருக்கிறதா என்பதை தீர்மானிக்க நாங்கள் விரும்புகிறோம்.

முந்தைய காலகட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுபோன்ற சதி திட்டங்கள் எங்களுக்கு எதிராக கிளம்பியதை நாங்கள் அறிவோம். அந்த கோணத்திலும் நாங்கள் இந்த விவகாரத்தை பார்க்கிறோம். உண்மை வெளிவந்து எங்கள் வீரர்கள் குற்றச்சாட்டில் இருந்து விடுபட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  எங்கள் வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் வீரர்கள் மீது முன்மாதிரியான நடடிவக்கை எடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்றார்.