September

Saturday, July 31, 2021

September

இருபது வருடங்களாக வேறு இடங்களில் இயங்கிய பலாலி உயர் பாதுகாப்பு வலய பாடசாலைகள் மீளக் கையளிப்பு

cc.jpgபலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைகளுக்கென கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்படவுள்ள இந்த பாடசாலையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிடுகின்றனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் உட்பட அந்தப் பிரதேசத்திலுள்ள மேலும் சில பாடசாலைகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார். யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, வட மாகாண அபிவிருத்திக் கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இந்த பாடசாலையைக் கையளிக்கிறார்.

அதன் பின்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரிடம் இப்பாடசாலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை சுமார் 64 வருடம் பழைமை வாய்ந்தது என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டதை அடுத்து 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வசாவிளான் பாடசாலை யாழ். உரும்பிராய் பகுதியில் தற்காலிகமாக இயங்கி வருவதாகத் தெரிவித்த அவர், தற்பொழுது அங்கு 1352 மாணவர்கள் கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டார். இன்றைய நிகழ்வில் 1532 மாணவர்களும் பங்கு கொள்ளவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பாடசாலை சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவினால் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய கல்லூரியாக தரமு யர்த்தப்பட்டதாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன் தெரிவி த்தார். இந்தப் பாடசாலை புனரமைக்கப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டிலுள்ள ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் கல்வி அமைச்சின் வேலைத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவித் திட்டத்தினால் இந்தப் பாடசாலை புனரமைப்பு, நிர்மாணத்திட்டத்தி ற்கென 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் படவுள்ள இத் திட்டத்தின் மூலம் சேதமடைந்த கட்டடங்கள் புனரமைக்கப்படவு ள்ளதுடன், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆய்வு கூடங்கள், நூலகம், போன்றவை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருத்தப் பணிகள் நிறைவுற்ற பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த அவர், இதன் மூலம் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

சாம்பியன் லீக் : சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்

chnnai_win.jpg சாம்பியன் லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது. ஐ.பி.எல் இல் மட்டுமல்ல சாம்பியன் லீக்கிலும் சாம்பியனாக முடியும் என்பதை சென்னை அணி நிருபித்துள்ளது.

ஜொகனஸ் பேர்க் வோன்டரஸ் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன் லீக் இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் டேவி ஜேகப்ஸ் தலைமையிலான வொரியர்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை 08 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வொரியர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரராக களமிறங்கிய ஜேகப்ஸ் 34 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

சென்னை அணியின் பந்து வீச்சில் முரளிதரன் அதிரடியாக 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 129 எனும் இலகு வெற்றி இலக்கை அடைய களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்களில் 02 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மைக்கல் ஹசி மற்றும் முரளி விஜய் ஆகியோர் நிதானமான அதிரடி ஆட்டத்தால் சென்னை அணிக்கு வெற்றி தேடி கொடுத்தனர்.

முரளிவிஜய் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க களத்தில் மைக்கல் ஹசி ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும், ரெய்னா 02 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய தோனி 17 ஓட்டங்களை பெற்றபோது சென்னை அணி இலகுவாக வெற்றி பெற்றது.  இந்நிலையில் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக முரளி விஜய் தெரிவு செய்யப்பட்டதோடு, தொடரின் ஆட்டநாயகனாக அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார்.

நாட்டின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையரின் ஒத்துழைப்பு அவசியம் – ஜனாதிபதி

main.jpgநாட்டை அபிவிருத்தி செய்வ தற்கு வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையரதும் ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் கடந்த சனிக்கிழமை (25) ஹுஸ்டன் நகரத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

ஹுஸ்டன் நகரில் வசிக்கும் இலங்கையர்கள் வெஸ்டின் ஹோக் ஹோட்டலில் ஜனாதி பதிக்கும் அவரது பாரியாருக்கும் விசேட வரவேற்புபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

500க்கு மேற்பட்ட இலங்கையர்கள் கூடியிருந்த இந்த நிகழ்வில் ஹுஸ்டன் நகரின் காங்கிரஸ் பிரதிநிதி சீலா ஜெக்சன் மற்றும் ஹுஸ்டன் மேயர் அனிஸ் பார்க்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கை தற்போது இன, மத, பேதமின்றி அனைவருக்கும் சமாதானமாக வாழக் கூடிய நாடாக உள்ளது. 2005 இல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். அதனை நான் செவ்வனே நிறைவேற்றியுள்ளேன். அது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தமல்ல.

இதேவேளை 2010 இல் மக்கள் மீண்டும் எமக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஆணை வழங்கி யுள்ளனர். அதனை நிறைவேற்றுவதற்கு வெளி நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களினதும் ஆதரவு எதிர்காலத் திலும் அவசியப்படுகின்றது என்றார்.

இந் நிகழ்வில் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி சீலா ஜெக்ஸன் லீ உரையாற்று கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கை துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் இரு நாடுகளினதும் நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் வகையில் ஜனாதிபதி யின் விஜயம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

முட்டை இன்று முதல் உத்தரவாத விலையில்

கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் உத்தரவின் பேரில் புறக்கோட்டை சந்தையில் இன்று முதல் வெள்ளை முட்டை ஒன்றை 13 ரூபா 20 சதத்துக்கும், சிகப்பு நிற முட்டை ஒன்றை 13 ரூபா 70 சதத்துக்கும் பெற்றுக் கொள்ள முடியுமென கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், அண்மைக் காலத்தில் முட்டையின் விலை அதிகரித்து ஒரு முட்டை 15 முதல் 17 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.

இதனையடுத்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் (சதொச) மூலம் பண்ணைகளுக்கு சென்று முட்டைகளை கொள்வனவு செய்து பொருளாதார கேந்திரங்கள் மற்றும் லக் சதொச மூலம் அவற்றை நுகர்வோருக்கு விற்பனை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதனால் முட்டை விலை குறைந்துள்ளது. இவ்வாறு சதொச மூலம் தினமொன்றுக்கு ஒரு லட்சம் முட்டைகள் பொருளாதார கேந்திரங்களிலும் லக் சதொச மூலமும் விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த 47 அகதி முகாம்களில் 42 முகாம்கள் மூடப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 2இலட்சத்து 80 ஆயிரம் மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த 47 இடைத்தங்கள் முகாம்களில் 42 முகாம்கள் மூடப்பட்டுவிட்டதாக மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். இம்முகாம்களில் தங்கியிருந்த மக்களில் இன்னும் 27 ஆயிரம் பேரே எஞ்சியுள்ள ஐந்து முகாம்களிலும் தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எஞ்சியுள்ளவர்களும் இவ்வருட இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுவிடுவர் எனவும், அதன் பின்பு வவுனியாவில் அகதி முகாம்கள் எவையும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.தென்மராட்சியிலுள்ள அல்லாரை முகாமில் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த மக்கள் இன்னமும் தங்கியுள்ளனர் எனபதும் தற்போது வடமராட்சிக்கிழக்கு மக்கள் படிப்படியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கேரதீவு- சங்குப்பிட்டி பாதை அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.

கேரதீவு சங்குப்பிட்டி பாதையின் திருத்த வேலைகள் நிறைவு பெற்று வரும் நிலையில் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இப்பாதை திறக்கப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரதீவு – சங்குப்பிட்டி இடையிலான 4 கிலோ மீற்றர் வரைலான பழுதடைந்த பாதையும், அப்பகுதியில் அமைந்திருந்த பாலமும் திருத்தப்பட்டு நிறைவு பெறும் நிலையிலுள்ளது.

இப்பாதை ஆனையிறவு ஊடான பாதைக்குப் மாற்றுப் பாதையாக விளங்குகின்றது. மன்னார் மற்றும் பூனகரி பிரதேச மக்களுக்கு யாழ்ப்பாணத்திற்கான குறுகிய தூர பாதையாகவும் இது விளங்ககுன்றது. கேரதீவு சங்குப்பிட்டி ஆகியவற்றின் பாதைகளை சுமார் 50 மீற்றர் வரையிலான கடல் நீர் பிரிக்கின்றது. அதற்கான நகரும் பாதை ஒன்று முன்னர் பயன்பாட்டில் இருந்தமையும், ஆனையிறவுப்பாதை போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் வன்னிக்கும் யாழ்.குடாநாட்டிற்குமான பிரதான பாதையாக இப்பாதை பயன்படுத்தப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.கல்வியங்காடு குளத்தில் ஆயுதங்கள் தேடப்படுகின்றன!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதான தகவலையடுத்து அப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கல்வியங்காடு சந்திரசேகரர் ஆலய வீதியிலுள்ள குளம் ஒன்றிற்குள் ஆயுதங்கள் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவலையடுத்தே இந்நடவடிக்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட குளம் அமைந்துள்ள பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு ஆயுதம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குளத்தின் நீர் படையினரால் பத்து நீரிறைக்கும் இயந்திரங்களைக் கொண்டு இறைக்கப்பட்டு வருகின்றது. இன்றும் இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொக்கிளாய் கிராம மக்கள் 26 வருடங்களின் பின்னர் மீள்குடியமர அனுமதி!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் மக்கள் 26 வருடங்களின் பின் அவர்களின் கிராமத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இக்கிராமத்திலிருந்து 1984ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு இடங்களிலும் வசித்து வந்தனர்.

கொக்கிளாய் கிராமத்தில் மக்கள் மீள்குடியேற தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதிகளில் மீள்குடியேற 34 குடும்பங்கள் மட்டும் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள இக்குடும்பங்கள் இன்று திங்கள் கிழமை முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழைத்து வரப்படுகின்றவர்கள் பாடசாலையொன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பின் அவர்களது காணிகளில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவிக்குட்பட்ட விசுவமடு கிழக்கு கிராமஅலுவலர் பிரிவில் எதிர்வரும் 29ம் திகதி மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்புலன்ஸ் வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் காயம்.

நோயாளியை ஏற்றிச்சென்ற அம்புலன்ஸ் வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதியதில் வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் காயமடைந்தார். மந்திகை வைத்தியசாலையிலிருந்து சென்ற அம்புலன்ஸ் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்று ஞாயிறு மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலைக்குச் சொந்தமான இந்த அம்புலன்ஸ் வாகனம் மந்திகை வைத்தியசாலை நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கோப்பாய் பகுதியிலுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

யாழ்.குடாநாட்டு வீதிகளிலும், யாழ். ஏ-9 பாதையிலும் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றமையும், இவ்வீதிகளில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்துக் காணப்படுவதே இதற்குக் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆறு பேருக்கெதிராக வழக்குத் தாக்கல்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் மேல்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த விடுதலைப்புலி உறுப்பினர்களால் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுத் தொடர்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு சட்டமாஅதிபர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குறித்த ஆறு விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்களுக் கெதிராக கொழும்பு மற்றும் மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.