September

Thursday, September 23, 2021

September

ரூ.12 இலட்சம் பெறுமதியான கருத்தடை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

dr.jpgஇந்தியா விலிருந்து திருட்டுத்தனமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 12 இலட்சம் ரூபா பெறுமதியான கருத்தடை மாத்திரைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையர் ஒருவரே இந்தியாவின் சென்னையிலிருந்து இம்மாத்திரைகளைக் கடத்தி வந்துள்ளதுடன் குழந்தைகளுக்கான உணவு சவர்க்காரம் மற்றும் சொக்கலேட்டுக்களுக்குள் மறைத்து வைத்தே இதனை கொண்டு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

அன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யி. வி. 573 விமானத்தில் பயணித்துள்ள அவர் சுங்க அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இதனை வெளியே கொண்டு வருவதற்காக பெரும் பிரயத்தனம் மேற்கொண்ட போதும் அது பலிக்கவில்லை. சுங்க அதிகாரிகளானலால் சில்வா, நந்தன ஜயதிலக ஆகியோர் லாவகமாக குறிப்பிட்ட கருத்தடை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் பதிவு செய்யப்படாத 3860 மாத்திரைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்கவின் வழிகாட்டலில் பிரதிச் சுங்கப் பணிப்பாளர் ஹேமால் கஸ்தூரி ஆராய்ச்சி மேற்படி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேக நபருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள்

main.jpgஅமெரிக்க வர்த்தகத் தலைவர்களிடம் ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் முன்னணி வர்த்தகத் தலைவர்களை சந்தித்ததுடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்குரிய வாய்ப்புகள் மேலெழுந்திருப்பது குறித்து எடுத்துரைத்திருக்கிறார்.

வான்வெளி பாதுகாப்பு, விருந்தோம்புதல், உல்லாசப்பயணத்துறை உட்பட கைத்தொழில்துறையின் பல்வேறு பட்ட பிரிவுகளைச் சார்ந்த நிறைவேற்று அதிகாரிகள் நியூயோர்க் நகரின் ஹெல்னிம் லே ஹோட்டலில் இடம்பெற்ற மதியபோசன நிகழ்வில் கலந்து கொண்டனர். கொக்காகோலா கம்பனி, போயிங் கம்பனி, கூகிள், ஹில்ரன் ஹோட்டல்கள் ரிசோர்ட்ஸ், ஸ்ரள்யூட் ஹோட்டல்கள் ரிசோர்ட்ஸ் உட்பட சுமார் 100 வர்த்தகத்துறை தலைவர்கள், ஆய்வாளர்கள், வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க வர்த்தகத் தலைவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி ராஜபக்ஷ, முதலீட்டு வாய்ப்புத் தொடர்பாக இலங்கை மீது புதிதாக கவனத்தைச் செலுத்துமாறு இச்சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

பிபிஸர் போன்ற கம்பனிகள் இலங்கை போன்ற மேலெழுந்துவரும் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்புவதாக பிபிஸர் கம்பனியின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்த வர்த்தகத்துறையினர் கலந்து கொள்ளும் மதியபோசன நிகழ்வானது கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள், அரச அதிகாரிகள், இலங்கை வர்த்தகத் தலைவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப் பாரிய வழியை ஏற்படுத்தித் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் தனிநாடா? ரவி கருணாநாயக்கவின் சந்தேகம்

sri-lankan-parliament.jpgஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக பிரதியமைச்சர் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். அவ்வாறெனில் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடாவென ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட ஒழுங்குப் பிரச்சினையொன்றின்போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது; ஒரு அமைச்சர் வெளிநாடுசெல்லும்போதுதான் அவரின் அமைச்சுப் பொறுப்புக்குப் பிரதியமைச்சர் நியமிக்கப்படுவதும் அவர் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்பதும் வழமை. ஆனால், பாரம்பரியக் கைத்தொழில்கள்,சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக அவரின் அமைச்சுப் பொறுப்பைப் பிரதியமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அமெரிக்கா செல்லவுள்ளதாலே இப்பதவிப் பிரமாணம் எனக் கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமெரிக்கா செல்லவில்லை. யாழ்ப்பாணம் தான் சென்றார். அவ்வாறானால் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடா? அரசாங்கம் யாழ்ப்பாணத்தைத் தனிநாடாக ஏற்றுக்கொண்டுவிட்டதா? என்பது தொடர்பில் சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், இன்று ஒரு அமைச்சுக்கு இரு அமைச்சர்கள் உள்ளனர். இதில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரா அல்லது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பிரதியமைச்சர் அமைச்சரா என்பதையும் கூற வேண்டும் என்றார்.இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ. இது தொடர்பில் தனக்கு எந்தவித அறிவிப்புகளும் வரவில்லை என்று கூறினார்

திருகோணமலை சிறைச்சாலையில் நேற்று “தீ”

திருகோணமலை சிறைச்சாலையில் நேற்று காலை கைதிகள் கோபமுற்ற நிலையில் தங்களது படுக்கை விரிப்புக்களை தீயிட்டு எரித்ததன் விளைவாக அங்கு விரைவாக தீப்பற்ற தொடங்கியது.

திருகோணமலை சிறைச்சாலை யில் நேற்று அதிகாலை சிறைச் சாலை அதிகாரிகளால் கைதிகளை சோதனையிட்ட பொழுது அங்கு கைதிகளிடமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசி மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை கண்டித்து கோபமுற்ற நிலையில் கைதிகள் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அப் பகுதி கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீ அணைப்பு படையினர் சென்று தீயை அணைத்துள்ளனர். இத் தீ ஏனைய இடங்களுக்கு பரவாமல் உடைமைகள் உயிர் சேதங்கள் ஏற்படாதவாறு காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றன.

வடமாகாணத்தில் 120 பாடசாலைகள் தரமுயர்வு

cc.jpgவடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாடசாலைகளே இவ்வாறு தரம் உயர்த்தப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள ஆயிரம் பின்தங்கிய பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சருக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது தீர்மானிக்கப் பட்டதாகத் தெரி வித்த அவர், இவற்றில் வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மேம்படுத்த இணக்கம் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

வட மாகாணத்தின் கல்வித்துறையை மேம்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும், அரசாங்கமும், மாகாண அமைச்சும் மேற்கொண்டுள் ளதாக ஆளுநர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கம் நடைமுறையில் வரவுள்ள இத்திட் டம் நான்கு ஆண்டு காலத்திற்குள் நிறைவடை யவுள் ளது என்றார். வட மாகாணத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஐந்து பாட சாலைகளும், மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் 1006 பாடசாலைகளும் உள்ளதாக தெரிவித்த அவர், இவற்றில் 82 பாடசாலைகள் இன்னும் மீள திறக்கப் படாமல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி னார். ஐந்து கிராமங்களிலிருந்து ஒரு பாடசாலை என்ற அடிப்படையில் மாவட்டமொன்றி லிருந்து 20 தொடக்கம் 30 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

பின்தங்கிய 20 பாடசாலைகளையும் சம்பந்தப்பட்டவர்களின் உதவியுடன் தானே தேர்ந்தெடுத்து அதற்கான சிபாரிசு களை கல்வி அமைச்சுக்கு அனுப்பவுள் ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் வடமாகாணத்திலு ள்ள பாடசாலைகள் மேம்படுத்தப்பட வுள்ளதுடன் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மாணவ, மாணவிகள் நன்மையடைய வுள்ளனர். இதேவேளை, பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறந்த பாடசாலைகளைத் தேடி அலையும் சிரமத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் படும் பாடசாலைக்குத் தேவை விளையாட்டு மைதானம், ஆய்வுக் கூடங்கள், நூலகம், கணனி அறைகள், பெளதீக வளங்கள், ஆசிரியர்கள் பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன் மேற்படி பாடசாலைகளின் மாணவர்களின் எண்ணிக்கையும் 1500 ஆக அதிகரிக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கில் மூடப்பட்டுள்ள சுமார் 82 பாடசாலைகள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தகவல் தருவோருக்கு ரூ. 25 இலட்சம் சன்மானம்

பேலியகொடையில் கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்ற 7 கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சரியான தகவல்களை வழங்கு வோருக்கு 25 இலட்சம் ரூபாவை சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்பு டைய குற்றவாளிகளை கைது செய்வதற்கு தேவையான சரியான தகவல்களை வழங்குபவருக்கே இந்தச் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

அவ்வாறு தகவல் தெரிந்தவர்கள் 011-2662311, 011-2662323, 011-2685151 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொலிஸ் திணைக்களம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பணமாற்ற (டெல்லர்) இயந்திரங் களில் வைப்பதற்காக வாகனம் ஒன்றில் 7 கோடி ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு செல்லப்பட்ட போது இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற் றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற் கொள்ளவென பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் உத்தரவின் பேரில் 5 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதிமன்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாண்டில் மட்டும் 46 பேர் விவாகரத்து கோரி யாழ்.நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் 123 பேர் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்திருந்ததாகவும், முப்பது வயதிற்குட்பட்ட இளம் தம்பதியினரே இவ்வாறு விவாகரத்து கோரி நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்துள்ளதாகவும் நீதிமன்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

புரிந்துணர்வின்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின்மை, பொருளாதாரப் பிரச்சினைகள், என்பனவே யாழ் மாவட்டத்தில் விவாகரத்து அதிகரிப்பதற்கான காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விவாகரத்து கோரும் தம்பதிகள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த நீதிமன்றங்கள் முயல்கின்ற போதும் விவாகரத்துக் கோருவதில் பலர் பிடிவாதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விவாகரத்துக் கோருபவர்களில் அரசாங்க ஊழியர்களே அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியில் பலருக்கு இணக்கமான குடும்பவாழ்வு இல்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் சில சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வயதான தம்பதிகள் மத்தியில் இவ்வாறான முரண்பாடுகள் தோன்றுவதாகவும் ஆனால், தங்களின் பிள்ளைகளின் நலன்குறித்த எண்ணத்தினாலும், சமூகத்திற்கு பயந்த நிலையிலும் விவாகரத்தை நாடாமல் போலியான குடும்ப வாழ்க்கையை அவர்கள் நடத்துவதாகவும் சமூகவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு.

ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டியலில் போட்டியிட்டு தற்போது அரசாங்கத்தின் பக்கம் தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறீரங்கா தமக்கு வாக்களித்த ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களை ஏமாற்றிட்டார் எனவும், அவருக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்குமிடையில் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிறீரங்காவுடனான உடன்பாடுகள் அனைத்தும் ரத்துச் செய்ய்பட்டுள்ளதாகவும் சிறிரங்கா எடுக்கும் தீர்மானங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஒருபோதும் தடையாக இருக்காது எனவும், இதே நேரம் அவரது தனிப்பட்ட தீர்மானங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி பொறுப்பேற்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீரங்கா கொழும்பைத் தளமாக் கொண்ட தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ‘மின்னல்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் என்பதும் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சி பட்டியலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்படத்தக்கது.

மன்னார் நாகதாழ்வுப் பகுதியில் மக்கள் மீள்குடியமர அனுமதி.

மன்னார் நாகதாழ்வுப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட நாகதாழ்வுப் பகுதியில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக 1985 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கினர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் மன்னார் நகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் வசித்து வந்தனர்.

இவ்வாறு தங்கியிருந்தவர்களில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கான தற்காலிக இருப்பிடங்களை மன்னார் வாழ்வோதயம் அமைப்பும், வீட்டுப்பாவனைப் பொருட்களை ஐ.நாவின் உயர்ஸ்தானிகராலய பணிமனையும்; வழங்கின. இவர்களுக்கு அறுமாதகால உலருணவுப்பொருட்களை வழங்க பிரதேசச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிப் பாடசாலைகளுக்கு தளபாடங்களை வழங்க நடவடிக்கை.

வன்னிப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கும் பாடசாலைகளுக்கு அடுத்தவாரம் புதிய தளபாடங்கள் வழங்கப்படும் என மாகாணக் கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளவும் இயங்கத் தொடங்கியுள்ள பாடசாலைகளில் தளபாடப் பற்றாக்குறைகள் காரணமாக மாணவர்கள் நிலத்தில் அமர்ந்து கற்றலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இப்பாடசாலைகளுக்கு தளபாடங்களை பெற்றுக்கொடுப்பதில் ஆளுநர் துரித கதியில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் இத்தளபாடங்கள் வலையக் கல்விப்பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.