October

October

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!

Mareeni_ManuelpillaiDr_LittleAidஇலங்கையில் பல்வேறு மனித நேய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார். செப்ரம்பர் 17 இல் இடம்பெற்ற ஆண்டுக் கூட்டத்தில் லிற்றில் எய்ட் உறுப்பினர்கள் இவரை ஏகமனதாகத் தெரிவு செய்தனர்.

உதவித் திட்டங்கள் 
மே 18 2009 ல் பிரித்தாகனிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் இதுவரை 20க்கும் மேற்பட்ட உதவித் திட்டங்களை முன்னெடுத்து உள்ளது. தமிழ் அமைப்புகளுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து இவர்கள் இந்த உதவித் திட்டங்களை முன்னெடுத்தனர்.

லண்டன் அகிலன் பவுண்டேசன், ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், தேசம், தீவக மேம்பாட்டு சமூகம் ஆகிய தமிழ் அமைப்புகள் லிற்றில் எய்ட் உடன் இணைந்து மனித நேயத் திட்டங்களை முன்னெடுக்கின்றன.

Medicine Without Border, Global Medical Aid, Book Abroad போன்ற சர்வதேச அமைப்புகளும் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவிகளை மேற்கொள்கின்றன. Medicine Without Border, Global Medical Aid ஆகியவற்றின் உதவியுடன் லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் பவுண்ட் பெறுமதியான மருத்துவ உதவிகளைப் (பெரும்பாலும் மருந்துப் பொருட்கள்) பெற்று பெரும்பாலும் வடக்கு கிழக்கில் உள்ள மருத்துவ மனைகளுக்கு விநியோகித்தது. அரசுசாரா நிறுவம் ஒன்று இவ்வளவு தொகையான மருந்துப் பொருட்களை இலங்கையில் பெற்று விநியோகித்தது இதுவே முதற் தடவையாகும்.

எதிர்காலம்
யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட லிற்றில் எய்ட் ஆரம்ப காலங்களில் முகாம்களில் இருந்த மக்களுக்கான உடனடித் தேவைகளை மேற்கொண்டது. மரக்கறி வகைகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகளை வழங்கியது.

மேற்கொண்டு இடைக்கால நீண்டகாலத் திட்டங்களையே லிற்றில் எய்ட் மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவது, ஆங்கலக் கல்விக்கு உதவுவது போன்ற நடவடிக்கைகளை லிற்றில் எய்ட் திட்டமிட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக புக் அப்ரோட் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான நூல்கள் தருவிக்கப்பட்டு உள்ளது. இவை இன்னும் சில வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் 20 வரையான கணணிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவையும் இன்னும் சில வாரங்களில் விநியோகிக்கப்படும். லிற்றில் எய்ட்க்கு முதலாவது காசோலையை  வழங்கிய எம் சூரியசேகரம் லண்டனில் இருந்து யாழ் சென்று மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுப்பது குறிப்பிடத்தக்கது.

கணக்கு வழக்கு
புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட பொது அமைப்புகளில் லிற்றில் எய்ட் அமைப்பு தனது கணக்கு கோவைகளை திறந்ததாகவும் வெளிப்படையாகவும் வைத்தள்ளது.

www.littleaid.org.uk என்ற இணையத்தளத்தில் கணக்கு வழக்குகளைப் பார்வையிட முடியும். இது ஏனைய அமைப்புகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ரஸ்டிகள் – உறுப்பினர்கள்
லிற்றில் எய்ட் இன் தலைவி: டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை, செயளாயினி: சர்மிளா பெர்னான்டோ. பொறுப்பான இரு பதிவிகளையும் பெண்களே வகிக்கின்றனர். தனாதிகாரி: சிறில் அல்பிரட், திட்ட இணைப்பாளர்கள்: சண் ராசையா, நிஸ்தார் மொகமட், ஜெயபாலன் தம்பிராஜா, ரரின் கொன்ஸ்ரன்ரைன். இவர்கள் இலங்கையின் பல்கலாச்சாரத்தன்மையை பிரதிபலிக்கும் வைகயில் அமையப் பெற்றுள்ளனர்.

‘ரஸ்டிஸ் வீக்’ இணையச் சஞ்சிகை லிற்றில் எய்ட் தலைவி மரினி மனுவேற்பிள்ளையை ஒரு வாரத்திற்கான ரஸ்டியாக தெரிந்து கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

லிற்றில் எய்ட் உதவித் திட்டங்கள்:

தற்போது இலங்கை சென்றுள்ள ரிற்றில் எயட் திட்ட இணைப்பாளர்களில் ஒருவரான ரி கொன்ஸ்ரன்ரைன் அங்கு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார். அவை பற்றிய விபரம் பின்னர் பதிவிடப்படும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள்:

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
 
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
 
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
 
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
 
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
 
சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.
 
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
 
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!
 
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்
 
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
 
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
 
மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்
 
டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்
 
லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்
 
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

தரக் குறைவான மருத்துவ மையங்கள் மீது NHS நடவடிக்கை !

NHS_Logoநோயாளர் களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கத் தவறும் மருத்துவ மையங்கள் மீது பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு என்எச்எஸ் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. தரமான சுகாதார சேவையை வழங்கத் தவறுபவர்களில் ஆங்காங்கே தமிழ் மருத்துவ மையங்களும் தமிழ் மருத்துவர்களும் சிக்கி உள்ளனர். இவர்களில் சிலரின் மீதான விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றது.

வடக்கு லண்டன் கலோடோனியன் றோட்டில் பல்வைத்திய நிலையத்தை நடாத்தி வந்த கைலாசம் பஞ்சநாதன் மீது விதிக்கப்பட்ட இடைக்காலக் கட்டுப்பாடுகளை Islington Primary Care Trust தற்போது நீக்கி உள்ளது.

2008 ஒக்ரோபரில் தொற்றுநோய் கட்டுப்பாட்டு செய்முறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதாக கைலாசம் பஞ்சநாதன் மீது குற்;றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு General Dental Councilக்கு முறைப்பாடுகள் சென்றன. 2009 நவம்பரில் கைலாசம் பஞ்சநாதனின் பல்வைத்தியநிலையம் சோதணைக்கு உள்ளானது. தொற்றுநோய்  கட்டுப்பாட்டை உறுதிசெய்வதற்கு கவனிக்கப்பட வேண்டிய 9 விடயங்களிலும் கைலாசம் பஞ்சநாதனின் வைத்திய நிலையம் தவறி இருந்ததை அச்கோதனை தெரியப்படுத்தியது. ஏப்ரல் 2009ல் மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களின் பதிவு பற்றிய ஓடிற்றில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது.

ஆனால் தனது தவறை உடனடியாகவே கவனத்தில் எடுத்துக் கொண்ட கைலாசம் பஞ்சநாதன் தான் தொழில் செய்வதை இடைநிறுத்த முன்வந்ததுடன் தொழில்தர ஆலோசனையைப் பெற்று வைத்திய நிலையத்தின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக விசாரணைக் குழு தெரிவித்து உள்ளது.

2009 யூனில் சுயாதீன அமைப்பினு+டாக கைலாசம் பஞ்சநாதனின் வைத்திய நிலையம் மீளவும் சோதணைக்கு உட்படுத்தபக்பட்டது. தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கு இருக்க வேண்டிய 9 விடயங்களும் இம்முறை தரமுடையதாக இருந்தது.

கைலாசம் பஞ்சநாதன் தொடர்ந்தம் தரத்தை உயத்தி வருவதில் திருப்தி அடைந்த விசாரணைக் குழு அவர் பாதிக்கப்பட்ட விடயங்களில் தரத்தினை உயர்த்தி உள்ளதை ஆதாரபூர்வமாக மதிப்பீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரால் தரமான சேவைகளை வழங்க முடியும் என்பதை அக்குழு ஏற்றுக்கொண்டது. அதனையடுத்து அவர் தொழிலை மேற்கொள்வதில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.

எனது பார்வையில் கே பி : ”உலகை மாற்ற வேண்டுமாயின் நீ முன்னுதாரனாமாயிரு. – Be the change you want to see in the world.” மகாத்மா காந்தி : எஸ் வாசுதேவன்

NERDO_KP_Meetsமகாத்மா காந்தியின் பொன்வாக்குளில் ஒன்று. ”உலகை மாற்ற வேண்டுமாயின் நீ முன்னுதாரனாமாயிரு.” இதன் அவசியம் இன்று நம் தமிழ் சமூகத்தில் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சமூக மாற்றம் பற்றி பேசும் பலரே இன்று சமூகத்தின் பல்வேறு சிரழிவுகளுக்கு காரண கர்த்தாக்களாக இருக்கிறார்கள். இது தாயகத்தில் மிகவும் ஒரு மேசமான நிலையில் உள்ளது. அதற்காக புலம் பெயர் மண்ணில் உள்ளதெல்லாம் திறம் என்று கூறவரவில்லை. புலம்பெயர் மண்ணில் இன்று வேறு ஒரு வியாதி பிடித்துள்ளது. கற்பனையில் கப்பலோட்டும் தமிழனாக புலம்பெயர் தமிழன் மிகவும் மோசமான ஒரு தமிழ் சமூகத்தை புலம்பெயர் மண்ணில் உருவாக்கி வருகிறான்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்காக 20 வருடங்களுக்கு மேலாக உழைத்து பின்னர் தகடு வைப்புகளால் ஓய்வு பெற்ற கே.பி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா பத்மநாதன் அவர்கள் புலிகளின் மறைவிற்கு பின் பரவலாக அதிகம் பேசப்பட்டு வந்த ஒருவர். இவர் நல்லவரா கெட்டவரா என்ற விவதாம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. ஆனால் அண்மையில் தமிழ் பத்திரிகையாளர் டீ. பி. எஸ் ஜெயராஜ் நான்கு பகுதிகளாக கே.பியுடனான நேர்காணலை மிகவும் விறுவிறுப்பாக எழுதியிருந்தார்.

நம்மவர்களுக்கு விடுப்பு பூராயம் அறிவதில் மிகுந்த அக்கறை! ஆனால் இந்த நேர்காணல் இந்த விடுப்பு பூராயங்களை விறுவிறுப்பாக்கவில்லை. யதார்த்த நிலையை விளக்கியது. கே.பி முன்னர் வெளியில் இருந்து சொன்னதைதான் மீளவும் சொல்லியிருக்கிறார். கே பி உடன் மே18க்குப் பின் பலதடவை உரையாடி இருந்தேன். விவாதித்தும் இருந்தேன். தேசம்நெற் ஆசிரியர்களும் கே பி யுடன் கதைத்ததைப் பதிவு செய்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் என்ன விடயங்களைப் பேசினாரோ அதே விடயங்களையே அவர் கைது செய்யப்பட்ட பின்னரும் பேசுகின்றார். நானும் விடுதலைப் புலிகளுடன் செயற்பட்டவன் என்பதை முன்னரே எழுதி உள்ளேன். அவ்வாறே கே பி யும் விடுதலைப் புலிகளுடன் நீண்ட காலம் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.

இப்போதுள்ள நிலையில் கே பி தங்களால் வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் சிறைகளில் வாடுவதனாலும் தங்களை நம்பிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி அனைத்தையும் இழந்த நிலையில் இருப்பதால் அவர் குற்ற உணர்விற்கு உள்ளாகி இருப்பதை அவருடன் உரையாடியதில் இருந்து உணருகிறேன். அந்தக் குற்ற உணர்வு பாதிக்கப்பட்டவர்களிற்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற உந்துதலை வழங்குகின்றது.

ஆனால் இதுபற்றி உடைந்து போய் பல்வேறு அணிகளாகி உள்ள புலம்பெயர் புலிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை தம் வசதிக்கேற்ப வெளியிடத் தொடங்கினார்கள். கே.பியே அடுத்த முதல்வர்! கே.பி டீ.பி.எஸ் கூட்டில் ஒரு பத்திரிகை. கே.பி ஒரு ஆயுதக்குழுவை கட்டுகிறார். கே.பி அபிவிருத்தி என்ற பெயரில் காசு சேர்க்கிறார். கே.பி மீளவும் புலிகள் பாணியில் மாபியா நடத்த முனைகிறார். என்று தாம் விரும்பிய படி காது மூக்கு வைத்து தொடங்கிய கதைகள் இன்று கடைசியல் கே.பிக்கு அரசு 500 பரப்பு காணியை இலவசமாக வழங்கியுள்ளதில் என்பதில் வந்து நிற்கிறது.

Kumaran_PathmanathanKumaran_PathmanathanKumaran_Pathmanathanஇயக்கத்தை விட்டு கே.பியை ஓய்வெடுக்க சொன்னபோது அவரிடம் இருந்த கடைசி குண்டூசி வரை இயக்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது. அதன் பின்னர் வெளிநாட்டு புலிகளிடமிருந்து ஒரு ஓய்வூதிய சம்பளமே அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இயக்கத்தின் செயற்பாடுகளில் இருந்து ஓதுங்கியிருக்க கூறிய அதே இயக்கம் கே.பியை ஒரு அரசியல் ஆலோசகராக 2003இல் கொண்டுவர மீளவும் விடுதலைப் புலிகளின் தலைவர் முயன்றதை பலர் மறந்து விட்டனர். அதை அன்று இக்பால் அத்தாஸ் ஹின்டு பத்திரிகையில் விலாவாரியாக எழுதியிருந்தார். http://www.hinduonnet.com/2003/10/15/stories/2003101511111000.htm

கே.பியை எப்படியாவது இயக்கத்தினுள் வைத்திருக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முயன்ற போதும் அதுவும் கூடிவரவில்லை. இதற்கு பின் நடந்தவைகளை தனது நேர்காணலில் கே.பி விரிவாக கூறியள்ளார். கே.பியுடன் வேலைசெய்த முன்னைநாள் இயக்க நண்பர்கள் பலர் இன்று வெளிநாடுகளில் தாமுண்டு, தம்பாடு உண்டு என்று இருக்கிறார்கள். இவர்கள் யாரும் கே.பியை குறை கூறவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு விலத்திய பல்வேறு பதவிகளை வகித்தவர்கள் இன்று புலம்பெயர் மண்ணில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் யாரும் கே.பியின் இந்த அறிக்கை பொய் என்று கூறவில்லை.

ஆனால் இதெல்லாம் சும்மா கட்டுக்கதை என்று இவர் தற்போது ஒரு சூழ்நிலைக்கைதி எனவே இவரை விட்டு விட்டு நாம் நமது வேலையான தேசியத்தை கட்டுவோம் என்று தேசிய வியாதி பிடித்த கூட்டம் அலைகிறது. இவர்களில் 99வீதமானோர் எந்த ஒரு இயக்கத்திற்கும் போகாதவர்கள். போராட்டம் தொடங்கிய மறு கணமே வெளிநாடு வந்தவர்கள். ஒரு சிலர் வெறும் சாக்கு போக்குக்காக தம் சொந்த நலனுக்காக இயக்கங்களிற்கு போனவர்கள். இவர்களில் பலர் புலம்பெயர் ஊடகங்களை தம் வசம் வைத்திருப்பவர்கள். இவர்கள் தான்  இன்று கே.பியை ஒரு துரோகியாக்கி அவரை ஏதாவது ஒரு நாட்டின் உளாவளி என்று முத்திரை குத்தமுனைபவர்கள். இவர்களில் ஒரு தரப்பு உலகப் புகழ் பெற்ற புனைபெயர் தமிழ் ஊடகவியலாளர்கள். இணைய செய்திகளை படித்து விட்டு நோரக கண்டது போல் விலாவாரியாக எழுதித் தள்ளுகிறார்கள்.

ஊடக தர்மத்திற்காக இலங்கைக்கு உயிரைப்பணயம் வைத்து சென்ற டைம்ஸ் சஞ்சிகையின் மேரி வாழும் இந்த நாட்டில் தான் இந்த கூட்டமும் வாழ்கிறது. ஒரு ஊடகவியலாளனிற்கு இருக்க வேண்டிய அடிப்படை தகமைகள் கூட இருக்க வேண்டாம்? குறைந்த பட்சம் நேர்மையாவது வேண்டாமா?

நான் கடந்த ஆவணியில் இலங்கை போய் வந்ததும் மீண்டும் எனக்கு கே.பியுடன் பேச வாய்ப்பு வந்தது. பேசிய பின் தான் அங்கு அவரைப் போய் பார்த்திருக்க வேண்டும் என்று பின்னர் கவலைப்பட்டேன். காரணம் தற்போது அவர் செய்யும் முயற்சி! அந்த முயற்சி வெறும் கண்துடைப்புக்காவோ காசு பணம் சேர்க்கவோ செய்யும் முயற்சி அல்ல. நான் வன்னியில் நேரடியாக பார்த்து பாதிக்கப்பட்ட விடயங்களை விட அவரை பல விடயங்கள் மிகவும் மன அழுத்தத்திற்குள்ளக்கி இருந்தது. இதை அவருடனான உரையாடலில் புரிய முடிந்தது. இயக்கம் நடாத்திய காலங்களில் அதீத விசுவாசம் காட்டாது அந்த மனிசனும் சொத்து சேர்த்திருந்தல் மலேசியா போயிருக்கத் தோவையில்லை. பிடிபட்டிருக்கவும் மாட்டார்.

பத்மநாதனின் படமே அவர் பிடிபட்ட பின்னரே ஊர்ஜிதம் செய்யப்பட்டது. புலம்பெயர் நாட்டில் மே 18 இற்கு பின் தலைமறைவான பணக்காரப் புலிகளில் ஒருவராக கே.பியும் இருந்திருக்க முடியும். இயக்கம் முழுவதும் அழிந்ததை ஊர்ஜிதம் செய்த செல்வராசா பத்மநாதன் ஒரு பற்றிக்காக (Patrick) தென் ஆபிரிக்காவிலேயோ அல்லது டேவிட்டாக எரித்திரிவியாவிலோ ஒதுங்கியிருக்க முடியதா?

NERDO_KP_Meetsமக்கள் மீது பற்றுள்ளவர்கள் மக்களை விட்டு  ஓட மாட்டார்கள். நம்பிக்கை இழந்த மக்களிற்கு தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்றுதான் சிந்திப்பார்கள். இந்த ஒரு நோக்கிற்கா தன் அடையாளத்தை வெளியில் கொண்டு வந்த கே.பியை இலங்கை அரசு கைது செய்ததையே பொய் என்று தமிழீழத்தை இதோ நெருங்கிக் கொண்டிருப்பதாக எழுதிய அதே புலம்பெயர் ஊடகவியலாளர்கள் ஆய்வு செய்து எழுதுகிறார்கள்.

கே.பி மலேசியவில் தங்கியிருந்த போது பல்வேறு தடவைகள் மணிக்கணக்கில் தொலைபேசியில் கதைக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்து. ”புலிகளின் ஏகப்பிரதிநிதுத்துவத்தை நீங்கள் மூட்டை கட்டிவைக்க வேண்டும்” என்று நான் தொடங்கவே, ”தம்பி இது தான் நாங்கள் விட்ட பெரிய பிழை இதை இனியும் விடக்கூடாது” என்று கூறியதோடு நிற்காது, பல்வேறு பட்ட இயக்க தோழர்களை அணுகியதுடன் அவர்களை தொடர்ந்து சந்தித்தும் வந்தார். இது தான் இங்குள்ள ஏகப்பிரதிநிதித்துவ புலிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது. தமது பதவிகள் பணம் அனைத்தும் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் கே.பி எதிர்ப்பு யுத்தத்தை அவர்கள் அன்றே ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று புலிகள் செய்த அனைத்து தவறுகளிற்கும் அனைவரிடமும் பொது மன்னிப்பும் கோரியுள்ளார் கே.பி. புலிகளின் அராஜகத்தை விமர்சித்து அவர்களை விட மிக மோசமாக ஆராஜகம் செய்த கட்சிகள் கூட இன்னமும் குறைந்த பட்ச மன்னிப்பை கூட இலங்கை மக்களிடம் கோரவில்லை. ஆனால் இதைக் கூட இந்த போலி ஊடகவியலாளர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். இவர் சூழ்நிலைக் கைதியாம்.  அதுதான் மன்னிப்பு கேட்டவராம்.

”மாற்றம் என்பது உன்னுள் ஆரம்பிக் வேண்டும்” என்பதை கே.பி இன்று நிரூபித்துள்ளார்.

NERDO_Book_Donationநேர்டோ என்ற அமைப்பை கே.பி தொடங்கியதன் காரணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கஸ்டத்திற்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு மட்டும் அல்ல. மாறாக மனித நேயம் கொண்ட எந்த ஒரு மனிதனுக்கும் உருவாகும் ஒரு உணர்வு. வன்னிக்கு நேரடியாக சென்று நிலைமைகளை பார்த்து அந்த மக்கள் படும் அவலங்களை பார்க்கும் ஒவ்வரு மனித நேயம் கொண்டவர்களுக்கு உருவாகும் அந்த உணர்வே கே.பிக்கும் உருவாகியது.

தடுத்து வைக்கப்படுதலின் உளவியல் தாக்கத்தை தானே அனுபவித்து உணர்ந்த கே.பி, தடுத்து வைக்கபட்டிருக்கும் முன்னை நாள் போராளிகளின் வேதனையையும் தாக்கங்களையும்  நன்கே உணர்ந்தார். இவை பற்றி பேசும் ஒவ்வொரு கணமும் அவர் உணர்ச்சிவசப்படுவதை என்னால் புரிய முடிந்தது. ”நான் வாழ்ந்து முடிந்து விட்டேன் ஆனால் இவர்கள் வாழவேண்டும்” என்பதிலும் ”அவர்கள் நல்ல மனிதர்களாக வெளியில் வந்து தங்கள் சொந்த காலில் நிற்பதை பார்க்க வேணும்” என்பதே அவரின் விருப்பம். கே.பியும் ஒரு கொஞ்ச காலம் சிறையில் அப்பிடி இப்பிடி காலத்தை தள்ளிப்போட்டு பொது மன்னிப்பில் மயிலிட்டியில் தன் வாழ்க்கையை முடித்திருக்க முடியம். ஆனால் அதை செய்ய அவர் விரும்பவில்லை.

”அரசாங்கம் செய்யட்டும். நாங்கள் ஏன் செய்ய வேண்டும்” என்று விதண்டாவாதம் பேசவில்லை. அவர் இதை வைத்து அரசியலும் செய்யவும் விரும்பவில்லை. யுத்தத்தால் பாதிகப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை ப+ர்த்தி செய்ய தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யவே முனைகிறார். இன்று வட கிழக்கில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குறிப்பாக இந்த போராட்டத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை நேரில் பார்த்த, மனச்சாட்சி உள்ள ஒரு சாதாரண மனிதன் செய்யும் ஒரு செயற்பாட்டையே இன்று நேர்டோ ஊடாக கே.பியும் செய்ய முனைகிறார்.

NERDO_KP_Meetsஅண்மையில் மிகவும் இரகசியமாக புலம்பெயர் மண்ணிலிருந்து சென்று கே.பியை சந்தித்தவர்கள் அங்குள்ள பலரிற்கு பல வாக்குறுதிகளை கொடுத்து விட்டு நாடு திரும்பினர். கே.பியும் இவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க வந்த ஒருவர் போட்ட குத்துக்கரணத்தால் எல்லாமே தலைகீளாக மாறியது. உதவியை எதிர்பார்த்தவரகள் ஏமாற்றம் அடைந்தனர். இலங்கை அரசை சார்ந்தவர்களோ பார்தீர்களா புலம்பெயர் தமிழர்களை என்று ஏளனம் செய்தனர். ஆனால் நல்ல மனம் படைத்த ஒரு சிலரின் உதவியுடன் தன்னால் இயன்றதை கே.பி செய்யாமல் இருந்து விடவும் இல்லை.

இன்று அவர்களிற்கு கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை. ஆழுக்கொருவர் ஒரு பவுண் மாதம் கொடுத்தாலே அது ஒரு மாற்றத்தை கொண்டுவரும். புலிகளின் பணத்தை இங்கு வைத்துள்ளவர்கள் அதை காப்பாற்ற கே.பியை துரோகியாக்குவதிலேயே கவனமாயுள்ளனர்.  இவர்களிற்கு மக்களைப் பற்றியோ அவர்கள் படும் துன்பம் பற்றியோ அக்கறை கிடையாது.  கே.பி ஏன் செய்ய வேண்டும்? எம்மை நேரடியாக செய்ய அரசு ஏன் தயங்குகிறது என்று ஒருவர் கேட்கிறார்.

20 வருடங்களிற்குமேல்  தனது உழைப்பால் ஒரு அமைப்பை எந்தவித சுயநலமும் பாராது கட்டிக்காத்ததுடன் இன்று ஒரு சதம் காசு கூட கையில் இல்லாது வெறும் கைதியாக இருப்பதே  ஒரு முக்கிய காரணம். காசுதான் பெரிது என்றிருந்தால் கே.பி மலேசியா முதல் மயிலிட்டி வரை பினாமி பெயர்களில் முதலிட்டு விட்டு இன்று சொகுசாக வாழ்ந்திருக்க முடியும்!

இலங்கை அரசை அணுகி தாம் ஒரு அரச சார்பற்ற ஸ்தாபனத்தை நடாத்த போகிறோம் என்றதும் அரசு இணங்கியதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. இந்த விடயத்தில் ஏற்கனவே பலரை நம்பி செயற்பட விட அவர்கள் தமது கஜானாக்களை நிரப்புவதிலேயே கவனம் செலுத்த முனைந்தார்கள். ஆனால் தனது எதிர்காலம் என்ன என்று தெரியத நிலையிலும் அதைப்பற்றி கவலைப்படாது யுத்தத்தால் பாதிக்ப்பட்ட  மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படியாவது உயர்த் வேண்டியது தனது கடமை என்று இலங்கை அரசிடம் கோரி அவர்களை இணங்க வைத்தார். அதை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தற்போது செய்து வருகிறார்.

School_Under_TreeNERDO_School_Supportஉடல் நலம் ஓத்துளைக்காது போதும்  வன்னிக்கு அடிக்கடி சென்று அந்த மக்களுடன் ஒன்றாக இருந்து அவர்களின் நலனை எந்த வித அரசியல் லாபமும் பாரக்காது முழுநேரமாக  தன்னை அர்ப்பணித்து செயலாற்றி வருகிறார். கே.பியை பொறுத்தவரை இது சமூக சேவை மாத்திரம் அல்ல. தன் மனதில் ஏற்பட்ட வடுக்களை போக்க உதவும் ஒரு நீவாரணம். கே.பி மீதான  அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் தொடரவே போகிறது. ஆனால் அவை அனைத்துமே காலப்போக்கில் அடிபட்டுப்போகும். தனது விடா முயற்சியால் எவ்வாறு புலிகள் என்ற அமைப்பை கட்டியமைக்க உதவினாரோ அதேபோல் இந்த மக்களின் வாழ்வை கட்டிமையக்க இவரால் நிச்சயம் முடியும் என நம்புவோம்!

குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்:

(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )

”ஹெலிகொப்டர் முயற்சி சாத்தியமற்றுப் போனது. நெடியவன், காஸ்ட்ரோ மீது சினங்கொண்டேன்.” குமரன் பத்மநாதன்

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

”ஆயுதக்கொள்வனவில் வெற்றி! தலைமையை இயக்கத்தை காப்பதில் தோல்வி! மக்களின் வாழ்வை மீள் கட்டியெழுப்புவதில் நிச்சயம் வெற்றிபெறுவேன்!” குமரன் பத்மநாதன்

லண்டனில் வன்னிப் போரில் மக்களை பணயம் வைத்த தமிழ் ஊடகங்களின் 2010 மாநாடு! – அருள் சகோதரர் எழிலனும் ஒரு பேச்சாளர்! : த ஜெயபாலன்

Gobi_RatnamSutha_NadarajahCheran‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ என்ற தலைப்பிலான மாநாடு லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 23ல் வெஸ்ற்மினிஸ்ரர் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டை International Association of Tamil Journalists – சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வமைப்பின் முதலாவது மாநாடு 2008 ஏப்ரல் 26ல் இடம்பெற்றது.

இந்த ஊடக அமைப்பில் உள்ள பிரதான ஊடகங்கள் ஐபிசி, ஒரு பேப்பர், ஜிரிவி (2008ல் ரிரிஎன்), தமிழ் கார்டியன் போன்ற லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களே. ஏனைய நாடுகளில் உள்ள புலிஆதரவு அமைப்புகளும் நிறுவனங்களும் தங்கள் ஆதரவை நல்கி வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் வி பிரபாகரன் மீதும் மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் கொண்ட ஆனந்தி சூரியப்பிரகாசத்தைத் தலைவியாகக் கொண்டு இவ்வமைப்பு செயற்பட்டு வருகின்றது. பிபிசி தமிழோசையில் நீண்டகாலம் பணியாற்றிய இவருடைய சர்வதேச ஊடகவியல் முகத்தின் பின்னால் இருந்து இவ்வமைப்பை இயக்குபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களே.

2008ல் நடந்த மாநாட்டை குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தவர் ‘ஆணிவேர்’ படத்தின் தயாரிப்பாளரும் வர்த்தகப் பிரமுகருமான திலகராஜா தம்பதிகள். திலகராஜா தற்போது வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஹொட்டல்களை உருவாக்கி வருகின்றார். அந்நிகழ்வின் வரவேற்புரையை வழங்கியவர் ஒரு பேப்பர் ஆசிரியர் கோபி ரட்ணம். தமிழ் கார்டியன் சுதா நடராஜா, விநோதினி கணபதிப்பிள்ளை ஆகிய இருவரும் 2008 மாநாட்டில், முக்கியமாக உரையாற்றியவர்கள், 2010 மாநாட்டிலும் முக்கிய பேச்சாளர்களாக உள்ளனர். அதே போன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தியல் சிற்பிகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் சேரன் 2008 மாநாட்டிலும் முக்கிய பேச்சாளராகக் கலந்துகொண்டவர், 2010 இலும் முக்கிய பேச்சாளராக கலந்துகொள்கிறார். ரிரிஎன் தொலைக்காட்சிக்கு பிரதியீடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் அவுஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படும் ஜீரிவி யும் இம்மாநாட்டில் முக்கிய பங்கெடுக்கின்றது. ஜிரிவி இன் நிகழ்ச்சி வழங்குநர் தினேஸ் மாநாட்டின் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்குகின்றார்.

 ஊடகங்களின் புலிமயமாக்கல்:

தமிழீழ விடுதலைப் புலிகள் தாயகத்திலும் புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த பெரும்பாலான பொது அமைப்புகளை புலிமயமாக்கலுக்கு உட்படுத்தி வந்தன. தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், ஊடகங்களும் இந்தப் புலிமயமாக்கலில் இருந்து தப்பவில்லை. இந்தப் புலிமயமாக்களில் புலி ஆதரவு ஊடகங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தப் புலிமயமாக்கலின் உச்சமாக 2007 பிற்பகுதியில் தமிழ் ஊடகங்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிக்கப்பட்டது. வன்னியில் இருந்து வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு வானொலியான ஐபிசி வானொலியின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற ரமணன் என்பவரே இதன் உருவாக்கத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். தமிழ் சர்வதேச செய்தியாளர் ஒன்றியத்தை அமைப்பதற்கான முதலாவது சந்திப்பு ஐபிசி கலையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பை குகன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பிற்கான அழைப்பு தெரிவு செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் சிலருக்கே கொடுக்கப்பட்டது.

அவ்வழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அப்போது தீபம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக இருந்த கண்ணன் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இது புலிமயமாக்கலின் உச்சமான நிகழ்வு. இந்த ஊடக அமைப்பில் புலிகள் மீது மென்போக்குக் கொண்ட அல்லது புலிகளை விமர்சிக்கவோ அல்லது புலிகளுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்து வந்த தீபம் தொலைக்காட்சி, சன்றைஸ் வானொலி போன்ற ஊடகங்களும் அதன் ஊடகவியலாளர்களுமே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆகவே இது முற்று முழுதான புலி ஊடக அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவ்வமைப்பின் தலைவி ஆனந்தி சூரியப்பிரகாசம் மட்டுமே இந்த அமைப்பிற்கு ஒரு ஊடகவியல் சாயத்தை வழங்கிக் கொண்டு உள்ளார்.

 ஊடகவியலின் அடிப்படை:

ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மக்களின் காவலர்களாக செயற்பட வேண்டும். ஊடகத்தின் முதலும் முக்கியமானதுமான கடமை உண்மையை வெளிக்கொணர்தல். நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு ஊடகவியலின் பங்கு மகத்தானது. இவ்வாறான ஊடகவியலின் அடிப்படை அம்சங்கள் எதனையுமே இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கொண்டிருக்கவில்லை.

இந்த ஊடகங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் விம்பங்களைக் கட்டி அவர்களை யதார்த்தத்தில் இருந்து அந்நியப்படுத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விமர்சனங்கள் வைக்கப்படும் போதெல்லாம் அவ்வாறான விமர்சனங்களை வைப்போர் மீது தனிமனித தாக்குதலை நடாத்தியது. ஆகவே International Association of Tamil Journalists என்பதிலும் பார்க்க International Association of Tiger Journalists என்பதே இவ்வமைப்பிற்கு பொருத்தமான பெயராக இருக்க முடியும்.

”இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்கெடும்”
                        (குறள் 448)

‘தவறுகளை இடித்து உரைக்கின்றவர்கள் இல்லாது இருந்தால், எப்படிப்பட்ட சிறப்பான மன்னனாக இருந்தாலும் அம்மன்னனுக்கு கேடு செய்பவர்களே இல்லாவிட்டாலும் அம்மன்னன் கெட்டு அழிந்து போவான்’ என்கிறது இக்குறள்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகி உள்ளது தமிழ்த் தேசிய மன்னன் வே பிரபாகரனும் International Association of Tiger Journalists ம். மே 18 வரை இந்த ஊடகங்கள் எழுதிய எவ்வித ஆதாரமோ அடிப்படையோ அற்ற செய்திகளும் ஆய்வுகளும் புகழ் மாலைகளும் வே பிரபாகரனினது தலைமையினதோ தமிழீழ விடுதலைப் புலிகளினதோ எவ்வித தவறான அணுகுமுறையையும் சுட்டிக்காட்டவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வே பிரபாகரனையும் சுற்றி விம்பங்களைக் கட்டமைத்தன. விளைவு…..
‘இடிப்பாரை இல்லாத ‘வே’யன்னா மன்னன்
கெடுப்பாருங் செய் கெட்டான்’

உண்மைகளை இருட்டடிப்புச் செய்தனர்:

International Association of Tiger Journalists அமைப்பில் உள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பேராசிரியர் சேரன் போன்ற மதியுரைஞர்களும் வன்னி மக்களைப் பணயம் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைக் காப்பாற்ற முற்பட்டபோது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வன்னி மக்கள் ஆயிரம் ஆயிரமாகச் செத்து மடிந்த போதும் இந்த ஊடகங்கள் மக்களை விடுவிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளைக் கோரவில்லை. மாறாக அந்த மண் வன்னி மக்களின் பூர்வீக மண் என்று கதையளந்து அம்மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகளாக இருக்க நிர்ப்பந்தித்தன. இந்த ஊடகங்களின் சில ஊடகவியலாளர்கள் ஒருபடி மேலே சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து உயிருக்குப் பயந்து தப்பியோடிய மக்களை எவ்வித கூச்சமும் இன்றி துரோகம் இழைப்பதாக விபரித்தனர்.

மாநாட்டில் பங்குபற்றுவோர்:

இச்சந்திப்பிற்கு முன்னர் குறிப்பிட்டவர்களுடன் ஐவன் பீதுருப்பிள்ளை போன்றவர்களும் இணைக்கப்படுவார்கள். மேலும் நோர்வேயில் இருந்து சேந்தன் என்ற இளைய தலைமுறை இளைஞரும், டென்மார்க்கில் இருந்து மற்றுமொரு இளைஞரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இலங்கையில் இருந்து வீரகேசரி ஆசிரியர் தேவராஜா கலந்துகொள்கிறார்.

இச்சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் சார்பில் ரமேஸ் கலந்துகொள்கின்றார். தமிழகத்தில் பத்திரிகையாளராகக் கடமையாற்றிய இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நீண்டகாலத் தொடர்புடையவர். தனது கருத்துக்களை அனேகமாக வெளிப்படையாகவே தெரிவிக்கக்கூடியவர். பக்கம்சாராது கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர். இவருடைய உரை அங்குள்ள பலருக்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம். இவருடன் சர்வதேச ஊடக அமைப்பைச் சேர்ந்த சிலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தியாவில் இருந்து 2008ல் டெக்கன் ஹரல்ட் சார்பில் பகவான் சிங் கும் சுந்தரராஜன் முராய் உம் கலந்துகொண்டனர். 2010 மாநாட்டுக்கு ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையின் இலங்கைப் பிரிவில் இருந்து அம்ரித் லால் என்ற வட இந்தியர் கலந்துகொள்கிறார். இச்சந்திப்பில் கலந்து கொள்ளும் மற்றவர்…..

புலிஆதரவு ஊடகங்களின் மாநாட்டில் அருள் சகோதரர் அருள்எழிலன்

தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும் இனியொரு இணையத்தின் முக்கிய ஊடகவியலாளருமான அருள்எழிலன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடக மாநாட்டில் கலந்துகொள்கிறார். இவர் இலங்கையில் இயங்கும் டான் தொலைக்காட்சி நிறுவனர் குகநாதன் செப்ரம்பர் 3ல் தமிழகத்தில் வைத்து கடத்தல் – கைது விவகாரத்தில் தொடர்புபட்டவர். (டான் ரிவி உரிமையாளர் குகநாதன் – அருள்சகோதரர்கள்: கடத்தல் – கைது விவகாரம்: ‘இது ஒரு சட்டபூர்வமான கடத்தல்’ எஸ் எஸ் குகநாதன்)

இந்த மாநாட்டுக்கு இந்திய ஊடகவியலாளர் அம்ரித் லால் உடன் தமிழகத்தைச் சேர்ந்த, ‘தேசியத் தலைவர் இன்னமும் உயிருடன் உள்ளார்’ என்பதை ஏற்றுக்கொள்ளும் ஊடகவியலாளரைத் தேடினர். ஜுனியர் விகடன் ஊடகவியலாளர் ஒருவரையே அழைக்க ஆரம்பத்தில் முயற்சிக்கப்பட்டது. தொடர்ந்து காற்றுக்கென்ன வேலி படத்தின் இயக்குநரையும் அழைக்க முயற்சிக்கப்பட்டது. இருவருக்கும் வருவதற்கான சாத்தியம் இருக்கவில்லை என்பதால், இறுதியாக ரிரிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றிய, மதியுரைஞர் காலம்சென்ற அன்ரன் பாலசிங்கத்திடம் பேட்டி காண லண்டன் வந்த அருள் சகோதரர்களின் குடும்பத்தில் ஒருவரை அழைக்க முடிவாகியது. அருள் எழிலன் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.

புலிகளின் சம்பளப் பட்டியலில் சில தமிழக ஊடகவியலாளர்கள்:

இன்று தமிழகத்தில் உள்ள சில ஊடகங்களும் ஊடகவியலாளரும் புலம்பெயர் புலி முகவர்களின் சம்பளப் பட்டியலில் உள்ளனர். அல்லது அதனூடாக லாபம் அடைகின்றனர். ஈழத் தமிழரின் அவலம் பற்றி எழுதுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி எழுதுவதும் தமிழக வியாபார ஊடகங்களின் எழுத்தாளர்களின் ஒரு வியாபாரத் தந்திரமாக மாறியுள்ளது.

நக்கீரன், நக்கீரன் கோபால் போன்ற இந்த வியாபார ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களதும் வாடகை உணர்வுகள் ஈழத் தமிழ் மக்களின் அழிவுக்கே வித்திட்டு உள்ளது.

Pirbaharan_Still_Alive_NotPirabaharan_Still_Aliveமே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி உலக ஊடகங்களில் எல்லாம் வெளிவந்த போது நக்கீரன் சஞ்சிகை தலைவர் உயிருடன் இருப்பதாக படம் காட்டியது. (உண்மையான படமும் நக்கீரன் கிராபிக்ஸ் செய்த படமும் அருகில் இணைக்கப்பட்டு உள்ளது.) இன்னுமொரு சஞ்சிகை அவர் எப்படித் தப்பிச் சென்றார் என்று தொடர் எழுதியது.

இவ்வாறான ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பணம் லண்டனில் இருந்தே அனுப்பி வைக்கப்பட்டதாக அனுப்பியவருடன் கூட இருந்த முன்னாள் புலி ஆதரவாளர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை கெ பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே (யூன் 14 2009ல்) தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

 பணத்திற்காக செய்திகளை உருவாக்கும் சில தமிழக ஊடகங்கள்:

டான் தொலைக்காட்சி நிறுவனர் குகநாதனைத் தவிரவும் அண்மைக் காலத்தில் தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களை குறிவைத்து கடத்தல்கள், கப்பம் வாங்கல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தமிழகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஈஎன்டிஎல்டிப் அமைப்பு நக்கீரன் பத்திரிகை எவ்வாறு ஒரு கடத்தல் நாடகத்தை பின்னுகிறது என எழுதியுள்ளது.

‘‘பிடிபட்ட ரஜனி’ என்று ஓர் படத்தினை போட்டுள்ளீர்கள். யார் பிடித்தது? போலீஸ்சார் பிடித்தனரா? வலுக்கட்டாயமாக அவரது கடையிலிருந்தவரை வடபழனியிலிருக்கும் மயூரியா ஹோட்டலுக்கு இழுத்துச் சென்று புகைப் படம் எடுத்து அனுப்பிவிட்டு, ‘பிடிபட்ட ரஜனிகாந்த்’ என்று மக்களை ஏமாற்றியுள்ளீர்கள். பிடிபட்டவர் என்றால் போலீசில் பிடிபட்டவர் என்ற அர்த்தம் தோன்றும் வகையில் கதை பின்னியுள்ளீர்கள். அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழும் வாழ்க்கையின் வலி என்னவென்பதே தெரியாத நீங்கள் வியாபாரத்துக்காகவும் லாபத்திற்காகவும் ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்து, கெடுதல் செய்து பணம் பண்ணுகிறீர்கள்” என ஈஎன்டிஎல்எப் அறிக்கை குற்றம்சாட்டி உள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக தமிழக எழுத்தாளரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான ஆதவன் தீட்சண்யா செப்ரம்பர் 20ல் வருமாறு தேசம்நெற் இல் பதிவிட்டுள்ளார். ”மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களை விலைபோனவர்கள் என்று அவதூறு பேசித்திரிந்த இவர்கள் (அருள் சகோதரர்கள்) எப்படி கூலிக்கு மாறடித்துக் கொண்டிருந்தனர், என்னென்ன ஆதாயங்களை அடைந்தார்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஆனால் கருணாநிதி குடும்பத்துடனான தமது தொடர்புகளின் செல்வாக்கில் இப்படி எத்தனை பேரை பிடித்து வைத்து கறந்திருக்கிறார்கள் என்பது இனிதான் வெளியாக வேண்டும்” என்கிறார்.

 குகநாதன் கைது கடத்தல் வீடியோ பதிவு எங்கே:

குகநாதனை தாங்கள் கடத்தவில்லை என்றும் பொலிசாரே கைது செய்தனர் என்றும் கூறும் அருள் சகோதரர்கள் குகநாதன் தங்களுக்கு தர இருந்த சம்பளப் பாக்கியையே நீதிமன்றத்திற்கு வெளியே ஆனால் சட்டப்படி வாங்கிக் கொண்டு குகநாதனை விடுவித்ததாகக் கூறுகிறார்கள். இது தொடர்பாக தமிழ் அரங்கம் இணையத்தில் செப்ரம்பர் 03ல் டி அருள் செழியன், ”குகநாதன் கைது செய்யப்பட்ட விதம் காவல் நிலையத்தில் அவரது கெஞ்சல், இராயகரன் குறிப்பிடும் ஆட்களுடன் அவரது பேச்சுகள் ஆகியவை என்னால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை பார்த்தால் நடந்தது கட்டபஞ்சாயாதா அல்லது குகநாதனுக்கு காட்டப்பட்டது கருணையா என்பது தெரியவரும். இரயாகரன் விரும்பினால் அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித் தரத்தயாரா இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

தன்னைச் சட்டப்படி கடத்தியதாக தேசம்நெற்க்கு தெரிவித்த குகநாதன் அருள்செழியன் மேலே குறிப்பிட்ட வீடியோவை எவ்வித எடிற்றிங்கும் செய்யாமல் வெளியே விடும்படி சவால் விட்டார். (குகநாதன் கைது – கடத்தலில் அருள் சகோதரர்களுடன் கைகோர்த்த தமிழ்தேசியம் – டான் ரிவி உரிமையாளர் குகநாதன் கடத்தல் – கைது விவகாரம் : த ஜெயபாலன்) ஆனால் ”அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித் தரத்தயாரா இருக்கிறேன்” என்ற அருள் சகோதர் இதுவரை அதனை வெளியிடவில்லை.

(மாறாக அருள் சகோதரர்களின் கடத்தல் – கைது விவகாரத்தை சட்டப்படியானது என்று வாதிடும் இனியொரு இணையத்தள ஆசிரியர் சபாநாவலன் குகநாதனின் மனைவியை இரவு நித்திரையால் எழுப்பி பதிவு செய்த ஒலிப்பதிவை இனியொருவில் பதிவிட்டார். இதுதொடர்பான கட்டுரை தேசம்நெற் இல் வெளியானதும், அதற்கு எவ்வித மனவருத்தத்தையும் வெளியிடாத இனியொரு இணையத்தளம் திருமதி குகநாதனின் ஒலிப்பதிவை சத்தமின்றி நீக்கியது. தமது தவறை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத போதும் அதனை திருத்திக் கொண்டது வரவேற்கத்தக்கதே.)

தமிழகச் சிறப்பு முகாமில் அடைபட்டிருக்கும் மக்கள் பற்றிய பாராமுகம்:

இலங்கையில் வன்னி முகாம்களில் தமிழ் மக்கள் கடந்த ஆண்டு முதல் பட்டுவரும் இன்னல்கள் சொல்லில் அடங்காதவை அவற்றை விபரிக்க இங்கு வார்த்தைகள் இல்லை. இதனிலும் மோசமான வாழ்வை ஈழத்தமிழர்கள் இந்தியச் சிறப்பு முகாம்களில் வாழ்கிறார்கள். இவர்களின் துயர் மிகு வாழ்வு தொடர்பாக அங்கு பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டு இருந்த எஸ் பாலச்சந்திரன் தேசம் சஞ்சிகையில் ஆக்கங்களை எழுதியதுடன் அவர்களை விடுவிக்கும் படியும் குரல்கொடுத்து வருகின்றார். இதே கருத்தை தேசம்நெற் வாசகர் ஒருவரும் வெளிப்படுத்தி இருப்பதை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். (‘அருள்’ சகோதரர்களுக்கு ஒரு சிறப்புமுகாம் அகதியின் கடிதம்.)

ஆனால் ஈழத் தமிழர்கள் பற்றி குரல் எழுப்பும் தமிழக ஊடகங்களும் அருள் சகோதரர்கள் போன்ற ஊடகவியலாளர்களும் தங்கள் ஆளுமை எல்லைக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பாக மௌனமாகவே உள்ளனர். ”இவர்களைப் பொறுத்தவரை, ஈழத்திலிருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் எல்லாம் களத்திலே நின்று போராடாமல் புறமுதுகிட்டு ஓடிவந்தவர்கள் (ஒன்றுமில்லாமல் வந்து இங்கு அல்லாடுகிற இவர்களை ஆதரித்து என்ன பயன்?). ஆனால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போனவர்கள் புலத்திலே இல்லாவிட்டாலும் களத்திலே இருப்பவர்கள் ( இப்படி சொன்னால் தான் டாலரும் பவுண்ட்சும் வரும்.) இந்தியாவிலுள்ள 85,000 ஏதிலிகளைப் பற்றி பேசினால் இங்குள்ள ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். அட்டைக் கத்தியை ஆகாயத்தில் சுழற்றி வீரனென்று பேரெடுக்க ஆயிரம் வழிகள் இருக்க எதற்கு வம்பு?” என்று இவர்கள் அந்த சிறப்பு முகாம் அகதிகள் பற்றி கணக்கெடுப்பதே இல்லை என்கிறார் ஆதவன் தீட்சண்யா.

அருள் எழிலனுக்கு புரட்சிகரச் சாயம்:

தமிழக வியாபார ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் நிலை இவ்வாறிருக்க, ”அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப் பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை.” என மக்கள் கலை இலக்கியக் கழகம் – மகஇக என்ற தமிழகத்தைச் சேர்ந்த இடதுசாரி அமைப்பு அருள் எழிலனுக்கு புரட்சிகர பத்திரிகையாளர் என்று ஒக்ரோபர் 02ல் ‘ஐஎஸ்ஏ சான்றிதழ்’ வழங்கி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நீண்ட காலமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே மகஇக வின் அரசியலை முன்னெடுத்து வந்த இரயாகரனை ‘அவதூறு பரப்பும் இராயகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம்!!’ என்று ஒக்ரோபர் 05ல் மகஇக அறிக்கை விட்டுள்ளது. மார்க்சிய லெனினிய (எம் எல்) கருத்துக்களை முன்னெடுத்து வருகின்ற தமிழரங்கம், இனியொரு, மகஇக என்பனவற்றின் இணைப்பு இரசாயனம் மாறிவிட்டது. தற்போது எம் எல் (ரயா அணி), எம் எல் (நாவலன் அணி), எம் எல் (மகஇக அணி) இடையே அருள் சகோதரர்கள் என்ற ஊக்கியால் எம் எல் நாவலன் அணியும் எம் எல் மகஇக அணியும் புதிய இணைப்பை உருவாக்கி உள்ளன. இப்பிணைப்பில் ‘மே 18’ காரணி முக்கியமானது என்கிறது தமிழரங்கம்.

அருள் எழிலனுக்கு ‘புரட்சிகர பத்திரிகையாளர்’ என்ற சான்றிதழுக்கு எழுதிய கட்டுரை தொடர்பாக ஒக்ரோபர் 4ல் சீலன் என்பவர் ”புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற காத்திரமான சஞ்சிகைகளை வெளியிடும் உங்களின் (மகஇக வின்) ஆய்வுமுறை இந்த விடையத்தில் மாத்திரம் ஏன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அதே தளத்தில் வெளியான கட்டுரையில் வருமாறு பதில் அளிக்கப்பட்டு உள்ளது. ”மகஇக வுக்கு புலிகளின் சாவின் முன் ராஜஹரனின் அரசியல் போக்கு சரியாக இருந்தது. அத்துடன் சில தேவைகளுக்கு அவர் தேவைப்பட்டார். ஆனால் இன்று மகஇக வின் இலங்கை சார்ந்த அரசியல் பார்வை மாறியுள்ளது. அதன் அடிப்படையில் ராஜாவின் நிலைப்பாட்டுடன் மகஇக வின் அரசியல் நிலைப்பாடு முரண்படுகின்றது. அதேவேளை புலியின் அழிவின் பின் அரசியலில் ஸ்டார் அந்தஸ்துடன் இலங்கை அரசியல்மேடைக்கு வந்துள்ள நாவலனின் அரசியல் நிலைப்பாடும் அவரின் “சேவையும்” மகஇக வின் அரசியல் மற்றும் பிரச்சார தேவையை பூர்த்தி செய்வதாகவுள்ளது. இந் நிலையில் அரசியல் விவாதங்கள் இல்லாமல் ராஜஹரனுடன், அவர் சார்ந்த அமைப்பு, மற்றும் தோழர்களுடன், உறவை முறித்துக் கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்தக் கடத்தல் கூத்தை பாவித்துள்ளது மகஇக.”

மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு ஊடகங்களின் (ரிரிஎன்) சம்பளப் பட்டியலில் இருக்கும் வரை விமர்சனமற்ற வழிபாட்டை மேற்கொண்டு வந்துவிட்டு இப்போது மார்க்சிய புலிகளின் சம்பளப் பட்டியலுக்கு மாறியதால் சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருகிறார் என மகஇக கதை புனைகிறது. புலி ஆதரவு ஊடகங்களின் மாநாட்டில் அருள் எழிலன் தன்னுடைய என்ன கருத்துக்களை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டார் என்பது ஓரளவுக்காவது தெரியவரும்.

ஆ மார்க்ஸ் புலிஆதரவு ரிரிஎன் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியதே ஒரு சமயத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அ மார்க்ஸ் களங்கப்பட்டு விட்டார் என்று சொல்லப்பட்டது. புலிகளின் ஊடகவியல் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட மார்க்சிய சாயம் பூசப்பட்ட தனது கருத்துக்களை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வரும் அருள் எழிலன் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறார் என்ற எண்ணம் தேன்நிலவில் உள்ள இந்த புதிய அணிசேர்க்கைக்கு ஏற்பட வாய்ப்பில்லை.

மார்க்சிய புலிகளினதும் (எம் எல் புலிகள்) புலி மார்க்ஸிட்டுகளினதும் (புலி எம் எல்) களினதும் இரசாயணனச் சேர்கையின் விளைவு வெகுவிரைவில் தெரியவரும். இந்த இணைவை புலி அதரவு சக்திகள் பயன்படுத்திக் கொள்ள எண்ணிணால் அதன் விளைவுகள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாக அமையும். புலி ஆதரவு சக்திகளின் ஈடுபாடு இல்லாதவரை கீபோட் மார்க்ஸிட்டுக்களால் குறிப்பிடத்தக்க ஆபத்துக்கள் இல்லை.

2010 மாநாடு பற்றி இறுதியாக…..

இந்த புலி ஆதரவு ஊடகவியலாளர் மாநாடு மீண்டும் தவறான வழியிலேயே பயணத்தை தொடர முற்படுவதையே காட்டுகின்றது. ரிரிஎன் தொலைக்காட்சி புலி ஆதரவு ஊடகக் குழுமத்தால் ஆரம்பிக்கப்படவில்லை. எஸ் எஸ் குகநாதனால் உருவாக்கப்பட்ட ரிஆர்ரி தொலைக்காட்சி புலிகளின் கைக்கு மாற்றப்பட்டு ரிரிஎன் எனப் பெயர் சூட்டப்பட்டது. அவை வரலாறாகிய பழங்கதை. ஆனால் தற்போது டான் தமிழ் ஒளியை நடாத்திவரும் எஸ் எஸ் குகநாதனைக் கடத்தி – கைது செய்து 15 லட்சம் இந்திய ரூபாய்களைப் பெற்று பின் விடுவித்த அருள் சகோதரர்களில் ஒருவரை இம்மாநாட்டின் பேச்சாளராக அழைத்ததன் மூலம் இம்மாநாடு எதனைச் சொல்ல வருகின்றது?

இம்மாநாடு புலி ஊடகங்கள் தங்கள் இருப்பை அறிவிக்கவும் தாம் இன்றும் பலமாக உள்ளோம் என்பதையும் நிறுவுவதற்காக எடுக்கும் முயற்சியே.

ஏப்ரல் 26 2008 மாநாட்டில் ஊடகவியல் பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் பலரும் கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் புலி ஆதரவு ஊடகங்களின் போக்கில் எவ்வித முன்னேற்றமும் இருக்கவில்லை. அந்த மாநாட்டின் பின்னரேயே மிகப்பெரும் அழிவை நோக்கி வன்னி மக்களை இப்புலி ஊடகங்கள் அழைத்துச் சென்றன.

ஆகவே வன்னிப் போரில் மக்களைப் பணயம் வைத்த ஊடகங்களின் 2010 மாநாடு ‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ (“Media and the Tamil question in a globalizing world”) என்ற தலைப்பிலும் பார்க்க ‘புலிமயமாகியுள்ள ஊடகங்களும் தமிழர் பிரச்சினையும்’ என்ற தலைப்பில் கடந்த காலத்தில் தங்களது ஊடகவியல் போக்குப் பற்றியும் அது பேரழிவுக்குத் துணை போனது பற்றியும் ஆராய்ந்து, எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு நிலை ஏற்படாமல் தடுக்க ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி இம்மாநாடு ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.

தீர்வுக்கு முன் தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்படவேண்டும் – ஜனாதிபதி

president.jpgஇனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னராக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.”சில (தமிழ்) அரசியல் கட்சிகள் ஏற்கனவே சாதகமான முறையில் பதிலளித்துள்ளன. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவு கட்சிகள் உள்ளன. அவற்றின் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை நாம் எதிர்பார்க்கின்றோம். விசேடமாக அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் கருத்தொற்றுமையை எதிர்பார்ப்பதாக நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் தூதுக்குழுவானது பிரிட்டிஷ் தொழிற்கட்சி எம்.பி. போல் மேர்பி தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை நிர்வாகம் தொடர்பான கேள்வியின் போது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கே முதலாவதாக முன்னுரிமை அளிக்கப்படுமென பிரிட்டனின் பொதுநலவாய பாராளுமன்றசங்கத் தூதுக்குழுவிற்கு கூறப்பட்டதாக அவுட்லுக் இணையத்தளம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. உள்ளூராட்சிசபைத் தேர்தல்களின் பின்னர் வட மாகாண சபைக்கு தேர்தல்கள் இடம்பெறும். கிழக்கில் பின்பற்றப்பட்ட நடைமுறை அங்கும் மேற்கொள்ளப்படும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர் கிழக்கில் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்ததாகவும் அங்கு தேர்தல்கள் திருப்திகரமானதாக நடத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி தூதுக்குழுவிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த முயற்சிகளை மேர்பி பாராட்டியுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் சகல கட்சிகளும் உங்களின் நிலைப்பாட்டில் உள்ளன. இன்று இலங்கைக்கு உதவுவதற்குத் தயாராக அவை உள்ளன என்று மேர்பி கூறியுள்ளார்.இந்தத் தீவிலிருந்து பயங்கரவாதம் இல்லாமல் போய்விட்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இன்று புனர்நிர்மாணம், நல்லிணக்கம் அன்றாட நடவடிக்கையாக மாறியுள்ளதென்று மேர்பி கூறியுள்ளார்.

இலங்கைக்கு தான் முன்னர் மேற்கொண்டிருந்த விஜயத்தை அவர் நினைவுகூர்ந்தார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சி இருந்த சமயத்தில் அவர் அங்கு சென்றிருந்தார். இப்போது இங்குள்ள சூழ்நிலையானது பிரிட்டனின் நிலைமையை ஒத்ததாகவுள்ளது. சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வட அயர்லாந்தில் யுத்தத்தில் பிரிட்டன் வெற்றிபெற்றிருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதி மக்களில் அநேகமானோர் தற்போது தண்ணீர், மின்சாரம், பாடசாலைகள், சுகாதாரசேவைகள், கல்வி என்பனவற்றையே விரும்புவதாக தூதுக்குழுவிடம் ஜனாதிபதி விபரித்திருப்பதாக உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்தது. தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி தொடர்பான கோரிக்கையே உள்ளது. சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லையென ஜனாதிபதி கூறியுள்ளார். நல்லிணக்கம் தொடர்பான முயற்சிகள் குறித்து தூதுக்குழுவிடம் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நான்காவது ஈழப்போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அப்பணியை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் சர்வதேச மன்னிப்புச்சபை,மனித உரிமைகள் கண்காணிப்பகம்,சர்வதேச நெருக்கடிக்குழு போன்ற அமைப்புகள் அதனை நிராகரித்தமையை இட்டு ஜனாதிபதி தாம் கவலையடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். ஐ.நா. உட்பட சகலரையும் உள்ளடக்கியது இவ் ஆணைக்குழு எனவும் உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வே இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமெனவும் வட அயர்லாந்திலிருந்தோ அல்லது வேறெங்கிலிருந்தோ அதனை கொண்டுவர முடியாதெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எமது சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதாக தீர்வு அமைய வேண்டும். அதேசமயம், ஏனையோரின் அனுபவத்தை கற்றுக்கொள்ள நாம் தயாராகவிருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.மேலும், சிறுவர் போராளிகளினதும் இளைஞர்களினதும் புனர்வாழ்வில் துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அதிகாரப்பகிர்வு தொடர்பாகக் கூறுகையில், மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே அவசியமென்று கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் விரும்பியிருந்ததை கொடுக்க முடியாது என ராஜபக்ஷ அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அதிகாரப்பகிர்வு தொடர்பான ஏதாவது நியாயபூர்வமான விடயங்களில் சகல கட்சிகளினதும் கருத்தொருமைப்பாடு அவசியமெனவும் அதனை பாராளுமன்றத்தின் மூலம் வழங்க முடியுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சகல கட்சிகளையும் இணக்கப்பாட்டுக்கு வருமாறு தான் ஊக்குவிக்க முடியுமெனவும் பாராளுமன்றமே இறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: thinakkural. 20.01.2010

வடபகுதி மக்களுக்கு முழுமையான அரசபணி. வடமாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

mainpic.jpgவெற்றி கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பது சகலரினதும் தலையாய கடமையெனவும் அதனைக் காட்டிக் கொடுக்க இடமளிக்கக் கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வவுனியாவில் நேற்றுத் தெரிவித்தார். நாட்டில் ஒரு அரசாங்கமே உள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 20 வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்ட மக்களுக்கு மன நிறைவான சேவையை வழங்க வேண்டுமெனவும் சேவை வழங்குவதில் இன, மத பேதங்கள், பாரபட்சங்கள் இருக்கக் கூடாதெனவும் வலியுறுத்திக் கூறினார்.

தம்மிடம்வரும் மக்கள் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லும் வகையில் அதிகாரிகள் செயற்படுவது அவசியமெனவும் கருணையுடனும் அன்புடனும் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கொண்டு மக்களுக்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடக்கில் சில அதிகாரிகள் தம்மிடம் வரும் மக்களிடம் இன, குல பாகுபாடு காட்டி பாரபட்சமான வகையில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய பேதம், பாரபட்சத்துக்கும் இடமின்றி சிநேகபூர்வமான சேவையை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

வட மாகாண அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புத் தலைமையகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, ரிசாட் பதியுதீன், குமார வெல்கம உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட, பிரதேச செயலாளர்கள், மாவட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

வட மாகாண மக்களுக்கான சகல குறைபாடுகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் அதிகாரிகளைப் பணித்துள்ளேன். இது விடயத்தில் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் தமது மக்களுக்கு சேவை செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் மக்களுக்கான சேவையை செய்வதற்காக கடமைப்பட்டுள்Zர்கள் என்பதை ஒரு போதும் மறந்து விடக் கூடாது.

வடக்கில் பாதை, பாடசாலை அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் என சகல அடிப்படை வசதிகளையும் துரிதமாகப் பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் அதற்கான பணிப்புரைகளையும் வழங்கினார்.

தாமதத்தினை தவிர்த்து சேவைகளை திருப்திகரமானதாக வழங்க சகலரும் அர்ப்பணிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
mainpic.jpg

ஓமந்தையில் புகையிரதப் பாதை நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.

mmm.jpgஓமந்தையில் புகையிரதப் பாதை நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். ஜனாதிபதியின் இவ்விஜயத்தின்போது போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ எம்.பி., ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷ, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, இராணுவத் தளபதி ஜஹத் ஜயசூரிய, பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி கிணற்றுக்குள் இருந்து எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சியில் கிணறு ஒன்றிற்குள்ளிருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி உதயநகர் மேற்கிலுள்ள காணி உரிமையாளர் ஒருவர் அவரது கிணற்றை துப்பரவு செய்து கொண்டிருந்த போது இரண்டு எறிகணைகள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர் அருகிலுள்ள படையினரிடம் தகவல் தெரிவித்தார் படையினர் அவ்விடத்திற்குச் சென்று மேலும் கிணற்றிலுள்ள சேற்றினை அகழ்ந்த போது 14 வரையிலான எறிகணைகள் அக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டன.

கடந்த யுத்தத்தின் போது படையினர் அப்பகுதிகளை கைப்பற்ற முன்னேறிய நிலையில் அப்பகுதியிலிருந்த புலிகள் அக்கிணற்றிற்குள் தாங்கள் வைத்திருந்த எறிகணைகளை போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என படையினர் தெரிவித்தனர்.

முகமாலைப் பகுதிகளில் அதிகளவு வெடிபொருட்கள் காணப்படுவதால் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை தாமதம்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முகமாலை, இத்தாவில், இந்திராபுரம் ஆகிய பகுதிகளில் இன்னமும் மிதிவெடி, கண்ணிவெடியகற்றும் பணிகள் பூர்த்தியடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் இப்பகுதிகள் புலிகளின் பகுதிக்கும் படையினர் நிலைகொண்டிருந்த பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளாக அமைந்திருந்த படியினால் அதிகளவு மிதிவெடிகள் இப்பகதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுவரும் நிலையில் பளைக்கு அப்பாலுள்ள இப்பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவது சிரமமானதாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அடுத்தமாத நடுப்பகுதியில் இவ்வெடிபொருட்கள் அகற்றப்பட்டு பளையிலிருந்து ஆனையிறவு வரையிலான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகை தருவதற்கு முதல் நாள் வவுனியாவில் குண்டு வெடிப்பு!

president.jpgஜனாதிபதி வருகை தருவதற்கு முதல் நாள்- நேற்றிரவு வவுனியாவில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று செவ்வாய்கிழமை வவுனியாவில் நடைபெறவிருக்கும் வேளையில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா நகரின் மில்வீதியில் நேற்று திங்கள் கிழமை இரவு 9.30 மணியளிவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரும் சத்தத்துடன் இக்குண்டு வெடித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில் வீதியில் நின்ற வாகனம் ஒன்றிலிருந்தே இக்குண்டு வெடித்ததாக குறிப்பிட்டனர்.

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ‘பிராடோ’ரக வாகனம் ஒன்றிற்குள்ளிருந்து இக்குண்டு வெடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாகன இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாகவும், வாகனத்திற்குள் கைக்குண்டு எறியப்பட்டதால் இது நிகழ்ந்ததெனவும் தனிப்பிட்ட பிரச்சினை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதென்றும் பலவாறாக இக்குண்டு வெடிப்புச்சம்பவம் குறித்து பேசப்படுகின்றது.

இச்சம்பவத்தில் இருவர் சிறுகாயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண அபிவிருந்தி தொடர்பான கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெறும் நிலையில் எற்கனவே போடப்பட்ட பாதுகாப்பிற்கும் மேலாக அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.