October

Tuesday, October 26, 2021

October

புனர்வாழ்வு பெற்ற 402 பேர் பெற்றோரிடம் நேற்று ஒப்படைப்பு

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் இருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 151 பெண்கள் உள்ளிட்ட 402 பேர் நேற்று வியாழக்கிழமை காலை உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ. குணசேகர, பிரதி அமைச்சர் விஜயமுனிசொய்ஸா, வன்னி பாதுகாப்புப்படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் கே. டி. தல்பதாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு விசேட புனர்வாழ்வு அளிக்கப்படும். அவர்கள் சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு விடுவிக்கப் பட்டுள்ளனர் என பிரிகேடியர் ரணசிங்க தெரிவித்தார்.

2011 நவம்பர் 22இல் வரவு-செலவுதிட்டம்

2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, முதலாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளது. குழுநிலை விவாதத்திற்கான திகதி குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான உத்தேச மதிப்பீட்டு ஆலோசனைகளை முன்வைக்குமாறு சகல அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சம்பிரதாய வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும், அதனை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பிலிருந்து விலகி 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்குமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தவிர நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொருளாதார உட்கட்டமைப்பு வளங்கள் மற்றும் கைத்தொழிற்துறை அபிவிருத்தி உள்ளிட்ட சகல செயற் திட்டங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி திறைசேரி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதனடிப்படையில் 2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி நிலம் 3 தரப்புக்கு சொந்தம்: அலகாபாத் நீதிமன்று பரபரப்பு தீர்ப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் நேற்று அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதயை நிலை தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் சிலைகள் தற்போதைக்கு அகற்றப்படாது என்று தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ராமர் சிலைகள் அமைந்துள்ள பகுதியே இந்துக்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு தரப்பட வேண்டும்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியல்ல தோல்வியுமல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றும், அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாகவும் பாபர் மசூதி கமிட்டி தெரிவித்துள்ளது.

டில்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே சிக்கல் நீடித்து வருகிறது.

அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது. 60 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தனது விசாரணையை நிறைவு செய்து 24.09.2010 அன்று தீர்ப்பு என்று அறிவித்தது.

அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானமாக செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் திரிபாதி என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். திரிபாதியின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை 28.09.2010 அன்று விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அயோத்தி வழக்கில் 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படுமென அலகாபாத் மேல்நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரி ஹரிசங்கர் துபே கூறினார். 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி. சர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.