November

November

ஜே.வி.பி. கட்சியினர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்! : PLOTE அறிக்கை

PLOTE_Logoயுத்த காலங்களில் காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்படோர் குறித்த பெயர் விபரங்களை வெளியிடுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஜனாநாயக ரீதியிலான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

யுத்தம் முடிவுற்று ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னரும் ஜனநாயக சூழல் இன்னமும் முழுமையாக திரும்பவில்லை. பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், கணவன்மாரை இழந்த விதவைகளென தமிழ் சமூகம் கண்ணீரும் கவலையுமாக வாழுகின்றனர். இந்த மக்களின் வேதனைகளுக்கு நியாயம் கேட்டு ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை நடாத்துவதற்கு வடமாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட வேறு எந்த தமிழ் கட்சிகளும் முன்வராத நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினரால் நடத்தப்பட்ட போராட்டத்தினை வரவேற்கின்றோம்.

தமிழ் மக்கள் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாட்டில் எமக்கு உடன்பாடு இல்லாத போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நியாயம் கேட்டு ஜனநாயக ரீதியாக அவர்கள் நடத்திய போராட்டத்தினை நாம் ஆதரிக்கின்றோம்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பி.யினர் கொண்டிருக்கும் கொள்கையில் எமக்கு உடன்பாடு இல்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 1987ம் ஆண்டு இணைக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களை (வடகிழக்கு மாகாணங்கள்) பிரிப்பதற்கு நீதிமன்றம் சென்றவர்கள் ஜே.வி.பி.யினர். இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, அடிப்படை உரிமையையும் நிராகரித்தவர்கள். ஆகவே அரசியல் ரீதியாக எமது கட்சிக்கும் அவர்களுக்கும் இடையில் அதிக முரண்பாடுகள் உள்ளன.

நாம் எவ்வாறு சிங்கள மக்களின் உயிர்களுக்கு சேதம் விளைவிக்காது இருந்தோமோ, அதே போன்று ஜே.வி.பி.கட்சியினரும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஒருபோதும் தீங்கு இளைத்திருக்கவில்லை. மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஜே.வி.பி.கட்சியினர் மேற்கொள்ளும் ஜனநாயக போராட்டங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சா;வதேச கிளைகள் எப்போதுமே தமது ஆதரவை நல்கும் என்பதனை தொpவித்து கொள்கின்றோம்.

ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் அனுதாபம் காட்டுவதற்கு பதிலாக தமிழ் மக்களின் செறிவினை குறைக்கும் திட்டத்தில் குடிபரம்பலை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் ஜனநாயக ரீதியாக போராடும் உரிமையையும் மறுதலித்து வருகின்றது. கடந்த 15ம் திகதி ஜே.வி.பி.கட்சியினரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஜனநாயக வழிமுறை ஆர்ப்பாட்டத்தினை குழப்பும் முகமாக அரச இயந்திரம் செயற்பட்டு அடாவடித்தனம் புரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவ் கட்சியின் தொண்டர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அரசின் இந்த அராஜக செயலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச கிளைகள் வன்மையாக கண்டிக்கின்றது.

அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.

இலங்கை அமைச்சரவையில் 7 புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

22 நவம்பர் 2010இல் இலங்கை அமைச்சரவையில் 7 புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர். ஜனாதிபதி ராஸபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பதவியேற்றபின்பு நடைபெறும் முதலாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். 2000 ஆண்டு காலப்பகுதியிலிருந்து அமைச்சரவையின் பிரதி அமைச்சர்களாக இருந்த பிரதி அமைச்சர்கள் சிலர் இந்த மாற்றத்தின்போது அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

யுஎன்பி யிலிருந்து அரசுடன் சேர்ந்து கொண்டவர்களில் இருவரும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸிலிருந்து ஒருவரும் அமைச்சரவையில் சத்தியப்பிரமாணம் எடுக்கவுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிரான கருத்துரைப்பும் கலந்துரையாடலும்

Homophobia_Erase_the_HateGay / Lesbian / Trans_gender ற்கு எதிரான பல்வேறு வகையான கருத்துக்கள் இயல்பாக்கப்படுவதும் (Normalizing Discourses), அவர்களது தெரிவுசார் உரிமைகள் மறுக்கப்படுவதும், சமூகத்தின் அங்கத்தவர்களாக அவர்களது இருப்பு தொடர்ந்தும் ஒடுக்கப்படுவதும் தமிழ்ச்சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிவருகிறது. பரவலான இக்காழ்ப்புணர்வுக்கு எதிராக எமது எதிர்க்குரல்களைப் பதிவு செய்தல் அவசியமாகின்ற இந்தவேளையில்….

பொது ஊடகங்கள் சிலவும் இக்காழ்ப்புணர்வு முழுத் தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ற பிரமையை ஏற்படுத்த முயல்கின்றன. ஊடகங்கள் தம் விழுமியங்களைத் தவறுவதைச் சுட்டிக்காட்டவும், எமது தன்னிலையை சுயவிமர்சனம் செய்யவும், விளிம்புநிலையாக்கம் (Process of Marginalization) குறித்தான விவாதங்களை மேற்கொள்ளவும்….

நாங்களும் நீங்களுமாய் ஓர் உரையாடலுக்கான பொதுக்களத்தில் சந்திப்போம்

Where: Scarborough Civic Centre
150 Borough Road
(McCowan & Ellesmere)

When: Friday, November 19, 2010
At 6.00 PM

Friends Aganinst Homophobia
416 725 4862 / 647 829 9230/ 416 841 6810
email: friendsagainsthomophobia@gmail.com

நாவற்குழியில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு.

Douglas_Devanandaயாழ். நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் அத்துமீறிக் குடியமர்ந்துள்ள சிங்கள மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அம்மக்கள் அங்கிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு தன்னை ஜனாதிபதி பணித்துள்ளதாக பாரம்பரிய மற்றும், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தும் போது இதனை அவர் தெரிவித்தார். தான் இவ்விடயம் தொடர்பாக அம்மக்களை சந்தித்து கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அத்துமீறி குடியேறுவது தடுக்கப்படல் வேண்டும் எனவும், சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தாலும் அது தவாறான செயல் எனவும் அவர் குறிப்பிட்டாhர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஜே.வி.பியினரின் நோக்கம் சரியா பிழையா என்பதற்கப்பால் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தமை கண்டிக்கப்படவேண்டிய ஒன்று எனவும் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா குறிப்பிட்டார்.

“யாழ்ப்பாணத்தில் எங்களை பொதுமக்கள் தாக்கவில்லை” -ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவிப்பு.

Sunil_Handunnetti_JVP_MPயாழ்ப் பாணத்தில் ஜே.வி.பியினரை பொதுமக்கள் தாக்கினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி தவறானது என்றும், தங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுப்பிரிவினரே செயற்பட்டதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவரான ஜே.வி.பியின் நடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை பத்தரமுல்ல பெலவத்தயில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யாழ்நகரில் தம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக தாம் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் ஜே.வி.பியினர் மீது தாக்குதல் நடத்தியதாக அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதிலிருந்தே தாக்குதலை யார் மேற்கொண்டனர் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த பொலிஸார் எங்களை உடனடியாக குடாநாட்டை விட்டு வெளியுறுமாறும், தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர் யாழ். நகரிலும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் தமிழ் மக்கள் தங்களுடன் நல்லுணர்வுடன் நடந்து கொண்டனர். வைத்தியசாலை வைத்தியர்கள். தாதியர் முதலானோர் தங்களுடன் பண்பாக நடந்து கொண்டதோடு தங்களை சிரத்தையோடு கவனித்தனர் எனவும் அவர் கூறினார்.

வடக்கு கிழக்கில் தற்போது இரண்டாவது பிரபாகரனின் ஆட்சி நடைபெறுகின்றது. கோத்தாபய ராஜபக்ச அங்கு பிரபாகரனாக செயற்படுகின்றார் எனவும், புலனாய்வப் பிரிவினா சிந்திப்பதையும் நினைப்பதையும் பொதுமக்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் எனவும் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டார்.

அச் செய்தியாளர் மாநாட்டில் அவர் தங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களையும் காண்பித்தார்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் போரிலேயே கொல்லப்பட்டனர் என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சாட்சியம்.

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது அவர்களைக் கொலை செய்ததான வழக்கு விசாரணையில் மூன்றாவது சாட்சியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று செவ்வாய் கிழமை இரண்டாவது தடவையாக குறுக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். போரின் போது 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியவரும் தற்போது ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றுவருமான மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளராகவிருந்த புலித்தேவன், அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த நடேசன், புலிகளின் தளபதிகளில் ஒருவராகவிருந்த ரமேஸ் ஆகியோர் யுத்தத்தின்போதே கொல்லப்பட்டனர் என சவேந்திரசில்வா தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, எச்.என்.பி.பி. வாரவெல, சர்பிக் ரஸீக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சவேந்திர சில்வா பதிலளித்தார்.

குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சரணடைந்திருந்தால் அதனை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்போம் எனவும், ஆனால், அவர்கள் சரணடைய விரும்பவில்லை எனவும், யுத்தத்தின் போதே அவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் சவேந்திரசில்வா தெரிவித்தார்.

இதன்போது அவரிடம் கேட்கப்பட்ட பல குறுக்குக் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

நிதிமோசடியில் தாம் ஈடுபடவில்லை என தெரிவிக்கின்றார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி

Vinayagamoorthy_A_TNA_MPதமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி தாம் நிதிமோசடியில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை மறுத்துள்ளார். தான் அவ்வாறு மோசடியில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்படுமானால் தனது நடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். கொக்குவிலில் அவரது இல்லத்தில் நேற்று செவ்வாய் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக விளக்கினார். இவ்விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது-

“விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான எழிலனின் மனைவி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதனையடுத்து எழிலனை விடுதலை செய்யுமாறு பயங்கரவாத தடுப்புப்பிரிவு அத்தியட்சகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினேன். அதன் பின்னர் மேஜர் மதியழகன் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு எழிலன் உயிருடன் இருப்பதாகவும், நான் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவுக்கு எழுதிய கடிதம் தன்னிடமிருப்பதாகவும், எழிலனின் விடுதலை குறித்து அவரது மனைவியிடம் பேச வேண்டும் எனவும் தெரிவித்தார். பின்னர் அவரே எழிலனின் மனைவியின் தொலைபேசி இலக்கத்தையும் தந்தார். பின்னர் அவர் எழிலனின் மனைவியுடன் கதைத்து அவரை விடுவிக்கப் பணம் கோரியதாக அறிந்தேன். இதே போன்ற சம்பவங்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான ந.நிதர்சன், சுதாமாஸ்ரர், ஆகியோரின் உறவினர்களுக்கும் நடந்ததாக அறிந்தேன். இந்த விடயங்களை இரணுவத் தளபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். புலி உறுப்பினர்களை விடுவிப்பதாகக் கூறி அவர்களின் உறவினர்களிடம் பணம் பறிக்கும் குழுவின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நான் நிதி மோசடியில் ஈடுபட்டதாக விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு நான் ஈடுபட்டமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுமானால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன்”

-இவ்வாறு அவர் தெரவித்தார்.

டேவிட் பேர்ஜஸ் உடைய இறுதி நிகழ்வு இன்று நவம்பர் 17ல்

David_Burgessபிரபல சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் இன் இறுதி நிகழ்வுகள் நவம்பர் 17ல் நடைபெற உள்ளது. கிங்குரொஸ் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் ஒக்ரோபர் 25ல் இவர் உயிரிழந்தார். இவருடைய மரணம் தொடர்பாக நீனா கனகசிங்கம் (34) நவம்பர் 01ல் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

டேவிட் பேர்ஜஸ் இன் இறுதிநிகழ்வு தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட மின் அஞ்சல்.

Subject: David Burgess’s funeral
Dear all,
I am advised that David’s funeral will be held at 11am at St. Martin in the fields (Trafalgar Square) on weds 17th november. It is open to all who would like to pay their respects, with a  reception afterwards in the parish hall.
Regards
David
David Rhys Jones

தமிழ் சமூகத்திற்கு அரசியல் தஞ்ச வழக்குகளில் சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸின் உழைப்பு மகத்தானது. டேவிட் பேர்ஜஸின் கடுமையான உழைப்பாலம் நேரடியாக நூற்றுக்கணக்கான தமிழர்களும் குறிப்பிட்ட வழக்குகளில் வெற்றி பெற்றமையினால் ஆயிரக்கணக்கானவர்களும் இன மத மொழி பேதம் கடந்து நன்மை பெற்றனர்.

Related Article:

தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் மரணத்தைத் தழுவினார்! அவருடைய மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் கைது!

சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் கொலைச் சந்தேக நபர் பெண்ணாக மாறிய ஆண்!

பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி.

நேற்று செவ்வாய் கிழமை காலை பிரார்த்தனை நிகழ்வு முடிவுற்றதும் பாடசாலையில் வைத்தே நான்கு மாணவிகள் நஞ்சருந்தியுள்ளனர். இம்மாணவிகள் உடனடியாக சங்கத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டனர்.

இம்மாணவிகள் பாடசாலைச் சுவரில் பெயர்களை வெட்டியதற்காக அதிபர் இம்மாணவிகளை அனைத்து மாணவ மாணவிகளுக்கும் முன்னிலையில் கண்டித்தாகத் தெரியவருகிறது. அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமலேயே இம்மாணவிகள் குடிபானம் ஒன்றில் எதனையோ கலந்து அருந்தி உள்ளனர்.

வலிகாமம் பகுதியில் வடலி அடைப்பில் உள்ள பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இம்மாணவிகள் அங்கு ஓஎல் படிக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

இரண்டாவது பதவிக் காலத்திலாவது சிறைக்கைதிகளை விடுவியுங்கள் – ஜனாதிபதிக்குக் கடிதம்

K Thevathasanபுதிய மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை திரைப்படக் கூட்டுத்தபானத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரும், திரைப்பட இயக்குனருமான கனகசபை தேவதாசனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவரின் மனைவி சுபத்திரா தேவதாசன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ( பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். ) அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இம்மாதம் 11 ஆம் திகதி முதல் எனது கணவன் தனது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யுத்தம் முடிவுற்று நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளது. தாங்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளீர்கள். எனது இரு பிள்ளைகளுடன் எவரின் உதவிகளுமின்றி துன்பத்தை அனுபவித்து வருகின்றேன். எனது கணவனை பிணையிலாவது விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்.தமிழ்மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் எனக் கூறும் தாங்கள் எதுவித விசாரணையுமின்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து அவர்களும் தமது குடும்பத்தினருடன் இணைந்து வாழ இப்பதவியேற்பு காலத்தில் பொதுமன்னிப்பை வழங்கி அல்லது பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுள்ளார்.

Related News:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்.