November

November

‘இறுதி யுத்தத்தில் இரு தரப்பினரின் நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்தது’ நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் சாட்சியமளித்துள்ளார். இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற முல்லைத்தீவில் அப்போது அரசாங்க அதிபராக கடமையாற்றிய காரணத்தினால் அவரது சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து அவர் சாட்சியமளித்துள்ளதோடு ஆணைக்குழவின் விசாரணைகளுக்கும் பதிலளித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போர் முல்லத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றபோது, இரு தரப்பினரின் நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்ததாக அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தஞ்சமடைந்திருந்ததாகவும் அவர்களின் எண்ணிக்கை 3இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேல் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

19-01-2009 அன்று முல்லை மாவட்டத்திலுள்ள சகல மக்களையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவிக்கும்படி படையினர் தமக்கு தொலைநகல் முலம் அறிவித்ததாகவும், தான் இதன்படி சகல கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் மூலம் அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில், புலிகள் பொதுமக்கள் வெளியேறுவதை அனுமதிக்கவில்லை எனவும் புலிகளுக்குத் தெரியாமலேயே அவர்கள் படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குச் சென்றதாகவும், அவ்வாறு செல்ல முற்படுகையில் பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்றப் போரில் பல அப்பாவிப் பொதுமக்கள் இறக்க நேரிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“முல்லைத்தீவில் இருந்த மக்கள் புலிகளினால் பெரிதும் பாதிப்படைந்த நிலையிலேயே இருந்தனர். புலிகள் மக்களோடு மக்களாக இருந்து படையினர் மீது தாக்குதல்களை நடத்தியதால் இராணுவம் மேற்கொண்ட எறிகணை வீச்சினாலும் புலிகளின் எதிர்த் தாக்குதல்களினாலும் பொதுமக்களுக்கு பாரிய உயிரிழப்புகள் எற்பட்டன. போர் கடுமையாக இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து வெளியே பொதுமக்கள் மட்டுமல்ல, அரசாங்க அதிபரான தான் உட்பட அரசாங்க உத்தியோகத்தர்களும் புலிகளின் அனுமதியைப் பெறவேண்டிய கட்டாயம் இருந்தது. இறுதிக்கட்டப் போரின் போது முல்லைத்தீவு மாவட்டச்செயலக ஊழியர்கள் சிலரும் உயிரிழந்தனர். பொதுமக்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களில் 20 வீதமானவற்றை புலிகள் கொண்டு சென்றனர். புலிகளின் தடையையும் மீறி போர் நடைபெற்ற பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வெள்ளைக் கொடிகளோடு சென்று படையினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு சென்ற மக்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது. இன்னும் உயிருடனிருக்கும் பலரிடம் இது குறித்து சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்”

-இவ்வாறு யாழ்.அரசாங்க அதிபர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீபாவளி கலை நிகழ்வு.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் தீபாவளியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தின் 51வது படைப்பிரிவினால் நடத்த ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்விற்கு யாழ்.மாநகரசபை இறுதி நேரத்தில் அனுமதி மறுத்து விட்டதாக படைத்தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்நிகழ்வு இன்று மாலை 6.30 மணிக்கு யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபறவுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வையொட்டி 10 ஆயிரம் பெரிய மின்குமிழ்கள் மற்றும், 75 ஆயிரம் மின்குமிழ்களைக் கொண்டு யாழ். வேம்படிச் சந்தியிலிருந்து நிகழ்ச்சி இடம்பெறும் பகுதிவரை அலங்கரிக்கப்படவுள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு தமிழரசுக் கட்சியினர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நான்கு தினங்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் தமிழசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், துணைச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வின் போது அவர்கள் சாட்சியமளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகக்கிளை இம்மாதம் திறக்கப்படவுள்ளது.

இந்தியத் தூதரகத்தின் யாழ்ப்பாணக் கிளை இம்மாதம் 26ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் அம்பாந்தோட்டையிலும் இந்தியத் தூதரகத்தின் கிளையொன்று திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி கொழம்பில் நடைபெறவுள்ள இலங்கை -இந்திய பொருளாதார அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொள்ளவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இந்தக் கிளைகளைத் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அவர் இந்தியாவின் உதவியோடு மேற்கொள்ளப்படவிருக்கும் காங்கேசன்துறைக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகளையும், ஓமந்தையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மூன்று தினங்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனவும், இலங்கையிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார் எனவும், இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மக்களுக்காக ஜேர்மன் தொடர்ந்தும் உதவிகளை வழங்குமாம்.

யாழ்.மக்களின் நலன்களுக்காக ஜேர்மன் நாடு தொடர்ந்தும் உதவிகளை வழங்கவுள்ளதாக யாழ்ப்பாணம் வந்துள்ள ஜேர்மன் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இத்தூதுக்குழுவினருக்கும் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று யாழ். மாகநரசபை கேட்போர் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ் மாநகரசபைக்கான புதிய கட்டடங்களை நிர்மானிப்பதற்கும், யாழ்.நகருக்கான குடிநீர் விநியோகத்திட்டத்திற்கும் ஜேர்மன் அரசு உதவி வேண்டும் என மாநகரசபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

யாழ். மக்களுக்காக ஜேர்மன் அரசாங்கம் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றதெனவும், கடந்த 20 வருடங்களில் 1.6 மில்லியன் யூரோ பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் ஜேர்மன் நாட்டு நாடாளுமன்றத் தூதுக்குழுவின் தலைவர் ஏனஸ்பேகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம் ஒன்று நிறுவப்பட ஜேர்மன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே கொழும்பு, மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்வாறான தொழில்நுட்ப பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருவதாகவும் ஜேர்மன் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

20வது வருடத்தில் மீண்டும் துளிர்ப்போம்! – யாழ் முஸ்லீம்களின் 20 வருட அனுபவப் பகிர்வு.

Osmaniya Collegeயாழ் முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 20வது வருட  நிறைவை நினைவு கூறும் நிகழ்வும், தமது தாயகம் மீளும் நிகழ்வும்

இடம்: ஒஸ்மானியா கல்லூரி, யாழ்ப்பாணம்

காலம்: 6 நவம்பர் 2010 சனி காலை 9.00 மணியிலிருந்து 12.00 மணி வரை (தொடர்ந்து மதிய போசனம்)

பிரதம விருந்தினர்: திருமதி இமெல்டா சுகுமார், யாழ் அரச அதிபர்

விசேட விருந்தினர்: வணக்கத்திற்குரிய திருமதி யோகேஸ்வரி பங்குணராஜா, யாழ் மாநகர முதல்வர்

Agenda:

Parade on the Divested Muslim Area
Theme Presented by Dr H S Hazbullah

Panel Presentation

Brief History of Jaffna Muslims up to 1990 – by Mr M M M Ajmal
Displaced Life of Jaffna Muslims – by Mrs M H Sharmila

The Practical Challenges of the resettlement

பேச்சாளர்கள் :
கலாநிதி எச்.எஸ்.ஹஸ்புல்லா
திரு எம்.எம்.எம். அஜ்மால்
திருமதி எம்.எச்.சர்மிளா
அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.நியாஸ்
எஸ்.ஏ.சி.முபீன்
திரு ரெங்கன் தேவராஜன், சட்டத்தரணி
திரு எம்.எம்.ரமீஸ், சட்டத்தரணி, யாழ் மாநகர சபை உறுப்பினர்
சேக் அயூப் அஸ்மின் (நலீமி)
ஏ.கே.சுவர்காகான்

Organised by:
Social Educational & Development Organisation (SEDO)
Ulema (Muslim Theologians) Association of Jaffna
Jaffna Muslim Professionals Forum (JMPF)
Jaffna Civil Society for Equality (JCSE)
Jaffna Muslim Development Committee (JMDC)
School Development Society of Osmaniya College (SDS)
Muslim Members of Jaffna Municipal Council (MMCs)
Trustees of Jaffna Mosques and
Research and Action Forum for Social Development (RAAF)

._._._._._.
 தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் : த ஜெயபாலன்

தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற தலைப்பில் தேசம் சஞ்சிகை 2007 மார்ச் 10ல் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரின் முன்னுரை இங்கு பதிவிடப்படுகிறது.

இன்று (ஒக்ரோபர் 30 2010) நடைபெறவுள்ள ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ பற்றிய மேலதிக விபரங்களுக்கு: தமிழ் – முஸ்லிம் உறவுகள்: வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் – 20 வருடங்களுக்குப் பின்பு! : SLIF & SLDF

._._._._._.

தமிழ் – முஸ்லீம் மக்கள் புவியியல் ரீதியாக ஒருவரோடு ஒருவர் உறவாடி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த போதும் புறச்சூழல் அவர்களை பகைமையுடனும் சந்தேகத்துடனும் நம்பிக்கையீனத்துடனும் வாழ நிர்ப்பந்தித்து உள்ளது. தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியுடன் சிதைவடைய ஆரம்பித்துவிட்டது. காலத்திற்குக் காலம் முஸ்லீம் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் எழுந்தமானமான தனி மனித தாக்குதல்களில் ஆரம்பித்து திட்டமிட்ட இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு என்ற பரிமாணத்தைப் பெற்றது. இன்று தமிழ் – முஸ்லீம் இன உறவுகள் அதன் அடி நிலையிலேயே உள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பது மிகவும் கடினமானதாக இருந்தாலும் இரு இனங்களினதும் எதிர்காலத்திற்கு இந்நிலை மாற்றி அமைக்கப்படுவது தவிர்க்க முடியாதது.

இந்த கடினமான பாதையை செப்பனிடுவதில் ஒரு காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற தலைப்பிலான சந்திப்பு மார்ச் 10 2007ல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி ‘தமிழ் – முஸ்லீம் இன உறவுகள்’ என்ற இந்த சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. தமிழ் – முஸ்லீம் இன உறவுகளை வலுப்படுத்துவத்கு, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, அதை நோக்கிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இச்சந்திப்போ இந்த சிறப்பு மலரோ உதவுமாக இருந்தால் அது ‘தேசம்’ சஞ்சிகைக்கும் அதன் வாசகர்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே அமையும்.

தமிழின ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் தங்களுள் ஓடுக்குமுறையாளர்களாகவும் இரட்டைவேடம் போடுவது தமிழின விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொச்சைப்படுத்தி உள்ளது. இதன் துரதிஸ்டம் என்னவெனில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், முன்னெடுப்பவர்கள் யாரும் உலக வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வில்லை என்பது மட்டுமல்ல தமது சொந்த வரலாற்றில் இருந்தும் அதனைக் கற்றுக்கொள்ளத் தவறி உள்ளனர். வரலாற்று படிப்பினைகளைக் கற்று தம் போக்கை மாற்றியமைக்காத வரை வரலாறு மீளவும் அதன் ஆரம்பப் புள்ளிக்கே வரும் என்பது இயங்கியல் விதி. தமிழீழ விடுதலைப் போராட்டமும் கால் நூற்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறது.

தமிழ் பேசும் மக்கள், தமிழர்கள் என்ற ஒற்றைப் பரிமாணத்திற்குள் முஸ்லீம் சமூகத்தை அடக்க, அடைக்க முற்பட்ட தமிழ் தேசியவாதம் பெரும்பாலும் தோல்வியையே சந்தித்து உள்ளது. அதன் ஆற்றாமை விஸ்வரூபம் எடுத்து தேசியவாதத்தின் உச்ச நிலைக்குச் சென்றது. தேசியவாதம் அதன் உச்ச நிலையில் பாசிச பரிமாணத்தை எடுக்கும் என்பதை தமிழ் தேசியவாதம் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி உள்ளது. முஸ்லீம் சமூகத்தின் மீதான படுகொலைகளும், அவர்கள் தங்களது தாயகப் பகுதிகளில் இருந்து துரத்தப்பட்டமையும் முஸ்லீம்களது துயரமான வரலாறு மட்மல்ல தமிழின வரலாற்றின் கறை படிந்த பக்கங்கள் என்பதையும் தமிழ் சமூகம் மறந்து விடக்கூடாது.

இந்த வரலாற்றுக் கறையை நீக்க மறப்போம் மன்னிப்போம் என்ற சம்பிரதாய வார்த்தை ஜாலங்கள் மட்டும் போதாது. உண்மையான, நேர்மையான, கடினமான உழைப்பின் மூலம் இரு சமூகங்களும் மற்றைய சமூகத்தினரின் இதயங்களை வென்றெடுக்க வேண்டும். முஸ்லீம் சமூகமே ஒடுக்கப்படும் சமூகமாக இருப்பதால் தமிழ் – முஸ்லீம் உறவுகளை மேம்படுத்துவதில் தமிழ் சமூகம் முன்னிலைப் பாத்திரம் எடுக்கவேண்டும். முஸ்லீம் மக்கள் மீதான சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தோளோடு தோள் நின்று தமிழ் சமூகம் போராட வேண்டும். இதன் மூலமே வரலாற்றின் தவறுகளை சீர்செய்ய முடியும்.

இலங்கையின் அமைதியான சூழலை காண விஜயம் செய்யுங்கள்! : பிரபா கணேசன்

Praba_Ganesan_MPலண்டனில் (26-10-2010) நடைபெற்ற இந்திய வம்சாவளி மக்கள் மகாசபையின் (கோபியோ) சர்வதேசமாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆற்றிய உரையின் சுருக்கம்.

லண்டனில் நடைபெறும் கோபியோ வருடாந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுத்த மேதகு பிரபு டில்ஜித் ரானா அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இம் மாநாடு புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கும் வெளிநாட்டு இந்தியர்களும் என்ற விடயம் பற்றியும், வெளிநாட்டு இந்தியப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாட உள்ளது. இவ்விரண்டு விடயங்களும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு மட்டுமன்றி முழு மனித இனத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என நான் கருதுகின்றேன்.

வளர்முக நாடு களுக்கும் செல்வந்த நாடுகளுக்கும் இடையே காணப்படும் பெரியள விலான இடைவெளியை அகற்றும் நோக்குடனேயே புதிய பொருளாதார கொள்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கொள்கையானது நாடுகளின் இறைமை, சமத்துவம், சர்வதேச நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு என்பவற்றை அதிகளவில் வலியு றுத்தியது.

இதனால் உலகில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் ஒழித்துக்கட்டப்பட்டு யாவருக்கும் செல்வம் முறையாகப் பகிரப்படும். ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் வளர்முக நாடுகளுக்கு தமது உதவிகளை வழங்க வேண்டும் என்பதும் இக் கட்டமைப்பின் பிரதான நோக்கமாகும்.

இலங்கை பாராளுமன்றத்தில், தலைநகரில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக நான் தெரிவு செய்யப்பட்டவன். இந்த மகாநாட்டில் அம்மக்கள் சார்பாக பங்கேற்கின்றேன்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கை அரசும் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறிக்கும் சட்டத்தைப் பாராளுமன்றம் நிறைவேற்றியது. ஏறத்தாழ ஒன்பது இலட்சம் இந்தியர்கள் ஓர் இரவில் நாடற்றவர்களாயினர். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி ஏழு இலட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றனர்.

இந்தியவம்சாவளி மக்களும் நீண்டகாலமாக நடாத்திய போராட்டங்கள், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் என்பவற்றின் காரணமாக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு அவர்களுக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டது. ஆயினும் ஏறத்தாழ ஐந்து தசாப்த காலத்திற்கு அவர்கள் உரிமையற்றவர்களாக வாழ நேர்ந்ததை அவர்களுடைய சமூக தலைவர்கள் இலங்கை அரசாங்கங்களோடு இணைந்து தேசிய அபிவிருத்திப் பணியில் பங்குபற்றி ஒத்துழைத்ததன் காரணமாக இந்த நாட்டவர் பிரச்சினைக்கு தீர்வுகாண முடிந்தது.

அண்மைக் காலங்களில் இந்திய வம்சாவளி மலையக மக்கள் பாராளுமன்றம், மாகாண சபைகளுக்கு தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து வருகின்றனர். இலங்கையின் பிரதான கட்சிகள் அரசாங்கம் அமைக்கும் போது இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் அதில் பிரதான பங்கினை வகித்தனர். நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த குடியுரிமைப் பிரச்சினை தீர்க்க்பபட்ட பின்னர் இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையின் பிரதான தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள முடிந்தது.

1980 களின் பின்னர் எமது மக்கள் சில துறைகளிலாவது மேம் பாடு கண்டுள்ளனர். காலஞ்சென்ற தலைவர் தொண்டமானின் தலைமைத்துவமும் வழிகாட்டலும் இதற்குக் காரண மாயிருந்தது. அவர் அப்போதிருந்த அரசாங் கத்திற்கு ஆதரவு வழங்கி அரசின் ஒத்துழைப்பைப் பெற்று தனது மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிந்தார்.

பொதுவாகவே இந்திய வம்சாவளி மலையகத் தலைவர்கள் ஐக்கிய இலங்கையை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கி வந் துள்ளனர். பாராளுமன்ற உறுப் பினர்களாக இருந்த அமரர்களான செளமியமூர்த்தி தொண்டமான், பெ. சந்திரசேகரன் அமைச்சர்களாக பணியாற்றினார்கள். தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இத்தகைய முறை யில் அமைச்சராகப் பணியாற்றி வருகின்றார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் நிறுவன ரீதியாக ஏற்பட்ட சில முன்னேற்றங்களை குறிப்பிட வேண்டும். இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கென இரு ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளும் ஒரு தொழில்நுட்ப கல்லூரியும் நிறுவப்பட்டுள்ளன. ஜெர்மனி, சுவீடன், நோர்வே போன்ற நாடுகளின் உதவியுடன் கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.

ஆரம்பக் கல்வி நிலையில் மாணவர்களின் சேர்வு வீதம் திருப்திகரமாகவுள்ளது. மக்களின் எழுத்தறிவு வீதங்களும் அதிகரித்து வருகின்றது. பெருந்தோட்ட மாவட்டங்களில் 600 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எமது சமூகத்துக்கு கல்விச் சேவையாற்றி வருகின்றன. அண்மைக் காலங்களில் 10,000 ஆசிரியர்கள் வரை எமது சமூகத் திலிருந்து ஆசிரியர்களாக தெரிவாகி பணியாற்றி வருகின்றனர்.

மற்றொரு பிரதான முன்னேற்றம் அண்மைக்காலங்களில் இம்மக்கள் தமக்கென ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளமையாகும். அறிவு சார்ந்த சமூகத்தில் தாமும் ஒரு அறிவார்ந்த சமூகமாக ஏற்றங்காண வேண்டும் என்ற உணர்வுகள் இந்தக் கோரி க்கையில் பொதிந்து காணப்படுவதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்திய வம்சாவளி மலையகச் சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்களான பேராசிரியர் சோ. சந்திரசேகரன், பேராசிரியர் எம். சின்னத்தம்பி, பேராசிரியர் எஸ். எஸ். மூக்கையா, கல்வியாளர் தை. தனராஜ், கலாநிதி எஸ். சந்திரபோஸ் ஆகியோர் இப் பல்கலைக்கழகத்திற்கான கருத்தாக்கச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அரசாங்கம் மலையக ஆசிரியர்களின் தொழிற் தகைமைகளை மேம்படுத்தும் முயற் சியில் செயற்பட்டு வருவதும் ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆங்கில ஆசிரியர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அண்மைக்காலங்களில் இந்திய அரசு, ஆயிரக்கணக்கான இலங்கை வாழ் இந்திய வம்சாவளிகளுக்கு வெளிநாட்டு இந்திய பிரஜை என்ற அந்தஸ்தை வழங்கி வருகின்றது. இந்த நடவடிக் கையானது எமது சமூ கத்திற்கும் அவர்களுடைய பூர்வீகமான இந்திய கிராமங்களுடன் தொடர்புகளை வலுப்படுத்த உதவியுள்ளது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் இந்தியாவில் தொழில் முயற்சிகளைத் தொடங்கவும் இலங்கை இந்தியத் தொடர்புகளை மேம்படுத்தவும் உதவியுள்ளது. ஆரம்பக் காலத்தில் லலிதா கந்தசாமி- எஸ். கார்மேகம் உட்பட பலர் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களுக்கும் இந்திய அரசாங்கத் திற்கும் நன்றியைக் கூற நான் விரும்புகின்றேன்.

இலங்கையில் கோபியோ இந்திய வம்சாவளி மக்களின் சகல தரப்பினரதும் ஏகோபித்த அங்கீகாரத்தையும் நல்லெண்ணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள பல இன சூழலுக்கேற்ப அணுகு முறைகளை கையாண்டு பல்வேறு சமூகங்களுக்கிடையே நல்லெண்ணத்தை வளர்க்க உதவியுள்ளது. சர்வதேச கோபியோ அமைப்பு ஏனைய நாடுகளில் இயங்கும் கோபியோ அமைப்புகளுடன் இணைந்து பரஸ்பரம் செயலாற்றி வருகின்றது.

சில காலத்திற்கு முன்னர் எமது கலாசார மரபுகளை இனங்கண்டு கொள்ள ஒரு கலாசார மரபுரிமை கிராமத்தை ஏற்படுத்தும் எண்ணக் கருவை இலங்கை பத்திரிகைத்துறைத் தலைவர் குமார் நடேசன் முன்வைத்தார். முன்னாள் அமைச்சர் அமரர் பெ. சந்திரசேகரன் இச் செயற்றிட் டத்திற்கு பெரிதும் உதவினார். இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் ஒருங்கிணைந்த ஒற்றுமையை ஏற்படுத்த இந்தச் செயற்றிட்டம் உதவும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இந்திய அரசானது பல சந் தர்ப்பங்களில் இலங்கையில் வாழும் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளி மலையக மக்களை இலங்கைத் தமிழர்க ளுடன் இணைத்துப் பார்த்து இரு சாராரையும் ஒன்றாகக் கணிக்க முற்பட்டுள்ளது. இந்தத் தவறான அணுகுமுறையைப் பற்றி பலமுஆறை இந்திய அரசிடம் நாம் சுட்டிக் காட்டி யுள்ளோம். இலங்கைத் தமிழர்க ளின் உரிமைப் போராட்டங்களை பெரிதும் மதிக்கின்ற அதே வேளை எமது தனித்துவத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகின்றோம். இலங்கை அரசு எமது தனி அடையாளத்தை ஏற்றுள்ளது.

இலங்கை வாழ் இந்தியவம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்கு உழைத்த பல இந்திய தலைவர்களை இவ்விடத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். கே. ராஜலிங்கம், செள. தொண்டமான், எம். ஏ. அkஸ் என்னுடைய தந்தை வி. பி. கணேசன், வெள்ளையன், சி. வி. வேலுப்பிள்ளை, எஸ். நடேசன், பெ. சந்திரசேகரன், இரா சிவலிங்கம் ஆகியோர் இவ்விடத்தில் குறிப் பிடத்தக்கவர்கள்.

அண்மையில் முடிவடைந்த போரின் பின் எமது நாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் ஆசியாவின் அதிசிறந்த நாடாக உருவாகி வருகின்றது. தற்போது உருவாகியுள்ள அமைதிச் சூழலை பயன்படுத்தி நாட்டின் சகல இன மக்களும் மேம்பாடடையக் கூடிய ஒரு கொள்கைத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் யுத்தத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடாத்தி ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளார். வட மாகாணத்திலும் விரைவில் தேர்தலை நடாத்தி தமிழ் தலைவர்கள் தலைமையில் ஒரு புதிய மாகாண அரசினை அரசாங்கம் ஏற்படுத்தவுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக பல சொல்லொண்ணாத் துயரங்களையும், இடர்களையும் சந்தித்த இந்திய வம்சாவளி மலையக மக்கள் தற்போது அமைதியான வாழ்க்கையை நடாத்துகின்றனர்.

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இலங்கையின் முதலீட்டுச் சபையானது அவர்களுக்கு கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டமொன்றை வகுத்துள்ளது என்பதை இங்கு வந்துள்ள பேராளர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கையில் நிலவும் அமைதியான சூழலைக் கண்டுகொள்ள உங்கள் அனைவரையும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நான் அன்புடன் அழைப்பு விடுக் கின்றேன்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ள பிரவாசி பாரதிய திவாஷ் விழாவில் மீண்டும் உங்களைச் சந்திக்க முடியுமென நம்புகின்றேன். இந்த மகாநாடு வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். உலகெங்கும் வாழும் இந்திய வம்சாவளியினரின் எதிர்கால மேம்பாட்டுக்கான சிறந்த சிந்தனைகளும், கருத்துக்களும் இந்த மகாநாட்டில் பரிமாறிக்கொள்ளப்படும் என்பதே எனது நம்பிக்கை.

வடமராட்சிக் கிழக்கில் ஆறு வீதிகளை புனரமைப்பு செய்ய இராணுவம் அனுமதி!

வடமராட்சிக் கிழக்கில் ஆறு வீதிகளைப் புனரமைக்க இரணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த ஆறு வீதிகளும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ளவையாகும். இவ்வீதிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘வடக்கின் வந்தம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 40.2 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

நாகர்கோவில் பஸ் போக்குவரத்து வீதி, கயட்டை பஸ் போக்குவரத்து வீதி, யவுக்காநகர் வீதி, நாகதம்பிரான் கோவில் வீதி, முருகன் கோவில் வீதி, நாகதம்பிரான் கடற்கரை வீதி, ஆகிய ஆறு வீதிகளுமே புனரமைக்கப்படவுள்ளன. இப்பிரதேசத்தில் அண்மைக் காலத்திலேயே மீள் குடியேற்றம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வன்னியில் மரக்கன்றுகள் உள்ளிட்ட பொருட்கள் வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு வன்னிச் சந்தைகளில் விற்பனை.

வன்னிப் பிரதேசங்களில் அனைத்து பயிர்வகைகளும் அழிவடைந்துள்ளதால் மரக் கன்றுகள் உட்பட பலதும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும், தென்னிலங்கைப் பகுதிகளிலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக வன்னியில் அதிகளவில் காணப்பட்ட வாழை மரங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதால் வாழைப்பழங்கள் யாவும் யாழ்ப்பாணத்திலிருந்தே வன்னிக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. நடுகைக்காக வாழைக் கன்றுகளும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதே போல, மரவள்ளித்தடிகள், தென்னங்கன்றுகள், பல வகையான மரக்கன்றுகள் போன்றவையும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வன்னியில் கோழிகள் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில், திருகோணமலை கின்னியா பகுதிகளிலிருந்து இவை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பாடசாலைகளுக்கு இந்திய அரசாங்கம் உதவி.

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. இதனையடுத்து புனரமைப்பிற்குத் தெரிவான பாடசாலைகளின் விபரப் பட்டியலை மீளாய்வு செய்யுமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை புனரமைத்துத் தருமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் பிரகாரம் இந்திய அரசாங்கம் பாடசாலைகளைப் புனரமைக்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.