November

November

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் அம்மக்களுக்கு சரியான முறையில் சென்றடையவில்லை- தமிழ் கட்சிகளின் அரங்கம்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் அம்மக்களுக்கு சரியான முறையில் சென்றடையவில்லை என தமிழ் கட்சிகளின் அரங்கம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளும். வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களும் வழங்கும் உதவிகள் முறையாக அம்மக்களுக்கு சென்றடைவதில்லை எனவும், இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தமிழ் கட்சிகளின் அரங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் ஒன்பதாவது கூட்டம் கொழும்பில் ஈ.பி.டி.பி தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 வரை இக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் உதவிகளில் அரைவாசியே சென்றடைவதாகவும் இப்பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடுவதெனவும், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட முடியாவிட்டால் சாத்வீக ரீதியாக போராட்டங்களை நடத்துவதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழங்குகளை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இதே வேளை, தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் மூன்று பிரதிநிதிகள் நேற்று புதன் கிழமை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஒரு தீர்வினைக் காண ஒத்துழைக்க வேண்டுமென இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைவது தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு அறிவிப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்ததாக இச்சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் செயலாளரும், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இரா. சம்பந்தனுடனான சந்திப்பில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் தலைவர் எம்.கே சிவரிலிங்கம், புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜேர்மன் நாடமாளுமன்றக் குழுவினர் நாளை யாழ். வருகின்றனர்.

Jens_Plotnerஜேர்மன் நாடாளுமன்றக் குழுவினர் நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இக்குழுவினரோடு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜேன்ஸ் புளொட்னரும் வருகை தரவுள்ளார். இக்குழுவினர் நாளை யாழ்.மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளனர். வடமாகாண அளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மாவட்டச்செயலகத்தின் சார்பில் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், அபிவிருத்திப்பணிகள், பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இக்கலந்துரையாடலில் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழப்பாணம் வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் யாழ்ப்பாண சிவில் சமூகப்பிரதிநிதிகள் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலக விஞ்ஞான தினத்தில் விருது பெறும் யாழ். மாணவன்!

St_Patricks_College_Jaffnaஇம்மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு புதுடில்லி இந்திராகாந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம் யுனெஸ்கோவுடன் இணைந்து சார்க் நாடுகளிடையே நடத்திய விஞ்ஞானப் போட்டியில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் சி.செல்வநித்திலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சார்க் நாடுகளிடையே நடைபெற்ற இப்போட்டியில் நான்காயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டப்போடடிக்கு இவர்களில் 41பேர் மட்டுமே தெரிவாகியுள்ளனர். இவர்களில் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் மூவராகும். எதிர்வரும் 13ஆம் திகதியன்று புதடில்லியில் நடைபெறும் இரண்டாம் கட்டப்போட்டியின் பின்னர் முதலாம் கட்டத்தில் தெரிவான 41 பேருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவன் செல்வநித்திலனும் ஒருவர்.

St_Patricks_College_Jaffnaஇம்மாணவன் இலங்கைப் பௌதிகவியற் கழகம் நடாளாவிய ரீதியில் நடத்திய ‘இலங்கை பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டி’யிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று தேசிய விஞ்ஞான மன்றத்தின் உலக விஞ்ஞான தின விழாவில் தங்கப்பதக்கம் பெறவுள்ளார். இவ்விழா நவம்பர் 12ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இத் தங்கப்பதக்கத்தை தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகளுக்கான அமைச்சர் பேராசியரியர் திஸ்ஸவிதாரண வழங்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் டெங்குத் தாக்கம் அதிகரிப்பு.

dengu_1.gifயாழ்ப்பாண வைத்தியசாலைகளில் அண்மைக் காலமாக சுமார் ஐந்து பேர் வரையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படுவதாகவும், யாழ்.குடாநாட்டில் மீண்டும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் யாழ்.பிராந்திய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடாநாட்டில் அதிகரித்து காணப்பட்ட டெங்கு நோய்த் தாக்கம் இரு மாதங்களுக்கு முன்பு கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நோய் தற்போது மீண்டும் அதிகரிக்கும் நிலை எற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் மக்கள் தங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதுடன் டெங்கு நோய் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தியவர்களிடம் 12 இலட்ச ரூபா அறவீடு.

Electricity_Cableயாழ். குடாநாட்டில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று பயன்படுத்திய 55பேர் கைது செய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து யாழ்.நீதிமன்றம் நேற்று செவ்வாய் கிழமை 12 இலட்ச ரூபாவையும் அறவிட்டது. சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்கு அபராதமாக 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், மின்சார சபைக்கு 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறும் யாழ்.மேலதிக நீதவான் அ.பிரேம்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மின்சார சபையினரும், பொலிஸாரும், கொழும்பிலிருந்து வந்த விசேட குழுவினரும் திடீர் சோதனைகளை நடத்தி சட்டவிரோத மின்பாவனையாளர்களை பிடித்தனர். இவ்வாறு பிடிபட்ட 55பேரும் நேற்று யாழ்.நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதமன்றினால் மேற்குறிப்பிட்ட அபராதம் விதிக்கப்பட்டது.

மலையகத்தில் இம்முறை தீபாவளி கொண்டாட்டம் சோபையிழந்த நிலையில்.

விலைவாசி உயர்வினாலும், தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீபாவளிக்கான முற்பணம் போதாதுள்ளதாலும் மலையகத்தில் இம்முறை தீபாவளி கொண்டாட்டம் சோபையிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையக வர்த்தக நிலையங்களிலும், தீபாவளி வியாபாரம் முன்னரைப்போல் அமையவில்லை எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீபாவளிப் பண்டிகையை வடக்கு கிழக்கு தமிழர்களை விடவும் மலையத் தமிழர்களே விமரிசையாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தாக்கதாகும். ஆனால், இம்முறை மலையகத்தில் தீபாவளிப் பண்டிகை களைகட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

CNN_Hero_Narayanan_Kirishnanஎந்திரன் முகத்திரை கிழிகிறது என்ற பதிவில் நான் எழுதியது. திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்யுடனும், துணிவுடனும் உழைத்து கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம், பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல். தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் 

நூலக ஒழுங்கு விதிகள் மீறப்பட்ட ஒரு நிகழ்வை சிங்கள – தமிழ் உரிமை சிக்கலாக சித்தரிப்பது சின்னத்தனம்! : யாழ் ஆய்வறிவாளர் அணியம்

Welcome_to_Jaffnaகடந்த சனி மாலை (October 25, 2010) தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் யாழ் பொது நூலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்த ஒரு நூலக ஒழுங்கு விதி மீறல் பிரச்சினை, யாழ் பிரதேச பத்திரிகைகளாலும், இவைகளது ஊடக அனுசரணையுடன் – தமிழ் இனவாத  அரசியல்வாதிகளாலும், இணையங்களாலும், ஒரு சிங்கள – தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரிக்கப்பட்டு இன விரிசல் ஏற்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.

சிங்கள சகோதர மக்களின் யாழ் வருகைகளுக்கு எதிராக கடந்த ஒரு வருட காலமாக செய்யப்பட்டுவரும் இன விரிசலை ஏற்படுத்தும் பிரச்சாரங்களின் இன்னொரு அங்கமாகவே இச் சம்பவமும்  சித்தரிக்கப்பட்டு வருவதை சுய சிந்தனையுள்ள எவரும் இலகுவில் இனங்கண்டு கொள்வர்.

யாழ் பொது நூலகத்தினரின் நிர்வாகத் தவறுகள் நிமித்தமும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நூலக ஊழியர்கள்மேல் அதிகரித்த வேலைப்பழுவின் விளைவாகவும், நூலக ஊழியர்களுக்கும் உல்லாசப் பயணிகளுக்கும் இடையில் இருந்த மொழிப் பிரச்சினை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின்மை பாற்பட்டும் எழுந்த இந்தப் பிணக்கு நூலக ஒழுங்கு விதிகள் சம்பந்தமானதொன்று என்பதே சரியான பார்வையாகும். இந் நிலையில், இச் சம்பவமன்றி, இதனை ஒரு சிங்கள-தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரித்து, 1981 யாழ் நூலக எரிப்புச் சம்பவத்துடன் இணைத்து –எழுதி – அறிக்கைகள்விட்டு, தமிழ் இனவெறியை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம்பெற முயல்வதே மிக இழிவான இன வெறிச் செயல் என இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இச் சம்பவம்பற்றி விரிவாக விசாரித்து உறுதியாகத் தெரியவரும் விடயங்களின்படி, மேற்படி சம்பவம் நடைபெற்ற தினத்திற்கு முந்தைய தினம் தென்னிலங்கை உல்லாச பயணிகள் பலர் பொது நூலகத்தை பார்வையிட வந்திருந்ததாகவும்,  துரதிருஸ்டவசமாக அன்று போயா விடுமுறை தினமாகையால் அவர்களால் நூலகத்தை பார்வையிட முடியாதிருந்ததாகவும், இந்நிலையில், நூலக வாசலில் கடமையிலிருந்த காவலாளி அவர்களை மறுநாள் மாலை வருமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும், இதன்படி அவர்கள் சம்பவம் நடந்த தினமான மறுநாள் மாலை நூலகத்தை பார்வையிட வந்தபோது நூலகத்தின் உள்ளே இலங்கை மருத்துவர் சங்க மாநாடு நடப்பதை காரணம்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் நூலக காவலாளியின் வேண்டுகோளின்பேரிலேயே தாம் வந்திருந்தபடியினால் தம்மை உள்ளேவிட அனுமதிக்க வேண்டுமெனக்கோரி சுற்றுலாப் பயணிகள் சிலர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவர் தான் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் புரிபவராகையால் தம்மை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டுமென வற்புறுத்தியதாகவும், இவருடன் இன்னும் பலரும் இணைந்து தம்மையும் உள்ளே நுழையவிடுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், இதனால் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் யாழ் மாநகர முதல்வரின் உத்தரவின் பேரிலேயே உல்லாசப் பயணிகள் அனைவரும் நூலகத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து நூலகத்தினுள் நுழைந்த இவ் உல்லாசப் பயணிகளில் ஒரு சிலர் மட்டும் அசாதாரணமாக நடந்துகொண்டதாகவும் அறியப்படுகிறது.

இவை தவிர, தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அடாவடியில் ஈடுபட்டதாகவும், முறைகேடாக நடந்ததாகவும், அனுமதியின்றி நுழைந்ததாகவும், நூலகத்தை முற்றுகையிட்டதாகவும் வெளிவந்த செய்திகளும், கண்டனக் குரல்களும், கடிதங்களும், அறிக்கைகளும், இனவெறியூட்டி அரசியல் ஆதாயம்பெற எழுதப்பட்ட வெறும் அவதூறுகளாகவே நாம் அறிந்து கொள்கிறோம்.

உண்மை நிலைமைகள் இப்படியிருக்க, தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பலர் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக எவ்வித பாரிய பிரச்சினையுமின்றி பொது நூலகத்தை பார்வையிட்டுத் திரும்பிவருகின்றதொரு பின்னணியில்,  சம்பவத்திற்கு முந்தையதினம் நூலகத்தை பார்வையிட வந்த உல்லாசப் பயணிகள் நூலக காவலாளியின் கட்டளையை ஏற்று அமைதியாகத் திரும்பிச் சென்றதை கவனத்தில் கொள்ளத் தவறி, வெகு தொலைவிலிருந்து வந்து தரம் குறைந்த தங்குமிட சூழ்நிலையில், தெருவிலும் – திண்ணையிலும் – யாழ் திறந்தவெளியிலும், தங்கி திரும்பும் உல்லாசப் பயணிகளை சம்பவம் நடைபெற்ற அன்று நூலகத்தை பார்வையிட வருமாறு அழைத்து பின்னர் அவர்கள் நுழைய அனுமதி மறுத்தது நூலக நிர்வாகத்தின் பெரும் தவறு என்பதையும் எண்ணிப்பார்க்க மறந்து, தற்செயலான இந்தச் சம்பவத்தை புனைந்து பூதாகரமாக்கி முழுச் சிங்கள மக்களுக்கு எதிராகவும் சேறு பூசி, தமிழ் உணர்வாளர்களை உருவேற்றி அரசியல் ஆதாயம்பெறும் அற்பத்தனமான ஆசையில் ’81 நூலக எரிப்புச் சம்பவத்துடன் இதனை இணைத்து செய்திகளும், அறிக்கைகளும், கடிதங்களுமாக ‘நேர்முக வர்ணணைகள்’ செய்துவரும் யாழ் ஊடகங்களையும், இணையங்களின் ஒன்றியங்களையும், அரசியல் பிரகிருதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.

அத்துடன் தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் வாசலில் தரித்து நின்ற வேளையில், நூலகத்தைப் பயன்படுத்த வந்திருந்த சில தமிழ் மக்களும், மருத்துவர்சங்க மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் மருத்துவ மாணவர்களும் நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட விடயம்; இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு தவறான சமிக்ஞைகளை தந்திருக்கும் சாத்தியமுண்டு என்பதையும் இந்தப் பத்திரிகைகளும், கண்டன அறிக்கைகள்விடும் கனவான்களும் கவனத்தில் கொள்ள தவறியுள்ளனர் என்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மேலும், முதல் நாள் நூலக காவலாளியின் முடிவை ஏற்று நூலகத்தை பார்வையிடும் ஒரே காரணத்திற்காக மட்டும் மறுநாள்வரை தமது பயண ஏற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எவரும் பின்போட்டிருப்பின், மறுநாளும் அவர்கள் நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது எவ்வாறு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து ஆத்திரத்தை ஊட்டியிருக்கும் என்பதையும் இவைகளும் இவர்களும் எண்ணிப் பார்த்திருக்காதது கவலைக்குரியது. இது தவிர, நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டும் அசாதாரண நடத்தையில் ஈடுபட்டிருந்த நிலையிலும், அதுவும் நூலகத்திற்கு எதுவித சேதத்தையும் இவர்கள் எவரும் ஏற்படுத்தியிருக்காதபோதும், உல்லாசப் பயணிகள் அனைவரும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டதாக செய்திகளை பத்திரிகைகள் திட்டமிட்டு திரித்து வெளியிட்டுவரும் தர்மத்தையும் நாம் இங்கு கேள்விக்குட்படுத்த விரும்புகின்றோம்.

இலங்கையிலுள்ள இனங்களுக்கு இடையிலான அரசியல் உரிமைப் பிரச்சினைகள் ஆக்கபூர்வமாகத் தீர்க்கப்பட  சகல இனங்களுக்கு இடையிலான உறவும் மிக ஆரோக்கியமாக பேணப்பட வேண்டியது அத்தியாவசியமானதொரு தேவையாகவுள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக இன வெறியை எண்ணை ஊற்றி எரிய வைக்கும் வேலை முறைகளை தவிர்க்க வேண்டுமென நாம் சகல தரப்பினரையும் வற்புறுத்துகின்றோம்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பொது நூலகத்தை வந்து பார்வையிட இயலுமான சகல ஏற்பாடுகளையும் நூலக நிர்வாகம் உடன் செய்யவேண்டுமென நாம் வேண்டுகிறோம்.

மேலும், நூலகத்தை பார்வையிடவரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பினால் நூலக ஊழியர்களின் மேல் வரும் வேலைப்பளுவை ஈடுசெய்யும் நடவடிக்கைகளையும் நூலக நிர்வாகம் உடன் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

30 ஒக்டோபர் 2010 
YARL ANALYTICAL RESEARCHERS’ LEAGUE
 P O Box 165, Jaffna
._._._._._.

October 29, 2010

தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் யாழ் வருகையும் யாழ் நகர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் : விஸ்வா

Jaffna_Libraryபோரிற்குப் பின் முற்றிலும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் யாழ் வருகை யாழ் மாவட்டத்தில் நிர்வாக நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது.  யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் சிலர் யாழ் நூலகத்தில் நடந்துகொண்ட முறை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழ் – சிங்கள இனங்களிடையே உள்ள நம்பிக்கையின்மையை மேலும் மோசமாக்குவதுடன் இவ்வாறான சம்பவங்கள் இன உறவுகளை மேலும் கீழ்நிலைக்கே இட்டுச் செல்கின்றது.

யாழ். பொது நூலகத்திற்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சிக்கல்களை ஏற்படுத்திய தென்னிலங்கையில் இருந்து வந்த சில சுற்றுலாப் பயணிகள் யாழ் பொது நூலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததும் இல்லாமல் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டமையும் தெரிந்ததே. ஒக்ரோபர் 23ல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக இன்று (ஒக்ரோபர் 29 2010) வெள்ளிக்கிழமை யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறுகின்றது. கடந்த 23ஆம் திகதி யாழ். நூலகத்தைப் பார்வையிட வந்த தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் சிலரின் நடவடிக்கைகளால் நூலகப் பணியாளர்கள் மற்றும், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நெருடலான மனஉணர்வுகள் குறித்தும் மற்றும், தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து யாழ். மாநகர சபை உறுப்பினர் அ பரஞ்சோதி ஒக்ரோபர் 27, 2010 பிரேரணை ஒன்றை முன்மொழிந்தும் இருந்தார். அன்று குறிப்பிட்ட சுற்றலாப் பயணிகள் நடந்து கொண்ட விதம் குறித்து தமது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் பற்றி அ பரஞ்சோதி வருமாறு கூறுகின்றார், ”பொது நூலக கேட்போர் கூடத்தில் மருத்துவச் சங்க மாநாடு ஒக்ரோபர் 22 முதல் ஒக்ரோபர் 24 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இது நடைபெற்ற மூன்று நாட்களும் மாலை 5.30 மணியின் பின்னரே நூலகத்திற்குள் பார்வையாளருக்கான நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தெற்கு சுற்றுலாப் பயணிகள் சுமார் 300 பேர் வரையிலானோர் நூலக வாசலில் குவிந்தனர். உள்ளே விடுமாறு கலவரத்தில் ஈடுபட்டனர். வாயில் காவலாளி தடுத்த வேளையில் கதவின் பூட்டை உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைய முற்பட்ட போது நிலமை எல்லை மீறவே, மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டது. முதல்வர் பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸார் அவ்வடத்திற்கு வந்து சமரசம் செய்வதில் ஈடுபட்டனர். உடனே குறித்த சுற்றுலாப் பயணிகள் இராணுவத்தினருக்கு அறிவித்தனர். அவர்களால் கதவு திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளே விடப்பட்டனர். உள்ளே சென்றவர்கள் புத்தக அடுக்கிலிருந்த புத்தகங்களை எடுத்து சிதறியடித்து அருவருக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர். இக்குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், வாசகர்கள் பலர் அச்சத்தினால் நூலகத்தை விட்டு பின் கதவினூடாக வெளியேறிவிட்டனர். நடைபெற்றுள்ள சம்பவம் நாகரீகமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கை எனவு அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர்.

நூலகம் என்பது அமைதி வழியில் பயன்படுத்தப்படும் ஒரு இடமாகும். இது சுற்றுலாப் பயணிகளுக்கான உல்லாசபுரியல்ல என்பதை சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ளவேண்டும்’’ இவ்வாறு அ பரஞ்சோதி தெரிவித்திருந்தார்.

மேலும் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளினால் யாழ். குடாநாட்டு நிர்வாக ஒழுங்குகளில் பல சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருகின்ற நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் தங்குவதற்கு கிடைத்த இடங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். தற்போது நாவற்குழியிலுள்ள அரச களஞ்சியமும் அவர்களிடம் தங்குமிடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படை அதிகாரிகளின் குடும்பங்கள், அவர்களின் நண்பர்களின் குடும்பங்கள் தங்குவதற்கு நாவற்குழி அரச களஞ்சியம் பயனபடுத்தப்படுவதாக களஞ்சிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் நூற்றுக் கணக்கில் இவர்கள் சுற்றுலா வருவதால் இவர்களுக்கான தங்குமிடங்களாக பாடசாலைகளும் அரசாங்க கட்டடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இரவில் இவர்கள் பாடசாலைகளில் தங்கிவிட்டுச் செல்லும் போது, காலையில் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பல சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்கும் நிலையும் தோன்றி வருகின்றது.

தென்பகதி சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பொது இடங்களில் தங்கிவருவதால் எற்பட்டுள்ள இச்சிக்கல்களை தவிர்க்கும் முகமாக இவர்கள் யாழப்பாணத்தில் தங்கும் பொது இடங்கள் குறித்த விபரங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் திரட்டப்பட்டு வருகின்றன. பிரதேசச் செயலர்கள், கிராம அலுவலர்கள், மூலமாக இத்தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இத்தகவல்கள் குறித்த அறிக்கை அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும்.

தென்பகுதியிலிருந்து வரும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளுக்குப் போதுமான இடவசதிகளை மேற்கொள்ள முடியதாத நிலை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கக்கூடிய பொது இடங்களை அடையாளம் கண்டு அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

யாழ். அரசாங்க அதிபர் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.

Imelda_Sugumar_GA_Jaffnaபடிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க யாழ். அரசஅதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நல்லிணக்க ஆணைக்குவின் முன் யாழ். அரசாங்க அதிபர் சாட்சியமளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றும் திருமதி. இமெல்டா சுகுமார் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக பணியாற்றவர் என்பதால் இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அவரது சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளும் முகமாகவே அவர் நல்லிணக்க ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு பலர் சாட்சியங்களை அளித்துள்ள நிலையில் சில சந்தேகங்களைத் தெளிவு படுத்துமாறு நல்லிணக்க ஆணைக்குழு அவரிடம் கேட்டுள்ளதாகவும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு உணவு. மருந்து வகைகள் எவ்வாறான ஒழுங்கில் விநியோகிகப்பட்டன என்பது தொடர்பாகவும் திருமதி இமெல்டா சுகுமார் சாட்சியத்தில் விளக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் தொழிற்சந்தை நடத்துவதற்கு ஏற்பாடு.

Waiting_for_Employmentயாழ்ப் பாணத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி தொழிற்சந்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச்செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தால் இது நடத்தப்படவுள்ளது.

இத்தொழிற்சந்தையில் கொழும்பிலிருந்து வந்து கலந்து கொள்ளும் தனியார் தொழில் நிறுவனங்களும், உள்ளுர் தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்ளும் எனவும், இவை தங்கள் நிறுவனங்களிலும் உள்ள பணியாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக யாழ்.மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் நேர்முகப் பரீட்சைகளை நடத்தி தொழில் வாய்ப்புகளை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிற்சந்தையில் கலந்து கொண்டு பணியாளர் வெற்றிடங்களை நிரப்ப விரும்பும் நிறுவனங்கள் எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்பதாக யாழ்.மாவட்ட திட்டமிடல் செயலகத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.