November

Friday, October 22, 2021

November

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்றம் தாமதமாவதற்கு மிதிவெடி அபாயமே காரணம்- அரச அதிபர்.

landmines.jpgமிதிவெடி அபாயம் காரணமாகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்களின் மீள்குடியமர்வு தாமதமாகின்றதே தவிர உயர்பாதுகாப்பு வலயம் பிரச்சினையல்ல எனவும், யுத்தம் நடைபெற்ற காலத்தில் மட்டுமே இருந்தது எனவும் யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இப்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், இராணுவத்தினர் இராணுவ முகாம்களில் மட்டுமே இருப்பர் எனவும், ஏனைய பிரதேசங்கள் விடுவிக்கப்படும் எனவும் இராணுவ இணைப்பதிகாரி தெரிவித்திருந்தார். அதனடிப்படையிலேயே வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். வலி.வடக்குப் பிரதேசத்தில் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பின் மக்களின் மீள்குடியமர்வை மேற்கொள்ள முடியும். அதற்காக இராணுவத்தின் மிதிவெடியகற்றும் பிரிவு துரிதமாக செயற்பட்டு வருகின்றது. தற்போது வலி.வடக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்பிரதேசங்களில் மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதி இந்நிகழ்வை அமைச்சர் பசில் ராஜபக்சவை கொண்டு ஆரம்பித்து வைக்க விரும்புவதால் விரைவில் அவர் கலந்து கொண்டு இப்பகுதி மீள்குடியேற்றத்தை மேற்கொள்வார். -இவ்வாறு அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு சிகிச்சை நேரம் நீடிக்கப்படவுள்ளது.

Jaffna_Hospitalநாட்டிலுள்ள அனைத்து போதனா வைத்தியசாலைகளும் அதன் வெளிநோயாளர் பிரிவுகளை காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்து வைத்து சிகிச்சைகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து இவ்வாறு சிகிச்சையை வழங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. ப. பவானி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் இரு கிராமங்களில் நேற்று மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள இரண்டு கிராமங்களில் நேற்று திங்கள் கிழமை மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நீராவிப்பிட்டி மேற்கு கிராமசேவகர் பிரிவிலும், மடவாழ்சிங்கக்குளம் பகுதியிலும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 160 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், மீள்குடியமர்த்தப்பட்ட இம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் கொலைச் சந்தேக நபர் பெண்ணாக மாறிய ஆண்!

David_Burgessஅரசியல் தஞ்சம் கோரிய தமிழர்களுக்கு தன்னலமற்ற சேவையை வழங்கிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் யை கிங்குரொஸ் ரெயில் நிலையத்தில் தள்ளிவிட்டு மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர் நவம்பர் 1ல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். நீனா கனகசிங்கம் (34) என அறியப்பட்ட இப்பெண் உண்மையிலேயே ஒரு ஆண் என அறிய வந்துள்ளது. பெண்ணாக மாற்றுப் பால் சிகிச்சை செய்து கொண்ட இவருடைய சிகிச்சை இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தள்ளது.

நீதிமன்றத்திற்கு மீசை மற்றும் தாடி மயிர் முளைத்த முகத்துடன் கொண்டுவரப்பட்ட கனகசிங்கம் தன்னைப் பெண்ணாகவே அடையாளப்படுத்தும்படி நீதிமன்றைக் கேட்டுள்ளார்.

கிறிக்கல்வூட்டைச் சேர்ந்த கனகசிங்கம் வொன்ஸ்வேர்த் சிறைச்சாலையில் ஆண்கள் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். இவர் பெப்ரவரி 3 வரை வழக்கு விசாரணைகளுக்கு தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். இவரைப் பிணை எடுப்பதற்கான விண்ணப்பம் எதுவும் மேற்கொள்ளவில்லை.

ரெயிலில் தள்ளிவிடப்பட்டதால் மரணத்தை தழுவிய டேவிட் பேர்ஜஸ் ஆணாக இருந்த போதும் பெண்களின் உடைகளை அணிவதில் நாட்டம் கொண்டிருந்தவர். மாற்றுப்பால் இயல்புடைய டேவிட் பேர்ஜஸ் தன்னை இணையத்தில் பாலியல் உறவுக்கு விளம்பரப்படுத்தி இருந்தமை அவரது மரணத்தைத் தொடர்ந்து வெளிவந்தள்ளது.

டேவிட் பேர்ஜஸ் இன் தனிப்பட்ட பாலியல் இயல்புகளுக்கு அப்பால் அவர் தனது தொழிலில் நேர்மையாகவும் திறமையாகவும் இருந்ததை அவரது வேலை நண்பர்கள் மதிப்புடன் தெரிவித்துள்ளனர். அவருடைய பாலியல் நடத்தைகளையும் இரட்டை அடையாளத்தையும் அவரது குடும்பமும் வேலை நண்பர்களும் அறிந்தும் இருந்தனர்.

”தமிழ் மக்களுக்கு தன்னலமற்ற சேவைகளை வழங்கிய போதும் டேவிட் பேர்ஜஸ் இன் மரணம் தொடர்பாக தமிழ் மக்கள் தரப்பில் இருந்து எவ்வித இரங்கலும் தெரிவிக்கப்படவில்லை. ஒருவருடைய பாலியல் இயல்பு என்பது அவருடைய தனிப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்ட விடயம். ஒரு சமூகத்திற்கு வழங்கிய தன்னலமற்ற சேவையை அவருடைய பாலியல் இயல்புகளுக்காக மறப்பது அழகல்ல” என்பதே எனது (த ஜெயபாலன்) நிலைப்பாடு.

._._._._._.

Oct 29 2010

தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் மரணத்தைத் தழுவினார்! அவருடைய மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் கைது!

அரசியல் தஞ்ச வழக்குகளில் தனக்கென முத்திரை பதித்த சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் ஒக்ரோபர் 25ல் கிங்குறொஸ் நிலக்கீழ் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் வீழ்ந்து உயிரிழந்தார். டேவிட் பேர்ஜஸ் இன் மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கிங்குரொஸ் நிலக்கீழ் ரெயில் நிலையத்தில் நின்ற டேவிட் பேர்ஜஸ்யை குறிப்பிட்ட தமிழ் பெண் புகையிரதத்தின் முன் தள்ளிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்தேக நபர் 34 வயதான நீனா கனகசிங்கம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

63 வயதான டேவிட் பேர்ஜஸ் 3 பிள்ளைகளின் தந்தை. மத்திய லண்டனில் வாழ்பவர். இவர் மாற்றுடையணியும் பழக்கம் கொண்டவர் என்றும் தெரியவருகிறது. சம்பவத்தின் போது பெண்ணுடை அணிந்து நின்ற டேவிட் பேர்ஜஸ் புகையிரத்தின் முன் வீழ்ந்ததால் புகையிரதத்தில் அடிபட்டு மரணமாகி உள்ளார். இவருடைய மரணம் தொடர்பாக நீனா கனகசிங்கம் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

David_Burgessடேவிட் பேஸ்ஜசின் மரணச் செய்தி பிரித்தானிய சட்டத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பிரித்தானிய தமிழ் சமூகத்திற்கு டேவிட் பேர்ஜஸ் வழங்கிய சட்ட சேவை அளவுக்கு எவருமே தன்னலமற்று பணியாற்றி இருக்கவில்லை. பலநூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு பிரித்தானிய மண்ணில் வாழும் உரிமையைப் பெற்றுக்கொடுத்த டேவிட் பேர்ஜஸ் தனது சட்ட நிபுணத்துவத்தால் எதிர்காலத்திலும் தஞ்சம் கோரும் பலருக்கு வாழும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க காரணமாய் இருந்தவர்.

1970க்களில் சட்டத்துறைக்குள் நுழைந்த இவர். ஏனையவர்களுடனும் இணைந்து வின்ஸ்ரான்லி பேர்ஜஸ் என்ற பிரித்தானியாவின் பெயர்பெற்ற குடிவரவுச் சட்ட நிறுவனத்தை நிறுவினார். அரசு சட்ட உதவிகளை இறுக்கமாக்கியதை அடுத்து தராதரமான சேவையை தங்களால் தொடர்ந்தும் வழங்க முடியாது என்ற நிலையில் வின்ஸ்ரான்லி பேர்ஜஸ் நிறுவனம் 2003 ஓகஸ்டில் மூடப்பட்டது.

அதன் மரணமாகும் வரை டேவிட் பேர்ஜஸ் லுக்மானி தொம்சன் அன் பார்ட்னர்ஸ் என்ற வூட் கிரீனில் உள்ள சட்ட நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

தமிழர்கள் பிரித்தானியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரிப் புறப்பட்ட எண்பதுக்களின் நடுப்பகுதி முதல் டேவிட் பேர்ஜர்ஸ் தமிழ் சமூகத்துடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர். தமிழர் தகவல் நடுவம் அரசியல் தஞ்சம் தொடர்பாக எடுத்துக் கொண்ட வழக்குகளை டேவிட் பேர்ஜஸ் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றியும் கண்டார். உள்துறை அமைச்சின் பல்வேறு முடிவுகளையும் எதிர்த்து அவற்றை மாற்றி அமைக்கவும் காரணமாக இருந்தவர்.

எப்பொதுமே சவாலான விடயங்களையே தெரிவு செய்து வாதிடும் டேவிட் பேர்ஜஸ் அண்மைக்காலத்தில் கூட வெளிநாடுகளில் பாரபட்சமற்ற வழக்குகளுக்காகவும் அகதிச் சட்ட வரையறைக்குள் வராத வழக்குகளையும் பாதுகாப்பு அமைச்சின் சட்டவிரோதமான தடுத்துவைப்புகளுக்கு எதிரான சிவில் சட்ட வழக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருந்தார்.

David_Burgess_Soniaமாற்றுடைப் பழக்கமுடைய டேவிட் பேர்ஜஸ் சோனியா எனவும் அழைக்கப்படுபவர். இவருடைய மறைவு மிக ஆழமான வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

டேவிட் பேர்ஜஸ் தீபெத்திய பெண்ணை மணந்தவர். அவருடைய மகள் (குசாங் நைமா) தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தாமல் சட்டத்துறையில் சாதிக்க வேண்டும் என்று கடினமாக உழைப்பவர். அவர் தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தி அதில் செல்வாக்குப் பெறாமலேயே அவரது கடின உழைப்பால் தான் டேவிட் பேர்ஜஸ் இன் மகள் என அறியப்படுபவர்.

சட்டத்துறையில் உள்ள அகதிகள் அமைப்புகளில் உள்ள தமிழ் சமூக அமைப்புகளில் உள்ள தமிழர்களுக்கு டேவிட் பேர்ஜஸ் மிக அறிமுகமானவர். அவருடைய இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஆழ்ந்த சோகமே.

சந்தேக நபரான நீனா கனகசிங்கம் கிரிக்கல்வூட் பகுதியில் உள்ள சிசிலி வீதியில் வாழ்பவர் எனத் தெரியவருகின்றது. நவம்பர் 1ம் திகதி இவர் ஓல்ட் பெய்லியில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என இரா.சம்பந்தன் தெரிவிப்பு.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு இதுவரை கிடைக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்ற அழைப்பு வருமானால் அதில் கலந்து கொள்வது பற்றி ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் ஓன்பதாவது கூட்டம் எதிர்வரும் புதன் கிழமை கொழும்பில் ஈ.பி.டி.பி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை செவ்வாய் கிழமை இரா.சம்பந்தனை சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செட்டிக்குளம் ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியுள்ள மக்களை இடமாற்ற நடவடிக்கை.

வவுனியா செட்டிக்குளம் ‘மெனிக்பாம்’ முகாமில் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி முகாம்களுக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மெனிக்பாம் முகாமில் இன்னும் அறுநூறு குடும்பங்கள் மட்டும் உள்ளதாகவும், இவர்கள் தற்போது வசிக்கும் குடில்கள் பழுதடைந்துள்ளதாகவும் மழைகாலத்தில் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமலிருக்க கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி ஆகிய முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. எச்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இவ்விரு முகாம்களிலுள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், மூவாயிரம் விடுகள் வெறுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விரண்டு முகாம்களிலும் குறித்த மக்கள் மாற்றப்படுகின்ற போது, அவர்களின் பராமரிப்பினை சுலபமாக மேற்கொள்ள முடியும் எனவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக் கூட்டம் முன்று உறுப்பினர்களுடன் நடைபெற்றமை சட்ட விதிமுறையின்படி சரியானதாம்.

வவுனியா நகரசபைக் கூட்டம் கடந்த சனிக்கழமை முன்று உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் இவ்வாறு நடைபெறுவதற்கு சட்ட விதிமுறையில் இடமுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையுடன் உள்ள வவுனியா நகரசபையின் கூட்டங்களில் எட்டு உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த யூலை மாதத்திற்குப் பின்னர் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் நகரசபைத் தலைவருக்கு பல உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் முன்பு உறுப்பினர்கள் முன்வைத்த 29 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இது வரை மேற்கொள்ளப் படவில்லை. இதன்காரணமாக கூட்டமைப்பு, புளொட், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் மாதாந்த கூட்டங்களைப் புறக்கணித்தனர். இதனையடுத்து கூடாமலிருந்து மாந்த கூட்டம் நேற்று முன்தினம் மூன்று உறுப்பினர்களுடன் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு துரித கற்றல் செயல்திட்டம்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக கல்வி வாய்ப்புக்களை இழந்த மாணவர்களுக்கு துரித கற்றல் செயல்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், வடக்கு, கிழக்கு மாகாண கல்வித்திணைக்களங்கள், என்பன இணைந்து ‘யுனிசெவ்’ நிறுவனத்தின் அனுசரணையில் இச்செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.

இதில் தரம் 3முதல், தரம் 9 வரையுள்ள மாணவர்கள் பயன் பெறவுள்ளனர். தமிழ், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களும், தரம் 6 தொடக்கம் 9 வரையிலான மாணவர்களுக்கு விஞ்ஞான பாடமும் துரிதகற்றலாக கற்பிக்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து இச்செயல்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வலி.வடக்கு மீள்குடியேற்றம் நடைபெறவில்லை.

வலிகாமம் வடக்கில் இன்று திங்கள் கிழமை நடைபெறுவதாகவிருந்த மீள்குடியேற்றம் நடபெறவில்லை. அது எப்போது நடைபெறும் என்பது குறித்தும் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

வலிகாமம் வடக்கில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் இன்று மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இம்மீள்குடியேற்றம் தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என யாழ்.அரசஅதிபர் திருமதி. இமெல்டாசுகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனா சென்றிருப்பதால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ். வருகைதர முடியவில்லை எனவும், அதனாலேயே மீள்குடியேற்ற நிகழ்வு இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு கணணி வழங்கும் திட்டம் ஆரம்பம். – லிற்றில் எய்ட்

Computer_Project_Bannerகல்முணை மற்றும் திருகோணமலையில் மாணவ மாணவிகளுக்கு கணணிப் பயிற்சிகளை வழங்கி வரும் ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ அமைப்பிற்கு 7 கணணிகள் ஒக்ரோபர் 30 2010ல் கையளிக்கப்பட்டது. லிற்றில் எயட் சிந்தனை வட்டம் சார்பில் பிஎம் புன்னியாமீன் கணணிகளை ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ முகாமையாளர் நவஜீவனிடம் கையளித்தார்.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கேசரித்த பயன்படுத்தப்பட்ட கணணிகளை லிற்றில் இலங்கைக்கு அனுப்பி சிந்தனைவட்டம் பி எம் புன்னியாமீன் ஒருங்கிணைப்பில் திருத்த வேலைகளையும் மேற்கொண்டது. இவற்றுக்கான செலவுகளை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NavaJeevan_N_and_Puniyameen_PMஇந்நிகழ்வின் மூலம் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களுக்கு கணணிகள் வழங்கும் ஒரு நீண்ட திட்டத்தை லிற்றில் எய்ட் ஆரம்பித்து வைத்துள்ளது. இத்திட்டம் முதலில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அகிலன் பவுண்டேசன் கற்பகவிநாயகர் ஆலயம் என்பனவற்றினால் நடாத்தப்படுகின்ற இல்லங்களில் உள்ள 1000 வரையான மாணவர்களுக்கு கணணி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கின்றது.

இரண்டாவது தொகுதி கணணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. லண்டனில் தங்கள் பயன்படுத்தப்பட்ட கணணிகளை வழங்க விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் தொடர்புகொண்டால் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய முடியும். கணணியின் அவசியமும் இணையத்தின் தேவையும் இன்றியமையாததாகிவிட்ட உலகில் இலங்கை குறிப்பாக வடக்கு கிழக்கு இவற்றுக்கு வெகு தொலைவிலேயே உள்ளது.

Computer_Project_30Oct10இதனை செல்வி எம் ஐ எப் நபீலாவின் ஆய்வில் இருந்தே மேற்கோள் காட்ட முடியும். ”உலக அளவில் 28.7 வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதே நேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே இணையப் பாவனையே காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட வெகுவாகக் குறைந்திருக்கலாம் ” என சப்பிரமூவா பல்கலைக்கழக மாணவி நபிலாவின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் ”செப்டம்பர் 2010இல் இலங்கையின் வட பகுதிக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் புரோட் பேண்ட் இணைய இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்பகுதிகளிலும் இணையப்பாவனை அதிகரிக்கப்படலாம் எனக் கருத இடமுண்டு” என்பதனையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அவ்வாறான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில் ”வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு கணணியையும் இணையத்தையும் அறிமுகப்படுத்துவது மற்றுமொரு உலகுடன் அவர்களை இணைக்கும்” என்கிறார் இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிவரும் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயற்குழுத் தலைவர் சொ கருணைலிங்கம். ”மக்கள் சேவையே அம்பாள் சேவை” எனக் குறிப்பிடும் சொ கருணைலிங்கம் ”எழுத்தறிவிப்பவன் இறைவன்” என்றும் ”இவ்வாறான சேவைகளை ஏனைய ஆலயங்களும் செய்து வருகின்றன. அவர்கள் இன்னமும் செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

Related Article:

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!

இதுவரை மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள்:

வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு கணணி வழங்கும் திட்டம் ஆரம்பம். – லிற்றில் எய்ட்

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
 
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
 
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
 
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
 
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
 
சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.
 
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
 
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!
 
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்
 
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
 
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
 
மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்
 
டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்
 
லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்
 
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்