November

Thursday, October 21, 2021

November

ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முடிவு

Tamil_Arangam_Met_MR_26Oct10வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன், வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள சகல மக்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்றதொரு திறமையான தலைவர் வேறு எங்கும் கிடையாது எனவும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil_Arangam_Met_MR_26Oct10தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியபோதே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் எந்தவொரு நபரையும் மீளக்குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்காது என சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றிய பின்னர் ஒழுங்கான முறையில் மக்கள் அவர்களின் இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.

Tamil_Arangam_Met_MR_26Oct10இச்சந்திப்பின்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார் எம்.பி., வீ. ஆனந்த சங்கரி, ரி. சித்தார்த்தன், எஸ். சதானந்தம், ரி. ஸ்ரீதரன், பி. குமார், கே. சிவாஜிலிங்கம், சீ. சந்திரஹாசன், எஸ். பேரின்பநாயகம், கே. சுரேந்திரன், என். குமரகுருபரன், ஏ. ராஜமாணிக்கம், கே. தயாலினி, ஜீ. ராஜ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மன்னார், முல்லை, யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் கடும்மழை

Flooding_Jaffnaயாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முப்பத்தாறு மணித்தியாலத்துக்குள் கடும் மழை பெய்யுமென யாழ். திருநெல்வேலி வானிலை ஆய்வுமையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போது தாழமுக்கம் இல்லாதபோதும் இது பருவப் பெயர்ச்சிக்கான மழை வீழ்ச்சியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று காலை முதல் குடாநாட்டிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் தொடச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது.

Flooding_Jaffnaகுடாநாட்டில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன. யாழ்ப்பாணம் மொம்மைவெளி, சூரியவெளி பண்ணை, காக்கைதீவு, இருபாலை மக்கள் வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளனர். யாழ். செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெள்ளகாரணமாக இடம்பெயர்ந்த மக்களின் நலன்களைக் கவணிக்க தகவல்களை திரட்டி வருகின்றது.

மன்னாரில் தொடரும் மழை, வெள்ளம் காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. மன்னார் நகர் பகுதியில் உள்ள வீதிகளில் வெள்ள நீர் நிறைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறிய குளங்களில் நீர் நிறைந்து பெருக்கெடுத்திருக்கின்றது.

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல் : உதயன் (யாழ்) & சுடரொளி

Front_Cover_UoJ_A_Viewயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தருக்கான இந்தத் தேர்தலில் எட்டுப்பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் பல்கலைகக்கழகக் கவுன்சில் உறுப்பினர்கள் 25 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த 25 பேரில் 12 பேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாகவும் 13 பேர் யுனிவர்சிற்றி கிரான்ட் கொமிஸனால் (University Grant Commission) நியமிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12 கவுன்சில் உறுப்பினர்களில் நால்வர் துணைவேந்தராகப் பதவிக்குப் போட்டியிடுவதால் அவர்கள் வாக்களிப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். ஆகவே கவுன்சிலின் 21 உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் முன்னுரிமை அடிப்படையில் தெரிவாகும் மூவரின் பெயர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படும். அம்மூவரில் ஒருவரை ஜனாதிபதி துணைவேந்தராக நியமனம் செய்வார்.

இத்தேர்தலில் கபொத உயர்தரத்தில் இரு பாடங்கள் மட்டுமே சித்தியடைந்த தனேந்திரன் முதல் இலங்கையிலேயே மிகச் சிறந்த கல்வித்தகமையுடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்வரை எட்டுப் பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ராஜரட்ணம் ஆகிய இருவரும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து வந்து இப்பதவிக்கு விண்ணப்பித்து உள்ளனர். ஏனைய நால்வரும் யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக நீண்ட காலம் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் பேராசிரியர் என் சண்முகலிங்கம் சென்றமுறையும் உபவேந்தராக இருந்தவர்.

உபவேந்தருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களின் தகமைகளும்:

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் – D.Sc. (Eng.) London, Ph.D. Carnegie Mellon, IEEE Fellow, Chartered Engineer
பேராசிரியர் (செல்வி) வசந்தி அரசரட்ணம் – B.Sc. Madras, MSc. , Ph.D. Jaffna
சிரேஸ்ட விரிவுரையாளர் ஆல்வாப்பிள்ளை – Faculty of Agriculture
பேராசிரியர் எஸ் சத்தியசீலன் — B.A.(Peradeniya), M.A.(Jaffna), Ph.D.(Jaffna)
பேராசிரியர் என் ஞானகுமரன் – B.A.(Kelaniya), M.A.(Jaffna), Ph.D.(India)
பேராசிரியர் என் சண்முகலிங்கன் – B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna)
ராஜரட்னம் – ( பொறியியல் பட்டதாரி.)
தனேந்திரன் – Ununion Member with 2 A/L s

இத்துணைவேந்தர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திட்டங்கள் குறித்து வாக்காளர்களுக்கு – கவுன்சில் உறுப்பினர்களுக்கு 25ஆம் திகதி விளக்கமளிக்க உள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலருக்கும் ஆங்கிலப் பரீட்சயம் காணாதபடியால் அவர்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் விளக்கமளிக்குமாறு கேட்கப்பட்டு உள்ளனர்.

ஒரு காலத்தில் கல்வித் தரத்தின் உச்சத்தில் இருந்த யாழ்ப்பாணத்தின் கல்விநிலை தற்போது மிக மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது. தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட யாழ் மாணவர்கள் இப்போது தரப்படுத்தல் இல்லாவிட்டால் பல்கலைக்கழகம் செல்ல முடியாது என்ற நிலைக்குச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் முன்னின்றவரும் அதன் முதலாவது அதிபராக இருந்தவர் பேராசிரியர் கைலாசபதி. இவர் யாழ் பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதல்தரப் பல்கலைக்கழகமாக்க கனவு கண்டார். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளது. உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 10 000மாவது இடத்திற்கு அண்மையாக உள்ளது. கொழும்புப் பல்கலைக்கழகம் முழு உலகிலும் முன்நிற்கின்ற 2000 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை யாழ்ப்பாணக் கல்வி நிலையின் வீழ்ச்சியை காட்டி நிற்கின்றன. இன்றைய உலகமயமாகி உள்ள உலகில் கல்வியே செல்வச்செழிப்பின் அடிப்படையாக உள்ளது. கல்வியை இழக்கின்ற சமூகம் பொருளாதார ரீதியாவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் பலவீனமான நிலைக்கே செல்கின்றனர். அதிலும் குறிப்பாக சிறுபான்மைச் சமூகமான தமிழர்கள் தங்கள் கல்விநிலையில் வீழ்ச்சி அடைவது மிகவும் ஆபத்தானது.

ஆகவே தமிழ் கல்விச் சமூகம் மீண்டும் தனது கல்விநிலையை முன்னைய உயர்நிலைக்கு இட்டுச்செல்ல வேண்டும். அதற்கு எமது மாணவர்களுக்கு கல்வியை ஊட்டுகின்ற ஆசிரியப் பெருந்தகைகளை உருவாக்குகின்ற பல்கழைக்கழகம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ் பல்கலைக்கழகம். அதற்கு ஏற்றாற் போல் அப்பல்கலைக்கழகம் இயங்க வேண்டும். சிறந்த கல்வித்தகமையும், நிர்வாகத் திறமையும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய அனுபவமும் உடைய ஒருவராலேயே வீழ்ச்சியடைந்துள்ள தமிழ்க் கல்விச் சமூகத்தின் கல்வியை உயர்நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்கள்:
பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கவுன்சில் உறுப்பினர்கள்:

பேராசிரியர் கெ சிவபாலன் – (Dean/Medicine), பேராசிரியர் கெ தேவராஜா – (Dean/Management Studies & Commerce), கலாநிதி திருமதி சிவச்சந்திரன் – (Dean/Agriculture), பேராசிரியர் கந்தசாமி – (Dean/ Science), பேராசிரியர் கெ குகபாலன் – (Rep of Senate), கலாநிதி மங்களேஸ்வரன் (Dean/Business Studies, Vavuniya Campus), திரு எஸ் குகனேசன் (Dean/Applied Science, Vavuniya Campus), திரு ஆர் நந்தகுமார் – (Rector/Vavuniya Campus)

பல்கலைக்கழகத்தைச் சாராத University Grand Commission ஆல் நியமிக்கப்பட்ட செனட்சபை உறுப்பினர்கள்:

திரு கெ கணேஸ் (முன்னாள் யாழ் அரசாங்க அதிபர்.), அருட்தந்தை கலாநிதி ஜஸ்ரின் பி ஞானப்பிரகாசம் (அடுத்த யாழ் பிஸப் ஆகக் கருதப்படுபவர்.), திரு கெ கேசவன் (பிரபலமான சட்டத்தரணி – சென் பற்றிக்ஸ் பழைய மாணவர்.), திரு ஏ திருமுருகன் (தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர், சைவ மற்றும் சமூக வேகைகளில் ஈடுபட்டு உள்ளவர்.), திரு ஏ தியாகராஜா (பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் இரசாயனப் பொறியியலாளராக இருந்தவர்.), திரு ரி ராஜரட்ணம் (கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் உப அதிபராக இருந்தவர். பின்னர் SLIATE (Sri Lanka Institute for Advanced Technical Education) என்ற தொழில்நுட்பக் கல்லூரியை உருவாக்கியவர்.), இன்ஜினியர் எம் ராமதாசன் (Euroville Engineers and Constructors (PVT) Ltd இன் முகாமைத்துவ இயக்குநர்.), திருமதி என் குணபாலசிங்கம் (யாழ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை.), திரு கெ தேவேந்திரன் (Jaffna Multi Purpose Cooperative Society – MPCSக்கு பொறுப்பானவர்.), திருமதி சரோஜா சிவச்சந்திரன் (மிகவும் அறியப்பட்ட பெண்ணிலைவாதி. சர்வதேச அரங்குகளில் பேச்சாளராக அழைக்கப்பட்டவர். இலங்கைத் தேசிய சமாதான கவுன்சிலின் உறுப்பினர்.) திரு எம் சிறிபதி (பாடசாலை அதிபர்), சுசிலா சாரங்கபாணி (ஓய்வுபெற்ற ஆசிரியை. சமாதான நீதவான்), டொக்டர் எஸ் ரவிராஜ் (யாழ் போதனா வைத்தியசாலை சிரேஸ்ட சத்திரசிகிச்சை மருத்துவர்)

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு தகுதி வாய்ந்த ஒருவரை நிர்ணயிக்கின்ற பொறுப்பை தமிழ் கல்விச் சமூகத்தின் சார்பில் மேலுள்ள 21 பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்கள் மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் தமிழ் கல்விச் சமூகத்தின் எதிர்காலத்தை மட்டும் முன்நிறுத்தி, தங்கள் வாக்குகளை மிகப்பொறுப்புடன் வழங்கி, தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடமாய் உள்ள யாழ் பல்கலைக்கழகத்துக்கு மிகச் சிறந்த கல்வி ஆளுமையும் நிர்வாக ஆளுமையும் பரந்த அனுபவமும் உடைய ஒருவரை உபவேந்தராகத் தெரிவு செய்ய வழிசெய்ய வேண்டும். தமிழ் கல்விச் சமூகம் மீண்டும் தளைத்தோங்க வழியேற்படும் என நம்புவோம்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா இன்று இலங்கைப் பிரதமரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஸ்ணா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ணவையும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்திக்கின்றார். தொடர்ந்து இன்று பகல் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

நான்கு நாட்கள் விஜயமாக நேற்று வியாழக்கிழமை மாலை 4.40 மணியளவில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் உட்பட இருபது பேர் கொண்ட குழுவினரும் அடங்குகின்றனர்.

நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அமைச்சர் இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள ஐம்பதினாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு அதற்கான அடிக்கல்லையும் நாட்டி வைப்பார். அத்துடன் யாழ்.நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தையும் அவர் திறந்து வைப்பார்.

மேலும், அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து பலவிடயங்கள் குறித்து கலந்துரையாவுள்ளார். இதில் தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சாட்சியம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சாட்சியமளித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக அவர் சாட்சியமளித்தார்.

தான் 2007ஆம் ஆண்டு மட்டக்களப்பு அரசாங்க அதிபராக கடமையைப் பொறுப்பேற்றதாகவும், அதிலிருந்து போர்க்கால சிக்கல்களால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது திருகோணமலை மாவட்ட மக்கள் இடம்பெயர்ந்து வாகரைக்கு வந்தமை, அதனையடுத்து வாகரை மக்களும் இடம்பெயர்ந்தமை, அம்மக்களுக்கு அரசாங்கத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட உதவிகள், கிழக்கில் யுத்தத்தின் பின்னான மீள்குடியமர்வு, புனர்வாழ்வு நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் குறித்து அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையிலீடுபட்ட மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக செயற்பாடுகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவன் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஸ்ட மாணவர்கள் மூவருக்கு பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளைத தொடர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சிரேஸ்ட மாணவர்களால் பகிடிவதைக்குட்படுத்தப்பட்டு கடும் தாக்குதல்களுக்குள்ளான நிலையில் கலைப்பீட முதலாம் வருட மாணவனான ராஜேஸ்கண்ணா என்பவர் கூடுதலான பனடோல் வில்லைகளை உட்கொண்டதால் யாழ்.பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட மூன்று மாணவர்களே இவ்வாறு பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பல்கலைக்கழக நிர்வாகம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

——————————————

Nov 25, 2010.
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை நடைபெறுவதில்லை என மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தெரிவிப்பு.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் பகிடி வதை தடைசெய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதில்லை எனவும் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் சிறு சிறு முரண்பாடுகள் காரணமாக சில மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வன்னியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்டமை குறித்து அவர் குறிப்பிடுகையில் மாணவர்கள் மத்தியில் எவ்வித பாகுபாடுகளும் இல்லை எனவும், அவர்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதாகவும் ஆனால். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் ஒன்றாக தங்கியிருப்பதன் காரணமாக சில சமயங்கள் முரண்பாடுகள் எற்பட்டு அவை மோதல்களில் முடிவடைகின்றதாகவும், அண்மையில் இடம்பெற்ற சம்பவமும் இவ்வாறானதே எனவும் அவர் தெரிவித்தார்.

http://thesamnet.co.uk/?p=23431
——————————————-

NOV 24, 2010
யாழ். பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்க துணைவேந்தர் மறுப்பு.
Shanmugalingam_N_UoJகடந்த திங்கள் கிழமை யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் ஒருவர் சிரேஸ்ட மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட விடயம் குறித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்கம் கேட்கச் சென்ற யாழ். ஊடகவியலாளர்களை துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!

துணைவேந்தர் வேலைப்பழுவுடன் இருப்பதால் அவரைச் சந்திக்க முடியாது என தணைவேந்தரின் செயலர் தெரிவித்து ஊடகவியலார்களை திருப்பியனுப்பியதாகவும், எவ்வளவு முயற்சி செய்தும் துணைவேந்தர் என்.சண்முகலிங்கனை சந்திக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவன் தடிகளாலும் கை கால்களாலும் சிரேஸ்ட மாணவர் குழுவொன்றினால் மாறி மாறித் தாக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும், தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெயர்களையும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://thesamnet.co.uk/?p=23415
——————————
Nov 23, 2010
தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!
Univercity_of_Jaffnaயாழ். பல்கலைக் கழகத்தில் சிரேஸ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உட்பட்டதாகக் கூறப்படும் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்ட நிலையில் யாழ். போதனா வைததிய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். பல்கலைக்கழக விடுதியில் வசிக்கும் கலைப்பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவனாகிய எஸ்.ராஜேஸ் கண்ணா (வயது 23)என்பவருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன் பாடசாலை அதிபர் மாணவர்களை ஏசியதால் நான்கு மாணவிகள் நஞ்சருந்திய சம்பவம் ஒன்று வலிகாமம் பாடசாலை ஒன்றில் நிகழ்ந்தது அறிந்ததே. (பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி.)மேலும் பல்கலைக்கழக மாணவிகள் மத்தியில் தற்கொலை வீதம் அதிகமாக உள்ளதாகவும் அதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரின் பாலியல் துஸ்பிரயொகங்கள் காரணமாக இருப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்)

நேற்று திங்கள் கிழமை மாலை எஸ்.ராஜேஸ் கண்ணா தங்கியிருந்த பாலசிங்கம் விடுதியில் வைத்து மூன்று மாணவர்கள் இவரைத் தாக்கியுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது தாக்குலை மேற்கொண்ட மாணவர்கள் இவரை பகிடிவதை செய்யும் நோக்கத்துடன் தாக்கவில்லை எனவும், குறித்த மாணவர் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் அதனால் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சையளிக்க உரிய மருந்து இல்லாததால் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊடாக கொழும்பிலிருந்து அம்மருந்தினைப் பெற ஏற்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

http://thesamnet.co.uk/?p=23400

யாழ்.நகரில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி.

நேற்று வியாழக்கிழமை யாழ்நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பெண்ணொருவர் உயிரிழந்தார். யாழ்.காங்கேசன்துறை வீதியில் ‘எல்வ்’ ரக வாகனத்துடன் மோதுண்டு தலை வாகனத்தின் சில்லினால் நசிக்கப்பட்ட நிலையில் அவர் பலியானார்.

நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியைச் சேர்ந்த பத்திநாதன் யோகா (வயது 34) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

சனநெரிசல் மிக்க காங்கேசன்துறை வீதியில் குறித்த வாகனம் வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனச் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனமும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் படையினர் உசார் நிலையில்.

நாளை சனிக்கிழமை 27ஆம் திகதி விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் என்பதால் வடக்கில் படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. குறிப்பாக கிளிநொச்சியில் பொதுமக்களுக்கும், நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கும் படையினராலும், புலனாய்வுப் பிரவினராலும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த தினத்தில் பொதுமக்கள் ஏதாவது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனரா எனவும் அவதானிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 21 ஆம் திகதி கார்த்திகை விளக்கீடு தினத்தன்று வீடுகளின் முன்பாக விளக்கேற்றிய பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களை சில இடங்களில் படையினர் மிரட்டிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. கார்த்திகை விளக்கீடு குறித்து பொதுமக்கள் படையினருக்கு விளக்கியதும் பின்னர் அவர்கள் சென்று விட்டனர்.

இதேவேளை, குடாநாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிகை அலுவலங்கங்களுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் புலிகளின் மாவீரர் நாள் தொடர்பாக செய்திகள வெளிடக்கூடாது என மிரட்டல் விடுக்கும் கடிதங்களை கொடுத்து விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துப் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதாகவும், அந்நிலையை குழப்ப முயற்சிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு குழப்ப முயற்சித்தால் பத்திரிகை அலுவலகம் கொழுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளைகளை மூடும்படி அரசாங்கம் உத்தரவிடவில்லையாம்.

வடக்கிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் கிளைகளை மூடும்படி அரசாங்கம் உத்தரவிடவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வவுனியா, ஆகிய இடங்களிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளைகளை மூடுமாறு அரசாங்கம் கோரியுள்ளதாகவும், மன்னாரிலுள்ள கிளை மூடப்பட்டு விட்டதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரவித்தார். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பிரசன்னம் அவசியமானதுதானா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதில் சிறுபான்மை மக்களும் பூரண பங்களிப்பு வழங்கவேண்டும் – கெஹலிய

kahiliya.jpgஅரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதில் சிறுபான்மை மக்களும் பூரண பங்களிப்பு வழங்கவேண்டுமென தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதென நாம் ஓய்ந்துவிட முடியாது. சர்வதேச நாடுகளில் அதன் செயற்பாடுகள் துடிப்புடன் இடம்பெறுகின்றன. ஜனநாயகத்தின் காவலர்கள் என்று கூறப்படும் நாடுகளே அதற்கு ஒத்துழைப்பை வழங்குகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் ரம்புக்வெல்ல நேற்று தமது அமைச்சில் தமது கடமையைப் பொறுப்பேற்ற பின் ஊடக அமைச்சு, மற்றும் தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றினார். இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், புலிகளின் முக்கியஸ்தரான ருத்ரகுமாரைப் பிரதமராகக் கொண்ட நாடுகடந்த அரசாங்கம் அண்மையில் அமைக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. அதேபோன்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த தமிழ்ச் செல்வனுக்கு பிரான்ஸில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் அந்நாட்டின் பிராந்திய ஆளுநர் ஒருவரே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுள்ளார்.

அரசாங்கம் எத்தகைய தீர்மானங்களை எடுத்த போதும் அதனை சில மணித்தியாலங்களுக்குள் மாற்றவேண்டிய நிர்ப்பந்தத்தை எங்கோ பதுங்கு குழிக்குள் இருந்த ஒரு தனி மனிதன் ஏற்படுத்திய யுகம் ஒன்றை மறந்துவிட முடியாது.

இன்றும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்ட போதும் புலிகள் அரசாங்கம் அமைத்து தம்மை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் இடம்பெறுகின்றன. அதனை சில சர்வதேச நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ள நிலையையும் காணமுடிகிறது.

இந்நிலையில் தனித்துவமும் இறைமையும் உள்ள நாடு என்ற வகையில் நாம் பெற்ற சுதந்திரத்தையும் உரிமையையும் இலங்கையர் என்ற அடையாளத்தையும் பாதுகாப்பதில் நாம் முன்னிற்க வேண்டும். அதற்கு ஊடகத் தகவல் துறை அமைச்சின் பங்களிப்பு மிக விசாலமானது என்பதை உணர்ந்து செயற்படவேண்டும எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.