2020

2020

சாதி ஒழிப்புக்காக கவி பாடிய மகாகவி பாரதியாரின் 138வது பிறந்ததின நினைவுநாள் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு !

இந்தியாவின் புரட்சிக்கவிஞரும் கவிதை மொழிநடையில் தமிழ்நாட்டில் சமூக மாற்றத்துக்காக பாடுபட்டவருமான மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில்  இன்று இடம்பெற்றுள்ளது.

யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள பாரதியார் நினைவுச் சிலை அடியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பாரதியார் நினைவுச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னால்ட், மாவை.சேனாதிராஜா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அபிவிருத்தி என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டமே வடக்கில் இடம்பெறுகின்றது” – பாராளுமன்றில் த.சித்தார்த்தன் !

“அபிவிருத்தி என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டமே வடக்கில் இடம்பெறுகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம்(11.12.2020) கருத்து  தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அபிவிருத்தி என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டமே வடக்கில் இடம்பெறுகின்றது. அதிலும் தற்போது கோப்பாய் பிரதேச சபைக்கு கீழ் இருக்கும் அம்மன் வீதி, இதனை அமைப்பதற்காக வீதி அதிகார சபையினூடாக அரசு அடிக்கல் நாட்டியிருந்தது. அத்துடன் பெயர்ப்பலகை ஒன்றையும் வைத்திருந்தார்கள். குறித்த வீதி வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குக் கீழ் இருப்பதால் அது தொடர்பான அனுமதியை பிரதேச சபையிடம் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு இடம்பெறாததால் பெயர்ப்பலகையை பிரதேச சபை நீக்கியிருந்தது. அது பாரிய பிரச்சினையாக மாறியது.

பிரதேச சபை தவிசாளரைக் கைதுசெய்ய காவற்துறையினர் முயற்சி செய்தனர். இதையடுத்து நீதிமன்றம் தவிசாளருக்கு முன் பிணை வழங்கியுள்ளது. இந்த விடயமானது மத்திய அரசு, பிரதேச சபையின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும்.

கடந்த அரசு கம்பரெலிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும்போது பிரதேச சபைகள் ஊடாகவே அதனை முன்னெடுத்தது. வடக்கில் தொழில் இல்லாத பிரச்சினை இருக்கின்றது. இளைஞர்களுக்குத் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முதலீட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

எமது மக்கள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு வந்து வாழ விருப்பம் தெரிவித்திருக்கின்றபோதும், அந்த வசதிகள் அங்கு இல்லாமல் இருக்கின்றன.

அதே போன்று வீடமைப்புத் திட்டத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் பல இன்னும் பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. அவற்றையும் பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், வடக்கில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர்கள் இருக்கின்றனர்.

அரசின் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்களின் போது வெளிநாட்டுப் பட்டதாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாகவும் கவனம் செலுத்தி அந்தப் பட்டதாரிகளையும் அரசு வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கும் தொழில் வாய்ப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும்”  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மனிதனை செவ்வாய்க்கு அழைத்துச்செல்லும் கனவுத்திட்டம் – வெடித்துச் சிதறியது ஸ்டார்ஷிப் !

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிரமாண்ட ரொக்கெட்டான ஸ்டார்ஷிப் பரிசோதனைக்குப் பிறகு கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

அமெரிக்காவில் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சோதனை விண்கலத்துடன் கூடிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.

யார் இந்த எலன் மஸ்க்? - 21st Century Innovator | Biography | Success Story  | Elon Musk Biography in Tamil - Tech Tamilan

ஆனால் தனது சில நிமிட பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்புகையில், இந்த ரொக்கெட் தொழில்நுட்ப கோளாறில் வெடித்து தீப்பிழம்புகளுடன் கீழே விழுந்து எரிந்தது. இது செவ்வாய் கிரகத்துக்கு மக்களை அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எலான் மாஸ்க்கின் கனவு திட்டத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

உலகில் யானைகளின் மரணம் அதிகளவில் இடம்பெறும் நாடாக இலங்கை பதிவு !

யானைக்கும் மனிதனுக்கும் இடையில் இடம்பெறும் மோதல் காரணமாக, உலகில் யானைகளின் மரணம் அதிகளவில் இடம்பெறும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச கணக்குகள் பற்றிய தெரிவுக்குழுவில் இ்ந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேநேரம், யானை – மனித மோதல் காரணமாக உலகில் அதிகளவான மனித மரணங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் பதிவாகியுள்ளது. யானை – மனித மோதல் காரணமாக உலகில் அதிகமான மனிதர்களின் மரணம் இடம்பெறும் முதலாவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யானை மனித மோதல் காரணமாக வருடமொன்றுக்கு 272 யானைகள் மரணிகின்ற நிலையில், கடந்த வருடம் 407 யானைகள் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் வருடமொன்றுக்கு 85 மனிதர்கள் மரணிக்கின்ற நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 60 ஆண்டு காலமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், அதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதே தவிர, தீர்வு நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதிய முயற்சிகள் ஊடாக அதற்கு தீர்வைக் காணவேண்டும் என அரசு கணக்குகள் தொடர்பான குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு 3 வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரச கணக்குகள் தொடர்பான குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

“விவசாயதுறை சார் நடவடிக்கைளுக்கு இளைஞர்கள் ஈர்க்கப்பட வேண்டும்” – தனியார்துறை தொழில் முயற்சியாளர்களுடனான கூட்டத்தில் ஜனாதிபதி !

“விவசாயதுறை சார் நடவடிக்கைளுக்கு இளைஞர்கள் ஈர்க்கப்பட வேண்டும்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (10.12.2020) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் தனியார்துறை தொழில் முயற்சியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கொண்டு வருவதே தனது நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி , இந்த முயற்சிக்கு உதவும் நடவடிக்கைகளை கொண்டு வருமாறும், அதற்கான தடைகளை அடையாளம் காணுமாறும் தனியார் துறைக்கு முன்மொழிந்துள்ளார்.

குறிப்பாக கோவிட் 19 பரவலின் காரணமாக முடங்கியிருக்கும் பொருளாதாரத்திற்கு புத்துயிரளித்து நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்டு தனியார் தொழில்முயற்சியாளர்களை குழுக்களாக சந்திக்க ஜனாதிபதி அவர்கள் அண்மையில் முடிவு செய்தார்.

நேற்றைய சந்திப்பு இரண்டாவது குழுவுடன் இடம்பெற்றது. சுற்றுலா, கட்டிடம் மற்றும் வீதி நிர்மாணம், தொடர்பாடல் தொழில்நுட்பம், ஹோட்டல் வணிகம், மூலிகை உற்பத்தி, கால்நடைகள், பசும்பால், உப்பு உற்பத்தி, விவசாய உட்பத்திகள், சிறு ஏற்றுமதி பயிர்கள், சேதன பயிர்ச்செய்கை போன்ற துறைகளில் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

ஒரு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி அவர்களின் உறுதியான மற்றும் முறையான கொள்கைகளை தொழில்முயற்சியாளர்கள் பாராட்டியதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு 2021 வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களையும் பெரிதும் பாராட்டினர்.

தங்கள் வணிகத் துறைகளின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்த அவர்கள், தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவரித்தனர். பயிற்றப்பட்ட மனிதவளத்தின் பற்றாக்குறை, நிறுவன திறமையின்மை, கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை, சில தொழிலாளர்களின் அலட்சியம் மற்றும் புதிய சந்தைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஆகியவை அவர்கள் குறிப்பிட்ட முக்கிய பிரச்சினைகளில் அடங்கும்.

“சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் உயர் பொருளாதார சக்தியைப் பெற்றுக்கொடுப்பது முதன்மை தேவையாகும். எமது நாட்டின் மக்கள் தொகையில் 35% விவசாயிகள். விவசாயம் 70% மக்களின் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. இந்தத் துறையின் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் இளைஞர்கள் அதில் ஈர்க்கப்பட வேண்டும்.எல்லாவற்றையும் இறக்குமதி செய்து விற்பனை செய்வது எளிதானது. நாம் அவ்வாறு செய்தால் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியாது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். இதற்கு தனியார் துறையின் பங்களிப்பு மற்றும் புதிய அணுகுமுறைகள் மிக முக்கியமாகும்”  என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி தொழில்முயற்சியாளர்களிடம் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹட்டால ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

“கடந்த நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கி வரவு செலவு திட்டத்தின்போது பணத்தை பெற்றுக்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்  மக்களை கைவிட்டுவிட்டீர்கள்” – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சார்ள்ஸ் நிர்மலாநாதனுக்கு பதில் !

“கடந்த நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கி வரவு செலவு திட்டத்தின்போது பணத்தை பெற்றுக்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்  மக்களை கைவிட்டுவிட்டீர்கள்” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க “தமிழ் மக்களுக்கு தேவையானது மூன்று வேளை உணவும் சுதந்திரமுமே எனக்குறிப்பிட்டிருந்தார். இதனை குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்நிர்மலநாதன் நேற்றையதினம் பிரசன்ன ரணதுங்க மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் போதேபிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.

“என்னுடைய உரையை முழுமையாக கேட்டிருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். நான் மூன்று வேளை உணவு இருந்தால் போதுமென்று கூறவில்லை. அத்துடன் மேல்மாகாண சபையில் அமைச்சராக நான் இருக்கும் போது யுத்தம் முடிவடைந்த காலத்தில் மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களையும் வடக்கிற்கு நாங்கள் அனுப்பிவைத்தோம்.

மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைவாக நாம் அதனை முன்னெடுத்தோம். ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் அவர்களுக்கு ஆதரவாக செயற்ப்பட்டு தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியவில்லை.

கடந்த காலத்தில் ஒவ்வொருவரும் பணத்தை பெற்றுக்கொண்டு, வரவு செலவு திட்டத்தின்போது பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை கைவிட்டீர்கள். நாங்கம் தமிழ் மக்கள் சார்பாகவே பேசுகின்றோம்” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது நாளாகவும் தொடரும் மெனிங் சந்தை வர்த்தகர்களின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் !

பேலியகொட மெனிங் சந்தை வர்த்தகர்கள் இரண்டாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பேலியகொட மெனிங் சந்தையின் வியாபாரிகளுக்கு சொந்தமான கடைத் தொகுதிகளை உரிய முறையில் வழங்குமாறு கோரியே, கொழும்பு- கோட்டையில் நேற்று(10.12.2020) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனாலும், நேற்று பிற்பகல் வரை குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்வைக்காதமையினால் அவர்கள், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தினை தற்போது முன்னெடுத்துள்ளனர்.

எமது பிரச்சினைகளுக்கு அதற்கு பொறுப்பான அமைச்சர்  கலந்துரையாட தவறினால், நாடு முழுவதும் உள்ள பொருளாதார மையங்கள், குறித்த உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக மெனிங் சந்தை வணிக சமூகத்தின் பொருளாளர் நிமல் அத்தநாயக்க கூறியுள்ளதாவது, ‘நாங்கள் தெருக்களில் இருப்பவர்கள் அல்ல.மேலும் எங்களது மெனிங் சந்தையை கோட்டையில் விரைவில் திறக்குமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம்.

நாங்கள் மகிழ்ச்சியுடன் மூன்றரை ஏக்கரில் வர்த்தகம் செய்தோம். ஆனால் நீங்கள் 13ஏக்கர் பெட்டிக் கடையை கட்டி, எங்களுக்கு ஒரு சிறிய பெட்டிக் கடையைத் தருவீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஊழல் ஒழிப்பு தினதில் அறிக்கை விடுவதால் நாட்டின் ஊழல் ஒழிந்துவிடப்போவதில்லை, ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே சிறந்த ஆட்சி” – அனுரகுமார திசாநாயக

“ஊழல் ஒழிப்பு தினதில் அறிக்கை விடுவதால் நாட்டின் ஊழல் ஒழிந்துவிடப்போவதில்லை, ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே சிறந்த ஆட்சி” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்துள்ளார்.

சீனிக்கான இறக்குமதி வரியை 25 சதமாக குறைத்த காரணத்தினால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 450 கோடி ரூபா வரி அரசாங்கத்திற்கு இல்லாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10.12.2020) 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதி அமைச்சு மற்றம் நிதி இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்,

திசாநாயக பாராளுமன்றத்தில் மேலும் கூறுகையில்,

“கடந்த மே 23 ஆம் திகதி 33 ரூபாவாக இருந்த சீனிக்கான  இறக்குமதி வரி விலையானது தற்போது  50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. சட்டவிரோத மதுபான தயாரிப்புக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுவதாலும், மக்களிடையே சீனி பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் இந்த வரி அதிகரிப்பை மேற்கொண்டதாக அரசாங்கம் கூறியது. அதேபோன்று அதிகரித்து செல்லும் இறக்குமதி செலவை குறைக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி சீனிக்கான வரியை 25 சதம் வரையில் குறைக்க நடவடிக்கையெடுத்தது. ஏன் இந்தளவுக்கு குறைக்கப்பட்டது. சகல பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்பட்டிருக்கையில் சீனிக்கான வரியை மாத்திரம் எப்படி குறைத்தது. அப்போது முதல் 85 ரூபாவுக்கே சீனி சந்தையில் விற்கப்படும் என்று கூறப்பட்டது.

நுகர்வோர் அதிகாரசபையினர் அதிகரிக்கப்பட்டிருந்த போது கொண்டு வரப்பட்ட சீனியின் அளவின் இருப்பை ஆராய்ந்தனர். 90,000 மெற்றிக்தொன் களஞ்சியத்தில் இருந்தது. இதனால் அங்கு சிக்கல் ஏற்பட்டது. எங்கேயும் அந்த விலைக்கு சீனியை கொடுக்க முடியாது போனது. பின்னர் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த வரியை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனபோதும் குறைக்கப்பட்ட வரியை ஒரு மாதம் வரையில் மாற்ற முடியாது என்பதால் அந்த ஒரு மாதக் காலத்திற்குள் 25 சத வரியுடன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது இந்த விடயத்தில் எப்படி கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது.

அதேபோல்  2020 டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவை நிறுத்துமாறு நிதி அமைச்சின் செயலாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தின் ஊடாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவே. கடந்த ஆட்சியில் அலகொன்றை  26 ரூபாவுக்கு என்ற அடிப்படையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய முயற்சித்த போதும் அதனை அந்த ஆணைக்குழு நிறுத்தியது.

இதன்படி அது மக்களுக்காக செயற்படும் ஆணைக்குழுவாக இருக்கின்றது. இதனை எப்படி மூடுவதற்கு உத்தரவிட முடியும். தொலைபேசி மூலம் அறிவித்து அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களை விலகுமாறு கோரியுள்ளனர். இவர்களை நீக்க வேண்டுமாயின் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு இருந்தால் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்து அதனை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளாலேயே அவர்களை நீக்க முடியும். இந்த ஆணைக்குழுவை இல்லாமல் செய்யும் முயற்சியும் மெகாவோட் 300க்கான மின் உற்பத்தி நிலையத்தின் கொடுக்கல் வாங்களின் ஒரு அங்கமேயாகும்,

நேற்றிய தினத்தில் (09.12.2020) ஊழல் ஒழிப்பு தினத்தில் ஜனாதிபதி கருத்தொன்றை முன்வைத்திருந்தார், இந்த நாட்டில் மக்கள் ஊழலை தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்றார், ஊழலுக்கு துணை போய்க்கொண்டு, ஊழல் வாதிகளை காப்பற்றிக்கொண்டு, ஊழல் வாதிகளுக்கு எதிரான தீர்ப்புகளில் ஜனாதிபதி தலையிட்டுக்கொண்டு, ஊழலுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கூறுகின்றார். ஊழல் ஒழிப்பு தினதில் அறிக்கை விடுவதால் நாட்டின் ஊழல் ஒழிந்துவிடப்போவதில்லை, மாறாக ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே சிறந்த ஆட்சி முறையாகும் எனவும் அவர் கூறினார்.

“ஒரு சிலர் உங்களுக்காக வாலாட்டுவார்கள்.உண்மையான தமிழர்கள் ‘தமிழன்’ என்ற அடையாளத்துடன் வாழவே விரும்புகின்றனர்” – பாராளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன் !

“ஒரு சிலர் உங்களுக்காக வாலாட்டுவார்கள்.உண்மையான தமிழர்கள் ‘தமிழன்’ என்ற அடையாளத்துடன் வாழவே விரும்புகின்றனர்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (10.12.2020) பாராளுமன்ற அமர்வில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தெரிவித்ததாவது,

“போர் முடிவுற்றபோது சரணடைந்த விடுதலைப்புலி போராளிகளைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்திருந்தீர்கள். அந்த நேரம் அவர்களுக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்றும் சிறையில் உள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்பில் பிரதமரை நேரில் சந்தித்து எழுத்து மூலமாகக் கடிதமொன்றை கொடுத்திருந்தோம். எனவே, பிரதமர் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வடக்கு மக்களுக்கு மூன்று வேளை உணவே போதுமானது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தார். இந்தக் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஒரு சிலர் உங்களுக்கு ஆதரவாக வாலாட்டுவார்களே தவிர, உண்மையான தமிழர்கள் ‘தமிழன்’ என்ற அடையாளத்துடன் வாழவே விரும்புகின்றனர் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேபோல் அமைச்சர் சரத் வீரசேகரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனக்  கூறியிருந்தார். இது அவரது தனிப்பட்ட கருத்தா? அல்லது அரசின் நிலைப்பாடா? எனப் பிரதமர் அறிவிக்க வேண்டும்.

மன்னார் – வங்காலை இராணுவச் சோதனை சாவடிப் பகுதியில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் தாக்கியுள்ளனர். முகக்கவசம் அணியவில்லை, அடையாள அட்டை இல்லை எனக் கூறித் தாக்கியுள்ளனர். எமது மக்களைத் தாக்க வேண்டும் என்ற அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? இந்த ஆட்சியில்தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் தடுப்பூசி போட்ட இருவருக்கு ஒவ்வாமை !

பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த பிரித்தானியா அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கியது.
இந்நிலையில் முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு மாற்று மருந்து கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
ஒருசில மருந்துகள், உணவுகள் மற்றும் தடுப்பூசிகளால் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் நபர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்றும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியால் அலர்ஜி ஏற்பட்ட 2 சுகாதார பணியாளர்களுக்கும், ஏற்கனவே அலர்ஜி பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.