July

July

இலங்கையின் மழையுடனான வானிலை தொடர்ந்தும் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்றைய தினம் மாலையிலிருந்து அடுத்த சில தினங்களுக்கு நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை தொடர்ந்து  அதிகரித்து காணப்படும்  என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இவற்றோடு சேர்த்து  மேலும் சில  இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் இப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் கவனத்தில்கொள்ளத்தக்கது.

ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்ப்புகைத்தாக்குதல்.

உலக அளவில் அதிகரித்து வரக்கூடிய கொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேலைக்காக சென்றிருந்த இலட்சக்கணக்கானோர் தங்களுடைய வேலை வாய்ப்புகளை இழந்து தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பி ய வண்ணம் உள்ளனர். மேலும் வேலைவாய்ப்பினை இழந்துகொண்டோர் தாங்கள் பணியாற்றும் நாடுகளில் வேலை வாய்ப்பினை பெற போராட்டங்களிலும் ஈடுபட்டு வருவதனை அவதானிக்ககூடியதாகவுள்ளது. இதனுடைய ஒரு பிரதிபலிப்பாக ஜோர்தானில் வேலை வாய்ப்பை இழந்த இலங்கையர் குழுவினரால் ஏற்பட்டுக் கொண்ட பதட்டமான நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அந்நாட்டு பொலிஸாரினால் இலங்கையர் மீது கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக  ஜோர்தான் நாட்டினுடைய அல்காரா பகுதியில் உள்ள கைத்தொழில்பேட்டை ஒன்றில் பணியாற்றிய இலங்கையர்களினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அப்பகுதி பொலிசாரினால் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜோர்தான் நாட்டினுடைய அல்காரா அப்பகுதியில் பணியாற்றி இருந்த இந்ததொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக தங்களுடைய வேலைவாய்ப்பினை இழந்திருந்த நிலையில் அவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிய வந்ததை அடுத்து ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் நேற்றைய தினம் அதாவது [27 ஆம் திகதி ] தொழில்பேட்டை அமைந்துள்ள பகுதிக்கு விசாரணை செய்வதற்காக விஜயம் செய்துள்ளனர். இதன்போது போராட்டக்காரர்கள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியற்ற  முறையில் நடந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்றதான தொழில் வாய்ப்புக்களை இழந்தவர்களினுடைய போராட்டங்கள் அண்மைய காலங்களில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்தல் காலத்தில் மட்டும் உரிமை பேசும் தமிழ் தேசியத் தரப்புகள் – டக்ளஸ் காட்டம்

உரிமை என்ற சொல்லை தமிழ் தேசியவாதம் பேசும் தரப்புகள் தேர்தல் காலத்தில் மட்டும் தான்
பயன்படுத்துகின்றார்களே தவிர ஏனைய காலங்களில் அந்த சொல்லை மறந்துவிடுகின்றார்கள்.
என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில்
கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நான் கட்சியின் நலனுக்கு அப்பால் மக்களது நலன்களையும் மேம்பாடுகளையுமே முக்கியமானதாகக்
கருதுகின்றேன். நாம் எனது மக்களுக்காக கடந்த காலங்களில் அரசுகளுடன் இணக்க அரசியலை
முன்னெடுத்து அதனூடாகப் பலவற்றை செயற்படுத்திக் காட்டியுள்ளோம்.

ஆனால் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டவுடன் எந்தவிடயத்தை கையில் எடுத்து தேர்தலில் வெற்றி
பெறலாம் என்ற நோக்குடன் செயற்படும் இதர தமிழ் தரப்பினர் தமது தேர்தல் வெற்றிக்காக பொய்
வாக்குறுதிகளை மட்டுமன்றி நடைமுறைசாரா கருத்துக்களையும் வெளியிட்டு மக்களை ஏமாற்றி
வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது உரிமை என்ற சொல்லை பயன்படுத்திக் கொள்ளும் இவர்கள் தமது தேர்தல் வெற்றியை
இலக்காக கொண்டு மட்டும்தான் அதனையும் முன்னிறுத்திவருகின்றனர்.

அத்துடன் இது அவர்களின் தேர்தல் கால உச்சரிப்பு மட்டுமே அல்லாமல் தேர்தல் முடிந்ததன்
பிற்பாடான காலப்பகுதியில் முன்னெடுக்கும் செயற்பாடாகவும் இருக்கப்போவதில்லை.
கடந்தகாலங்களில் இத்தகையவர்களுக்கு வாக்களித்து தோல்வி கண்ட தமிழ் மக்கள் இனியும் அவ்வாறு
ஏமாற்றமடைய மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

அந்தவகையில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை தெமிழ் மக்கள் தமது எதிர்காலத்திற்காக
கிடைக்கும் மிகப்பெரும் சந்தர்ப்பமாக கருதி பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு மக்களை
அவர்களது அபிலாஷைகளுடன் அமைதியாக வாழ வழிவகை செய்யப் போராடிக்கொண்டிருக்கும் எமது
வீணைச் சின்னத்துக்கு ஆதரவை வழங்கி வெற்றிபெறச் செய்து அனைத்தையும் வெற்றிகொள்ளுங்கள்
என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மானின் சர்ச்சைக் கருத்து: மனு இரத்து

கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில், அவரைக் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கருணா, ‘ஆனையிறவில் ஓர் இரவில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவச் சிப்பாய்களைக் கொன்றோம்’ என்று ஒரு வாக்குமூலத்தை தன்வாயாலேயே வழங்கியிருந்தார்.

தென்னிலங்கையில் இந்த கருத்து பரபரப்பையும் சிங்கள மக்களிடையே கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
கருணாவைக் கைது செய்யவேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் வலுத்தன. தேரர்களும் கருணாவின் கருத்துக் கண்டனம் தெரிவித்ததுடன் அவரைக் கைதுசெய்யும் படியாக வலியுறுத்தினர். இந்த நிலையில் கருணா தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில், அவரைக் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் விசாரணைகள் இன்றி மனு இரத்துச் செய்யப்பட்டது.

நல்லூருக்கு இம்முறை 300பேருக்கே அனுமதி!

புகழ்பெற்ற நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கு இவ்வருடம் 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.
அங்கப்பிரதஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நல்லூர் திருவிழாவில் 500க்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலி

யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அருகாமையில் ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (20.07) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இந்த மாடுகள் உயிரிழந்துள்ளன.

இருந்தும் மாடுகளுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லையென சாவகச்சேரி பிரதேச சபையின் வெளிக்கள மேற்பார்வை உத்தியோகத்தர் கைலாயபிள்ளை சிவநேசன் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.