August

Thursday, September 23, 2021

August

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் ?

நிபந்தனைகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சி நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்படுவதே ஒரு நிபந்தனை என கூறினார்.

மேலும் மாறுபட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் அனைவரையும் ஓரணியில் ஒன்றிணைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு புதிய தலைவர் நியமிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது மற்ற நிபந்தனை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியை கட்சியை மறுசீரமைக்க அதிக காலம் தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி,  பொதுமக்கள் அனுப்பிய செய்தியைப் புரிந்துகொண்டு பிரச்சாரத்தை வலுப்படுத்த ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுக்கொண்டார்.

இதேவேளை பொதுத்தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த குற்றச்சாட்டில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 60 பேர் குறித்து கருத்து தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தேவையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது, இது ஒரு பாரிய குறைபாடு என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டது என்றும் அதன் அடிப்படையிலேயே அடிமட்ட அரசியல்வாதிகள் இவ்வாறு செயற்பட்டதாகவும் கூறினர்.

இலங்கையில் விசா இல்லாமல் தங்கியிருந்த 13 தாய்லாந்து மற்றும் சீன பிரஜைகள் கைது !

கல்கிஸ்ஸ, சேரம் வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் குடிவரவு, குடியகல்வு விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகொட பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இகசிய தகவலின்படி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (2608.2020) மாலை 6.30 மணி அளவில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த 13 தாய்லாந்து மற்றும் சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 10,300 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 9 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இன்று (27) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஷோபாவின் ‘இச்சா’ அசலா? நகலா? குற்றச்சாட்டுகள் வலுக்கின்றது!!! ஷோபா: “ஓ..அப்படியா!” சேனன்: “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!”

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் ஷோபாசக்தியின் நாவல் ‘இச்சா’ அவருடைய மூலப் பிரதி அல்ல என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கிய பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசம்நெற் ஷோபாசக்தியயைத் தொடர்புகொண்ட போது “ஓ..அப்படியா!” என்று இதுபற்றி எதனையும் அறியாதவராக இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட மறுத்துவிட்டார். ‘இச்சா’ நாவலின் அசல் பிரதியாகக் கருதப்படும் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலைப் படைத்த சேனன் இக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதுடன் “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!” என தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஈழத்து படைப்பாளிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தமிழக இலக்கியச் சூழலில் அறியப்பட்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் ஷோபசகத்திஇ சேனன் இருவருமே குறிப்பிடத்தக்கவர்கள். அதிலும் ஷோபாசக்தி பல நாவல்களை வெளியிட்டு தனக்கென ஒரு இலக்கிய ரசிகர் வட்டத்தையே கட்டமைத்து வைத்துள்ளவர். இந்நிலையில் ‘இச்சா’ நாவல் இன்னுமொரு சக படைப்பாளியின் மூலத்தை தழுவிய பிரதி என்ற குற்றச்சாட்டு பலருக்கும் அதிர்ச்சித் தகவலாக அவர்களைச் சென்றடைந்து கொண்டுள்ளது.

‘இச்சா’ நாவல் ஆசிரியர் ஷோபாசக்தி மீதான தழுவல் மற்றும் பிரதி பண்ணுதல் போன்ற குற்றச்சாட்டுகள் தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ் சினிமாவில் தொடங்கி இலக்கியம் வரை இது எவ்வித கூச்சநாச்சமும் இன்றி செய்யப்படுகின்றது. இன்று பல்கலைக்கழகங்களில் கூட மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை ஆய்வுகளைத் தழுவி பிரதி செய்து வெளியிட்டு பட்டம்பெற்றுச் செல்கின்றனர். இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் இவ்வாறான இரண்டாம்தர ஆக்கங்களை வெளியிடுவதற்கென்றே ஜேர்னல்கள் இருக்கின்றன. தங்களுடைய இரண்டாம்தரமான ஆக்கங்களுடன் சில நூறு டொலர்களை வழங்கினால் இந்த ஆக்கங்கள் இவ்வாறான இரண்டாம் தரமான ஜேர்னல்களில் வெளியாகும். அதனை தங்களுடைய பதவி உயர்வுகளுக்குஇ சம்பள உயர்வுகளுக்கு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் இதுபற்றி வெளியில் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் பொடுக்கேடு வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதால். ஆனால் இலக்கியவாதிகள் இதனை ஒரு பொட்டுக்கேடு என்றோ, கேடுகட்டத்தனம் என்றோ எண்ணுவதில்லை. அவ்வளவிற்கு தமிழ் சினிமாவும் இலக்கியச் சூழலும் தரம் தாழ்ந்துள்ளது.

உதாரணத்திற்கு ஈழத்தில் வெளிவந்த ‘புதுசு’ சஞ்சிகையில் பவானி என்ற ஒரு பெண் எழுத்தாளர் ‘இனம்காணல்’ என்ற ஒரு சிறுகதையை எழுதி இருந்தார். பவானி இலக்கிய உலகில் அறியப்படாத ஒரு அறிமுக எழுத்தாளர். புதுசு சஞ்சிகை வெளிவருவது நின்றே தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஆனால் அச்சஞ்சிகை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த அ இரவி என்பவர் ஈழத்து இலக்கிய உலகில் ஓரளவு அறியப்பட்டவர். ‘ஒரு பேப்பர்’இ ‘ஐபிசி’ வானோலி ஊடாகவும் பிரபல்யமானவராக இருந்தவர். இந்த அ இரவி பாவானியின் ‘இனம்காணல்’ சிறுகதையைத் தழுவி பிரதி பண்ணி ‘நாச்சியார் திருமொழி’ என்ற பெயரில் அச்சிறுகதையை தமிழகத்தில் இருந்து வெளிவரும் தீராதநதி என்ற இலக்கிய சஞ்சிகையில் வெளியிட்டார். இவ்வாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் பல இலக்கியத் திருட்டுக்களும் நடந்தேறியுள்ளது.

அறிவுசார் உடமைகளின் திருட்டு என்பது தமிழ் இலக்கியச் சூழலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாக சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகின்றது. இது தமிழ் படைப்புலகத்தின் படைப்புச் செயற்பாடுகளை மிகவும் பலவீனப்படுத்துவதுடன் பாதிக்கப்படும் படைப்பாளிகளையும் இருட்டடிப்புச் செய்கின்றது. தனது வயிற்றுப் பசிக்காக திருடுபவர்களை மிகப்பெரும் பாதகர்களாக நோக்கும் சமூகம் இவ்வாறான அறிவுசார் உடமைகளின் திருட்டை கண்டும்காணமல் இருப்பது மிகப்பெரும் தவறு.

அந்த வகையில் ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலின் பிரச்சினையில் அதன் அடி – முடி யயைத் தேடிக் கண்டுபிடிப்பது தமிழ் படைப்புலகத்தின் படைப்பாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலுக்கும் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி ‘இச்சா’ நாவல் வெளிவந்த காலத்திலேயே அறிந்திருந்தேன். ஆயினும் அக்காலப்பகுதியில் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் வெளிவந்திருக்கவில்லை என்பதால் அந்நாவல் வெளிவரும்வரை அது பற்றிய விமர்சனங்களிற்காக காத்திருந்தேன்.

நாவல் வெளிவந்த விடயம் சேனனின் முகநூலில் ஓகஸ்ட் 17ம் திகதி பதிவிடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் இந்நாவலை எங்கும் வாங்க முடியும் என சேனன் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதற்குப் பின் ஒரு வாரகாலத்தின் பின் ஓகஸ்ட் 26இல் வே ராம சாமி என்ற தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் அறியப்படாத ஒரு எழுத்தாளர் சேனனையும் அறிந்திராத ஒரு எழுத்தாளர் வருமாறு தனது பதிவில் குறிப்பிடுகின்றார்:

“சேனன் என்பார் யார் என்று தெரியவில்லை ..

ஒரு மிகப்பெரிய ஒப்புமை வியப்பு என்னவெனில் அண்மையில் வெளிவந்த ‘இச்சா’ நாவலும் இதுவும் வடிவம்இ சம்பவங்கள் எல்லாம் ஒன்னு போல இருக்கு ..

கேப்டன் ஆலா (இச்சா )
கேப்டன் அல்லி (‘சித்தார்த்தனின்’) ரெண்டு பேரும் ஒரே ஆளா?

‘இச்சா’வில் கேப்டன் ஆலாவுக்கான நிகழ்வுகள் சேனனின் நாவலில் சாதனாஇ அல்லி இருவருக்குமாக
இருக்கிறது ..”

சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நூலின் மூலப்பிரதி நான் அறிந்த சிலரிடம் மேலதிக வாசிப்பிற்காகவும் அவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கி மேலும் செழுமைப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் மூலமாகவே இந்த இலக்கியத் திருட்டு முதன்முதலில் மார்ச் மாதம் அளவில் கசியத் தொடங்கியது. இது தொடர்பாக இலக்கிய ஆர்வலரும் தற்போது புலனாய்வாளருமாகியுள்ள அருண் அம்பலவாணர் தனது முகநூல் பதிவில் “சேனன் தனது நாவல் பிரதியை எடிட் பண்ணவோ என்னவோ தனக்கும் ஷோபா சக்திக்கும் உறவினரான ஒரு பெண் ஏஜெண்டிடம் அனுப்பியிருக்கிறார். அந்த ஏஜெண்ட் அதனை “கொரில்லா” வுக்கு படிக்க கொடுக்க கொரில்லா அதனை அரக்கப்பரக்க “இச்சா”வாக சந்தைக்கு விட்டு விட்டாராம்” என்று குறிப்பிட்டுள்ளார். அருண் அம்பலவாணர் குறிப்பிடும் பெண் வேறு யாருமல்ல ஷோபசக்தியின் சகோதரி. இவர் சேனனுக்கும் சகோதரியானவர். ஷோபாசகத்தியும் சேனனும் நண்பர்கள் மட்டுமல்ல தீவகத்தைச் சார்ந்த நெருங்கிய உறவினர்களும் கூட.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசம்நெற் சார்பில் ஷோசக்தியுடன் முகநூல் உட்பெட்டியூடாகத் தொடர்புகொண்டு விசாரிக்க முற்பட்டு எனது கேள்வியயை அனுப்பி வைத்தேன்: ‘வணக்கம் சோபாசக்தி உங்களுடைய ‘இச்சா’ நாவல் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உங்களோடு உரையாட விரும்புகிறேன்’. அதற்கு குறுகிய நேரத்திலேயே ஷோபாசக்தியிடம் இருந்து பின்வரும் பதில் வந்தது: “என் எல்லாப் புத்தகங்கள் குறித்துமே நிறையக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இதெல்லாம் எனக்குப் பழகிப்போய்விட்டன. என்னோடு நீங்கள் உரையாடி ஒன்றும் ஆகப் போவதில்லை. தகவலுக்கு நன்றி”. ஒரு ஊடகவியலாளனாக நான் பல விடயங்கள் தொடர்பாக ஷோபாசக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் ஷோபாசக்தி எந்த விடயத்திற்கும் தயங்காமல் தனது கருத்தை வெளிப்படுத்துபவர். பல சில்லறை விடயங்களுக்கே பதிலளிக்கத் தயங்காதவர். ஆனால் இக்குற்றச்சாட்டு தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட அவர் மறுத்துவிட்டார்.

தேசம்நெற் சார்பில் நானும் விடுவதாக இல்லை: “சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ என்ற நாவலைப் பிரதி பண்ணியே உங்களுடைய நாவல் ‘இச்சா’ எழுதப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மேலும் சேனன் தன்னுடைய நாவலை உங்கள சகோதரிக்கு திருத்தத்திற்குக் கொடுத்ததாகவும் அதிலிருந்தே நீங்கள் இதனைப் பிரதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளதல்லவா?” என்று மற்றுமொரு கேள்வியயை உட்பெட்டியில் அனுப்பி வைத்தேன். அதற்கும் பதில் விரைவிலேயே கிடைத்தது. ஷோபாசக்தியின் பதில்: “ஓ..அப்படியா! குற்றச்சாட்டு எங்கே பதிவாகியுள்ளது?” என்ற கேள்வியாக அது அமைந்தது. ‘கொரில்லா’ ‘பொக்ஸ்’ இனுள் நின்று கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது என்பது இதைத்தானா?

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சேனனிடம் தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அதற்கு சேனன் “இரு நாவல்களையும் படித்த நண்பர்கள் சொல்லித்தான் இச்சா நாவலைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. ஒற்றுமை – வேற்றுமை பற்றி படித்தவர்கள்தான் மேலும் சொல்ல வேண்டும். இப்போதுதான் எனது நாவல் விற்க ஆரம்பித்திருகிறார்கள். சற்றுப் பொறுத்திருங்கள். மேலும் பலர் படிக்கட்டும். அந்த வாக்கு மூலங்களில் இருந்து பேசுவதுதான் நியாயம். ஆனால் தமிழ் கலை இலக்கிய உலகில் இன்று புரையோடிக் கிடக்கும் பல்வேறு போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம் – எதிர்காலத்தில் நல்ல இலக்கியம் உருவாக அது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இப்பொழுது மெல்ல எழுந்துவரும் இந்த இலக்கியச் சர்ச்சை இன்னும் சில வாரங்களில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஷோபாசக்தியின் ஏனைய படைப்புகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படலாம். சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் யுத்தத்தைத் தொடர்ந்து கருக்கொள்ள ஆரம்பித்தது. மலேசிய இலக்கிய ஆர்வலர் நவீன் வெளியிட்ட சஞ்சிகையிலும் இந்நாவலின் சில கதைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. சேனனின் நாவல் வெளிவருவதற்கு முன்னமே தனது நாவல் வெளிவரவேண்டும் என்பதில் ஷோபாசக்தி காட்டிய ஆர்வத்தை பலரும்சுட்டிக்காட்டுகின்றனர். அருண் அம்பலவாணர் தனது பதிவிலும் அதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஷோபசக்தி பொறுப்புடன் பதிலளிப்பது மிகவும் அவசியம். இவை எழுந்தமான குற்றச்சாட்டுகள் அல்ல. ஷோபாசக்தியின் படைப்பாற்றலை கேள்விக்கு உள்ளாக்குகின்ற விடயம். இதுவரை ஷோபாசக்தியின் படைப்பாற்றல் மீது யாரும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை வைத்ததில்லை. அவருடைய அரசியல் மீது, அவர் தன்னைச் சுற்றிக் கட்டமைத்த தலித்திய விம்பத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தமையும் அக்குற்றச்சாட்டுகள் தற்போது அவரை அம்பலப்படுத்தி வருவதும் கண்கூடு. தற்போது முதற்தடவையாக அவருடைய படைப்பாற்றல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஷோபாசக்தி படைப்பாற்றல் உள்ள எழுத்தாளர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவருடைய படைப்பாற்றல் என்பது புனைவு, இரசனை என்பனவற்றுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பதும் அவர் நாவலின் கட்டமைப்பு மற்றும் கருஉருவாக்கத்தில் தழுவலையும் பிரதிகளையும் வைத்தே படைப்புகளை உருவாக்குகின்றார் என்ற குற்றச்சாட்டுகளை அவ்வளவு இலகுவில் கடந்து போய்விட முடியாது என்பதை அடுத்துவரும் வாரங்கள் அவருக்கு உணர்த்தும் என்றே கருதுகிறேன்.

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபா நிதியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் ! – பிரசன்ன ரணதுங்க

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்தாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 02 வாரங்களுக்குள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிற்கும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் நேற்று (25.08.2020)  அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் இரு தரப்பினர்களுக்கு இடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என்பதோடு, அதனைத் தொடர்ந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையம் இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது, நிர்மாணிக்கப்பட்டது.

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு இணங்கியுள்ளது.

இலங்கையுடன் வர்த்தக உறவுகளை பேண பிரத்தானிய அரசும் அமைச்சர்களும் ஆர்வமாகவுள்ளனர் ! – பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர்.

கொரோனா தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர் இலங்கையுடன் உறவுகளைப் பேணுவதில் பிரித்தானிய அரசாங்கமும் அமைச்சர்களும் ஆர்வமாக உள்ளனர் , பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் லிசா வன்ஸ்டல் தெரிவித்துள்ளார்.

இன்று (26.08.2020) காலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியபோதே பதில் உயர் ஸ்தானிகரால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு பின்னர் உலகம் படிப்படியாக தயாராகி வருவதால், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தற்போது நாட்டின் முக்கிய பிரச்சினையாக உள்ளது என பிரதமர் ராஜபக்ஷ பதில் உயர் ஸ்தானிகருக்கு எடுத்துரைத்தார்.

குறிப்பாக, வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவை முன்னுரிமை விடயங்கள் குறித்து பிரதமர் கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர் இலங்கையுடன் உறவுகளைப் பேணுவதில் பிரித்தானிய அரசாங்கமும் அமைச்சர்களும் ஆர்வமாக உள்ளனர் என பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மேலும் பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் ரணில் ஜெயவர்தன இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார் என்றும் பதில் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த சந்திப்பின்போது இருவரும் துறைமுக நகரத்தின் முன்னேற்றம், முதலீட்டை ஈர்த்தல், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் நிலையான விவசாயம் தொடர்பாகவும் பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளம்!

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பர்வான் மாகாணத்தின் தலைநகரான சாரிகர் நகரத்தின் பெரும் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் பல வீடுகள் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் வீடுகள் சரிந்துள்ளதால், பலர் வீடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்திற்குப் பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றுஆப்கானிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.

பால்க் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் பொதுமக்கள் 10க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

40 ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த நியமனம் !

கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வில், 28 அமைச்சுகளை ஜனாதிபதி, பிரமர் உள்ளிட்ட 25 பேர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதோடு, 39 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே வர்த்தமானிப்படுத்தப்பட்ட அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் பட்டியலுக்கு அமைய, 40 ஆவது இராஜாங்க அமைச்சராக, சுசில் பிரேமஜயந்த தற்போது பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கல்விச்‌ சீர்திருத்தங்கள்‌, திறந்த பல்கலைக் கழகங்கள்‌ மற்றும்‌ தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக, சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவும் கலந்து கொண்டிருந்தனர்.

போலியோவை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆபிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளது ! – உலக சுகாதார அமைப்பு தகவல்.

போலியோவை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆபிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறும்போது, “இன்று ஆப்பிரிக்காவின் வரலாற்றில் சிறப்புமிக்க நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் போலியோ பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. போலியோவிலிருந்து ஆபிரிக்கா  முற்றிலுமாக விடுபட்டுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட பெரியம்மையுடன் போலியோவும் தற்போது இணைகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு போலியோவுக்கு மருந்து கிடைக்குவரை இந்த நோய் உலகம் முழுவதும் பரவலாக இருந்தது. இதனால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள ஏழை நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டு முதல்உலக சுகாதார அமைப்பு போலியோவுக்கு எதிராக தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டது.

அப்போது உலகம் முழுவதும் 3,50,000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 70,000 பேர் ஆப்பிரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இளம்பிள்ளைவாதத்தை ஏற்படுத்தும் போலியோ வைரஸ் பரவுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எச்சரித்துள்ளது. சர்வதேச அளவில் கவலைப்படும்படியான வகையில், இந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தது.

டைப்-1 என்றழைக்கப்படும் போலியோ வைரஸ் பற்றியது இந்த எச்சரிக்கை. 2018-ல் 28 பேருக்குத்தான் போலியோஅறிகுறி தென்பட்டது. ஆனால், 2019-ல் இந்த எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துவிட்டது. பாகிஸ்தானில் மட்டும் 128 பேரிடம் போலியோ வைரஸ் டைப்-1 கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் 28 பேருக்கு இருப்பது தெரிந்தது.

பாகிஸ்தானிலிருந்து ஈரான், ஆப்கானிஸ்தானுக்கு இந்த வைரஸ் கடத்தப்பட்டிருப்பதும் ஆய்வுகளிலிருந்து தெரிகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் சுற்றுப்புறங்களிலும் இந்த வைரஸ்கள் தற்போது பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்டுகள் சாய்த்த முதல் வேகப்பந்து வீச்சாளராக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை!

டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்டுகள் சாய்த்த முதல் வேகப்பந்து வீச்சாளரானார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். 156 டெஸ்ட்களில் ஆண்டர்சன் இந்த மைல்கல்லை எட்டினார்.

3வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியை வீழ்த்தியதன் மூலம் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளரும் உலக அளவில் 4வது வீச்சாளருமாகத் திகழ்கிறார் ஆண்டர்சன்,

இலங்கையின் முத்தையா முரளிதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள்,  ஷேன் வார்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 705 விக்கெட்டுகள்,  இந்தியாவின் அனில் கும்ப்ளே 132 டெஸ்ட்களில் 619 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளனர்.  இவர்களுக்கு அடுத்த படியாக ஆண்டர்சன், 156 டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் அரங்கில் குறைந்த பந்துகளில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தியதில் முத்தையா முரளிதரன் 33,711 பந்துகளில் வீழ்த்தியதையடுத்து ஆண்டர்சன் 33,717 பந்துகளில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வார்ன் 34,919 பந்துகளிலும் கும்ப்ளே 38,496 பந்துகளிலும் 600 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினர்.

இந்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தச் சாதனை குறித்துக் கூறும்போது, ஆஷஸ் தொடரில் நான் இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் விரும்புகிறார். இந்த டெஸ்ட்டில் வீசியதைப் பார்க்கும் போது என்னிடம் திறமை வற்றவில்லை என்று தெரிகிறது. என்னால் முடியும் என்று உணரும் வரை தொடர்வேன்.

நான் 700 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.. ஏன் முடியாது? என்றார் ஆண்டர்சன்.

இனவாதத்தை அடிப்படையாக வைத்து வங்குறோத்து அரசியலை செய்பவர்கள் அதைக் கைவிட்டுவிட்டு மக்களுக்குத் தேவையான காத்திரமான அரசியலை செய்ய முன்வர வேண்டும்.! – காதர் மஸ்தான்

 

இனவாதத்தை தோளில் தூக்கிக் கொண்டு மக்கள் மத்தியில் செல்கின்றவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமையை நம்மால் அவதானிக்க முடிகிறது. எமது வன்னி மாவட்ட மக்களின் அபிலாஷைகள் தேவைகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே எமது அரசியலை முன்னெடுத்துச் செல்கிறோம்,  என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு  தலைவருமான காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.  ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது..

இனவாதத்தை அடிப்படையாக வைத்து வங்குறோத்து அரசியலை செய்பவர்கள் அதைக் கைவிட்டுவிட்டு மக்களுக்குத் தேவையான காத்திரமான அரசியலை செய்ய முன்வர வேண்டும்.  யுத்தத்தால் படுமோசமாக பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கு நான் அர்ப்பண சிந்தையுடன் செயற்பட்டு வருகிறேன் என்பதற்கு எனக்கு வாக்களித்த மூவின மக்களும் சாட்சியாக இருக்கின்றனர்.அந்த மூவினமும் சரிநிகர் சமானமாக அபிவிருத்திகளை பெற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

 

இனமத பிரதேச அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நின்று மனித நேயமிக்க சேவைகளை நாம் ஆற்றுகின்ற பொழுது எம் மீது சில வங்குறோத்து அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சி கொண்டு கருத்துக்களை உமிழ்ந்து வருவதை எமது மக்கள் தெளிவாக உணர்ந்து வைத்துள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற மறுதினமே மக்களிடமிருந்து வெருண்டோடும் இவர்கள் ஐந்து வருடங்களுக்கு பின் மனச்சாட்சியற்று அந்த மக்களிடமே மீண்டும் வந்து இனவாத போக்குடன் வந்து வாக்குகளை கொள்ளையடித்து திரும்பவும் தமது உல்லாச வாழ்வுக்கு மீண்டு விடுகின்ற அவலநிலையை நாங்கள் காண்கிறோம்.

இவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த நீண்ட நெடிய காலத்தில் வன்னி மாவட்டத்தை எவ்வளவோ அபிவிருத்தி செய்திருக்க முடியும்.

அதனைச் செய்யாமல் தமக்கு வாக்களித்த மக்களின் வாழ்வாதாரம் உயர உழைக்காமல் இனவாதம் மூலம் வாக்குகளை பெற எத்தனிக்கின்றனர்.

இந்த நிலை மாற வேண்டும்,எமக்கு வாக்களித்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்றவர்கள் முன் வர வேண்டும். எமது நடவடிக்கைகள் செயற்பாடுகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் மக்களுடைய ஆதரவு எம் பக்கமே இருக்கும் என்பது எமது பலமான நம்பிக்கையாகுமெனவும் குறிப்பிட்டார்