October

October

பிரதமர் பணியாளர்சபை பிரதானியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ நியமனம் !

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதானியாக அவரது மகன் யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹுவெய், அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட சீனாவின் உயர்மட்ட தூது குழுவினர் மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலும் இரு தரப்பு நட்பு தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைப்பிரதமர் மகிந்தராஜபக்ஸவின் இன்னுமொரு மகனான நாமல்ராஜபக்ஸ இலங்கையினுடைய விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க முடியாது” – 800 படத்திலிருந்து விலகிய நடிகர் டீஜே !

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் இளவயது முரளிதரனாக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை ‘அசுரன்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் டீஜே அருணாசலம் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

எனது தாயாரும் ஈழத்தைச் சேர்ந்த தமிழர் தான். இப்படத்தின் அரசியல் காரணமாகத் தான் இந்த திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை. இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க முடியாதென தயாரிப்பாளருக்கு தெரிவித்தேன். இத்தகைய சூழ்நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை ‘800’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவுள்ளது.

‘அசுரனில்’ நடித்ததற்காக விஜய் சேதுபதியால் பாராட்டப்பட்டேன், அவர் மீது மிகுந்த மரியாதையும் புகழும் கொண்டிருப்பதால் 800 ஐத் தேர்ந்தெடுப்பது கடினமான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

800 முதல்பார்வை (Firs look) கடந்த செவ்வாய்கிழமை வெளியாகி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளதால், சமூக ஊடகங்களில் மக்கள் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சினிமா, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் விஜய் சேதுபதியையும் இப்படத்திலிருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் விவேக் மற்றும் சேரன் போன்றோரும்  விஜய் சேதுபதியை இப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகுமாறு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் பலரும் ‘800’ திரைப்படத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“ரிஷாத் கைது செய்யப்பட்டால் அதற்கு எதிராக நாம் போராடுவோம்” – சஜித் பிரேமதாஸ

“ரிஷாத் கைது செய்யப்பட்டால் அதற்கு எதிராக நாம் போராடுவோம்” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ரிஷாத்தைக் கைது செய்யும் முயற்சி அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று நாட்டிலுள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்றது. ரிஷாத் கைதுசெய்யப்பட்டால் அதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ளமாட்டோம். அதற்கு எதிராக நாம் போராடுவோம். நாடாளுமன்றத்தில் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் பலமாக இருக்கும். இதேவேளை, நாட்டின் நீதித்துறை சுயாதீனத்தன்மையுடன் செயற்பட வேண்டும். பழிவாங்கல் நடவடிக்கைக்கு நீதித்துறை துணைபோகாது என்று நாம் நினைக்கின்றோம்.

“அரசுடன் இணையவில்லை என்ற காரணத்துக்காகப் பழிவாங்குவதற்காகவும், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான தீர்ப்பால் ஏற்பட்டுள்ள அவமானத்தை மூடிமறைப்பதற்காகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய முயற்சிக்கப்படுகின்றது. இந்தக் கைது நடவடிக்கையை அரசு உடன் நிறுத்த வேண்டும்” எனவும் மேலும் அவர் தெரிவித்தார் .

கொரோனா பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பொதிகளை இலங்கைக்கு வழங்குகியது அமெரிக்கா !

கொரோனா பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய ஒருதொகுதி பொதிகளை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதனைக் கையளித்துள்ளார்.

1,91000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொதிகள் சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு குறித்த பாதுகாப்பு அங்கிகளின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக் காணப்படும் என அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தனது பங்களிப்பினை வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று வேகமாக இலங்கையில் மீன்டும் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.  மேலும் கொரோனா பரவலால் வீழ்ச்சியடைந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த அண்மையில் சீன அரசிடம் இருந்து குறிப்பிட்ட தொகைப்பணத்தை இலங்கை கடனாக பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

“வருகின்ற மார்ச் மாதத்திற்குள் அரசு திருந்திநடக்க வேண்டும். இல்லையேல் அரசின் மீது சர்வதேச சட்டம் பாயும் ” – எச்சரிக்கின்றார் சம்பந்தன் !

“ சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். அந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தையும் அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் சர்வதேச சட்டங்கள்  அரசு மீது பாயும்.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இரா. சம்பந்தன் மேலும் தெரிவிக்கும் போது –

“இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமான நாடு. ஓர் இனத்துக்கும் மட்டும் இந்த நாடு சொந்தமல்ல. இங்கு மூன்று இனத்துக்குமான அரசியல் உரிமை, மொழி உரிமை மற்றும் மத உரிமை ஆகியன பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆட்சியிலுள்ள அரசு சர்வதேசத்தை அவமதித்துச் செயற்பட முடியாது. அதன் அறிவுரைகளைக் கேட்டு நடக்க வேண்டும். நாட்டின் நலன் கருதிய சர்வதேசத்தின் தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழ் – முஸ்லிம் சமூகம் மீதான அடக்குமுறைகளையும், பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடன் அரசு நிறுத்த வேண்டும். சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். ஏனெனில், இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சர்வதேச நாடுகள் வழங்கியுள்ள கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடைகின்றது. அந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை இந்த அரசு சந்திக்கும். சர்வதேச தீர்மானங்களை நிராகரித்தால் சர்வதேச சட்டங்கள்தான் அரசு மீது பாயும். இதைக் கவனத்தில்கொண்டு ராஜபக்ச அரசு செயற்பட வேண்டும்” – எனவும் இரா.சம்பந்தன் அரசை எச்சரித்துள்ளார்.

“மக்களால் விரும்பப்படுபவர்கள், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்” – விஜய்சேதுபதிக்கு நடிகர் விவேக் அறிவுரை !

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இன்று(15.10.2020) தமிழ்நாட்டில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட நடிகர் விவேக் இதுபற்றி தெரிவிக்கையில்,

“உங்கள் அனைவரதும் பார்வைதான் எனது பார்வையுமாக உள்ளது. கருத்து சொல்லும் அளவுக்கு அவ்வளவு பெரியமனிதனல்ல நான். இருந்தாலும் மக்களால் விரும்பப்படுபவர்கள், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பலைகள் கொந்தளித்த வண்ணம் இருக்கிறது.

குறிப்பாக டுவிட்டரில் #shameonvijaysethupathi என்ற ஹாஸ்டாக்குகள் மூலமாக இந்திய அளவில் எதிர்ப்பு பதிவுகள் இந்திய சமூகவலைத்தள மக்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

கொரோனா 2ம் அலை ஆரம்பம் – மீள முடங்குகிறது பிரான்ஸ் !

உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் மீளவும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. முன்னதாக சீனா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டதை அடுத்து பிரான்ஸிலும் கொரோனா 2ம் அலை வேகமாக வீச ஆரம்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் 7.56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 32,942  பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிலையில், பாரிஸ், லில்லி, லியோன், மார்சில்லி, துலூஸ் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத் தொடங்கி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முக்கிய நகரங்களில் சனிக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.  இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊடரங்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இதுபற்றி தொலைக்காட்சி பேட்டியின்போது பேசிய ஜனாதிபதி மேக்ரான், ‘ஐலே-டி-பிரான்ஸ் பிராந்தியத்திலும், லில்லி, கிரெனோபில், லியோன், மார்சில்லி, ரூவன், செயின்ட்-எட்டியென், மான்ட்பெல்லியர், துலூஸ் நகரங்களிலும் இந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்’ என்றார்.
கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால், கட்டுப்பாட்டை நாம் இழக்கவில்லை. நம்மை கவலையடையச் செய்யும் சூழ்நிலையில் இருக்கிறோம். தொற்றுநோயின் முதல் அலையின் தாக்கத்தை வைத்து இந்த முடிவுகளை எடுத்துள்ளோம் என்றும் மேக்ரான் குறிப்பிட்டார்.

அரசு தரப்பிலுள்ள தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ள வேண்டுகோள் !

இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசியல் சீர்திருத்தமாகிய 20ஆவது அரசியலைப்பு திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் உட்பட அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (14.10.2020) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமானது தமிழ் மக்களுக்கு பயனற்றது. அவற்றால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவே அதற்கு ஆதரவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்க கூடாது. மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கும் வடக்கில் இதனைத்தான் கூறியுள்ளேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சோயுஸ்.எம்.எஸ்-17 விண்கலம் 3 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து புதிய சாதனை !

விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி 3 வீரர்களுடன் பயணித்த ரஷ்ய விண்கலம், 3 மணி நேரத்தில் சென்றடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதில் பணியாற்றுவதற்காக வீரர்கள் சுழற்சி முறையில் பூமியில்இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த செர்ஜி ரைசிகோவ், செர்ஜி குட்-ஸ்வெர்கோவ், அமெரிக்காவின் நாசாவை சேர்ந்த கேத்லீன் ரூபின்ஸ் ஆகிய 3 வீரர்கள் நேற்று காலை சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.

russia-spacecraft

கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-17 விண்கலத்தில் இவர்கள் சென்றனர். இவர்களுடைய விண்கலம் 3 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது. இதற்கு முன் சரக்குப் பொருட்களுடன் சென்ற விண்வெளி ஓடமே இந்த அதிவேகப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. வீரர்களுடன் செல்லும் விண்கலம் அதிவேகப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

மாதந்தோறும் 1½ கொரோனா தடுப்பூசியை கோடி தயாரிக்க ரஸ்யா முடிவு !

நாளுக்கு நாள் வேகமாக பெரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வழி தெரியாது உலக நாடுகள் ஒருபுறம் திணறிக்கொண்டிருந்தாலும் கூட சிலநாடுகள் கொரோனாவுக்கான மருந்தை உருவாக்கும் முயற்சியில் இறுதிக்கட்ட நிலையில் உள்ளன.

இந்நிலையில் ரஸ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் முன்னணியிலுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஸ்யா உருவாக்கி, அதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகிறது.

இந்த தடுப்பூசியை நவம்பர் மாதம் 8 லட்சம் ‘டோஸ்’, டிசம்பர் மாதம் 15 லட்சம் ‘டோஸ்’, ஜனவரியில் 30-35 லட்சம் ‘டோஸ்’ தயாரிக்க ரஸ்யா திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் வசந்த காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே) தடுப்பூசி தயாரிப்பை மாதந்தோறும் 1½ கோடி ‘டோஸ்’ அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தொழில், வர்த்தக மந்திரி டெனிஸ் மந்துரோவ் தெரிவித்தார்.