October

October

துருக்கியில் பாரிய நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு !

துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.0 என பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், முதற்கட்டமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 419 பேர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்தது.
துருக்கி நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்புகள்....பலி  எண்ணிக்கை உயரும் அபாயம் - Turkey Earthquake- Land Sliding- Turkey Tsunami-  Earthquake ...
இதற்கிடையே, கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாகவும், 786 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – தொற்றாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது !

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. புதிதாக மேலும்  314 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,424ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 55 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய 259 பேரும் பேலியகொட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் இராணுத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6, 627ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 4, 282 பேர் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்னும் 5, 804 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் மிக அவசர தேவையை தவிர தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பொருட்கள் விநியோகத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை வந்தார் இலங்கைக்கான புதிய சீனத்தூதுவர் – இருவார சுயதனிமைப்படுத்தலுக்கு பின்னர் நடவடிக்கைகள் ஆரம்பம் !

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவராக சென்ஹொங் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் இன்று (31.10.2020) இலங்கையை வந்தடைந்துள்ளார். புதிய தூதுவர், பி.சி.ஆர். பரிசோதனையினை நிறைவு செய்து சீன ஈஸ்டேர்ன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்ததாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய தூதுவர், அடுத்து வரும் இரு வாரங்களுக்கு சுயதனிமைப்படுத்தலில் தன்னை ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விமான நிலையத்தில் வைத்து வைபவரீதியான வரவேற்பினை இலங்கையின் தற்போதைய நிலைமை கருதி தூதுவர் மறுத்துவிட்டதாகவும் சொற்ப அளவிலான சீன தூதரக இராஜதந்திர சேவையில் உள்ளவர்களே அவரை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்தாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

புதிய தூதுவர் சென்ஹொங், 1988ஆம் ஆண்டு முதல் சீன இராஜதந்திர சேவையில் செயற்பட்டு வருகின்றார் என்பதுடன் சீன சர்வதேச கற்கைகள் நிறுவனத்தின் தலைவரான இவர், பொருளாதார நிபுணராவார். பீஜிங்கில் உள்ள இராஜதந்திர சேவைகளுக்கான பணியகத்தில் செயற்பாட்டு பிரதிப் பணிப்பாளராக செயற்பட்டுள்ளதோடு சீன-பிரிட்டிஷ் கூட்டுக் குழுமத்தின் இரண்டாம் நிலை செயலாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இதேவேளை, புதிய தூதுவரான, சென்ஹொங் இலங்கை வந்தடைந்ததும் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

“இலங்கை வந்தடைந்தும் இந்து மா கடலின் முத்து என போற்றப்படும் இலங்கையின் அழகு, உற்சாகம் மற்றும் நட்புறவை ஆழ்ந்த முறையில் உணர்ந்து கொள்கின்றேன். சீன அரசு மற்றும் மக்களின் நம்பிக்கைக்கு தோள் கொடுத்து, நட்பார்ந்த இலங்கைக்கான தூதராக வருகின்றேன். நான் பொறுப்பேற்க வேண்டிய கடமை மிகவும் முக்கியமானதாகவும் பிரகாசமாகவும் உள்ளது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான நட்புறவு நீண்டகாலமாக நிலவி வருகிறது. இருதரப்பும் ஒன்றுக்கொன்று நேர்மையாக உதவியளித்து, தலைமுறை தலைமுறையாக நட்பார்ந்து பழகும் நெடுநோக்கு ஒத்துழைப்பு நண்பர்களாவர். இருநாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பிறகு, குறிப்பாக 2014ஆம் ஆண்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் இலங்கையில் பயணம் மேற்கொண்டதிலிருந்து, பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் பெரும் சாதனைகளைப் பெற்று, சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் நெருக்கமான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்தி வருகின்றன.

நீண்ட வரலாறுடைய இருநாட்டுறவு இன்னும் பசுமையாக உள்ளது. பரஸ்பர நெடுநோக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் கொவிட்-19 நோய்த் தடுப்புக்கான கூட்டுப் போராட்டத்தில் இருநாட்டுறவு மேலும் உயர்ந்து, நாடுகளுக்கிடையே இருதரப்பு நட்புறவுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது.

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதராக, சீன மற்றும் இலங்கை பணியாளர்களுடனும் நண்பர்களுடனும் இணைந்து பாடுபட்டு, இருநாட்டு ஜனாதிபதிகளின் ஒத்த கருத்துக்களை உணர்வுபூர்வமாகச் செயற்படுத்தவுள்ளேன். அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒன்றுக்கு ஒன்று உதவியளித்து நட்புடன் பழகும் நெடுநோக்கு ஒத்துழைப்பையும் முன்னேற்றி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம் மற்றும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளின் மூலம் இருநாட்டு மக்களுக்கு மேலும் பெரும் மனநிறைவைக் கொண்டு வரவுள்ளேன்.

அத்தோடு, பிராந்திய அமைதி, நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமையை முன்னெடுத்துச் செல்வதையும் எதிர்பார்க்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆறு மாதங்களுக்கு மேலாக கொரோனாத்தொற்று இல்லாத நாடாக தாய்வான் சாதனை – சீனாவுக்கு அருகிலிருந்தும் கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்தியது தாய்வான் ?

ஐரோப்பா கொரோனாவின் 2-வது அலையை சந்தித்து வருகிறது. பிரான்சிலும், ஜெர்மனியிலும் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தினமும் உலகம் முழுதும் பலலட்சக்கணக்கிலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வண்ணமுள்ளனர்.
இந்நிலையில், தாய்வானில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி முதல் உள்ளூரில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. முன்னதாக 553 பேருக்கு தொற்று இருந்தது. 7 பேர் இறந்திருந்தனர். அதன் பிறகு கடந்த 200 நாட்களில் யாருக்கு தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் கட்டுப்பாடுகளை தாய்வான் கடைபிடித்து வருகிறது.
சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை உயர தொடங்கிய ஜனவரி மாதமே தாய்வான் தனது எல்லைகளை மூடியது. பயணங்களை ஒழுங்குபடுத்தி வந்தது. இன்னமும் எல்லைகள் மீதான கட்டுப்பாடுகளை அப்படியே வைத்துள்ளது. முன்கூட்டியே எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை இது என்கிறார்கள். அது தவிர நிபுணர்கள் பரிந்துரைத்த அனைத்து விதிகளையும் கண்டிப்புடன் அமுல்படுத்தியது.
Taiwan's president: how the country contained coronavirus spread - Business  Insider
தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்டுபிடித்தது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவருடன் சம்பந்தப்பட்ட 150 பேர் வரை தனிமைப்படுத்தியது. அனைவருக்கும் அரசால் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன.  உள்ளூர் அளவில் தாய்வானில் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், கடந்த 2 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதனால் எச்சரிக்கையை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த யாழில் அமுலுக்கு வரும் புதிய விதிமுறைகள் !

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், வட.மாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், வட.மாகாண உளநல சேவை பணிப்பாளர் கேசவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்,

மருத்துவர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளை தளபதி உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறுபட்ட புதிய விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளன.

அவை வருமாறு,

1.இறுதிச் சடங்கில் 25 பேருக்கு மாத்திரமே அனுமதி (2 தொடக்கம் 3 நாள்களில் நிறைவுறுத்த வேண்டும்.

2.வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் கலந்துகொள்வதற்கோ வருகை தருவதற்கோ தடை.

3.நடைபாதை வியாபாரம், மரக்கறி வியாபரத்திற்கு மட்டும் அனுமதி, தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்கத் தடை, திறந்த சந்தைக்கு அனுமதி இல்லை.

4.விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்கவேண்டும், மக்கள் கூட்டங்களை, பொது நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டும்.

5.பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளுக்கு அனுமதி, உணவங்களில் இருந்து உணவு உண்பதற்குத் தடை (பொதிக்கு மட்டும் அனுமதி)

6.வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் கிராம அலுவலகர் ஊடாக பதிய வேண்டும்.

7.தொழிற்சாலைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து தொழில் புரிவோர்.

8.முடக்கப்பட பகுதிகளில் இருந்து வருகை தந்து பணிபுரிவோருக்கு தங்குமிடம் உணவு வசதி ஏற்படுத்த வேண்டும்.

9.அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் திரட்டு செய்யப்படவேண்டும், முடக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல தடை,

10.முடக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளே குடும்பத்தில் ஒருவர் மட்டும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்லலாம்.

11.அவசர தொலைபேசி உதவி இலக்கமாக 021 222 5000 செயற்படும், அவசர நிலை கருதி ஒருங்கிணைத்த செயலகமாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் 7 நாட்களும் செயற்படும்.

12.ஆலயங்களில் மதகுருமார்களுக்கு மட்டும் அனுமதி, ஆலயங்களில் அன்ன தானங்களுக்கு தடை

13.பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்கான நேர்முக பரீட்சைக்கு கட்டுபாடுகளை கல்வி திணைக்களம் மேற்கொள்ளும்.

போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

 

 

“இராணுவ அச்சுறுத்தல்களுக்கோ, பயமுறுத்தலுக்கோ நாங்கள் ஒருபோதும் தலைகுனிய போவதில்லை . இறுதி தாய் இருக்கும்வரை இந்த போராட்டம் தொடரும்” – கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்ட உறவினர்களை தேடிய போராட்டம் !

“இராணுவ அச்சுறுத்தல்களுக்கோ, பயமுறுத்தலுக்கோ நாங்கள் ஒருபோதும் தலைகுனிய போவதில்லை . ஒரு தாய் இருக்கும்வரை இந்த போராட்டம் தொடரும்”  என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவி கோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (30.10.2020) இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடும் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

எங்களுக்கான நீதி எப்போது கிடைக்கும், அதனை யார் பெற்று தருவார்கள் என்ற ஏக்கத்தில் நாங்கள் வீதிகளில் காத்திருக்கின்றோம். எமது இந்த போராட்டம் தீர்வு கிடைக்கும்வரை தொடரும் என உலக நாடுகள் மாத்திரமல்ல சர்வதேசத்தில் வாழும் உறவுகளிற்கும் தெரியும்.

சர்வதேச நாடுகளில் வாழ்கின்றவர்கள் எங்களுக்காக குரல்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடும், எங்களுக்கான நீதியை சர்வதேசம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையோடும் நாங்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்.

சென்ற ஒரு சில நாட்களுக்கு முன் அமெரிக்க  இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டிருந்த போதும் இந்த கொடிய நோயின் காரணமாக அவரை சந்திக்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில் எமது நீதிக்கான கோரிக்கையை அவரிடம் கையளித்துள்ளோம். எமக்கான நீதியை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

கிளிநொச்சியில் மாத்திரமல்ல பல பகுதிகளிலும் இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கொடிய நோயின் காரணமாக எமது உறவுகள் போராட்டத்திற்கு வருகைதர முடியாது இருக்கின்றார்கள். இந்த நிலையில் வருகை தந்த சொற்ப உறவுகளை வைத்துக் கொண்டு எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றோம். ஒரு தாய் இருக்கும்வரை இந்த போராட்டம் தொடரும்.

இந்த கொரோனா மாத்திரமல்ல இராணுவம், இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் கூட எங்களது உறவுகளை தேடுவதை கைவிடப்போவதில்லை. இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிறையவே அச்சுறுத்தல்கள், விசாரணைகள், விசாரிப்பது போன்றதான போர்வைக்கு மத்தியில் இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றோம்.

இந்த இராணுவ அச்சுறுத்தல்களுக்கோ, பயமுறுத்தலுக்கோ நாங்கள் ஒருபோதும் தலைகுனிய போவதில்லை. எமக்கு நீதி வேண்டும். கையளித்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே என்று இலங்கை அரசிடம் கேட்டு நின்ற போதிலும் 12 வருடங்கள் தாண்டியும் பதில் சொல்லவில்லை. அவர்கள் ஒருபோதும் எங்களுக்கு பதில் சொல்லப்போவதில்லை.

ஆகவேதான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம். ஐ.நா மன்றிலே 36ஆவது கூட்டத் தொடரிலிருந்து இன்று வரை நாங்கள் எமது உண்மை நிலையை எடுத்துக்கூறி சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற ஆவலாக இருக்கின்றோம். எங்களது பூர்வீக நிலங்கள் மீட்கப்பட வேண்டும். அந்த இடங்களிலே நாங்கள் குடியேற வேண்டம். இன்று அகதிகளாக இடம்விட்டு இடம் மாறி நாங்கள் நாட்களை கழிக்கின்றோம்.

எங்களது பூர்வீக இடங்களிலே நாங்கள் வாழ வேண்டும். நாங்கள் பிறந்த மண்ணிலே நாங்கள் வாழவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

“அரசியல் நாகரிகத்தை மனோகணேசன் பேணாவிட்டாலும், அந்த நாகரீகத்தை பேண நான் விரும்புகின்றேன்” – துமிந்த விடுதலை மனுவில் மனோகணேசனின் நிலையை போட்டுடைத்தார் எம்.ஏ.சுமந்திரன் !

“அரசியல் நாகரிகத்தை மனோகணேசன் பேணாவிட்டாலும், அந்த நாகரீகத்தை பேண நான் விரும்புகின்றேன்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (30.10.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அவர்,

”ஓரிரு தினங்களுக்கு, துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட மனுவில் மூன்று வாரங்களின் முன்னர் தானும் கைச்சாத்திட்டதாகவும், ஆனால், அது தற்போது நான் எதிர்பாராத விதமாக வெளிவந்துவிட்டது என்றும் மனோகணேசன் தொலைபேசியில் தெரிவித்தார்.

அந்த விடயம் வெளிவந்ததனால், சில சங்கடங்களும், சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அதை சமாளிப்பதற்கு, தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான ஒரு மனுவை நாங்கள் சேர்ந்து கொடுத்தால் என்ன? என என்னிடம் மனோகணேசன் கேட்டார்.

துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் கைச்சாத்திட்டத்திற்கான உண்மையான காரணத்தையும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். தனிப்பட்ட உரையாடலின் போது, அவர் அந்த காரணத்தை என்னிடம் சொன்னதனால், அதை பகிரங்கமாக சொல்ல விரும்பவில்லை. அரசியல் நாகரிகத்தை அவர் பேணாவிட்டாலும், அந்த நாகரீகத்தை பேண நான் விரும்புகின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர் சொன்னது, துமிந்த சில்வாவின் மனுவில் கையொப்பமிட்டதில் இருந்து தப்புவதற்கு, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான மனுவை முன்வைத்தால் என்ன என்று கேட்டார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். மறுப்புத் தெரிவித்தமைக்கான காரணத்தையும் நான் சொல்லியிருந்தேன். அவர் சொல்வதைப் போன்று, இந்த நேரத்தில் அது தேவையில்லை என நான் சொல்லவில்லை. அது தவறானது.

தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்படுவது சரியான விடயம். அது செய்யப்பட வேண்டிய விடயம். துமிந்தசில்வாவை விடுதலை செய்வது தவறான விடயம். ஆகையினால், செய்யப்படகூடாத விடயத்தையும், கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயத்தையும், ஒன்றாக காட்டுவது, மிக மிகத் தவறான செயற்பாடு. சுனில் ரத்னாயக்காவிற்கு மன்னிப்பு கொடுக்கப்பட்ட போது கூட, அப்படியானால், தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் தானே என்றதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன்.

இந்த இரண்டு விடயங்களையும் சேர்க்ககூடாது. சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டது தவறான செயல். தவறான செயலை வைத்து, சரியான செயலை செய்வதற்கு, தவறான செயலையும், சரியானதென சொல்வதாக ஆகிவிடும். எனவே, சுனில் ரத்னாயக்காவின் விடுதலை தொடர்பாக, நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றோம். தமிழ் அரசியல்கைதிகளின் விடயத்தை, இந்த தவறான செயலுடன் சேர்க்க கூடாது. அவர்கள் கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். அது வேறு விடயம்.

மனோகணேசன், ஞானசார தேரர் சிறையில் இருந்த போது, அவரை சிறையில் சென்று பார்வையிட்டு, அதன்பின்னர், அவர் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தவர். பிள்ளையானை சிறையில் கண்டு வந்தவர். ஞானசார தேரர், பிள்ளையான், சுனில் ரத்னாயக்க, துமிந்தசில்வா, ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

தமிழ் அரசியல் கைதிகள் என நாங்கள் அடையாளப்படுத்துபவர்கள், கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள். ஆகவே, தவறான ஒரு விடயத்தையும், சரியான ஒரு விடயத்தையும், முடிச்சுப் போட வேண்டாம் என நான் அவரிடம் சொல்லியிருந்தேன். அவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கு இணங்க முடியாதென்று நான் அவருக்கு தெளிவாக சொல்லியிருந்தேன். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை, தவறான செயலை செய்ததில் இருந்து தான் தப்புவிக்க வேண்டும் என்று, அதனை ஒரு கருவியாக பயன்படுத்த நினைப்பது ஒரு தவறான செயற்பாடு. அதற்கு இணங்கிப் போகக்கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு.

பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் யோசித்துவிட்டுச் சொல்வதாக, தன்னிடம் கூறியதாக, மனோகணேசன் ஊடகங்களில் தெரிவித்திருந்தார் . ஆனால், அடைக்கலநாதன், தான் அவ்வாறு சொல்லவில்லை. இரண்டு விடயங்களையும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என தெளிவாக சொன்னதாக, ஊடகங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் இன்று காலை தெரிவித்தார்.

மனோகணேசன், துரதிஸ்டவசமாக, தான் அகப்பட்ட அரசியல் சிக்கலில் இருந்து விடுபடுவதற்காக, இவ்வாறு பேசுவது பிழையான ஒரு விடயம். அவர் என்னிடம் தனிப்பட்ட விடயமாக பேசியதனால், சில விடயங்களை வெளிப்படுத்தவில்லை.

நாங்கள் தெரிவித்ததாக மனோகணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமையினால், நானும், அடைக்கலநாதனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக, தெளிவான நிலைப்பாட்டை சொல்லியிருக்கின்றோம். அந்த தேவை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது” என குறிப்பிட்டார்.

பிரித்தானிய அரசியல் கேலிக்கூத்து! தொழிற்கட்சியினுள் யூதர்களுக்கு எதிரான போக்கு ! ஜெரிமி கோபின் தொழிற்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்!

பிரித்தானியாவின் மிக உன்னதமான மனிதத்துவ போராளியான ஜெரிமி கோபின் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது கட்சியில் இருந்த யூதர்களுக்கு எதிராக செயற்பாடுகளை கண்டுகொள்ளவில்லை என்று சமத்துவத்திற்கும் மனித உரிமைக்குமான ஆணைக்குழு நேற்று (29/10/2020) குற்றம்சாட்டி இருந்தது. இந்த அறிக்கை வெளிவந்து சில நிமிடங்களிலேயே ஜெரிமி கோர்பின் இந்த அறிக்கையை விமர்சித்து இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக மிகைப்படுத்தப்பட்டது என ஜெரிமி கோபின் மிகச்சரியாகவே குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால் ஜெரிமி கோபினின் இந்த விமர்சனத்தை தற்போதைய தொழிற்கட்சித் தலைவர் ஹியஸ் ராமர் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அடுத்த சில மணிநேரங்களில் ஜெரிமி கோபின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்ககாணலில் தன்னுடைய விமர்சனத்தை மிக அழுத்தம் திருத்தமாக வெளியிட்டார். அதன்படி தனக்கு எதிரான ஒரு அரசியல் சதி என்பதை அவர் மிகத் தெளிவாக சுற்றிக்காட்டினார். இதனை தொழிற்கட்சியில் இருக்கும் பல யூதப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், ஜெரிமி கோபினுக்கு தங்களுடைய ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். ஜெரிமி கோபினின் இந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பப்பட்டு சில நிமிடங்களிலேயே ஜெரிமி கோபின் நேற்று மதியம் ஒரு மணியளவில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அன்ரிசெமற்றிசம் – anti semitisam என்பது ஹிட்லருடைய காலத்தில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை மறுப்பது. இவ்வாறான எவ்வித மறுப்பையும் ஜெரிமி கோபின் செய்ததற்கு நேரடியான மறைமுகமான எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆனால் கட்சியில் இருந்த சிலர் அவ்வாறு நடந்து கொண்டிருந்தனர். அது சம்பந்தப்பட்ட ஒழுங்காற்று நடவடிக்கைகளை கட்சி எடுத்துவந்தது. ஆனால் தொழிற்கட்சியில் இருந்த வலதுசாரி பிரிவினர் ஜெரிமி கோபினின் தீவிர இடதுசாரியப் போக்கை நிராகரித்து வந்ததுடன்; ஜெரிமி கோபினை கட்சியின் தலைமையில் இருந்து ஓரம்கட்ட இந்த அன்ரி செமற்றிசம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து ஊதிப் பெருப்பித்து இந்நிலைக்கு இட்டுச்சென்றனர். இதுவொருவகையில் சகல விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கின்றவர்களை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயலாகவே கருதப்படுகின்றது.

பிரித்தானியாவில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர் அதனால் அவர்கள் தினம் தினம் அவமானப்படுகின்றனர் வன்முறைக்கு உள்ளாகின்றனர். சிறுபான்மைச் சமூகங்கள்நாளாந்தம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். கறுப்பினத்தவர்கள் தங்களுடைய தோற்றம் இயல்புகளுக்காக பொலிஸாரின் ஸ்ரொப் அன் சேர்ச் போன்ற கெடுபிடிகளுக்கு உள்ளாகின்றனர். ஸ்லாமியர்கள் தினம் தினம் பிரித்தானியாவில் நையப்புடைக்கப்படுகின்றனர். அகதிகள் கேவலப்படுத்தப்படுகின்றனர். இவையெல்லாம் பிரித்தானிய தெருக்களிலும் பாராளுமன்றத்திலும் அப்பட்டமாக வெளித்தெரிகின்ற சமத்துவம் மனிதஉரிமை மீறல் சம்பவங்கள். இந்த கோவிட்-19 இந்நிலையயை மேலும் மோசமாக்கி ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் தூண்டியுள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களோடு ஒப்பிடுகின்ற போது யூதர்கள் தொழிற்கட்சிக்குள் ஒடுக்குமுறைக்கு உள்ளானார்கள் என்பது மின்னணு நூக்குக்காட்டியயைக் கொண்டு பெருப்பித்து பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம். மேலும் இந்த அன்ரிசெமற்றிசம் என்ற குற்றச்சாட்டை வைப்பவர்கள் இஸ்ரேலிய கொடுங்கோன்மை கொலைவெறி அரசை ஆதரிப்பவர்களாக இருக்கின்றனர். இஸ்ரேலிய கொடுங்கோண்மை அரசை விமர்சிப்பது எந்தவகையிலும் யூதர்களின் உரிமைகளை மறுப்பதாகாது. தொழிற்கட்சி உறுப்பினர்கள் பலர் அன்ரி ஸ்யோனிஸ்ட் anti zionists டுக்களாக உள்ளனர். அவர்கள் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதையும் இஸ்ரேலிய அரசின் நில ஆக்கிரமிப்பையும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசின் கொடுங்கோண்மையயையும் வன்மையாகக் கண்டிக்கின்றனர். இந்தப் பின்னணியியேலயே ஜெரிமி கோபின் மீது இவ்வாறான ஒரு அபாண்டமான பழி போடப்பட்டு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இஸ்ரேலிய அரசு மனிதத்துவத்திற்கு எதிரானது; இஸ்ரேலிய அரசை எதிர்ப்பது; பாலஸ்தீன மக்களின் நில அபகரிப்புக்கு எதிராக குரல்கொடுப்பது; பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல்கொடுப்பது ஒருபோதும் யூதமக்களை அவமானப்படுத்துவதாகாது. ஜெரிமி கோபினை தொழிற்கட்சியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவு கட்சிக்குள் உள்ள வலதுசாரி சக்திகள் கடந்த ஆண்டுகளாக ஜெரிமி கோபின் சாதித்த மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நிராகரிக்க முயற்சிப்பதன் வெளிப்பாடே.

“தன்னைத் தற்காத்துக் கொள்ளவே மனோகணேசன், என்னையும் சுமந்திரனையும் துமிந்தசில்வா விடுதலை மனு பிரச்சினையில் கோர்த்து விட்டுள்ளார் ” – செல்வம் அடைக்கலநாதன் !

தற்போது இலங்கை அரசியலில் பெரிய பிரச்சினையாக உருமாறி வுருகின்றது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவின் விடுதலை மனு தொடர்பான விவகாரமாகும். குறிப்பாக இந்த மனுவில் கையெழுத்திட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதில் கையெழுத்திட்டிருந்தமை பெரும் விவாதங்களை தோற்றுவித்திருந்த நிலையில் அந்த கையெழுத்தை வாபஸ் வாங்குவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

மேலும் மனோகணேசன் குறித்த மனுவில் கையெழுத்திட்டது தமிழ் அரசியல்கைதிகளையும் இதனை முன்மாதிரியாக கொண்டு விடுதலை செய்யவதை வலியுறுத்தவே என குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

இந்நிலையில் , “துமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரும் மனுவில் கையொப்பமிட்டதால் வந்த எதிர்ப்பில் இருந்து தப்பிக்கவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மகஜர் ஒன்றை தயாரிக்குமாறு தன்னிடம் மனோ கணேசன் வேண்டியுள்ளார்”  என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

துமிந்தவின் விடுதலைக்கு ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள மனோ கணேசன், தன்னைத் தற்காத்துக் கொள்ளவே, என்னையும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் இதில் கோர்த்து விட்டுள்ளார் என்றும், செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான​ ஏற்பாடுகளைச் செய்யுமாறு, தமிழ் முற்போக்கு் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, தன்னிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதனால், அதற்கான ஏற்பாடுகளைத் தான் செய்வதாக அவரிடம் பதிலளித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கையொப்பம் திரட்டப்பட்ட மகஜரில் தாங்கள் கையொப்பமிட்டுள்ள நிலையிலேயே, தன்னிடம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்றும், அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

துமிந்த சில்வாவையும் அரசியல் கைதிகளையும் ஒருபோதும் சம்பந்தப்படுத்த முடியாது. அதனால், அரசியல் கைதிகள் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவே தான் உறுதியளித்ததாகவும், அவர் மேலும் கூறியுள்ளார்.

“2035-ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருப்பார் சீன ஜனாதிபதி ஜின்பிங்” – சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முடிவு !

சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நடந்து வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.இந்த மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் மத்தியக்குழு உறுப்பினர்கள் சீன ஜனாதிபதி ஜின்பிங்கின் செயல்பாடுகளை மதிப்பிட்டனர். இதையடுத்து அவர் அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனாவின் அதிபராக தொடர்ந்து பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் 14-வது ஐந்தாண்டு திட்டத்திற்கும் (2021- 2025) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஐந்தாண்டு திட்டத்தில் உள்ளூர் சந்தையை மேம்படுத்தி பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்றுமதியை அதிகமாக நம்பி இருக்காமல் உள்நாட்டு நுகர்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்த ஐந்தாண்டு திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான யோசனையை சீன ஜனாதிபதி ஜின்பிங் முன் வைத்ததும் தெரிய வந்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாசே துங்குக்கு பிறகு கட்சியின் அதிகாரம் மிக்க தலைவராக ஜின்பிங் வளர்ந்துள்ளார். ஜனாதிபதி பதவி தவிர கட்சியின் பொதுச் செயலாளர் பதவி, ராணுவத்தின் தலைமை பதவி ஆகியவற்றையும் அவரே வைத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் அவர் இந்த பதவிகளில் இருப்பார் என்று தெரிகிறது. இன்னும் 15 ஆண்டுகளுக்கு அவருக்கு ஜனபதிபதி பதவி நீட்டிக்கப்பட்டு இருப்பதால், அந்த பதவிக்காலம் முடியும் போது அவருக்கு 82 வயதாகும். எனவே அதற்கு முன்னதாகவே அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்படவே அதிகம் வாய்ப்பு உள்ளது.

ஜின்பிங் கடந்த 2012-ம் ஆண்டு சீன ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்றார். அவரது 2-வது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு முடிவடைய இருந்தது. ஆனால் அதற்குள் தொடர்ந்து 15 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருப்பதால் 2035-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்.