October

Tuesday, October 26, 2021

October

“இலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்கள் தீர்க்கமானதாக காணப்படும்” – எச்சரிக்கிறார் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண !

“நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்கள் தீர்க்கமானதாக காணப்படும்” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(29.10.2020)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் நேற்று காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும். ஒன்று கூடல்களை தவிர்த்து செயற்பட வேண்டும்.

குறிப்பாக உற்சவங்களில் பங்பேற்பது திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வது, சுற்றுலாக்கள் மேற்கொள்வது போன்ற விடயங்களை தவிரத்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். குறிப்பாக நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்கள் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது. எனவே ஊரடங்கு அமுலில் இல்லாத பகுதிகளில் உள்ள மக்கள் உட்பட அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ருத்ராஜ் , ஜடேஜா அதிரடி ஆட்டம் – கொல்கத்தாவின் அடுத்த சுற்று கனவுக்கு தடை போட்டது சென்னை !

ஐ.பி.எல். தொடரின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நேற்று அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் எம்.எஸ்.டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஷுப்மான் கில் 26 ஓட்டங்களிலும், சுனில் நரைன் 7 ஓட்டங்களிலும் ரிங்கு சிங் 11 ஓட்டங்களிலும் வெளியேறினர். ஒரு பக்கம் இலக்குகள் விழ மறுமுனையில் நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவர் 61 பந்தில் 87 ஓட்டங்களில் அவரும் வெளியேறினார். மோர்கன் 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார்.  இறுதியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 பந்துப்பரிமாற்றங்களில் 5 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு
173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக  ஷேன் வாட்சன், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோர் இறங்கினர்.
இருவரும் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 50 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், வாட்சன் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடு 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  கெயிக்வாட் இம்முறையும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். டோனி ஒரு ஓட்டமெடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து சாம் கர்ரன் களம் இறங்கினார். சிறப்பாக ஆடிய கெயிக்வாட் 72 ஓட்டங்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜடேஜா இறங்கினார். ஜடேஜாவும், சாம் கர்ரனும் பொறுப்புடன் ஆடி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதிப் பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க சென்னை அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 31 ஓட்டங்களும், சாம் கர்ரன் 13 ஓட்டங்களும் அடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்தனர். இது சென்னை அணியின் 5வது வெற்றி ஆகும்.
கொல்கத்தா சார்பில் பாட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்

“ நாட்டை முழு அளவில் முடக்காது கொரோனா வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த இயலாது”  – அரசுக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் !

“ நாட்டை முழு அளவில் முடக்காது கொரோனா வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த இயலாது”  என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“பி.சி.ஆர். பரிசோதனைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால், நோயாளிகள் இல்லை என முழு அளவில் பரிசோதனைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன. குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் மாத்திரம் சந்தேகத்துக்கிடமான நோயாளிகளுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை பாரியளவில் மோசமடைந்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் சுகாதார அமைச்சு இதனை விட அவதானமாக இருந்திருக்க வேண்டும். இனி நாட்டை முழு அளவில் முடக்காது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இயலாது. குறைந்தது இரு வார காலமேனும் நாட்டை முழு அளவில் முடக்க வேண்டும்” – என்றார்.

“இறைமையை பாதுகாக்கக் கூடிய ஜனாதிபதி உள்ளதால் பொம்பியோவை விட பலம் வாய்ந்தவர் வந்தால் கூட பயமில்லை”-அமைச்சர் விமல் வீரவங்ச !

“இறைமையை பாதுகாக்கக் கூடிய ஜனாதிபதி உள்ளதால் பொம்பியோவை விட பலம் வாய்ந்தவர் வந்தால் கூட பயமில்லை” என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (29.10.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகையை காட்டி சிலர் வீணான பீதியை பரப்ப முயன்றார்கள்.அவரை விட பலம்வாய்ந்த நபர் வந்தாலும் அது குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை.

நாட்டின் இறைமையை பாதுகாக்கக் கூடிய தலைமை நாட்டில் உள்ளதால் யார் வந்தாலும் எமக்கு பயம் கிடையாது. கடந்த காலத்தில் இவ்வாறானவர்கள் வந்து சென்ற போது எவரும் குரல் கொடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் எம்.சீ.சீ பூர்வாங்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

கடந்த காலத்தை போல பொம்மை ஆட்சிய இன்று இல்லை. நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஏற்பத்தான் பலம்வாய்ந்த நாடுகள் அழுத்தம் கொடுக்கும். நாட்டின் இறைமை குறித்து சிந்திக்கும் தலைவர் உள்ள நிலையில் எவர் வந்தாலும் நாட்டுக்கு பாதகமான ஒப்பந்தத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் கைச்சாத்திடமாட்டார்கள் என்றார்.

மீண்டும் நடைமுறைக்கு வருகிறது “Work from home” !

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசேடமாக, இந்த வைரஸ் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையை ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் செயற்படுத்தப்பட்ட ´வீட்டில் இருந்தே வேலை செய்யும் காலத்தினுள் கிடைத்த அனுபவங்களைப் பயன்படுத்தி அத்தியாவசிய மற்றும் வேறு சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு மாற்றுத் திட்டங்களை வகுக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் பொது மேலாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றப் பேரவையின் உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரால் நியமனம் !

பாராளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு இன்று நேற்று பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த பாராளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்.

சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த பாராளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள். அதனடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

19ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“மலையகத்திற்கான பல்கலைக்கழகம் நிச்சயமாக அமைக்கப்படும் ” – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி!

“மலையகத்திற்கான பல்கலைக்கழகம் நிச்சயமாக அமைக்கப்படும் ” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உறுதியாக  தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் அசோக சேபால அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர், சட்டத்தரணி லலித் யூ.கமகேவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று நேற்றுமுன்தினம் (27)  வெளியிடப்பட்டது. அதற்கமைவாக தலவாக்கலை லிந்துலை நகர சபையில் உபதலைவராக பதவி வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் லெட்சுமன் பாரதிதாஸன் இன்றைய தினம் நகர சபைத் தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மலையகத்தில் அமையவுள்ள பல்கலைக்கழகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. முதல் இரண்டு பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. ஒதுக்கப்பட்டுள்ள நிலம் தொடர்பாக சில வேலைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் வரவு – செலவு திட்டத்தில் பல்கலைக்கழகத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நான் நம்புகிறேன்.  இந்திய அரசாங்கமும் உதவி செய்வதாகவும் கூறியிருக்கின்றது. மலையகத்திற்கான பல்கலைக்கழகம் நிச்சயமாக அமைக்கப்படும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாகவே இதன் பேச்சுவார்த்தைகளில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பாக எல்லோருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுக்கொண்டே இருக்கின்றேன். நேற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். அவரும் சிறந்த முடிவை பெற்று தருவதாக என்னிடம் கூறினார். நாட்டில் இப்போதைய சூழ்நிலையில் எல்லோரையும் ஒரு இடத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாகவே சம்பள பேச்சுவார்த்தையிலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

“இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து முஸ்லிகளும் ஒன்றுசேர வேண்டும்”- பிரான்சுக்கு எதிராக ஈரானில் மாணவர்கள் போராட்டம் !

இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்த பிரான்ஸுக்கு எதிராக ஈரானில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ்  தூதரகத்தில் இந்தப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். 

நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே போலீஸாரால் கொல்லப்பட்டார். அவர் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. மேலும், இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை பிரான்ஸ் ஜனாதிபதி  இமானுவேல் மெக்ரோன், இதனை  “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று திங்கட்கிழமை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்த நிலையில் மெக்ரோன் மற்றும் பிரான்ஸ்  அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ரெசா அலாவி கூறும்போது, “அவர்கள் தொடர்ந்து இதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டு இருந்தோம். ஆனால், இதுதான் அவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்குச் சரியான நேரம். இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து முஸ்லிகளும் ஒன்றுசேர வேண்டும்” என்று தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க இன்றைய தினம் பிரான்ஸின் நைஸ் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் மதவெறித்தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

துமிந்த சில்வா விடுதலை மனுவில் இட்ட கையெழுத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார் மனோகணேசன் !

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (29.10.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 2016 செப்டம்பர் 8 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அரச தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தீர்மானித்திருந்த குறித்த மனுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர்.

ஒக்டோபர் 20 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட இந்த மனு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் செல்லும் போது, துமிந்த சில்வாவின் விடுதலையானது உறுதிப்படுத்தப்படும் என்றும் ஆங்கில ஊடகம் கடந்த வாரம் அறிக்கையிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்ட மனோ கணேசன் துமிந்த சில்வாவை போன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை சிறையில் செலவிட்டுள்ளதாக கூறினார். ஆகவே அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுடன் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த மனுவில் கையெழுத்திட்டதாக குறிப்பிட்ட மனோகணேசன் இப்பொழுது இதனை வாபஸ் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.

பிரான்ஸில் தொடரும் பயங்கரவாத மதவெறித்தாக்குதல்கள் – தேவாலயத்தில் பெண் ஒருவர் தலைவெட்டப்பட்டு கொலை !

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த 16-ம் தேதி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மதம் தொடர்பான குழப்பமான ஒரு சூழல் பிரான்ஸில் நீடித்து வந்தது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினான். தன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அந்த நபர் கத்தியால் கொடூரமாக தாக்கினான்.   இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் தேவாலயத்தில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரான்ஸ் போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என அறிவித்தனர்.
பிரான்ஸ்: தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் - பெண் உள்பட 3 பேர் பலி ||  Three dead as woman beheaded in knife attack at French church
பயங்கரவாதி நடத்திய இந்த கொடூர கத்திக்குத்து 3 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒரு பெண்ணை தலைத்துண்டித்து கொலை செய்துள்ளான். மேலும் இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.
நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடியின் செயலுக்கு தண்டனை கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக பயங்கரவாதி தெரிவித்துள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க , கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார். அப்போது பேசிய இம்மானுவேல்,“கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை”என தெரிவித்தார். ஆனால், இம்மானுவேலின் கருத்துக்கு துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இதையடுத்து, பிரான்சுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது. குறிப்பாக துருக்கி இந்த விவகாரத்தில் பிரான்சை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
துருக்கி ஜனாதிபதி எர்டோகனை விமர்சித்து சார்லி ஹேப்டோ சமீபத்தில் கேலிக்கை சித்திரம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு பதிலடியாக ஈரானை சேர்ந்த பத்திரிக்கை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேலை அரக்கனாக சித்தரித்து கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளமையானது நாடுகளுக்கிடையான ஒரு முறுகளான நிலையை இந்த நம்பவம் ஏற்படுத்தியுள்ளமையை காணலாம்.