November

November

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் பலி !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு-13 பகுதியில் 54 மற்றும் 88 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினார் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு-12 பகுதியில் 88 வயதுடைய ஒருவரும் கொழும்பு-15 பகுதியில் 39 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.  மேலும், பொரள்ள பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

இதே நேரம் நாட்டில் மேலும் 544 பேருக்கு தற்போது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 171 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக காணப்படுகின்றது.

அரச காணிகளை தொழில்முனைவோருக்கு பிரித்து வழங்கும் வேலைத்திட்டம் – தமிழர்கள் விண்ணப்பிக்காதவிடத்து காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையவுள்ளது”  – தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் என். இன்பம்

“அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச காணிகளை தொழில்முனைவோருக்கு பிரித்து வழங்கும் வேலைத்திட்டம் – தமிழர்கள் விண்ணப்பிக்காதவிடத்து காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையவுள்ளது”   என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் என். இன்பம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(15.11.2020)  யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே என்.இன்பம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

20201115 103949

அவர் மேலும் தெரிவிக்கையில்….

அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச காணிகளை தொழில்முனைவோருக்கு பிரித்து வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசியல்வாதிகளால் பொதுமக்களுக்கு பூரண விளக்கம் வழங்கப்படவில்லை.

குறித்த திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வின்மை காரணமாக பல பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்த வில்லை. ஒரு சில அரசியல்வாதிகளை தவிர ஏனையவர்கள் குறித்த விடயம் தொடர்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த தவறி விட்டார்கள் .

இதன் காரணமாக காணி வழங்குவது சம்பந்தமான விடயம் பொது மக்களை சென்றடையவில்லை எனவே தமிழர் பகுதிகளில் தமிழ் மக்கள் காணிக்கு விண்ணப்பிக்காத விடத்து தென் இலங்கையைச் சேர்ந்தவர்கள் குறித்த காணிகளை பெறக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

எனவே தமிழ் மக்களுக்கு இந்த காணி வழங்குவது தொடர்பான விழிப்புணர்வை அரசியல்வாதிகள் ஏற்படுத்த தவறினால் தமிழர் பகுதியில் உள்ள காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையவுள்ளது எனவே இந்த விடயம் தொடர்பில் அரசியல் வாதிகள் இதுவரை கரிசனை செலுத்தாதது கவலையளிக்கின்றது.

நாளை வரை விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு இந்த வருட இறுதி வரை விண்ணப்பிக்க அரசிடம் காலநீடிப்பை கோர முயற்சிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

தொழில் முனைவோருக்கு அரசினால் காணி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றிற்கான விண்ணப்படிவங்கள் அரசினால் கோரப்பட்டிருந்ததுடன் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் போதுமான விண்ணப்பங்கள் கிடைத்திராமையால் திகதி இந்த மாதம் (கார்த்திகை .15) நீட்டிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இது தொடர்பாக மக்களிடையே தகவலை கொண்டு சென்று சேர்க்கவேண்டிய அரசாங்க அதிகாரிகளும் சரி அரசியல்வாதிகளுமு் சரி முறையாக தகவலை மக்களிடையே எடுத்துக்கூற தவறிவிட்டனர் என்பது தொடர்பாக பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைக்கு செல்ல ஆசைப்பட்ட இஸ்லாமிய பெண்ணுக்கு கண்கள் கத்தியால் குத்தி பிடுங்கப்பட்ட கொடூரம் !

இஸ்லாமிய பெண் ஒருவர் சொந்தமாக வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் விரும்பியதற்காக அவருடைய கண்கள் பறிக்கப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் கதேரா என்ற பெண் (வயது 33 ).  இவர் பெண் போலீசாக வேலைக்கு சேர்ந்துள்ளார். சம்பவத்தன்று கடமை  முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் பைக்கில் வந்து, கதேராவை ஆவேசத்துடன் சரமாரியாக தாக்கினர். பிறகு துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுவிட்டனர்.. அப்போதும் வெறிஅடங்காத அவர்கள், குதேராவின் கண்களை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இளம்பெண் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்துபோன கதேரா அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.

அவரது அலறல் கேட்டு, அருகிலுள்ளவர்கள் ஓடிவந்து, கதேராவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் கதேரா அனுமதிக்கப்பட்டார். தீவிரமான சிகிச்சையும் நடந்தது. ஆனாலும் அவருடைய பார்வை முழுமையாக இழக்கப்பட்டுவிட்டது.

khatera afghanistan: வேலைக்கு போக ஆசைப்பட்ட பெண்ணின் கண்கள் பிடுங்கப்பட்ட  கொடூரம்! - afghan policewoman blinded and shot for getting a job | Samayam  Tamil

கதேரா தன்னை இப்படி கொடூரமாக தாக்கியது தாலிபன் நபர்கள் என்று கதேரா போலீசில் தெரிவித்தார். இதையடுத்து, போலீசாரும் கதேரா சொன்னதையே சொல்கிறார்கள். ஆனால், “அப்படி ஒரு தாக்குதலை தாங்கள் நடத்தவே இல்லை, இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை” என்றும் தாலிபன்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, கதேராவின் அப்பாவே கூலிப்படை விட்டு மகள் மீது இந்த தாக்குதலை நடத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதற்கு காரணம், கதேரா வேலைக்கு போவது அவர் அப்பாவுக்கு பிடிக்கவில்லையாம். ஆத்திரம் ஆரம்பத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு சொல்லி உள்ளார்.  அதனால் அப்பா தான் மகளை இப்படி செய்திருக்கலாம் என்கிறார்கள். வேலைக்கு சேர்ந்து முழுதாக ஒரு வருஷம் கூட முடியவில்லை. அதற்குள் இப்படி ஒரு பயங்கரம் கதேராவுக்கு நடந்துவிட்டது.  “பறிக்கப்பட்டது கண்கள் மட்டுமல்ல, என் கனவுகளும்தான்” என கூறியுள்ளா் கதேரா.

சுழிபுரம் மத்தி குடாக்கனை இரட்டைக்கொலை – “21 பேர், அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்றுமுன்தினம் (13.11.2020) வெள்ளிக்கிழமை மாலையளவில், மரணமடைந்த குறித்த நபர்கள் இருந்த இடத்திற்கு வந்த 21 பேர், அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், DIG அஜித் ரோஹண தெரிவித்தார்.

இம்மோதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த  சின்னவன் செல்வம் (55) மற்றும் இராசன் தேவராசா (32) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (14) மல்லாகம்  நீதவானினால் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதோடு, பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு நேற்று முன்தினமும் ஏற்பட்டுள்ளது. மாலை இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறும் சூழல் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்,

பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

அதில்  சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (32) சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த 21 பேரில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களை இன்றையதினம் (15.11.2020) மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

………………………………………………………………………………………………………………………..

வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை குணாதிசயங்கள் இன்மையினால் ஏற்படுகின்ற சொத்து இழப்புகள் உயிரிழப்புகள் மட்டுமல்ல வாழ்க்கையின் விலை மதிப்பற்ற சந்தோசங்களையும் மன அமைதியயையும் நாங்கள் இழக்கின்றோம். இந்த சண்டை சச்சரவுகளை தீர்க்க பொலிசார் அதனை தீர்த்து வைக்க நீதிமன்றம் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் இரு வருமானமீட்டுபவர்களை இழந்தால் அதற்கு அரசும் சுற்றியுள்ளவர்களும் நிதி உதவி வழங்க வேண்டும் உடல் உறுப்புக்களை இழந்தால் ஏற்படும் துன்பம். இவை எல்லாவற்றுக்கும் ஏற்படும் செலவை சிந்திப்பதற்கு சில நிமிடங்கள் செலவழித்து இருந்தால் தவிர்த்திருக்கலாமே. உளவியல் கற்கையயை அறிமுகப்படுத்தி முதலில் சிறந்த மனிதர்களை உருவாக்கினால் குடும்பம் மட்டுமல்ல உலகமே அமைதிப் பூங்காவாகும். (ஜெயபாலன்.த)

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகளில் ஈடுபட்ட சிவஞானம் சிறிதரன் மீது  பொலிஸார் வழக்கு பதிவு !

அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் நாள் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால்  மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அதனை முன்னிட்டு இன்று (15.11.2020) காலை, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலும் அப்பகுதி மக்களுடைய இணைவிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், துப்பரவு பணிக்கு அனுமதி வழங்கியது யார்?  என வினவியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது  வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துப்பரவு பணிகளில் மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  குறித்த துயிலுமில்லத்தை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ள மக்களின் விபரங்களை கிளிநொச்சி காவல்துறையினர் பெற்றுச்சென்றுள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை இம்முறை மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா? என்பது தொடர்பில் இதுவரை எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

முன்னதாக மாவீரர் தினத்தை உணர்வு ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களுக்கு சிவஞானம் சிறிதரன் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காற்றில் பரவும் கார்பனீராக்சைடு அளவு அதிகரிப்பு – விரைவில் பெட்ரோல், டீசல் கார்களை தடை செய்ய இங்கிலாந்து அரசு திட்டம் !

காற்றில் பரவும் கார்பனீராக்சைடு (Carbon dioxide)  அளவின் அதிகரிப்பு காரணமாக பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே காற்றில் கார்பனீராக்சைடு கலப்பதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக கரும்புகையை வெளியிடும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் பயன்படுத்தும் கார்களை தடை செய்ய சர்வதேச நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இதற்கிடையே, இங்கிலாந்தில் 2040-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் கார்களை முழுவதுமாக தடைசெய்வது என திட்டமிடப்பட்டு இருந்தது. அந்தத் திட்டத்தை முன்கூட்டியே 2035-ம் ஆண்டில் இருந்து தடை செய்ய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்தார். இப்போது அந்த முடிவை இன்னும் முன்கூட்டியே அவர் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அடுத்த வாரம் 2030-ம் ஆண்டிற்குள் பெட்ரோல், டீசல் கார்களை இங்கிலாந்தில் முழுவதுமாக தடைசெய்வது என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் எரிசக்தி மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, மின்சார கார் சந்தையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விற்பனையாகும் கார்கள் 73.6 சதவீதம் பெட்ரோல், டீசல் கார்களாக உள்ளன. 5.5% கார்கள் மட்டுமே மின்சார கார்கள் ஆக உள்ளன. மின்சார கார்களின் விலை மிகவும் அதிகம் என தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

டொனால்ட் ட்ரம்ப்க்கு ஆதரவான பேரணியில் கடும் வன்முறை – பலர் படுகாயம் !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், 306 தேர்தல் சபை வாக்குகளை பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ளார். வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் அமெரிக்காவில் தாங்கள் ஜனாதிபதி பதவி ஏற்ற பின், அடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்க தொடங்கிவிட்டனர்.
ஆனால் தோல்வியை ஏற்பதற்கு டிரம்ப் தயாராக இல்லை. தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டிய டிரம்ப் இதுதொடர்பாக சட்டப்போராட்டத்திற்கு தயாராகி வருகிறார். அதேசமயம், டிரம்பின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி டிரம்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டன் டிசியில் பேரணியாக சென்றனர். இவர்களுடன் பல அமைப்புகளும் இணைந்தன. டிரம்புக்கு ஆதரவாகவும், தேர்தல் முடிவுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
அதிபர் டிரம்புக்காக வாஷிங்டன்னில் பேரணி நடத்திய ஆதரவாளர்கள்
நேற்று இரவு வரை நடந்த இந்த பேரணியில் திடீர் வன்முறை வெடித்தது.
போராட்டம் நடத்திய ஆன்டிஃபா மற்றும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் குழுக்களுக்கும், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வன்முறை உருவானது. டிரம்பின் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். கட்சி கொடிகளை பறித்து தீயிட்டு கொளுத்தினர். டிரம்புக்கு ஆதரவான டிஷர்ட்டுகளை விற்பனை செய்த வியாபாரிகளின் மேஜைகளை தூக்கி போட்டு கவிழ்த்தனர். இதனால் இரவு முழுவதும் மோதல் நீடித்தது. வாஷிங்டனில் உள்ள 5 பகுதிகளில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் பலருக்கு காயம் ஏற்பட்டது. 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மீது இளைஞர்கள் தாக்குதல் – இருவர் கைது !

வவுனியா கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர்.

எஸ்.வினோ நோகராதலிங்கம் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

நேற்று (14.11.2020 ) மாலை 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவொன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர். அதனையடுத்து வாகனத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் கிழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

இதனை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமையினையடுத்து அவ் இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

அதன் பின்னர் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பாராளுமன்ற உறுப்பினரை ஏற்றிக்கொண்டு வாகனம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவு என்பதனால் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்தின் சி.சி.ரிவி காணொளி உதவியுடன் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இராணுவ சேவைக்கு இளைஞர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு கிழக்கில் !

இலங்கை இராணுவ சேவைக்கு நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் முப்பத்தையாயிரம் பேரை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்றுவருகிறது.

இத்திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளை இராணுவ சேவையில் இணைப்பதற்கான நேர்முகப்பரீட்சை நேற்றையதினம் (14.11.2020) மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இராணுவ சேவை நேர்முகப்பரீட்சைக்குச் சமுகமளித்திருந்தனர்.

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இந்த நேர்முகப்பரீட்சையை நடாத்தினர்.

இராணுவ படையில் பணியாற்ற விரும்பும் இளைஞர் யுவதிகளை இன மற்றும் பிரதேச வேறுபாடின்றி இணைத்துக்கொள்ளும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

“கடற்றொழில் அமைச்சர் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுளை ஊக்குவிக்கின்றாரா? ” -துரைராசா ரவிகரன் கேள்வி !

“கடற்றொழில் அமைச்சர் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுளை ஊக்குவிக்கின்றாரா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டின் வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும், இந்திய மீனவர்களினால் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.