November

November

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அடைய மாவை.சேனாதிராஜா தலைமையில் புதிய அமைப்பு ?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழர் தேசிய சபை என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அடைந்துக் கொள்வதற்காக இத்தகைய புதிய அமைப்பை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

குறித்த அமைப்பில், ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின்சூக்கா ஆகியோரையும் உள்ளடக்க இருப்பதாக  தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மாவை சேனாதிராஜா தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், குறித்த விடயம் தொடர்பாக தற்போதைய நிலைமையில் எந்தவிளக்கத்தையும் வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.

“அரசு கொண்டுவந்த 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேரையும் எதிர்க்கட்சியுடன் அமர வைக்க வேண்டாம்” – சபாநாயகரிடம் லக்ஸ்மன் கிரியெல்ல வேண்டுகோள்!

அரசு கொண்டுவந்த 20ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேரையும் ஆளும் தரப்புடன் இணைத்து விடுமாறும், எதிர்க்கட்சியில் அவர்களை வைத்திருந்தால் பாரிய பிரச்சினைகள் உருவாகும் எனவும் எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (13.11.2020) நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி கொண்டுவந்த விவாதம் முடிந்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது:-

“அரசு கொண்டுவந்த 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேரையும் எதிர்க்கட்சியுடன் அமர வைக்க வேண்டாம் எனக் கடிதம் மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளேன். எனவே, நீங்கள் அதனைக் கருத்தில்கொண்டு அவர்கள் 8 பேரையும் ஆளும் தரப்பின் பக்கம் ஆசனங்களை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும்.

எதிர்வரும் 17ஆம் திகதி வரவு – செலவுத் திட்ட விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறும். ஆகவே, இவர்கள் 8 பேரையும் ஆளும் கட்சியின் பக்கமோ – ஆளும் கட்சியின் கும்பலிலோ ஆசனங்களை ஒதுக்கிக்கொடுங்கள்” – என்றார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “இந்தக் காரணிகள் குறித்து நான் ஆராய்ந்து முடிவு ஒன்றை வழங்குகின்றேன்” என்றார்.

“அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி மக்களின் நினைவேந்தல் உரிமையை பறிக்கக்கூடாது” – பாராளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன்..!

“அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி மக்களின் நினைவேந்தல் உரிமையை பறிக்கக்கூடாது” என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் காராணமாக நிலவும் அசாதாரண சூழல் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று(13.11.2020) இடம்பெற்ற விசேட ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நவம்பர் மாதம் உலகெங்குமுள்ள மக்கள் போரில் மரணித்த தம் மாவீரர்களை நினைவேந்தும் காலம். எமது நாட்டிலும் மூன்று தசாப்த யுத்தமொன்று நிகழ்ந்தேறியது. வடக்கு-கிழக்கில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக ஆயுதம் ஏந்திப் போராடி மரணித்த தாய்மார்கள், தந்தையர்கள், சகோதரர்கள் மற்றும் பிள்ளைகளைக் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். நவம்பர் மாதத்தில் தான் அவர்கள் இவர்களைக் காலம் காலமாக நினைவேந்தி வருகிறார்கள்.

ஜே.வி.பியின் தலைவர் ரோகன விஜயவீரவை நினைவு கூருவதற்கு அனுமதியிருக்கிறது. கவலைக்கிடமாக நினைவு கூரலிலும் கூட இந்த நாட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது. எமது தமிழ் பெற்றோர்களுக்கோ இங்கு தம் இறந்த பிள்ளைகளை நினைவு கூரும் உரிமை மறுக்கப்படுகிறது. இந்த விடயத்தை நான் இந்த ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்தில் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் உண்டு.

கொரோனாவைக் காரணம் காட்டி பொலீசாரும், ஏனைய அதிகாரிகளும் மக்கள் துயிலும் இல்லங்களுக்குச் செல்வதை இடைமறிக்கத் தயாராவதை நான் அறிகிறேன். அரசாங்கம் கொரோனாவைக் காரணம் காட்டி மக்களது நினைவேந்தல் உரிமையைப் பறிக்கக் கூடாதெனக் கேட்டு நிற்கின்றேன்” எனக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் உயர்கல்வி நிலையம் அமைக்க போலியான தகவல்களை வழங்கிய முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா !

கிழக்கில் உள்ள சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கு, 25 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள போலி ஆவணங்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சமர்ப்பித்துள்ளதாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (13.11.2020) தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் இலங்கையின் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் இரண்டு அதிகாரிகள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தனர்.

Batticalao Private Campus Issue

அதன்படி ஹிஸ்புல்லா, அவர் நிறுவிய ஹிரா பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் நிலத்திற்கு விண்ணப்பித்ததாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் காணி தொடர்பான பணிப்பாளர் அசங்க உதயகுமார தெரிவித்தார்.

அத்தோடு ஹிரா அறக்கட்டளை சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு தவறான ஆவணத்தை ஹிஸ்புல்லா பயன்படுத்தியதாக சமூக சேவைகள் திணைக்கள அதிகாரி தம்மிக்க வசலபண்டார தெரிவித்தார்.

சவுதி அரேபியாவின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் உயர்கல்வி மையம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்குமாறு 2012 மார்ச் 15 அன்று ஹிஸ்புல்லா அப்போதைய அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் திடீரென வீதிகளில் விழுந்து இறக்கும் மனிதர்கள் – பொய்யான தகவல்களை பரப்பிய ஒருவர் கைது..!

இலங்கையில் பல பிரதேசங்களிலும் வீதிகளில் திடீரென நபர்கள் விழுந்து உயிரிழப்பது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.

இதனால் மக்கள் இடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், சிலர் கொரோனா வைரஸினால்தான் இந்த உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்றனர். பாணந்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் இதுசம்பந்தமாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டாரவிடம் வினவியபோது, இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதுவரை இது கொரோனா வைரஸ் மரணங்கள் எனக் கூறமுடியாது எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இதே நேரத்தில் வீதிகளில் கிடைக்கும் சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என சமூக ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) குறித்த சம்பவம் தொடர்பாக கடுகண்ணாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்ககளம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது” – மனோ கணேசன்  ட்வீட் !

அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் மீண்டும் சூடு பிடிப்பதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தனது அதிகாரபூர்வ டுவிற்றர் பக்கத்தில் பதிவொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

மறக்கப்பட்ட தமிழ் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரம் தொடர்பில் அமைச்சர்களான நாமல் ராஜபக்சவிடம் யாழ்ப்பாணத்திலும், டக்ளஸ் தேவானந்தாவிடம் மட்டக்களப்பிலும் ஊடங்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் கைதிகள் விவகாரம் குறித்து ஊடகங்களினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாலும், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம் எழுதியுள்ளதன் மூலமாகவும் தற்பொழுது அரசியல் கைதிகளை விடுதலை செய்வது சூடு பிடிக்கிறது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பான மனுவில் கையெழுத்திட்டிருந்த மனோகணேசன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவே அதில் கையெழுத்திட்டதாக குறிப்பிட்டிருந்தமையானது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்ததை தொடர்ந்து அந்த மனுவில் தான் இட்ட கையெழுத்தை வாபஸ் வாங்குவதாக மனோகணேசன் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் குடும்பங்களுக்கிடையிலான தகராறு – வாள்களுடன் பின்னிரவில் வீட்டினுள் புகுந்து தாக்குதல் – இருவர் பலி !

குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் உறவினர்களுக்கு இடையே மோதல் உருவாகும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலையிலிருந்து முறுகல் நிலை காணப்பட்டுள்ளது. அதுதொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் தெரிவித்தனர். அதனால் ஒரு பகுதியினர் வாள்களுடன் மற்றைய பகுதியினரின் வீட்டுக்குள் பின்னிரவில் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று – பிரேசில் நட்சத்திர வீரா் நெய்மா் விலகல் !

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் இருந்து பிரேசில் அணியின் நட்சத்திர வீரா் நெய்மா் காயம் காரணமாக விலகியுள்ளாா்.

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் பிரேசில் அணி, உருகுவே அணியுடன் அடுத்த வாரம் மோதுகிறது. இந்த நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மா் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உருகுவேக்கு எதிரான தகுதிச்சுற்றில் இருந்து விலகியுள்ளாா். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மைன் அணிக்காக விளையாடியபோது நெய்மருக்கு காயம் ஏற்பட்டது.

இதுதொடா்பாக பிரேசில் கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பிரேசில்-உருகுவே இடையிலான தென் அமெரிக்க தகுதிச்சுற்றில் நெய்மா் விளையாடமாட்டாா்’ என குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து பிரேசில் அணியில் நெய்மருக்குப் பதிலாக பெட்ரோ சோ்க்கப்பட்டுள்ளாா்.

பெட்ரோ 2018, செப்டம்பரில் பிரேசில் அணிக்காக தோ்வு செய்யப்பட்டாா். ஆனால், முழங்கால் பிரச்னை காரணமாக அறிமுக ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்தாா். அதன்பிறகு இப்போது பிரேசில் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளாா். பிரேசில் அணியின் பின்கள வீரரான மெனினோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா் வெனிசுலா மற்றும் உருகுவே அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளாா்.

எத்தியோப்பியாவில் இருந்து டிக்ரே மாகாணத்தை தனிநாடாக்க முயற்சிக்கும் டிக்ரேயன்ஸ் சமூகத்தினர் – அரசுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளில் !

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. இந்நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகிறார். இவர் 2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
Mohammed bin Rashid and Mohammed bin Zayed: Abi Ahmed is a man of wisdom  making peace and hope in his country and his neighborhood - Teller Report
எத்தியோப்பியாவில் டிக்ரே என்ற மாகாணம் அமைந்துள்ளது. சூடான், எரிட்ரியா ஆகிய நாட்டுகளின் எல்லையோரம் அமைந்துள்ள இப்பகுதி தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும்.
Tigray Province - Wikipedia
இந்த மாகாணத்தில் டிக்ரேயன்ஸ் எனப்படும் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018 ஆம் ஆண்டுவரை எத்தியோப்பிய அரசில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர். மேலும், அந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலரும் எத்தியோப்பிய ராணுவத்தில் பெரும் பங்காற்றி வந்தனர்.
தன்னாட்சி பெற்ற டிக்ரே மாகாணத்தை சேர்ந்தவர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் எத்தியோப்பிய ராணுவத்தில் அங்கம் வகிக்கின்றனர். மேலும், சிலர் எத்தியோப்பிய ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.
மேலும், இந்த மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து தனியாக பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டிக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், 2018 ஆம் ஆண்டு முதல் அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் டிக்ரேயன்ஸ் எத்தியோப்பிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒதுக்கப்பட்டனர். இதனால், மத்திய அரசுக்கும் டிக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது.
எத்தியோப்பியா - அரசுக்கு எதிராக திரும்பிய ராணுவ வீரர்கள் - 550 பேர் பலி ||  Ethiopias Tigray Conflict Worsens 550 Rebels Killedஇந்த மோதலின் உச்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிக்ரே மாகாணத்தில் இருந்த டிக்ரேயன்ஸ் சமூகத்தின் ராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். டிக்ரே மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளையும், ஆயுதக்கிடங்குகளையும் டிக்ரேயன்ஸ் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கைக்கு எத்தியோப்பிய ராணுவத்தின் உயர்பொறுப்புகளில் இருந்த டிக்ரேயன்ஸ் சமூகத்தினரும் உதவி செய்தனர். இதனால் பயனாக டிக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. மேலும், டிக்ரேயன்ஸ் எத்தியோப்பிய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாட்டின் பிற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தை டிக்ரே மாகாணத்தில் பிரதமர் அபே அகமது களமிறக்கினார். அங்கு டிக்ரேயன்ஸ் சமூகத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களும், ராணுவத்தினரும் இணைந்து மத்திய படையினருக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மோதலில்  டிக்ரேயன்ஸ் சமூக ராணுவ, கிளர்ச்சியாளர்கள் 550 பேர் உயிரிழந்துள்ளதாக எத்தியோப்பிய ராணுவம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

மௌனம் களைத்த சீனா – ஜோ பைடனுக்கு வாழ்த்துச்செய்தி !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு உலக நாடுகளின் தலைவர் அனைவரும் வாழ்த்து தெரிவித்த போதிலும் கூட சீனா வாழ்த்து தெரிவித்திருக்கவில்லை. இந்நிலையில் நேற்று சீனா ஜோபைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், ”அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலி்ன் முடிவுகள் சட்டத்துக்கு உட்பட்டே உறுதி செய்யப்படும் என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.