November

November

ஜி20 மாநாட்டினை புறக்கணித்து கோல்ஃப் விளையாடச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் !

ஜி20 நாடுகள் மாநாட்டில் தொடக்கத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா குறித்த ஆலோசனையின்போது அதைப் புறக்கணித்து, மைதானத்தில் கோல்ஃப் விளையாடி பொழுதைக் கழித்தமை சமூக வளைத்தளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது.

ஜி20 நாடுகள் மாநாடு தொடங்கியபோது, அதில் உலக நாடுகளின் தலைவர்களுடன் சேர்ந்து பங்கேற்ற ட்ரம்ப் தொடர்ந்து காணொளியில் மாநாட்டில் தொடர்பில் இருந்தாரா? அல்லது பாதியிலேயே வெளியேறினாரா? என்பது தெளிவாக இல்லை.

15-வது ஜி20 நாடுகள் மாநாட்டை இந்த முறை சவுதி அரேபியா நடத்துகிறது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறை மாநாடு, காணொளி வாயிலாகவே நடத்தப்படுகிறது. இரு நாட்கள் நடத்தப்படும் மாநாட்டில்  முதல்நாளில் 20 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் தொடக்கத்தில் பங்கேற்ற ட்ரம்ப் முதல் 13 நிமிடங்கள் மட்டுமே தொடர்பில் இருந்தார். அதன்பின் கொரோனாவைரஸ்  குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு சென்றுவிட்டார்.அதன்பின் காணொளியில் ட்ரம்ப் வரவி்ல்லை.

ஆனால் சிறிது நேரத்தில் வாஷிங்டன் நகருக்கு புறநகரில் இருக்கும் கோல்ஃப் கிளப்பில் உள்ள மைதானத்தில் ட்ரம்ப் கோல்ஃப் விளையாடியதைக் காண முடிந்தது.

ஜி20 நாடுகளின் தலைவர்கள் சேர்ந்து, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் இமானுல் மெக்ரான், தென் கொரிய அதிபர் மூன் ஜா இன் ஆகியோர் பங்கேற்றுப் பேசிய போது, அதில் ட்ரம்ப் பங்கேற்காமல் கோல்ஃப் விளையாடச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து சி.என்.என் வெளியிட்ட செய்தியில், “ அமெரி்க்க ஜனாதிபதி தேர்தல் முடிவு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனுக்கு சாதகமாக வந்த பின் உலக நாடுகளின் தலைவர்கள் ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.இதனால் ட்ரம்ப் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார். இதன் காரணமாகவே அவர் ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்ேகற்பதில் ஆர்வமில்லாமல் இருந்தார்” எனத் தெரிவித்துள்ளது.

 

“அமெரிக்க சமூகம் சிதைந்துவிட்டது, இதனை சரிசெய்வதற்கு பைடனால் ஏதாவது செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை” – சீன அரசின் ஆலோசகர் ஜெங் யோங்னியான்

டொனால்ட்டிரம்பின் பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. குறிப்பாக கொரோனாவை கையாளுதல், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று ஜோபைடன் ஜனாதிபதி பதவிக்கு தகுதி பெற்றிருக்கிறார்.
அவரது நிர்வாகத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? உள்நாட்டு பிரச்சனைகளை எப்படி தீர்க்கப்போகிறார்? சர்சதேச விவகாரங்களில் அவரது நிலைப்பாடு என்ன? என்பதை அறிய உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன. குறிப்பாக ஜோ பைடன் ஜனாதிபதியானால் அமெரிக்கா-சீனா இடையிலான வலுவான உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் அமையும் என சீன வல்லுனர்கள் கருதினர்.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கும் பைடன் நிச்சயம் பலவீனமான ஜனாதிபதியாகவே இருப்பார் என சீன அரசின் ஆலோசகர் ஜெங் யோங்னியான் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான அதன் உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும். அத்துடன், அமெரிக்கா மேற்கொள்ளும் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா தயாராக இருக்க வேண்டும். நல்ல பழைய நாட்கள் முடிந்துவிட்டன. அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக நிலவும் பனிப்போர் ஒரே இரவில் முடிவுக்கு வராது.
பைடன் வெள்ளை மாளிகையில் நுழைந்த பின்னர் சீனா மீதான பொதுமக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அமெரிக்க சமூகம் சிதைந்துவிட்டது, இதனை சரிசெய்வதற்கு பைடனால் ஏதாவது செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.
பைடன் நிச்சயமாக மிகவும் பலவீனமான ஜனாதிபதியாகவே இருப்பார். எனவே உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், அவர் ராஜதந்திர ரீதியாக ஏதாவது செய்வார். சீனாவுக்கு எதிராகவும் ஏதாவது செய்வார். டிரம்ப் போரில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் ஜனநாயக கட்சியின் பைடன் போர்களைத் தொடங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
“அமெரிக்க சமூகம் சிதைந்துவிட்டது, இதனை சரிசெய்வதற்கு பைடனால் ஏதாவது செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை” – சீன அரசின் ஆலோசகர் ஜெங் யோங்னியான

“அமெரிக்காவின் தடுப்பூசி விலையை விட ரஷிய தடுப்பூசியின் விலை மலிவாக இருக்கும் ” – ரஷ்யா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை பல நாடுகளிலும் நடைபெற்று வருகிற நிலையில் அவற்றுக்கான சந்தை சூடுபிடிப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவன தடுப்பூசி மற்றும் அந்நாட்டுபைசர் நிறுவன தடுப்பூசி என்பனவற்றின் விலைவிபரங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க தடுப்பூசிகளை விட ரஷியா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை மிகவும் மலிவாக இருக்கும் என்று அதன் அதிகாரபூர்வ இணையதளம் கூறுகிறது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லங்கன் பிரிமியர் லீக் 2020 – காலி கிளேடியட்டரின் புதிய தலைவராகிறார் அப்ரிடி! 

LPL கிரிக்கெட் போட்டி தொடரின் காலி க்ளேடியேடர்ஸ் அணிக்கு தலைவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சஹிட் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

குறித்த அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க தலைவராகா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் LPL தொடரில் இருந்து விலகுவதாக அவர் அண்மையில் அறிவித்திருந்தார் .

மேற்படி அணியின் உப தலைவராக பானுக ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பிரித்தானியா !

பிரெக்சிற் நிலை­மாற்ற காலம் நிறைவுக்கு வரும் நிலையில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் பிரித்தானியாவும் கனடாவும் சனிக்கிழமை கையெழுத்திட்டன.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு புதிய லட்சிய வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பிரெக்சிற் மாற்றம் காலம் டிசம்பர் 31 அன்று காலாவதியாகிறது, அதாவது கூட்டணி மற்றும் பிற நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் பிரித்தானியா இனி சேர்க்கப்படாது.

கனடாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், இரு நாடுகளும் முன்பு இருந்த அதே விதிகளின் கீழ் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளப்படவுள்ள அதே நேரத்தில் பெஸ்போக் ஒப்பந்தம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை நடத்தும் திறன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதன் முக்கிய நன்மைகளில் ஒன்றாகும் என்று பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.

கடந்த ஆண்டு பிரித்தானியாவின் பொருட்கள் மற்றும் சேவைகளில் மொத்த வர்த்தகத்தில் 1.5% கனடாவை சார்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடிக்கிறீர்கள் ” –  தமிழ்க்கட்சிகள் மீது வியாழேந்திரன் பாய்ச்சல் 

“நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடிக்கிறீர்கள் ” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் எஸ்.வியாழேந்திரன் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது புதிய வடிவம் வந்துள்ளது. பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் இருக்கின்ற  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், வியாழேந்திரனைப் பாருங்கள் என்றும் வடக்கிலே அங்கஜனைப் பாருங்கள் என்றும் எங்களைப்பற்றிதான் குறைகூறிக்கொண்டிருக்கின்றனர்.

எனக்கொரு சந்தேகம் அபிவிருத்தியையும் உங்களால் பெற்றுக்கொடுக்க முடியாது. நீங்கள் என்ன சொல்லி தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருவோம், உரிமையைப் பெற்றுத்தருவோம் என்று அதைப் பெற்றுக்கொடுங்கள். நாம் அபிவிருத்தியை செய்கிறோம்.

ஆனால் நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை.! நீங்கள் எதிர்க்கட்சியில்  இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடித்து அரசாங்கம் தரும் வாகன அனுமதிப்பத்திரத்தை, மாத சம்பளத்தை பொலிஸ் பாதுகாப்பையும், அரசாங்கம் தரும் சிற்றூண்டிச் உணவையும் நன்றாகச் சாப்பிட்டு, அரசாங்க விடுதியில் நன்றாக படுத்து நித்திரை கொண்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதற்கு இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கின்ற அரசியல் தலைவர்கள் எம் மக்களுக்குத் தேவை. உங்களால் தமிழ் மக்களுக்குரிய அடிப்படைப் பிரச்சினையை கூட பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் எதற்கு அரசியலில் இருக்கின்றீர்கள். நாங்கள் ஆளும் கட்சியில் இருந்தாலும் எமது இனத்திற்கு எதிரான வேலைகளை ஒரு போதும் செய்ய மாட்டோம்.

மக்களின் எதிர்பார்ப்பை நாடி பிடித்து   நிறைவேற்றுபவன்தான் உண்மையான மக்கள் தலைவனாக இருக்க வேண்டும்.  பத்திரிகைக்கும்  நாடாளுமன்றில் சத்தமிடுவதாலோ பத்திரிகைகளில் அறிக்கை விடுவதாலோ தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுவதில்லை.

எதிர்க்கட்சியில் இருக்கின்ற இரா.சம்பந்தன் உட்பட அத்தனை  நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் இரு கரம் கூப்பி அழைக்கிறேன் .வாருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை சார்பாக எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்றில்லாமல் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றாகப் பேசுவோம். நாங்கள் உங்களோடு வருகிறோம்.

உங்களுக்கு அது முக்கியமில்லை பிரச்சினையிருந்தால்தான் உங்களுக்கு அரசியல். எங்களுக்கு  எவ்வாறாவது பிரச்சினையைத் தீர்த்துக்கொடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“நீங்கள், உரிமையையும் பெற்றுக் கொடுப்பதில்லை அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரே கதையை தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மாறி மாறி பேசிக்கொண்டு காலத்தைப் முடிக்கிறீர்கள்

“தமிழ்மக்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர அனுமதி மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்”  – அனுரகுமார திஸநாயக்க 

“தமிழ்மக்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர அனுமதி மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்”  என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைக்கு இடமில்லை என்று ஆளுங்கட்சியினர் வீரவசனம் பேசுவது, இது கடும்போக்குவாத இனவாத எதேச்சதிகார அரசு என்பதை வெளியுலகத்துக்கு எடுத்துக் காட்டுகின்றது.

பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளாலே தான் ஜனாதிபதியாக வந்தேன் என்ற இறுமாப்பு கோட்டாபய ராஜபக்சவின் மனதில் இருக்கும் வரைக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் தலைமையிலான அரசு தொடர்ந்து முன்னெடுத்தே செல்லும். இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

இன, மத, மொழி ஒற்றுமைகளைச் சிதறடிக்கும் இந்த அரசின் ஆட்சிக்குப் பாடம் புகட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஓரணியில் திரள வேண்டும்.போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நினைவுகூர அனுமதி மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2ஆம் திகதியுடன் ஊரடங்கை நீக்க இங்கிலாந்து அரசு முடிவு! 

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவிய வைரஸ் தொற்று, ஜூன் மாதத்தில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, மார்ச் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் இங்கிலாந்தில் கொரோனாவின் 2-ம் அலை பரவத் தொடங்கியது. இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அங்கு மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார்.

நவம்பர் 5-ந் திகதி முதல் டிசம்பர் 2-ந் திகதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், தேவை ஏற்பட்டால் மீண்டும் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால். டிசம்பர் 2-ந் திகதியுடன் நாடு தழுவிய ஊரடங்கை முடித்துக்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

அதே நேரத்தில் மாகாண அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போரிஸ் ஜான்சன் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

20 ஆயிரத்தை தாண்டியது இலங்கை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  !

நேற்றைய தினம் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் 391 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 04 பேர், கட்டார் – தோஹாவிலிருந்து 03 பேர், சீனாவிலிருந்து ஒருவர் மற்றும் ரஷ்யாவிலிருந்து ஒருவர் ஆகியோர் இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 171ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 479 பேர் நேற்றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6 ஆயிரத்து 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 456 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றால் நேற்றையதினம் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை ​சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், பொரளை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு இறப்புக்களுடன் கொரோனா இலங்கை உயிரிழப்பு நிலவரம் 87 ஆக அதிகரித்துள்ளது.

 

இலங்கையில் புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு! 

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு புதிய அமைச்சுகள், ஜனாதிபதியினால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில மாற்றங்கள் ஏற்படும் என அரசாங்கத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு புதிய அமைச்சுகள், ஜனாதிபதியினால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இலங்கையில் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், மேலும் சில அமைச்சுகளின் விடயதானங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி செயற்படவுள்ளது.

இதுவரையில், ஜனாதிபதி செயலகத்தின் கீழிருந்த இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், சிறிலங்கா ரெலிகொம் மற்றும் அதன் நிர்வாக நிறுவனங்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இதுவரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கீழிருந்த பொலிஸ் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்பன புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.