December

December

“கடந்த கால தமிழ்தலைமைகளின் சுயநலன் சார்ந்த தவறான அணுகுமுறைகளே தமிழ் மக்களின் தொடர் பிரச்சினைகளுக்கு காரணமாகும்” – அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு !

தேசிய நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்குமென்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உறுதியளித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று (01.12.2020) மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படையிலான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந் நிலையில், இந்த அபிவிருத்தி திட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டிய கடற்றொழில் சார் விடயங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதே நேற்றைய சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்திருந்தது.

இதன்போது, இலங்கையின் வரவு – செலவுத் திட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பருத்தித்துறை, குருநகர், – பேசாலை போன்ற மீன்பிடித் துறைமுகங்களையும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, நீர் வேளாண்மையை விருத்தி செய்வதிலும் ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அத்துடன் துறைசார் அதிகாரிகளுடன் கலந்தரையாடி காலநிலை மாற்றம் தொடர்பான அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான முன்மொழிவை வழங்குவதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலின் போது, கடற்றொழில் செயற்பாடுகளில் காணப்படும் சவால்கள், கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைரங்கள் தொடர்பாகவும் அமெரிக்க தூதுவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, தேசிய நல்லிணக்கத்தினூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைய முடியுமென்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தன்னைப் பொறுத்த வரையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறைமையை முழுமையாக பயன்படுத்துவதை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பூரணமாக அடைந்து கொள்வதை நோக்கி நகர முடியுமெனவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சில தமிழ் தலைமைகளின் சுயநலன் சார்ந்த – தவறான அணுகுமுறைகளே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணமாக இருப்பதனை தன்னால் அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவர்,

தேசிய நல்லிணக்தின் மூலமே பிரச்சினைகளை அணுக முடியும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை பாராட்டியதுடன், அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற தமிழர் என்ற அடிப்படையிலும் பாராளுன்ற பேரவையின் உறுப்பினர் என்ற வகையிலும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு அமைச்சருக்கு இருப்பதாகவும் அதற்கான ஒத்துழைப்புக்களை அமெரிக்கா வழங்குமெனவும் தெரிவித்தார்.

LPL 2020 – எட்டாவது ஆட்டத்தில் கண்டியை பந்தாடியது ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் !

LPL 2020 எட்டாவது போட்டி நேற்றைய தினம் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் கண்டிடஸ்கர்ஸ் இடையே நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்ப வீரர்கள் தடுமாற்றத்துடன் ஆட்டத்தை தொடங்கிய போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 38 பந்துகளில் 61 ஓட்டங்களையும் அணித்தலைவர் திஸரபெரரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 68 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்டத்தை வலுப்படுத்திதினர். நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் 185 ஓட்டங்களை பெற்றது. கண்டி சார்பாக பந்து வீச்சில் நவீன்-  உல்-க 03 இலக்குகளையும் குணரட்ணே 02 இலக்குகளையும் வீழ்த்தினர்.

186 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கண்டி அணி ஆரம்பம் முதலே திணறியது. அந்த அணி சார்பாக சிம்பாவே அணி வீரர் ப்ரெண்டன்டெய்லர் 46 ஓட்டங்களையும் குணரட்னே 31 ஓட்டங்களையும் பெற்றமையே அதிகமாக காணப்பட்டது. ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை ஓட்டத்துடனேயே ஆட்டமிழந்து போயினர். நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து கண்டி அணி 131 ஓட்டங்களை மட்டுமே பெற்று 54 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. ஜஃப்னா சார்பாக பந்து வீச்சில் உஸ்மன்-சின்வாரி 03பந்துப்பரிமாற்றங்களில் 03 இலக்குகளையும் திஸரபெரரா 02 இலக்குகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திஸர பெரரா தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் தன்னுடைய முதலிடத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது .

Image may contain: 1 person, text that says "OMy11CIRCLE LPLT20 JAFFN STALLIONS VS MATCH SUMMARY JAFFNA STALLIONS 185/8 TPERERA DDESILVA BHANUKA 20 OVERS 68[28) 61[38] 15(23] NAVEEN GUNARATNE PRADEEP 3/44 2/20 1/44 KANDY TUSKERS 131 TAYLOR GUNARATNE MENDIS 17.10VERS 46[32] 31(24] 20(09] SHINWARI PERERA HASARANGA 3/17 2/09 2/17 JAFFNA STALLIONS WIN BY 54 RUNS Cricket THEIPGGROUP f FACEBOOK.COM/LPLT20 I INSTAGRAM.COM/LPLT20 TWITTER.COM/LPLT20"

பொறுப்பேற்கப்படாத சடலங்களை உடனடியாக தகனம் செய்யுங்கள்” – ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு !

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் உறவினர்களால் பொறுப்பேற்கப்படாமல் காவல்துறையினரின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளதாவது,

கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில் அவர்களின் உறவினர்களால் சவப்பெட்டிகள் வாங்கி கொடுக்க முடியாமல் மற்றும் பொறுப்பேற்காத சடலங்கள் காவல்துறை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து அவ்வாறான பூதவுடல்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்யுமாறு ஜனாதிபதி உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனசாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில் இலங்கை வாழ் முஸ்லீம்கள் தங்களுடைய அதிருப்தியை வெியிட்டு வருவதுடன் தங்களுடைய உறவினர்களுடைய சடலங்களை கையெற்கவும் மறுத்து வருகின்ற நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இன்னமும் கண்டுபிடிக்கப்படாத ஒரு தடுப்பூசிக்காக எதிர்பாத்துக்கொண்டுள்ளோம்.அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கிடைத்தவுடன் இலங்கையில் 4.2 மில்லியன் மக்களுக்கு கிடைக்கும்” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

“இன்னமும் கண்டுபிடிக்கப்படாத ஒரு தடுப்பூசிக்காக எதிர்பாத்துக்கொண்டுள்ளோம்.அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கிடைத்தவுடன் இலங்கையில் 4.2 மில்லியன் மக்களுக்கு கிடைக்கும்” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்றில் மேலும் அவர் கூறுகையில்,
“கொரோனா வைரஸ் பரவல் விடயத்தில் தேசிய மட்டத்திலான விடயங்கள், கண்காணிப்பு, அவசர நிலைமைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம். சர்வதேச போக்குவரத்து பயணங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சுகாதார சேவைகள் எக்காரணம் கொண்டும் வீழ்ச்சி கண்டிராத விதத்தில் கொவிட்-19 நிலைமைகளையும் கையாண்டு வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள், கடன் உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனைகளை எவ்வாறு கையாண்டு வருகிறோம் என்பதை இந்த சபைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்துள்ளேன்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தெளிவான வேலைத்திட்டம், மற்றும் அதனை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் அடுத்த கட்டமாக கொரோனா வைரஸ் பரவலுக்கான தடுப்பூசியை கொண்டுவரும் தேவையே உள்ளது. இந்த வேலைத்திட்டம் உயரிய தரம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போதும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் போட்டித்தன்மை உள்ளது. எனினும் எமது மக்களுக்கு தடுப்பூசிகளை கொடுக்கையில் எமது மக்கள் சுகாதார துறை மீதும் தடுப்பூசி மீதும் வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும்.
குறைந்தகால மற்றும் நீண்டகால உபாதைகள் வராத விதத்திலான தடுப்பூசிகளை வழங்குதல். தேசிய பொருளாதாரத்திற்கு தாக்கம் ஏற்படாத விதத்தில் விலைகளை சமாளிக்கக்கூடியதான தடுப்பூசியாக அது இருக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸை தடுக்கும் வேலைத்திட்டத்தில் இவை பாரிய சவாலாக இருக்கும் என நம்புகிறேன். எனவே இந்த சவால்களை வெற்றி கொண்டு அதற்கான சிறந்த தடுப்பூசி ஒன்றினை பெற்றுக்கொடுக்கவும் அதற்கான ஆய்வுகளை செய்யவும் சுகாதார அமைச்சின் சார்பில் சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே தடுப்பூசி குறித்து கவனம் செலுத்தி வந்தோம். அதற்கமைய உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து உடன்படிக்கைகளை செய்துள்ளோம். இதன்போது பரிசோதனைக்காக 20 வீதமான இலங்கையர்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் தடுப்பூசி கண்டறியப்பட்டவுடன் 4.2 மில்லியன் மக்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும். ஆனால் இன்னமும் தடுப்பூசி கண்டறியும் நடவடிக்கைகள் மூன்றாம் கட்டத்தை தாண்டவில்லை. எப்போது தடுப்பூசி வழங்கப்படும் என்பது எவருக்குமே தெரியாதுள்ளது.
தடுப்பூசி வழங்கப்பட்டதும் அதனை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் கண்டறியப்படாத ஒரு தடுபூசிக்காக நாம் இவ்வாறான முன்னாயத்த வேலைத்திட்டங்களை செய்துள்ளோம்.
மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் வர்த்தகத்தை சமாளிக்க தற்காலிக காப்புறுதி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான வேலைத்திட்டம் என்றே நாம் கருதுகிறோம். 2021 ஆம் ஆண்டில் உலகில் அதிகளவில் கொவிட் -19 கட்டுப்பாட்டில் வரும். நாமும் அதனை இலக்காக கொண்டு இலங்கையில் தேசிய வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய வரவு செலவு திட்டத்தில் கவனத்தில் கொண்டுள்ளோம். மாவட்ட வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெரியதந்தை – மட்டக்களப்பில் சம்பவம் !

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் 11 சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்ட 78 வயதுடைய சிறுமியின் பெரியதந்தையை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றிலா நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 11 சிறுமியை சம்பவதினமான கடந்த 28ம் திகதி சிறுமியின் தாயாரின் சகோதரியின் கணவனான 78 வயதுடைய பெரியப்பா காட்டில் தேன்எடுத்து தருவதாக சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டபோது அந்த பகுதியில் மாடு மேய்கச் சென்ற ஒருவர் இதனைக்கண்டு சிறுமியின் பொற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியின் பெற்றோர் கடந்த 29 ம் திகதி அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து 78 வயதுடைய சிறுமியின் பெரியதந்தையை காவல்துறையினர் கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனை அடுத்து கைது செய்தவரை களுவாஞ்சிக்குடி சுற்றிலா நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை (30) ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

வேளான் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்தும் முனைப்படையும் விவசாயிகள் போராட்டம் – இந்திய விவசாயிகளுக்காக கனடா பிரதமர் ஆதரவுக்குரல் !

இந்தியாவின் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை 6-வது நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.  ஆனால், டெல்லி-அரியானா எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி-உத்தரபிரதேச எல்லையான காசியாபாத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா வீட்டில் வைத்து உள்துறை, பாதுகாப்புத்துறை, வேளாண்துறை மந்திரிகள் இணைந்து விவசாயிகள் போராட்டம் குறித்து நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையில், விவசாயிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் கோரிக்கையை விவசாய குழுக்கள் நிராகரித்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இன்று மீண்டும் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகிய மந்திரிகள் டெல்லியில் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா வீட்டில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜே.பி நட்டாவும் பங்கேற்றுள்ளார். இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மற்றும் வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரலாமா? உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக  முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கத்தொடங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். காணொலி வாயிலாக இன்று கனடாவில் வாழும் சீக்கியர்களுக்கு குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்தியான விவசாயிகள போராட்டங்களை அங்கீகரிக்காமல் நான் என் பேச்சை தொடங்கினால் அது பொறுப்பானதாக இருக்காது. அங்குள்ள நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. குடும்பங்கம் மற்றும் நண்பர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.
’நிலைமை கவலையளிக்கிறது‘ - இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு
உரிமைகளை பாதுகாக்க அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும். பேச்சுவார்த்தை மீது நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம்.
ஆகையால், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெவ்வெறு வழிகளில் இந்திய அரசை தொடர்பு கொண்டு எங்கள் கவலையை வெளிப்படுத்தினோம்” என அவர் தன்னுடைய ஆதரவுக்குரலை வெளியிட்டுள்ளார்.

அடுத்த வாரம் விநியோகத்துக்கு வருகிறது அமெரிக்காவின் இரண்டு கொரோனா தடுப்புமருந்துகள் !

இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் அடுத்தவாரம் விநியோகத்துக்கு வரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “தான் கண்டுபிடித்துள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் அடுத்த இரண்டு வாரத்துக்குள் விநியோகிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் உயிர்தொழில்நுட்பவியல்  நிறுவனமான மாடர்னா தனது கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசரகால அங்கீகாரத்திற்காக ஒப்புதல் கோரியுள்ளது” என்று செய்தி வெளியானது.

மேலும், ஒவ்வாமை மற்றும் நோய்த் தடுப்புப் பிரிவின் தேசிய நிறுவினத்தின் இயக்குனர் ஆண்டனி கூறுகையில், ”நீங்கள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்காக உரிமை கோர முடியாது. ஆனால், இது கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கியத் தருணம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியானது.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருத்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.

லண்டனின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“நினைவேந்தல் தடைகளுக்கும் இளைஞர்கள் கைதுக்கும் ஆளும் கட்சியுடன் இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்” – இரா.சாணக்கியன் 

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாது போனமைக்கு, அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சந்திப்பில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் தலைவரின் படத்தினை இணைத்து பதிவிட்டிருந்ததையும் குற்றமாக கொண்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஒரு சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி இருந்த காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்து ஒரு மாற்றம் உருவாகவேண்டும் என்று தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்த ஒவ்வொருவரும், இந்த இளைஞர் கைது விடயத்தில் பொறுப்புக்கூறவேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் நல்லிணக்கம் இருந்ததன் காரணமாக நாங்கள் சுதந்திரமாக செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

மாவீரர் தின நாட்களில் வீடுகளில் தமது உறவுகளை நினைவுகூர்ந்ததை கூட வீடுகளுக்குள் புகுந்து தடைசெய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாவீரர்களை நினைவுகூருதல் என்பது 1989ஆம்ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்ற விடயம். ஆனால் இன்று மாவீரர்களை நினைவுகூருவதை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தமிழர்களின் உணர்வின் அடையாளங்கள் அழிக்கவேண்டும் என்பதற்காக பல திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான பொறுப்பு  தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களையே சேரும்.

அதாவது, ஒரு தாய் தனது பிள்ளையினை நினைவுகூரமுடியாத சூழ்நிலையினை அமைத்துக்கொடுத்த ஆளும் கட்சியுடன்இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சுன்னாகம் பொலிஸார் மிகவும் அராஜகமான முறையில் நடந்துகொள்கின்றனர்” -பாராளுமன்றில் சிறீதரன் கண்டனம் !

“சுன்னாகம் பொலிஸார் மிகவும் அராஜகமான முறையில் நடந்துகொள்கின்றனர்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தன்னுடைய கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றில் இன்று (01.12.2020) இடம்பெரும் குழுநிலை விவாத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் குறிப்பிடுகையில் இந்துக்களின் பண்டிகை தொடர்பாக இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது தொடர்பாக கண்டனங்களை வெளியிடுவதாகவும் கூறினார்.

அத்தோடு அண்மையில் கார்த்திகை விளக்கீடு அன்று கிளிநொச்சி பரந்தனில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டமை மற்றும் யாழ்.பல்கலை மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் சிறிதரன்அதிருப்தி வெளியிட்டார்.

மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் என குறிப்பிட்ட சிறிதரன், சுன்னாகம் பொலிஸார் மிகவும் அராஜகமான முறையில் நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

வவுனியாவில் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவும் எயிட்ஸ் – ஓரினச்சேர்க்கையே காரணம் ! – பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் எச்சரிக்கை !

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையினால், இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

வவுனியா வைத்தியாசாலையில் நேற்று (30.11.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கே.சந்திரகுமார் மேலும் கூறியுள்ளதாவது,

“உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூறவிருக்கிறோம். இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட 4000 நோயாளிகள் எய்ட்ஸ் உடன் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அதில் 17 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். 11 நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் ஆறு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குகிறார்கள்.

பொதுவாக எய்ட்ஸ் 3 முறைகளில் தொற்றுகிறது. ஒரு நோய்த் தொற்றுள்ளவருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்கின்றபோது தொற்றுகிறது. அதேபோல நோய்த் தொற்றுள்ள ஒருவர் தனது உடலுறுப்பு தானம், இரத்த தானம் என்பவற்றை மேற்கொள்ளும் போது கடத்தப்படுகிறது. மூன்றாவது தொற்றுள்ள ஒரு கர்ப்பிணி தாயிலிருந்து பிள்ளைக்கு பரவுகிறது.

வவுனியா மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளது. அதாவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர். அதுவே இளைஞர் மத்தியில் இந்த நோய் பரவ அதிக காரணமாக இருக்கின்றது. ஆகவே இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் தமக்கு தெரியாதவர்களுடன் இருக்கும்போது பாலியல் தொடர்பான தொடர்பை வைத்திருக்க கூடாது.

வவுனியாவில் இருக்கக்கூடி 36 பெண் பாலியல் தொழிலாளிகள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதில்லை என்றாலும் அவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம். இலங்கையைப் பொறுத்தவரையில் தாயில் இருந்து பிள்ளைக்கு தொற்று கடத்தப்படுவதைத் வெற்றிகரமாக நாங்கள் தடுத்திருக்கிறோம். இதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்தும் நற்சான்றிதழ் பெற்றிருக்கிறோம்.

ஆகவே, முற்றுமுழுதாக இலங்கையில் இருந்து எயிட்ஸ் தொற்றுனை இல்லாமற் செய்வதற்கு இலங்கையில் உள்ள அனைவருமே ஒரு தடவை எச்.ஐ.வி.பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனையாக இருக்கிறது. இந்த கொவிட் காலத்தில் விழிப்புணர்வுகளைச் செய்வதில் சிரமம் இருப்பதால் ஊடகங்கள் ஊடாக இதனைச் செய்ய விரும்புகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.