December

December

ஜேர்மனியில் முதலாவது கொரோனா தடுப்பூசி 101 வயதான மூதாட்டிக்கு !

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. ஜேர்மனியில் இதுவரை 30 ஆயிரத்து 147 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் கொரோனாவுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 21-ந்தேதி அனுமதி அளித்தது. இதையடுத்து ஜெர்மனியில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி நேற்று (26.12.2020) தொடங்கியது. அங்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல் தடுப்பூசியை சாக்சானி அன்ஹால்ட் பகுதியில் பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் 101 வயது எடித் குய்சல்லாவுக்கு டாக்டர்கள் செலுத்தினர். முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதுகுறித்து ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறியதாவது:-

தொற்றுநோயை வெல்வதற்கு தடுப்பூசி முக்கியமாகும். இது எங்கள் வாழ்க்கையை திரும்பப்பெற அனுமதிக்கும். இது நம்பிக்கையின் நாள். அனைவருக்கும் தடுப்பு மருந்துகள் கிடைப்பது ஒரு நீண்ட தூர முயற்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

“வனவளத்திணைக்களத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகிப்போம்” – வவுனியா விஜயத்தில் செ.கஜேந்திரன் !

வவுனியாவிற்கு நேற்று (26.12.2020) விஜயம் செய்த அவர் கற்குளம்3 மற்றும் கற்குளம் 4, மதுராநகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

மக்கள் குறைகளை கேட்டறிந்ததை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்,

இந்த பகுதியில் உள்ள பெருமளவான குடும்பங்களிற்கு காணிகளிற்கான உறுதிபத்திரங்கள் வழங்கப்படவில்லை, வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை. அதிகமான மக்கள் தற்காலிக கொட்டில்களிலேயே வசித்து வருகின்றனர். உப குடும்பங்களும் தமது பிள்ளைகளுடன் சிறிய வீடுகளிலேயே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. மலசலகூடம் இல்லை. அவர்கள் காலைக்கடன்களை கழிப்பதற்கு கூட பற்றைகளை பயன்படுத்தும் நிலையே காணப்படுகின்றது. பல வருடங்களாக அவர்களுக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்படவில்லை.

அத்துடன் பற்றைகளாக இருக்கும் தமது காணிகளை துப்புரவாக்கி பயிர் செய்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நெருக்கடிகள் ஏற்ப்படுத்தப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனினும் அருகில் உள்ள சிங்கள கிராமங்களை சேர்ந்த மக்கள் சுதந்திரமாக அந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நீண்ட காலமாக பராமரித்த காணிகளை வனவள திணைக்களம் சொந்தம் கொண்டாடுகின்றமை தொடர்பாக உரிய அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவரது கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கிறோம் இதனை பேசி தீர்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் அந்த நிலமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எமது அழுத்தங்களை தொடர்ந்து பிரயோகித்து வருவோம்” என்றார்.

படைப்புழு தாக்கம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிய ஜனாதிபதி களவிஜயம் !

நேற்று (26.12.2020) பிற்பகல் அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு போன்ற இடங்களுக்கு பயணித்த  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயிகளுடைய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

அங்கு சென்ற ஜனாதிபதி சேனா படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழு தாக்கத்தினால் பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் விளைச்சல் அதிகளவு குறைந்துள்ளது என்று விவசாயிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

காட்டு யானைகளினால் தோட்டங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் விவசாயிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.டிவிவசாய நிலங்களுக்கு வந்து தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்ததற்காக விவசாயிகள் ஜனாதிபதியை பாராட்டினர்.

இதன்போது ஜனாதிபதியுடன் மிரிசவெட்டிய விஹாராதிபதி சங்கைக்குரிய ஈதலவெட்டுனுவெவே ஞானதிலக தேரரும் வருகைதந்திருந்தார்.

“ நாங்கள் எதிர்பார்த்த எதுவும் மாகாணசபை முறையிலிருந்து கிடைக்கவில்லை. சமூக சகவாழ்வோ பொருளாதார பலாபலன்களோ எவையும் கிடைக்கவில்லை” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

பொதுஜனபெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சமர்ப்பிக்கும் வேட்பாளர்களிற்கு போட்டியிடுவதற்கு இடமளிக்காத பட்சத்தில் மாகாணாசபை தேர்தல்களில் கட்சி தனித்து போட்டியிடவேண்டியிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் சுதந்திரக்கட்சி பொதுஜனபெரமுனவுடன் இணைந்தே களமிறங்கியிருந்தது. பொதுஜனபெரமுனவின் வெற்றியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்களவு காணப்பட்டது. எனினும் ஆட்சியமைத்தது முதல்  பெரமுன சுதந்திரக்கட்சியினை முன்னிலப்படுத்தாத போக்கே தொடர்ந்தது. இந்நிலையில் சுதந்திரக்கட்சியினர் பலரிடையேயும் அதிருப்தியான நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் இதே நிலை தொடருமாயின் பெரமுனவிலிருந்து பிரிந்து தனித்தே தாம் மாகாணசபைத்தேர்தலில் களமிறங்க நேரிடும் என ன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலுமு் தெரிவித்துள்ளதாவது,

நாடாளுமன்ற தேர்தலின் போது எங்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இம்முறை எங்களை நியாயமான முறையில் நடத்தாவிட்டால் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர்கள் எங்களிற்கு நெருக்கடி தருவார்கள் . எங்கள் வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படாவிட்டால்  பிரிந்துசெல்ல தீர்மானித்துள்ளோம்.

பொதுதேர்தலின் போது எங்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது, சிலமாவட்டங்களில் எங்கள் கட்சியினருக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. களுத்துறை நுவரேலியாவில் எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை . கம்பஹாவில் வெற்றிபெறக்கூடிய எங்கள் வேட்பாளர்களில் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது .

நாங்கள் சமர்ப்பித்த வேட்பாளர்களை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடாளுமன்றத்தில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டிருப்பார்கள் தற்போது சுதந்திரக்கட்சிக்கு 14 உறுப்பினர்களே உள்ளனர்.  தமிழர் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதன் ஒரு பகுதியாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.  இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் 13வதுதிருத்தம் உருவானது.

நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு 13 திருத்தம் உதவியுள்ளதா? என்பது குறித்து பார்க்கவேண்டும். மாகாணசபை முறை குறித்து உரிய ஆய்வுகள் இடம்பெறவில்லை என்றே கருதுகின்றேன். 30 வருடங்களிற்கு பின்னரும் மாகாணசபை முறை வெற்றியாதோல்வியா? என்பதை நாங்கள் இன்னமும் உறுதிசெய்யவில்லை.

மாகாணசபைமுறைக்காக செலவிடப்படும் நிதி குறித்தும் கேள்விகள் எழுகின்றன. நாங்கள் எதிர்பார்த்த எதுவும் மாகாணசபை முறையிலிருந்து கிடைக்கவில்லை. மாகாணசபைகளில் நாங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் உரிய பலாபலன்கள் கிடைக்கவில்லை,சமூக சகவாழ்வோ பொருளாதார பலாபலன்களோ கிடைக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தெற்கின் சிங்கள பத்திரிகைகள் மீது பாயாத பயங்கரவாத தடைச்சட்டம் வடக்கின் தமிழ்பத்திரிகைகளை குறிவைப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்”  – மனோ கணேசன்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகை மீது யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் யாழ். காவல்துறையினரால் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பல தரப்பினரும் ஊடக அடக்குமுறைக்கு எதிரான தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ”தமிழ் ஊடகங்களை அடக்குவதிலும் ஒடுக்குவதிலும் ராஜபக்ச குடும்ப அரசு கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது என்பதற்கு ‘உதயன்’ மீதான வழக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“வரலாற்றில் தடம் பதித்தவர்களின் பிறந்த தினத்தையும், நினைவேந்தல் தினத்தையும் நினைவூட்டுவதும், அது தொடர்பான பதிவுகளை இடுவதும் – பிரசுரிப்பதும் ஊடகங்களின் பணி. இந்தநிலையில், கடந்த நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமன்று அது தொடர்பான செய்தியுடன் அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டதாக ‘உதயன்’ மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தெற்கில் சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மற்றும் கட்டுரைகளில் பிரபாகரனின் படமும் வெளிவருகின்றது. இந்தநிலையில், ‘உதயன்’ பத்திரிகையைக் குறிவைத்தே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாய்ந்துள்ளது.

‘உதயன்’ பல்லாண்டு கால வரலாற்றைக்கொண்ட பத்திரிகை. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காகவும் அன்று தொடக்கம் குரல் கொடுத்து வரும் பத்திரிகை. எனவே, இந்தப் பத்திரிகை மீதான அரசின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்” – என்றுள்ளது.

இதே நேரம் உதயன் மீதான பயங்கரவாததடைச்சடடத்தை கண்டித்து இரா.சம்மந்தன், எதிர்கட்டசி தலைவர் சஜித்பிரேமதாஸ ஆகியோரும் தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

“உதயன்” பத்திரிகையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக்கொண்டு அடக்க அரசு எடுத்துள்ள முயற்சியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – இரா.சம்பந்தன் காட்டம் !

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகை மீது யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் யாழ். காவல்துறையினரால் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பல தரப்பினரும் ஊடக அடக்குமுறைக்கு எதிரான தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

“உதயன்” பத்திரிகையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக்கொண்டு அடக்க அரசு எடுத்துள்ள முயற்சியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது,

“மக்களின் குரலாக ஒலிப்பவையே ஊடகங்கள். கருத்து சுதந்திரத்துடன் ஊடகங்கள் செயற்பட வேண்டும். அந்தச் சுதந்திரத்தை சட்டங்கள் கொண்டு எவரும் அடக்க முடியாது. “உதயன்” பத்திரிகையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக்கொண்டு அடக்க அரசு எடுத்துள்ள முயற்சியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சுமார் 35 ஆண்டுகளாக ‘உதயன்’ பத்திரிகை சேவையாற்றி வருகின்றது. உயிர்ப் பலிகளையும் சொத்திழப்புக்களையும் தாங்கிக்கொண்டு மக்களுக்கான மகத்தான சேவையில் ‘உதயன்’ உழைத்து வருகின்றது. இந்தநிலையில், இந்தப் பத்திரிகை மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை அரசின் திட்டமிட்ட சதி நடவடிக்கையைக்காக்கும்.

இது ஊடக சுதந்திரத்தை மீறிய ஒரு செயல். இது தவறான நடவடிக்கை. இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.’உதயன்’ மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உடன் வாபஸ் பெறுமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

“உதயன் பத்திரிகை மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளமை ஏற்கமுடியாதது.ராஜபக்ச  அரசு, ஊடகங்களை அடக்க முயற்சிக்கின்றது” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

“உதயன் பத்திரிகை மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளமை ஏற்கமுடியாதது.ராஜபக்ச  அரசு, ஊடகங்களை அடக்க முயற்சிக்கின்றது” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ‘உதயன்’ பத்திரிகை மீது வழக்குத் தாக்கல் செய்தமைக்கு காவல்துறையினர் முன்வைத்துள்ள காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இது ஊடக சுதந்திரத்தை – கருத்துச் சுதந்திரத்தை மழுங்கடிக்கும் செயலாகும்.

யார் ஆட்சிப்பீடத்தில் இருந்தாலும் ஊடகங்களுக்கான சுதந்திரம் மிகவும் அவசியம். அந்தச் சுதந்திரத்தை எவரும் சட்டங்கள் கொண்டு அடக்க முடியாது.

கடந்த நல்லாட்சியில் ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம் திட்டமிட்டுப் பறிக்கும் செயல்கள் இடம்பெறுகின்றன. இதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து குரல் கொடுக்கும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, ஊடகங்களை அடக்க முயற்சிக்கின்றது. அதன் ஒரு வெளிப்பாடே ‘உதயன்’ மீதான வழக்கு. இது இந்த அரசின் ஜனநாயக விரோத செயலாகும். பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” – என்றுள்ளது.

வடக்கில் முதலாவது கொரோனா மரணம் !

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி நேற்று (26.12.2020) உயிரிழந்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று இருப்பது நேற்றுமுன்தினம் உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரி பெறப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவின் பிரகாரம் அவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண்மணி நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி அநுராதபுரம் மித்சிறி செவன் வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார். கொரோனாத் தொற்றுடன் கூடிய நிமோனியா காய்ச்சலே அவரது உயிரிழப்புக்குக்காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழர்களும் முஸ்லீம்களும் சமய வேறுபாடுகளை கடந்து தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போது தான் இந்த அரசை எதிர்க்க முடியும் ” – செல்வம் அடைக்கலநாதன்

“தமிழர்களும் முஸ்லீம்களும் சமய வேறுபாடுகளை கடந்து தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போது தான் இந்த அரசை எதிர்க்க முடியும் ” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

முஸ்லீம் மக்களின் ஜனாசா விடயத்தில் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது. இது நியாயமான கோரிக்கையே. உலக நாடுகளில் எந்த நாடும் இப்படி ஒரு அநியாயத்தை செய்யவில்லை. இந்த நாட்டிலே வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் அடிப்படை விடயங்களில் இந்த அரசு கைவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். எனவே முஸ்லீம்களின் உடல்கள் சமய ரீதியாக புதைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இருக்க கூடாது. தமிழ் பேசும் மக்கள் மீது இந்த அரசு கொடூரமான கரங்களை நீட்டிக்கொண்டு வருகிறது. அதேபோல எமது நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இருப்பிடத்தையும் இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டை மிக திறமையாக செய்து வருகின்றது.

இந்தவிடயத்தில் எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும். நாங்கள் சமய வேறுபாடுகள் இன்றி தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போது தான் நாங்கள் இந்த அரசை எதிர்க்க முடியும். அடிபணிய வைக்கமுடியும். இந்த விடயத்தில் முஸ்லீம் மக்களுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு நிற்கும் என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் – அவுஸ்ரேலியா 195 ஓட்டங்களுக்குள் சுருண்டது !

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. பொக்ஷிங்டேய் டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை  தேர்வு செய்து விளையாடியது.
தொடக்கத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய அவுஸ்திரேலியா, விரைவில் இழந்தது. லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக விளையாடி, அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். எனினும் சீரான இடைவெளியில் இலக்குகள் சரிந்ததால், அவுஸ்திரேலியா 195 ஓட்டங்களுக்குள் அனைத்து இலக்குகளையும் இழந்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 38 ஓட்டங்களும் லபுசாக்னேவும் 48 ஓட்டங்களும்  எடுத்திருந்தமையே அதிகபட்சமாக காணபபட்டது.
இந்தியா தரப்பில் பும்ரா 4 இலக்குகளை கைப்பற்றினார். அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 இலக்குககள் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் ஓட்மெதுவுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் சுதாரித்த ஷுப்மான் கில், புஜாரா ஜோடி நிதானமாக விளையாடியது.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு இலக்கு இழப்பிற்கு 36 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. இந்தியா அவுஸ்திரேலியாவை விட 159 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது. ஷுப்மான் கில் 28 ஓட்டங்களுடனும், புஜாரா 7 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.