04

04

“பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்” – அரசு அறிவிப்பு !

கொரோனா தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன. சமீபத்தில் ஜப்பான் நாட்டு அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இந்த நிலையில் பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறும்போது, பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும தடுப்பூசி இலவசமாக போடப்படும். இதற்காக வருகிற நிதியாண்டில் 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படும். ஐரோப்பிய ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் ஒப்புதலுக்காக உள்ளதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்படும்.

பல்வேறு மருந்து நிறுவனங்களிடம் இருந்து 200 மில்லியன் டோஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்றார்.

பொருளாதார தடையை நீக்காவிட்டால் அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அளவை விட யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு ஈரானில் சட்டமசோதா நிறைவேற்றம் !

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்தபோது 2015-ம் ஆண்டு, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்து கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என டிரம்ப் கருதி, 2018-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக்கொண்டார்.

மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. ஆனால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக அடுத்த மாதம் 20-ந் தேதி பதவி ஏற்க உள்ள ஜோ பைடன், டிரம்ப் நடவடிக்கைக்கு மாறான ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதாவது ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணையும், அந்த ஒப்பந்தத்தை கடுமையாக ஈரான் பின்பற்றினால் அதன் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இந்தநிலையில், ஈரான் மீதான பொருளாதார தடை 2 மாதங்களில் விலக்கிக்கொள்ளப்படாவிட்டால், அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 3.67 சதவீத அளவைத்தாண்டி, 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, ஐ.நா. ஆய்வாளர்கள், ஈரான் அணுசக்தி தளங்களை பார்வையிடுவதையும் தடை செய்கிறது.

ஈரான் அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே, கடந்த வெள்ளிக்கிழமையன்று டெக்ரானுக்கு வெளியே காரில் சென்று கொண்டிருந்தபோது மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இஸ்ரேல் கைவரிசையை ஈரான் சந்தேகிக்கிறது. இந்த சூழலில் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இருப்பது, அணு ஆயுத உற்பத்திக்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சட்டத்தை அமுல்படுத்துவதை எதிர்ப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறி உள்ளார். இது நாட்டின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இந்த புதிய சட்டத்தின்படி, ஈரான் அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியன் சார்பில் கையெழுத்து போட்டவர்கள், ஈரான் மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீத அளவுக்கு ஈரான் அதிகரித்து விடும். அத்துடன் யுரேனிய செறிவூட்டும் மேம்பட்ட மையங்களையும் ஈரான் நிறுவும். மேலும், ஈரான் அணுசக்தி தளங்களை ஐ.நா. ஆய்வாளர்கள் பார்வையிட வர முடியாது. இது சர்வதேச அளவில் பதற்றங்களுக்கு வழிவகுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹரிஸின் உள்நாட்டுக் கொள்கை ஆலோசகராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் நியமனம் !

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹரிஸ் இலங்கை- அமெரிக்கர் ரோஹினி கொசோக்லுவை தனது உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார்.

ரோஹினி கொசோக்லு அமெரிக்க மக்கள் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்சனைகள் தொடர்பில் நிபுணர் மட்டுமல்ல, செனட் சபை உறுப்பினர் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் எனது நெருங்கிய மற்றும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவராகவும் இருந்தார் என்றும் கமலா ஹரிஸ் கூறியுள்ளார்.

ரோஹினி கொசோக்லுவின் பெற்றோர் மருத்துவர் விஜயதேவேந்திர ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன் ஆகியோர் 1980களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களாவர். கடந்த 2018 ஆம் ஆண்டில், அமெரிக்க துணை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரான கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராகப் ரோஹினி கொசோக்லு பொறுப்பேற்றார். இதன்போது அமெரிக்க செனட்டர் ஒருவருக்கு தலைமைப் பணியாளர் பதவியை வகித்த ஒரே அமெரிக்க ஆசியப் பெண் என்ற பெருமையையையும் அவர் பெற்றார்.

ரோஹினி கொசோக்லு, மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். மிச்சிகன் செனட்டர் டெபி ஸ்டெபெனோ சார்பில் பணியாற்றும்போது கடிதத் தொடர்பு மேலாளராக அரசியலில் நுழைந்தார். பட்டம் பெற்ற பின்னர் ஸ்டீபெனோவின் சிரேஷ்ட கொள்கை ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவர் கொலராடோ செனட்டர் மைக்கேல் பென்னட்டின் கீழ் சிரேஷ்ட சுகாதார ஆலோசகராக பணியாற்றினார். அந்த நேரத்தில் ஒபாமா கெயார் திட்டத்திலும் பணியாற்றினார்.

ஏழு ஆண்டுகள் பென்னட்டின் அலுவலகத்தில் பணியாற்றிய ரோஹினி, அப்போது செனட்டர் கமலா ஹரிஸின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை” – அனுரகுமார திசாநாயக்க

“அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க  அரசு மீதான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்று (04.12.2020) நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

“இன்னமும் எமது மக்கள், குறைந்த விலையில் அரிசியைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் .இந்த ஆண்டு நெல் உற்பத்தியில் அதிக விளைச்சல் கண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், அரிசிக்கான நிர்ணய விலையை கொடுக்க முடியவில்லை.

மக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் ஆட்சி செய்கின்றது. தேசிய உற்பத்தியை பலப்படுத்துவோம் என அரசாங்கம் கூறினாலும் அதற்கான வரிக் கொள்கையொன்று நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை” என்றும் அனுரகுமார திசாநாயக்க கூறினார்.

“கடந்த அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க தவறிவிட்டது” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

“கடந்த ஆட்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க தவறிவிட்டது” என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (04.12.2020) வெள்ளிக்கிழமை, கைத்தொழில் வர்த்தக அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,

கடந்த ஆட்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க தவறிவிட்டது. இன்று அது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இன்று வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 20 வீதமாகும். இது தற்காலிக அரசியல் நியமனங்களின் மூலமாக தீர்க்க முடியாது.  எனவே நீண்டகால தீர்வுகள் இதன்போது கண்டறியப்பட வேண்டும். அதில் சர்வதேச நிறுவனங்களை அனுமதித்தாலும் கூட தேசிய ரீதியிலான பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அதனையே அரசாங்கம் இன்று முன்னெடுத்து வருகின்றது.

இப்போது முதலீடுகள் வருகின்றது, ஹம்பாந்தோட்டையில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு உருவாக்கப்பட்டுள்ளது, இதனால் இரண்டாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. எனவே சிறு மற்று  மத்திய தொழிலாளர்களை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினரிடம் எவ்வாறு கைக்குண்டுகள் கிடைத்தது ?- ஜெனரல் ஷவேந்திர சில்வா விளக்கம் !

இராணுவத்தினர் நாட்டில் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில் தொடர்நதும் கடுமையான முறையில் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கிளைமோர் குண்டு ஒன்றினை பேருந்தில் எடுத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்துக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த கிளைமோர் குண்டுடன் குறித்த நபர்கள் தனது குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் இன்று காலை ஊடக  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது இல்லை எனவும் மிகவும் பழமை வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறானாவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ளவர்களை இலக்கு வைத்து வௌிநாடுகளில் பணம் அனுப்பப்பட்டு இந்த மாதிரியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் வேறு செயற்பாடுகளில் அவதானம் செலுத்தும் சந்தர்ப்பங்களிலேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்று நோயாளி – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட கொரோனா தொற்று நோயாளியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளி ஒருவரை அழைத்துச் செல்ல வந்திருந்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில், இன்று காலை குறித்த சந்தேக நபரை கைது செய்த பண்டாரகம பொலிஸார், காணொளி தொழிநுட்பம் ஊடாக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதனை அடுத்து, குறித்த சந்தேக நபரை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவா உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த சந்தேக நபரை சுகாதார நடைமுறையின் அடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கொரோனா இரண்டாம் அலைக்கு காரணமான பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை திறக்கப்படுகின்றது !

கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை இரு மாதங்களின் பின்னர் இன்று (04.12.2020) மீளத் திறக்கப்படவுள்ளது.

150 தொழிலாளர்களுடன் தொழிற்சாலையை இயக்க சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இரண்டாவது கொரோன் அலை தொற்று பரவலுக்கு காரணமான இந்த தொழிற்சாலையில் 1000 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.என்பதும் குறிப்பிடத்தக்கது

“கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர கூறிய கருத்துக்கு சரத்வீரசேகர மன்னிப்பு கேட்க வேண்டும்” – சாள்ஸ் நிர்மலநாதன்

விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர கூறிய கருத்து பாரதூரமானது. எனவே, அவர் சபையில் மன்னிப்புக்கோர வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (03.12.2020) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் சரத் வீரசேகர “கூட்டமைப்பு தொடர்ந்தும் இயங்க பிரதமரின் கருணையே காரணம்.அக்கட்சி விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டால் கட்சி தடைசெய்யப்படும்”எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக இவ்வாறு வெளியிட்ட கருத்தினால், சபையில் கடுமையான வாத பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இதன்போதே சாள்ஸ் நிர்மலநாதன், சரத் வீரசேகரவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சபை அமர்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஹிட்லர் போன்று மஹிந்த செயற்பட்டிருந்தால் ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே இவர்களையும் ஒழித்திருக்க வேண்டும் என கூறிய கருத்து பாரதூரமானது. ஆகவே அவர் சபையில் மன்னிப்புக்கோர வேண்டும்.

அத்துடன், அரசாங்கத்தின் சில செயற்பாடுகளினாலேயே இனவாதம் வளர்ந்து வருகிறது. தமிழ் மக்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, உரிய நிரந்தர தீர்வை வழங்குங்கள் என அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சரத் வீரசேகர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக பிரிவினைவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையினாலேயே இவ்வாறு கூறினேன் என சபையில் குறிப்பிட்டார்.

“பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்காக தமிழர்களை இன அழிப்பு செய்துள்ளீர்கள்” – பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் !

“பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்காக தமிழர்களை இன அழிப்பு செய்துள்ளீர்கள்”  என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று(03.12.2020) பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது  விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களுடன் பேசினேன். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோருடன் பேசினேன். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் நான் 10 தடைவைகளுக்கும் அதிகமாக இது குறித்துப் பேசினேன். பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேசினோம்.

மே 17 ஆம் திகதி காலை நானும் அப்போதைய அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் இரு ஆயர்களும் அங்கு சென்று பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. கடல் மார்க்கமாக அவர்களை மீட்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் அது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தால் அது தாமதமானது.

பின்னர், விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த சகல பொதுமக்களையும் மீட்டுள்ளதாகவும், புலிகளின் கட்டுப்பாட்டில் எந்தவொரு பொதுமகனும் இல்லை, அனைவரையும் மீட்டுள்ளோம் எனவும் தொலைக்காட்சியில் அரசினால் அறிவிப்பு விடப்பட்டது.அதனை கேட்டு நான் அச்சப்பட்டேன். ஏனெனில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோதே நான்கு இலட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அரச தரப்பின் கணக்கெடுப்பு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் கணக்கெடுப்பு என அனைவரதும் எண்ணிக்கைக்கு அமைய அதிகளவில் மக்கள் இருந்திருக்கவேண்டும். அவ்வாறு இருக்கையில் பொதுமக்களை எப்படியேனும் வெளியேற்றிவிடவேண்டும் என்ற நோக்கத்தில் எனது தொடர்புகளைப் பயன்படுத்தி, பாராளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தி அரச தரப்புடன் பேசி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

போராட்டம் தொடங்கிய வேளையில் நான்கரை இலட்சம் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தனர். ஆனால் 17 ஆயிரம் பொதுமக்களே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தனர் என அரசு கூறியது. உணவு மற்றும் மருந்துகளை வெறுமனே 17 ஆயிரம் மக்களுக்கு மட்டுமே அனுப்பினார்கள். இதுதான் உண்மை. மூன்றரை இலட்சம் மக்கள் பின்னர் முகாம்களுக்கு வந்தனர். ஆகவே இலக்கங்களில் அரசு பொய்களை கூறிக் கொண்டுள்ளது. இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை. 164 ஆயிரம் மக்களை அரசு கணக்கில் எடுக்கப்படவில்லை.

4 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகளுக்கான விசா வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபையில் கூறினார். ஏன் அவர்களுக்கு விசா வழங்கவில்லை என சிந்தித்துப்பாருங்கள். குறித்த 54 அதிகாரிகளும் அப்பாவிகள் என்றால் அதனை நிரூபிக்கவேண்டும். ஆனால் அவர்கள் குற்றவாளிகள். அதனால் தான் இந்த நிலைமை உருவாகியுள்ளது. நீங்கள் இந்த நிலைமைகளை நினைத்து வெட்கப்படவேண்டும். இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாம் இந்த அமைச்சை இனவழிப்பு அமைச்சு, தமிழர்களுக்கு எதிராக அமைச்சு என்றே நினைக்கின்றோம். அமைச்சுக்கு பொறுப்பான சரத்வீரசேகர சற்று முன்னர் இந்தச் சபையில் ஒன்றை கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் என்றார். இதனை நினைத்து வெட்கப்பட வேண்டும். அதேபோல் மஹிந்த சமரசிங்க அண்மையில் இதே சபையில் ஒன்றைக் கூறினார். பொதுமக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் வந்த வேளை அதனை அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக தெரிவித்தார். பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது. இதுதான் போர் குற்றம். ஒரு நபரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றமையே போர் குற்றமாகும். இன்றும் நாட்டில் உள்ள பாதுகாப்புத் தளங்களில் அளவுக்கு அதிகமானவை வடக்கு, கிழக்கிலேயே உள்ளன. இவர்களின் எதிரிகள் தமிழர்கள் என்பதே இவர்களது நிலைப்பாடாகும். விடுதலைப்புலிகளின் பெயரைக்கூறி தமிழர்களை இன அழிப்பு செய்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.