2021

2021

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 கோடியை கடந்துள்ளது !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.23 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.66 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28.735 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.28 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98,200-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அடையாளம் காணப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி !

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த தூண்டிவிட்டார் என்பது தெரியவந்ததுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை தகவல்களின்படி, லுக்மான் தாலிப், லுக்மான் தாலிப் அகமட்  என்ற தீவிரவாதிகள் 2016 முதல் தாக்குதல்கள் நடக்கும் வரை பல சந்தர்ப்பங்களில் சஹ்ரானை சந்தித்ததாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில் லுக்மான் தலிப் அகமட் இலங்கையில் பிரசாரங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சாரா ஜஸ்மின் என்பவர் இறந்துவிட்டாரா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்துள்ளார்.

“இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார்.” – ஸ்ரீதரன் கேள்வி !

“இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏப்ரல் தாக்குதலின் போது பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய மைத்திரிபால சிறிசேன அவர்களே இதற்காக நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்களா ? என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றில் இன்று (06.04.2021) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில்  இது தொடர்பாக பேசிய பேசிய ஸ்ரீதரன், இறுதி யுத்தத்தின்தின் போது கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களின்  மௌனம் தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மீது, மதம் கடந்து, மதத் தலைவர் என்ற அடையாளத்தை கடந்து மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் இன்று பல மக்களுடைய புருவங்களை உயர்த்த வைத்துள்ளது என்றும் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டினார்.

மேலும் கொழும்பு பேராயர், சிங்கள கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா அல்லது உலகத்தில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்காக பேசுகின்றாரா என்ற கேள்வி காணப்படுவதாகவும் ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

தாயார் தொலைபேசியினைப் பறித்தமையால் தூக்கிட்டு தற்கொலை செய்த 15 வயது மாணவன் – யாழில் சம்பவம் !

தொலைபேசியில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுவந்த மாணவன் ஒருவன் தாயார் தொலைபேசியினைப் பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

59fa928c 4e9b 471a 82eb 88896347b5df

இந்தச் சம்பவம், சுழிபுரம் பிளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09இல் கல்விகற்கும் சிவனேஸ்வரன் நேருஜன் என்ற 15 வயதான மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையினால் மாணவனின் தாயார் தொலைபேசியை பறித்து வைத்துள்ளார். அதனைப் பொறுக்க முடியாத மாணவன் நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

“தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம்.” – மனோ கணேசன்

தனித் தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு:-

மத்திய மாகாணத்தில் ஆரம்பித்து, இப்போது ஊவா மாகாணம் வரை, மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு என்ற இயந்திரம் ஒழிக்கப்பட்டு, தமிழ்ப் பிரிவு ஆகிவிட்டது. 6 தமிழர் பெரும்பான்மை பிரதேச சபைகளை நுவரெலியாவில் போராடிப் பெற்றதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வரலாறு. இருப்பதையும் இழப்பது இப்போதைய வரலாறு.

தனியான தமிழ்க் கல்வி அமைச்சு என்றால் மாகாண சபை வரவு – செலவுத் திட்டத்தில், எங்கள் பாடசாலை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகத் தனியான நிதி ஒதுக்கீடு கிடைக்கும்.

தனித் தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம் – என்றுள்ளது

“அமெரிக்கத் தாக்குதல்களை விசாரணை செய்த பாணியில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் நடத்தவேண்டும்.” – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ

“அமெரிக்கத் தாக்குதல்களை விசாரணை செய்த பாணியில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் நடத்தவேண்டும்.” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த கோட்டாபய – மஹிந்த அரசாங்கம், வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற அதிக தாமதம் செய்வது ஏன் என்றும் அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஷஹ்ரான் காசீம், தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் இலங்கை அரசு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சாலியை தொடர்புகொண்டிருந்தார் எனக் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது நளின் பண்டார குறிப்பிட்டிருந்தார்.

நளின் பண்டாவின் இந்தக் கருத்துக்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய நளின் பண்டாரவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்திருந்தனர்.

அந்த வகையில் இன்று முற்பகலில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம் பலமணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைக்காக நளின் பண்டார முன்னிலையான போது அவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் சஜித் பிரேமதாஸ,

ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகளை அரசாங்கமே அம்பலப்படுத்த வேண்டும். இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகள், உதவிசெய்தோரை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையளிப்பதற்கான கடமை அரசாங்கத்திற்கு உள்ளது.

அதனை தேர்தல்காலத்தில் அரச தரப்பினரே வாக்குறுதியாகக் கூறிவந்தார்கள். தாக்குதலுக்குப் பின்னால் இருப்போர் அம்பலமாகவில்லை என்பதையே நாங்களும் மக்களும் நினைக்கின்றார்கள். உண்மையை கண்டறியவே மக்கள் ஆணையை இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றனர்.

எமது அரசாங்கத்தின் காலத்தில்தான் ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டு தற்போது இந்த அரசாங்கத்தின் காலத்தில் அறிக்கை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்து பின்பற்றப்பட்ட நடவடிக்கையை இந்த அரசாங்கமும் பின்பற்ற வேண்டும் என யோசனை முன்வைக்கின்றேன்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் மிகவும் தாமதமாகும். 2019ஆம் ஆண்டில் ஆட்சிக்குவந்த அரசாங்கம், புதிய விசாரணைக் குழுவை அமைத்து, வெளிநாட்டிலுள்ள நிபுணர்களை இணைத்துக்கொண்டு சில மாதங்களில் விசாரணையை நிறைவுபடுத்தியிருக்கலாம்.

கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கின்ற அதிருப்திகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடத்தி உண்மையை அறிவதில் இந்த அரசாங்கம் இன்னும் தாமதிக்கின்றது. மக்களிடம் இருந்து தகவல்கள் மறைக்கப்படுகின்றதா? கர்தினாலின் கருத்துக்களே இன்று மிகத்தெளிவாக இருக்கின்றன. தீவிரவாத செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக சிங்கப்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள தண்டனைகள், சட்டங்களே இங்கும் அமுல்படுத்தப்பட வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிக்கின்றன.” – மைத்திரிபால சிறீசேன !

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தன்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை நாவல பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிர்வாக சேவையாளர் சங்கம் நாவல பிதேசத்தில் கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.

கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் பேராயரின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட போதே , “பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிக்கின்றன.” என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் , மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்ட மூலமே இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னரே அது குறித்து தீர்மானிக்க முடியும். அது தொடர்பில் இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களையும் நாம் முன்னெடுக்கவில்லை என்றார்.

பேராயரின் கருத்து தொடர்பில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில் ,

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கும் தெரிவாகிவிட்டார். தேர்தல் நிறைவடைந்துவிட்டது. மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. எனவே இதனை தவறாக புரிந்து கொள்ளுகின்றனர் என்றே நான் எண்ணுகின்றேன்.

அதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் அவர் குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை.

அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இடமளிக்குமாறு தான் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

பொலிஸ் அதிகாரியால் தெமழோ என கூறி தாக்கப்பட்டேன் – மஹரகம வீதியில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட சாரதி !

அண்மையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியால் மஹரகம வீதியில் வைத்து சாரதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பெரிய அதிர்வினை ஏற்படுத்தியிருந்தது.  மேலும் தாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும் அரச தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொடூரமாக தாக்கப்பட்ட சாரதியான இளைஞர் தனது மோசமான அனுபவத்தைப் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் கலைமகன் பிரவீன் என்ற தமிழ் இளைஞரே தாக்குதலுக்கு இலக்கானவராவார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 29ஆம் திகதி பண்டாரவளையிலிருந்து கொழும்புக்கு வரும் போதே இந்த சம்பவம் நடந்தது.

இதன்போது மஹரகம போக்குவரத்து சமிக்ஞையில் லொறியை நிறுத்தியிருந்தேன். அப்போது எனக்கு நித்திரை வந்து விட்டது. உறங்கி விட்டேன்.

எனக்கே தெரியாமல் லொறி முன் சென்றுவிட்டது. ஆனாலும் எனக்கு சட்டென்று நிதானம் வந்த போது எனது லொறிக்கு முன்னால் யாரோ இருப்பது தெரிந்தவுடன் விபத்தை தவிர்ப்பதற்காக லொறியை திருப்பினேன்.

அப்போதுதான் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எனது லொறியின் கண்ணாடி பட்டது. அவரை மோதவில்லை. கண்ணாடி மட்டுமே பட்டது. உடனே நான் லொறியை நிறுத்திவிட்டேன். எனினும் அப்போது மற்றுமொரு பொலிஸ் அதிகாரி வந்தார். என்னை அடித்து வெளியே இழுத்தார். நான் வாகனத்தின் பட்டியை கூட கழற்றவில்லை. அவர் என்னை அடித்து இழுத்த பிறகே பட்டிகை கழற்றினேன்.

எதுவும் கேட்டவில்லை. விசாரிக்கவும் இல்லை. உடனே அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

எனது வாகனத்தில் அடிபட்ட அதிகாரியை உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அவருக்கு எதுவும் ஆகவில்லை.

அந்த இடத்தில் யாரென்றே தெரியாத ஒருவரும் வந்து என்னை தாக்கினார். பின்னர் பொலிஸ் அதிகாரி அவரது காலால் எனது காலை மடக்கி கீழே போட்டு, என் மீது ஏறி குதித்தார்.

பின்னர் என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை செய்தார்கள். எனக்கு அடிப்பட்டது என்று கூறியும் வைத்தியர்கள் அதை கவனிக்கவில்லை. அடிக்கும் போது பொலிஸ் அதிகாரி “தெமழோ (தமிழன்)” எனவும் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்து ஏசியதாக அவர் தெரிவித்தார்.

“முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் நீக்கப்பட்ட விதம் தவறானது.” – அலிசப்ரி

“முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் நீக்கப்பட்ட விதம் தவறானது.” என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னக்கோன், மொஹான் பீரிஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அலி சப்ரி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த வேளையில், அவரது அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர், அப்போதைய தலைமை நீதிபதி மொஹான் பீரிஸுக்கு பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக  ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.

இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் அலி சப்ரி மேலும் கூறியுள்ளதாவது,  “தவறை சரிசெய்ய வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தற்போதைய அரசாங்கம் தயாராக உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தேவையான ஆலோசனையைப் பெறுவார் என்று நம்புகிறேன்” என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்வாய்க்கிரகத்தில் பறக்கவுள்ள நாசாவின் ஹெலிகாப்டர் !

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் திகதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸரோ பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உயிரினங்களுக்காக கரிம படிகங்கள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்து பூமிக்கு அனுப்பி உள்ளது.

இந்த விண்கலத்தில் நவீன ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பெர்சவரன்ஸ் ஆய்வு விண்கலத்துடன் 47.1 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து செவ்வாய் கிரகத்துக்கு சென்றுள்ளது.

இந்த ஹெலிகாப்டர், பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து இறங்கி செவ்வாய் கிரகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ளது. இரவு நேரங்களில் இங்கு கடும் குளிர் நிலவுகிறது.

இதனால் அங்கு ஹெலிகாப்டரில் பாகங்கள் உறைந்து பழுது ஆவதை தடுக்க இதில் வெப்பம் உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தை உருவாக்கி பேட்டரி மூலம் இந்த ஹெலிகாப்டரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தயாராக நிற்கும் இந்த ஹெலிகாப்டர் விரைவில் செவ்வாய் கிரகத்தில் பறக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.