2021

Wednesday, October 20, 2021

2021

T20 உலக வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம் !

2021 T20 உலக வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று அக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

உலகக் கிண்ண T20 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் தகுதிச் சுற்றுப் சுற்றுப் போட்டிகள் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று நடைபெறவுள்ளன. முதலாவது போட்டி இன்று பிற்பகல் 3.30 ற்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் பப்புவா நியுகினியா அணியும் – ஓமான் அணியும் மோதவுள்ளன.

8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தகுதிச் சுற்றில் 4 அணிகள் வீதம் இரண்டு குழுக்களாக போட்டிகள் இடம்பெறும்.

A குழுவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

B குழுவில் பங்களாதேஷ், ஓமான், ஸ்கொட்லாந்து, பப்புவா நியுகினியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

T20 உலகக் கிண்ணத் தொடரின் பிரதான சுற்று எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

“பாடசாலைகளை திறவுங்கள் – நாங்கள் கற்பிக்க மாட்டோம்.” – ஆசிரியர் சங்கம் உறுதி !

பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டாலும் தங்களது சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் எமது வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு போராடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

“புற்றரையில் நெல்விவசாயம் செய்து படம் காட்டியவர்கள் மீனவர்களை பணயமாக வைத்து புதிய படம் காட்டுகின்றனர்.“ – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்டம் !

“என்னை எதிர்க்க முடியாதால் தமிழ்தேசிய தலைமைகள் சிறுபிள்ளைதனமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.” என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரும் மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

விடயதானத்திற்கு பொறுப்பாகவுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாணத்தில் இழுவைமடிப் படகுகளை தடை செய்யும் சட்டத்தினை அமுலாக்காமை உட்பட மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுகாதுள்ளமை உள்ளிட்டவற்றுக்கு நீதி கோரி இன்றையதினம் முல்லைத்தீவு, முதல் பருத்தித்துறை வரையில் கடல்வழியாக கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாகவே பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த வண்ணம் உள்ளனர். 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் கடற்றொழில் அமைச்சு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்குரிய அணுகுமுறைகள் நான்கு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றேன்.

முதலாவது, இராஜதந்திர வழியிலானதாகும். அதற்காக செயற்பாட்டுத்திட்டமொன்றை வரைந்துள்ளேன். இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து இந்தியப் பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், செயலாளர் ஷிங்ரிலா, இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆகியோருடன் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளமையால் பதற்றமான நிலைமைகள் குறைவடைந்துள்ளன. இது எமது நகர்வுகளுக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றியாகும். இரண்டாவதாக, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இழுவைப்படகுகளை பயன்படுத்தல், அத்துமீறி எல்லை தாண்டுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு ஏதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

2017ஆம் ஆண்டு இழுவைப்படகுகள் சட்டம்,  2018ஆம் ஆண்டு வெளிநாட்டு கப்பல்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மூன்றாவதாக, எமது கடற்றொழிலாளர்களை அணிதிரட்டுவதுடன் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வேண்டாத தலையீடுகள், பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன. நான்காவதாக, நீண்டகால நிரந்தர தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை முன்னெடுப்பது. குறிப்பாக.மன்னார் வளைகுடா, பாக்குநீரிணை போன்ற பகுதிகளில் ஏற்படும் இயற்கையான விடயங்கள் இதில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விதமான குணாம்ச ரீதியான நகர்வுகள் கடற்றொழிலார்களின் பிரச்சினைக்கு தீர்வுகளை படிப்படியாக வழங்கி வருகின்றன. இதனால் தமிழ்த் தலைவர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே கடற்றொழிலாளர்களின் விடயத்தில் கரிசனை கொண்டிருக்கின்றோம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அதன்காரணமாகவே கடந்த மைத்திரி-ரணில் ஆட்சியில் கடற்றொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டபோது அதற்கு நாம் எதிர்கட்சியில் இருந்தாலும் ஆதரவு வழங்கியிருந்தோம். ஆனால் அந்தச் சட்டங்களை கடந்த காலத்தில் கிடப்பில் போட்டிருந்தனர்.

தற்போது, கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டால் தமது உள்ளுர் அரசில் கேள்விகுறியாகிவிடும் ஆபத்தில் உள்ளதால் இந்த விடயத்தினை கையில் எடுத்துள்ளார்கள். இதுவொரு சுயலாபத்திற்க்கான செயற்பாடாகும்.

ஏற்கனவே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் ஒரு படம் காண்பிக்கப்பட்டது. அதற்கு பின்னர் புற்றரையில் விவசாயம் செய்வதாக இரண்டாவது படம் காண்பிக்கப்பட்டுள்ளது. இது கடற்றொழிலாளர்களை பணயமாக வைத்து முன்னெடுக்கப்படும் மூன்றாவது படமாகும். என்னை அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமையால் இவ்விதமான சிறுபிள்ளை விடயங்களை தமிழ்த் தலைமைகள் முன்னெடுக்கின்றன. இது முதன்முறை அல்ல. இவை வேடிக்கையானவை என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் பங்கேற்கின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெறும். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளார். இதை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று தெரிவித்தது.

ஒவ்வொரு அணியும் 3 வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ளலாம். சி.எஸ்.கே.வில் தக்கவைக்கப்பட்டதன் மூலம் டோனி அடுத்த ஆண்டும் அந்த அணியில் விளையாடுவார். அவர் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4-வது ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியை எரியூட்டி கொலை செய்த கணவன் – வவுனியாவில் சம்பவம் !

வவுனியா – பூவரசங்குளம் பகுதியில் தனது மனைவியை எரியூட்டி கொலை செய்த கணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது. பூவரசங்குளம் – கற்பகபுரம் பகுதியில் குடும்ப தகராறின் போது, கணவனால் மனைவி கீழே தள்ளிவிடப்பட்டுள்ளார்.

பின்னர் , மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய பின்னர் கணவன் தலைமறைவாகியமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வீட்டில் தீ பற்றிய போது, உயிரிழந்த பெண்ணின் மகனும் அயலவர்களும் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், தீக்கிரையாகிய பெண் உயிரிழந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 43 வயதான பெண்ணொருவரே தீ மூட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் 46 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்கள்.” – இரா. சாணக்கியன்

இலங்கை அரசாங்கத்தின் மீன் பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்படி நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவு- பருத்தித்துறை வரை இடம்பெற்ற போராட்டத்தின்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைக்கு காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

இந்தப் போராட்டமானது இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமோ அல்லது இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டமோ அல்ல எனக் குறிப்பிட்டார்.தமிழ்நாடு மீனவர்களில் ஒருசிலர் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, மீன்பிடித்துறை அமைச்சர் பார்த்தும் பாராது செயற்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரின் இந்த அசமந்தச் செயற்பாடானது தமிழ் நாடு மற்றும் வடக்கு- கிழக்கு வாழ் மீனவர்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமிடையிலான நல்லுறவு பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, மீன்பிடித்துறை அமைச்சர் வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த கடல்வழியான கண்டனப் போராட்டம் !

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை  9.30 மணியளவில் வந்தடைந்தது.

இழுவை மடி மீன்பிடி முறை, கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டதிருத்ததின் பின்னர் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்படாதுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் றோலர் மீன்பிடி முறையின் காரணமாக வடக்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு நீதி கோரி கடல்வழியாக இந்த கண்டனப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிறீதரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

“மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துங்கள்.” – மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை !

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“கொரோனா தொற்று நோய் முடிவடையும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பை துரிதப்படுத்துவது பற்றி நாங்கள் விவாதித்தோம்.

அதன்படி, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம். அதற்காக கட்சியின் அனைத்து பிரிவுகளையும் வலுப்படுத்தும் திட்டம் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. பொருட்களின் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். மக்களின் பிரச்சினைகள், வறுமை நிலை வேகமாக அதிரித்துள்ளது. இவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என நான் நம்பமாட்டேன். உரிய திட்டமிடல் மூலம்தான் இவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.

“தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை.” – வெளிவிவகார அமைச்சர்

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினருடன் பேச்சு நடத்த தயாரென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக சர்வதேசத்திற்கு தெரிவித்திருந்த நிலையில், தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என தற்போது அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அண்மையில் உறுதியளித்திருந்தார்.

எனினும் இலங்கையில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறிய போது ,

நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதியாக அரச சார்பற்ற அமைப்புக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயாராக இருக்கின்றோம்.

குறித்த மாநாட்டில் இருந்து நாடு திரும்பியதும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பார் என்று வெிளவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். கிளாஸ்கோ நகரில் சூழல் பாதுகாப்பு சார்ந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் லண்டன் செல்லவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின்போது பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

“ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது..” – அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி !

பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் மற்றும் கட்சி  செயற்பாட்டாளர்களும், மக்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன்,  விவசாயிகளுக்கான உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோஷம் எழுப்பட்டது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. தொழில் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும், நிர்வாகங்களின் அடாவடி முடிவுக்கு வரவேண்டும் எனவும் போராட்டத்தில்போது குரல் எழுப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது ,

ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைவரையும் ராஜபக்ச அரசாங்கம் நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டது.  ஏற்கனவே பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களே தற்போதைய விலை உயர்விலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக எவரும் குரல் எழுப்புவதில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணியே குரல் எழுப்புகின்றது. இன்று தலவாக்கலையில் நடைபெறும் போராட்டம் மலையகம் எங்கும் முன்னெடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறி ஏமாற்றியுள்ளனர். இன்று தோட்டங்கள் கம்பனிகளிடம் அடகுவைக்கப்பட்டுள்ளன.  இந்த அரசாங்கத்தால் முடியாது. முடியாதவர்கள் வீட்டுக்கு செல்வதே நல்லது.” -என்றார்.