21

21

இலங்கைக்கு வரும் 50,000 சீனர்கள் !

6 மாதங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவர் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார்.

சீனாவில் இருந்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தற்போது சுற்றுலாத்துறை பாரிய பாதிப்புக்களை சந்தித்திருக்கின்றது. இந்நிலையில் சுற்றுலா துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

அந்த வகையில் வருடத்தின் இறுதி ஆண்டில் சீனாவில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

அதற்கான ஏற்பாடுகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கான விமான பயணங்களை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆறு மாத காலத்தில் சீனாவில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள். அதன் ஊடாக எமக்கு பாரியதொரு அந்நிய செலாவணி நாட்டுக்குள் வரும்.

இதனால் இவ்வாண்டின் இறுதி அரையாண்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என்றார்.

“தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை சாதாரண தரக் கூட சித்திபெறாத நபர்கள் பரிசீலனை செய்வதை ஏற்க முடியாது” – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

“நீதிபதிகள் விசாரணை செய்து தயாரித்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை சாதாரண தரக் கூட சித்திபெறாத நபர்கள் பரிசீலனை செய்வதை ஏற்க முடியாது” என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவை கர்தினால் மெல்கம் ரஞ்சித் நிராகரித்து குறிப்பிட்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.

ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் கருதினால் மெல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்கம் சில தகவல்களை வெளிவிடுவதற்கு அஞ்சுகின்றது. ஆணைக்குழு சேகரித்த அனைத்து தகவல்களையும் ஆணைக்குழு தெரிவித்துள்ளவாறே வெளியிட வேண்டும்.

ஆணைக்குழு தெரிவித்துள்ள விடயங்களில் எவற்றையும் மறைக்க முடியாது அல்லது தெரிவு செய்த சில விடயங்களை மாத்திரம் பொதுமக்களுக்கு வெளியிட முடியாது. அச்சிட்டு வெளியிடுவது பெரிய விடயமல்ல முதுகெலும்புள்ள தலைவர்களை எங்களுக்கு அவசியம்.

இந்த தேவாலயத்தில் உயிரிழந்த மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யாமல் நாங்கள் எங்கள் தலையை கவிழ்க்க மாட்டோம். இந்த விடயத்தில் அரசாங்கம் அக்கறையற்று அலட்சியமாகயிருந்தால் நாங்கள் எங்கள் வழிமுறைகளை பின்பற்றுவோம். நாங்கள் சர்வதேச கத்தோலிக்க திருச்சபைக்கு சென்று போராடுவோம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அங்கம் வகித்த ஐந்து நீதிபதிகள் தங்கள் பரிந்துரைகளை முன்வைத்தனர். இதன் காரணமாக அந்த அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ள கருதினால் மெல்கம் ரஞ்சித் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்களை இந்த விடயம் குறித்து தீர்மானிப்பதற்கு அனுமதிக்கப் போகின்றோமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழர்கள் தமது கௌரவம், சமத்துவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும்” – இரா.சம்பந்தன்

“தமிழர்கள் தமது கௌரவம், சமத்துவம் மற்றும் நீதியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும்” என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், தமது யோசனைகளைக் கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தமது கௌரவத்தையும் சமத்துவத்தையும் நீதியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு ஆட்சியதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கவேண்டும். இதனை புதிய அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் மிகவும் உறுதியாக வலியுறுத்தியிருக்கின்றோம்.

குறித்த பிரச்சினை பல வருடகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்குவதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், தமிழ்மக்களுக்கு நியாயமானதும் அர்த்தமுள்ளதுமான அதிகாரப் பரவலாக்கமொன்று வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அரசியலமைப்பு உருவாக்கக்குழுவிடம் எடுத்துரைத்தோம்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாதம் குறித்த பாடங்களில் கலந்துக்கொண்ட 15 பெண்களில் 5பேர் கொல்லப்பட்டுவிட்டனர் !

“உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் முக்கியதாரி சஹ்ரான் ஹாஷிம் 2018ஆம் ஆண்டு நடத்திய தீவிரவாதம் குறித்த பாடங்களில் கலந்துக்கொண்ட 15 பெண்களில் 5பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள பெண்கள் தற்போது விளக்கமறியல் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரான் ஹாசிமின் தீவிரவாதம் குறித்த பாடங்களில் கலந்து கொண்டதற்காக மாவனெல்லாவைச் சேர்ந்த 24 வயதான முகமது இப்ராஹிம் சைதாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது மூளைச்சலவை பாடங்கள் 2018 டிசம்பரில் காத்தான்குடி பகுதியில் சஹ்ரானால் நடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இந்தநிலையில் தம்முடன்; 15 பெண்கள் பாடங்களில் கலந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

அவர்களில் 5பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 26, 2019 அன்று சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதாக கைதுசெய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சஹ்ரான் கற்பித்த பாடங்களால் வழிநடத்தப்பட்ட பெண்கள், எந்த நேரத்திலும் அதிக ஆபத்தான தற்கொலைத் தாக்குதல்களை நடத்தத் தயாராக இருந்தார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரசினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மையான விபரங்களை வெளியிடுங்கள்” – அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்

“கொரோனா வைரசினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மையான விபரங்களை வெளியிடுங்கள்” என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனாவைரசினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மையான விபரங்கள் வெளியிடப்படாததன் காரணமாக சுகாதார பணியாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனாவைரசினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்களில் குறிப்பிட்டளவு எண்ணிக்கையான உயிரிழப்புகள் சேர்க்கப்படவில்லை என சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் எனவைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசினால் நபர் ஒருவர் உயிரிழக்கும்போது அவரின் இறப்பு தேசிய புள்ளவிபரங்களில் சேர்க்கப்படாவிட்டால் குடும்பத்தினரிற்கு அவர் கொரோனாவைரசினால் உயிரிழந்தாரா என்ற சந்தேகம் எழுவது இயல்பு என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை விடுதலைப்புலிகளிற்கு தியாகிகள் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்பதாகவுள்ளது”- நேஸ்பி பிரபு

பிரித்தானிய அரசியல்வாதி நேஸ்பி பிரபு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கடுமையாக சாடியுள்ளதுடன் அறிக்கையின் தொனி விடுதலைப்புலிகளிற்கு தியாகிகள் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் விதத்தில் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடு;ப்பதற்கு உதவக்கூடிய விடயம் எதுவுமில்லை என நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஜனவரி 2009 முதல் மே 2009 முதல்வரை 5000 முதல 7000வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்பதற்கான சுயாதீன மாக நிரூபிக்கப்பட்ட பல ஆதாரங்கள் உள்ளன என்பது உட்பட பல முக்கிய விடயங்களை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் முன்வைக்கும் கட்டுக்கதை போல 40,000க்கும்அதிகமானவர்கள் கொல்லப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்த்த மிகமோசமான யுத்த குற்றத்தினை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மோதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களில் 60 வீதமானவர்கள் சிறுவர்கள் என யுனிசெவ் என தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சிறுவர்களை படையணியில் இணைப்பது பயிற்சிவழங்குவது உட்பட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் பிரிட்டனில் வாழும் அடெய்ல்பாலசிங்கம்என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா ஏன் இந்த விவகாரத்தை விசாரணை செய்யுமாறு ஐநாவை கேட்கவில்வை என கேள்வி எழுப்பவேண்டும் என நேஸ்பி பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.பல்கலைகழக துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இடைநிறுத்தம் !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலைத்தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்தமாக பீடமட்டத்திலும், பல்கலைக் கழக மட்டத்திலும் கல்வி, விளையாட்டு, கலை கலாசாரம் உட்பட சகலதுறைகளிலும் சிறந்த மாணவன் ஒருவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுவது வழமையாகும்.

இம்முறை கலைப் பீட மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்த மாணவனுக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம், பல்கலைக் கழக மட்டத்தில் சகல துறைகளிலும் சிறந்தமாணவனுக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ஆகிய விருதுகளுக்காககிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் ஊடகத் துறையைச் சேர்ந்த மாணவன்ஒ ருவருக்கு சிறந்த மாணவனுக்கான பல்கலைக்கழக மட்ட விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பின், மெய்யியல் துறை மாணவன் ஒருவரிடம் இருந்து துணைவேந்தருக்குக் கிடைத்த மேன்முறையீட்டின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும் விசேட மூதவைக் கூட்டம் கூட்டப்பட்டு மெய்யியல் துறை மாணவன் விருதுக்கு உரியவராக அறிவிக்கப்பட்டார்.

எனினும், மெய்யியல் துறை மாணவனுக்கு எதிராக மாணவர் தரப்பில் இருந்து மேன்முறையீடுகளும், ஆதாரங்களும், புதிய சாட்சியங்களும் கிடைத்த வண்ணம் இருப்பதனால், விருதுக்குரியவரைத்தெரிவு செய்வதற்குக் கால அவகாசம் போதாமையால் விருது வழங்கல் இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய விசாரணைகள் இடம்பெற்று பிறிதொரு விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.