March

Tuesday, October 26, 2021

March

“மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற தவறினால் ஐ.நா அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வரும் அபாயம்.” – எம்.ஏ.சுமந்திரன்

ஐ.நாவின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐ.நா அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வரும் அபாயம் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ.சுமந்திரன் இதை தெரிவித்ததாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அமல்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இல்லை என்று சில அமைச்சர்கள் கூறியிருந்தாலும், அந்த தீர்மானங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே உண்மை.

பல ஆண்டுகளாக முன்மொழியப்பட்ட ஜெனீவா தீர்மானங்களை செயல்படுத்த அந்த நேரத்தில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் தவறிவிட்டன.

எனினும் தற்போது இலங்கையின் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், அத்தகைய துரதிர்ஷ்டவசமான சூழலில் ஐ.நா அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜெனிவா தீர்மானங்களை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் பங்கு உள்ளது என்பதை அமைச்சர்கள் புரிந்துகொண்டு அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் சுமந்திரன் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்நாட்டு மக்களை உயிருடன் வாழ வைப்பதல்ல, எமனிடம் அனுப்பி வைப்பதே தற்போதுள்ள அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது.” – சஜித் பிரேமதாச

“இந்நாட்டு மக்களை உயிருடன் வாழ வைப்பதல்ல, எமனிடம் அனுப்பி வைப்பதே தற்போதுள்ள அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது.” என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திஸ்ஸமகாராமையில் நடைபெற்ற பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ஆயிரக்கணக்கான மெற்றிக் தொன் எடையுடைய தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றீடுகளை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ளனர். இவற்றை திருட்டுத்தனமாக செய்துள்ளனர். புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது என சுகாதார பிரிவினரால் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் தடை செய்துள்ளனர்.

எனினும் இதனை நாட்டுக்கு கொண்டுவந்த நிறுவனங்கள் அவற்றை சுத்திகரித்து தரச் சான்றிதழ்களையும் கூட்டாக இணைந்து பெற்றுக்கொண்டுள்ளன. மேலும் சுங்கத் திணைக்களமும் அவற்றை வெளியே கொண்டு வருவதற்கான அனுமதியை கொடுத்துள்ளது.

தற்போது அவை சந்தைக்கு வந்துள்ளன. தமிழ் – சிங்கள பண்டிகைக் காலத்தின்போது தேங்காய் எண்ணெயின் பாவனை அதிகமாகக் காணப்படும். இவ்வாறான நிலையில் மக்களை புற்றுநோய்க்காரர்களாக சாகடிக்கச் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசினுடைய நோக்கம் இந்நாட்டு மக்களை உயிருடன் வாழ வைப்பதல்ல, எமனிடம் அனுப்பி வைப்பதே தற்போதுள்ள அரசாங்கத்தின் பொறுப்பாகவுள்ளது. இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த 69 இலட்சம் வாக்காளர்களும் பதிலளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு தமிழ்- சிங்கள புத்தாண்டை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொண்டாடினோம். இந்த ஆண்டு புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்யுடன் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாட வேண்டியுள்ளது” என்றார்.

உயிருக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் !

தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்காக பாதுகாப்பை அதிகரிக்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஹொரகொல்லையில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு பலமணிநேரம் சுதந்திரமாக நடமாடி வீட்டில் உள்ள பொருட்களை ஆராய்ந்த சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எந்தபொருளையும் கொண்டுசெல்லவில்லை இதன் காரணமாக அவர்களின் நோக்கம் திருடுவது இல்லை என சந்தேகம் எழுந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதும் பொலிஸார் ஹொரகொல்லை வீட்டிற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை எவரையும் கைதுசெய்யவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி இது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தேவையற்ற ஆபத்தான நடவடிக்கைக்கான ஒத்திகையாகயிருக்கலாம் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட முகாமில் புதையல் தோண்டிய ஐவர் கைது !

கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதி தொடர்பில் புலனாய்வாளர்களுக்கு  கிடைக்கப்பெற்ற தகவல்! - Pearl One News

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழீழ விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியிலே புதையல் தோண்டும் பணி இடம்பெற்றுள்ளது. நேற்று(29.03.2021) நள்ளிரவு மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட போதே இராணுவப் புலனாய்வாளர் மற்றும் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் கருவி மற்றும் ஏனைய பொருட்கள் இவர்கள் பயணித்த மோட்டார் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சித்தாந்தத்தை அல்லது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அனைத்து குழுக்களும் தடை செய்யப்படும்” – அரசாங்கம் அறிவிப்பு !

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சித்தாந்தத்தை அல்லது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அனைத்து குழுக்களும் தடை செய்யப்படும்” என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில இதனை  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர், புலம்பெயர் மக்களின் அமைப்புகளை தடை செய்தமை குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் உதய கம்மன்பில, இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கை ஒரு நாடு என்ற வகையில், வெளிநாட்டினருடன் நெருக்கமாக செயற்படும். ஆனால் விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு குழு அல்லது தனிநபரையும் தடை செய்யும். புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. நமது அரசியலமைப்பின் கீழ் பிரிவினைவாதம் தடைசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ புலிகளின் சித்தாந்தத்தை முன்வைக்கும் இதுபோன்ற குழுக்கள் அல்லது தனிநபர்களுடன் தொடர்புகளைப் பேண இலங்கை தயாராக இல்லை. அவர்கள் வெளிநாட்டில் வசிப்பதால் இவர்களை தடை செய்யவில்லை. அவர்கள் புலிகளின் சித்தாந்தத்தை முன்வைப்பார்கள் எனின், அவர்கள் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவார்கள் எனின் அவர்கள் தடை செய்யப்படுவார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றையும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பலரின் பெயர்களையும் கறுப்புப் பட்டியலில் இணைத்து இலங்கை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. பெப்ரவரி மாதம் 25ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக இலங்கை அரசாங்கம் குறித்த கறுப்புப் பட்டியல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதற்கமைய, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளைஞர் அமைப்பு – அவுஸ்திரேலியா மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினைப் போன்று சுற்றுசூழலை நேசிக்கும் ஒருவரும் இல்லை.” – அமைச்சர் சரத் வீரசேகர

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கடற்படை, விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அதிகளவான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தில் உள்ள முக்கிஸ்தர்கள் பலரும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினைப் போன்று சுற்றுசூழலை நேசிக்கும் ஒருவரும் இல்லை எனவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நடுத்தெருவில் இளைஞனை கீழே தள்ளி தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது !

கொழும்பு, பன்னிபிட்டிய பகுதியில் லொறி சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் மஹரகம காவல் நிலையத்தில் சேவையாற்றும் காவல் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த காவல் அதிகாரி நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவர் நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Maharagama Traffic Police constable arrested over assault - Nation Today:  Sri Lankan News

இந்த சம்பவம் தொடர்பாக தண்டனைச் சட்டம் மற்றும் காவல்துறை கட்டளைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதிப் காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேற்கண்ட காவல்துறை உத்தியோகத்தர் நபரொருவரை தாக்கும் காணொளி நேற்யை தினம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல விமர்சனங்களை எழுப்பியிருந்தது.

இந் நிலையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் காவல்துறை மா அதிபருக்கு விசேட ஆலோசனை வழங்கியிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே குறித்த காவல்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்குள்ளான லொறியின் சாரதி தற்சமயம் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த தீவிர இஸ்லாமிய குழுக்கள் அனைத்தும் உடனடியாக தடை செய்ய்யப்படவேண்டும்” – கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள் !

“தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த தீவிர இஸ்லாமிய குழுக்கள் அனைத்தும் உடனடியாக தடை செய்ய்யப்படவேண்டும்” என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் அமைதியையும் சட்ட விதிகளையும் பாதுகாப்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டி கொழும்பு மறைமாவட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி அனைத்து குடிமக்களும் இதை அவசரமாக செயற்பட அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்க வேண்டும் என்றும் கொழும்பு மறைமாவட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இந்த குற்றத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திட்டமிட்டவர்கள், நிதி உதவி, அரசியல் ஆதரவை வழங்கியவர்கள் என தொடர்புபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த தீவிர இஸ்லாமிய குழுக்கள் அனைத்தும் உடனடியாக தடை செய்ய்யப்படவேண்டும் என்றும் கொழும்பு மறைமாவட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் 269 அப்பாவி பொதுமக்களை கொன்ற மற்றும் 300 க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்திய குற்றவாளிகளை தண்டிக்க தவறினால் எதிர்ப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது கையில் அறுவை சிகிச்சை !

ஸ்கேன் மற்றும் ஆலோசகர் மதிப்பாய்வைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது கையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளார்.

ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சற்று முன்பு தனது வீட்டில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்ச்சருக்கு கையில் வெட்டு ஏற்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த காயம் இந்தியா அணிக்கு எதிரான தொடரில் பிரகாசிக்க தடையாக இருந்த நிலையில் ஆர்ச்சர் குணமடைய இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

“யாழ்ப்பாணம் முடக்கப்படலாம்.” – ஜெனரல் சவேந்திர சில்வா

ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா ? இல்லையா ? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளது . எனவே, யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.என இராணுவத் தளபதியும் கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன . இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

மேலும் பொதுமக்களும் முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதோடு சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்கான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார் . இதேவேளை சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .