“சீனாவை மடியில் வைத்துக்கொண்டு, பாகிஸ்தானை அரவணைத்துக் கொண்டு இந்தியாவைப் பகைப்பதால் எதையோ சாதிக்க முடியும் என்று இலங்கை கனவு காண்கின்றது”என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்ச அரசின் கனவு நரகலோகக் கனவாகவே இருக்கும். இவ்வாறான செயற்பாடுகளால் எந்தவித நன்மைகளையும் இலங்கை அடையமாட்டாது. மிகவும் அயல் நாடான இந்தியாவைப் பகைப்பதால் பெரும் விளைவுகளைத்தான் இலங்கை சந்திக்கும் என்பதை இந்த அரசிடம் கூறிவைக்க விரும்புகின்றேன்.

அயல் நாடுகளுடன் நட்புறவை சமாந்தரமான முறையில் வைத்திருக்க வேண்டும். ஒரு நாட்டைப் பகைத்துவிட்டு மற்றைய நாட்டை மடியில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் எந்த இலாபமும் கிடைக்காது. எமது நாடுதான் அடகு வைக்கப்படும்.

ஏற்கனவே இலங்கையைச் சீனா ஆக்கிரமித்து நாட்டை நாசமாக்கி வருகின்றது. அந்தளவுக்கு இந்த அரசு இடம் கொடுத்துவிட்டது – என்றார்.