March

March

“புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை . ஏற்கனவே எதிர்பார்த்தது தான்” – எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை அரசால் புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள இலங்கை அரசு 7 புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும், 300 இற்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கும் தடை விதித்துள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறுகையில்,

இந்த விடயம் குறித்து அறிந்துள்ளோம். இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெரிந்த விடயமே.

இது குறித்து விரைவில் எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம் – என்றார்.

“சிங்கராஜ வனப்பகுதியில் எந்தவிதத்திலும் காடுகள் அழிக்கப்படவில்லை” – யுனெஸ்கோவின் இலங்கை அலுவலகம்

உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்திற்குள் நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ இணங்கியுள்ளதாக யுனெஸ்கோவின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

உத்தேச நீர்த்தேக்கங்கள் காரணமாக சிங்கராஜ வனத்தின் சுமார் ஐந்து ஹெக்டேயருக்கு பாதிப்பு ஏற்படகக்கூடுமென அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சிங்கராஜ வனப்பகுதியில் எந்தவிதத்திலும் காடுகள் அழிக்கப்படவில்லை என யுனெஸ்கோவின் இலங்கை அலுவலகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அலுவலகத்தின் செயலாளர் பேராசிரியர் புன்சிநிலமே மீகஸ்வத்தே தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.

சிங்கராஜா வனத்தை உலக மரபுரிமைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், சிங்கராஜ வனப் பகுதிக்குள் 5 ஹெக்டெயார் நிலப்பரப்பில் இரண்டு குளங்களை நிர்மாணிப்பதற்காக கோரிக்கையொன்று யுனெஸ்கோ அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கோரிக்கைக்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கராஜா வனம் மற்றும் அதன் இயற்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு குறித்த வேலைத்திட்டத்தை கைவிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, உலக மரபுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 8 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பைக் கொண்ட சிங்கராஜ வனத்தின் இயற்கைக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற எந்தவொரு நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என பேராசிரியர் புன்சிநிலமே மீகஸ்வத்தே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிங்கராஜ வனப்பகுதியில் நட்சத்திர விடுதியொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும், இதன்காரணமாக சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பில் ஆராயும் நோக்கில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் செய்துள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அங்கு காடழிக்கப்பட்டு ஹோட்டல் கட்டப்படுவதாக ஒருசில தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், எதிர்க்கட்சியினர் மக்களை ஏமாற்றும் வகையில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்த நாட்டுக்கு பேரவமானம்.” – சந்திரிகா பண்டாரநாயக்க

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்த நாட்டுக்கு பேரவமானம்.” என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் என்று முதலே இலங்கை அரசுக்கு தெரியும். அவ்வாறு தெரிந்து கொண்டு அதற்குச் சவால்விடும் வகையில் இலங்கை அரசு செயற்பட்டது. அந்தச் சவால் தவிடுபொடியாகியுள்ளது.

ராஜபக்ச அரசின் வெளிவிவகாரக் கொள்கை படுதோல்வியடைந்துள்ளது. இது நாட்டுக்குப் பேரவமானம். நாட்டின் இன்றைய மோசமான நிலைக்கு இந்தத் தீர்மானம் சான்றாக அமைந்துள்ளது. இந்தத் தீர்மானத்தால் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் எந்தவேளையிலும் பேராபத்து ஏற்படலாம்.

ஏனெனில் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசு தட்டிக்கழிப்பதால் சர்வதேசம் இலங்கை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மறுபுறத்தில் நிரூபணமாகின்றது. இதனால் சர்வதேச அழுத்தங்கள் மேலும் இலங்கை மீது அதிகரிக்கும். என்ன நடந்தாலும் ஐ.நா.வின் தீர்மானத்துக்கு கட்டுப்பட வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பு கொட்டகைக்கு விஷமிகள் தீ வைப்பு !

நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளமாகக் காணப்பட்ட கொட்டகைக்கு விசமிகளால் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதி ஏரிந்து நாசமாகியுள்ளது.

அண்மையில் நல்லூர் கோயில் மீதும் அதன் வளாகத்திலும் சில விஷமிகளால் கழிவு எண்ணெய் வீசப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டால் உடன் கைது !

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளமை, இஸ்லாமிய பயங்கரவாத கொள்கையை பரப்புகின்றமை மற்றும் அவர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றமை போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என அரசு தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக இலங்கை விவகாரங்களில் கண்காணித்து செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தனிப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள் உட்பட 400 இற்கும் அதிகமானவர்களின் பெயர்களையும் இலங்கை அரசு  தடை செய்துள்ளது.

இந்தத் தடைக்கான காரணம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் அரசின் நிலைப்பாட்டை மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய ஜெனீவாவில் செயலகம் !

இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக மனித உரிமை பேரவை ஜெனீவாவில் செயலகமொன்றை ஏற்படுத்தவுள்ளது.
மனித உரிமை பேரவையின் செயலாளர் Goro Onojima உறுப்புநாடுகளிற்கு வழங்கியுள்ள சுற்றுநிரூபத்தில் 13 உறுப்பினர்களை கொண்ட செயலகம் குறித்தும் அதற்கு வருடாந்தம் அமெரிக்க டொலர் தேவைப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செயலகம் விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளை கொண்டிருக்கும்.
உருவாக்கப்படவுள்ள இந்த செயலகம் உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்கும்.
இதன்; காரணமாக இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட படைத்தரப்பினர் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம் வெளிநாட்டு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.
இலங்கையின் யுத்தத்துடன் தொடர்புபட்ட அரசியல் தலைவர்களும் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம்.

இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 60,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று – 300 பேர் வரை பலி !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் நேற்று கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 312 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 1,19,71,624 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 1,61,552 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந்திகதி நிலவரப்படி ஒரு நாள் பலி எண்ணிக்கை 300 என்ற அளவில் இருந்தது. அதன்பிறகு உயிரிழப்புகள் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இந்தஆண்டில் முதல் முறையாக நேற்று பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகபட்சமாக மராட்டியத்தில் 166 பேரும், பஞ்சாபில் 45 பேரும் இறந்துள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 54,073, கேரளாவில் 4,567, கர்நாடகாவில் 12,492, ஆந்திராவில் 7,203, தமிழ்நாட்டில் 12,659, டெல்லியில் 10,997, உத்தரபிரதேசத்தில் 8,783, மேற்கு வங்கத்தில் 10,322, சத்தீஸ்கரில் 4,061, குஜராத்தில் 4,484, பஞ்சாபில் 6,621 பேர் அடங்குவர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் உள்ள 15 மாநிலங்களில் நேற்று தினசரி பாதிப்பு ஜனவரியில் இருந்து இதுவரை இல்லாத அளவில் நேற்று அதிகமாக ஏற்பட்டுள்ளது. நேற்றைய மொத்த பாதிப்பில் மராட்டியம், கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மட்டும் சுமார் 80 சதவீதம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மராட்டியத்தில் மட்டும் 35,726 பேர் அடங்குவர். கேரளாவில் 2,055, கர்நாடகாவில் 2,886, தமிழ்நாட்டில் 2,089, டெல்லியில் 1,558, உத்தரபிரதேசத்தில் 1,102, சத்தீஸ்கரில் 3,162, குஜராத்தில் 2,276, மத்தியபிரதேசத்தில் 2,142, அரியானாவில் 1,383, பஞ்சாபில் 2,805 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பாதிப்பில் மராட்டியத்தில் 25,73,461, கேரளாவில் 11,15,777, கர்நாடகாவில் 9,83,930, ஆந்திராவில் 8,97,810, தமிழ்நாட்டில் 8,77,279, டெல்லியில் 6,55,834, உத்தரபிரதேசத்தில் 6,12,403, மேற்குவங்கத்தில் 5,83,839 பேர் அடங்குவர்.
எஞ்சிய மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

நோய் பாதிப்பில் இருந்து நேற்று 28,739 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,13,23,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 4,86,310 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மராட்டியத்தில் மட்டும் 3,04,809 பேர் அடங்குவர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, நாடு முழுவதும் இதுவரை 24.09 கோடியாக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 11,81,289 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை என்பது உண்மையில் நாணயம்மிக்க தனித்துவமான நாடு.” – கருணா

“யுத்தம் முடிவுற்ற தருவாயில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனைச் சிறந்த முறையில் கையாண்டார்.” என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்  தெரிவித்தார்.

செங்கலடியில் இன்று (28.03.2021) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது  மேலும் தெரிவித்த அவர்,

“யுத்தம் முடிவுற்ற தருவாயில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தக் காலத்தில்கூட பாரிய நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனைச் சிறந்த முறையில் கையாண்டார்.

ஆனால், தற்போதைய சூழலில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரச்சினை இரண்டு தரப்பும் இருந்து பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை. ஏனெனில் இலங்கை என்பது உண்மையில் நாணயம்மிக்க தனித்துவமான நாடு. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் இருக்கின்றது.

அந்த வகையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்களை அரசாங்கத்திற்கு அவர்கள் தந்திருக்கின்றார்கள்.

இது சம்பந்தமாக நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். குறைந்தது ஆறு மாதத்திற்குள் நிறைவேற்றும்படி இந்தத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

எனவே ஜனாதிபதி சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை சிறந்த முறையில் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள் உள்ளன. தொல்பொருள் அகழ்வுகள் நாட்டின் நன்மைக்கே” – பேராசிரியர் அநுர மனதுங்க

தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் தெற்கினைப் போன்றே வடக்கு, கிழக்கினையும் அணுகுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார்.

அத்தோடு, தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள் உள்ளன என்றும் குறிப்பிட்ட இனத்தினையோ மதத்தினையோ இலக்கு வைத்து தொல்பொருள் அகழ்வுகளை முன்னெடுக்கவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க,

இந்த நாட்டின் வரலாற்றுத் தொன்மம் வாய்ந்த பகுதிகளை அடையாளம் காணலும் முறையாக பாதுகாத்தலுமே தொல்பொருள்  திணைக்களத்தின் பிரதான பணியென்றும் குறிப்பிட்டார். அப்பகுதிகளில் இருந்து மீட்கப்படும் பொருட்களை பாதுகாத்து வரலாற்றுத் தொன்மங்களை அழிவுறாது பேணுவதே தமது கடமையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்தப் பணியையே தாம் முன்னெடுத்து வருவதாகவும் இதில் எவ்விதமான இன, மத ரீதியான பாகுபாட்டினைக் காண்பிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.

தெற்கில் எவ்வாறு புராதனப் பகுதிகளைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோமோ? அதேபோன்றுதான் வடக்கிலும் கிழக்கிலும்  நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளால் அங்குள்ள தொல்பொருள் பகுதிகள் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தற்போது அதற்காக விசேட நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தொல்பொருள்  திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் கோயில்களில் தொல்பொருட்களை அடையாளப்படுத்துவதற்கான முயற்சிகள் ஒரு மதத்தினை இலக்குவைத்த நடவடிக்கை அல்ல எனத் தெரிவித்த பணிப்பாளர், தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள் உள்ளன என குறிப்பிட்டார்.

எனவே தொல்பொருளியல் செயற்பாடு தொடர்பாக தவறான புரிதலை வடக்கு கிழக்கு சமூகத்தினர் விடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

“இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை” – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே

“இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தான் சொன்னது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா எங்களிற்கு ஆதரவளிக்கும் நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை நான் சொன்னது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது நான் இந்திய பிரதமரின் வார்த்தைகளையே எதிரொலித்தேன் அவர் இந்தியா இலங்கைக்கு எந்த அநீதியும் இழைக்காது என குறிப்பிட்டிருந்தார்.  நான் அந்த வார்த்தைகளையே பயன்படுத்தினேன் என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சிங்கள மொழிபெயர்ப்பின்போது ஒரு பத்திரிகையாளர் நான் இந்தியா ஆதரவளிக்கும் என தெரிவித்ததாக கருதிவிட்டார் அது இலங்கையில் தலைப்புச்செய்தியாக மாறிவிட்டது இந்திய ஊடகங்களும் அதனை செய்தியாக்கின எனவும் அவர் தெரிவித்துள்ளார்