March

March

பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவுதி அரேபிய ஆண்களுக்கு அந்நாட்டு அரசு தடை !

பாகிஸ்தான், வங்கதேசம், சாத் மற்றும் மியன்மார் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 5 லட்சம் பெண்கள்சவுதி அரேபியாவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவுதி அரேபிய ஆண்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் சவுதி அரேபிய ஆண்கள் இனி கடும் கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் மெக்கா நகர காவல் துறை இயக்குநர் மேஜர் ஜெனரல் அசாப் அல்-குரேஷி கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள்முறைப்படி அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதைப் பரிசீலித்து அனுமதி வழங்கினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். விவாகரத்து பெற்ற ஆண்கள் அடுத்த 6 மாதங்கள் வரை வேறு ஒரு பெண்ணைதிருமணம் செய்து கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியாது. 25 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதுடன் அதை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட மேயரால் வழங்கப்பட்ட ஆவணத்தை சமர்ப் பிக்க வேண்டும். அடையாள ஆவணம், குடும்பத்தினர் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி !

யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்ட நிலையில் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் காலை முதல்வரிடமும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் அவற்றின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தன்னுடன் நேரடியாக தொடர்புபட்டோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் சுகாதார பரிசோதகர்களுக்கு தங்கள் விபரங்களை வழங்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்ய தடை !

“எதிர்காலத்தில், இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்ய அனுமதிக்கப் போவதில்லை” என தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஆணைக்குழு, தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில், அரசியல் குழுக்கள் தேசியக் கட்சிகளாகப் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் கூட்டத்தின் போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போதுள்ள பெயர்களைத் திருத்துவதற்கு இனங்கள் மற்றும் மதங்களின் பெயர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு நியாயமான நேரத்தை வழங்கவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மாற்றுவதற்கும், 18 வயதை எட்டியவர்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்குள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்பதை உறுதிசெய்வதற்கும் வர்த்தமானி செய்யப்பட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் ஆணையகம் கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை, 1985ஆம் ஆண்டு முதல் வடக்கு மற்றும் கிழக்கில் மோதல் காரணமாக உயிரிழந்தவர்களை  உறுதிப்படுத்துவது தேர்தல் ஆணையகத்தின் மற்றொரு தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறந்தவரின் விபரங்கள் வர்த்தமானி செய்யப்பட்டு ஏப்ரல் 23ஆம் திகதி வரை மாவட்ட செயலக அலுவலகங்களிலும் தேர்தல் ஆணையகத்தின் வலைத்தளத்திலும் காண்பிக்கப்படும்.

இதன்படி, பட்டியலில் தவறாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆணையகத்தில் பதிவுசெய்ய வாய்ப்பு வழங்கப்படும் எனவும் மேலும் பெயர்கள் 2020 தேர்தல் பதிவேட்டில் சேர்க்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

“தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ பௌத்ததிற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.” – பா.உ.கோவிந்தன் கருணாகரம்

“தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ பௌத்ததிற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அவலுகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டிற்கோ, நாட்டின் ஒற்றுமைக்கோ பௌத்த மக்களுக்கோ எதிரானது அல்ல. இந்த நாட்டினையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் கட்சிதான் தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.தமிழ்தேசிய கூட்டமைப்பானது பிரிவுபடாத இந்த நாட்டிற்குள் தமிழ் மக்கள் சிறுபான்மை மக்கள் சுதந்திரமாகவும் சுயநிர்ணயத்துடனும் வாழ்வதற்கு ஆசைப்படுகின்றார்கள்.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழக்கூடாது, சமத்துவத்துடன் வாழவேண்டும் என்று யோசிக்கின்றார்களே தவிர இந்த நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ பௌத்ததிற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பானது அரசியல் ரீதியான ஒரு தீர்வினையே வேண்டி நிற்கின்றது.மாறி மாறி வந்து அரசுகள்தான் இந்த நாட்டினை சீரழிவுக்குள் கொண்டு சென்றுள்ளது.யானை தனது தலையில் மண்ணை அள்ளிக்கொட்டுவதுபோன்று அரசாங்கங்கள் மாறிமாறி விடும் பிழைகளினால் சர்வதேசத்திற்கு முன்பாக இன்று அவமானச் சின்னமாக அவமானப்பட்டு நிற்கின்றது.

இந்த நிலைமாற வேண்டும். இந்த நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்போ,தமிழ் மக்களோ காரணம் இல்லை.இதற்கு முற்று முழுதான காரணம் இந்த அரசாங்கமும் அதனை பிரதி நிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியும் அமைச்சர்களுமாகும்.பந்து இன்று அரசாங்கத்தின் பக்கத்தில் நிற்கின்றது. அந்த பந்தினை தடுத்து ஆட முற்பட்டால் விபரீதமான விளைவுகளை சந்திக்கும் நிலையேற்படும். அந்த பந்தினை நன்றாக அடித்து விளையாடினால் இந்த நாடு சுபீட்சமான,வளமிக்க நாடாக எதிர்காலத்தில் மிளிரும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

“நெடுந்தீவு மக்களின் பொது வைத்தியசாலை தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

“நெடுந்தீவு மக்களின் பொது வைத்தியசாலை தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வைத்தியசாலை தொடர்பில் உள்ள பிரச்சினைகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதற்கான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்று பாராளுமன்றில் கேட்ட வாய் மூலமான கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

நெடுந்தீவு பெரும் நிலப்பரப்புடன் தொடர்பை அற்றதும் 13 மைல் அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் உள்ள ஒரு தீவாகும். இங்கு 6,000 மக்கள் வாழ்கின்றனர்.

இங்கு நோய்வாய்படும் மக்களை சிகிச்சைக்காக எடுத்து செல்வதற்கு அம்புலன்ஸ், படகு சேவைகள் கூட இல்லை. இங்கிருந்த நிரந்தர வைத்தியர் ஓய்வு பெற்று சென்றுள்ளார். இரண்டு வைத்தியர்கள் தற்காலிக அடிப்படையில் இங்கு வந்து செல்கின்றனர்.

கடந்த 8 வருட காலமாக வைத்தியசாலை தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். யாழ் வைத்தியசாலையில் 300 வைத்தியர்கள் உள்ளனர். யாழ் மாவட்டத்திலும் வைத்தியர்கள் உள்ளனர்.

இவர்களில் யாராவது சிலரை இந்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியராக நியமித்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யவேண்டும். பின்தங்கிய பிரதேசமான இங்கு கடமையாற்றுவதற்கு சிறப்பு கொடுப்பனவையாவது வைத்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

“இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்” – அமெரிக்கா வேண்டுகோள் !

“இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்” என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றே மனித உரிமைகளை மதிப்பதிலும் எதிர்கால அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு அர்ப்பணிப்பதிலுமே இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்வதற்காகவே அமெரிக்கா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு தீர்வை காண்பதற்கான நம்பகத்தன்மை மிக்க அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கையை கேட்டுக்கொள்வதற்காகவே அமெரிக்கா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் அறிக்கையிடும் தேவைகளை தீர்மானம் விஸ்தரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்கால பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளுக்காக ஆதாரங்களை சேகரிப்பதற்கான ஆணையையும் வழங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

“புகைப்பிடிப்பதை ஊக்குவித்தமைக்காக விமல் வீரவங்ச மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – புகையிலை மற்றும் அல்கஹோல் தொடர்பான தேசிய அதிகார சபை

அமைச்சர் வீரவன்ச அண்மையில் ஆயுர்வேதக் கூறுகளுடன் உள்ளூரில் தயாரிக்கப்படும் கறுவா அடிப்படையிலான சிகரெட்டை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

Patented Cinnamon cigarettes introduced to the World | Daily News

அமைச்சரால் ஊக்குவிக்கப்பட்ட கறுவா அடிப்படையிலான சிகரெட் வர்த்தக நாமத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென புகையிலை மற்றும் அல்கஹோல் தொடர்பான தேசிய அதிகார சபை(NATA) எச்சரித்திருந்தது.

தேவையான அரச நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் சிகரெட்டை ஆரம்பிப்பது சட்டத்தை மீறுவதாக அந்த அதிகார சபையின் தலைவர் விராஜ் பண்டாரநாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Wimal-NATA clash over cinnamon fags - The Morning - Sri Lanka News

கறுவா அடிப்படையிலான சிகரெட்டுக்கு தாம் அனுமதி வழங்கவில்லை என ஆயுர்வேத திணைக்களமும் சுகாதார அமைச்சும் அதிகாரசபைக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னும் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை.” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

“இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னும் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை.” என பாராளுமன்ற அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலேயே பொருளாதார தடை தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக ஸ்ரீலங்கா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,

“இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படாது என்றும் இவ்வாறான தடை விதிக்கப்பட வேண்டுமாயின், ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலேயே தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்தை கொண்ட பல நாடுகள் உள்ளதாகவும் அவை இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று கூறினார்.

இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னும் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

“தமது சொந்த நாட்டு அட்டூழியங்களை மறைக்கவே 11 நாடுகள் ஐ.நா.தீர்மானத்துக்கு ‘இல்லை’ என வாக்களித்துள்ளன” – மங்கள சமரவீர

“தமது சொந்த எதேச்சாதிகாரங்களால் நடந்த அட்டூழியங்களை மறைப்பதற்காகவே 11 நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்துக்கு ‘இல்லை’ என வாக்களித்துள்ளன“ என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் குறித்து டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் இணை அனுசரணையில் இலங்கை 2015 ஆம் ஆண்டு அதன் சொந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்மொழிந்தபோது, சீனா, ரஷ்யா உட்பட முழு உலகமும் இலங்கையுடன் இருந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போது இலங்கைக்கு 11 நண்பர்களே உள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹூ !

இஸ்ரேலில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வெற்றி பெற்றுள்ளார்.

4ஆவது முறையாக நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் பிரதமர் நெதன்யாஹூ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள நெதன்யாஹூ, தேர்தலில் அமோக வெற்றி பெறச் செய்த இஸ்ரேல் மக்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

மேலும் கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் பேசியதாகவம் அவர்களிடம் பொறுப்பான நடவடிக்கையை எடுத்து ஒரு நிலையான அரசாங்கத்தை அமைப்போம் என கூறியதாகவும் பதிவிட்டுள்ளார். அத்தோடு, இஸ்ரேலின் அனைத்து குடிமக்களையும் கவனித்துக்கொள்ளும் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஐந்தாவது முறையாகவும் தேர்தல்  நடைபெறாது தடுத்து, இஸ்ரேலுக்கு ஒரு நல்ல மற்றும் நிலையான அரசாங்கத்தை நிறுவுங்கள் என கூறியதாகவும் நெதன்யாஹூ பதிவிட்டுள்ளார்.

அதிகமான தொகுதிகளில் நெதன்யாஹூவின் லிக்குட் கட்சி வெற்றிபெறாத நிலையில், அங்கு கூட்டணி ஆட்சி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார சீர்கேடு, கொரோனா பரவலைக் கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் இஸ்ரேல் பிரதமருக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டன.

அதன் விளைவாக இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை தேர்தல் நடைபெற்றது. அதேநேரம் 5ஆவது முறையாக தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.