April

April

வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்கா கவலை! 

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவிலேயே இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். மாநகர காவல் படையை உருவாக்கியமை மற்றும் சீருடை வடிவமைப்புக் குறித்துப் பயங்காரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அலைனா, “எல்லோருடைய அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கு நீதித்துறை பாதுகாப்புகளுடன் கூடிய வலுவான சட்ட விதிமுறைகளைக் கொண்டிருப்பது சிறந்த வழியாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – சீ.வி.விக்னேஸ்வரன்

“மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர்    சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மேயர் மணிவண்ணன் கைதானது சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “மாநகர காவல் படை என்ற பெயரில் மணிவண்ணன் அமைத்த சுகாதார கண்காணிப்பு குழுவின் சீருடை விடுதலைப்புலிகளின் காவல்துறையின் ஆடையை ஒத்திருப்பதாகக் கூறியே மணிவண்ணனை அதிகாலை வேளையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்திருக்கின்றது.

தூய்மை பேணுவதை குறிக்கும் வகையில் வெளிநாடுகள் பலவற்றில் இள நீல ஆடைகளை காவல் கடமைகளில் ஈடுபடும் குழுக்கள் பயன்படுத்துவது வழமை. கொழும்பு மாநகர சபையும் இள நீல நிற சீருடையுடன் பணியாளர்களை அமர்த்தியுள்ளது. ஆனால், யாழ் மாநகரசபை முதல்வருக்கு மட்டும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, யாழ். மாநகர சபையின் ஊழியர்கள் அணிந்த ஆடை விடுதலைப்புலிகளின் காவல்துறையின் இள நீல நிற ஆடையை ஒத்ததாகக் காணப்படுகின்றது என்று கூறுவது நகைப்புக்கு இடமானது, அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஆவிகள் அரசாங்கத் தலைவர்களை நிதானம் இழக்க வைத்து விட்டனவோ நான் அறியேன்.

ஒரு சிறிய மாநகரத்தை நிர்வகிப்பதற்கும் தமது பிரதேசங்களை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதற்குங் கூட தமிழ் மக்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கும் இந்த அரசாங்கத்தின் மனநிலையையும், செயற்பாடுகளையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

புலிகளின் சீருடைச் சீலையைப் போன்ற எந்த ஒரு சீலையையும் எவரும் பாவித்தலாகாது என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதோ நான் அறியேன். 12 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன புலிகள் மீது அரசாங்கத்திற்கு அவ்வளவு பயமா என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகின்றது.

இந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் எந்தளவு மோசமான ஒரு நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. இலங்கையில், மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதற்கும், முரண்பாடுகள் ஏற்படுவதற்குமான சூழ்நிலை காணப்படுகின்றது என்று ஐ. நா மனித உரிமைகள் சபை ஆணையாளர் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமையை இந்த சந்தர்ப்பதில் நான் நினைவுபடுத்த விரும்புவதுடன், ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளாமல் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமையையும் தமிழ் மக்கள் அதைக் கண்டித்து இருந்தமையையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆகவே, இனவாதம், பாசிசம் ஆகியவற்றின் அடிப்படையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டுவரும்நிலையில், தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு சர்வதேச சமூகத்துக்கு இருக்கின்றது.

மணிவண்ணன் கைது தொடர்பில் ஐ. நா மனித உரிமைகள் சபை உட்பட இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் உடனடியாக தலையீடு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுவதுடன், மணிவண்ணனை உடனே விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரையும் வேண்டிக்கொள்கின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

“மணிவண்ணன் கைதுக்கு புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிப்பதாக அரசாங்கம் கூறுவதை ஏற்கமுடியாது.” – பொ.ஐங்கரநேசன்

“மணிவண்ணன் கைதுக்கு புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிப்பதாக அரசாங்கம் கூறுவதை ஏற்கமுடியாது.” என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் இவ்விடயம் கையாளப்படுவதை அதிகாரப் பரவலைக் கோரும் சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கம் விடுத்திருக்கும் ஓர் எச்சரிக்கையாகவே கருத வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். மாநகர காவல் படை உருவாக்கியமை மற்றும் சீருடை வடிவமைப்பு குறிப்பு பயங்காரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடக சந்திப்பை நடத்திய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடைகள் அவர்களுக்கே உரித்தான தனித்துவமான வரிகளை அடையாளமாகக் கொண்டவை. ஆனால், காவல்துறைக்கு அவர்கள் பயன்படுத்திய நீல நிறச் சீருடைகள் உலகப் பொதுவானவை.

காக்கிச் சட்டைகள் மக்களின் மனங்களுக்கு அந்நியப்பட்டதாக உள்ளதால் மனங்களுக்கு மிகவும் நெருக்கமான உளவியல் நட்புமிக்க நீல நிறத்தைப் பெரும்பாலான நாடுகளில் காவல்துறையும் தனியார் பாதுகாப்புத் துறையும் இதர நிறுவனங்களும் சீருடைகளில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், யாழ். மாநகர சபை நீல நிறச் சீருடையைத் தெரிவு செய்ததைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயல்வதாக அரசாங்கம் சொல்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

உள்ளூராட்சிச் சபைகள் சுயாதீனமானவை. மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் உள்ளூராட்சிச் சபைகளின் சுயாதீனத்தில் மாகாண சபைகள் தலையிடுவதில்லை. இந்நிலையில் மாகாண சபையின் கீழுள்ள மாநகர சபையின் சீருடை விடயத்தில் காவல்துறையின் மூலம் அரசாங்கம் தலையிடுவது அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது.

சீருடையை வடிவமைத்த விடயத்தில் ஏதேனும் நிர்வாக ரீதியான முறைகேடுகள் இருப்பின் உள்ளூராட்சித் திணைக்களமே அதற்கான விசாரணையை மேற்கொள்ள முடியும். மாகாண சபைகள் இயங்காத நிலையில் ஆளுநர் இவ்விடயத்தில் தலையிட்டிருக்க முடியும்.

இதைத்தாண்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் இந்த விடயம் கையாளப்படுவதை அதிகாரப் பரவலைக் கோரும் சிறுபான்மை மக்களுக்குப் பேரினவாத அரசாங்கம் விடுத்திருக்கும் ஓர் எச்சரிக்கையாகவே கருத வேண்டும்.

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் கட்சிகள் இதனை நியாயப்படுத்தக் கூடும். ஆனால், தங்களுக்கு இடையே முரண்பாடுகள், பிளவுகள் இருந்தாலும் தமிழ் தேசியக் கட்சிகள் யாவும் யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைதுக்கு எதிராகவும் அவரின் விடுதலையை வேண்டியும் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பீதியில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் விரும்புவதன் வெளிப்பாடே மணிவண்ணனின் கைது.” – எம்.ஏ.சுமந்திரன்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏனைய மாநகர சபைகளைப் போன்று யாழ்ப்பாணம் மாநகர சபையும் அந்த சபைகளுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்த முனைகின்றபோதே இவ்வாறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாததடுப்பு பிரிவினரால் கைது! 

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன், 6 மணி நேர விசாரணையின் பின்னர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு விஷம் கொடுக்கும் தலைவராக மாறியுள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ !

“ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ  மக்களுக்கு விஷம் கொடுக்கும் தலைவராக மாறிவிட்டார்”.ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளது. அதன்படி இல்லத்தரசிகள் ஒரு பெரிய பொறுப்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது பயம் மற்றும் துஷ்பிரயோகத்தின் ஆண்டு.

இரண்டு நாட்களுக்கு முன்பு விஷ தேங்காய் எண்ணெய் நாடு முழுவதும் பரவியது என்று கூறப்பட்டது. பின்னர் கொல்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றியது அவதானங்கள் இன்றி அரசாங்கம் செயற்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் திருமதி சித்திகா சேனாரத்ன, பிற புற்றுநோய்கள் உள்ளன என்றும், அந்த உணவுகளை அத்தகைய எண்னெய்களை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன என்றும் கூறினார். தனக்குத் தெரிந்த நிறுவனங்களை விசாரிக்கவும், சார்பாக நிறுவனங்களுக்கு பெயரிடவும் நிறைய விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை வெளிப்படுத்துபவர்களை இந்த அரசாங்கம் எப்போதும் தண்டிக்கிறது. இது தொடர்பில் சித்திகாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அவர் நாட்டுக்கு ஒரு செய்தியை அளித்து அதை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பினார்.

நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர்கள் சுப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து உணவு வாங்கலாம். கீரி சம்பாவை மக்கள் சாப்பிட மாட்டார்கள் என்று நேற்று ஒரு அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார். நாட்டு மக்கள் என்ன சாப்பிடுவார்கள் என்பதை அமைச்சர்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளனர்.

அன்றைய தினங்களில் யுத்தத்தினால் மக்கள் கொல்லப்பட்டனர், அண்மையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலில் சுமார் 300 கத்தோலிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த அரசாங்கம் அப்போது செய்ததைப் போலவே மக்களை குண்டு வீசிப்பதற்கு பதிலாக விஷ உணவை உட்கொண்டு படுகொலை செய்து வருகிறது.

புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்று சிறு வயதிலிருந்தே தான் ஒரு புற்று நோய் நோயாளியா என்று பரிசோதனை செய்து பார்க்குமாறு அமைச்சர்கள் கூறுகின்றார்கள்.

அந் நோய் ஏற்பட்ட அந்த குழந்தைகள் அனுபவிக்கும் வலி, அந்த மருந்துகளிலிருந்து வரும் வலி, அவர்களின் வாழ்நாள் முழுவதும் சூனியம் ஆகிவிடும். இதையெல்லாம் பொய் சொல்லாமல் அத்தகைய நோயாளிகள் உள்ள இடத்திற்கு சென்று பார்க்கச் சொல்கிறேன்.

நோய்வாய்ப்பட வேண்டாம் என்ற நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பால் பக்கெட் நன்றாக இல்லை என்று சொல்ல முதுகெலும்பு இருந்தது. ஆனால் இன்றைய ஜனாதிபதி ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு விஷம் கொடுக்கும் தலைவராக மாறிவிட்டார்.

இந்த ஜனாதிபதி காலத்தில் மேலும் அதிக விஷம் கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் எங்கள் நாடு முதலிடத்தில் உள்ளது. ஆட்சிக்கு கொண்டு வந்த துறவிகளே இன்று வெளியே வந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டு தான் உள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசின்  சகல கொள்கைகளுக்கு எதிராகவும் குற்றம் சுமத்துகின்றனர்.” – அமைச்சர் தினேஷ் குணவர்தன

“எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசின்  சகல கொள்கைகளுக்கு எதிராகவும் குற்றம் சுமத்துகின்றனர்.” என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று , வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஜெனீவா விவகாரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார்.

“ஜெனிவா நெருக்கடியை கையாள்வதில் எமது அரசாங்கம் பலவீனமடைந்திருக்க முடியும், நீங்கள் அதைத்தான் கூறப்போகின்றீர்கள், ஆனால் உங்களின் அரசாங்கமும், அரச அதிகாரிகளும் பலவீனப்பட்டுள்ள காரணத்தினால் தான் இம்முறை ஜெனிவாவில் 46/1 பிரேரணையில் தோல்வியை கண்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன,

ஜெனீவா விடயங்களை கையாள்வதில் எமது நட்பு நாடுகள் மற்றும் எம்முடன் நெருக்கமாக செயற்படும் நாடுகளிடம் எமது தரப்பு காரணிகளை முன்வைத்தோம்.

அதேபோல் ஜெனீவா நெருக்கடிகளை எமது அரசாங்கம் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. எவ்வாறு இருப்பினும் எமது தூதுக்குழு, தூதரகம் இந்த விடயத்தில் செய்ய வேண்டிய உயரிய சேவையினை செய்துள்ளது.

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சுடன் இணைந்தும், தனித்தும் எமது தூதரகம் கடமையாற்றி நாட்டிற்காக செயற்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சகல கொள்கைக்கு எதிராகவும் குற்றம் சுமத்துகின்றனர். இப்போது வெளிநாட்டு தூதுவர்களை நியமிப்பது குறித்த நடவடிக்கைகளிலும் குற்றம் சுமத்துகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

காதல் விவகாரத்துக்காக யாழில் இருந்து வவுனியா வந்து வீடு புகுந்து தாக்குதல் – இருவர் கைது! 

வவுனியாவின் மூன்று முறிப்புப் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குழுவில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த குறித்த குழு கடந்த திங்களன்று இவ்வாறு வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது.

காதல் விவகாரம் காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த வீட்டிலிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டது.

இதனிடையே, தாக்குதல் நடத்திய குழு பயணித்த வாகன இலக்கம் பொலிஸாருக்கு உடனயடியாகத் தெரியப்படுத்தப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஊடாகவும் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

எனினும், இதுகுறித்து கடந்த இரண்டு நாட்களில் பொலிஸாரினால் எவ்வித கைது நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் மீண்டும் பொலிஸாரிடம் இதுகுறித்து வலியுறுத்தினார்.

இந்நிலையில், விசேட பொலிஸ் குழு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டு இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக திலீபன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா – திருநாவற்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் பொலிஸாரினால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு தொழிற்றுறைப் பயிற்சிகளை வழங்குவதற்கும் பிரான்ஸ் ஆர்வம் !

இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு தொழிற்றுறைப் பயிற்சிகளை வழங்குவதற்கும் பிரான்ஸ் ஆர்வம் கொண்டுள்ளதாக அந்நாட்டு தூதுவர் எரிக் லெவரூட் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (08.04.2021) கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

கடற்றொழில், நீர்வேளாண்மை ஆகிய துறைகளில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் தூதுவர், தென்பகுதியிலுள்ள காலி, பேருவளை, குடாவெல்ல மற்றும் குரானவெல்ல ஆகிய நான்கு மீன்பிடித் துறைமுகங்களை அபிவருத்திசெய்ய பிரான்ஸ் அரசாங்கம் ஆர்வமாகவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், அபிவிருத்தி தொடர்பான ஆராய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான பணிகள் ஆரம்மாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனைவிட, இலங்கையில் கண்ணாடி நாரிழையில் அமைக்கப்பட்ட படகுகள் சுற்றாடல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த தகுந்த கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு தொழிற்றுறைப் பயிற்சிகளை வழங்குவதற்கும் பிரான்ஸ் ஆர்வம் கொண்டுள்ளதாக எரிக் லெவரூட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கடற்றொழில் துறையில் வளமான எதிர்காலம் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று கூறினார்.

மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் துறையில் அபிவிருத்திக்கு பிரான்ஸ் உதவ வேண்டுமென அவர் இதன்போது பிரான் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“மாகாண சபைத் தேர்தலுக்கு நான் எதிரானவன்.” – அமைச்சர் சரத் வீரசேகர

“மாகாண சபைத் தேர்தலுக்கு நான் எதிரானவன். ஆனாலும் அரசாங்கமே குறித்த தேர்தலினை நடத்தினால் அதனை தடுக்க முடியாது.” பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத்  தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது,

“ மாகாண சபைத் தேர்தலுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.

ஒரு நாட்டில் ஒரு சட்டமொன்று இருந்தால் அது ஒன்பது மாகாணங்களுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும். மாறாக ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது சட்டங்கள் இருக்க முடியாது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இருப்பினும் தனிப்பட்ட கருத்தைப் பொருட்படுத்தாமல், நாம் கூட்டாகவே முடிவுகளை எடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.