April

April

கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் கோரிக்கை !

பொலநறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(20.04.2021) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் பொலறுவை முதல் கொழும்பு வரையிலான கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த ரயில் சேவையானது பொறுநறுவையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு கொழும்பினை வந்தடைகின்றது. அதேபோன்று கொழும்பிலிருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 7.15 மணிக்கு பொலநறுவையினை சென்றடைகின்றது.

இந்தநிலையில் அமைச்சர் அவர்களே அதிகாலை 3 மணிக்கு பொறுநறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க முடியுமா.? என்பதனை ஆராயந்து பாருங்கள்.

அதிகமான நேரங்களில் காலியான இருக்கைகளுடன்னேயே ரயில் கொழும்பினை சென்றடைகின்றது. பொலநறுவையில் இருந்து சேவையினை ஆரம்பிக்கின்றமை காரணமாகவே குறைந்தளவானர்கள் பயணிக்கின்றனர்.

எனவே பொலநறுவைக்கான ஆசனங்களை ஒதுக்கீடு செய்ததன் பின்னராக, பொறுநறுவையில் இருந்து குறித்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு சற்று முன்னராக மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்க முடியுமா?

ஏனெனில் தற்போது மட்க்களப்பிலிருந்து கொழும்பிற்கு வரும் ரயில் பயணிப்போர் இரண்டு நாட்களாவது கொழும்பில் தங்கியிருந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.

எனினும் காலை 9 மணிக்கு கொழும்பிற்கு வருகை தந்தால், தங்களது கடமைகளை பூர்த்தி செய்துகொண்டதன் பின்னர் மீண்டும் அன்றைய தினம் மாலையே மட்டக்களப்பிற்கு திரும்பி செல்ல முடியும்.

நான் பொறுநறுவை – கொழும்பிற்கான ரயில் சேவைக்கான நேரத்தினை மாற்றுமாறு கூறவில்லை அந்த நேரத்திற்கு முன்னராக மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்க முடியுமா என்றே கேட்கின்றேன். என்றார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர், அதிகாரிகளுடன் பேசிவிட்டு உரிய பதிலினை வழங்குவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “அதிகாரிகள் இதனை செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். எனவே வெள்ளோட்ட முறையில் இதனை செய்து பார்க்க முடியுமா?“ எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

“விஜயதாஸ ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் ஜனாதிபதியையும் அரசையும் பழிவாங்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.” – சாகர காரியவசம்

“விஜயதாஸ ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் ஜனாதிபதியையும் அரசையும் பழிவாங்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்துக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சக்களின் செயற்பாடுகளையும் அவர் விமர்சித்திருந்தார்.

ஜனாதிபதி தொலைபேசியில் தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகி வருகின்றது.

விஜயதாஸ ராஜபக்சவின் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவரின் நோக்கமாக உள்ளது. அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் ஜனாதிபதியையும் அரசையும் பழிவாங்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

தனது உயிருக்கு ஜனாதிபதி கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என்று அவர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்” – என்றார்.

ஜனாதிபதியை சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்த அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்த குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் இரு அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மாவட்டக் கிளையொன்றில் பணியாற்றிவருகின்ற இரு ஊழியர்களே மேற்படி குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கின்றனர்.

கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள இந்த ஊழியர்கள், ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து பதிவு மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

பஸில் ராஜபக்சவின் நடவடிக்கையால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டத்திலிருந்து வெளியேறிய பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் !

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணியின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தைத் தணிக்கும் விதத்தில் இன்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடிய விசேட கூட்டம் புதிய பல குழப்பங்களை அரசியலில் ஆரம்பித்து வைத்துள்ளதாக அறிய முடிகின்றது

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பல்வேறு சிறிய கட்சிகளையும் சேர்ந்த பல பிரதிநிதிகளை இந்தக் கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச கூட்டி வந்தமையால், பிரதான கூட்டத்தில் பங்குபற்றாமல் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ (தேசிய சுதந்திர முன்னணி), உதய கம்மன்பில (புதிய ஹெல உறுமய), வாசுதேவ நாணயக்கார (ஜனநாயக இடதுசாரி முன்னணி) போன்றோர் வெளியேறியுள்ளனர். இதனால் கூட்டத்தின் ஆரம்பமே சரிவிலிருந்து தொடங்கியுள்ளது.

இன்றைய கூட்டத்துக்கு மொட்டுக் கூட்டணியின் பிரதான பத்துக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல், சிறிய சிறிய கட்சிகள், அமைப்புகள், குழுக்களைச் சேர்ந்த பல குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர் என்பதை அறிந்த விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில போன்றோர் அது குறித்து பிரதமரின் அலுவலக ஆளணி அதிகாரியான பிரதமரின் மகன் யோஷித ராஜபக்சவுடன் தொடர்புகொண்டு கேட்டனர்.

இதையடுத்து, பஸில் ராஜபக்சவின் வழிகாட்டலில் இவ்வாறு பலர் அழைக்கப்பட்டிருக்கின்றமையை யோஷித உறுதிப்படுத்தினர். இதன் பின்னர் நேரத்துடன் பிரதமரின் அலுவலக இல்லத்துக்கு வருகை தந்த விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில்ல, வாசுதேவ நாணயக்கார போன்றோர் பிரதமர் மஹிந்த ராபக்சவைச் சந்தித்துத் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துவிட்டு நேரத்துடன் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

எனினும், அவர்களுடன் வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் சிலர் இருந்து பிரதமருடன் பேசி விட்டுச் சென்றனர். ஆயினும், மொட்டுக் கட்சிக் கூட்டணியின் உள்வீட்டுக் குழப்பத்தைத் தீர்க்க இன்று எடுக்கப்பட்ட கூட்ட முயற்சி பஸில் தலைமையில் பல சிறு கட்சிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்குபற்றிய காரணத்தால் பிசுபிசுத்துப் போனது எனச் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

“பொருளாதார நகரம் என்ற பெயரில் சீன ஈழம் ஒன்றை உருவாக்கும் முயற்சி இடம்பெறுகிறது.” – எஸ்.எம். மரிக்கார்

“பொருளாதார நகரம் என்ற பெயரில் சீன ஈழம் ஒன்றை உருவாக்கும் முயற்சியை தாம் கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கொள்ளையிட்ட பணம், தமது நண்பர்களின் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே நாட்டையும் மக்களையும் சீனாவுக்கு காட்டிக்கொடுத்து வருகின்றனர்.

துறைமுக நகரில் உயர் முகாமைத்துவ பதவி ஒன்று இருக்கின்றது. அந்த பதவியை வகிப்பது யார்?. அஜித் நிவாட் கப்ராலின் மகன். துறைமுக நகரின் கொடுக்கல், வங்கல்களில் இலங்கை அரசுக்கு ஒரு வீதம் கிடைக்கும்.

சிங்கப்பூர், துபாய் போன்ற பொருளாதார நகரங்களை உருவாக்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. பொருளாதார நகரம் என்ற பெயரில் தமது உற்ற நண்பர்களின் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.

நாட்டை சீனாவுக்கு காட்டிக்கொடுப்பதையும் நாட்டுக்கு பொறுப்புக் கூறாத சீன ஈழத்தை உருவாக்குவதையுமே நாங்கள் எதிர்க்கின்றோம் என எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

“தகுதியில்லை என்று விக்னேஸ்வரன் புறக்கணிக்கப்பட்ட போது மாவை சேனாதிராசாதான் விக்னேஸ்வரனை வடக்கு மாகாண சபைக்கு முதல்வராகக் கொண்டு வந்தவர் என்பதை மறந்து விட்டார்கள்.” – மாவை.சேனாதிராஜா

“தகுதியில்லை என்று விக்னேஸ்வரன் புறக்கணிக்கப்பட்ட போது மாவை சேனாதிராசாதான் விக்னேஸ்வரனை வடக்கு மாகாண சபைக்கு முதல்வராகக் கொண்டு வந்தவர் என்பதை மறந்து விட்டார்கள்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“முதல்வர் பதவிக்கு மாவை (தகுதியற்றவர்) பொருத்தமற்றவர் அதனால்தான் சம்பந்தர் தன்னை அழைத்து வந்தார்” – முன்னாள் முதலமைச்சர் “விக்னேஸ்வரன்”

14.04.2021 அதிகாலை சித்திரைப் புத்தாண்டு பிறந்து வந்த நேரத்தில் ஒரு பத்திரிகை மேற்படி குறித்த முதல்பக்கத் தலைப்புச் செய்தியை வரவைத்தவர் நீதிபதி க.வி.விக்னேஸ்வரன். அச்செய்தியை சித்திரைப் புத்தாண்டன்று புளகாங்கிதத்தோடு வெளியிட்டு மகிழ்ச்சியடைந்தவர்(காலைக்கதிர்) அப்பத்திரிகை ஆசிரியர்.

அதேவேளை வேலன் சுவாமியை வடக்கு மாகாணசபை முதல்வராகச் சிபார்சு செய்கின்றார் விக்னேஸ்வரன். அத்தோடு எல்லோரும் கேட்டுக் கொண்டால் தானும் முதல்வராக ஆயத்தம் என்கிறார் விக்னேஸ்வரன்.

இத்தனைக்கும் மாவை சேனாதிராசா 2013லோ தற்போதோ விக்னேஸ்வரனிடமோ சம்பந்தனிடமோ வேறொருவரிடமோ இப்பதவியைக் கேட்டு நிற்கவில்லை. அல்லது கட்சியில் பதவி கேட்டு நிற்கவுமில்லை. அப்படியிருக்கையில் விக்னேஸ்வரனும் வித்தியாதரனும் சித்திரைப் புத்தாண்டுச் செய்தியாக எனக்கு எதிராக முற்பக்கத்தில் வெளியிடுகிறார்கள். தகுதியில்லையென்று விக்னேஸ்வரன் வர்ணித்த மாவை சேனாதிராசா 2013இல் முதலமைச்சராக வந்திருக்க முடியும். ஆனால், மாவை சேனாதிராசாதான் விக்கினேஸ்வரனை வடக்கு மாகாண சபைக்கு முதல்வராகக் கொண்டு வந்தவர் என்பதை இலகுவாக மறந்துவிட்டார்கள்.

உண்மையில் 1977 ஏப்ரல் 13ஆம் திகதி சிறை வாழ்வின் பின் யாழ் வந்திருந்தேன். துயரமென்னவெனில் தந்தை செல்வா ஏப்ரல் 26ஆம் நாள் காலமாகினார். 1972 புதிய அரசியலமைப்பு வந்தபோது எல்லா தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டுமென்றநிலையில் மத்திய செயற்குழுவில் மாவை சேனாதிராசா “தந்தை செல்வா மட்டும் பதவி விலகினால் போதும்” என்று அதனை நிறைவேற்றியதனால் தந்தை செல்வா பதவி விலகினார் என்ற வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்ய வேண்டும். 1977 பொதுத் தேர்தலில் மாவை சேனாதிராசாவை காங்கேசன்துறைத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட வேண்டுமென அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் கேட்டுக் கொண்டனர்.

அப்போது நான் அமிர்தலிங்கத்தை காங்கேசன்துறையில் போட்டியிட சம்மதிக்க வைத்தேன். அதன் பொருட்டு அமிர்தலிங்கம் “நாங்கள் கேட்டு காங்கேசன்துறையில் போட்டியிடுகிறேன்” என்று நன்றி தெரிவித்துக் கொழும்பு லீலா அச்சகத்தில் 25000 துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்டு வெளியிட்டார். காங்கிரஸ் தமிழரசு வேட்பாளர் போட்டியில் சுமுகமான தீர்வுக்காக உதவினேன். அக்காலத்தில் இலகுவாக நான் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பேன்.

இப்போது 2013க்கு வருவோம். 2013 மாகாண சபைத் தேர்தல் வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் வேட்பாளர்களை போட்டியிட வைத்தபோது வடக்குமாகாணத்தின் முதல்வர் வேட்பாளராக மாவை.சேனாதிராசாவேதான் வரவேண்டும் எனக் கூட்டமைப்புக் கட்சிகள் தீர்மானமெடுத்திருந்தனர். அப்போதும் மாவை சேனாதிராசா முதலமைச்சர் பதவி ஆசைகொண்டவனாக இருக்கவில்லை.

1978 செப்டெம்பர் 07ஆம் திகதி புதிய அரசியலமைப்பு தமிழர் இனப் பிரச்சினைக்குத் தீர்வின்றியே பிரகடனப்படவிருந்தபோது செப்டெம்பர் 05ஆம் திகதி மட்டக்களப்பிலே கிழக்கு மாகாணம் முழுவதும் பல்லாயிரம் தமிழ்மக்கள், இளைஞர்கள் திரண்ட போராட்டம் பொதுவேலைநிறுத்தம் இடம்பெற எம்மால் அழைப்பு விடப்பட்டது. “1978 அரசியலமைப்பை எதிர்த்திருக்கின்றோம், தமிழீழத்தைக் கோருகின்றோம்” என்பதுதான் எங்கள் முன்மொழிவு, போராட்டத்தின் அடிப்படை. நான் மட்டக்களப்புக்கு 4ஆம் திகதியே சென்று விட்டேன். 05/09 மாலை மாபெரும் கூட்டம். 06/09 காலையில் நாம் கைது செய்யப்பட்டோம். மாபெரும் பொது வேலை நிறுத்தம். எம்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. மட்டக்களப்புச் சிறையில் காசியானந்தன், வேணுதாஸ் உட்பட நூற்றுக்கணக்கானோர் அடைக்கப்பட்டோம்.

மட்டக்களப்பு நீதிமன்றில் எமக்குப் பிணை பல மாதங்களாக 1979 வரை மறுக்கப்பட்ட நிலையில் அந்த நீதிமன்றுக்கு நீதிபதியாக விக்னேஸ்வரன் வந்திருந்தார். எமது தரப்பில் சிவசிதம்பரம் மற்றும் பல வழக்கறிஞர்கள் வாதாடி வந்தனர். அன்று நீதிபதியே சட்ட மா அதிபர் திணைக்கள வழக்கறிஞர்களுடன் வாதாடி எமக்குப் பிணை தந்தார். அப்போதுதான் நீதிபதி விக்னேஸ்வரன் எமக்கு அறிமுகமாகியிருந்தார். எமக்கும் அவர் மீது அபிமானம் ஏற்பட்டது.

விக்னேஸ்வரன் நீதியரசராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற நிலையில் தியாகராஜ நகரில் அவர் உறவினர் நிமலன் கார்த்திகேயன் வீட்டில் நாம் நீதியரசரைச் சந்திப்பதுண்டு. ஒரு முறை சம்பந்தனையும் அழைத்துச் சென்று சந்தித்தேன். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் “சேனாதி நீங்கள்தானே எனக்கு நீதியரசர் விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்தினீர்கள்” என்று சம்பந்தன் கூறினார்.

நீதியரசர் விக்னேஸ்வரனும் ஓய்வுபெற்றபின் வீரகேசரிப் பத்திரிகையில் விடுகின்ற அறிக்கைகளில் இரண்டு தடவைகள், “மட்டக்களப்பு நீதிமன்றில் திருவாளர்கள் மாவை சேனாதிராசா, காசியானந்தன் ஆகியோரைப் பிணையில் விடுவித்த சம்பவங்களின் பின்னர்தான் தமிழினப் பிரச்சனை பற்றி அறிய வாய்ப்புப் பெற்றேன்” என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பின்னணியில்தான் 2013இல் மாகாண சபை பற்றிய பேச்சுக்கள் வந்தபோது மறைந்த (திரு. நீலகண்டன் இந்துசமயப் பேரவை) “விக்னேஸ்வரன் பற்றியும் என்னுடன் பேசியிருக்கின்றார். ஆனால், சம்பந்தன் எம்முடன் நேரிலோ, எமது செயற்குழுவிலோ விக்னேஸ்வரன் வேட்பாளரைப் பற்றிப் பிரேரித்ததில்லை.

கிழக்கு மாகாண சபையில் பிள்ளையான் கூட முதலமைச்சராயிருந்தார். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இத்தனையும் சம்பந்தன் அறிந்திருப்பார்.

முதலில் தமிழரசுக் கட்சி மாவட்டக்கிளை, “மாவை சேனாதிராசா தான் எமது மாகாண சபை முதல்வர் வேட்பாளரெனத் தீர்மானித்ததாக சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார். அதைவிட ‘சுடர் ஒளி’ பத்திரிகையிலும் தலைப்புச் செய்தியாக மாவைதான் “வடக்கு மாகாண சபை முதல்வர் வேட்பாளர்” என அறிவித்ததை அறிந்தேன். முக்கியமென்னவெனில், அக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு, தமிழீழ விடுதலை இயக்கம் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்கள் எல்லோரும் “மாவை அண்ணர்தான் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர்” என்பதில் தீர்மானமாயிருந்தனர்.

வடக்கு மாகாணசபை முதல்வர் வேட்பாளர் தொடர்பாக நடைபெற்ற தமிழரசுக் கட்சிச் செயற்குழுவில் மாவை சேனாதிராசா முன்வைத்த பிரேரனை என்னவெனில், “நீதியரசர் விக்னேஸ்வரனை வடக்கு முதல்வர் வேட்பாளராக நியமிப்போம். மஹிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான போராட்டங்களில் மக்களை இளைஞர்களை அணிதிரட்டிப் போராட்டங்களில் ஈடுபட என்னை அனுமதியுங்கள்” என்று நாற்பது நிமிடங்கள் பேசினேன். தலைவர் சம்பந்தன் அக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

விக்னேஸ்வரனின் பெயரை வேறு யாரும் முன்வைக்கவில்லை. மிகப் பெரும்பாலும் ஆதரித்திருக்கவில்லை. எனது உரைக்குப் பின்னர் சமாதானமாக செயற்குழு முதல்வர் வேட்பாளராகத் விக்னேஸ்வரனை ஏற்றுக் கொண்டது. மட்டக்களப்பில் 2014இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இந்த நிலைப்பாட்டைப் பற்றிப் பேசியிருக்கின்றேன்.

திருகோணமலையிலும் மாகாண சபை உறுப்பினர் கூட்டத்தை நடத்தி இரு அமைச்சர் நியமனம் பற்றியும் ஒழுங்கு செய்திருக்கிறேன். இக்காலங்களில் மாவை சேனாதிராசா தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்ட காலம்.

மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னத்தில் விக்னேஸ்வரன் முதன்மை வேட்பாளராக எம் முன்னிலையில் கையெழுத்திட்டார். கட்சியின் பொதுச்செயலாளராக அந்த வேட்பாளர் பட்டியலில் மாவை சேனாதிராசா கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தோம். அத்தேர்தலில் விக்னேஸ்வரன் ஒரு இலட்சத்து முப்பத்திரண்டாயிரம் வாக்குகள் பெற்றார். 30 உறுப்பினர்கள் எமது அணியில் தெரிவாகினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து நான்கு கட்சிகள் புதிய கூட்டணியில் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன் போட்டியிட்டு 21 ஆயிரம் வரை விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராயிருக்கின்றார். இப்போது அவர் தகுதியை மக்கள் தீர்மானித்துள்ளார்கள். ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் வரை வாக்காளர் அவருக்கு வாக்களிக்கவில்லை.

வடக்கு மாகாண சபை இலங்கையில் ஒரு சிறந்த பெருமைப்படக்கூடிய சபையாக அமைச்சரவை நிர்வாகமாகச் செயலாற்றியது. வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை முதலமைச்சர் உள்ளிட்டவர்களை அழைத்து எனது தலைமையிலேயே கூட்டங்களை நடத்தி பிரச்சனைகளிருந்தால் தீர்ப்பதற்கும் புதிய பிரேரணைகள், தீர்மானங்களை எடுப்பதற்கும் கூட்டங்களை நடத்தியிருக்கின்றோம். இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்கள் நீக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. அடுத்த முதலமைச்சர் யாரென்று பேச்சுக்கள் எழுந்தன. பல குழப்பங்கள் ஏற்பட்டன. இவை விக்னேஸ்வரனினதும், கட்சியில் சில உறுப்பினர்களினதும் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாயிருந்தன.

நான், யாழ்ப்பாணம் இலக்கம்30, மாட்டின் வீதியில் பக்கத்து அறையில் குடும்பத்துடனிருந்து கட்சிப் பணியாற்றி வந்தேன். வடக்கு மாகாண சபையின் பிரச்சினையைத் தீர்த்தாக வேண்டும். நல்லை ஆதீன முதல்வரும், யாழ். மாவட்ட ஆயரும் என் வீட்டுக்கு வந்து என்னிடம் பேசினார்கள். சமாதானமாக இப்பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றுபட்டு இயங்கினோம். அடுத்த நாள் முதலமைச்சரே நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து என்னுடன் பேசவேண்டுமென்று பேசினார். இணக்கம் ஏற்பட முதலமைச்சர் இல்லத்துக்கே சென்று பேசித் தீர்த்து வைத்தோம். அப்போதும் மாவை சேனாதிராசா ஒரு தகுதி உள்ளவனாக ஆளுமை உள்ளவனாக இருந்திருக்கின்றார்.

2020 பிற்பகுதியில் இன்றைய அரசின் அநீதிகளுக்கு எதிராக, அடக்குமுறை, போர்க்குற்றங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு நீதியரசர் வீட்டுக்கும் சென்று பேச்சு நடத்தியதை இச்செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் என்னைப் பெருமைப்படுத்திப் பாராட்டி எழுதினார்.

ஒரு கட்சியின் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவை சித்திரைப் புத்தாண்டு நாளன்று எக்காரணமுமின்றி, வலிந்திழுத்து வடக்கு மாகாண சபை முதலமைச்சராவதற்கு தகுதியற்றவர் என்றும், தானே முதலமைச்சராக வரச்சம்மதிப்பேனென்றும் விக்னேஸ்வரன் தலைமைத்துவப் பண்புகளற்ற, நாகரிகமற்ற முறையில் என்னை வைது அதுவும் சித்திரைப்புத்தாண்டன்று செய்தி வெளியிடவைப்பது எவ்வளவு அநாகரிகமான செயல் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்களென நம்புகிறேன். மதிப்புக்குரிய வேலன் சாமியாரை உச்சரித்ததும் அவர் மறுப்பார். தன்னையே பொதுவேட்பாளராக ஏற்பார்கள் என்ற எண்ணத்தில் தான் அறிவித்தார்.

இந்தச் செய்கையானது இன்னொரு கட்சியின் தலைவர் என்ற வகையில் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளேயாகும். இவை ஒட்டுமொத்த தமிழரசுக் கட்சிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளேயாகும்.

70ஆண்டுகள் வரலாற்றில்
மாவை.சோ.சேனாதிராசா.

மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

“மாவை சேனாதிராஜா தொடர்பில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய விடயங்கள் வருத்தமளிக்கிறது.” – எம்.கே.சிவாஜிலிங்கம்

“மாவை சேனாதிராஜா தொடர்பில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய விடயங்கள் வருத்தமளிக்கிறது.” என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அரசியல்வாதிகளால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்……

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா?என்ற நிலைப்பாட்டை இன்னும் அரசு எடுக்கவில்லை. அந்த அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பழைய முறையில் நடத்தப் படுமா? அல்லது தொகுதிவாரி அல்லது விகிதாசார முறையில் நடத்தப் படுமா?என்ற கேள்வி கூட காணப்படுகின்றது.

அந்த நிலைமையில் வடக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் இடம் பெற்றால் அதில் யாரை முதலமைச்சராக நிறுத்துவது என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியத்தின் ஆட்சி இடம் பெற வேண்டும் என மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகின்றது.

வடக்குக் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின் ஆட்சியினை நிலைநிறுத்துவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதை விடுத்து எதிர் மாறான கருத்துக்களை அரசியல்வாதிகள் முன்வைப்பதை நிறுத்தவேண்டும். அண்மையில் கூட முன்னாள் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியற்றவர் என்ற கருத்தினை குறிப்பிட்டு இருந்தார் அந்த கருத்தை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

அதாவது அந்த அந்த சூழ்நிலையில் சம்பந்தன் ஐயாவினால் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று அடிப்படையிலேயே தான் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவித்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கின்றது. குறிப்பாக அந்த சூழ்நிலையின் போது சம்பந்தன் ஐயாவின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் விக்னேஸ்வரன் அவர்களை ஆதரித்து வெற்றியடைய செய்தோம்.

ஆனால் அதே கருத்தினை இன்று நாங்கள் கொண்டிருக்க முடியாது. அதனால் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று கருத முடியாது எனவே எதிர்காலத்திலும் நாம் இவ்வாறான ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்து சிறந்த ஒரு ஆட்சியை அமைப்பதற்கு நாம் செயற்பட வேண்டும். எனவே எதிர்வரும் காலத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்தல் செயற்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகள் நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

“அன்னை பூபதி யாரையும் சுடவில்லை. யாரையும் சுடவேண்டும் என்று கூட கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாமே அமைதியையும் மனிதாபிமானத்தினையும் மட்டுமே .” – சி.சிறீதரன்

“அன்னை பூபதி யாரையும் சுடவில்லை. யாரையும் சுடவேண்டும் என்று கூட கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாமே அமைதியையும் மனிதாபிமானத்தினையும் மட்டுமே .” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். அன்னை பூபதிக்கு இன்று கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்திய பின்னரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அன்னையர்,  விடுதலைப் புலிகளுக்கும் –  இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை தமிழர்கள் நடாத்தினார்கள். அந்த அறப் போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர் திலீபன் அவர்கள் ஆவார். அவருக்கு பின்னர் அன்னை பூபதி அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார்.

உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். என்கிற கோரிக்கைகளை முன்வைத்தே போராடினார். அன்னை பூபதியின் வரலாற்று தடங்கள் வித்தியாசமானது . உறுதியான பெண்மணியாக உலகத்தில் வாழ்கிற பெண்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அறவழியில் தன் மக்களுக்காக மண்ணுக்காக தன் உயிரைத் தியாகம் செய்த தியாகியாக அன்னை பூபதி மிளிர்கிறார். அவ்வாறான தாயின் நினைவு நாளைக்கூட நாம் கொண்டாட முடியாதவர்களாக நாம் நசுக்கப்பட்டு இருக்கிறோம்.

அவர் ஒரு பயங்கரவாதி அல்ல அவர் ஆயுதம் ஏந்தவில்லை துப்பாக்கி ஏந்தி யாரையும் சுடவில்லை யாரையும் சுடவேண்டும் என்று கூட கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாமே அமைதியையும் மனிதாபிமானத்தினையும் மட்டுமே கோரிக்கையாக முன்வைத்திருந்தார். அதற்காகவே 30 நாட்கள் ஆகாரமின்றி தன்னுயிரை ஈகம் செய்தவரைக்கூட நினைவுகூர முடியாதவர்களாக நாம் இருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் நெருக்கடிகளுக்கும் வன்முறைகளுக்கும் தமிழர்களாக நாம் முகம் கொடுக்கிறோம். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“முன்பு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக காணப்பட்ட சிறுபான்மையினர் இன்று துவேசம் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றனர்.” – கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

“முன்பு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக காணப்பட்ட சிறுபான்மையினர் இன்று துவேசம் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றனர்.”என  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மலையக மக்கள் முன்னணி எப்போதும் வடக்கு கிழக்குடன் சுமூகமான தொடர்பை கொண்டுள்ளது. அதனடிப்படையிலேயே இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை அழைத்திருந்தோம். ஆனால் அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வரவில்லை. அதேபோன்று தான் ஹரின் பெர்ணான்டோவும் வரவில்லை.

கடந்த தேர்தலில் இளைஞர்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தினர். மலையகத்திலும் ஒரு ஜீவனுக்கு இளைஞர்கள் வாக்களித்தனர். மறுபக்கத்தில் மற்றுமொரு யுவதிக்கும் 7000ஆயிரம் வாக்குகள் வரை கிடைத்தது. ஆனால் அவை அனைத்தும் இன்று வெற்று வேட்டாக போயுள்ளது.

தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் சிக்கியுள்ளது. எல்லாவற்றிலும் ஊழலும்,  லஞ்சமும் நிறைந்துள்ளது. அதேபோல் எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது.தேங்காய் எண்ணை போன்றவற்றிலும் கலப்படம் நிறைந்துள்ளது. சீனியில் ஊழல், பருப்பில் ஊழல் என அனைத்திலும் ஊழல் கலந்துள்ளது.

தற்போது எமது கடல் வளத்தை மூடி சீனாவுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டை விற்கும் செயற்பாடு எங்கு முடியப்போகின்றது என தெரியவில்லை. சஜித்தின் தோல்விக்கு உட்கட்சி மோதலும் முக்கியமானது. அதன் பிறகுதான் சிறுபான்மை மக்களையும் இணைத்து ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னர் ஆட்சி பீடம் ஏறும் தரப்பினரை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் காணப்பட்டனர். ஆனால் இன்று சிறுபான்மையினர் துவேசம் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றனர். இப்போது உளுந்து,  பாசிப்பயறு உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாதுள்ளது. இதனால் இன்று உளுந்து வடை, தோசை, சூசியம் போன்ற திண்பண்டங்களை சாப்பிட முடியாதுள்ளது.

இன்றும் 1000 ரூபா சம்பளத்தை முழுமையாக சிலர் பெற்றுக்கொள்ளவில்லை. முக்கியமாக அரசாங்க தோட்டங்களில் 1000 ரூபா அதிகரிப்பு கொடுக்கப்படவில்லை. இன்று எல்லா சலுகைகளும் இல்லாது போயுள்ளது. தற்போதைய நிலையில் 1000 ரூபாவைக்கொண்டு உளுந்தை கூட வாங்க முடியாது. எனவே எமது இளைஞர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழர்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என கூறி ராஜபக்ஷக்கள் அரசாங்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது.” – நா.உ. காவிந்த ஜயவர்தன குற்றச்சாட்டு !

“நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சர் பதவி வகித்துக்கொண்டு ராஜபக்க்ஷர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட முன்வினையின் பயனையே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தற்போது அனுபவிக்கிறார்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்தத் தெரிவிக்கையில்,

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை அரசாங்கம் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தது. இச்சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்காத வகையில் பொது விடுமுறை காலத்தில் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் குறுகிய நோக்கம் பெற்றிப் பெறவில்லை.

இச்சட்ட மூலத்திற்கு எதிராக பல மனுக்கல் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இச்சட்ட மூலம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்க்ஷ குறிப்பிட்ட கருத்தினால் ஜனாதிபதி அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயத்தை பெரிதுப்படுத்துவது அவசிமற்றது. முன்வினையின் பயனை விஜயதாஸ ராஜபக்க்ஷ தற்போது அனுபவிக்கிறார்.

திருடர்களுக்கு தண்டனை வழங்குவதாக குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்தது. இவ்வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு இவ்வாறானவர்களும் ஒரு காரணியாகும். நீதியமைச்சர் பதவி வகித்துகொண்டு ஒரு தரப்பினருக்கு சார்பாக செயற்பட்டமை குறித்து இவரே பல முறை பகிரங்கமாக ஊடகங்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது அரசியல் செயற்பாட்டை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தமிழர்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள் அதற்கு இடமளிக்க கூடாது என்று போலியான குற்றச்சாட்டை முன்வைத்து அரசாங்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது. 69 லட்ச மக்களும் பொய்யான வாக்குறுதிகளினால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

இனியாவது பெரும்பான்மை மக்கள் உண்மை தன்மையை புரிந்துக் கொள்ள வேண்டும். கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் நீதிமன்றம் எவ்வாறான தீர்வினை வழங்கும் என்பதை குறிப்பிட முடியாது.

நாட்டு மக்கள் அனைவரும் நீதித்துறையினையே இறுதியாக நம்பியுள்ளார்கள்.அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.