May

Wednesday, June 23, 2021

May

யாழ்ப்பாணத்திற்கும் கொரோனா தடுப்பூசி – ஜெனரல் சவேந்திர சில்வா !

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று முதல் காலி, குருணாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வடக்கு மாகாணத்தில் 4 இலட்சம் பேருக்குக் கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரா.சம்பந்தன் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ !

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா தொற்றாளர்களை பரிசோதனை செய்யும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் சிரமப் படுவதாகவும் அதன் தேவை கருதி பிரதமரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் அது தொடர்பான மரணங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றது.
குறித்த கொரோனா தொற்றாளர்களை பரிசோதனை செய்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் வைத்தியசாலையில் இல்லாத நிலையில் தொற்றாளர்களை பரிசோதனை செய்வதற்கு மட்டக்களப்பு மற்றும் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு அனுப்பி வைப்பதனால் காலதாமதமும் சிரமங்களையும் எதிர்நோக்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா,சம்பந்தன் நாட்டின் பிரதமர் மகிந்த இராஜபக்சவிடம் இது தொடர்பான வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

அதற்கமைய குறித்த உபகரணத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொள்வதாக பிரதமர் தம்மிடம் வாக்குறுதி அளித்தாக இரா,சம்பந்தன் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு எதிர்வரும் ஜுன் 4ஆம் திகதி வரை ஒத்திவைப்பு !

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தடவையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, உயர்நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவரான – கடந்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஜனக்த சில்வா, தான் இந்த வழக்கில் இருந்து விலகுகின்றார் என்று தெரிவித்தார். இதையடுத்து புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது .

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் ரிஷாத் தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசாவின் வழிகாட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான சஹீட், ருஷ்தி ஹபீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் சட்டத்தரணி அமீர் அலி ஆகியோர் ஆஜராகினர்.

“இலங்கையின் பின்னடைவுக்கு புத்திசம் பர்ஸ்ட், சின்ஹல ஒன்லி எனும் போலித்தேசியம் தான் காரணம்.முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது” – மனோ கணேசன் ட்வீட் !

“இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்துப் பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாகத் திருப்பித் தருகின்றோம்.” என  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார்.

தனது ட்விட்டர் தளத்தில் மூன்று மொழிகளிலும் கருத்து வெளியிட்டுள்ள மனோ இது பற்றி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“உங்கள் நண்பர் லக்ஸ்மன் கதிர்காமருக்குக் கூட நீங்கள் பிரதமர் பதவியைத் தர மறுத்தீர்கள். ஜே.வி.பி. மட்டுமே அவருக்குப் பிரதமர் பதவி தர வேண்டுமென்று சொன்னது. இலங்கை, இயற்கை வளமில்லாத வள – ஏழை நாடு அல்ல. இங்கே என்ன இல்லை? இந்த நாட்டை ஆளுவோரிடம் நேர்மை, தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, அரசியல் திடம், துணிச்சல் ஆகியவை இல்லை. குறிப்பாக, தாம் மட்டுமே இந்த நாட்டின் ஏக உரிமையாளர் என எண்ணும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் தலைமைத்துவப் பண்புகள் இல்லை. இதுதான் கசப்பான இல்லைகளின் உண்மை.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எமது நாட்டின் சுதந்திரம் முதல் வளர்ச்சி வரை பெரும் பங்களிப்புகளை வழங்கினார்கள். அது ஒரு பொற்காலம். இப்போது இந்த நாடு – இலங்கைத் தீவு, உங்களுக்கு மட்டுமே ஏகபோக சொந்தமானது எனத் தவறாக, இனவாத கண்ணோட்டத்தில் நீங்கள் நினைகின்றீர்கள். இந்த எண்ணம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் உள்ளது. எல்லா பெரும்பான்மை கட்சிகளிலும் உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமாக கண்டு அனுபவித்துள்ளேன்.

இன்று இந்த நாடு ஒரு தோல்வியடைந்து வரும் நாடு. இதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள். சுதந்திரம் பெற்ற 1950களில், இந்த நாட்டின் வெளிநாட்டுச் செலவாணி கையிருப்பு, ஜப்பானுக்கு அடுத்து அதிகம் இருந்தது. கடன் கொடுக்கக் கூடிய நாடாக நாம் இருந்தோம். இன்று நாம் எங்கே இருக்கின்றோம்? இவை எல்லாவற்றுக்கும் காரணம், அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருக்கின்றமைதான்.

தெற்காசியாவை விடுங்கள். முன்னேறிய தென்கிழக்கு ஆசியாவை எடுங்கள். சிசு மரணம், கல்வி வளர்ச்சி, ஆயுள், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் நாம் கூடக்குறைய சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா, வியட்நாம்  ஆகிய நாடுகளை விட முன்னேறி இருந்தோம்.

நான் மதிக்கும் சிங்கப்பூரின் ஸ்தாபகர் லீ குவான் யூவும், மலேசிய ஸ்தாபகர் மஹதிர் முகமதும், தமது நாடு இலங்கையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அன்று பகிரங்கமாகக் கூறினார்கள். இன்று அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே?

இப்போது தென்னாசியாவைப் பாருங்கள். இந்தியா பெரிய நாடு. அதனுடன் எம்மை ஒப்பிட முடியாது. ஆனால், 1972இல் பிறந்த பங்களாதேஷ்கூட, இன்று மதசார்பற்ற நாடாக எங்களை முந்திப் போகின்றது. இது உங்களுக்குத்  தெரியுமா?

இன முரண்பாடுகள், போர், அரச மற்றும் அரசு அற்ற பயங்கரவாதங்கள்,  பொருளாதார வீழ்ச்சி, வெளிநாட்டுச்  செலவாணிப் பிரச்சினை, அகோர தேசிய கடன் தொகை, கடன் தருகின்றேன் என்று சொல்லி உலக சக்திகள் உள்நாட்டுக்குள் வருகை, ஆகியவற்றின் பின்னுள்ள பிரதான காரணம், பெளத்தம் முதன்மை (புத்திசம் பர்ஸ்ட்), சிங்களம் மட்டும் (சின்ஹல ஒன்லி) என்ற முகத்துடன் வந்த உங்களது போலித் தேசியவாதம்தான் என்பதை உணருங்கள். முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது” – என்றுள்ளது.

 

உள்நாட்டு போருக்கு நடுவிலும் நடைபெற்ற சிரிய ஜனாதிபதி தேர்தல் – நான்காவது முறையாகவும் அமோக வெற்றி பெற்ற பஷர் அல் ஆசாத் !

உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
தற்போதைய ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் (வயது 55) மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல்லா சலூம் அப்துல்லா, எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹ்மூத் மெர்ஹி ஆகியோர் களமிறங்கினர்.
தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், தற்போதைய ஜனாதிபதி ஆசாத், 95.1 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக பாராளுமன்ற சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் 4வது முறையாக அவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் ஆசாத் 88 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியை ஆசாத் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க நடனமாடியும் கொண்டாடுகின்றனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, முன்னிலை நிலவரம் ஆசாத்துக்கு சாதகமாக இருந்ததால், பல்வேறு நகரங்களில் ஒன்றுகூடி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தெற்கு பகுதியில் உள்ள அலெப்போ, ஸ்வேதியா பகுதியிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

“முக்கியமான ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகளை மாத்திரம் மக்கள் கவனத்தில் கொள்வது சிறந்தது.” – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

“கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியான சூழ்நிலையில், முக்கியமான ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகளை மாத்திரம் மக்கள் கவனத்தில் கொள்வது சிறந்தது.” என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான ஐரோப்பிய மையம் மற்றும் மேம்பாட்டு மையம் (ஈ.சி.பி.டி) ஏற்பாட்டில், ஜூம் வழியாக  நடைபெற்ற வெகுஜன மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்புகளுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது,

“கொரோனா வைரஸ் அச்சுறுத்தலான இந்த காலப்பகுதியில் ஊடகங்கள் கூறப்படுகின்ற செய்திகளின் வேறுபாட்டினால் மக்களிடையே குழப்பநிலை ஏற்படுகின்றது.மேலும் ஊடகங்கள், பிரபலம் அடைவதனையே நோக்காக கொண்டுச் செயற்படுகின்றது. இதனால் பொதுமக்களுக்கு  என்ன கொடுக்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவதை விட வெவ்வேறு ஊடக நிறுவனங்களுடன் போட்டியிடும் சூழ்நிலைகளே அதிகம் காணப்படுகின்றது.

இதனால் ஊடகங்களை இரு முனைகள் கொண்ட ஆயுதமாகக் கருதலாம். அதாவது இது மக்களை அமைதிப்படுத்தலாம், நேர்மறையான பதிலுக்கு அவர்களை ஊக்குவிக்கலாம் அல்லது மக்களை பயமுறுத்துகிறது மற்றும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது விடயத்தில், ஊடகங்கள் ஒரு அழிவுகரமான ஆயுதமாக இருக்கும்.

ஏனெனில் ஒரு நெருக்கடியின்போது செய்யக்கூடிய மிகப்பெரிய சேதம் உடல் அழிவை விட மனநிலையை எதிர்மறையாக மாற்றுகிறது. எனவே எந்த நேரத்திலும் எந்த நாட்டிற்கும் ஒரு நெறிமுறை மற்றும் நம்பகமான ஊடக கலாச்சாரம் இருப்பது இன்றியமையாதது.

இதன் ஊடாக ஒரு நெருக்கடியின் போது, ​​ஊடகங்கள் பொது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், பொதுக் கருத்தை நேர்மறையான அணுகுமுறையுடன் கட்டுப்படுத்தவும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியில் ஈடுபட முடியும். எனவே, இந்த சூழ்நிலைகளில்,  முக்கியமான ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகளை மாத்திரம் மக்கள் கவனத்தில் கொள்வது சிறந்தது.

அப்போதுதான் மக்களிடமும் முரணான, குழப்பமான சூழ்நிலை ஏற்படாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலாலி படைத்தளத்தில் உள்ள விகாரை ஒன்றில் தூக்கிலிட்டு தற்கொலை தற்கொலை புரிந்த இராணுவச் சிப்பாய் !

யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நேற்று (27.05.2021)  இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று பலாலி படைத்தளத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம் பெற்றுள்ளது. தற்கொலை புரிந்த இராணுவச் சிப்பாய் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரஞ்சுல பண்டார என்பவர் வயது 36 உடைய வத்தேகம பகுதியைச் சேர்ந்தவர் என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

பலாலி படைத் தலைமையகத்திற்குள் உள்ள புத்த கோவிலுக்குள் குறித்த இராணுவ சிப்பாய் தூக்கிலிட்டு தற்கொலை புரிந்துள்ளார் எனவும் குறித்த சிப்பாய் வெளிநாட்டு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அந்தப் பெண் தன்னுடன் தொடர்பினை துண்டித்ததால் தற்கொலை புரிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்தவரின் உடல் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

“31ஆம் திகதி முதல் 10,000 ரூபாவிற்கு 10 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி வழங்கப்படும்.” – அமைச்சர் பந்துல குணவர்தன

“10,000 ரூபாவிற்கு 10 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி வழங்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாதம் 31ஆம் திகதி முதல் 10,000 ரூபாவிற்கு 10 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார “நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை தொடர்ந்து நாளாந்த வேதனத்திற்காக தொழிலில் ஈடுபடுவர்களுக்கும், வேறு வருமானம் இல்லாதவர்களுக்கும், அரச ஊழியர் அல்லாதவர்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையிலுள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். தீவிரவாதத்தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு.” – அமெரிக்கா எச்சரிக்கை !

இலங்கையில் தீவிரவாதத்தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கர்களை அவதானமாக இருக்குமாறும் அமெரிக்கதூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலிலே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அமெரிக்கர்கள் கவனமாக இருக்க வேண்டும். இலங்கையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே இலங்கை செல்ல விரும்பும் மக்களுக்கு அமெரிக்கா நோய் தடுப்பு மையம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதை பின்பற்ற வேண்டும்.

மேலும் இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், மன்றங்கள், விளையாட்டு, கலாச்சார மற்றும் கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையின் தொலை தூர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர கால உதவிகளை வழங்க குறைவான வளங்களே இருக்கிறது. அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் தினத்தன்று கொழும்பில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் 3 ஹோட்டல்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அதில் வெளிநாட்டவர்கள் உட்பட 267 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

“எந்த சந்தர்ப்பத்திலும் சீனா, இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் நன்மை தரும் விடயங்களில் சீனா நிச்சயம் ஈடுபடும்.”- இலங்கைக்கான சீன தூதுவர் உறுதி !

“எந்த சந்தர்ப்பத்திலும் சீனா, இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் நன்மை தரும் விடயங்களில் சீனா நிச்சயம் ஈடுபடும்.” என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்தார்.

சீனாவிலிருந்து நாட்டை வந்தடைந்த 5 இலட்சம் தடுப்பூசிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மார்ச் 31 ஆம் திகதி இலங்கைக்கு சீனா இலவசமாக வழங்கிய 6 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக மீண்டும் சீனாவிலிருந்து வந்த மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கையின் வைரஸ் தடுப்புப் பணிக்கு முக்கிய பங்காற்றும் என்று நம்புகின்றோம்.

கொரோனா வைரஸ் பரவல், முழு மனிதகுலத்தின் பொது எதிரியாகும். சுகாதாரமான எதிர்காலத்தை உருவாக்குவது எமது பொது இலக்காகும். ஒற்றுமையுடன் உதவியளிப்பது வைரஸ் தடுப்பிலான மிக வலிமையான ஆயுதமாகும். அதற்கமைய தடுப்பூசி பகிர்வானது சிறந்த வைரஸ் தடுப்பு வழிமுறையாகும்.

சீனா வளரும் நாடுகளுக்கு 200 கோடி அமெரிக்க டொலரையும் 80 க்கும் அதிகமான நாடுகளுக்கு தடுப்பூசி உதவியையும் வழங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 300 கோடி டொலர் சர்வதேச உதவியை வழங்கும் என்று கடந்த 21 ஆம் திகதி சீன ஜனாதிபதி உலக சுகாதார உச்சி மாநாட்டில் அறிவித்தார்.

உலக நாடுகளுக்கு மேலதிக தடுப்பூசிகளை இயன்ற அளவில் விநியோகித்து, சீன தொழில் நிறுவனங்கள், வளரும் நாடுகளுக்குத் தொழில் நுட்பங்களை சீனா விநியோகிக்கும். மேலும், பரிமாற்றம் செய்து இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளுடன், ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு ஆதரவளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

வைரஸ் பரவல் ஏற்பட்டது முதல், சீனாவும் இலங்கையும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இரு நாட்டு நட்புறவு மேலும் வளர்ந்துள்ளது. இலங்கையின் சிறந்த அண்டை நாடாகவும், நண்பராகவும் சீனா உள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் நன்மை தரும் விடயங்களில் நிச்சயம் ஈடுபடும்.” என்றார்.