04

04

“உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதை ஊடகங்கள பொறுப்புடன் தடுக்க வேண்டும்.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணி அல்ல, உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதையும் ஊடகங்களே பொறுப்புடன் தடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ஊடக சுதந்திர தினத்தையொட்டி விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ள அவர் ,

இன்று நாடு சந்தித்து நிற்கும் பெரும் சுகாதார நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அவ்வாறு செயற்படுவதே ஊடகங்களின் பெரும் பொறுப்பாகவும் இருக்க முடியும்.

நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி ஒரு நாட்டையும் அதன் மக்களையும் திறம்பட நிர்வகித்துச் செல்வதில் ஓர் அரசாங்கம் சந்திக்கும் சவால்களை விமர்சிப்பது அல்லாமல், மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாகவும் ஊடகங்களே திகழ வேண்டும்.

அவையே, ஊடக சுதந்திரம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் ஆகும். எமது நாட்டில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் உறுதிப்பாட்டோடு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் இடம் இல்லை – மக்களோடு மக்களாக அலைந்து திரிந்த பெண் கொரோனா நோயாளி !

காய்ச்சல் மற்றும் சளி காரணமாக இந்த மாதம் 28 ஆம் திகதி அம்பியூலன்ஸ் மூலம் தம்பதெனிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்க பெண்ணுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரத்தரன் ஹேன பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கே இவ்வாறு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பெண்ணுக்கு 1ஆம் திகதி அறிவிக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் இடம் இல்லாததால் வீட்டில் தங்கும்படி கூறப்பட்டது. பின்னர் அவர் தம்பதெனிய மருத்துவமனையில் இருந்து கிரியுல்ல பகுதிக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

மீண்டும் கிரியுல்ல பகுதியிலிருந்து மீரிகம விலவத்த பகுதிக்கு பஸ்ஸில் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் விலவத்த பகுதியிலிருந்து யயத்தல்கொட வரை ரயிலில் பயணம் செய்து ரத்தரன் ஹேனவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.

பின்னர் அன்று மாலை இந்த பெண் தம்பதெனிய கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டதாக சுகாதார அதிகாரி கூறினார்.

குறித்த பெண் கொரோனாவுடன் பஸ் மற்றும் ரயிலில் பயணம் செய்துள்ளதால் இவரால் பலருக்கு கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பெண்ணுடன் பஸ் மற்றும் ரயிலில் பயணித்தவர்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

“முஸ்லிம் கட்சிகளுடன் எம்.ஏ.சுமந்திரன் , சாணக்கியன் பேசியிருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தையே தவிர கூட்டமைப்பினுடையது அல்ல.” – கோவிந்தன் கருணாகரம்

“முஸ்லிம் கட்சிகளுடன் எம்.ஏ.சுமந்திரன் , சாணக்கியன் பேசியிருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தையே தவிர கூட்டமைப்பினுடையது அல்ல.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். ஒன்றிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக அவர்களின் தீர்மானங்களைக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நேற்று முன்தினம் ஊடகங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றியும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் பற்றியும் வந்த செய்திகள் மக்கள் மத்தியில் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே அந்த செய்திக்குப் பின்பு ஒரு அதிர்வலை ஏற்பட்டது. எனக்கும் பல தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களாக அதாவது முஸ்லிம்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பத்திரிகையாளர் மாநாட்டிலே குறிப்பிட்டிருந்தார்கள்.அந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் கூட அப்படி நடந்ததாகக் கூறியிருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மூன்று கட்சிகள் அதில் அங்கம் வகிக்கின்றன. அதன் ஒரு கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமாகக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நான் பதவி வகித்துக் கொண்டிருக்கின்றேன்.

இந்த வேளையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அலுவலக ரீதியாக எந்தவொரு கட்சிகளுடனோ குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுடனோ முஸ்லிம் காங்கிரஸுடனோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை.

சிலவேளைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , சாணக்கியன் பேசியிருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தையோ விருப்பமோ தவிர தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையாகக் கருத முடியாது. என்றார்.

யாழில் கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலய திருவிழா – உபயக்காரர் தனிமைப்படுத்தலில் !

கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத்தில் திருவிழா நடத்திய உபயக்காரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காரைநகர் களபூமி பகுதியில் உள்ள ஆலயத்தில் வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. நேற்றைய தினம் திங்கட்கிழமை தேர் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் சப்பர திருவிழா நடைபெற்றது.

அதன் போது காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரின் அறிவுறுத்தல்களை மீறி ஆலயத்தில் பெருமளவானோர் சப்பர திருவிழாவில் கூடியிருந்தனர்.

சுகாதார விதிமுறைகள் , கட்டுப்பாடுகளை மீறி 50க்கும் மேற்பட்டோர் உரிய முறையில் முக கவசங்கள் இன்றியும் , சமூக இடைவெளிகளை பேணாதும் திருவிழாவில் கூடி இருந்துள்ளனர்.

அதனை அடுத்து, ஆலயத்திற்கு சென்றிருந்த சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்டோர் ஆலய திருவிழாவினை நிறுத்தி, ஆலய குருக்கள் , உபாயக்காரர் , ஆலய நிர்வாகத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட 4 பேரை தனிமைப்படுத்தி உள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து இலங்கையை வந்தடைந்த ஸ்புட்னிக் தடுப்பூசிகள் !

ரஷ்யாவிலிருந்து 15,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.

இந்த தடுப்பூசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொறுப்பேற்றுக்கொண்டார்.

இது இலங்கையால் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற மொத்த தடுப்பூசிகளின் முதற்கட்ட எண்ணிக்கையாகும்.

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 800 குற்றச்சாட்டுக்கள் !

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 800 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவர்களுக்கு எதிரான வழக்குகள் இரண்டு விசேட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்யப்படவுள்ளன எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 800 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்த நிலையிலும், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் – 13 பேர் பலி !

இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 113,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதே நேரம் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றையதினம்  உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.